SM 27 1 8168 சாரல் மழையே இறுதி அத்தியாயம் 1 முதல் மூன்று நாட்கள் விஷாகன் அங்கே பொருந்திப் போக மிகவும் கஷ்டபட்டான். மனதை திசை திருப்ப வகுப்பு, பாடம் என அதிலேயே கவனமாக இருந்தான். சிலர் நட்பு கரம் நீட்ட…. வேறு வழியில்லாமல் தான் இவனும் பேசினான். பள்ளியில் கூட அதிக நண்பர்கள் இல்லை. சில நண்பர்கள்தான் என்றாலும் பல வருடங்களாகத் தொடரும் நட்பு. இங்குக் கல்லூரியில் சேர்ந்து வகுப்புக்கு செல்வது, மதிய உணவுக்குச் செல்வது, மாலை ஹாஸ்டல் செல்வது என நண்பர்களுடன் சென்று வந்தான். பெரிய கல்லூரி அது. ஒவ்வொன்றும் ஓவ்வொரு பக்கம் இருக்கும். அதனால் எல்லோருமே சைக்கிள் வைத்திருப்பார்கள். விஷாகனும் வரும் போதே அவனது சைக்கிள் கொண்டு வந்திருந்தான். அதனால் எங்குச் சென்றாலும் சைக்கிள் தான். அங்கே இருக்கும் பேராசிரியர்கள் மாணவர்களிடம் மிகவும் கனிவாக நடந்து கொண்டனர். அங்கே கான்டீன் உணவே நன்றாகத்தான் இருந்தது. சைவம் அசைவம் இரண்டுமே இருந்தது. இது இருந்தா அது சாப்பிடக் கூடாது என்பது இல்லை எனத் தர்மா அடிக்கடி வீட்டில் சொல்வது தான். அதனால் இரண்டுமே எடுத்து வந்து உண்ணுவான். அவன் வீட்டில் எப்போதும் வாரத்தில் இரண்டு நாட்கள் ரூசியாகச் செய்து கொடுத்தால்… மீதி நாட்கள் ஆரோக்கியமான உணவு முறை தானே… எப்போதோ தான் பிசா பர்கர் எல்லாம் உண்ணுவது. அதனால் மெஸ் சாப்பாடு அவனுக்கு நன்றாகவே இருந்தது. ஆனால் சக மாணவர்கள் இந்த உணவு பிடிக்கவில்லை என வெளியே சென்று உண்ணுவார்கள். பிசா பர்கர் எல்லாம் கல்லூரி வளாகத்துக்கு வெளியே இருக்கும் கடைகளில் கிடைக்கும். அங்கே சென்று உண்டுவிட்டு வருவார்கள். பதினெட்டுப் பத்தம்போது வயதிலேயே பார்க்க பெரியவர்களாகச் சில மாணவர்கள் தோன்றினர் என்றால் பெண்களும் சிலர் ஓவர் சைஸில் இருந்தால்… சிலர் ஜீரோ சைஸ்ஸில் இருக்க வேண்டுமென்றே பட்டினி கிடந்தனர். அந்த வயதுக்குரிய தோற்றம் தான் விஷாகனுக்கு. தர்மா அப்படிக் கண்டிப்புடன் தானே அவர்களை வைத்திருந்தான். அவர்கள் வீட்டில் எதுவும் அதிகம் கிடையாது. பிடித்ததாக இருந்தாலும் அளவாகத்தான் உண்ணுவது. கல்லூரியில் முதல் வாரம் பாடம் அவ்வளவாக நடத்தவில்லை. நிறைய ஓய்வு நேரம் இருக்க… பொழுது போக வேண்டுமே என்று மைதானத்தில் சென்று விளையாடினர். உடற்பயிற்சி ஆசிரியர் எல்லோரையும் மைதானத்தைச் சுற்றி ஓட சொல்ல… நிறையப் பேரால் ஓடவே முடியவில்லை. இப்போது மாணவர்கள் படிக்கிறேன் என்ற பெயரில் புத்தகத்தோடு உட்கார்ந்து விடுகிறார்கள். அதற்கு மேல் துரித உணவையும் உண்டு போதிய உடல் உழைப்பு இல்லாமல் இள வயதிலேயே எதோ வயதானவர் போலக் குனிந்து நிமிர கூட அவ்வளவு சிரமப்படுகிறார்கள். பொதுப் தேர்வு முடிந்த பிறகு தர்மா விஷாகனை காலையே எழுப்பி விட்டு உடற்பயிற்சி செய்யப் பழக்கி இருந்தான். இவர் செய்யலைனா விட