NNVN- EPILOGUE

அன்று ஞாயிற்றுக்கிழமை. ஆறு வயது அர்ஜுனும் இரண்டு வயது அனன்யாவும் அவர்களின் தந்தை நந்தாவுடன் விளையாடிக் கொண்டிருக்க, அவர்களின் தாய் காவ்யா இன்னும் உறக்கத்தில்தான் இருந்தாள்.

அனன்யா இரவில் சரியாக தூங்காமல் சிணுங்கிக் கொண்டே இருக்க, காவ்யா இடையிடையே எழுந்தாள். நந்தாவும் விழித்தான்தான். ஆனால் அனன்யா கண் விழிக்கவும், நந்தா எழுந்துகொண்டான். காவ்யாவை எழுப்பாமல், அவளை உறங்க விட்டு, ஹாலிற்கு வந்து விட்டான். சிறிது நேரத்தில் எழுந்த அர்ஜுனும், தந்தையைப் போல, காவ்யாவை தொந்தரவு செய்யாமல், ஹாலிற்கே வந்து விட்டான்.

சென்ற வருடம்தான் இந்த அபார்ட்மெண்ட் வீட்டை காவ்யாவின் பெயரில் வாங்கியிருந்தான் நந்தா. சொந்த வீடு இருக்கும் போது ஏன் தனியாக இருக்க வேண்டும் என்று சாந்தி பலமுறை கேட்டுவிட்டார். அங்கே அடிக்கடி வாசுகியும் சுந்தராம்பாளும் வந்து செல்வதாலும், சாந்தியுடன் காவ்யாவுக்கு ஒத்துப் போகுமா என தெரியாததாலும், நந்தா அந்த வீட்டிற்கு செல்லவில்லை.

சாந்தி அந்த வீட்டிலும், கீர்த்தியின் வீட்டிலுமாக மாறி மாறி இருந்தார். கண்டிப்பாக சாந்திக்கு முடியாத காலத்திலும், நந்தா அவரை விட்டு விட மாட்டான். அதுவரை இப்படி தனியாக இருப்பதே சிறந்தது என்ற முடிவுடன் இருந்தான்.

எப்பொழுதாவது காவ்யாவுடன் சென்று சாந்தியைப் பார்த்து வருவான். சாந்தி காவ்யாவிடம் சுமூகமான உறவை ஏற்படுத்திக் கொள்ள முயற்சி செய்கிறார். காவ்யாவிற்குதான் என்னவோ ஏற்றுக்கொள்ள முடியவில்லை. காலப்போக்கில் மாறலாம் என சாந்தியும் காத்திருக்கிறார்.

தருணுக்கு அடுத்த மாதம் திருமணம். தன் வருங்கால மனைவியுடன் நேரிலேயே வந்து திருமணப் பத்திரிக்கை கொடுத்திருந்தான். அந்தப் பெண்ணும் காதல் தோல்வி அடைந்த பெண்ணாம். ஒருதலை காதலால் காயப்பட்ட இருவரின் எண்ணங்களும் ஒரே அலைவரிசையில் இருந்ததால் திருமண பந்தத்தில் தங்களை இணைத்துக்கொள்ள இருந்தனர்.

வாசுகியின் மகனுக்கு காதணி விழா நடைபெற, நந்தா சென்று எல்லாவற்றையும் சிறப்பாகவே செய்தான். வாசுகி தன்னுடைய ஓரகத்திக்கு இன்னும் அதிகமாக செய்தார்கள் என கூற, நந்தாவால் செய்ய முடியும் என்றாலும் சாந்தியே “இதற்கு மேல் செய்ய முடியாது” என மறுத்துவிட்டார்.

கீர்த்தி இப்போது கருவுற்றிருக்கிறாள். நவீன் தன்னுடைய காதல் மனைவியை மிகவும் அன்பாக பார்த்துக் கொள்கிறான்.

அனன்யாவை விளையாட விட்டு, அர்ஜுனை பார்த்துக் கொள்ளச் செய்து விட்டு, காலை சமையலை முடித்தான் நந்தா. நந்தாவைப் போல உருவத்தில் இருக்கும் அர்ஜுன் குணத்திலும் அவனைப்போலவே பொறுமை. காவ்யாவை உரித்து வைத்திருக்கும் அனன்யா, குணத்தில் காவ்யாவையே மிஞ்சும் அளவிற்கு படு சுட்டி. காவ்யாவால் அனன்யாவை சமாளிக்க முடியாது. ஆனால் நந்தாவும் அர்ஜுனும் எளிதாக சமாளித்து விடுவார்கள்.

அர்ஜுன் தானே சாப்பிட்டுக் கொள்ள, அனன்யாவுக்கு ஊட்டி விட்டுக்கொண்டிருந்தான் நந்தா. சோம்பல் முறித்துக் கொண்டே வெளியே வந்த காவ்யா, “என்னை எழுப்பாம ஏன் தனியா கஷ்டப் படுறீங்க?” எனக் கேட்டாள்.

“எனக்கு என்னடி கஷ்டம்? ஒன்னும் இல்லை. நீ தான் நைட்டெல்லாம் சரியா தூங்கலை. அதான் உன்னை டிஸ்டர்ப் பண்ணல” என்றான்.

“நீங்களும்தான் சரியா தூங்கல“

“பகல்ல பசங்க தூங்கும் போது நானும் தூங்கிக்கிறேன்” என்றான்.

