நந்தகுமார் தருணைப் பற்றி நன்றாக விசாரித்து விட்டான். தவறானவன் போல தெரியவில்லை. இருந்தும் மணமான பெண்ணிடம் காதலை சொல்வதும், அடுத்தவன் குழந்தைக்கு அப்பா என தன் பெயரை போடுவதும், காதல் சொல்லி அந்தப் பெண் மறுத்த பிறகும் தொடர்ந்து கவிதைகள் அனுப்புவதும் நல்லவன் எவனும் செய்ய மாட்டான். இவன் சைக்கோவாக இருப்பானோ என நினைத்தான். ஆனாலும் காவ்யாவிடம் எதுவும் வம்பு செய்யாததால் விட்டுவிட்டான்.
நந்தாவும் காவ்யாவும் கணவன் மனைவி என்பது அலுவலகத்தில் இப்போது எல்லோருக்கும் தெரிந்திருந்தது. நந்தாதான் தெரியப்படுத்தியிருந்தான்.
தருண் காவ்யாவை பார்க்கும்போது, சினேகமாக சிரித்து ஏதாவது பேசுவான். காவ்யா அவனை தவிர்த்து விடுவாள். தவறாக எதுவும் இல்லாமல் சாதாரணமாகவே அவன் பேச முயல்வதால் காவ்யாவும் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.
ஒருநாள் தருண் காவ்யாவிடம் சென்று, “நான்தான் பழச மறந்து நாம ஃபிரெண்ட்ஸா இருக்கலாம்னு சொன்னேனே காவ்யா. அப்புறமும் ஏன் என்னை அவாய்ட் பண்ற? ரொம்ப ஹர்ட்டிங்கா இருக்கு” என்றான்.
“நான்தான் அவாய்ட் பண்றேன்னு தெரியுதே. அப்புறமும் ஏன் பேசுறீங்க? ஐ ஆம் நாட் கம்ஃபர்ட்டபிள் டாக்கிங் வித் யூ” என்றாள்.
“நான் உன்னை ப்ரொபோஸ் பண்ணினேன். அப்போ நீ உன் ஹஸ்பண்ட் கூட சேர்ந்து வாழலை. இப்போதான் அவர் கூட இருக்கியே… இப்பவும் அதே மாதிரி நடந்துக்குவேனா? இப்படி ஒரே இடத்தில வேலை பார்த்துக்கிட்டு நீ முகத்தைத் திருப்பிக்கறது எனக்கு கஷ்டமா இருக்கு” என்றான்.
“ஒரு தடவை சொன்னா உங்களுக்கு புரியாதா?” என காவ்யா எரிந்து விழ, தருண் அந்த இடத்தை விட்டு சென்றான். ஆர்த்தி இதை பார்த்து விட்டாள். வாசுகியிடம் இதை தெரிவிக்க, இருவரும் சேர்ந்து திட்டம் போட ஆரம்பித்தனர்.
இவன் பேசியதை நந்தாவிடம் சொன்னால் அவன் கோபத்தில் என்ன வேண்டுமென்றாலும் செய்வான் என நினைத்த காவ்யா அவனிடம் எதுவும் சொல்லவில்லை.
நந்தா கைப்பேசியிலேயே சாந்தியை அழைத்து கீர்த்தியின் காதலைப் பற்றி சொல்லி, அவள் படிப்பு முடிந்ததும் திருமணம் செய்து விடலாம் எனவும் கூறினான். சாந்தியும் நவீன் மருத்துவராக இருப்பதால் கீர்த்திக்கு பொருத்தமானவன் எனக்கூறி சம்மதித்து விட்டார்.
சுந்தராம்பாள் சாந்தியிடம், “நந்தாவை அப்படியே அங்கேயே விட்டுடாத. அவளோடேயே கொண்டு போய்டுவா. அழுது, நடிச்சி ஏதாவது பண்ணி அவனை இங்கே வரவை” என அறிவுரை கூறிக் கொண்டிருந்தார்.
கேட்டுக் கொண்டிருந்த கீர்த்திக்கு கோவம் வந்துவிட்டது. “அம்மா நீ இந்தப் பாட்டி சொல்ற மாதிரி ஏதாவது பண்ணி அண்ணனை திரும்பவும் அண்ணிகிட்டேயிருந்து பிரிக்க நினைச்சா அந்த பாவம் உன் பொண்ணுங்க தலையில்தான் போய் விடியும், சொல்லிட்டேன்” என்றாள்.
