கொஞ்சும் ஏழிசை நீ – 25
“ஒன் டைம் மனுக்கு போன் பண்ணி பேசிடு சித்து.. ஏதாவது நினைச்சுக்க போகுது..” என்று பாஸ்கர் இரண்டொரு முறை சொல்லவும் தான் அவளுக்கு அழைத்தான்.
அவன் அழைத்த நேரம், அவள் தனுஜாவோடும், தனுஜாவின் நட்புக்களோடும் இருக்க, எடுத்து பேசிட முடியவில்லை.
‘கால் யூ லேட்டர்..’ என்று மட்டும் மெசேஜ் தட்டிவிட்டாள்..
சித்திரைச் செல்வனுக்கு புரிந்தது, அவளுக்கு ஏதேனும் வேலைகள் இருக்குமென்று. ஆக திரும்ப அழைக்காதவன், அலைபேசியை மெத்தைமேல் வைத்துவிட்டு, அங்கிருந்த அறையின் பால்கனியில் சென்று நின்றான்.
சரியான குளிர் தான்..!!
உடலை சில்லிட வைத்தது… கைகளை பரபரவென்று தேய்த்துக்கொண்டவனின் பார்வை, அப்படியே அந்த இரவு நேர பனி சூழலை சுற்றி வர, கீழே கார்டனில் பார்ட்டி இன்னமும் முடிந்த பாடில்லை.
ஆண்கள், பெண்கள் என்று கலந்து கட்டி இருந்தனர். அனைவரின் கைகளிலும் மது குவளைகள், ஆடைகள் ஒவ்வொன்றும் ஒரு விதம்.. பேச்சு.. சிரிப்பு.. கும்மாளம்.. ஆட்டம் என்று அந்த இடமே அதிர்ந்துகொண்டு இருந்தது. பாட்டின் சத்தம் வேறு.
வயது வித்தியாசமில்லாது ஆடிக்கொண்டு இருந்தனர்.
கண்களை சுறுக்கி, அங்கேயே பார்வையை நிலைக்க விட்டிருந்தான். மேல்தட்டில் இதெல்லாம் சகஜம் தான்.. ஆனால் அவன் பழகி வந்த, வளர்ந்து வந்த இடத்தில் இவை எல்லாம் சினிமாவில் மட்டுமே பார்ப்பவை.
மேலும் சில நிமிடங்கள் செல்ல, அங்கே ஒரு காரில் வந்து மானசாவும் தனுஜாவும் உடன் ஷில்பாவும் வந்து இறங்குவது தெரிந்தது.
‘இவ எதுக்கு இப்போ இங்க..’ என்று பார்த்துக்கொண்டு இருக்கையிலேயே, மற்றொரு கார் வர, அதில் இன்னும் சில இளைஞர் இளைஞிகள் வந்திருக்க, தனுஜா அவர்களோடு இணைந்துகொள்ள, மானசாவும், ஷில்பாவும் மட்டும் பங்களாவினுள் வருவது தெரிந்தது.
எப்படியும் இங்கே அறைக்கு வருவாள் என்பதால், சித்திரைச் செல்வன், பால்கனி கதவினை சாத்திவிட்டு உள்ளே வந்துவிட, பாஸ்கர், அலைபேசியில் எதனையோ பார்த்துக்கொண்டு இருக்க, சில நொடிகளில் கதவு தட்டும் சத்தம் கேட்டது.
பாஸ்கர் இப்போது யாரோ என்று பார்க்க, “மனு அண்ட் ஷில்பாடா..” என்று சொல்லியபடி கதவினை திறக்க,
“ஹாய்…” என்று சொல்லியபடி தான் வந்தாள் மனு..
ஷில்பாவும் சிரித்தபடி வர “வாங்க வாங்க..” என்று பாஸ்கர் சொல்ல, சித்து அமைதியாகவே தான் நின்றான்.
“நீங்க கால் பண்ணப்போ எடுக்க முடியலை..” என்ற மானசாவினுள் ஒரு தவிப்பு இருக்க, அது அவன் முகம் பார்த்த அவளின் பார்வையிலும் வெளிப்பட்டது.
“இட்ஸ் ஓகே..” என்றவன்,
“என்ன இப்போ இந்த டைம்ல இங்க..” என,
“இங்க தனு ஓட பிரண்ட்ஸ் எல்லாம் பார்ட்டி பண்ணனும்னு ஒரே சண்டை.. சோ இங்க கூட்டிட்டு வந்தாச்சு.. தென் நாளைக்கு இங்க தானே பாங்சன்.. சோ இப்போவே வந்துட்டா பெட்டர்னு தோணிச்சு அதான்..” என்றவள்,
“எனக்கும் ஷில்பாக்கும் பக்கத்து ரூம் தான்..” என,
“ஓ..!!” என்றதோடு நிறுத்திக்கொண்டான் சித்திரைச் செல்வன்.
