SM 26 7031 சாரல் மழையே அத்தியாயம் 26 விஷால் ஒரு பிள்ளையை ஒழுங்காக வளர்ப்போம் என்ற எண்ணத்தில் தான் இன்னொரு குழந்தை பெற்றுக்கொள்ளவில்லை. ஆனால் நிறையப் பெற்றோர் போல… எல்லாமே என் மகனுக்குக் கிடைக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தது. அதனால் மகன் கேட்டால் மறுக்காமல் வாங்கிக் கொடுப்பான். குடிக்கும் போது தான் வசமிழந்து பேசுகிறோம். மகனை அதைப் பாதிக்கக் கூடாது என விஷால் மொத்தமாகக் குடியை விட்டு இருந்தான். அவனது தொழிலும் நல்ல முன்னேற்றம். ஹர்ஷா சரியான வாலுதான். எல்லோரையும் அவனே சென்று வம்பிழுப்பான். அபியும், கார்த்தியும் குட்டி தம்பி என ஹர்ஷாவிடம் மிகுந்த பிரியமாக, அவன் சேட்டை செய்தாலும் பொறுமையாக இருப்பார்கள். ஆனால் விஷாகனுக்கு அந்தப் பொறுமை இல்லை. அவர்கள் இருவர் மட்டும் இருந்தால் நன்றாகவே பார்த்துகொள்வான். மற்றவர்கள் இருக்கும் போது கண்டுகொள்ள மாட்டான். ஆனால் அதற்காகவே ஹர்ஷா சென்று விஷாகனை வம்பிழுப்பான். பிறகு இருவருக்கும் சண்டை வரும். ஆளுக்கொரு தலையணை வைத்து அடித்துக் கொள்வார்கள். தலையணை வைத்துச் சண்டை போடுவது ஹர்ஷாவுக்குப் பிடிக்கும். அதற்குதான் அண்ணனை வம்பிழுப்பதே. பிறகு கீர்த்திச் சென்று சமாதானம் செய்வாள். “அவன்தான் அடி வெளுக்கிறான் இல்ல. எதுக்கு அவனை வம்பிழுக்கிற?” கார்த்திக் கேட்க… அடி வாங்கிவிட்டு சமாளிக்கும் வடிவேலு போல… “எனக்கு வலிக்கலையே.” என்பான் ஹர்ஷா. அபிக்கும், கார்த்திக்கும் அவனைப் பார்க்க சிரிப்பாக வரும். ஹர்ஷாவுக்கு பெரியப்பா என்றால் பயம். தர்மா வீட்டில் இருக்கும் நேரம் அமைதியாக இருப்பான். விஷால் அதிகம் செல்லம் கொடுப்பத்தால்… தன்னிடம் பயம் இருக்கட்டும் என தர்மாவும் கண்டிப்பாகத்தான் நடந்து கொள்வான். பிரியங்காவுக்குத் தர்மா கீர்த்தி மீது மிகுந்த நம்பிக்கை. அதனால் மகன் அங்குச் செல்வது பற்றி அவளுக்கு வருத்தம் இல்லை. ஆனால் சுனிதா அவர் பேரப்பிள்ளைகளை இவர்களோடு ஓட்ட விடமாட்டார். முதலில் எல்லாம் சேர்ந்து விளையடுவார்கள் வளர வளர அவரவர் படிப்பு என நேரமும் இருப்பது இல்லை. ரித்விகா வெளிநாட்டில் இருக்கிறாள். அவளுக்கு ஒரு பெண் குழந்தை. சுபா பாதி நாட்கள் மகளுடன் மீதி நாட்கள் இங்கே என இருப்பார். அபிநயா சென்னையில் நல்ல பெயர்பெற்ற கல்லூரியில் பி. பி. ஏ சேர்ந்திருந்தாள். பிஸ்னஸ் மேனேஜ்மென்டில் மேல் படிப்பு முடித்து, அவளுக்கும் சொந்த தொழில் செய்ய வேண்டும் என எண்ணம். இப்போதும் விடுமுறை நாட்களில் தந்தையுடன் பிஸ்னஸ் பார்ப்பாள். இருபாலரும் படிக்கும் கல்லூரில் தான் அபி சேர்ந்திருந்தால்… முதல் வருடமே மூன்றாம் வருட மாணவன் ஆதித்யா வந்து அவளைத் தனியாக அழைத்துச் சென்று