“உனக்காகதாண்டி பேசுறேன். அவனை அந்த காவ்யா உனக்கு எதுவும் செய்ய விடமாட்டா” என்றாள் சுந்தராம்பாள்.
“போதும் நிறுத்து. நீ உன் பையனோட இருக்க வேண்டியதுதானே, இங்க எதுக்கு வந்த? அதனால்தான் எல்லா பிரச்சினையுமே. அம்மா நல்லா இருந்தாலும் நீதான் ஏதாவது சொல்லி சொல்லி கொடுத்து அவங்க மனசை கெடுக்கிற” என்றாள் கீர்த்தி.
“நீ கொஞ்சம் சும்மா இருடி. என்ன இருந்தாலும் நந்தா அங்கேயே போய் தங்கக்கூடாதுதானே. அவளையும் கூட்டிக்கிட்டு இங்கே வர வேண்டியதுதானே” எனக் கேட்டார் சாந்தி.
“அதான் அண்ணி கோவமா இருக்காங்களே. எப்படி இங்க வருவாங்க? அப்படியே வந்தாலும் நீங்க அவங்களை நிம்மதியா இருக்க விடுவீங்களா? போட்டு படுத்தி வச்சிடமாட்டீங்க?” என்றாள் கீர்த்தி.
“அதிகமா பேசாதடி, நானா அவளை வீட்டை விட்டு வெளியே போன்னு சொல்லி அனுப்பி வச்சேன்?” எனக்கேட்டார் சாந்தி.
“இல்லதான், ஆனா அவங்க நியாயமா சொல்றதை கேட்காம அண்ணனோட நிலையையும் புரிஞ்சுக்காம அவங்களுக்கு நெருக்கடி கொடுத்தீங்க. வாசுகிக்கு நம்ம தகுதிக்கு மீறி செய்ய சொன்னா, நீயும் அண்ணனால முடியுமான்னு யோசிக்காம செஞ்சே ஆகணும்னு சொன்னீங்க. அதனாலதான் அவர் யுஎஸ் போனார். அண்ணி கூட சண்டை வந்தது. அவங்க பிரிஞ்சதுக்கு காரணமே நீங்க எல்லாரும் தான்” என்றாள் கீர்த்தி.
“அவனால முடியாமதான் வாசுகி கல்யாணத்தை பண்ணி வச்சானா?இப்ப எதுவும் அவனுக்கு கடன் இருக்கா? அவன் சக்திக்கு மீறி எதுவும் நான் கேட்கலை. என் வயித்துல பொறந்த உங்க ரெண்டு பேருக்கும் செஞ்சதை விட அவனுக்குதானே நான் அதிகம் செஞ்சேன். அவன்கிட்ட எதுவும் கேட்க எனக்கு உரிமை இருக்கு” என்றார் சாந்தி.
“நீ அண்ணனுக்கு செய்ததை விட பலமடங்கு அவர் நமக்கு செஞ்சுட்டார். இன்னும் செய்வார். ஆனா அவரோட சந்தோஷத்தை பத்தி உனக்கு கொஞ்சமாவது கவலையிருக்கா? நீ ரொம்ப சுயநலவாதிம்மா. அண்ணன் உன் வயித்தில பிறந்திருந்தா இப்படியெல்லாம் செய்திருப்பியா? இறந்து போன அப்பா கூட உன்னை மன்னிக்கவே மாட்டார்” என கோபமாக கூறினாள் கீர்த்தி.
“உங்களுக்காக அவ எல்லாம் செய்தா சுண்டு மாதிரி இருந்துகிட்டு நீ உன் அம்மாவையே கேள்வி கேட்பியா?” என்றார் சுந்தராம்பாள்.
“முதல்ல இந்த பாட்டிய உன் தம்பி வீட்டுக்கு அனுப்பு. அப்பதான் நம்ம குடும்பம் நல்லாயிருக்கும்” எனக் கூறி விட்டு சென்றாள் கீர்த்தி.
சாந்திக்கு கீர்த்தியின் வார்த்தைகளே மாறி மாறி ஒலித்துக் கொண்டிருந்தது.
நந்தாவின் அலுவலகத்தில், வேலை பார்க்கும் அனைவருக்கும் இரவு விருந்து ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. குடும்பத்துடன் கலந்து கொள்ள அழைப்பும் இருந்தது. சனிக்கிழமை என்பதால் காவ்யா வீட்டில்தான் இருந்தாள். நந்தாவுக்கு முக்கியமான வேலை இருந்ததால் அவன் மட்டும் அலுவலகம் சென்றிருந்தான்.
