வானம் மேகமூட்டத்துடன் காணப்பட, ஆட்கள் எல்லாம் சென்றுவிட்டதால் தானே மடையை வெட்டித் திறந்து கொண்டிருந்தான் சக்தி. முடித்துவிட்டு, கை கால் கழுவி விட்டு மோட்டார் அறையில் இருந்த தனது சட்டையை அணியவும் அவன் அன்னையிடமிருந்து அழைப்பு வரவும் சரியாக இருந்தது.
“சக்தி, என் அண்ணன் வந்திருக்காருடா. கொஞ்சம் சீக்கிரம் வாயேன்” என படபடப்போடு பேசினார் அனுசுயா. அனுசுயாவுக்கு எது என்றாலும் தன் இளைய மகன்தான். மூத்த மகனிடம் அன்பு இருந்தாலும் தனக்காக பார்த்து பார்த்து செய்வதில் இளையவன் அவனையே மிஞ்சி விடுவான்.
குருபரன் அமைதி. பெரியவர்கள் முன்னிலையில் எதுவும் பேச மாட்டான். சக்திதரன் அப்படி இல்லை. பெரியவர்கள் மீது மரியாதை இருந்தாலும், அழுத்தம் திருத்தமாக தைரியமாக பேசுவான். அன்னையை வீட்டில் யாராவது ஏதாவது பேசினால், ‘இப்படி பேசாதீர்கள்’ என பொறுமையாக சொல்வான் குரு. ‘என் அம்மாவையே பேசுவியா?’ என நிற்பான் சக்தி.
அனுசுயாவை ஏதாவது பேசிக்கொண்டே இருக்கும் மணிமேகலையும் தங்கதுரையும் கூட சக்திக்கு அஞ்சியே பேசுவதை விட்டு விட்டனர். எப்பொழுதும் போல, தன் அண்ணனை யாராவது ஏதாவது சொல்லிவிடும் முன், சக்தி வந்தால் அசம்பாவிதமாக எதுவும் நடக்காமல் தடுத்து விடுவான் என நினைத்தே அவனை அழைத்திருந்தார் அனுசுயா.
சக்தியும் தன் தாய்மாமா பிரபாகரனை இதுவரை பார்த்தது இல்லை என்றாலும் தன் அன்னையின் பாசத்துக்கு உரியவர் என்பது தெரியும்.
தன் அத்தை தேவியின் இறப்பிற்கு பிரபாகரன்தான் காரணம் என்று வீட்டில் உள்ளவர்கள் கூறினாலும், அனுசுயா அவரின் மீது எந்த தவறும் இருக்காது என அழுத்தமாக நம்பியதால், சக்திக்கும் பிரபாகரன் மீது பெரிய அளவில் கோவம் எல்லாம் இல்லை. அன்னைக்கு பிறந்த வீட்டு சொந்தம் என்று இருக்கும் ஒரே அண்ணனை சந்திக்க விடாதவாறு வைத்திருக்கும் வீட்டினரின் மேல் தான் அவனுக்கு வருத்தம்.
இத்தனை வருடங்கள் கழித்து அவர் எதற்காக வந்திருக்கிறார் என தெரியாவிட்டாலும், தன் அன்னை தன்னை எதற்கு அழைக்கிறார் எனப் புரிந்து வேகமாக தன் புல்லட்டை வீடு நோக்கி செலுத்தினான்.
“இவனை யார் உள்ள விட்டது? முதல்ல வெளியே போகச் சொல்லு இவனை” என்ற தனது தாத்தாவின் ஆக்ரோஷமான குரலைக் கேட்டுக் கொண்டே உள்ளே நுழைந்தான் சக்திதரன்.
“மாமா கோபப்படாதீங்க எனக்கு பேச ஒரு சந்தர்ப்பம் தாங்க” என கெஞ்சிக் கொண்டிருந்தார் பிரபாகரன். தன் அன்னையின் சாயலிலேயே, அவரை விட உயரமாக, வசீகரமான முகத்துடன் நின்றிருந்த பிரபாகரனை பார்த்தான் சக்திதரன்.