காதலை சொல்ல… “இன்னைக்கு லவ் சொல்லி நாளைக்குக் கல்யாணம் பண்ணிக்கப் போறோமா?” எனக் கேட்டாள். “இல்லை லைப்ல செட்டில் ஆனப் பிறகு தான்.” என்றான். “அப்போ ஏன் இவ்வளவு சீக்கிரம் முடிவு சொல்லனும். நான் செட்டில் ஆக ரொம்ப வருஷம் ஆகும். நீங்க அப்ப வாங்க, நான் அப்ப யோசிச்சு சொல்றேன்.” என்றால் இனிமையாகவே. இப்படிக் கூட இனிமையாக மறுக்க முடியுமா என்றுதான் ஆதித்யாவுக்குத் தோன்றியது. எனக்குப் பிடிக்கலை இது போல எதாவது சொன்னால்… ஏன் என்று கேட்கலாம். மனதை மாற்ற முயற்சிக்கலாம். ஆனால் தெளிவாக இப்போது வேண்டாம் எனச் சொல்பவளிடம் என்ன சொல்வது. சரி என்றுதான் சொல்ல முடிந்தது. அவனிடம் சொல்லிக் கொண்டு அபி சென்று விட்டாள். காலம் தான் தீர்மானிக்கும். ஆதித்யா அவனே அபியை மறந்தும் போகலாம். அபிக்கு ஒருவேளை அப்போது அவனைப் பிடிக்கவும் செய்யலாம். இந்த வயதில் ஈர்ப்பு காதல் எல்லாம் சகஜம் தான். வரவில்லை என்றால் தான் ஆச்சர்யம். எதுவாக இருந்தாலும் சரியான வயது வரும் வரை நிறுத்தி வையுங்கள் என்பதைத் தான் தர்மா பிள்ளைகளுக்குச் சொல்லி இருந்தான். பிடித்தவர்களாக இருந்தாலும் சில காலம் காத்திருப்பதால் தவறு இல்லை. இன்னும் நீங்கள் அவர்களைப் புரிந்து கொள்ளலாம். இவர்கள் தான் என அவசரமாக முடிவு எடுத்து விடதீர்கள் எனச் சொல்லித்தான் வைத்திருந்தான். கணவன் சொல்லும் போது கீர்த்திக்கு முன்பு அவர்கள் இருவருக்கும் நடந்ததுதான் நினைவு வந்தது. அறைக்கு வந்ததும், “ஏன் என்னை அப்படிப் பார்த்த?” என்றான். “உங்களைப் போல இருபத்தியொன்பது வயது வரை சொல்லாம இருக்கனுமா?” என அவள் கேட்க, “உனக்கு அப்போ என்ன வயசுன்னு யோசிச்சு பாரு.” என்றான். கீர்த்தி நாக்கை கடித்துக் கொண்டாள். தர்மா மனைவியைப் பார்த்துச் சிரித்தான். நீங்களே பார்த்து நடந்து கொள்ளுங்கள் எனத் தர்மா சொல்லியிருக்க… அபிநயாவும் கார்த்திகேயனும் அதற்காக எதையும் மாற்றிக்கொள்ளவில்லை. அவர்கள் எப்போதும் போல இருக்க… விஷாகன் தான் தர்மாவின் ரத்த அழுத்தத்தை எகிற வைத்துப் பார்த்தான். பள்ளிக்குச் செல்லும் ஒரு மணி நேரம் முன்பு எழுந்து அரக்க பறக்க கிளம்பி ஓடுவான். சைக்கிளில் தான் செல்வான். கார்த்திகேயனும் விஷாகனும் ஆரம்பத்தில் இருந்தே வெவ்வேறு பள்ளிகள்தான். ஒரே உருவ தோற்றம் மற்றவர்களின் கவனத்தைக் கவர்ந்து அதுவே பள்ளியில் பேசும் பொருளாக இருக்கும். அதோடு இவர்களும் ஒருவரையொருவர் சார்ந்து இருக்க வேண்டாம் எனத் தர்மா முதலில் இருந்தே வெவ்வேறு பள்ளியில் தான் சேர்த்திருந்தான். மாலை பள்ளியில் இருந்து வந்து டிவி முன்பு உட்கார்ந்து விடுவான். வெளியே சென்று விளையாடாமல் இப்படி டிவி முன்பு உட்கார்ந்திருக்கிறானே