ஒருபுறம் ப்ரியாவின் திருமண நிகழ்வால் உடைந்த போன தாயின் மனநிலை, ஒருபுறம் அவளின் உடல்நிலை, இருவரின் குடும்பச் சூழ்நிலை, இதையெல்லாம் கடந்து அவளை அவன் கைபிடித்தாலும், ஒருவேளை, ஒருவேளை அவள் பாதியில் அவனை விட்டுப் போய்விட்டாள், என்று யோசித்த நொடி அவன் இதயம் சொல்லொணா வேதனையில் உழன்றது! காலம் முழுக்க அந்த வேதனையை அவனால் தாங்கிக் கொள்ளவே முடியாது! ஆனாலும் அவள், அவள் எனக்காக என்னோடு வாழ்ந்துவிட மாட்டாளா?! என்ற பேராசையும் போட்டி போட்டது நேசம் கொண்ட மனதாய்.   

     உண்மையில் அவளை விட அவன்தான் வெகுவாய் சோர்ந்து போயிருந்தான் இப்போதெல்லாம் மனதளவில். அவள் தனக்குள் வந்துவிட்டாள் என்று புரிந்த நொடி முதல், முற்றிலும் பயம் பயம் மட்டும் தான் அவனைச் சூழ்ந்திருந்தது. ஒருநாள் வாழ்ந்தாலும் உன்னோடு வாழ்ந்தா போதும், உன் அன்பு மட்டும் போதும் வேறு எதுவும் வேணாம். உனக்கு நீ எனக்கு நான் போதும் இப்படி எல்லாம் நினைச்சு நிச்சயமா அவளை கைபிடிக்க முடியாது. இது வாழ்க்கை. நாங்க சந்தோஷமா வாழணும் எங்க காலம் முழுக்க. இப்போதைக்கு அவளுக்கு என்மேல் இருக்க காதலால் அவ தன்னோட பிரச்சினைகளை மறந்து இருந்தாலும் போக போக அதுவே அவளுக்கு தாழ்வு மனப்பான்மையா ஆகிடும் என்று ஏதேதோ எண்ணி கலங்கினான் தனக்குள்ளேயே. இதையெல்லாம் யோசித்தபடியே சிறிது நேரத்திற்கு முன் தூரம் தள்ளிவிட்ட தன் கைபேசியைக் மீண்டும் கையில் எடுத்திருந்தவன் அவளது வாட்ஸ்அப் ப்ரோபைலிலிருந்த அவளது கண்களின் புகைப்படத்தை வருடிக் கொடுத்து,

     “நா நான் ஏன் மானு உன்னைப் பார்த்தேன்?!” என்று உள்ளம் கலங்கக் கேட்ட நேரம்,

     “மித்ரா…! என்னப்பா?! ஏன் இங்க வந்து படுத்திருக்க பனி பெய்யுற நேரத்துல?!” என்று குரல் கொடுத்தபடி அங்கு வந்தார் தங்கமலர்.

     தாயின் குரல் கேட்டு சட்டென தன் மனதைத் தேற்றி எழுந்தமர்ந்தவன்,

     “ஒண்ணுமில்லைம்மா! சும்மாதான். நீங்க ஏன் இங்க வந்தீங்க இந்நேரத்துல?” என்றான்.

     “இல்லப்பா தண்ணி தீர்ந்து போச்சுன்னு எடுக்க வெளிய வந்தேன். பார்த்தா உன் ரூம் கதவுத் திறந்திருந்தது. உள்ள போய்ப் பார்த்த அங்க நீ இல்லை! மாடிப்படி லைட்டு போட்டிருக்கவும் நீ இங்க இருக்கியோன்னு வந்தேன்.” என்றவர், அவன் அருகே அமர்ந்து மகனையே சிறிது நேரம் பார்க்க,

     “எ என்னம்மா அப்படிப் பார்க்கறீங்க?!” என்றான் தடுமாற்றமாய்.

     “ஒண்ணுமில்லைப்பா! என் பொண்ணு மாதிரியே என் பையனும் இப்போவெல்லாம் என்கிட்ட எல்லாத்தையும் மறைக்க ஆரம்பிச்சுட்டான்னு நினைக்கும் போது நான் என் பிள்ளைங்களுக்கு நல்ல அம்மாவா இல்லையோன்னு தோணுது!” என்று தங்கமலர் தோய்வான குரலில் சொல்ல, பதறிப் போன மித்ரன்,

     “என்னம்மா பேசுறீங்க நீங்க?! நான், நான் எதையும் உங்ககிட்ட மறைக்கலை! அதோடு உங்களை மாதிரி ஒரு நல்ல அம்மா யாருக்குக் கிடைப்பாங்க சொல்லுங்க?!” என்றான் தாயின் கைகளை ஆதரவாய்ப் பிடித்து.     