“என் பொண்ணுக்கு கல்யாணம். எனக்குன்னு யார் இருக்கா மாமா உங்களையும் தங்கச்சியையும் விட்டா? என் பொண்ணு கல்யாணத்துக்கு நீங்க எல்லாரும் வரணும். அதுக்காகத்தான் பத்திரிக்கை கொடுக்க வந்திருக்கிறேன் மாமா” என்றார் பிரபாகரன்.
“என்ன தைரியம் இருந்தா, என் பொண்ணை கொன்னுட்டு, உன் பொண்ணு கல்யாணத்துக்கு கூப்பிட வந்திருப்பே? வெளியே போடா” என விஸ்வநாதன் கத்த, உள் கட்டில் கதவின் ஓரத்தில் நின்று எட்டிப் பார்த்து கண்ணீர் விட்டுக் கொண்டிருந்தார் அனுசுயா.
தன் அன்னை அழுவது பொறுக்க முடியாத சக்தி “தாத்தா நிதானமாக இருங்க. ஏன் இப்படி கோபப்படுறீங்க? உடம்புக்கு ஏதாவது வரப்போகுது” என அவரை சிறிது சமாதானம் செய்தான்.
“என் மவள எனக்கு இல்லாம பண்ணிட்டியேடா பாவி… ஏண்டா வந்த? நீ சந்தோஷமா வாழறதை எங்க கிட்ட சொல்லி, எங்க வயித்தெரிச்சலை கொட்டிக்கிறத்துக்கா?” என அன்னப்பூரணி அழுகையும் ஆத்திரமுமாய் கேட்க, “அத்தை உங்க கையால எத்தனை வேளை சாப்பிட்டு இருக்கேன்? நான் உங்களுக்கு எதுவும் கெடுதல் செய்வேனா?” எனக் கேட்டார் பிரபாகரன்.
“கெடுதல் செய்யலடா துரோகம் பண்ணிட்ட. அந்த கடவுளுக்கு கண்ணில்லையா? என் பொண்ணு மண்ணோடு மண்ணா போய்ட்டா. இன்னும் நீ…” என என்ன சொல்லியிருப்பாரோ “அப்பத்தா!” என அதட்டி அவரை அதற்கு மேல் பேச விடாமல் செய்தான் சக்தி.
கண் கலங்கிப் போய் பிரபாகரன் நின்றிருக்க, ஒன்றும் கூற முடியாமல் அனுசுயா புடவை முந்தானையால் வாயைப் பொத்தி சத்தமில்லாமல் அழுது கொண்டிருக்க, வளர்மதி வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள். வீரவேலும் குருபரனும் வீட்டில் இல்லை.
“நீங்க கிளம்புங்க” என்றான் சக்தி. அப்போதுதான் அவனைப் பார்த்தார் பிரபாகரன். பின்னால் நின்று அழுது கொண்டிருந்த தன் தங்கையைப் பார்த்துக் கொண்டே பிரபாகரன் வெளியே சென்றார். தன் அன்னையின் அழுத தோற்றத்தைப் பார்த்தவன் ‘அடுத்து என்ன செய்யலாம்?’ என யோசிக்க ஆரம்பித்தான்.
இத்தனை வருடங்களுக்குப் பிறகு தனது உறவை புதுப்பித்துக் கொள்ள வந்த பிரபாகரன் நிராகரிப்பாலும், மாமா அத்தையின் கோவத்தினாலும், தன் தங்கையிடம் எதுவும் பேசமுடியாத இயலாமையினாலும் மனம் நொந்து போய் காரில் சென்று கொண்டிருக்க, அவரது காரை முந்திக்கொண்டு வழிமறிப்பது போல தன் புல்லட்டை நிறுத்தினான் சக்திதரன்.
ஓட்டுநர் காரை நிறுத்த, தன் சிந்தனையிலிருந்து கலைந்த பிரபாகரன், என்னவென்று பார்க்க காருக்கு முன்னால் சக்தி நிற்க, கூட அவரது அன்புத்தங்கை அனுசுயாவும் நின்று கொண்டிருந்தார்.
பிரபாகரன் ஓட்டுனரிடம் “காரை கொஞ்ச நேரம் நிறுத்தி வை” எனப் பணித்து விட்டு, வேகமாக இறங்கி தன் தங்கையிடம் கிட்டத்தட்ட ஓடினார். அனுசுயாவும் அவரை அதே வேகத்துடன் எதிர்கொண்டு, தன் அண்ணனின் கைகளைப் பிடித்துக் கொண்டார்.
