அத்தியாயம் 13
சென்னை நகரின் ஏதோ ஒரு மூலையில் இருந்த அழகு நிலையம். சூர்யா மேனிக்யூர், பெடிக்யூர் த்ரெடிங் செய்ய அடிக்கடி வரும் இடம். அங்கு ஆள் நடமாட்டம் எப்போதும் குறைவாகவே இருக்கும். அதனால் ஷானு சூர்யா இருவரும் தனியாக பேச எதுவாக இருந்ததால், முக்கிய விஷயங்கள் பேச இங்கே வந்து விடுவார்கள்.
கூடவே ஷானு இன்னும் எச்சரிக்கையாக அந்த அழகி நிலையத்தின் உள்ளே வந்ததும் ஜாமர் எனப்படும் கருவியை உயிர்ப்பித்து விடுவாள். எத்தனை நுட்பமான மின்னணு கருவியாக இருந்தாலும் அங்கு அந்த ஜாமரை மீறி வேலை செய்யாது.
“மேம், நாம யோசிச்சா மாதிரியே, கொலைகளை செய்துட்டு தற்கொலை பண்ணி  இறந்து போனவங்க எல்லாம் ஹோம்-ல வளந்தவங்க.”
“ஹ்ம்ம்.”
அவர்கள் அனைவரும் பெற்றோர் இல்லாதோர் என்ற துப்பு கிடைத்ததும், ஒருவேளை ஆதரவற்றோர் இல்லத்தில் வளர்ந்தவர்களாய் இருப்பார்களோ என்று சந்தேகித்த சூர்யா, “மேம், இப்போதைக்கு இவங்க பேர், என்ன வேலை பாத்தாங்க, எந்த ஊர், யார் உறவுகாரங்கன்னு மேலோட்டமான தகவல்கள் தான் நம்ம கிட்ட இருக்கு. ஆனா, இவங்கல்லாம் எங்க வளந்தாங்கன்னு தெரியாது. சோ கொஞ்சம் டைம் குடுங்க அவங்கள பத்தி மொத்த டீடெயில்ஸ்ம் கலெக்ட் பண்ணிட்டு வர்றேன்.”, என்று சொல்லிவிட்டு, பத்து நாட்களுக்கு முன் சென்றாள்.
அவளை கண்காணிப்பதால், நேரடியாக செயல்படாமல், சூர்யா வேறு வேறு ஊர்களில் இருந்த தனது கல்லூரி நண்பர்களை அணுகினாள். அவர்களால் திரட்ட முடியாத தகவல்களை ஷானு, மாயாவின் பத்திரிக்கை நண்பர்களின் உதவியோடு தெரிந்து கொண்டாள்.
அப்படி ஒவ்வொன்றாக திரட்டிய அறிக்கைகள் ஷானுவின் கையில் இருந்தது, கண்கள் அதில் மேய்ந்துகொண்டு இருந்தது.
“மேம், இது தவிர நாம சஸ்பெக்ட் லிஸ்ட்-ல இருக்கிற ஆர் பி ஐ சோனுவும், அந்த டாக்டரும் கூட ஹோம்-ல வளர்ந்தவங்கதான். ஆனா, இதுல என்ன பியூட்டீன்னா யாரும் ஒரே இடத்துல வளரல. அப்படி இருக்கும்போது, எப்படி இவங்க எல்லாம் சேர்ந்து இந்தக் கொலைகளைப் பண்ணியிருப்பாங்கன்னு நினைக்கறீங்க?”
“கண்டிப்பா சேர்ந்து தான் பண்ணி இருக்கனும்”, என தீர்மானமாக சொன்னாள் ஷானு. “அவங்க எப்போதும் தொடர்புலயேதான் இருக்காங்க.”
“மேம், எப்படி மேம் இவ்ளோ உறுதியா சொல்றீங்க?”
“இல்லன்னா சோனு வீட்டை நீ ப்ரீச் பண்ணி உள்ள போனதும், எப்படி நம்ம எல்லார் குடும்பத்தயும் கார்னர் பண்ண முடியும்? அடுத்தடுத்த கொலை நடக்கும்போது அந்த டாக்டரோட க்ளினிக் க்ளோஸ் பண்ணி இருக்கார். சோனுவும் அந்த நாட்கள்ல  ஆபீஸ்க்கு லீவ் போட்டு இருக்காங்க.”