     “ம்ஹும்!” என்று மெல்ல அவன் கையை தன்னிலிருந்து எடுத்து விட்டவர்,

     “இல்லைப்பா! நீ இப்போ எல்லாம் முன்ன மாதிரி இல்லை! கல்யாணம் நின்னு போனதில் இருந்து” என்று அவர் ஆரம்பிக்கவும்,

     “ஐயோ அம்மா! தயவு செஞ்சு அந்தப் பேச்சை மட்டும் எடுக்காதீங்க! அதைப் பத்தி நினைச்சாலே எரிச்சலா இருக்கு!” என்றவன், தாயின் முகம் வாட்டம் கொண்டதைக் கண்டு, சட்டென தன் கோபத்தைத் தணித்துக் கொண்டு,

     “ம்மா! இங்க பாருங்க! இங்க பாருங்கன்னு சொல்றேன்ல!” என்று அவர் முகத்தை நிமிர்த்த,

     “உண்மையாவே அந்தக் கல்யாணம் நின்னு போனதுல எல்லாம் எனக்குக் கொஞ்சம் கூட வருத்தமே இல்லைம்மா! சொல்லப் போனா நிம்மதியாதான் இருக்கு!” என்றவனைத் தங்கமலர் வித்தியாசமாய்ப் பார்க்க,

     “எ என்னம்மா அப்படிப் பார்க்குறீங்க?!” என்றான் புரியாமல்.

     “அ அப்போ நீயும் வேற யாரையாச்சும் மனசுல நினைச்சுக்கிட்டு இருக்கியா?!” என்றார் கலக்கமாய்.

     அதைக் கேட்டுச் சற்றுத் திகைத்தவன், நொடியில் தன்னைச் சமாளித்து,

      “அ அப்படி எல்லாம் இல்லைம்மா! ப்ரியா அக்கா வேற இடத்துல கல்யாணமாகிப் போன பிறகு, நான் ரஞ்சனியைக் கல்யாணம் செய்திருந்தா, அது மேலும் மேலும் அவங்க குடும்பத்துக்கும், நம்ம குடும்பத்துக்கும் தேவையில்லாத சங்கடங்களைத்தான் உருவாக்கி இருக்கும். அதை நினைச்சுதான் அப்படிச் சொன்னேன்.” என்றவனை நம்பாதவராய் தங்கமலர் பார்க்க,

     “உ உண்மையாதான் ம்மா சொல்றேன்!” என்றான் அவரை நம்ப வைத்துவிடும் நோக்கில். ஆனாலும் தங்கமலர், நம்பாமல் அவனைப் பார்க்க,

     “எ என்னம்மா அப்படிப் பார்க்கறீங்க?” என்றான் அவன் இப்போது மனவேதனையுடன்.

     அவன் கேள்வியால் சிறிது நேரம் மௌனமாய் அவனைப் பார்த்திருந்தவர், மெல்லிய பெருமூச்சொன்றை இழுத்துவிட்டு,

     “நீ இந்த நிமிஷம் முன்னாடி வரைக்கும் என்கிட்டே பொய் சொன்னது இல்லை மித்ரா! ஆனா இப்போ இந்த நிமிஷம் நீ எதையோ மறைக்குற!” என்றார் அவன் மனதை அறிந்துவிட்டவராய்.

     “ம்மா!” என்று அவன் அதிர்வோடு அவரை நோக்க,

     “எதுவாக இருந்தாலும் அம்மா கிட்ட சொல்லுன்னு நான் சொல்லலை! ஆனா நேத்து அப்பா சொன்ன மாதிரி, எந்தப் பிரச்சனையா  இருந்தாலும் முதல்ல நீ உன்னைத் தெளிவு படுத்திக்கோ! உனக்குள்ள ஏதோ தடுமாற்றம் இருக்கு! அதை நேத்து நீ ஹாஸ்பிட்டல்ல அப்பாகிட்ட பேசின போதுதான் நான் கவனிச்சேன்! முதல்ல நீ தெளிவாகு! அப்போதான் நாங்க உனக்கான முடிவை நிம்மதியா எடுக்க முடியும்! இல்லை,” என்று நிறுத்தி அவன் முகம் பார்த்தவர்,

     “ஒருவேளை நீ யாரையாவது விரும்புறதா இருந்தாலும் தயங்காம எங்ககிட்ட சொல்லிடு! ஆனா இப்போ மறைச்சிட்டு, மறுபடியும் ப்ரியாவுக்கு நடந்தது மாதிரி ஏதாவது நடந்தா சத்தியமா என்னால தாங்கிக்க முடியாதுடா!” என்றார் மனம் நொந்து.

     “ம்மா! ஏம்மா அப்படி எல்லாம் பேசுறீங்க!” என்று வருத்தத்துடன் கேட்டவன்,

     “நான் ஒருநாளும் உங்களைக் கஷ்டபடுத்துற மாதிரி ஒரு காரியத்தை செய்யவே மாட்டேன்ம்மா!” என்று அவர் கைபிடித்து அவரை ஆறுதல் படுத்தியவனின் உள்ளம் அவளையே மீண்டும் நினைக்கத் துவங்க, அவன் வெகுவாய் சோர்ந்து போனான். அது அவன் முகத்திலும் வெளிப்பட, தங்கமலருக்கு மகனின் வேதனைக்கு என்ன காரணம் என்று புரியவில்லை என்றாலும், அவனது வேதனை அவரையும் வெகுவாய் பாதித்தது.