காவ்யா முறைத்தாள். பின்னே….. விடுமுறை தினத்தில் பிள்ளைகள் இருவரையும் தூங்க வைத்துவிட்டு காவ்யா நந்தாவுடன் நேரம் செலவிடுவாள். இன்று தூங்கப்போகிறேன் என கூறவும் கோபம் வந்துவிட்டது.

“இந்தக் கோவத்தை எப்பதான் குறைக்க போறியோ…? சரி…. நான் தூங்கலை போதுமா?” என்றதும்தான் சென்றாள்.

சொன்ன வார்த்தை மீறாமல் எல்லா ஞாயிற்றுக்கிழமையும் நந்தாவின் மீன் குழம்புதான். இன்றும் அதைப் போல வெள்ளை கிழங்கா மீன் வாங்கி குழம்பு செய்து கொண்டிருந்தான். இப்போது சமையலில் ஓரளவு தேர்ந்திருந்தாள் காவ்யா. இருந்தும் அவள் சமையலில் கடக்க வேண்டிய தூரம் இன்னும் அதிகம் என்பதால், ஞாயிற்றுக்கிழமை நந்தாவின் சமையலில் தலையிடுவதில்லை.

சமையல் செய்து கொண்டிருந்த நந்தா சத்தம் கேட்டு வெளியே வந்து பார்த்தான்.

“ஏண்டி இப்படி செய்த? அண்ணனோட ஹோம் ஒர்க் புக்ன்னு சொன்னேன்தானே? அதுல போய் இப்படி கிறுக்கி வெச்சிருக்கியே?” என காவ்யா அனன்யாவிடம் கோவமாக கேட்டுக்கொண்டிருக்க,

“விடும்மா பாவம் பாப்பா” என சொல்லிக்கொண்டு இருந்தான் அர்ஜுன்.

“நான் திட்டுறேன் எப்படி நிற்கிறா பாரு? ஏண்டி கிறுக்கின?” என காவ்யா கேட்க, மீண்டும் கிறுக்க ஆரம்பித்தாள் அனன்யா. “நான் சொல்லச் சொல்ல திரும்ப செய்வியா?” என காவ்யா அதட்ட, இன்னும் வேகமாக கிறுக்கினாள் அனன்யா.

“பட்டுமா… என் செல்லம்ல… வேண்டாம்டா குட்டி” என நந்தா கூற, கிறுக்குவதை விட்டுவிட்டு தந்தையைப் பார்த்து சிரித்தாள். அவள் சிரிப்பில் மனம் கொள்ளை போன நந்தா, அவளைத் தூக்கிக்கொண்டு, நெற்றியில் முத்தமிட்டான்.

“ரெண்டு வயசு குழந்தைக்கு என்னடி தெரியும்? பென்சில்லதான கிறுக்கியிருக்கா? உட்கார்ந்து எல்லாத்தையும் அழி. அதை விட்டுட்டு என் பொண்ணை திட்டுவியா?” என்றான் நந்தா.

“எனக்கு வேற வேலை இல்லையா? நீங்க வந்து அழிங்க, இல்லன்னா உங்க பொண்ண வந்து அழிக்கச் சொல்லுங்க” என சிலிர்த்துக் கொண்டாள் காவ்யா.

“அப்பா… அம்மா பேத் கேள், பாப்பாதா குத் கேள்” என மழலையில் அனன்யா கூற, நந்தா வேறு எங்கோ பார்த்துக் கொண்டிருக்க, காவ்யாவும் அங்கே பார்த்தாள். அர்ஜுன் கீழே அமர்ந்து, அனன்யா கிறுக்கியதை சமர்த்தாக அழித்துக் கொண்டிருந்தான்.

“ஏண்டா நீ செய்ற?” என காவ்யா கேட்க, “அப்பா பாவம்மா… எப்படியும் அவரைத்தான் வந்து அழிக்க சொல்லுவீங்க…. அதான் அவருக்கு ஹெல்ப் பண்றேன்” என்றான் அர்ஜுன். ஏற்கனவே அனன்யாவின் கூற்றில் சிரிப்பு வர, அர்ஜுன் இவ்வாறு கூறவும், காவ்யா வாய்விட்டு சிரித்தாள். கோபமாக இருந்த அம்மா சிரிக்கவும், அனன்யாவும் சிரித்தாள்.

இப்படியாக காவ்யாவிடம், அனன்யாவிடமும் சமாளித்து வாழ்ந்து கொண்டிருந்தனர் நந்தாவும், அர்ஜுனும்.

மதியம் சாப்பிட்டு, பிள்ளைகள் இருவரும் உறங்க, நந்தாவின் மடியில் தலைவைத்துப் படுத்திருந்தாள் காவ்யா. சோர்வாக இருந்தாலும் ஒன்றும் சொல்லாமல் இருந்தான் நந்தா. அவனைப் பார்த்த காவ்யா, “பெரிய தியாகிதான் நீங்க” எனக்கூறி எழுந்து கொண்டவள், தன் மடியில் நந்தாவை படுக்கவைத்து, “தூங்குங்க” என்றாள்.

சிறிது நேரத்திலேயே நந்தா உறங்கி விட, அவன் தலையை மெதுவாக எடுத்து தலையணையில் வைத்தவள், உறக்கம் வராவிட்டாலும், அவன் நெஞ்சில் தலைவைத்துப் படுத்தாள். நந்தாவின் இதயத்துடிப்பு பாடலாக காவ்யாவின் செவி வழியே சென்று அவள் மனதை நிறையச் செய்தது.

❤❤❤❤❤