அத்தியாயம் 13

“தீதி, தாக்கூரோட வக்கீலை பாத்துட்டேன். அவன்தான் தாக்கூருக்காக  முன்ஜாமீனுக்கு அப்பீல் பண்றான்.”

“அவன் எங்க இருக்கான்னு தெரிஞ்சதா?”

“..”, இல்லையென்பதாக தலையசைத்தார்.

“ம்ம். அந்த ஆள்.. அதான் வக்கீல் எப்படி? காசு குடுத்தா காட்டிக் கொடுப்பானா?”, ஜுவாலா.

“இல்ல தீதி காசுக்கு மயங்கற ஆளா அவன் தெரில, அவனே பசையுள்ள பார்ட்டிதான்”

“ஹ்ம்ம்.  தாக்கூரோட வக்கீலாச்சே? காசு இல்லாம இருக்குமா?, சரி அந்த பொண்ணுங்க பத்தி?”, உணர்வுகள் துடைத்த குரலில் ஜுவாலா

“தீதி..!”, சங்கடமாக ரஹ்மத்.

“சொல்லுங்க, தெரிஞ்சதா இல்லையா?”

“இல்ல”

“ஹூம்..”, என்று இயலாமையினால் பெருமூச்சொன்றை விட்டு, “நமக்கு வந்த தகவல் படி கிட்ட தட்ட இருபதுக்கும் மேற்பட்ட பொண்ணுங்க அவன் வீடியோல பதிவாகி இருக்காங்க. சரி ஒண்ணு பண்ணுங்க, ஒவ்வொரு வீடியோல இருந்தும் பொண்ணோட முகத்தை மட்டும் தனியா எடிட் பண்ணி நம்ம குரூப்ஸ் ல சர்குலேட் பண்ணுங்க. “

“நம்மள்ல யாருக்காவது அவங்க இருக்கிற ஹோமோட ஏரியா எதுன்னு தெரிஞ்சாகூட போதும். ட்ராக் பண்ணிடலாம்”

“தீதி.. அந்த பொண்ணுங்க கிடைச்சதும் அவங்களுக்கு தேவையான மெடிக்கல் அஸிஸ்டெண்ட்ஸ்க்கு தயார் பண்ணிட்டேன்”, என்று ரஹ்மத் சொல்ல..ஜுவாலாவின் முகம் பாறையாய் இறுகியது. 

ஜுவாலாவிற்கு முன்பு எப்போதோ எதோ ஒரு மருத்துவமனையில் அவள் இருந்ததும் அப்போது நினைவுகளுக்கும் நிஜத்துக்கும் இடையே இடைவிடாது போராடிய காலமும் கண்முன் வந்தது. அன்று அவளது முகத்தில் ஒவ்வொரு முறை வெளிச்சம் படும்போதும், ‘மீண்டுமா?’ என்று பயந்து மிரண்டு அலறிய அந்த கணங்கள்.  ‘ஒண்ணுமில்லமா, கண்ணு திறந்து பாரு நாங்கதான்’ என்று ஆறுதல் சொல்லி தேற்றிய வெள்ளுடை தேவதைகள் மற்றும் மருத்துவர்கள். மெல்ல மெல்ல தேறி வந்த நாட்கள்.. இப்போது நினைத்தாலும் ஜுவாலாவிற்கு ஒருவித அச்ச உணர்வை ஏற்படுத்தும் தருணங்கள் அவை. 

“ஹும். சரி சோனுவுக்கும், பிஜய் குமாருக்கும் இந்த பொண்ணுங்க இதுவரைக்கும் கிடைக்கலைன்னு தகவல் சொல்லிடுங்க. வேற எப்படியாவது யார் மூலமாவாவது தேட முடியுமான்னு பாக்க சொல்லுங்க  மேற்கொண்டு என்ன பண்ணனும்னு மீட்டிங் ல முடிவு செய்யலாம்”, என்று சொன்னதும் அவர் வெளியேற தயாராகி வாசலுக்கு நடக்கையில்,

“ரஹ்மத்.. இவன் ரொம்ப சிக்கலான ஆளு. தவிர இவனை தீர்த்துக்கட்டறதுக்கு முன்னால அந்த பொண்ணுங்களோட வீடியோவை இன்னும் எத்தனை பேருக்கு கொடுத்திருக்கான்னு தெரியணும். பொண்ணுங்க எங்க-ங்கிற டீடெயில்ஸ்-ம் வேணும். சோ இந்த தடவை நானே இதை டீல் பண்ணலாமா-ன்னு யோசிச்சிக்கறேன்”, என்றாள் ஜுவாலா. 

