நாயகி சொன்னது போல…. மகன்கள் வந்து சொன்னதும், “நமக்கு நல்லா பிஸ்னஸ் ஆகிற ஏரியாவா பார்த்து கேளுங்க.” எனச் சுனிதா ஆரம்பிக்க…

“அம்மா இனி நீங்க எந்த விஷயத்திலேயும் தலையிடக் கூடாது. எங்காவது ஊர் சுத்தி பார்க்கனுமா அப்பாவும் நீங்களும் போயிட்டு வாங்க. தேவையில்லாம வாயைத் திறந்தீங்க அவ்வளவு தான்.” எனச் சூரியாவும்,

“நீங்க ஒழுங்கா இல்லைனா நாங்க தனிக்குடித்தனம் போயிடுவோம். அப்புறம் அப்பாவும் நீங்களும் தனியாதான் இருக்கணும்.” என வசீகரனும் மிரட்டி வைத்தனர்.

சுபாவும் அதே தான் விஷாலிடம் சொல்ல வந்தார்.

“அம்மா, நல்லது நினைச்சா நல்லது நடக்கும் மா… தர்மா அண்ணா நல்லது தான் நினைக்கிறார் அதுதான் அவருக்கு எல்லாமே நல்லதா நடக்குது.”

“நீங்களும் இனிமே நல்லதே நினையுங்க மா…” என விஷால் சொல்ல… இவனுக்காகச் சொல்ல வந்தா நம்மையே கெட்டவள் ஆக்கி விட்டானே என நினைத்த சுபா, இனி வாயே திறப்பதில்லை என முடிவு செய்து கொண்டார்.

தர்மா முழு மூச்சாகப் பிஸ்னசில் இறங்கினான். இன்னும் வெவ்வேறு தயாரிப்புகளையும் கொள்முதல் செய்து விநியோகித்தனர். வாரத்தில் ஆறு நாட்கள் அயராத உழைப்பு தான். 

முன்பு போல எல்லாம் தர்மாவின் பொறுப்பு அல்ல… சரக்கு கொள்முதல் செய்வது, கிடங்கில் வைத்துப் பாதுகாப்பது, அதை லாரிகள் மூலம் வாடிக்கையாளர்களுக்குக் கொண்டு சேர்ப்பது எல்லாம் தனித்தனியாகத்தான். ஆனால் விற்பனைக்கு ஆர்டர் எடுப்பது மட்டும் பொதுவாகச் செய்வது.

பொறுப்புகள் கூடியதில் இப்போது நேரம் இல்லாமல் உழைக்கக் கேளிக்கையைப் பற்றி யாருக்கும் சிந்திக்கும் எண்ணமில்லை. ஞாயிறு ஒரு நாள் தான் விடுமுறை. அன்று அவரவர் குடும்பத்தோடு நேரம் செலவு செய்தனர். 

எதாவது நல்ல நாள் பண்டிகை என்றால்…. அன்று யாரவது ஒருவர் வீட்டில் மாலை நேரம் ஒன்று கூடினர். கீர்த்தி, ஸ்ருதி, சௌமியாவுக்கு இடையில் எப்போதுமே பொறாமை என்று ஒன்று இல்லவே இல்லை. அவர்கள் மூவரும் தோழிகள் போலப் பழகினர். உண்மையில் ஷிருதியை விடக் கீர்த்தி இளையவள், ஆனால் அவள் மூத்த மருமகள் என்பதால்… பொறுப்புடன் எல்லோரையும் அரவணைத்து சென்றாள். 

அண்ணன் எப்போதுமே தங்களை விட்டுக் கொடுக்கவில்லை. தாங்களும் அவரை விட்டுக் கொடுக்கக் கூடாது என்ற எண்ணம் தம்பிகளுக்கு வந்திருந்தது. தர்மா ஒரு எல்லையில் நிற்கவே விரும்பினான். ஆனால் இவர்கள் யாரும் அவனை விடுவது இல்லை. 

தந்தைகள் பிள்ளைகளிடம் இருந்து தள்ளித்தான் நிற்பார்கள். ஆனால் அதே சமயம் பிள்ளைகளுக்கு என்ன வேண்டுமோ அதைப் பார்த்துச் செய்வார்கள். தர்மா அப்படித்தான் இருந்தான்.

இரண்டு வருடங்கள் வேகமாகச் சென்றிருக்க… விகாஷ் வெளிநாட்டில் இருந்து வந்து செட்டில் ஆனதும் தான் ரித்விகாவின் திருமணம் என்பதால்… விஷாலுக்கு முதலில் திருமணம் செய்து வைத்து விடலாம் என நினைத்தனர். 

