மூன்று மாதங்களில் தர்மா கீர்த்தியின் இரட்டை செல்வங்களுக்குப் பெயர் சூட்டும் விழா கீர்த்தியின் வீட்டிலேயே சிறப்பாக நடந்தது. நவீனா அவர்கள் பக்கம் சொந்த பந்தங்கள் அனவைரையும் அழைத்துப் பெரிய அளவில் செய்தார்.
முருகனுக்கு உகந்த கார்த்திகை மாதத்தில், அதுவும் முருகனின் நட்சத்திரமான பூச நட்சத்திரத்தில் இருவரும் பிறந்திருக்க… கார்த்திகேயன் மற்றும் விஷாகன் என முருகனின் பெயரையே குழந்தைகளுக்கு வைத்தனர்.
ஐந்து மாதங்கள் வரை பிறந்த வீட்டில் இருந்து விட்டுதான் கீர்த்தி இங்கே வந்தாள். இரட்டை குழந்தைகளை வளர்ப்பது அவ்வளவு எளிதில்லையே…. அதனால் இங்கேயும் அவள் வீட்டிலும் என இருப்பாள்.
சௌமியா வளைகாப்பு முடிந்து பிரசவத்திற்குச் சென்றிருக்க… ஸ்ருதி இப்போது உண்டாகி இருந்தாள். இப்படி வீட்டுப் பெண்கள் பிள்ளைபேறு மற்றும் வளர்ப்பில் கவனமாக இருக்க… ஆண்கள் தொழிலில் நேரம் செலவு செய்தனர்.
அவர் மட்டும் தான் பிஸ்னஸ் பார்தாரா என்ன? நாங்களும் தான் பார்த்தோம். அவர் இல்லாம எங்களால பிஸ்னஸ் பண்ண முடியாதா இல்லை சம்பாதிக்கத் தான் முடியாதா என்ற மமதையில் முன்பு சூரியா, வசீகரன், ஏன் விஷாலுமே பேசியவர்கள் தானே…. இவர்கள் ஒத்துகொள்ளவில்லை என்றால் உண்மை வேறாகி விடுமா என்ன? இப்போது மறுக்க முடியாமல் நேராக அனுபவித்தே தெரிந்து கொண்டனர்.
பொதுக் கணக்கெல்லாம் சரிப்பார்த்துத் தர்மா கணக்கை ஒப்படைத்து இருந்தான். இனி அவரவர் சொந்தமாகக் கொள்முதல் செய்து வியாபாரம் செய்ய வேண்டியது தான்.
சூரியாவும் வசீகரனும் ஏற்கனவே நிறையச் சரக்குகளை வாங்கிச் சேர்த்து வைத்திருந்தனர். இவர்கள் பெரிய வாடிக்கையாளர்களைத் தொடர்பு கொண்டு சரக்கை அனுப்பி விடலாமா எனக் கேட்க,
இன்னும் இவர்கள் பிரிந்தது வியாபாரிகளுக்குத் தெரியாது. ஆனாலும் எப்போதும் தர்மாவிடம் தானே பேசுவார்கள். அதனால் அண்ணன் இல்லையா என்றவர்கள் அவரிடம் விலை பேசிக் கொள்வதாகச் சொல்ல…..
“இது தான் விலை.” என இவர்கள் சொன்னதை அவர்கள் காதில் வாங்கவில்லை.
“இல்லை தம்பி அண்ணன்கிட்ட பேசிக்கிறோம்.” என வைத்து விட்டனர். ஏனென்றால் தர்மா மீதுதான் நம்பிக்கை. அவன் சொன்னால் சரியாக இருக்கும் என்ற எண்ணம். வேறு யாரையும் நம்பவும் தயாராக இல்லை.
மொத்த வியாபாரிகள் அவர்கள் வியாபரத்திற்கு என டன் டன்னாக வாங்கும் போது, விலையில் ஒரு ரூபாய் வித்தியாசம் என்றாலும், மொத்தமாகப் பார்த்தால் பெரிய தொகை தானே… அவர்களுக்கு அது பெரிய இழப்புதான். தர்மா என்றால் சரியாகச் சொல்லுவான் என்ற நம்பிக்கை.