அவள் சொன்ன மீட்டிங்.. அடுத்த வாரம் சோனு இவர்கள் வழமையாய் கூடும் இடத்திற்கு வந்ததும் நடக்கும். இப்படியான ஆட்களை களையெடுக்க யார் தகுதியானவர் என்று அந்த கூட்டத்தில் தான் முடிவெடுக்கப்படும். இந்த இயக்கத்தின் செயற்தலைவி ஜுவாலா. சோனு மற்றும் விஜயகுமார் இவர்களை வழிநடத்துபவர்கள்.

**************************

சென்னை

“கண்ணாமூச்சி?”

“யா யா”, என்று சொல்லி அவளது திட்டத்தை விளக்கினாள். சொன்னதும் ஷானுவின் உற்சாகம் சூர்யாவிற்கும் தொற்றியது. திட்டம் செயல் படுத்தப்படும் நாளுக்காக இருவரும் காத்திருக்க ஆரம்பித்தனர்.

சுமார் பத்து நாட்கள் கழித்து மாலை நேரத்தில் ஷானுவிற்கு அலுவலகத்தில் இருந்தபோது அவளது பேசிக்கு அழைப்பு வந்தது.

“ஹலோ ஷானு ஹியர்”

“…”

“ஆங். ஹலோ சொல்லுங்க, உங்களை நல்லா தெரியுமே? நம்ம ஆபீஸ்தான? நேர்ல எங்க ப்ளாக்குக்கே வந்திருக்கலாமே?”

“..”

“ஓஹ். இது அஃபிஷியல் இல்லையா? ஓகே ஓகே சொல்லுங்க”

“…”

“என்னது என்னை ஃபாலோ பண்றாங்களா?”

“…”

“ஓ! அப்டியா? எத்தனை நாளா..?”

“..”

“ஓஹ் தெரிலயா?”

“..”

“இல்ல. ஹ்ம்ம். கடைசியா நாங்க பெர்சனலா இன்ட்ரெஸ்ட் எடுத்து பாத்த கேஸ்-ன்னா, அந்த அமைச்சர் பையனோட பீச் ஹவுஸ் மர்டர் கேஸ்தான்”, என்றவள் கொஞ்சம் குரலைக் குறைத்து ரகசியம் பேசும் த்வனியில், “இதை உங்களோட வச்சிக்கோங்க, சும்மா ஏதாவது மீடியா-க்கு தீனி போடுமான்னு அந்த கேஸ் பத்தி  தெரிஞ்சிக்க நினைச்சோம். அப்பறம் நம்ம சிவராமன் சார், இது சும்மா ரிவென்ஜ் மேட்டர்.  கொலைகாரன் வேற எதோ ஸ்டேட்-ல சரண்டர் ஆயிட்டான்னு சொன்னார். தென், அந்த  கேஸ்ல இருந்த இன்ட்ரெஸ்ட் போனதால  நாங்க வித் ட்ரா பண்ணிட்டோம்”,  என்று சொல்லி தொடர்ந்து சாதாரணமாக, “ஹ ஹ விடுங்க விடுங்க யாராயிருந்தாலும் கொஞ்ச நாள் எனக்கு ஃபிரீயா செக்யூரிட்டி வேலை பாக்கட்டும். பாத்துட்டு, ஒன்னும் தேறலைனு வெறுத்துப்போய்  போகட்டும்”, இவ்விஷயம் தனக்கு முக்கியமானதில்லை என்பதுபோல அசிரத்தையாக பதிலளித்தாள்.

“..”

“யாராயிருக்கும்ன்னு..?” என்று வாய்விட்டுக் கூறி யோசித்தவள், “ஹ்ம்ம். எனக்குத் தெரிஞ்சு அவங்க அந்த அமைச்சரோட ஆளுங்களா இருக்கலாம்..”

“..”

“ஓ !எங்க சேஃப்டி முக்கியம்ங்கிறீங்களா?, அதுவும் சரிதான். நாங்க இனிமே கவனமா இருக்கோம். பை தி வே தேங்க்ஸ் போர் தி இன்போ”, என்று தகவல் தெரிவித்தமைக்கு நன்றி நவின்று அழைப்பைத்  துண்டித்தாள்.

“யாரு மேம்?”, சூர்யா.