எனத் தர்மாவுக்குக் கோபமாக வரும். அவன்தான் வாயை திறப்பது இல்லை என்று இருக்கிறானே. காலையில் பள்ளி செல்லும் அவசரத்தில் விஷாகன் கொஞ்சமாகத்தான் உண்பான். மதியமும் எடுத்து சென்று உண்பது தான். மாலை வீட்டிற்கு வந்தால்… பொறுமையாக டிவி பார்த்துக் கொண்டே, நறுக்கி வைத்திருக்கும் பழங்கள், வேறு எதாவது ஸ்நாக்ஸ் என நிதானமாக உண்பான். பின்பு இருட்டி விடும். நான் படிக்கப் போகிறேன் என அறைக்குச் சென்று விடுவான். டிவியில் இப்போது புதிதாக வந்த காமெடி, சண்டைப் படங்கள் என்றால் உட்கார்ந்து பார்ப்பான். காதல் படங்கள் ஏனோ விஷாகனை ஈர்ப்பது இல்லை. பள்ளியில் கூடப் பெண்கள் என்ன செய்கிறார்கள் என ஆர்வமாகக் கவனித்தது இல்லை. இவங்க இல்லாம இருந்தா ப்ரீயா இருக்கலாமே என்ற எண்ணம் தான் இருக்கும். ஆனால் இவன் காதல் திருமணம் செய்தாலும் ஆச்சர்யப்படுவதற்கு இல்லை. தர்மா மூன்று மாதத்திற்கு ஒருமுறையாவது அவர்களை எங்காவது சுற்றுலா அழைத்துச் செல்வான். இயற்கை காட்சியை ரசிப்பது எல்லாம் விஷாகனுக்கு ஆகாது. அவனுக்கு எங்குச் சென்றாலும் தண்ணீரில் ஆட வேண்டும். ஒன்று கடலாக இருக்க வேண்டும் அல்லது நீச்சல் குளமாக இருக்க வேண்டும். கோவில் எல்லாம் அழைத்துச் சென்று வரிசையில் நிற்க வைத்தால்… கால் வலிக்குது, இப்படிக் கூட்டத்தில வந்து சாமி கும்பிடனுமா… நான் போய் உட்கார்ந்துக்கவா என்பவன், சில நேரம் காரில் சென்றும் உட்கார்ந்து விடுவான். கடவுளே என் பிள்ளையைத் தண்டித்து விடாதே எனக் கீர்த்தி வேண்டுவாள். இப்படி அவன் டென்ஷனாகி எல்லோரையும் டென்ஷன் செய்து சாமி கும்பிடும் மனநிலையே போய் விடும். அதனாலையே விசேஷ நாட்களில் செல்லாமல் சாதாரண நாட்களில் செல்வார்கள். விஷாகனுக்கு எதுவும் கஷ்டப்பட்டுச் செய்யக் கூடாது. எல்லாம் ஈஸியாகக் கிடைக்க வேண்டும். கடைக்குப் போய் வா என்றாலும் போக மாட்டான். கார்த்திகேயன் தான் போவான். அபியும் கார்த்திகேயனும் வீட்டு வேலைகள் செய்ய… விஷாகன் “நானே படிச்சு படிச்சு டயர்டா இருக்கேன்.” எனத் தப்பித்து விடுவான். படித்து முடித்ததும் தினமும் இரவு செல் வைத்து விளையாடிவிட்டுத்தான் உறங்குவான். ஆனால் நேரக் கட்டுப்பாடு இருக்கும். கண்ணுக்கு எதாவது ஆகப் போகுது என்றால்….. கண் கெடாமல் இருக்க என்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்து வைத்திருக்கிறேன் என்பான். அவன் செல் வைத்திருக்கும் போது தர்மா அவன் அறைக்குச் சென்றாலும், தந்தையிடம் இருந்து மறைக்க நினைக்க மாட்டான். அவன் பாட்டிற்கு விளையாடிக் கொண்டிருப்பான். தர்மா சிறிது நேரம் நின்று பார்த்து விட்டு வருவான். எப்படியும் இரு என தர்மாவால் விடவும் முடியவில்லை. விடுமுறை