பிள்ளைகள் வெளியே ஹாலில் இருக்க… கீர்த்திச் சிறிய விளக்கை மட்டும் போட்டு விட்டு படுத்திருந்தாள். அவளது வலது கைக் கொண்டு முகத்தை மறைத்தபடி படுத்திருந்தாள்.

அவள் அருகில் கட்டிலில் யாரோ உட்காருவது போல இருக்க…. வலிய கரம் ஒன்று அவள் கைகளை எடுக்க முயல… அவளுக்கா அவள் கணவனின் ஸ்பரிசம் தெரியாது.

அவன் அவள் கண்ணீரைக் காணக் கூடாது என அவள் கையை மேலும் அழுத்தமாக வைத்துகொள்ள…

“கீர்த்தி…” எனக் கணவன் அழைக்க… கண்ணீரை மறைக்க… வேகமாக எழுந்து அவள் தோளில் முகம் புதைத்தாள்.

அவர் வர மாட்டான் என்றே நினைத்திருந்தாள்… அவன் வந்ததும் அவ்வளவு மகிழ்ச்சி… மனைவியின் முகத்தைத் தர்மா நிமிர்த்திப் பார்க்க… இதழ்களில் புன்னகை இருந்தாலும் கண்களில் கண்ணீரும் இருக்க… 

“என்ன கீர்த்தி?” என்றவன் மனைவியை ஆழமாகப் பார்க்க… 

“ஒன்னும் இல்லை…” என்றாள். 

“நான் வரலைனா…” எனத் தர்மா கேட்க, ஆமாம் என்றவள், மீண்டும் அவனது தோளில் முகம் புதைக்க… 

அவனும் முதலில் வர வேண்டாம், இப்போதுதானே அவள் அம்மா வீடு சென்றிருக்கிறாள் என நினைத்தான். ஆனால் மாலை நேரம் செல்ல செல்ல… மறுநாள் ஞாயிறுகிழமை வேறு…மனதில் மனைவியையும், குழந்தைகளையும் காணும் ஆவல் அதிகரிக்க… அதற்கு மேல் முடியாமல் வீட்டிற்குச் சென்றவன், முகம் கைகால் கழுவி உடை மாற்றிக் கிளம்பி விட்டான். 

“ரெண்டு நாள் இருந்திட்டு வா…. நாங்க இருந்துப்போம்.” என ஜமுனாவும் நாயகியும் சொலித்தான் அனுப்பினர். 

அவன் திடிரென்று வந்து நின்றதும், அப்பா என அபி அவனிடம் ஓட…. கீர்த்தியின் பெற்றோர், “வாங்க…” என வரவேற்க… 

அவர்களைப் பார்த்து புன்னகைத்தவன், மகளை தூக்கி முத்தமிட்டான். பிறகு அங்கே திவானில் படுத்திருந்த மகன்களை ஆர்வமாக பார்த்தவன், அடுத்த நொடியே மனைவி எங்கே என்பது போலப் பார்க்க… அவள் அறையில் இருப்பதாக சொல்ல… உணவு உண்ண அழைத்த மாமனாரிடம், “கீர்த்தியை பார்த்திட்டு வரேன்.” என மனைவியைக் காண வந்திருந்தான்.  

“நீ வான்னு சொன்னா வரப் போறேன். இதுக்கெல்லாம் அழுவாங்களா?” என்றவன், மனைவியின் கண்ணீரைத் துடைத்து, அவள் நெற்றியில் முத்தமிட்டு, ”வா உங்க அப்பா சாப்பிடாம வெயிட் பண்றார்.” என, கீர்த்தி எழுந்து நைட்டிக்கு மேலே அங்கி போல அணிந்து கொண்டு வந்தாள். 

திடிரென்று மருமகன் வந்து நின்றதும், நைட்டியில் இருந்த நவீனாவும், புடவை மாற்றிக் கொண்டு வந்து உணவு பரிமாறியவர், மகள் முகத்தில் இருந்த மகிழ்ச்சியைப் பார்த்து கிண்டலாகச் சிரித்துக் கொண்டார். 

தர்மாவும் சோம சேகரும் பேசிக்கொண்டே உணவருந்த, அவர்கள் பேச்சைக் கவனித்தபடி வினோத்தும் உண்ண, அபி அவள் அப்பாவிற்கு அருகே உட்கார்ந்து சமத்தாக உண்டாள். 

உண்டு முடித்துக் கீர்த்திக் குழந்தைகளைக் கவனிக்க, மாமனாரும் மருமகனும் வெளியே தோட்டத்தில் உட்கார்ந்து பேசினர். பிறகு அங்கேயே உலவியபடி பேசினர். படுக்கும் நேரம் தான் இருவரும் உள்ளே வந்தனர். 

அறைக்கு வந்த கணவரிடம், “அப்படி என்ன மாமனாரும் மருமகனும் பேசினீங்க?” என நவீனா கேட்க, 

“இப்ப கொஞ்ச நாளா ப்ரெஷர் இருக்குன்னு சொன்னேன். அதுக்கு அவர் சில விஷயம் செஞ்சு பார்த்திட்டு, அப்படியும் குறையலைனா மாத்திரை எடுங்கன்னு சொன்னார்.” 