“எப்படிமா இருக்க?” என தழுதழுக்க கேட்டார் பிரபாகரன்.
“நல்லா இருக்கேண்ணா. நீ எப்படி இருக்க? நீ மட்டும்தான் வந்தியா?” என்றார் அனுசுயா.
“ஏதோ இருக்கேன். உன் அண்ணிக்கு நான் இங்க வந்தது தெரியாது” என்றார்.
இவர்கள் இருவரும் பேசிக் கொண்டிருக்க, சிறிது இடைவெளி விட்டு அவர்களை தொந்தரவு செய்யாமல் நின்று பார்த்துக் கொண்டிருந்தான் சக்தி.
தன் அன்னை அழுதாலும் அவர் அண்ணனை பார்த்துவிட்ட மகிழ்ச்சி முகத்தில் நன்றாகத் தெரிய, பிரபாகரனின் முகத்திலும் மகிழ்ச்சி தெரிய, சக்தி வியப்புடன் பார்த்துக் கொண்டிருக்க, “இங்க வாடா” என கூப்பிட்டார் அனுசுயா.
சக்தி அவர்களுக்கு அருகே செல்ல “இவன்தான் என் ரெண்டாவது பையன் சக்திதரன்” என அறிமுகம் செய்வித்தார்.
சத்தி பிரபாகரனைப் பார்த்து சிரிக்க அவன் தோளில் தட்டிக் கொடுத்த பிரபா, “என்ன செய்றீங்க மாப்பிள்ளை?” எனக் கேட்டார்.
“விவசாயம் பார்க்கிறேன் மாமா” என பெருமையாக சொல்ல, அவனது மாமா என்ற அழைப்பிலும், விவசாயம் பார்ப்பதை பெருமையாக சொல்லிய விதத்திலும் மருமகனை பாசமும் பெருமிதமும் பொங்க பார்த்தார்.
“என் பொண்ணுக்கு கல்யாணம். என் தங்கச்சியை கூட்டிட்டு நீயாவது கல்யாணத்துக்கு வரணும்” என்றவர், ஓடி சென்று காரில் இருந்து ஒரு திருமண பத்திரிக்கையை எடுத்து வந்து அனுசுயாவின் கைகளில் கொடுத்தார்.
பத்திரிகையை வாங்கிப் பார்த்த சக்திதரன், “ தவறா எடுத்துக்காதீங்க மாமா. இங்க பக்கத்துல கல்யாணம்னாலும் நான் அம்மாவை கூட்டிட்டு வரலாம். சென்னை வரையிலும் வர்றது ரொம்பக் கஷ்டம். தாத்தா, அப்பாவுக்கு எல்லாம் தெரிஞ்சா பிரச்சனையாகிடும்” என்றவன் தன் அம்மாவைப் பார்த்தான்.
தன் முந்தானையில் முடிந்து வைத்திருந்த இரட்டை வடச் சங்கிலியை எடுத்த அனுசுயா “இது என் மருமகளுக்கு அத்தையோட சீர்” எனச் சொல்லி பிரபாவின் கையில் கொடுத்தார்.
பிரபாகரன் வாங்க மறுக்க, “அண்ணா இது அம்மாவோட நகை. அம்மா நகை எல்லாம் என்கிட்டேதானே இருக்கு, இதை கண்டிப்பா நீ வாங்கிக்கணும். என் மருமகளை நேர்லதான் பார்க்க முடியல. இதையாவது கொடுண்ணா” என வற்புறுத்திக் கூறவும் வாங்கிக்கொண்டார்.
பின்னர் பிரபா தன் அலைபேசி எண்ணை சக்தியிடம் கொடுத்து விட்டு விடைபெற்றுச் செல்ல, திருமணப் பத்திரிக்கையில் மீண்டும் பார்வையைப் பதித்தான் சக்தி.
“அம்மா உன் அண்ணன் குடும்பமே டாக்டர் குடும்பம் போல இருக்கே?” எனக் கேட்டான் சக்தி.