அர்ஜுனை தூங்க வைத்துவிட்டு, வீட்டை சுத்தப்படுத்திக் கொண்டிருந்தாள். சுத்தப்படுத்தும் பொழுது அவளுடைய திருமண ஆல்பம் கண்ணில் பட வெளியே எடுத்து வைத்தாள். வேலைகளை முடித்துவிட்டு, புகைப்படங்களை ஒவ்வொன்றாக பார்க்க ஆரம்பித்தாள். ஒவ்வொரு படத்திலும், நந்தாவின் கண்களில் காதல் பொங்கி வழிந்து கொண்டிருந்தது. மெல்ல அவளை பழைய நினைவுகளுக்கு இழுத்துச் சென்றது.
அவனுடன் இருந்த பொழுதுகள் மனம் முழுவதும் நிறைந்திருந்தது. இனிய நினைவுகளுடன் கண்மூடி அமர்ந்திருக்க, அர்ஜுன் எழுந்துவிட்டான். அவனின் முகத்திலும் நந்தாவை தேடினாள். அர்ஜுன் சிரிக்க அவனை நெஞ்சோடு அணைத்துக் கொண்டாள். இவன் உருவான இனிய தருணம் நினைவில் வந்துபோக, வெட்கத்தில் அவள் கன்னங்கள் ரோஜாப் பூவாய் மாறியது.
நேரமாவது உணர்ந்து, இரவு விருந்துக்காக அர்ஜுனை தயார்படுத்தி தானும் தயாரானாள். சிறிது நேரத்தில் நந்தாவும் வந்துவிட்டான். சீக்கிரமாக அவனும் கிளம்பி விட, மூவரும் விருந்து நடக்கும் அந்த நட்சத்திர விடுதிக்கு சென்றனர்.
காவ்யா இதுபோன்ற விருந்துகளுக்கு செல்வதில்லை. நந்தா உடன் வருவதால்தான் வந்தாள். தருணும், ஆர்த்தியும் கூட அந்த விருந்திற்கு வந்திருந்தனர்.
நந்தாவை அவன் உயரதிகாரி அழைத்து யாருக்கோ அறிமுகம் செய்ய அவனும் பேசிக்கொண்டிருந்தான். சர்வர் ஒருவர் மதுவகைகள் எடுத்துவர, எல்லோரும் எடுத்துக் கொள்ள நந்தாவும் ஒரு கோப்பையை கையில் எடுத்துக் கொண்டான். காவ்யா அவனையே முறைத்துக் கொண்டிருக்க, நந்தா இவளைப் பார்த்தால்தானே.
காவ்யாவின் அருகில் வந்தான் தருண். காவ்யா அவனை கவனிக்கவில்லை. அவள் பார்வை முழுவதும் நந்தாவிடமே இருந்தது. அர்ஜுனிடம் சாக்லேட்டை நீட்டி அவனை தூக்கி கொண்டான் தருண். “என்ன காவ்யா நந்தா சாரையே பார்த்துட்டு இருக்க? அதுவும் முறைக்கிற மாதிரி இருக்கு” என்றான்.
சலிப்பாக அவனை நோக்கியவள் “என் ஹஸ்பண்ட் நான் பார்க்கிறேன்” எனக் கூறி அவனிடமிருந்து அர்ஜுனை வாங்க முற்பட்டாள். “எதுக்கு கோவப்படுற?” என்றான்.
“குழந்தையைக் கொடு” என கோவமாக கேட்டாள் காவ்யா.
“ஏன் இவ்வளவு கோவம் காவ்யா? குழந்தையை ஆசையாதானே தூக்கினேன். கொஞ்ச நேரம் இருக்கட்டும். நான் ஒன்னும் பண்ணிட மாட்டேன்” என்றான். இவர்கள் பேசிக்கொண்டிருப்பதை நந்தா பார்த்துவிட்டான். நொடியில் விரைந்து அவர்களிடமும் வந்துவிட்டான்.
தருணின் கைகளில் அர்ஜுனை பார்த்த நந்தாவுக்கு கொலை வெறி வந்தது. வேகமாக அர்ஜுனை தருணிடமிருந்து பிடுங்கிக்கொண்டான்.