தர்மாவிற்கு அழைத்தவர்கள் அவனிடம் விலை விசாரித்து விட்டுச் சரக்கை அனுப்பும்படி சொல்லிவிட்டு வைத்திருந்தனர். பெரிய வியாபாரிகள், பெரிய கட்டுமான நிறுவத்தினர் எல்லாம் தர்மாவிடம் தான் சென்றனர். சிறு வியாபாரிகள், நிறுவனத்தினர், சரக்கு வந்தால் போதும் என்றிருப்பவர்கள் சூரியா வசீகரனிடம் ஆர்டர் கொடுத்தனர்.
விஷால் இந்த ஆட்டத்திற்கே வரவில்லை. தர்மா கீர்த்தியை விட்டு பேசி இருந்தான். இப்போதைக்கு அவனுடன் இருக்கும்படியும், அவனே பார்த்துச் செட்டில் செய்வதாகச் சொல்லி இருக்க…. விஷாலும் தர்மாவோடு தான் பிஸ்னஸ் பார்த்தான்.
ஒரு நாள் இரவு சூரியா வசீகரன் இருவரும் அவர்கள் கம்பெனியில் இருந்து திரும்பும் போது விஷாலை பார்த்ததும் வண்டியை நிறுத்தி பேசினார்.
“எப்படிப் போகுது பிஸ்னஸ்?” என விஷால் கேட்க,
“பரவாயில்லை… சேர்ந்து இருக்கும் போது இருந்த பிஸ்னஸ் இல்லை.” என்றனர்.
“நீ என்ன பண்ணப் போற?”
“இப்போ அண்ணன்கிட்ட பிஸ்னஸ் ட்ரைனிங் மாதிரி போய்ட்டு வரேன். இனிதான் என்ன செய்றதுன்னு யோசிக்கணும். வெயிட் பண்ண சொல்லி இருக்கார்.” என்றான்.
இருவரும் வீட்டில் வந்து சொல்ல, “தர்மா விஷாலை சேர்த்திட்டுப் பிஸ்னஸ் பண்ணி அவங்க ரெண்டு பேரும் மட்டும் நிறையச் சம்பாதிக்கவா? அதெல்லாம் முடியாது.” என்றார் சுனிதா.
“அம்மா, தனியா பிரிஞ்சு வந்தாச்சு. இனி அவங்க சேர்ந்திட்டு பண்ணா என்ன பண்ணலைனா என்ன?” என்றான் வசீகரன்.
“அது எப்படி அவனைச் சேர்த்துகிட்டா உங்களையும் சேர்த்துக்கனும். ” எனச் சுனிதா சொல்ல…
“சேர்ந்திருக்கும் போது அவர் எதோ தனியா சுருட்டுற மாதிரியே பேசினீங்க. இப்ப பிரிஞ்சு வந்ததும் சேர்ந்துக்கச் சொல்றீங்க.” என்றான் வசீகரன்.
இவர்களுக்குத் திரும்பச் சேர்ந்து செய்வது எல்லாம் ஒத்துவராது எனத் தெரியும். ஆனால் வியாபாரம் பெருக தர்மாவிடம் கண்டிப்பாக யோசனை கேட்க வேண்டும் என நினைத்தனர். இப்படியே இருந்தால் சரி வராது. இவர்கள் சம்பாதிப்பது வரவுக்கும் செலவுக்கும் வேண்டுமானால் சரியாக இருக்கலாம். ஆனால் சேமித்துச் சொத்தாக மாற்றவது எல்லாம் முடியவே முடியாது.
சூரியாவும் வசீகரனும் தர்மாவைப் பார்க்க மறுநாள் வீட்டிற்கே சென்றனர். அவர்கள் எதோ பேசத்தான் வந்திருக்கிறார்கள் எனப் புரிந்து கொண்ட தர்மா விஷாலையும் வர சொன்னான்.
“தங்களுக்கு எந்தப் பெரிய ஆர்டரும் கிடைப்பதில்லை.” என்ற தகவலை இருவரும் முன் வைத்து என்ன செய்வது எனக் கேட்டனர்.