“என்னடா இது… உன் அண்ணன்? மாமான்னு சொல்லுடா. அவர் முன்னாடி அப்படித்தானே கூப்பிட்ட. இப்ப என்ன?” எனக் கேட்டார் அனுசுயா.
“அது சரி, இப்ப நாம ரெண்டு பேரும் இவரை சந்திச்சு பேசுனது மட்டும் உன் மாமனாருக்கு தெரிஞ்சது நம்ம கதையே கந்தலாயிடும். இதுல நான் மாமான்னு சொல்லலைன்னு வேற உனக்கு வருத்தமா?” என்றவன் பத்திரிக்கையை அனுசுயாவிடம் நீட்டினான்.
“இதை நான் எங்கடா வச்சிக்கிறது? உன் அப்பாவுக்கு தெரிஞ்சது அவ்வளவுதான். நீயே வச்சுக்க” என்றார் அனுசுயா.
“கல்யாணமாகி முப்பது வருஷம் ஆகுது. இன்னும் உன் வீட்டுக்காரருக்கு இந்த பயம் பயப்படுறியே?” என சக்தி கேட்க,
“என்ன பண்றது… சண்டை வந்தா போறத்துக்கு பொறந்த வீடுன்னு ஒரு நாதியில்லை எனக்கு. அப்படியே எல்லாத்துக்கும் மண்டையை மண்டையை ஆட்டி பழகிட்டேண்டா” என சலிப்பாக சொன்னார்.
“மாமா பண்ணினதும் தப்புதானம்மா? அவராலதானே அத்தை செத்துப் போச்சு?” எனக் கேட்டான் சக்தி.
“இப்பதாண்டா அண்ணன் சொன்னார். அண்ணனை கட்டிக்க மாட்டேன்னு தேவிதான் சொன்னாளாம். மீறி கட்டினா செத்துப் போயிடுவேன்னு மிரட்டினாளாம். அதான் அண்ணன் அவசர அவசரமா வேற கல்யாணம் பண்ணிக்கிட்டார்” என அனுசுயா கூற,
“அப்புறம் ஏன் தேவி அத்தை தற்கொலை பண்ணிக்கிட்டு சாகணும்? உன் அண்ணன் அவர் செஞ்ச தப்பை மறைக்க ஏதோ கதை விடுறார்” என்றான் சக்தி.
“இப்படி யாருமே நம்ப மாட்டீங்கன்னுதான் இந்த உண்மையை கூட அவரால் சொல்ல முடியல. எனக்கு என் அண்ணனைப் பத்தி தெரியும். நீ என்ன வேணா நினைச்சிக்க” என்றார் அனுசுயா.
“சரி வண்டியில ஏறு. மழை வர்ற மாதிரி இருக்கு” எனக்கூறி அனுசுயாவை அழைத்துக்கொண்டு வீட்டிற்கு சென்றான் சக்தி. அவனது வருங்கால மனைவி மதுமிதாவின் பெயரை கவனிக்காமலேயே திருமணப் பத்திரிக்கையை அவனது அறையில் பத்திரப்படுத்தி வைத்துக் கொண்டான்.
சென்னையில் தோட்டத்தில் இருந்த ஊஞ்சலில் அமர்ந்து, தன் தந்தைக்காக காத்திருந்தாள் மதுமிதா. கைபேசியின் மூலமாக தன் தங்கையை சந்தித்து விட்டதை கூறிய பிரபா, மற்றதை நேரில் சொல்கிறேன் என வைத்துவிட, ஆவலாக காத்திருந்தாள் மதுமிதா.
பிரபாகரனின் கார் உள்ளே நுழைய, அதிலிருந்து இறங்கியவர், தன் மகளைப் பார்த்துவிட்டு, “இன்னும் தூங்காம என்ன செய்றம்மா?” எனக் கேட்டார்.
“என்னாச்சு டாடி அத்தையை பாத்தீங்களா? பேசினீங்களா? என்ன சொன்னாங்க? கல்யாணத்துக்கு வராங்களா?” என பல கேள்விகளை மது அடுக்கிக் கொண்டே செல்ல, சிரித்த பிரபாகரன், அங்கு இருந்த ஒரு நாற்காலியில் அமர்ந்து கொண்டு தன் மகளையும் அருகில் அமரச் சொன்னார்.