நாட்களில் பிள்ளைகள் மூவரையும் ஷட்டில் விளையாட அழைத்து செல்வான். “கொஞ்ச நேரம் உடற்பயிற்ச்சி செய்யலாமே…நீ இப்போ இருந்து ஆரம்பிச்சா தான் உன் உடம்பு கட்டுக்கோப்பா வரும்.” என கிடைக்கும் சந்தர்ப்பங்களில் மகனிடம் வலியுறுத்துவான். அந்த வருட பள்ளியின் விளையாட்டுத் தினத்திற்கு மொத்த குடும்பமும் சென்றது. விஷாகன் வேறு போட்டியில் கலந்து கொள்கிறான். ஓட்டபந்தயம், ரிலே எனக் கலந்து கொண்ட இரண்டிலும் விஷாகன் முதல் மூன்று இடத்திற்குள் வந்துவிட.. கடைசி நேரம் இப்படி மூச்சை பிடித்துக் கொண்டு ஓடுவதற்கு… தினமும் சிறிது நேரம் பயிற்சி செய்தால் என்ன எனத் தர்மா நினைத்துக் கொண்டான். அதுதான் செய்ய மாட்டானே…. விளையாட்டுப் போட்டிகளுக்கு மட்டும் அல்லாது. பள்ளியில் ஒழுக்கமான பையன் என்ற விருதும் விஷாகனுக்குக் கொடுக்கப்பட… வேறு எதிலும் மகன் பதக்கம் வாங்கி இருந்தால் கூடத் தர்மாவுக்குப் பெரிதாகத் தெரியாது. அவன் ஒழுக்கத்திற்கு வாங்கியது பெருமையாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தது. பெற்றோரையும் மேடைக்கு அழைத்து விருது கொடுத்தனர். “அப்பா, இவனாப்பா வெரி டிசிப்ளின் பாய்.” என அபி கேட்டு கேட்டு மாய்ந்து போனாள். தர்மாவுக்கும் சிரிப்பு வந்தது. “சும்மா இரு அபி.” என்றான். அவன் வகுப்பு ஆசிரியரை பார்க்க போன போது, “ஸ்கூலுக்கு ஒருநாளும் லீவ் போட்டது இல்லை. எந்த வீடுப்பாடமும் செய்யாம இருந்தது இல்லை. வகுப்பில் ஆசிரியர் சொன்னதை அப்படியே கடைபிடிப்பான்.” எனச் சொல்லச்சொல்ல… வீட்ல தான் இந்தப் பையன் யார் சொல்றதையும் கேட்பது இல்லை. வெளியே சரியாகவே நடந்து கொள்கிறான் எனத் தோன்றியது. அது தானே நல்லதும். பள்ளியில் இருந்து வரும் வழியில் ஹோட்டல் அழைத்துச் சென்றால் தான் ஆச்சு எனப் பிடிவாதம் பிடித்தவன், ஹோட்டலில் சென்று அவனுக்குப் பிடித்தது ஆர்டர் செய்து உண்ணவும் செய்தான். மகன்கள் இருவரும் பள்ளி இறுதியில் இருக்க… தர்மா அவர்கள் இருவரையும் அழைத்து உட்கார வைத்துப் பேசினான். அவர்களின் எதிர்காலத் திட்டம் என்ன என்று கேட்க…. “அப்பா நான் சிவில் செர்விஸ் எக்ஸாம்க்குப் படிக்கப் போறேன்.” என்றான் கார்த்திகேயன். மகன் கலக்ட்டராகவோ, ஐ பி எஸ் அதுகாரியாகவோ ஆகி நாட்டு மக்களுக்குச் சேவை செய்தால், அதை விட மகிழ்ச்சி என்ன இருக்க முடியும் என நினைத்த தர்மா, “உன் வேலை இன்னொருத்தருக்கு நல்லது செய்யப்போகுதுனா அதை விட நிறைவான விஷயம் எதுவும் இல்லை.” என்றான். “நீங்க என்ன சார் பண்ணப்போறீங்க?” எனத் தர்மா விஷாகனைப் பார்த்து கேட்க….. “நான் கம்ப்யூட்டர் இன்ஜினியரிங் படிக்கப் போறேன்.” என்றான். மகனைப் பற்றித் தர்மாவுக்குப் புரியாமல் இல்லை. தன்னை வெளி ஆட்கள் யாரும் குறை