“நீங்க முதல்ல ஒன்னு நல்லா தெரிஞ்சிக்கோங்க. எனக்கு நல்லா சம்பாதிக்கணும் தான். அதுக்காக உங்களைத் தள்ளி விட்டுப் பணம் பண்ணனும்னு நினைக்க மாட்டேன்.” என்றான் தர்மா.
“நாம திரும்பச் சேர்ந்தும் பிஸ்னஸ் செய்ய முடியாது. ஆனா அதே நேரம் நாம ஒத்துமையா இருந்தா… நாம பெரிய அளவுல பிஸ்னஸ் பண்ணலாம்.” என்றதும், மூவருக்குமே மகிழ்ச்சி.
“நீங்க சொல்ற மாதிரி கேட்கிறோம்.” என்றனர். கண்டிப்பாக அண்ணன் தங்கள் நல்லதுக்குதான் சொல்வார் என்ற நம்பிக்கை தம்பிகளுக்கு வந்திருந்தது.
“இப்ப சென்னைக்குள்ள மட்டும்தான் சப்பளை பண்றோம். இனி இன்னும் அதை விரிவாக்கலாம். அதுல இந்த இந்த ஏரியா இவங்களுக்குன்னு பிரிச்சுக்கலாம். அந்த ஏரியாவுக்கு உரியவங்கதான் சரக்கு சப்பளை பண்ணனும் சரியா”
இவர்கள் தனித்தனியாகச் செய்யும் போது, எல்லா ஏரியாவுக்கும் ஆர்டர் எடுத்து சுப்ளை செய்ய முடியாது. பிஸ்னஸ் வேறு யாருக்கும் செல்லும் வாய்ப்பு உண்டு. ஆனால் தர்மா சொன்ன முறையில் ஆர்டர்கள் சிந்தாமல் சிதறாமல் இவர்களுக்கு வரும். ஆனால் வரவு செலவு தனித்தனி. இது நல்ல யோசனையாக இருக்க… தம்பிகள் மூவரும் சரி என்றனர்.
“மூன்னு பேருக்கும் இப்ப சொல்றது தான். நீங்கதான் வந்து என்னைக் கேட்டீங்க. நாம ஒத்துமையா இருந்தா.. பிஸ்னஸ் இன்னும் பெரிசாகிட்டே போகலாம். ஆனா திரும்ப எதாவது பிரச்சனை பண்ணீங்கன்னா… இந்த முறை பொறுமையா இருக்க மாட்டேன். தொலைச்சிடுவேன் சொல்லிட்டேன்.”
“சம்பாதிக்க நான் வழி காட்டிட்டேன். இனி அதை வச்சு எப்படி முன்னேருவதுன்னு நீங்கதான் பார்த்துக்கணும்.” என்றான் தர்மா விளக்கமாக. தான் வேறு எதிலும் தலையிட மாட்டேன் என்பதையும் புரிய வைத்திருந்தான். ரங்கநாதனும் அங்கே தான் இருந்தார்.
“பணம் தான் பெரிசு. நான் மட்டும் நல்லா இருந்தா போதும்னு தர்மா நினைச்சிருந்தா…. உங்களுக்கு இந்த யோசனை சொல்லியிருக்க மாட்டான். இனியாவது அவனைப் புரிஞ்சு நடந்துக்கோங்க.” என்றார்.
“இப்ப தனியா பிஸ்னஸ் பண்ணி அதுல இருக்கக் கஷ்ட்ட நஷ்டம் எங்களுக்குப் புரியுது தாத்தா.” எனச் சூரியாவும்,
“தர்மா அண்ணா எங்க நல்லதுக்குதான் சொல்வார்னு புரிஞ்சிகிட்டோம்.” என வசீகரனும் சொல்ல, விஷால் மட்டும் அமைதியாக இருந்தான்.
“என்ன டா அன்னைக்கு அந்தக் குதி குதிச்ச… இப்ப ஒன்னும் சொல்ல மாட்டேங்கிற?” என ரங்கநாதன் கேட்க,
எங்கே தன்னைத் தனியாகத் தவிக்க விட்டு விடுவார்களோ என்ற பயம் விஷாலுக்கு இருந்தது. இப்போது அப்படியில்லை என்றானதும், அவனுக்குப் பேச்சே வரவில்லை.