“ஆனா மேம், அவங்க மொபைல் எல்லாம் தரோவா பாத்தாச்சு. கால் லிஸ்ட்-லயோ, வாட்ஸாப், மெயில், மெஸஞ்சர், ட்விட்டர்… இன்னும் எந்த ஒரு விதமாவும் ஒருத்தர ஒருத்தர் காண்டாக்ட் பண்ணிக்கல. அப்போ அவங்க பேச என்ன உத்தி ? ஐ மீன் மோட் ஆஃப் கம்யூனிகேஷன்?”, என்று சூர்யா யோசனையானாள்.
கண்களை மூடிக்கொண்டு ஆழ்ந்த சிந்தனைக்கு சென்றவளாக தனக்குத்தானே.., ‘ம்ம். பேசறது வெளில யாருக்கும் தெரியாது.. ஆனா பேச முடியும். அதுவும் ஒருத்தர்  இல்ல, ஒரு க்ரூப் ஆஃப் பீப்புள். ரொம்ப ரொம்ப ரகசியமா.., யாரும் ட்ராப் பண்ண முடியாத மாதிரி..’, என்று பேசியபடி நெற்றியை தடவி யோசித்த ஷானு.. திடீரென ஒரு வெளிச்சக்கோடு மூளையில் பரவி,  ‘டார்க் நெட்’ என்றது.
கண் திறந்து சூர்யாவைப் பார்த்து, “ஹே டார்க் நெட்”, உச்ச ஸ்தாதியில் சொன்னாள்.
“ஓ யா ! எஸ் எஸ் டார்க் நெட்… அப்படி ஒரு வழி இருக்கில்ல?  நினச்சேன், இதுவா இருக்குமான்னு ரெண்டு நாள் முன்னாடியே தோணுச்சு. டார்க் நெட் லயும்  வாட்ஸாப்-ல இருக்கிறா மாதிரி குரூப்ஸ் வச்சுக்க முடியும் இல்லியா மேம்? ஆனா சாதாரணமான கூகிள் பையர்பாக்ஸ் எக்ஸ்ப்ளோரர் மாதிரியான பிரவுசர்-ல அதை உபயோகிக்க முடியாதுன்னு..?”
“எஸ். யூ ஆர் ரைட். அதுக்குன்னே தனியா தோர்-ன்னு ஒரு ப்ரவுஸர் இருக்கனும். டார்க் வெப்-ல அக்கவுண்ட் இருக்கணும்னு நினைக்கிறவங்க அதுல மட்டும்தான் உள்ள போக முடியும். ஆனா ஒன்ஸ் உள்ள போயிட்டா அதை உபயோகிக்கறவங்களோட தகவல்கள் எல்லாம் அடுத்தவங்க பாக்கவோ, ட்ரேஸ் பண்ணவோ முடியாத மாதிரி மறைக்கப்படும். நம்ம பிரவுசிங் ஹிஸ்டரி-ன்னு கேட்டா கூகிள் க்ரோம் மொத்தமா நாம எந்த எந்த வெப் சைட்கு போனோன்னு சொல்லிடும் இல்லியா? அது இந்த சைட்-ல முடியாது. ஏன்னா.. ஒவ்வொரு தளத்துக்கு போறதுக்கும் ஒரு யுனிக் யு ஆர் எல் இருக்கும். உதாரணத்துக்கு.. நாம பேஸ் புக் போகணும்னா என்ன பண்ணுவோம்?
“பேஸ்புக்-ன்னு டைப் பண்ணுவோம் இல்லன்னா, அந்த ஐகான அமுக்குவோம்…”
“ஆனா, டார்க் வெப்-ல அப்படியான நேரடியான தெளிவான உரலிகள் இருக்காது. xcdferrt.sng. அப்டின்னு குழப்பமா இருக்கும். அதைவிட முக்கியமான ஒண்ணு. யாரு டார்க் வெப்-ல வொர்க் பண்றங்களோ அவங்க சிஸ்டத்தோட ஐ பி அட்ரஸ் வெளிய யாருக்கும் தெரியாது. சோ அத ட்ராக் பண்றதும் ரொம்ப கஷ்டம்.”