“என்னடா என் பொண்டாட்டிகிட்ட பிரச்சனை பண்றியா? என்ன தைரியம் இருந்தா என் குழந்தையை தூக்குவ?” என கோபமாக கேட்டான்.
“ஏன் ரெண்டு பேரும் என்கிட்ட இப்படி பேசுறீங்க? நான் குழந்தையை என்ன பண்ணிடப் போறேன்?” எனக் கேட்டான் தருண்.
“உன்னை பத்தி எல்லாம் எனக்கு தெரியும். மரியாதையா இங்கிருந்து போடா” என நந்தா உறும, காவ்யாவையும் அர்ஜுனையும் மாறி மாறி பார்த்துக் கொண்டே அங்கிருந்து சென்று விட்டான் தருண்.
குழந்தையை நந்தாவிடமிருந்து காவ்யா வெடுக்கென வாங்கிக்கொண்டு, “குடிச்சுட்டு பிள்ளையை தூக்காதீங்க” என்றாள்.
“நான் குடிச்சதை நீ பார்த்தியாடி? எனக் கேட்டான்.
“உங்க கையில கொஞ்ச நேரம் முன்னாடி இருந்ததே.என்ன அது? ஆப்பிள் ஜூஸா?” என நக்கலாக கேட்டாள்.
“கையில தான இருந்தது. குடிச்சதை பார்த்தியா? என் அப்பா குடிச்சு குடிச்சுதான் என்னை விட்டுட்டு போனார். அந்தக் கருமத்தை நான் குடிப்பேனா? அது ஃபார்மாலிட்டிக்கு கையில் எடுத்துக்கிட்டேன். எனக்கு என் பொண்டாட்டி புள்ளை கூட ரொம்ப நாள் வாழணும்னு மலையளவு ஆசையிருக்கு” என்றான்.
“இப்படி பேசத்தான் முடியும் வேற என்ன செய்ய முடியும்?” என்றவன், “அந்த பொறுக்கி என் பிள்ளையை தூக்குற வரை என்ன பண்ணிக்கிட்டு இருந்த?” எனக் கேட்டான்.
நந்தா கேட்ட விதத்தில் அப்பட்டமான குற்றச்சாட்டு இருந்தது.
“உங்களைத்தான் பார்த்துட்டு இருந்தேன். யார் கூடவும் பல் இளிச்சிட்டு நிக்கலை. போதுமா?” எனக் கோவமாக கேட்டுவிட்டு அர்ஜுனுடன் சற்றுத் தள்ளியிருந்த ஒரு நாற்காலியில் அமர்ந்து கொண்டாள். நந்தா அருகில் செல்ல, கோவமாக முகத்தை திருப்பிக் கொண்டாள். ஒன்றும் கூறாமல் நந்தா சென்றுவிட்டான். தன்னை சமாதானம் செய்யாமல் அவன் சென்றது இன்னும் கோவத்தை அதிகப்படுத்த நந்தா எங்கே என்று தேட ஆரம்பித்தாள் காவ்யா.
அங்கே பாட்டு, நடனம் என அமர்க்களப்பட்டுக் கொண்டிருக்க, திடீரென காவ்யாவிற்கு நந்தாவின் குரல் கேட்டது. நந்தா பட ஆரம்பித்திருந்தான்.
என்னோடு வா வா என்று சொல்ல மாட்டேன் உன்னைவிட்டு வேறு எங்கும் போகமாட்டேன் செல்லச் சண்டை போடுகிறாய் தள்ளி நின்று தேடுகிறாய் ஆ ஆ ஆ அன்பே என்னை தண்டிக்கவும் புன்னகையில் மன்னிக்கவும் உனக்கு உரிமை இல்லையா
என பாடிக் கொண்டிருந்தான் நந்தா.
நந்தா தன்னிடம் பலமுறை பாடியிருக்கிறான். ஆனால் இப்படி எல்லோர் முன்னிலையிலும் பாடுவான் என்று காவ்யா சற்றும் எதிர்பார்க்கவில்லை. அவனை தெரிந்தவர்கள் அனைவரும் ‘அளந்து அளந்து பேசும் நந்தாவா இது?’ என ஆச்சரியமாகத்தான் பார்த்திருந்தனர்.
காவ்யாவின் அருகில் இருந்தவர்கள் சிலர், “என்ன காவ்யா… என்ன சண்டை? இப்படி பப்ளிக்கா சாரி கேட்கிற மாதிரி பாடுறார். பாவம்மா… ரொம்ப படுத்தாமல் பார்த்து ஏதாவது செய்” என கிண்டல் செய்ய, “அப்படியெல்லாம் ஒன்னும் இல்லை. அவருக்கு இந்த பாட்டு பிடிக்கும். அதுதான் பாடுறார்” என சமாளித்தாள்.