ஷில்பா எதையோ பேசிக்கொண்டு இருக்க, மானசா வந்ததை கண்ட இரு வேலையாட்கள் “மேம்..” என்று வந்து திறந்திருந்த கதவினைத் தட்டி நிற்க,
“எஸ்…” என்று சொல்லி அவர்களோடு பேசிய மானசாவை தான் பார்த்துக்கொண்டு இருந்தான் சித்திரைச் செல்வன்.
அவள் வழக்கம் போல்தான் பேசினாள். ஆனால் இந்த வேலையாட்கள் புதிது.. பழக்கமில்லாதவர்கள், அதாவது இந்த விசேசத்திற்கு என்று வேலைக்கு வந்திருந்தவர்கள், ஆக புதியவர்களிடம் எப்படி பேசிடவேண்டுமோ அப்படியொரு தோரணையில் தான் மானசா பேச, இவை எல்லாமே சித்துவின் கண்களில் பட்டுக்கொண்டும் கருத்தினில் பதிந்துக்கொண்டும் தான் இருந்தது.
அங்கே அவனின் ஊரில், அவனின் அம்மாவோடு சேர்ந்து வெறும் காலில் தோட்டத்திலும், வயலிலும் நடந்த மானசாவையும், இப்போது ஹை ஹீல்ஸ் அணிந்து, மிடுக்காய் பணியாட்களை ஏவும் மானசாவையும் அவன் மனம் ஒப்பிட்டுப் பார்க்க, அவளின் இயல்புகளை தான் மாற்றுகிறோமோ என்ற நினைப்பு தான் அவனுள்.
அவள் இங்கேதான் பிறந்தாள், இப்படித்தான் வளர்ந்தாள்.. அப்படியிருக்க காதல் என்று சொல்லி அவளின் கரம் பிடித்து, அங்கே குடியமர்த்தி, அவளினை ஒரு சிறு வட்டத்திற்குள் அடைக்கப்போகிறாயா சித்து??!!
இதுவே அவனின் இதயம் கேட்ட கேள்வி…?
இக்கேள்வி மறுநாள் அவன் கிளம்பும் நேரத்திலும் கூட அவனுள் ஒலித்துக்கொண்டு தான் இருந்தது. மறுநாள் காலையில் இருந்தே விழா தான். மாலை வரைக்கும் என்று தான் சொன்னாள் மானசா.
ஆனால் இவர்கள் மதியம் மேல் கிளம்புவதாக இருக்க,
செந்தமிழ் வந்து “ஈவ்னிங் பங்சன் முடியவுமே கிளம்புங்க நம்ம கார்லயே போலாம்.. மனு ஆல்சோ கிளம்புறா..” என்று சொல்லிவிட்டு செல்ல,
“நீயுமா??!!” என்று பார்த்தான் சித்து.
“ம்ம் நைட் தனு ராபி எல்லாம் அவங்க பிரண்ட்ஸ் கூட ட்ரிப் போறாங்க.. சோ நான் அப்படியே உங்களோட வர்றேனே..” என,
ஷில்பாவோ “சூப்பர் மனு..” என்று சொல்லிக்கொண்டிருக்க,
“ஹே டார்லிங்…” என்று சத்தமாய் கத்திக்கொண்டு மனுவின் இரு பக்க தோள்களையும் பற்றிக்கொண்டு வந்து நின்றான் ஒருவன்..
அவளே ஒருநொடி அதிர்ந்து விழித்து பின் திரும்பிப் பார்த்து “ஹேய்…. டேவிட்..” என்று சந்தோசமாய் ஆர்பரிக்க,
“பார்த்து எத்தன நாள் ஆச்சு.. எப்படி இருக்க பேபி…” என்று அவளை இறுக அணைத்து விடுவிக்க,
“எஸ்.. எஸ்.. இந்தியா எல்லாம் இப்போதான் உன் கண்ணுக்குத் தெரியுதா??” என்று அவனை ஒட்டி நின்றே பேச, சித்துவின் கண்களோ நொடியில் ஒரு அதிர்வினை வெளிப்படுத்தி பின் இயல்பில் இருக்க,
“ஹேய்… கம் கம் டான்ஸ் ப்ளோர் போகலாம்..” என்று டேவிட் அழைக்கவும்,
“நீ போ.. ஐ வில் ஜாயின் லேட்டர்…” என்று மானசா சொல்ல,
“யா வா வா..” என்றவன்
“ஆனா சும்மா சொல்லக் கூடாது இப்போ செமையா ஆகிட்ட..” என்றுவிட்டு போக, அதற்கும் மானசா சிரிக்கத்தான் செய்தாள்.