“மேம், அது எப்படி மேம்? ஐ பி அட்ரஸை மறைக்க முடியும்?”
“முடியும். நீ உன்னைப்போல் ஒருவன் படம் பாத்திருக்கியா? அதுல கமல் போன் பேசும்போது வேற வேற நாட்ல இருந்து பேசற மாதிரி வரும் இல்ல? அது இந்த டெக்னலாஜி தான்.  ஹ்ம்ம். அமெரிக்க ராணுவ ரகசியத்தை காப்பாத்தஉருவானது அது எப்படியெல்லாம் சீரழியுது பாரு”.
“மேம், அது சீரழியல, அதால நாம சீரழியறோம்னு சொல்லுங்க, சரி மேம், அங்க கொலை-ல்லாம் கூட பிளான் பண்ணுவாங்களா?”
“கொலை, கொள்ளை, கடத்தல், நார்காட்டிக்ஸ், இதெல்லாத்தையும் விட ஆபாச படங்கள் பாக்கறதுன்னு ஏகப்பட்டது இருக்கு. டார்க்வெப் நெட்ஒர்க் மூலமா இயங்கின ஒரு போர்ன் சைட்-ல நாலு லட்சம் பேருக்கு மேல பணம் கட்டி பதிவு பண்ணி, அதுல மெம்பரா இருக்காங்க தெரியுமா?”
“மேம், நாலு லட்சம் பேரா?”
“ஆமா”
“சரி ஓகே மேம், நீங்க சொல்றா மாதிரி கொலை பண்றவங்க எல்லாம் கண்டேபிடிக்க முடியாத டார்க் வெப்-ல குரூப் வச்சு ஆபரேட் பண்ணி இருக்காங்கன்னே வச்சிப்போம், அவங்களுக்கு யாரெல்லாம் கொலை செய்யப்படணும்னு எப்படி முடிவெடுக்கறாங்க?”, என்று கேட்டுவிட்டு அவளே தொடர்ந்தாள்.
“ஏன்னா.. இவங்களால கொல்லப்பட்டவங்க நார்மல் லைஃப் லீட் பண்ணி இருக்காங்க, பெரிசா சொல்லிக்கறா மாதிரி ஏதாவது கேஸ், குற்றம்-ம்னு எதுவும் கிடையாது. ரெவென்ஞ் எடுக்கறாமாதிரி… ஹூஹும். “
“அப்போ யாருக்கும் தெரியாதமாதிரி… அதுலயும் குறிப்பா அனாதை ஆஸ்ரமத்துல வளர்றவங்க பாதிக்கப்படறா மாதிரி அவங்க ஏதாவது பண்ணியிருக்கலாமில்ல?”
“மேம்…, அவங்களே ஆர்பன்ஸ், அவங்கள வச்சு என்ன பண்ண முடியும்?”
கூர்மையாக சூர்யாவைப் பார்த்து, “யோசி”, என்றாள் ஷானு.
“ம்ம். அவங்கள காமிச்சு நிறைய டொனேஷன் கலெக்ட் பண்ணலாம். கவர்ன்மென்ட் கிட்ட இருந்து சப்ஸிடி, ஏகப்பட்ட சலுகைகள்…”
‘ஹூஹும்’, இடவலமாய் தலையசைத்து மறுத்து.., “அது எல்லாத்தையும் விட அதிகமா பணம் கொட்டற விஷயம்..”
“மேம்.. “
“ஓகே. ஒரு க்ளூ தர்றேன், சமீபத்துல நம்ம சென்னை உலகத்துக்கெல்லாம் டாப் ன்னு ஒரு ரெக்கார்ட் ஏற்படுத்துச்சி. அது எதுல தெரியுமா?”
“பட்டா கத்தில கேக் வெட்டற..?”
“சே சே”, “நோ”
“ஈவ் டீசிங்?.. ச்சே..  இப்போதான் கோவிட்-னால காலேஜே கிடையாதே? ஆங். மேம், ஆன்லைன்-ல பாடம் நடத்தற டீச்சர்ஸ்..”