“ஹேய் காவ்யா எப்படி வெட்கப் படுற? லுக்ஸ் சோ க்யூட்” என்றாள் அவளது அலுவலக தோழி நளினி.
“காதலுக்கு இலக்கணமே தன்னால் வரும் சின்னச் சின்ன தலைக்கணமே காதல் அதை பொறுக்கணுமே இல்லையெனில் கட்டி வைத்து உதைக்கனுமே உன்னுடைய கையாலே, தண்டனையை தந்தாலே என் நெஞ்சம் கொண்டாடுமே கன்னத்தில் அடிக்கும் அடி முத்தத்தாலே வேண்டுமடி
பாடிக்கொண்டே காவ்யா உட்கார்ந்திருந்த இடத்திற்கே வந்துவிட்டான் நந்தா. அவள் கையைப் பிடித்து எழுப்பி,
“எந்த தேசம் போன போதும் என்னுடைய சொந்த தேசம் உனது இதயம் தானே”
என பாட, காவ்யாவின் சிவந்த முகம் இன்னும் சிவக்க, காவ்யாவின் முந்தானையை பிடித்துக்கொண்டு நின்ற அர்ஜுன் தன் பெற்றோரை பார்த்து சிரிக்க, “பியூட்டிஃபுல் ஃபேமிலி” என சிலர் வாய்விட்டு கூறினர். சிலர் கைதட்டி ஆரவாரம் செய்தனர்.
இவர்களுக்கு அருகில் வந்த நந்தாவின் உயரதிகாரி, நந்தாவின் தோளில் தட்டி, “நல்ல பையன்ம்மா. ஏதாவது தப்பு செஞ்சிருந்தா மன்னிச்சு விட்டுடு. பாவம் ரொம்ப கெஞ்சுறான்” என காவ்யாவிடம் கிண்டலாக கூறிச் சென்றார்.
வெட்கத்தில் முகம் சிவந்து போயிருந்த காவ்யா, “இப்படி ஏன் என் மானத்தை வாங்குறீங்க?” என அவனுக்கு மட்டும் கேட்கும்படி கேட்டாள்.
“நான் பாடினது நல்லா இருந்ததா?” என காதலுடன் நந்தா கேட்க, முகம் மலர்ந்த காவ்யா “ரொம்ப நல்லா இருந்தது” என்றாள்.
அர்ஜூனின் கன்னத்தில் அழுந்த முத்தமிட்டு, காவ்யாவிடம் குழந்தையை கொடுப்பது போல, அவளருகில் சென்று, மிக மெதுவாய் “அர்ஜுனுக்கு கொடுத்தது உனக்கு தான் வாங்கிக்க. அதே போல எனக்கும் ஒன்னு அர்ஜுன் கிட்ட கொடு. நான் வாங்கிக்கிறேன்” என டீல் பேசினான். மறுக்கத் தோன்றாதவளாய் அர்ஜுனின் கன்னத்தில் காவ்யாவும் அழுந்த முத்தமிட்டாள்.
தான் காணத் துடித்த காதலை காவ்யாவின் கண்களில் நந்தாவுக்காக பார்த்த தருணின் இதயத்தில் வலி பரவியது. தருண் ஒரு பக்கம் அவர்களை பார்த்திருக்க, மறுபுறம் ஆர்த்தி அவர்களை வெறித்து நோக்கியிருந்தாள்.
விருந்து நிகழ்ச்சி முடிந்து காரில் வீட்டுக்கு செல்லும் வழியிலேயே அர்ஜுன் உறங்கிவிட்டான். நந்தாவின் மனம் உற்சாகமாக இருக்க, காவ்யாவின் மனமும் அவனைப்போலவே உற்சாகமாய் இருந்தது. வீடு வந்துவிட அர்ஜூனை நந்தா தூக்கிக்கொள்ள காவ்யா கதவைத் திறந்தாள்.
நந்தா அர்ஜுனை படுக்கையில் படுக்கவைத்தான். தனது ஆடைகளை மாற்றலாம் என எண்ணி சட்டையைக் கழற்றினான். கைப்பேசி அழைக்க எடுத்துக்கொண்டு ஹாலிற்கு சென்றான். பேசி விட்டு திரும்ப வரும்போது கீழே ஒரு படுக்கை விரிக்கப்பட்டிருந்தது. காவ்யா தன் காதணிகளை கழற்றி வைத்துக் கொண்டிருந்தாள்.