“நான் நைட் இனி எட்டு மணிக்கு முன்னாடியே சாப்பிடுறேன். அப்புறம் நீ நைட்டுக்கு இந்தச் சிறுதானியத்துல எதாவது டிபன் ரெடி பண்ணிடு…..” எனச் சொல்ல… 

கையைக் கட்டியபடி அவரைப் பார்த்த நவீனா, “இதுக்கு முன்னாடியே இதெல்லாம் நான் உங்களுக்குச் சொன்னது இல்லை… நீங்க எப்பவாவது என் பேச்சு கேட்டிருக்கீங்களா? இப்ப உங்க மாப்பிள்ளை சொன்னதும் கேட்கிறீங்க.” எனச் சொல்ல, 

“அது அவர் சொன்னா கேட்கணும் போல இருக்கு. நிஜமாவே அவர்கிட்ட எதோ இருக்கு.” என்ற கணவரை, “பார்ப்போம் உங்க மாப்பிள்ளை சொன்னதையாவது கேட்கிறீங்களான்னு.” எனச் சொல்லிவிட்டு நவீனா உடைமாற்ற சென்றார். 

உண்மையில் நவீனா உடல்நலத்தில் மிகுந்த அக்கறை உள்ளவர். அவர் தர்மாவின் மாமியார் போல அல்ல அக்கா போல… இளமையாகத்தான் இருப்பார். 

நவீனா அபியை தங்கள் அறையில் படுக்க வைத்துக்கொள்ள… கீர்த்தியும் தர்மாவும் மகன்களுடன் தங்கள் அறைக்குச் சென்றனர். கீர்த்தி அவள் அம்மா வீடு வரும் போதே… கணவன் வந்து தங்கும் போது வேண்டும் என்று அவனுக்கும் மாற்று உடைகள் எடுத்து வந்திருந்தாள். 

தர்மா உடைமாற்றி வந்தவன், மகன்களைக் கட்டிலில் போட்டு, பக்கத்தில் படுக்க… கீர்த்திக் கணவனுக்கு அந்தப் பக்கம் படுத்துக்கொண்டாள். 

இப்போது பையன்கள் இருவருமே மூன்று கிலோ எடையில்… கொஞ்சம் சதை வைத்து ஒரே மாதிரி இருந்தனர். இவர்களுக்குப் பார்த்து பழகியதால் வேறுபாடு தெரியும். ஆனால் வெளி ஆட்கள் பார்த்தால் கண்டுபிடிக்க முடியாது. 

“என்ன செய்யுறீங்க ரெண்டு பேரும். அம்மம்மா வீட்டுக்கு வந்ததும் அப்பாவை மறந்துட்டீங்களா…” எனத் தர்மா மகன்களிடம் பேச்சுக் கொடுக்க, அவர்கள் இருவரும் மேலே இருந்த விளக்கைப் பார்த்து கையைக் காலைக் அசைத்துக் கொண்டிருந்தனர். 

“என் பட்டுச் செல்லம் ரெண்டு பேரும்.” என மகன்களுக்குத் தர்மா முத்தம் வைக்க…. 

“நானும் இங்க தான் இருக்கேன்.” எனக் கீர்த்திச் சொல்ல… 

“உன்னைக் கொஞ்சினதுனாலதான இவங்க வந்தாங்க. இனியெல்லாம் உன்னைக் கொஞ்ச வேண்டாம் போதும்.” என்றான். 

“ஓ அப்படியா…. சரி நான் தூங்கிறேன். பாட்டில்ல பால் இருக்கு உங்க பசங்க அழுதா கொடுங்க.” என்றவள், கண்ணை மூடிக்கொண்டாள். 

“ஹே கீர்த்தி என்னோட பேசிட்டு இருக்க மாட்டியா?” 

“நீங்க இருக்கீங்க இல்ல.. உங்க பசங்களைப் பார்த்துக்கோங்க. நான் தூங்கணும்.” என்றால் கண்ணைத் திறக்காமல்…. 

“ஓ… இதுக்குதான் நான் வரலைன்னு அழுதியா?” எனத் தர்மா கேட்டதும் கீர்த்திக்குச் சிரிப்பு வந்துவிட்டது. 

கணவனும் மனைவியும் நள்ளிரவு வரை பேசிக் கொண்டிருந்தனர். மகன்கள் இருவரும் எப்போதோ உறங்கி இருந்தனர். 

அதிகாலையே எழுந்த தர்மா தோட்டத்திற்குச் சென்று யோகா செய்ய…. மகளுக்குப் பால் எடுத்து வந்த நவீனா சென்று சோமசேகரிடம் சொல்ல…. அவரும் தோட்டத்திற்குச் சென்றார். 

தர்மா அவரையும் யோகா செய்ய உற்சாகப் படுத்தியவன், சில நாட்கள் அவருக்குப் பயிற்சிக்கு ஆள் ஏற்பாடு செய்வதாகவும் சொன்னான். 