“பொண்ணு ரெடியான்னு உன் கொழுந்தனை கேளு….” என விஷால் வீட்டிற்கு வந்த போது தர்மா கீர்த்தியிடம் கேட்க சொன்னான். அவளும் கேட்க, 

“உங்களுக்கு மட்டும் தங்கச்சி இருந்திருந்தா… நான் அவளையே கல்யாணம் பண்ணிட்டு வீட்டோட மாப்பிள்ளையா செட்டில் ஆகி இருப்பேனே…இவரெல்லாம் வேஸ்ட்” என விஷால் அண்ணனைப் பார்த்து சொல்ல, தர்மா கடுப்பாகி விட்டான். 

“ஏன் தம்பி ஸ்கூல், காலேஜ்ன்னு லவ் பண்ணிட்டே இருந்தாரே…அவங்க எல்லாம் எங்க?” எனக் கேட்க, 

“உண்மையா இருந்தா பொண்ணுங்களுக்குப் பிடிக்க மாட்டேங்குது. என்னை என்ன பண்ண சொல்றீங்க?” என்றான். 

“பண்ற காவாளித்தனம் எல்லாம் பண்ணிட்டு, உண்மையா இருக்கேன்னு சொல்ல வேண்டியது. இவன் இப்படித்தான் பேசிட்டு இருப்பான். நான் இங்க இருந்தா டென்ஷன் ஆகிடுவேன். இவன் கல்யாணம் பண்றான், பண்ணாம இருக்கான். எனக்கு என்ன?” எனத் தர்மா எழுந்துவிட்டான். 

“ச்ச… இவர் எல்லாம் லவ் பண்ணி கல்யாணம் பண்ணிட்டு. நான் பண்ணலைனா எவ்வளவு அவமானம். ஆனா என்ன பண்றது நமக்கு லவ் செட் ஆகலை. அவரையே பொண்ணு பார்க்க சொல்லுங்க.” என விஷால் பெருந்தன்மையாகச் சொல்வது போலச் சொல்ல… 

“இவனுக்குப் பொண்ணு பார்த்திட்டு, நாளைக்கு எதாவது இவனே பிரச்சனை பண்ணிட்டு, நீங்க பார்த்த பொண்ணுன்னு என்னைச் சொல்லுவான். நான் இந்த ஆட்டத்துக்கு வரலை. அவனையே பார்த்துக்கச் சொல்லு.” என்றான் தர்மா. 

“உங்க ரெண்டு பேரோட முடியலை…” என்றால்… இருவருக்கும் நடுவில் பஞ்சாயத்து செய்தே களைத்துப் போன கீர்த்தி. 

“உன் அம்மா அவங்க சொந்தத்துல எதோ பொண்ணு இருக்கு சொன்னா… அதைப் போய் முதல்ல பார்த்திட்டு வா….” என்றார் நாயகி. 

“எங்க அம்மா வீட்டு பக்கமா… அப்ப பொண்ணு அவங்களைப் போலவே இருக்குமே…” என்றவன், தர்மா முறைத்த முறைப்பில் சரி என்றான். இவர்கள் அண்ணன் தம்பி அடிக்கும் கூத்தைப் பார்த்து ஜமுனா சிரித்துக் கொண்டார். 

விஷால் சென்றதும் தன் பிள்ளைகளுடன் தர்மா இரவு உணவு உண்ண சென்றான். தேக்கு மரத்தில் செய்த உயரம் குறைவான சிறிய மேஜையில் உணவுகள் பரிமாரப்பட்டிருக்க… அதைச் சுற்றி தரையில் பிள்ளைகளுடன் அமர்ந்து உண்டான். 

இரண்டரை வயது மகன்களுக்கு இட்லிகளைப் பிட்டுச் சாம்பாரில் தொட்டு அவர்கள் தட்டில் வைக்க…. அவர்களே தங்கள் பிஞ்சு கைகளால் எடுத்து உண்டனர். இருவருமே குட்டி கண்ணன் போல அவ்வளவு அழகு. அதிலும் விஷாகன் மேஜையின் மீது ஏறி அமர்ந்து, காலில் வெள்ளிகாப்பு மின்ன, ஒரு காலை மட்டும் தொங்கப் போட்டுக் கொண்டு உண்ண… அந்தக் கிருஷ்ணரே வெண்ணை உண்பது போல கண்ணுக்கு நிறைவாக இருந்தது.  

இடது கையில் எடுத்து உண்ட கார்த்திகேயனை வலது கையில் உண்ண வேண்டும் என அபி திருத்த, தம்பிக்காரனும் கேட்டுக் கொண்டான். அபியே எல்லாம் சொல்லிக் கொடுத்து விடுவாள். 