“எல்லாரும் என் மேல இன்னும் கோவத்துலதான் இருக்காங்க மது. ஆனா என் தங்கச்சி யாருக்கும் தெரியாம என்னை அவ பையனோட வந்து பார்த்தா. அவளைப் பார்த்து பேசிட்டேன். அது ஒன்னுதான் நிம்மதி. ஆனாலும் இவ்வளவு தூரம் மயூரி கல்யாணத்துக்கு எல்லாம் வர முடியாதுன்னு சொல்லிட்டாங்க” என வருத்தமாகக் கூறினார்.
“நீங்க ஏன் யாருக்கும் தெரியாம லவ் மேரேஜ் பண்ணிக்கிட்டீங்க? எல்லார்கிட்டயும் சொல்லிட்டு செய்ய வேண்டியதுதானே? அதான் இவ்ளோ பிரச்சனை” என்றாள் மது.
“இது லவ் மேரேஜ் இல்லம்மா” என விரக்தியாக சிரித்தார் பிரபாகரன்.
“என்ன டாடி சொல்றீங்க? அப்போ நீங்க அம்மாவை லவ் பண்ணி கல்யாணம் பண்ணிக்கலையா?” எனக் கேட்டாள் மது.
“இல்லம்மா… எனக்கு 12 வயசு இருக்கும்போது என் அம்மா விஷக் காய்ச்சல் வந்து இறந்து போயிட்டாங்க. எங்க அம்மாவோட அண்ணன், எங்க தாய்மாமன் விஸ்வநாதன் எங்களை அக்கறையா பார்த்துக்கிட்டார். அப்புறம் அஞ்சு வருஷம் கழிச்சு என் அப்பாவும் நெஞ்சுவலி வந்து இறந்துட்டார். எங்க மாமாதான் எங்களுக்கு ஆதரவா இருந்தார். அவர் வீட்டுக்கே அழைச்சிட்டு போயிட்டார்”
“நான் நல்லா படிச்சதால என்னை டாக்டருக்கும் படிக்க வச்சார். எங்க ஊருல மருத்துவ வசதி இல்லாததால நான் அங்க மருத்துவம் பார்த்து ஊருக்கு நல்லது செய்யணும்னு நினைச்சார். நான் மூணாவது வருஷம் படிக்கும்போதே என் தங்கச்சியை அவர் பையனுக்கு கல்யாணம் பண்ணி வச்சார்”
“எல்லாம் நல்லபடியாதான் போய்க்கிட்டு இருந்தது. நான் கடைசி வருஷம் படிப்ப முடிச்சிட்டு மேலேயும் படிக்கலாம்னு இருந்தப்போ, அவரோட பொண்ணு தேவியை என்னை கல்யாணம் பண்ணிக்க சொன்னார். எனக்கும் தேவின்னா இஷ்டம். ஆனாலும் மேல் படிப்பை முடிச்சிட்டு கல்யாணம் பண்ணிக்கிறதா சொல்லவும் சரின்னு சம்மதிச்சார்”
“நான் சென்னையில எம்டி படிச்சுட்டு இருந்தப்போ உன் அம்மா எம்பிபிஎஸ் கடைசி வருஷத்துல இருந்தா. என்னை லவ் பண்றதா சொன்னா. என் மனசுல தேவி இருந்ததால நான் மறுத்திட்டேன். இருந்தும் என்னை சுத்தி சுத்தி வருவா. எனக்கு படிப்பு முடியப் போற சமயம் என் தங்கச்சியோட ரெண்டாவது பையனுக்கு காதுகுத்துன்னு ஊருக்கு போயிருந்தேன்”
“அப்போ தேவி என்னை தனியா சந்திச்சு என்னை கல்யாணம் பண்ணிக்க அவளுக்கு விருப்பமில்லைன்னும் மீறி கல்யாணம் நடந்தா செத்துப் போயிடுவேன்னும் சொன்னா. எனக்கு அதிர்ச்சியா இருந்தாலும், அவளையே கல்யாணத்தை நிறுத்த சொல்லி வீட்டுல சொல்லச் சொன்னேன். அவ சொன்னா கேக்க மாட்டாங்கன்னும் என்னையவே சொல்லவும் சொன்னா”