ஷானு, “ஹ்ம்.. டிபார்ட்மெண்ட்லேர்ந்துதான். என் பின்னாடியே ஒருத்தன் கொஞ்ச நாளா டாக்சி.. டூ வீலர்ன்னு மாத்தி மாத்தி ஃபாலோ பண்றானாம்.  நீ வர்றது போறதையும் யாரோ நோட் பண்றாங்கன்னு அவங்களுக்கு தெரிஞ்சிருக்கு. அதான் நம்மள யாரோ க்ளோஸா வாட்ச் பண்றாங்கன்னு டவுட் வந்திருக்கு. எதுக்கும் ஜாக்கிரதையா இருங்கன்னு சொல்றாங்க”, என்று யோசனையோடு சொன்னவள், தனது அலைபேசியில் நேரத்தைப் பார்த்து, “அடடா மணியாயிடுச்சே? ஒரு தடவ ஆபீசை தரோவா செக் பண்ணலாம்னு தோணுச்சு”

“என்ன செக் பண்ணனும் மேம் ?”

“ஸ்பை கேமரா, மைக்ரோ போன் எதாவது இருக்கான்னு ஒரு முறை பாத்துடலாம்னு நினச்சேன். ம்ம். சரி இன்னிக்கு வேண்டாம். நீ என்ன பண்ற, நாளைக்கு வந்து முத வேலையா ஆபீஸ் மொத்தத்தையும் தரோவா அலசிடு. ஓகே?”

“யெஸ் மேம், நம்ம ஆளுங்க ரெண்டு பேரை ஹெல்ப்-க்கு வச்சிக்கிட்டு கம்ப்ளீட்டா பாத்துடறேன்”

“குட்”, என்று சொல்லி கட்டைவிரலால் வெற்றிக்குறி காண்பித்து இருவரும் விடை பெற்றனர்.

அடுத்த நாள் ஷானு வரும்போது கண்ணில் படுகிறாற்போல் யாரும் அவளைத் தொடரவில்லை. எப்போதுமே ஷானு சூர்யாவின் பார்வை வட்டத்தில் அவர்கள் வர மாட்டார்கள்தான். ஆனால் நேற்று ஷானுவும் சூர்யாவும் பேசிய உரையாடல் இவர்களுக்கு சென்றடைந்திருக்க,  வெகு முனைப்பாக தங்களை அடையாளம் காட்டிக் கொள்ளாமல், மேலும் இடைவெளி விட்டு கவனமாக பின்தொடர்ந்தனர்.

அதேபோல் சூர்யாவின் அலுவலகத்தில் சல்லடை போட்டு தேடியும் எவ்வித  ஒட்டுக்கேட்பு கருவியோ, கண்காணிப்பு புகைப்படக் கருவிகளோ தென்படவில்லை.  அலுவலக உபயோகத்திற்காக எப்போதோ பொருத்தி இருந்த ஒரு கண்காணிப்பு கேமரா வெகுநாட்களுக்கு முன்பாகவே பழுதடைந்திருந்தது. அது இப்போது கண்டுபிடிக்கப்பட்டு புனருத்தாரணம் செய்து வர எடுத்துக் கொண்டு போகப்பட்டது.

அனைவரும் சென்றபின், “மேம், அடுத்து..?”, கர்ம சிரத்தையாக சூர்யா. முற்றிலும் வேலை அவள் மனதை ஆக்ரமித்து இருந்தது, தவிர இது வெகு நாட்களாக இவர்களுக்கு தண்ணீர் காட்டிய வழக்கும் கூட.

இவளது சிரத்தையை வேடிக்கை பார்த்தபடி, லேபிளில் சாய்ந்து கொண்டு குறும்பாக சூர்யாவைப் பார்த்த ஷானு, “நெக்ஸ்ட் வீக் வென்னஸ்டே நா கணேஷோட ஆக்ரா போப்போறேன்”, நமட்டு சிரிப்போடு சொன்னாள்.

“வாட்?”, புரியாத பாஷையில் பேசியதைப்போல முழித்தாள், சூர்யா.

அவளது முகபாவத்தில் ஷானுவிற்கு மேலும் சிரிப்பு வர..சூர்யாவை பார்த்து  கண்ணடித்து, “செகண்ட் ஹனிமூன்”, என்றாள்.

அம்பாசிடர் கார் ஹெட்லைட் போல கண்களை அகலமாக விழித்து, “மேம்? இங்க ஒரு சிங்கிள் மிங்கிளாக முடியாம கஷ்டப்படறேன், இத்தனை வருஷம் கழிச்சு உங்களுக்கு செகண்ட் ஹனிமூன்? அதுவும் தாஜ் மஹால்ல?!”, நிஜமாகவே பொருமினாள்.