“அட நீ என்ன எங்கெங்கயோ சுத்தற?, அதெல்லால்ல, சென்னை தான் முதலிடம்-ன்னு சொல்றேன் அதுவும் உலகத்துலேயே சென்னைதான் ஃபர்ஸ்ட். ரொம்ப ரொம்ப ஷேம்ஃபுல்லான விஷயம்”, ஷானு ஒரு வித முகச்சுழிப்போடு சொன்னாள்.
“ஷேம்ஃபுல்?”, என்ற சூர்யா சில நொடிகளில் “ஐயோ மேம், தெரியும், போர்னோகிராபி பாக்கறதுல தான் சென்னை ஃபர்ஸ்ட்-னு வந்துச்சு.”
“எஸ். அதுலயும் கிட்ஸ் போர்னோவைப் பாக்கறதுல நம்ம சென்னைதான் டாப்., வெக்கக்கேடு”
“மேம்.. அப்போ நீங்க சொல்றத பாத்தா, அந்த இல்லத்துல இருந்த குழந்தைகள… செக்ஸ் டார்ச்சர் பண்ணி..?”
“வாய்ப்பிருக்கு, இல்லனா அப்படியான ஹோம்-ல வளந்தவங்க மட்டும் ஏன் இதுல இன்வால்வ் ஆகி இருக்கனும்?”
“மேம்..? இது வேற எதாவது மோடிவ்-வோடே செயல்படற கும்பலா இருக்கலாமில்ல?”
“முதல்ல நானும் அப்படித்தான் யோசிச்சேன். ஆனா, இவங்களால கொல்லப்படறவங்க மூலமா இறந்து போனவங்களுக்கோ, அவங்க சம்மந்தப்பட்ட யாருக்காவது ஏதாவது ஆதாயம் கிடைச்சிருக்கான்னு பாத்தா.. அப்படி எதுவும் இல்ல. அப்போ, இப்படியான காரணம் தான் இருக்க முடியும்னு தோணுது.”
“அதை எப்படி கண்டுபிடிக்கிறது மேம்?”
“இப்போ கடைசியா நகரி-ல செத்துப்போனாளே ஒரு பொண்ணு, அவ டீடெயில்ஸ் பாரு. அதுல அவ அருணை இல்லம்-ன்னு ஒரு ஆதரவற்றோர் இல்லத்துல கொஞ்ச நாள் இருந்திருக்கா-ன்னு ரிப்போர்ட்-ல இருக்கு. கவனிச்சியா?”
“ஆமா மேம். இப்போ அந்த கேஸ் நல்லா ஞாபகத்துக்கு வருது. அந்த திருவண்ணாமலை பக்கத்துல இருந்த இல்லத்துல ஏழு வயசுலேர்ந்து பதினேழு வயசு வரைக்கும் கிட்டத்தட்ட முப்பது குழந்தைங்க இருந்தாங்கன்னும், அவங்க எல்லாருக்கும், அந்த இல்லத்தை நடத்தின வினோத்-ங்கிறவன் செக்ஷுவல் டார்ச்சர் குடுத்தான்னு..”
“எஸ் அந்த கேஸ்தான்.”
“அதுக்கும் இந்த பீச் ஹவுஸ்-ல கொலையானவங்களுக்கும் என்ன சம்மந்தம் மேம்?”
“அந்த அருணை இல்லம் இருந்த இடத்துல இப்போ என்ன இருக்கு தெரியுமா?”
சூர்யா இல்லை என்பதாக தலையாட்டினாள்.
“அன்னிக்கு செத்துப்போன நாலு பேர்ல ஒருத்தன்.. மதிவாணன். அவனோட ரைஸ் மில். அந்த அருணை இல்லம் பத்தி வெளிய தெரிஞ்ச வருஷம் 2016, இன்னிக்கு வரைக்கும் அந்த இடத்தை யாரும் வாங்கல, விக்கலை. ஆனா.. அங்க இந்த மதி ரைஸ் மில் கிட்டத்தட்ட நாலு வருஷமா  அங்க நடக்குது. எப்படி அமைச்சரோட பீச் ஹவுஸ் பினாமி பேர்ல இருக்கோ, அதே மாதிரி இதுவும் பினாமி பேர்ல இருக்கு. இப்போ சொல்லு,  இவங்க அதுல சம்மந்தப்பட்ருக்க சான்ஸ் இருக்கா? இல்லையா?”