“எனக்கும் மாமாகிட்ட சொல்ற தைரியம் இல்லை. என்ன செய்றதுன்னு தெரியாமலேயே திரும்ப வந்துட்டேன். எதா இருந்தாலும் படிப்பு முடிஞ்சதும் பார்த்துக்கலாம்னு விட்டுட்டேன். எனக்கு படிப்பு முடிய ஒரு வாரம் இருந்த சமயத்தில் மாமாகிட்ட இருந்து லெட்டர் வந்தது. அதுல ஒரு வாரத்துல எனக்கும் தேவிக்கும் கல்யாண ஏற்பாடாகியிருக்கிறதா எழுதியிருந்தார்”
“என்ன செய்றதுன்னு தெரியாம குழப்பத்தில் இருந்தப்போ, உன் அம்மா திரும்பி வந்து என்னை மறக்க முடியலன்னு சொல்லி அழவும், யாருக்கும் தெரியாமல் அவளை ரிஜிஸ்டர் மேரேஜ் பண்ணிக்கிட்டேன். ரெண்டு பேரும் போய் என் மாமா முன்னாடி நின்னோம். அவர் கோபத்தில் என்னை கண்டபடி திட்டி வெளிய அனுப்பிட்டார்”
“திரும்ப சென்னைக்கு வந்துட்டோம். உன் அம்மாவோட அப்பாவும் எல்லாத்தையும் கேள்விப்பட்டு இனிமே என் பொண்ணை அங்க கூட்டிட்டு போகக் கூடாதுன்னு சொல்லி எங்களை ஏத்துக்கிட்டார்”
“ஒரு மாசம் கழிச்சு என் மாமாவை சமாதானப்படுத்த நான் ஊருக்கு போனேன். அப்பதான் எனக்கு விஷயமே தெரிஞ்சது. தேவி கிணத்துல விழுந்து தற்கொலை பண்ணிக்கிட்டா. நான் தேவியை கல்யாணம் பண்ணாததாலதான் அவ சூசைட் பண்ணிக்கிட்டான்னு எல்லோரும் என்னை கண்ட படி பேசினாங்க. என் தங்கச்சி என்கிட்ட பேச வந்தப்போ இனி அவன் கூட பேசினா நீயும் வீட்டை விட்டு வெளியே போன்னு சொன்னாங்க. எனக்கு பேச சந்தர்ப்பமே கொடுக்கலை. அப்படியே என்னை பேச விட்டிருந்தாலும் நான் சொல்றதை நம்பியிருக்க மாட்டாங்க. அதுக்கப்புறம் நான் அங்க போகவே இல்லை. இன்னைக்கு தான் போனேன். என் மாமாவுக்கு பழைய கோபம் அப்படியே இருக்கு” என முடித்தார் பிரபாகரன்.
எல்லாவற்றையும் கவனமாகக் கேட்ட மது, “என்ன டாடி இது இப்படி சொதப்பி வச்சிருக்கீங்களே? உங்க மாமாகிட்டயே உண்மையை சொல்லியிருக்கலாம்தானே. அவரே கல்யாணத்தை நிறுத்தி இருப்பார்” என்றாள்.
“இல்லம்மா கிராமத்துல நீ நினைக்கிறது போல எல்லாம் நடக்காது. தேவியை சமாதானப்படுத்தி எனக்கு கல்யாணம் பண்ணி வைக்கதான் பார்த்து இருப்பாங்க”
“அவங்க ஏன் உங்கள கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்னு சொன்னாங்க?”
“காரணம் எதுவும் சொல்லலை. என்னை பிடிக்கலையோ என்னவோ?”
“உங்களைப் போய் யாருக்கும் பிடிக்காமல் இருக்குமா? அவங்களுக்கு வேற யாரையும் பிடிச்சிருக்குமோ?”