சித்திரைச் செல்வனுக்கு, அப்போது தோன்றியது எல்லாம் ஒன்றே ஒன்றுதான் ‘இப்படி ஒருவன் அணைத்து விடுவிப்பதை அவனின் அம்மா பார்த்திருக்க வேண்டும்…’ என்பது மட்டுமே..
ஜன்மத்திலும் மானசாவை மருமகளாய் கொண்டு வர சம்மதிக்க மாட்டார்.
அவர் சம்மதிப்பது என்ன, இதுநாள் வரைக்கும் அவனே தேவையில்லாது மானசாவை தொட்டு பேசியது இல்லையே. அன்றைய முதல் நாள் அணைப்புத் தவிர, இந்த நிமிடம் வரைக்கும் கூட தனுஜா மீது சித்து உரிமை நாட்டியது இல்லை.
“என்ன பாஸ்கிண்ணா எல்லாம் இவ்வளோ சைலண்ட்டா இருக்கீங்க..??” என்ற மானசா,
“வாங்க நம்ம எல்லாம் டான்ஸ் பண்ணலாம்..” என்று அழைத்தாள் மூவரையும்.
அவளுக்கு சித்திரைச் செல்வனோடு சேர்ந்து சின்னதாக, அல்லது அங்கே சும்மாவேனும் நிற்க ஆசைகொள்ள, “வாங்களேன்..” என்றாள் அவனிடம் ஆவலாய்.
இங்கே இந்த நேரத்தில் ஆடினாலோ, இல்லை ஒட்டிக்கொண்டு திறந்தாலோ யாரும் எதுவும் சொல்லிட போவதில்லை. நினைக்கவும் போறதில்லை.. இதனை மானசா தவற விட மனதில்லாது, அவனை அழைக்க, அவன் போவானா என்ன..
“நீ போ மனு..” என்றான்.
“நானா.. நான் மட்டும் போய் என்ன செய்ய?? நீங்களும் வாங்க..” என்று அவனின் கரம் பற்ற,
“ம்ம்ச் மனு…” என்று கைகளை உதறி விட்டான்.
அதிலே லேசாய் திகைத்தவள், அவன் முகம் காண “உனக்கு வேணும்னா நீ போயி ஆடு.. என்னை ஏன் கூப்பிடுற..” என்று சற்று முகத்தை சுருக்கிக் கேட்க,
“ஷ் என்ன டா..” என்று பாஸ்கி அவனை அதட்ட,
“நீங்களும் போறதுன்னா போங்க..” என்றான் குரலை இறக்கி.
“நீ போ மனு.. போ.. போயி நீ என்ஜாய் பண்ணு.. கிளம்புறப்போ நம்ம எல்லாம் சேர்ந்து போலாம்…” என்று பாஸ்கர் அவளை அனுப்ப, அப்போதும் அவள் சித்துவின் முகம் தான் பார்த்து நின்றாள்.
“நீ போய் என்ஜாய் பண்ணு..” என்றான் இறுகிய குரலில்.
மானசா பதில் சொல்லும் முன்னமே “ஹேய் நீ இன்னும் என்ன பண்ற..” என்று டேவிட் திரும்ப வந்து அவளின் கை பற்றி அழைக்க, மானசாவிற்கு போகும் எண்ணமே வரவில்லை.
மாறாக சித்திரைச் செல்வன், அவளின் பிடியினை உதறிவிட்டது தான் மனதில் நின்றது.
“கம் பேபி…” என்று அவளை விடாபிடியாய் டேவிட் அழைத்துச் செல்ல, அவளோ இவர்களை திரும்பி திரும்பி பார்த்தபடி தான் சென்றாள்.
அவள் செல்லவுமே “நீங்க இருங்க நான் ரூம்ல இருக்கேன்..” என்று சித்து நகரப் பார்க்க,
“நீ ரொம்ப பண்ற சித்து..” என்று பாஸ்கி கடிய, ஷில்பா தான் இதில் சொல்ல என்ன இருக்கிறது என்பதனை போல் பார்த்தாள்.