“ஹஹஹ, ஏன் கூடாதா? ஆனா என்னோட ஹனிமூன் பத்தி உனக்குத்  தெரியாதில்ல? அதான் இப்படி கோவப்படற..”

“வேணாம் மேம்.  அப்படியென்ன ஸ்பெஷல்?-ன்னு நா கேட்கவே மாட்டேன். எல்லார்க்கும் அவங்கவங்க ட்ரிப் ஸ்பெஷல்தான். அதனால ரொம்ப கதை பேசாம நீங்க ஹனிமூன் போறதுக்கும் இந்த கேஸுக்கும் என்ன சம்மந்தம்-ன்னு சொல்லுங்க”, கொஞ்சம் நிதானித்து என்ன விஷயம் என்று கேட்டிருக்கலாம் என்று பின்னால் வருத்தப்படப் போவது தெரியாமல் சூர்யா ஷானுவிடம் கேட்டாள்.

“ஆக்ரா ட்ரிப் ஒரு கவர் அப், ஆனா நிஜமான வேலை வேற.”

“ஓ! ஆனா கணேஷ் சார்…?”

“ஒத்துக்கிட்டார். நம்ம கெஸ் உண்மையா இருக்கிற பட்சத்துல இது ரொம்பவே சென்சேஷனல் நியூஸ். யாரு குற்றவாளின்னு கண்டுபிடிக்கிறது நம்ம வேலைன்னா, அவங்கள  குற்றம் செய்ய தூண்டியது எது-ன்னு தெரிஞ்சி மக்களுக்கு ரிப்போர்ட் பண்றது மீடியா வேலைதானே-ன்னு கேட்டேன். மறு வார்த்தை பேசாம ‘ஓகே ப்ரோசீட்’ -ன்னு சொல்லிட்டார். தவிர, இனி அவரோட ஆளுங்கதான் களத்தில இறங்கி வேலை பாக்கப் போறாங்க. கூட வரமுடியுமா-ன்னு கேக்கறதுக்கு முன்னாடியே அவர் ஃபுல் பார்ம் க்கு வந்துட்டார்.”

“சரி மேம், ஆனா ஏன் வர்ற புதன்கிழமைன்னு பிளான் பண்ணினீங்க?”

“அந்த நா பிக்ஸ் பண்ணின தேதி இல்ல, அவங்க பண்ணாங்க”,

“அவங்களா? யாரது?”. என்று தனக்குத்தானே கேட்டு, “மேம், கொஞ்சம் தெளிவா சொன்னா..”, என்று இழுத்தாள்.

“யார் வீட்டுக்கு போனதுக்கப்பறம் நமக்கு மிரட்டலா போட்டோ அனுப்பினங்களோ அவங்க”

“சோனு”

“எஸ். நீ  யாருக்கும் தெரியாம அந்த சோனு வீட்டுக்கு போனதுக்கு அப்பறமாத்தான நம்மை டார்கெட் பண்ண ஆரம்பிச்சாங்க?”

“எஸ் மேம், ஞாபகம் இருக்கு”

“அப்போ சோனுவுக்கும் இந்த கொலைகளுக்கும் ஏதோ ஒரு சம்மந்தம் நிச்சயமா இருக்குன்னு தெரியுதா?”

“ஆமா மேம், ஆனா இதைத்தான் அப்போவே யோசிச்சிட்டோமே?”

“எஸ். கூடவே கொலைகள் நடக்கற நேரத்துல மட்டுமில்ல அதுக்கு ஒரு வாரத்துக்கு முன்னால இருந்தே சோனு ப்ளஸ் அந்த டாக்டர் அவங்கவங்க ஊர்ல இல்லங்கிறதையும் கண்டுபிடிச்சோம் ஞாபகம் இருக்கா?”

“யா”

“அப்போ அடுத்த கொலை எங்க அரங்கேறப்போகுதோ…”, என்று சொல்லும்போது சூர்யா திருதிருவென முழிக்க..

அரங்கேற்றத்துக்கு சூர்யாவுக்கு அர்த்தம் புரியவில்லை என்பதை அறிந்தவளாக, ‘இது தேறாத கேஸ்’ என்பதாக தலையசைத்து,  “நெக்ஸ்ட் மர்டர் எக்சிக்யூட் பண்றதா இருந்தா.. இவங்க ரெண்டு பேரும் அவங்க ஊர்லேர்ந்து காணாம போவாங்க இல்லையா?”