சம்பாதிக்கும் ஆர்வத்தில் சோமசேகர் உடல் நலத்தில் அக்கறை எடுத்துக்கொள்ளவில்லை. இப்போது தர்மா ஊக்கப்படுத்தவும் அவருக்கும் இனியாவது செய்வோம் எனத் தோன்றியது. இப்போது மகனும் பிஸ்னஸ் பார்க்க வந்து விட… முன்பு போல அவ்வளவு டென்ஷன் இல்லை. 

காலை உணவு முடிந்ததும், விவசாயம் காப்போம் என்ற தலைப்பில் பேச ஒரு விழா கமிட்டியினர் அழைத்து இருக்க, அதற்குச் சென்றவன் மதியம் தான் வீடு திரும்பினான். 

அந்த முறை மட்டும் அல்ல… அவன் வரும் ஒவ்வொரு முறையும், வீட்டினரிடம் மட்டும் அல்லாது, வீட்டில் வேலை செய்யும் சமையல்காரர் முதல் வாயில் காவலன் வரை எல்லோரிடமும் ஒரே மாதிரியே அக்கறை காட்டி பழகுவது பார்த்து சோமசேகருக்கு ஆச்சர்யமாக இருக்கும். 

அலட்டல் இல்லாமல் எல்லோரிடமும் அக்கறை காட்டி பழகுவது. நிறைய விஷயங்கள் தெரிந்து வைத்திருந்தாலும், மற்றவர்களைப் பேசவிட்டுப் பொறுமையாகக் கேட்பது என அவனின் குணநலன்கள் அவரைப் பெரிதும் கவர்ந்திருந்தது. 

பணத்தைத் தாண்டியும் நிறைய விஷயங்கள் இருக்கிறது. சின்னச் சின்ன விஷயத்தில் கூடச் சந்தோசம் இருக்கிறது எனச் சோமசேகருக்குத் தர்மா புரிய வைத்திருந்தான். 

மருமகன் மீது பெரும் மதிப்பு உண்டாகி இருந்தது. அதனால் தர்மா வந்தால்… அப்படிக் கவனிப்பார். 

“நான் அம்மாதான் அவரோட ரொம்ப க்ளோஸ் ஆவாங்கன்னு நினைச்சேன். நீங்க எப்படிப் பா இப்படி ஆனீங்க?” எனக் கீர்த்தி ஆச்சர்யப்பட…. 

“அதை விடு கீர்த்தி. உனக்கு எப்படி அப்பவே அவர் மேல அவ்வளவு நம்பிக்கை. நீ ரொம்பச் சின்னப் பொண்ணு தானே அப்போ…” எனச் சோமசேகர் வியக்க…கீர்த்திக்குப் பெருமை தாங்கவில்லை. 

“அதெல்லாம் அப்படித்தான்…” என்றால் கெத்தாக. 

“நான் ஒன்னு கேட்கணும். அது ஏன் இப்ப பிறந்த குழந்தைகளைக் கூட அவ்வளவு ஒழுக்கமா வளர்க்கிறார்… உன்னை மட்டும் ஏன் எதுவுமே கண்டிக்க மாட்டேங்கிறார்? உன்னை ப்ரீயா அவுத்து விட்டிருக்கார்.” என நவீனா சந்தேகம் கேட்க, 

“நான் என்ன கழுதையா அவுத்து விட….இருங்க அவர் வரட்டும் சொல்றேன்.” கீர்த்தி முறைக்க… 

“சரி காரணம் மட்டும் கேட்டு சொல்லு.” என நவீனாவும் விடுவதாக இல்லை. 

“எனக்கே தெரியும்.” என்றவள், “உங்க வீட்ல செல்லமா வளர்ந்திட்டு, கல்யாணம் ஆனதும் நான் எனக்கு ஏத்த மாதிரி மாறுன்னு சொல்றது நியாயம் இல்லைன்னு சொல்லுவார்.” என்றாள். 

காரணம் தெரிந்தவுடன் பெற்றவர்களுக்கு மருமகன் மீது இன்னும் மரியாதைக் கூடியது. 

அந்த வாரம் வந்த தர்மாவிடம் கீர்த்தி, “உன்னை மட்டும் ஏன் உன் வீட்டுக்காரர் இஷ்டத்துக்கு அவுத்து விட்டிருக்காருன்னு உங்க மாமியார் கேட்கிறாங்க. நான் என்ன கழுதையா அவுத்து விட…” என அவள் நியாயம் கேட்க, கேட்ட தர்மாவுக்குச் சிரிப்பை அடக்க முடியவில்லை. 

“என்ன உங்க மாமியார் சொன்னதை ரசிக்கிறீங்களா?” எனச் சண்டைக்கு வந்த மனைவியை அணைத்தவன், 

“அப்படியெல்லாம் இல்லை மா…” என்றாலும் அவனால் சிரிப்பை அடக்க முடியவில்லை. அவன் நினைத்து நினைத்து சிரிக்க… “ச்ச நாமே இவர்கிட்ட சொல்லி டேமேஜ் பண்ணிகிட்டோம்.” எனக் கீர்த்தி நொந்து போனாள்.