“ம்ம்ச் இல்லடா நான் இருந்தா மனு திரும்ப இங்கதான் வருவா… அவ என்ஜாய் பண்ணட்டும்..” என்று சித்து சொல்ல,
“நீ இல்லன்னாலும், அவ வந்து கேட்பா.. பின்ன ரூம் வந்து பார்ப்பா…” என, பேசாமல் அங்கே இருந்த ஓர் இருக்கையில் அமர்ந்துகொண்டான் சித்திரைச் செல்வன்.
ஆட்டம் பாட்டம் ஒரு பக்கம்.. அரட்டை ஒரு பக்கம்.. விருந்து ஒரு பக்கம் என்று கோலாகலமாய் தான் இருந்தது. மானசாவின் பார்வை அவ்வப்போது இவர்களை தொட்டுக்கொண்டு தான் இருந்தது.
தனுஜாவும் ராபர்ட்டும், தங்களோடு வந்து புகைப்படங்கள் எடுப்பவர்களுக்கு போஸ் கொடுத்துக்கொண்டு இருக்க, சில நிமிடங்களில் “வாங்க நம்ம போட்டோஸ் எடுக்கலாம்..” என்று வந்து நின்றாள்.
இப்போது மூவருமே “உன்னை என்ன சொன்னோம்..” என்று பார்க்க,
“அட அப்போ போட்டோ எடுக்கவேணாமா..??” என்றாள் சற்று குரலை உயர்த்தி.
அவளுள் இத்தனை நேரம் அடங்கியிருந்த அந்த சிலுப்பல் இப்போது தலை தூக்க ‘போச்சு.. இனி இவ சொல்ற பேச்சு கேட்க மாட்டா..’ என்று எண்ணியவன்,
“சரி வாங்க போகலாம்..” என்று எழுந்துவிட்டான் சித்து.
அவன் எழவுமே மானசாவின் முகத்தில் ‘அப்பாடி..’ என்ற ஒரு நிம்மதி பாவனை வந்து கண்களில் ஒரு மிதப்பு கூட கூடியது போல் தான் இருந்தது..
தனுஜாவின் அருகே, மானசா நிற்க, அவளின் அருகே பிடிவாதமாய் சித்துவை நிற்க வைத்தாள், அவன் வேண்டாம் என்று முணுமுணுக்க “பேசாம இருங்க.. இல்ல என்ன செய்வேன் தெரியாது..” என்று மிரட்டல் வேறு.
அந்தப்பக்கம் ராபர்ட் அருகே பாஸ்கரும் அவனின் அருகே ஷில்பாவும் நிற்க, அழகாய் புகைப்படமானது இவர்களின் உருவம்.
“இந்த பிக் நம்ம பியூச்சர்ல பாக்குறப்போ செமையா இருக்கும்ல..” என்று அவளே சொல்லியும் கொண்டாள்.
அவளின் எதிர்கால கனவுகள் எல்லாம் அவள் பேசினாலே சித்துவிற்கு நா வறண்டு விடும்.. இப்போதோ கேட்கவே வேண்டாம்.
புகைப்படம் எடுத்து முடிக்கவும் “ஓகே மனு.. சாப்பிட்டு ரூம்ல இருக்கோம்..” என்று சித்திரைச் செல்வன் சொல்ல,
“ரூம்லயா?? அங்க சும்மா இருக்க இங்க இருக்கலாமே..” என்றாள்.
“இருக்கட்டும்.. நீ போய் பாரு.. எங்களையே சுத்தி சுத்தி வராத..” என்று சித்து சொல்ல,
“ம்ம்ம்..” என்றவள், பாவமாய் பாஸ்கரையும், ஷில்பாவையும் பார்க்க,
தன்னோடு இவள் தன் வாழ்வை இணைத்துக்கொண்டால், காலம் முழுமைக்கும் மானசா இப்படி உணர்வுகளின் பிடியில் தான் அல்லாட வேண்டும் என்று எண்ணினான் சித்திரைச் செல்வன்.
“நீ போ மனு.. நத்திங் இஸ்யூ.. நாங்க இருந்துப்போம்..” என்று ஷில்பா சொல்ல,
“சரி அப்போ நானும் உங்களோட சாப்பிடுறேன்..” என்றாள் மானசா.
அவ்வளோதான் சித்திரைச் செல்வனுக்கு பொறுமை போய்விட “மானசா.. நடக்குறது உன்னோட அக்காவோட எங்கேஜ்மென்ட்.. மைன்ட் இட்… சும்மா எங்களையே சுத்தி வந்து நீ என்ன செய்ய போற.. எங்களோட தானே வரப் போற.. சொல்றத புரிஞ்சு நடந்துக்க பாரு..” என்று கடிய, உதட்டினை பிதுக்கி நின்றாள் மானசா.