“ஆமா மேம், ஆனா எப்போன்னு.. ஓ!. சோனு வர்ற புதன்கிழமை எங்கியோ  போறாங்க. அவங்கள நீங்க பாலோ பண்றதுக்குத்தான் இந்த ஆக்ரா ட்ரிப் கவர் அப்.”

“ராங். சோனுவோட சோர்ஸ் யாருங்கிறதை மட்டும்தான் நா ட்ரேஸ் பண்ணப்  போறேன். நம்ம பிரைவேட் டிடெக்டிவ் குடுக்கற தகவல்களை வச்சு டெல்லிலேர்ந்து இவங்களுக்கு யார் ஹெல்ப் பண்றா?.  இது எல்லாத்துக்கும் லிங்க்  என்னன்னு கண்டுபிடிக்க பிளான். ஒரு கம்ப்ளீட் பிக்ச்சர் கொண்டு வர்ற ஐடியா”, என்றாள் ஷானு.

“ஹ்ம்ம்”, சில நொடிகள் ஷானுவின் திட்டத்திற்க்கு குறித்து யோசித்துவிட்டு, “மேம் அப்போ நா என்ன பண்றது?”, என்று கேட்டாள் சூர்யா.

“நல்லவேளை கேட்ட, எங்க மறந்துடுவியோன்னு நினைச்சேன்.  உன்னோட அசைன்ட்மென்ட்  அந்த சோனுவை வாட்ச் பண்றது. துல்கர் அந்த டாக்டரை.. அதான் அந்த விஜயகுமாரை தொடர்ந்து போய் அவங்களோட அடுத்த நகர்வு என்னனு அப்டேட் பண்ணனும்”.

தாடையை தடவியபடி, “ஓஹ்,  ஆனா அவங்களுக்கு ஏற்கனவே எங்களை தெரியுமே?  அவங்களை டிஸ்டர்ப் பண்ணக்கூடாதுன்னு நம்ம பேமிலிய காட்டி மிரட்டினாங்களே?”, கொஞ்சம் கவலையாக கேட்டாள் சூர்யா.

“ம். அதை யோசிக்காம இருப்பேனா? நாம எந்த பிக்ச்சர்லயும் வராத மாதிரி சோனுவையும் அந்த டாக்டரையும் க்ளோஸா வாச் பண்றதுக்கு நாலு பேரை கணேஷ் ஏற்பாடு பண்ணி இருக்காரு. நீங்க அவங்க கூட எப்பவும் டச்-ல இருந்தா போதும். ஆனா, அவங்க தகவல் சொன்ன உடனே போய் சேர்றமாதிரி தூரத்துல இருக்கனும்”

“ஓ அப்போ எல்லாம் யோசிச்சு தான் பிளான் பண்ணி இருக்கீங்க?”

“எஸ், ஒரே கல்லுல ரெண்டு மாங்கா, இந்த கேஸை கண்டுபிடிக்கறோம். அண்ட் முடிஞ்சா.. உனக்கு சாமர்த்தியம் இருந்தா.. உங்க நிச்சயதார்த்தத்தையும் சேர்த்து முடிச்சிடலாம்.”,

முதலில் ஆனந்த அதிர்வுதான் பார்த்த சூர்யா பின்.. ‘அடச்சே’ என்பது போல ஷானுவை பார்த்து, “நிச்சயதார்த்தமா?”, என்று ஒரு வித சுழிப்போடு சூர்யா கேட்க..

“ஏ..ம்மா?”, ஷானு.

“வளைகாப்பே  முடிச்சிடலாம் மேம்”, என்று கண்கள் மின்ன சிறு பிள்ளை போல சூர்யா துள்ளலாக சொல்ல.., 

சூர்யாவின் பதிலில் திகைத்த ஷானு, “ஆ! அப்போ கல்யாணம்…?” என்று சிரிப்புடன்  கேட்க..

போனால் போகிறது என்ற பாவனையில் “ஓ அது வேற இருக்கில்ல, சரி விடுங்க அதுவும் பண்ணிடலாம்.” சூர்யா.

“நீ போற ரூட் ஒன்னும் சரியில்லை, எதுக்கும் துல்கரை ஜாக்கிரதையா இருக்க சொல்லணும்”, என ஷானு சொல்ல..  இருவரும் வாய் விட்டு சிரித்தனர்.

ஷானு சூர்யா ஜுவாலா உள்ளிட்ட அனைவரும் சோனுவின் பிரயாணத்திற்காக காத்திருந்தனர்.