விஷாலுக்கு அந்தப் பெண்ணையே பிடித்துவிட… திருமணம் நிச்சயம் செய்தனர். திருமணதிற்கு நாள் பார்க்கும் அன்று…. 

“லவ் பண்ணித்தான் கல்யாணம் பண்ண முடியலை… எனக்குப் பார்த்த பெண்ணையாவது ஒரு ஆறு மாசம் லவ் பண்ணிட்டுக் கல்யாணம் பண்றேனே…” என்றான். 

“அதுக்குள்ள அந்தப் பொண்ணு தெளிஞ்சு பிரேக் அப் பண்ணிடும் ஓகே வா…. பொண்ணு கிடைக்கும் போதே கல்யாணம் பண்ணு டா வெண்ணை.” எனத் தர்மா கடுப்பாக… விஷால் முகம் போன போக்கைப் பார்த்து எல்லோரும் சிரித்தனர். 

எப்போதுமே எக்குத்தப்பாகத் தான் விஷால் பேசி வைப்பான். கல்யாணம் செய்தாவது ஒழுங்காக இருப்பானா என்ற கவலை தர்மாவுக்கு இருந்தது. 

பாருங்க அவனுங்க அண்ணன் தம்பிங்க அடிச்சாலும் பிடிச்சாலும் விட்டுக் கொடுக்காம சேர்ந்துக்கிறாங்க. ஆனா நீங்கதான் கடைசியில பொல்லாதவர் ஆகிடுவீங்க. இனியாவது பார்த்து இருந்துக்கோங்க என அருணா கணவனிடம் எச்சரிக்கை செய்து வைக்க…. அதுவும் தர்மா நன்றாகச் சம்பாதித்தால், தங்களுக்கு நன்றாகவும் செய்கிறானே…. அந்தக் காரணத்திற்காகவே சந்துரு இப்போது நல்ல விதமாகவே நடந்து கொள்கிறான். 

அடுத்த இரண்டு மாதத்தில் விஷாலின் திருமணம் நடந்து முடிந்தது. வார்த்தையாக எதுவும் சொல்லவில்லை என்றாலும், திருமணச் சடங்கில் தன் அம்மாவிற்கு பிறகு எல்லாவற்றிற்கும் தர்மா கீர்த்தியைத் தான் விஷால் முன்னிறுத்தினான். அதுவே மற்றவர்களுக்கு அவனுக்கு அவர்கள் எவ்வளவு முக்கியம் எனப் புரிய வைத்தது. 

இனியா திருமணதிற்குத் தன் கணவனுடன் வந்திருந்தாள்… வெளிநாடு சென்றவள், அங்கேயே ஒரு வெளிநாட்டினரை மணந்து இருந்தாள். கல்யாணம் செய்து கொண்டால் சரி என அவள் வீட்டிலும் ஒன்றும் சொல்லவில்லை. 

அவளைப் பார்த்ததும், “மை பார்ட்னர்…” என விஷால் ஆரவாரமாக அழைக்க…. பார்ட்டனராம் பார்ட்னர் எனக் கடுப்பில் இனியா முறைக்க… தர்மாவும் கீர்த்தியும் அதைப் பார்த்து சிரித்தனர். 

விஷால் எப்போதும் ஒரே மாதிரி இருக்க மாட்டான். ஜாலியாக இருக்கும் போதே திடிரென்று கோபம் கொள்வான். ஆனால் விஷாலின் மனைவி பிரியங்கா எல்லாவற்றையும் எளிதாக எடுத்துக்கொள்வாள். 

“எப்படியும் கணவன் கத்துவதை எல்லாம் கத்திவிட்டு வந்து சாரி கேட்பான்.” என அவளுக்குத் தெரியும். எப்படியும் என்கிட்டே தானே வருவ என்பது போலப் பார்த்திருப்பாள். விஷாலின் குணம் அத்துபடி அவளுக்கு. 

இப்போதும் தர்மாவுக்கும் விஷாலுக்கும் நடுவே முட்டிக்கொள்ளும். ஆனால் பிரியங்கா முன்பு தர்மா விஷாலை விட்டுக் கொடுத்து பேச மாட்டான். அதே போல விஷாலும் அடுத்த நிமிடமே தர்மாவிடம் சென்று ஒன்றும் நடக்காதது போலப் பேசுவான். இவர்கள் இப்படித்தான் எனக் கீர்த்தி எப்படிப் புரிந்து கொண்டாளோ… அதே போலப் பிரியங்காவும் புரிந்து கொண்டாள். 

“இவர்கள் அன்பை அளந்திட எந்த மொழியும் போதாது…. 

இவன் அண்ணன் பாதித் தந்தை மீதி ஆனானே… ஆனானே…

ஆழி சூழ்ந்த உலகிலே யாவும் அழகாச்சே…”