“இருக்கு மேம், ஆனா இது எல்லாமே கெஸ்ஸிங் தான? சாலிட் ப்ரூப் வேணுமே?”
“கிடைக்கும், கிடைக்கும், இன்னும் கொஞ்ச நாள்ல கிடைக்கும் பாரு”,
“எப்படி மேம்?”
“நம்மை ஃபாலோ பண்றவங்க யாருக்கு இன்பர்மேஷன் குடுக்கறாங்கன்னு தெரிஞ்சா… அவங்க மூலமா நமக்கு எல்லாமே கிடைக்கும்”
“யாருன்னு தெரிஞ்சுச்சா மேம்?”
“டெல்லிக்கு ரிப்போர்ட் பண்றாங்க-ங்க வரைக்கும் தெரிஞ்சது, அதுக்கும் மேல எதுவும் தெரில. ஆனா, சீக்கிரமா கண்டு பிடிக்கறேன்னு அந்த டிடெக்டிவ் ஏஜென்சி-ல சொல்லி இருக்காங்க, ஆனா அதுக்கு முன்னாடி நா ஒரு சில கண்ணாமூச்சி வேலைகள் பண்ணலாம்னு இருக்கேன்”, என்றாள் ஷானு மானுக்கு வலை விரிக்கும் வேடனாய்.
)))))))))))))))))))))))
திரையில் தெரிந்த அந்த புகைப்படத்தை ஜ்வாலாமுகி இமை கொட்டாமல் பார்த்துக் கொண்டு இருந்தாள். விழிகள் திரையை வெறித்திருக்க.. மனமென்னவோ கடந்த காலத்திற்குச் சென்றது.
“யேய்.. எல்லாரும் அவங்கவங்க தட்ட எடுத்துட்டு வந்து வரிசையா வந்து உக்காருங்க”, என்ற கூடத்தை நோக்கி சப்தமிட்ட அந்த பெண்மணி.. பெயர் இந்துகுமாரி.. யின் கையில் பெரிய பாத்திரம் இருந்தது. அவரது சத்தத்தில் உள்ளே இருந்து பல பிள்ளைகள் வெளியே எட்டிப் பார்த்தன. அடுத்த சில நிமிடங்களில் பசியின் அகோர பிடியில் இருந்த போதும் அவர்கள், வரிசையாக அந்த மரத்தடியின் அருகிருந்த விசாலமான சாப்பாட்டுக் கூடத்தை நோக்கி செல்ல ஆரம்பித்தனர்.
‘சர்க் சர்க்’, சருகுகள் மிதிபடும் ஓசை.
‘ஹே ஏண்டி நம்மள எல்லாம் யூனிஃபார்ம் போட்டுட்டு வர சொன்னாங்க?’
‘க்ளக் க்ளக்’, அவரவர் தட்டங்கள் மேஜை மீது வைக்கப்படும் சப்தம்.
‘ம்ப்ச். இன்னிக்கும் அதே டிபன்தானா?’
‘டக் டக் டக்’, தம்ளர்கள் வைக்கும் ஓசை.
‘யாராவது டோனர் வர்றாங்களா?’
‘தலைய கூட நல்லா வாரிட்டு வர சொல்லி சொன்னாங்க.’
‘இன்னிக்கு நல்ல சாப்பாடு கிடைக்கும் போல?’ கிசுகிசுவென குழந்தைகளின் பேச்சு சப்தம்.
‘ஏய். இது ஜுவாலாவோட இடம். தள்ளி உக்காரு’
‘எதுக்குடி அவ கிட்ட வம்பு வச்சிக்கற?’
‘எதுக்கு என்னைய திட்ற?  எப்போவும் நீ எம்பக்கத்துல தான் உக்காருவ ன்னு அவளுக்கு தெரியாதா?’, காஜல்
‘சரி சரி சத்தம் போடாத, ஆயாம்மா பாக்குது பாரு’
பக்கவாட்டு சுவற்றில் ‘இவர்கள் சிறகில்லா பறவைகள்’ என்று எழுதப்பட்டு கண்களில் நீரோடு ஒரு புறா வரையப்பட்டிருந்தது.
‘குழந்தைகளா இதுங்க? வந்து சேர்ந்து நம்மள ஒரு வழி பண்ணுதுங்க.’, முணுமுணுப்போடு, காலை உணவை பிள்ளைகள் முன்பிருந்த தட்டத்தில் பரிமாறினார் (போட்டார்.)
“யே எல்லாம் கவனிங்க. இப்போ வரப்போற டோனருக்கு இன்னிக்கு பிறந்தநாள். அவர் வந்த உடனே எல்லாரும் எழுந்து நின்னு கோரஸா ஹாப்பி பர்த்டே பாடணும். அப்பறம் அவரே எல்லாருக்கும் ஸ்வீட் தருவாரு, அதுக்கு அப்பறமாதா நீங்க சாப்பிட ஆரம்பிக்கணும். அதுக்குள்ள பக்கி மாதிரி பறக்காதீங்க. என்ன சொல்றது புரியுதா?”, சிடுசிடுத்தார் அந்த இல்லத்தில் பணிபுரியும் பெண்.
“சரி ஆண்ட்டி” என்ற பிள்ளைகளால் அவர்கள் முன் வைக்கப்பட்டிருந்த உணவினை.. பார்க்க மட்டுமே முடிந்தது.
ஆயாவின் வார்த்தையை மீறி யாரேனும் எடுத்து சாப்பிட்டால்..? முடிந்தது. அன்றைய தினத்திற்கான அனைத்து வேலைகளும்.. பாத்திரம் தேய்ப்பது, கூடத்தை துடைப்பது, காய் கறி நறுக்குவது இவை அனைத்தும் வயது வித்தியாசம் பாராது அவர்கள் தலையில் விழும்.
நல்ல வேளையாக இவர்களுக்கு அன்னதானம் செய்த.. அம்மா, அப்பா, பதினேழு பதினெட்டு வயதில் இருக்கும் மகன் இம்மூவரைக் கொண்ட குடும்பம் பத்து நிமிடத்தில் வந்து விட்டனர்.
அவர்களைக் கண்டதும்  குழந்தைகள் எழுந்து நின்று வணக்கம் வைத்து, பிறந்த நாள் வாழ்த்து பாடினர்.
வந்திருந்த அந்த அம்மா, அக்குழந்தைகளின் முன்பிருந்த காய்ந்து போயிருந்த சப்பாத்தியையும், மஞ்சள் நிறத்தில் ஆங்கங்கே பருப்புடன் இருந்த திரவத்தையும்  (தால்), பாட்டினூடே கவனித்தார்.
கணவர் அவர்களுக்கு நன்றி தெரிவித்து, ஒவ்வொருவருக்கும் லட்டு விநியோகம் செய்யத்துவங்க.. அப்பெண்மணியோ, மெதுவாக ஆயாம்மாவைக் கூப்பிட்டு, “இவங்கல்லாம் ஏன் இன்னும் சாப்பிடாம இருக்காங்க?”.
“அது.. நீங்க வந்து இனிப்பு தர்றதா சொல்லி இருந்தீங்கள்ல? அதுக்காக காத்திட்டு  இருக்காங்க”
“அங்க பாருங்க, தட்டு சுத்தி ஈ மொச்சிட்டு இருக்கு. ப்ச். சாப்பாடை தட்டத்துல போடாமலாவது இருந்திருக்கலாமில்ல?”
“ஹி ஹி, சாப்பாடு போட்டா அந்த பாத்திரத்தை தேச்சுடலாம். ஒரு வேலை முடியும்னு..”
இந்த பதிலைக் கேட்ட அந்த அம்மாவின் முகம் அதிருப்தியின்னைமை காட்டியது. ஆயாவைப் பார்த்து “இன்னிக்கு லன்ச்-ம்  நாங்களே கொண்டுவறோம். மொத்தமா எத்தனை பேர் இருக்காங்கனு சொல்லுங்க”, என்றதும்..