“தேங்க் யு அண்ணா.” என்றவன், தர்மாவை அனைத்து அவன் கன்னத்தில் முத்தம் வேறு வைக்க…
“ஹே… என்ன பண்றீங்க?” என அதுவரை அமைதியாக இருந்த கீர்த்திச் சண்டைக்கு வந்தாள்.
“ப்ளீஸ் அண்ணி இன்னும் ஒரு தடவை.” என்றவன், வேண்டுமென்றே தர்மாவின் கன்னத்தில் அழுத்தமாக முத்தம் வைக்க… கீர்த்தி விஷாலை முறைக்க, சூரியாவும் வசீகரனும் அதைப் பார்த்து சிரித்தனர்.
“நீங்க என்னைக்காவது உங்க அண்ணாவை அடிக்கத்தான் போறீங்கன்னு நினைச்சேன். முத்தம் தானே கொடுக்கிறீங்க பரவாயில்லை…” என்றால் கீர்த்தி. தர்மா மனைவியைப் பார்த்துச் சிரித்தான்.
தான் அந்த அளவிற்குச் செல்வோம் என எதிர்பார்த்திருக்கிறார் தானே என நினைத்து வெட்கியவன்,
“சாரி அண்ணா, நான் முன்னாடி உங்களைப் பேசினது எல்லாம் தப்புதான்.” என்றான் விஷால்.
“பரவாயில்லை உன் வயசு அப்படி. ஆனா இனி பொறுப்பா இருக்கணும். இனி விளையாட்டுத் தனமா இருக்காத.” எனத் தர்மா சொல்ல… விஷால் சரியென்றான்.
மூவரும் இருந்து வெகு நேரம் அரட்டை அடித்து விட்டே சென்றனர். அவர்கள் சென்றதும், “நீ இப்படிச் செய்வேன்னு நான் நினைக்கலை.” என ரங்கநாதன் சொல்ல…
“இதுதான் நடக்கும்னு எனக்கு முன்னாடியே தெரியும் தாத்தா. இவர் தம்பிகளை விட்டுக் கொடுப்பாரா என்ன?” என்றால் கீர்த்தி. தர்மா மறுக்காமல் மனைவியைப் பார்த்துச் சிரித்தான்.
“அவங்க தனித்தனியா பிஸ்னஸ் பார்க்கும் போதுதான் அதோட கஷ்ட நஷ்டம் தெரியும். நான் சொன்னா எல்லாம் அவங்களுக்குப் புரிஞ்சிருக்காது. அதுதான் தனியா போய்ப் பார்க்கட்டும்னு விட்டேன்.”
“விஷால் முதலியே உணர்ந்திட்டான். ஆனா சூரியாவும் வசீகரனும் அவங்களா வர தான் வெயிட் பண்ணேன். இப்ப அவங்களும் வந்துட்டாங்க.”
“இப்பவும் வரவு செலவு எல்லாம் தனித்தான். ஆர். எஸ்ங்கிற ஒரே கம்பெனிக்கு கீழே… அதே சமயம் தனித்தனியா தான் பிஸ்னஸ் பண்ணப் போறோம்.” என்றான் தர்மா விளக்கமாக.
அண்ணன் தம்பிகள் ஒற்றுமையாகச் செய்தால் எல்லோருக்கும் சந்தோஷம் தான். ஆனால் இந்தச் சுனிதா வாயும், சுபா வாயும் சும்மா இருக்காதே… அவர்களுக்குத் திருப்தி என்பது வரவே வராது.
“நீங்க அண்ணன் தம்பிங்க பிஸ்னஸ்ல என்னவோ பண்ணிட்டு போங்க. ஆனா இனியும் இந்தச் சுனிதா பேசுறது, சுபா பேசுறது எல்லாம் கேட்டுட்டு இருக்க முடியாது. எதுனாலும் வீட்டுக்கு வெளிய வச்சுக்கோ. நல்ல நாள் கிழமைனா பார்த்துக்கலாம், பேசிக்கலாம் போதும்.” என்றார் நாயகி.