மாட்டார் எனச் செய்து விட்டு மீண்டும் சென்று படுத்து உறங்கி விடுவான். அதோடு மாலை நேரம் அவன் அக்கா அண்ணனோடு வெளியே ஷட்டில் விளையாடுவான். அதனால் விஷாகனால் ஆசிரியர் சொன்ன பத்துச் சுற்றுக்கள் இல்லையென்றாலும் எட்டுச் சுற்றுக்கள் ஓட முடிந்தது. நிறையப் பேர் படிப்புப் படிப்பு என்றே இருந்தனர். எப்போதுமே தர்மா சொல்வது, ஆரோக்கியமான உடல் மற்றும் மனது இல்லாமல் வெறும் படிப்பு மட்டும் இருந்து ஒன்றுமே பிரோஜனம் இல்லை. மெதுவா படிக்கலாம். உனக்கு எவ்வளவு வருதோ அவ்வளவு படி. படிப்பு மட்டும் எல்லாவற்றையும் தந்து விடாது என்பது தான். தன் பிள்ளைகளை அவன் எந்த ட்யுஷனும் போட்டது இல்லை. பள்ளியில் படிப்பது தான். ட்யுஷன் என்று போட்டால்… பிறகு பள்ளிகள் எதற்கு என்பான். உங்களால பள்ளியில கவனிச்சு படிச்சு எவ்வளவு மார்க் வாங்க முடியுதோ வாங்குங்க போதும் என்பான். தந்தை ட்டிஷன் எல்லாம் வைக்க மாட்டார் என்றே பள்ளியில் ஒழுங்காகக் கவனித்துப் படித்தனர். இப்படியே ஒரு வாரம் சென்றிருக்க… யோசிக்கும் போது அம்மாவை மிஸ் செய்கிறான் தான். ஆனால் எந்தச் செயலும் செய்து முடிக்கும் போது தந்தை தான் கண் முன் வந்து நின்றான். தந்தையை நினைக்காமல் இருக்க முடியவில்லை. இங்கே ஹாஸ்டலில் தன்னால் ஓரளவு சமாளிக்க முடிகிறது என்றால் அதற்குக் காரணம் அவர் தானே என நினைத்துக் கொண்டான். அப்பா அருகில் இருக்கும் போது அவர் பேச்சை அலட்சியம் செய்தவன், இப்போது அப்பா வழியைத் தான் பின்பற்றினான். இவனைப் போன்றோரும் இருந்தனர். அவர்களை நண்பர்கள் ஆக்கிக் கொண்டான். அதிகாலையில் எழுந்து மைதானத்தைச் சுற்றி ஓடி விட்டு, பிறகு ஹாஸ்டல் வளாகத்தில் இருக்கும் ஜிம்முக்கு சென்று விடுவார்கள். அங்கே ஒரு மணி நேரம் உடற்பயிற்சி செய்து விட்டு மீண்டும் ஹாஸ்டல் வந்து குளித்துக் கிளம்புவார்கள். பிறகு நேராக மெஸ்ஸில் சென்று உண்டுவிட்டு கல்லூரிக்குச் செல்வார்கள். மாலை வகுப்பு முடிந்ததும் மீண்டும் ஹாஸ்டல் வந்து உடைமாற்றி விளையாட செல்வார்கள். பிறகு வந்து குளித்துவிட்டு இரவு உணவையும் உண்டுவிட்டு, அதற்குப் பிறகு உட்கார்ந்து பாடத்தைப் படித்து விட்டு இரவு உறங்குவது. இது கூட நன்றாக இருக்கிறதே என விஷாகனுக்குத் தோன்றியது. இரண்டு வாரங்களில் இந்த வாழ்க்கை முறைக்குப் பழகி இருந்தான். சிலர் அவர்கள் பெற்றோரை பற்றிச் சொல்லும் போது, தான் எவ்வளவு ஆசிர்வதிக்கப்பட்டவன் என்றே தோன்றும். அவனுக்கு அவ்வளவு நல்ல பெற்றோர் அல்லவா. விஷாகனும் அவன் பெற்றோர் பற்றிப் பகிர்ந்து கொள்ளும் போது, “நீ தர்மா சார் பையனா… நான் அவர் மோட்டிவேஷினல் ஸ்பீச் வீடியோ நிறையப் பார்த்திருக்கேன். கேட்கும் போதே அவ்வளவு தன்னம்பிக்கை வரும். எங்க வீட்ல எல்லாம் என்னைக் கண்டுக்கவே மாட்டாங்க. நான் என்ன பண்றேனே அவங்களுக்குத் தெரியாது. நீ ரொம்ப லக்கி” என்றான் சக மாணவன் ஸ்ரீநாத். கல்லூரி வாழ்க்கை விஷாகனுக்கு வண்ணமயமாகவே இருந்தது. முதல் வாரமே பேரனை பார்க்க செல்லத் துடித்த ஜமுனா மற்றும் நவீனாவை அவன் அங்கே பழகட்டும், நீங்க போய் அவனுக்கு வீட்டை நியாபகப்படுத்தாதீங்க எனத் தர்மா நிறுத்தி வைத்திருந்தான். கீர்த்தித் தான் தினமும் மகனுடன் பேசுகிறாளே… பக்கத்தில் தான் தர்மா இருப்பான். இவனும் பேசுகிறேன் எனக் கேட்க மாட்டான். அவனும் அப்பாவிடம் கொடுங்கள் எனச் சொல்லமாட்டான். இவர்களுக்குள் எப்போது எல்லாம் சரியாகும் எனக் கீர்த்திக்கு இருக்கும். அம்மாவும் மகனும் பேசுவதில் இருந்தே… அவனுக்கு அங்கே பழகிவிட்டது எனத் தர்மா புரிந்து கொண்டான். விஷாகன் தந்தையுடன் பேசவில்லை என்று அபியும் தம்பியிடம் பேசாமல் இருந்தாள். அப்பாவோடு பேசும் போது என்னோட பேசு எனச் சொல்லி இருந்தாள். “அவன் வெளியூர்ல இருக்கான். அவனை ஏன் டென்ஷன் பண்ற. அவனோட பேசு அபி.” எனத் தந்தை கண்டிக்க… பிறகு அபி அவளே அழைத்துப் பேசினாள். “நீ இல்லாம நல்லாவே இல்ல டா… வீடே அமைதியா இருக்கு. ஹர்ஷா கூட நீ இல்லாம அதிகம் வர்றது இல்லை.” என்றாள். “தம்பி அடி வாங்காம ஹப்பியா இருப்பாருன்னு நினைச்சேன்.” எனச் சிரித்தான். “அவனுக்கு உன்னைத் தான்டா பிடிக்கும்.” “வரும் போது தம்பியை நல்லா கவனிச்சிட வேண்டியது தான்.” என்றான் அழுத்தி. கார்த்திகேயன் அவனும் தம்பிக்கு அழைப்பான். இவனும் அவனை அழைப்பான். பேசும் போதெல்லாம், அப்பாகிட்ட பேசு எனக் கார்த்திகேயன் சொல்ல மறப்பதில்லை. இருவரும் அவரவர் கல்லூரியைப் பற்றிப் பகிர்ந்து கொள்வார்கள். இரண்டு வாரங்களுக்குப் பிறகுதான் தர்மா வீட்டினரை விஷாகனைப் பார்க்க செல்ல அனுமதித்தான். நவீனாவும் ஜமுனாவும் விட்டால் வீட்டை கயிறு கட்டி இழுத்து சென்று விடுவார்கள் போல… அவ்வளவு இங்கிருந்து எடுத்துக் கொண்டு சென்றனர். சனிக்கிழமை காலையே வீட்டில் செய்த பிரியாணி, சிக்கென் வறுவல், மீன் குழம்பு, வறுவல், அதோடு வீட்டில் செய்த நொறுக்குதீனிகள் என எல்லாம் எடுத்துக் கொண்டு கிளம்பி விட்டனர். நவீனா அங்கே ஒருநாள் பேரனோடு இருந்துவிட்டு வருவதற்குத் திருச்சியில் பெரிய ஹோட்டலில் அறை பதிவு செய்திருந்தார். “நீங்க இந்த வாரம் போங்க. அடுத்த இரண்டு வாரத்தில் அவனை இங்கே வர சொல்லிட்டு வா.” எனத் தர்மா சொல்லி அனுப்பினான். மகனை அதற்கு மேல் பார்க்காமல் இருக்க முடியாது அதற்குதான். கீர்த்திக் கணவனைப் பார்த்து முறைத்து விட்டு சென்றாள். மகன் எப்படி இருக்கிறானோ எனக் கவலையில் சென்ற கீர்த்திக்கு, மகனை நேரில் பார்த்ததும் மிகுந்த மகிழ்ச்சி. தந்தை வருவாரோ என ஒரு எதிர்பார்ப்பு விஷாகனுக்கு இருந்தது. அவர் வரவில்லை என்றதும் அவன் முகம் மாறவே செய்தது. கீர்த்தி அதைக் கவனித்துத் தனக்குள் சிரித்துக் கொண்டாள்.