     “என்னடா கண்ணா?!” என்று அவர் வாஞ்சையாய் அவன் தலை வருட, அவன் சட்டென்று உடைந்து போனவனாய்,

     “ம்மா! கொஞ்ச நேரம் உங்க மடியில தலை வைச்சுப் படுத்துக்கவா!” என்று கேட்டபடி மித்ரன் அவர்  மடியில் படுத்துக் கொள்ள, தங்கமலருக்கு நிச்சயமாய்த் தெரிந்துவிட்டது மகன் ஏதோ பெரிய மனஉளைச்சலில் இருக்கிறான் என்று!

     ஆனால் மேலும் மேலும் அவனை வற்புறுத்த அவருக்கு மனம் வரவில்லை! அதோடு மகன் மகளைப் போல் பயந்தவன் அல்ல! எந்த முடிவாக இருந்தாலும் அதைத் தீர்மானித்து விட்டால் அதில் உறுதியோடு நிற்பதோடு, அதை ஒருபோதும் யாருக்கும் பயந்தோ, மறைமுகமாகவோ செய்பவனும் அல்ல! அதனாலேயே அவனது நடவடிக்கையில் அவருக்குக் கவலை ஏற்பட்டாலும் அவன் நிச்சயம் தன்னிடம் மறைத்து தன் மனம் நோகுபடியான எதையும் செய்துவிட மாட்டான் என்ற நம்பிக்கை இருந்தது. ஆனால் அவனது குழப்பதிற்குக் காரணம் அவனே தான் எடுக்க நினைக்கும் முடிவை இதுவரை தீர்மானிக்கவில்லை என்பதும் அவனைப் பெற்றேடுத்தவாராய் அவர் ஓரளவு கணிக்க, அவன் போக்கில் விட்டுக் கொடுப்போம் என்று அதோடு அமைதியாய் இருந்துவிட்டார்.

     சிறிது நேரம் மகனின் தலையை வருடிக் கொடுத்தவாறே அவர் அமர்ந்திருக்க, மெல்ல தலை நிமிர்த்தி அவரைப் பார்த்தவன்,

     “நீங்க போய் தூங்குங்க ம்மா! நான் இன்னும் கொஞ்ச நேரம் இங்க இருந்துட்டு வரேன்” என்று எழுந்து கொள்ள,

     “ம்! சரிப்பா! நீயும் சீக்கிரம் வந்து படு” என்றுவிட்டு எழுந்து சென்றார்.

     அம்மா, அப்பா, என்று யார் என்ன அறிவுரை சொன்னாலும், அவன் மனம் மீண்டும் மீண்டும் கரை தீண்டும் அலையாய் அவளிடமே செல்ல, அதன் விளைவாக அவளின் இப்போதைய மனநிலை பற்றி அறிந்து கொள்ள அவளது முகநூல் பக்கத்திற்குச் சென்றான் அவளின் நினைவுகளைக் கட்டுப் படுத்த முடியாமல்!

      ஆனால் சில நொடிகளிலேயே, ஏன்தான் சென்றோம் என்று நினைக்கும் படியாய், அவள் சற்று நேரத்திற்கு முன்பு அவனுக்காய் எழுதிப் பதிவிட்டிருந்த அந்தக் கவிதையைப் படிக்க நேர, அவளின் அந்த வலி நிறைந்த வரிகளால், மொத்தமாய் நொறுங்கிப் போனான் கீழே விழுந்து உடைந்த கண்ணாடியைப் போல்!

     ‘மானு என்ற ஒற்றை அழைப்பில்

     என் உயிர் தொட்டுச் சென்றவனே,

     உன் மனதோடு மட்டும்

     எனை ஏன் ஏற்க மறுக்கிறாய்?

     என் தசைகளைப் போல

     என் இதயமும்

     இயங்கத் தகுதியற்றது

     என்று எண்ணிவிட்டாயோ?!’ என்ற வரிகளும், தினம் தினம் அவன் எங்கே என் மனதை அறியப்போகிறான், என்று நினைத்து அவளின் மான்விழிகள் நொடிக்கொருமுறை அவனிடம் ஏக்கமாய் பேசும் காதல் மொழிகளும் அவனை வாட்டி வதைக்க, ஒரு கட்டத்தில் வெகுவாய் சோர்ந்து போனவன், அவளைத் தவிர்க்க நினைக்கும் தன்மேலேயே எழுந்த கோபத்தினால்,

     ‘ச்சே!’ என்று வேகமாய் அவனது கைபேசியை விட்டெறிய, அவன் இதயத்தைப் போலவே அவனது கைபேசியும் உடைந்து போனது…

                  -மான்விழி மருகுவாள்…

 

    

 

     

 

    

    

     ‘