“டோன்ட் யூ ஹேவ் எனி சென்ஸ்..” என்று சித்து குரலை உயர்த்த,
“டேய்.. விடு டா..” என்ற பாஸ்கர், “மனு.. உனக்கு நாங்க சொல்ல வேண்டியது இல்லை.. புரிஞ்சுக்கோ..” என, அமைதியாக சென்றுவிட்டாள் மானசா.
ஒருவழியாய் இவர்கள் உண்டுவிட்டு, அறைக்கு வர, அடுத்து மானசா வந்து சேர்க்கையில் இரண்டு மணி நேரம் கடந்திருந்தது. அதற்குள் ஷில்பா ஒரு தூக்கம் தூங்கி எழுந்துவிட்டாள்.
மானசா வந்ததும் “எப்போ கிளம்ப??” என்று கேட்க,
“அதை நீ தான் சொல்லணும்..” என்றாள் ஷில்பா..
“டைம் இப்போ த்ரீ தானே.. ஒரு பைவ் போல கிளம்பலாமா.. அவுட்டிங் போலாமா ??” என்று கேட்க,
“ஹேய்.. நீ ரெஸ்ட் எடு..” என,
“அட.. ஊட்டி வந்துட்டு சைட் சீயிங் போகாம இருக்கலாமா..” என்றவள், ஆண்களையும் அழைக்க, அவர்களும் “நீ ரெஸ்ட் எடு..” என்றுதான் சொன்னார்கள்.
“ம்ம்ச் அதெல்லாம் கார்ல தூங்கிக்கலாம்.. சும்மா ஒரு வாக் போலாமே..” என, அவர்களாலும் மறுக்க முடியவில்லை.
“எங்க எஸ்டேட் சைட் வாக் போலாம்.. செமையா இருக்கும்.. இப்போ கிளைமேட் கூட க்ளவ்டியா இருக்கே..” என்றவள், வேக வேகமாய் உடைகளை மாற்றி, அலங்காரம் மாற்றி, வழக்கமான ஒரு பேண்ட் அண்ட் டாப்பிற்கு மாறியவள், இவர்களோடு தொற்றிக்கொள்ள, இனிமையாகவே தான் இருந்தது இவர்களின் நடை பொழுது.
இயற்கை எழில் சூழ் பகுதியல்லவா, அனைவர்க்கும் மனதிற்கு ஒரு அமைதி கொடுக்க, மானசாவே சித்துவின் கரத்தினை இப்போது பற்றிக்கொள்ள “யாரும் பார்க்க போறாங்க மனு..” என்றான்.
“பார்த்தா என்ன?? எங்க அக்கால்லாம் ராபியோட எவ்வளோ சுத்திருக்கா தெரியுமா..”
“அவங்க வேற நம்ம வேற…” என்றான் பட்டென்று.
“அதெப்படி???!!!”
“அப்படிதான்…” என்றவன் முகம் மாறவும், “ஓகே ஓகே நான் எதுவும் சொல்லலை.. அட்லீஸ்ட் நம்ம தனியா பிக்ஸாவது எடுக்கலாம்..” என்றவள், ஆசையாய் அவனோடு நின்று புகைப்படம் எடுத்துக்கொண்டாள்.
ஒரு அரைமணி நேர நடை, பின் “எங்க பேக்டரி போலாமா…” என்று கேட்க,
“நீ சும்மாவே இருக்க மாட்டியா??” என்றான் சித்து பல்லை கடித்து.
“இங்க வந்துட்டு இதெல்லாம் உங்களுக்கு காட்டலைன்னா எனக்கு கஷ்டமா இருக்காதா..??”
“இதுல கஷ்டப்பட என்ன இருக்கு??”
“எனக்கு இருக்கும்…” என்றவள், சற்று தள்ளி முன்னே நடந்து கொண்டு இருந்த பாஸ்கரை அழைத்து கேட்க, அதற்கும் தள்ளி நின்று செல்பி எடுத்துக்கொண்டு இருந்த ஷில்பாவையும் கேட்க, அவர்களோ போகலாமே என்று தான் சொன்னார்கள்.
“நீங்க மட்டும் ஏன் தான் இப்படி இருக்கீங்க சித்து சர்..” என்றவள், “ப்பா உங்களோட எப்படித்தான் லைப் லாங் ட்ராவல் பண்ண போறேனோ தெரியலை..” என்று அவனிடம் செல்லமாய் கடிந்தபடி இவர்களை அழைத்துச் செல்ல, அந்த வார்த்தைகளோ அவனுக்கு அப்படியே ஆழப் பதிந்தது..