“தெரியலம்மா”
“இதெல்லாம் அம்மாவுக்கு தெரியுமா டாடி”
“கல்யாணம் ஆனதுக்கு அப்புறம் எல்லாத்தையும் சொல்லிட்டேன். அதிலிருந்துதான் உன் அம்மா என்கூட சண்டை கட்ட ஆரம்பிச்சுட்டா. அவளுக்கு என் மேல கோவம். காதலிச்சு கல்யாணம் பண்ணாம, தேவிக்காக கல்யாணம் பண்ணிக்கிட்டேன்னு”
“தப்புதான்மா. அப்போ நிறைய குழப்பத்தில் இருந்தேன். சரியா யோசிக்க முடியாம நிறைய சொதப்பிட்டேன். உங்க அம்மாவுக்கு உண்மையில நான் சொல்லலைங்கறத விட ஒரு கிராமத்து பொண்ணு முன்னாடி அவ காதல் தோத்து போயிட்டேன்னுதான் ரொம்ப வருத்தம். கல்யாணத்துக்கு பிறகு உன் அம்மாவை தவிர வேற யாரும் என் மனசுல இல்லை. அவதான் புரிஞ்சிக்க மாட்டேன்னு என்னை வார்த்தைகளால தினம் தினம் கொல்லுவா. ஒரு கட்டத்துக்கு மேல பொறுக்க முடியாமல் நானும் திரும்பி பேச ஆரம்பிச்சேன். இன்னைக்கு வரையிலும் வாழ்க்கை இப்படியேதான் ஓடிக்கிட்டு இருக்கு” என்றார் பிரபாகரன்.
பாவமாக தன் தந்தையைப் பார்த்த மது, “உங்களுக்காக ரொம்ப வருத்தப்படுறேன் டாடி. உங்கள அம்மா ரொம்ப நேசிச்சிருக்காங்க. அதனாலதான் அவங்களால இந்த உண்மையை தாங்கிக்க முடியலை. அந்த ஆதங்கத்தை உங்க மேல கோவமா காட்டுறாங்க. கைன்ட் ஆஃப் டிபன்ஸ் மெக்கானிசம்” என மது கூற,
“என் கதையை விடு. உன் கதையை சொல்லு. கௌசிக்கை மீட் பண்ணுனியா?” எனக் கேட்டார் பிரபாகரன்.
“எஸ் டாடி” என்றாள்.
“என்ன நினைக்கிற? உனக்கு ஓகேவா?”
“கௌசிக் ஒரு நல்ல மனிதர். குட் லுக்கிங் ஆல்சோ. ஆனா…” என இழுத்தாள் மது.
“இழுக்காம சொல்லுமா. என்கிட்ட என்ன தயக்கம்?” என்றார் பிரபாகரன்.
“எனக்கு சொல்லத் தெரியலை டாடி. அவரைப் பார்த்தா எந்த ஃபீலிங்ஸும் வரமாட்டேங்குது. எங்களுக்குள்ள எந்த கெமிஸ்ட்ரியும் இல்லை. அவரை வேண்டாம்னு சொல்ல காரணம் இல்லைனாலும், அவர் வேணும்னும் தோண மாட்டேங்குது” என்றாள் மது.
“நீ என்ன எதிர்பார்க்கிறம்மா? ஒரே நாள்ல எப்படி இதெல்லாம் நடக்கும். நல்ல பையன்னு நீயே சொல்ற. இன்னும் பழகினா ஒருவேளை உனக்கு நீ சொல்ற மாதிரி ஃபீலிங்ஸ், கெமிஸ்ட்ரி எல்லாம் வரலாம் இல்லையா?” என சிரித்தார் பிரபாகரன்.
“இல்ல டாடி. கௌசிக்கை ஒரு நல்ல ஃப்ரண்டா என்னால ஏத்துக்க முடியும். என்னோட லைஃப் பார்ட்னரா ஏத்துக்க முடியும்னு தோணலை. அதனால கல்யாணத்துக்கு இப்போ நோ. கௌசிக்குக்கு டபுள் நோ” என்றாள் மது.
“உன் அம்மாகிட்ட சொல்லிட்டியா?”
“இல்ல. நீங்கதான் சொல்ல போறீங்க” என விளையாட்டாக மது கூற,
“கண்டிப்பா மது. உன்னோட கல்யாணம் உன் விருப்பப்படிதான் நடக்கும். விருப்பமில்லாமல் கௌசிக்கை எங்க கட்டாயத்திற்காக கல்யாணம் பண்ணிக்கிட்டு, வாழ்க்கை முழுதும் நீ கஷ்டப்பட நான் விடமாட்டேன்” என உறுதியாக சொன்னார் பிரபாகரன்.