சொல்வதை அவன் விரும்புவதில்லை. அதனாலேயே அவன் வெளியிடங்களில் குறை சொல்லும்படி நடந்துகொள்வதில்லை. நன்றாகப் படித்து நல்ல வேலையில் சேர்ந்துவிட்டால் தன்னை யாரும் எதுவும் கேள்வி கேட்கப் போவது இல்லை என்ற எண்ணத்திலேயே முயன்று படித்தது. அதற்காக வெளி விஷயங்கள் எதுவும் தெரியாமல் இல்லை. டிவியில் செய்தி பார்க்க மாட்டனே தவிர…. உலகில் என்ன நடக்கிறது என்பதி விரல் நுனியில் வைத்திருப்பான். நல்ல படிப்பு, வேலை, சம்பளம் போதும் என்று எதிர்ப்பார்க்கும் பெற்றோருக்கு விஷாகன் முடிவு மகிழ்ச்சியைத் தரலாம். ஆனால் தர்மாவுக்கு அல்ல… மகன் வைரம் தான் அதில் தர்மாவுக்குச் சந்தேகம் இல்லை. ஆனால் அவனை இன்னும் பட்டை தீட்ட முயன்றான். ஒரு பாதுகாப்பான வளையத்துக்குள், அவன் மற்றவர்களை மிகவும் சார்ந்து இருப்பதாகத் தோன்றியது. மகன் வெளியுலகம் அறிய வேண்டும். யாரையும் சார்ந்து இருக்கக் கூடாது எனத் தர்மா நினைத்தான். இவனுக்கு வரும் மனைவி, அவளும் டேட்ஸ் லிட்டில் பிரின்சஸ்ஸாக இருந்து விட்டால் என்ன செய்வது. இருவரில் ஒருவராவது பொறுப்பாக இருக்க வேண்டும் அல்லவா… வீட்டில் இல்லாமல் வெளியே இருந்தால்… அவன் தானே எல்லாம் செய்ய வேண்டும். மகன் இன்னும் நன்றாக மாறுவான் என்ற எண்ணம். அப்போதைக்குத் தர்மா எதுவும் சொல்லவில்லை. பரிட்சை முடியட்டும் என்று இருந்தான். அந்த ஆண்டுப் பொதுத் தேர்வில் இருவருமே நல்ல மதிப்பெண்களில் தேர்வாகி இருந்தனர். கார்த்திகேயன் சென்னையில் கல்லூரியில் சேர்ந்து பட்டபடிப்புப் படித்துக் கொண்டே சிவில் சர்வீஸ் பரிட்சைக்கும் தயாராகுவதாக இருந்தான். விஷாகன் பள்ளி தேர்வு மட்டும் அல்லாது நுழைவு தேர்விலும் நல்ல மதிப்பெண்கள் பெற்றிருந்தான். அதனால் அவனுக்கு நல்ல கல்லூரிகளில் கண்டிப்பாக இடம் கிடைக்கும். சென்னையில் இருக்கும் பிரபல கல்லூரியில் சேர்வதற்கு விஷாகன் முயற்சி செய்ய…. தர்மா அவனை வெளியூரில் நல்ல கல்லூரியில் ஹாஸ்டலில் சேர்ந்து படிக்கச் சொன்னான். வீட்டில் திரும்ப அப்பாவுக்கும் மகனுக்கும் பிரச்சனை ஆரம்பித்தது. “நான் எதுக்கு ஹாஸ்டல் போகணும்? சென்னையில இல்லாத காலேஜா?” என விஷாகன் சண்டைக்கு நிற்க… “ஹாஸ்டல்ல பசங்களோட சேர்ந்து இருந்து பாரு… அதுவும் ஒரு வித்தியாசமான அனுபவம் தானே… வெளியுலகத்தை எப்படித் தெரிஞ்சுப்ப…” என்றான் தர்மா. “எனக்கு எல்லாம் தெரியும்.” என்றான். “எப்படி வீட்டுக்குள்ள இன்டர்நெட்ல பார்த்து தெரிஞ்சிக்கிறதா…” “என்னை மட்டும் ஏன் ஹாஸ்டல் போகச் சொல்றீங்க? உங்க செல்ல பொண்ணை மட்டும் உங்க பக்கத்திலேயே வச்சுபீங்க. நான் மட்டும் எங்க அம்மாவை விட்டு போகனுமா… முடியாது.” என்றான். “அபிக்கு