வாயெல்லாம் பல்லாக, “அது ஒரு எழுவத்திமூணு பேர் இருக்காங்க மேடம், அப்படியே இங்க வேலை பாக்கறவங்களுக்கும் சேர்த்து எக்ஸ்டராவா பத்து சாப்பாடு குடுங்க மேடம். உங்க தயவுல சேவை செய்யறவங்க நல்ல சாப்பாடா சாப்பிடட்டும்”, என்று ஆயாம்மா குழைந்தார்.
“நிகில்”,என்று கணவனிடம் நின்ற மகனைக் கூப்பிட்டு அவன் வந்ததும் ATM கார்டை கையில் குடுத்து, “இங்க பக்கத்துல இருக்கிற ஹோட்டல்-ல இவங்க எல்லாருக்கும் லன்ச்க்கு ஏற்பாடு பண்ணு கண்ணா”, என்கவும்,  அவரின் கணவர் மட்டுமல்லாமல் அங்கிருந்த அனைவரின் பார்வையும் அந்த அம்மாவிடம் செல்ல.., கொஞ்சம் சங்கோஜமாக உணர்ந்து, “என்ன பாக்கறீங்க? சீக்கிரம் சாப்பிடுங்க”, என்றார்.
அன்று முழுவதும் மட்டுமல்ல, அடுத்த ஒரு வாரத்திற்கு  ஜுவாலாமுகியிடம் அவளது உற்ற தோழியான காஜல் பேசியது அன்று அவர்கள் சாப்பிட்ட உணவைச் சுற்றியே இருந்தது. அத்தனை ருசியான சாப்பாட்டை அவர்கள் இதுவரை பார்த்ததுகூட கிடையாது என்பதால், பனிரெண்டு வயது ஜுவாலாவும் அப்பேச்சில் லயித்தாள்.
இந்நிகழ்வுக்கு மூன்று மாதங்களுக்கு பிறகு.. ஒரு பேய் மழை நாளில், தனது ஏழு வயதிலேயே ஆர்ப்பரிக்கும் கங்கையில் எதிர் நீச்சல் போடத்தெரிந்த பெண்ணான காஜல், அந்த ஆதரவற்றோர் இல்லத்தின் தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து உயிரை விட்டிருந்தாள்.
இது நடக்க வாய்ப்பேயில்லை என்று எவ்வளவு கதறியும், யாரும் ஜுவாலாவின் பேச்சை செவி மடுக்கவில்லை. காஜலின் அந்திம காரியங்கள் அங்கே அந்த இல்லத்திலேயே நடந்தது.
அன்றும் அதன் பின்னர் வந்த நாட்கள் அனைத்தும் ஜுவாலாவை பொறுத்தவரை இருள் தினங்கள்.
அது..
தீயைப்போன்ற இருள்;
திகுதிகுக்கும் இருள்;
சாவை நிகர்த்த இருள்.
பழைய நினைவுகளில் இருந்த ஜுவாலாவின் கை முஷ்டி மடங்க, பற்கள் அரைபட்டு தாடை இறுகியது.
காஜல் உயிரை விட்ட காரணத்தை அவள் இறந்த நான்கு நாட்களில்.. அவளைக் கொன்றவனே ஜூவாலா-வுக்குத் தெரிவித்தான்.அப்படி அவன் இவ்விஷயத்தைத் தெரிவிக்கும் போது, ஜுவாலாவின் கைகளும் கால்களும் கட்டிலில் கட்டப்பட்டு, அரைமயக்க நிலையில் இருந்தாள்.
சொன்னவன்.. அவன்.. பிரஜேஷ் தாக்கூர். அன்று ஒரு நாள் இல்லத்தில் இருந்த அனைவர்க்கும் மதிய உணவு வாங்கித்தந்த அப்பெண்ணின் கணவன். அந்த இல்லத்தை நிர்வகிக்கவென புதிதாய் வந்தவன்.
இதோ ஜுவாலாவின் எதிரே இருக்கும் கணினித் திரையில் தெரிபவனும்  அதே பிரஜேஷ் தாக்கூரேதான்.
ஜுவாலாவின் கண்களில் அதீத பசியோடு வேட்டையாட ஆயத்தமாகும் புலியின் வன்மம் தெறித்தது.
)))))))))))))))))))