“என்னடி இது?” எனக் கோபமாக கேட்டான் நந்தா.
“ஏன் கோபப்படுறீங்க?” என்றாள் காவ்யா.
“இப்போ எதுக்கு கீழ இத போட்டிருக்க? நான் ஒன்னும் இங்கே படுக்கமாட்டேன் உங்களோட பெட்லதான் படுத்துப்பேன்” என்றான்.
“ஏன் நீ படுக்க போறியா? நீயும் இங்க படுக்கக்கூடாது. எங்க கூடதான் படுக்கணும்” என சிறு குழந்தை அடம் செய்வது போல கூறினான்.
தலையில் அடித்துக்கொண்ட காவ்யா “அது நான் படுக்கவும் இல்லை” என்றாள்.
“அப்புறம்….?” எனக் கேட்டான் நந்தா.
“நாம படுக்க” என வெட்கத்துடன் தலை குனிந்து கொண்டே கூறினாள் காவ்யா.
நம்பமுடியாத நந்தா “திருப்பி சொல்லு” என்றான்.
“ஒன்னும் இல்ல…. நீங்க அந்த ஓரம் படுங்க. நான் இந்த ஓரம் படுத்துக்குறேன்” எனக்கூறிய காவ்யா அர்ஜுன் அருகில் படுக்கப் போக, அவள் புடவை முந்தானையைப் பற்றியிழுத்து தன்னோடு சேர்த்தணைத்துக் கொண்டான் நந்தா.
“ஏய் வீம்புக்காரி… இன்னும் உனக்கு நான் நீ கர்ப்பமா இருக்கிறது தெரிஞ்சு யு எஸ் போனேனா… தெரியாமல் போனேனான்னு தெரியாது” என்றான்.
“நான் உங்களை நம்புறேன். நீங்க என்கிட்ட பொய் சொல்ல மாட்டீங்க. அப்பா ஏன் அப்படி சொன்னார்ன்னு தெரியலை. ஆனா என் உள்ளுணர்வு சொல்லுது. உங்களுக்கு தெரிஞ்சிருந்தா அப்படி என்னை விட்டுட்டு போயிருக்க மாட்டீங்க. நான்தான் கோவத்திலே யோசிக்காம உங்களை என்னென்னவோ பேசிட்டேன். சாரி” என்றாள்.
“என் மேல கோவம் எல்லாம் போயிடுச்சா?” எனக் கேட்டான் நந்தா.
“அப்படி சொல்ல முடியாது. கோவம் இருக்குதான். நீங்க தெரியாமலேயே போனாலும் என்னை விட்டுட்டு போனீங்கதானே. அதுல எனக்கு வருத்தம்தான். ஆனா அதையே நெனச்சி நம்ம வாழ்க்கையை இனியும் கெடுத்துக்க நான் விரும்பல” என்றாள்.
“எந்த போதி மரத்துக்குடி போன?” எனக்கேட்டான் நந்தா.
“நீங்க இப்படி பேசிக்கிட்டே இருங்க. எனக்கு தூக்கம் வருது” என்றாள் காவ்யா.
“சரி தூங்குடி” என நந்தா கூற, இப்படி கூறுவான் என எதிர்பார்க்காத காவ்யா விழித்துக்கொண்டே நந்தாவைப் பார்க்க, அவன் சிரிப்பை அடக்கிக் கொண்டு நின்றிருந்தான்.
அவன் கிண்டல் செய்கிறான் என்பதை புரிந்துகொண்டு, அவனை பார்த்து சிரித்த காவ்யா, தன் காதலை முத்தமாக வெளிப் படுத்தினாள். அவள் முத்தத்தில் மொத்தமாய் கரைந்த நந்தா அதற்கு மேல் பொறுக்காமல் தன் மூன்று வருடத் தவிப்பை காவ்யாவுக்கு உணர்த்த, அவன் தவிப்பின் தீவிரத்தை தாங்கமுடியாத காவ்யா துவள, கொஞ்சமும் கருணை காட்டாத நந்தா மொத்தமாய் அவளை ஆள ஆரம்பித்தான்.
மூன்றாம் பிறை நிலா வானத்தில் சசந்தோச உலா வந்து கொண்டிருந்தது.