நான் செல்லம் கொடுத்தேனா? நான் யாருக்கும் செல்லம் கொடுக்கலை. எனக்கு யாரும் செல்லம் இல்லை.” “நான் இங்கயே படிக்கிறேன்.” “பீஸ் நான்தான் கட்டணும். ஒழுங்கா ஹாஸ்டலுக்குப் போ…” என்றதும், விஷாகனுக்குக் கண்களில் கண்ணீர் முட்டிக் கொண்டு நின்றது. “நீங்க பீஸ் கட்டிறதுனால தானே பா… நான் வேலைக்குப் போய் உங்க காசை திருப்பிக் கொடுப்பேன்.” என ரோஷமாகச் சொல்லி விட்டுச் சென்றான். எல்லோரும் ஏன் என்பது போலத் தர்மாவைப் பார்க்க… கீர்த்திக்கு மகனின் நல்லதுக்குதான் தர்மா இப்படிச் செய்கிறான் எனப் புரிந்தது. அவளுக்குமே மகனை விட்டு இருப்பது கடினம் தான். ஆனால் எப்போதுமே அவள் அவனோடு இருந்து விட முடியாது. அவன் யாரையும் சார்ந்து இருக்காமல் இருக்கப் பழக வேண்டும். விஷாகன் திருச்சியில் பிரபலக் கல்லூரியில் சேர்ந்தான். அப்பா மீது மிகுந்த கோபம். அதனால் தர்மாவோடு பேசுவதே இல்லை. கல்லூரிக்குச் செல்லும் நாளில் கூடத் தர்மாவிடம் சொல்லிக்கொள்ள வில்லை. ஆனால் தர்மா அவன் கிளம்பும் வரை உடன் இருந்தான். மகனின் நல்லதுக்குதான் என்பதில் தர்மா உறுதியாக இருந்ததால்… இதெல்லாம் அவன் பெரிதுபடுத்தவில்லை. தன்னை ஒருநாள் அவன் புரிந்து கொள்வான் என நினைத்தான். கீர்த்தியும் கார்த்திகேயனும் தான் காரில் அவனைக் கல்லூரியில் விடச் சென்றனர். செல்லும் வழியில் கீர்த்தி மகனுடன் பேசிக்கொண்டே சென்றாள். “உங்க அப்பா மேல உனக்குக் கோபம் இருக்கலாம். ஆனா உங்க அப்பா உன் நல்லதுக்குதான் பண்றார்.” “உன் அப்பா உன்னை விடச் செல்லமா வளர்ந்தவர்.” “அவங்க அப்பா திடிர்னு இறந்ததும், விரும்பி சேர்ந்த படிப்பை கூட அவர் முடிக்கலை.” “இந்த இடத்துக்கு அவர் வர்றதுக்குள்ள எவ்வளவு அவமானமும் நிராகரிப்பையும் பார்த்திருப்பார்னு உனக்குத் தெரியுமா?” “உங்களுக்கு அப்படி ஒரு நிலைமை வராது தான். உன் அக்காவுக்குப் பிஸ்னஸ் சொல்லிக் கொடுத்து, என் பேர்ல சொத்து சேர்த்து, உங்க எதிர்காலத்துக்குத் தேவையானது அவரே சேர்த்து வச்சிருக்கார் தான்.” ”அவர் என்ன சேர்த்து வச்சிருந்தாலும், உங்களுக்கு எந்தச் சூழ்நிலையிலும் தைரியமா நிற்க தெரியணும். அது தான் அவருக்கு வேணும்.” “நீ மெரிட்ல சீட் வாங்கினது அவருக்கு எவ்வளவு சந்தோஷம் தெரியுமா? பாரு இந்தப் பையன் நான் மெரிட்ல தான் சீட் வாங்குவேன்னு சொன்னதைச் செஞ்சிட்டான்னு உங்க அப்பாவுக்கு அவ்வளவு பெருமை.” “வெறும் படிப்பும் வேலையும் மட்டும் வாழ்க்கை இல்லை. அதெல்லம் என்னைக்கு வேணாலும் பயன் இல்லாம போகலாம்.” “எந்த சூழ்நிலையும் சமாளிச்சு வாழத் தெரியனும். அதுக்குதான் உன்னை ஹாஸ்டல் சேர்ந்து படிக்க சொன்னார்.” என்றதும், விஷாகன் முன்பு போல சண்டையிடவில்லை என்றாலும், தந்தை மீது இன்னும் அவனுக்கு கோபம்தான்.