காவ்யாவின் விடுப்பும் முடிந்து விட்டது. மங்களம் மூலமாக அர்ஜூனை வீட்டிலிருந்தே பார்த்துக்கொள்ள தேவகி என்ற 40 வயது மதிக்கத்தக்க பெண்மணியை ஏற்பாடு செய்திருந்தான் நந்தா. மங்களத்தின் மூத்த பெண் இப்போது ஆஸ்திரேலியாவில் இருக்கிறாள். அவள் இந்தியாவில் இருந்தபோது, அவளது குழந்தையை மூன்று வருடங்கள் இவர்தான் பார்த்துக் கொண்டார். நம்பிக்கையானவர் என மங்களம் சிபாரிசு செய்ய இவரையே நியமித்து விட்டான்.
காலையில் ஒன்பது மணியிலிருந்து மாலை தங்களில் யாராவது ஒருவர் திரும்ப வரும்வரை பார்த்துக்கொள்ள செய்திருந்தான். அர்ஜுன் தூங்கும் நேரத்தில் பாத்திரங்களை மட்டும் கழுவி வைக்க சொல்லியிருந்தான். வேறு எந்த வேலையும் கொடுக்கவில்லை. இவரை நியமிக்கும் முன்னரே முன்னேற்பாடாக வீட்டில் கண்காணிப்பு கேமராவையும் பொருத்தி விட்டான். அதன்மூலம் எந்த நேரம் வேண்டுமென்றாலும் நந்தாவால் வீட்டை கவனிக்க முடியும்.
என்ன ஏற்பாடுகள் செய்தும் அர்ஜுனை தானோ, காவ்யாவோ இல்லாமல் இப்படி விட்டுச் செல்வது நந்தாவுக்கு கஷ்டமாகத்தான் இருந்தது. வேறு வழியில்லை. க்ரச்சில் விடுவதற்கு பதில் இது பரவாயில்லை என மனதை தேற்றிக் கொண்டான்.
மங்களத்திடம் கேட்டுவிட்டு, அர்ஜுனின் முடியைத் திருத்தி இருந்தான் நந்தா. அவனது முடியில் கொஞ்சம் மட்டும் ஒரு மஞ்சள் துணியில் முடிந்து வைத்திருந்தான். ஒரு வருடம் முடிந்து குலதெய்வம் கோவிலுக்கு செல்லும் பொழுது, காணிக்கையாக செலுத்தி விடலாம் என்று மங்களம் கூறியிருந்தார். முடி திருத்திய பின்னர், அர்ஜுன் பார்க்க இன்னும் வசீகரமாக மாறிவிட்டான்.
காவ்யாவின் அப்பா ஏன் தனக்கு காவ்யா கருவுற்றிருப்பது தெரியும் என்று சொன்னார் என கண்டறிய எங்கிருந்து ஆரம்பிப்பது என தெரியாமல், அவர் கடை இருந்த இடத்திற்கே சென்று விசாரித்து பார்த்தான். அவருடைய நண்பர்கள் என்று காவ்யா கூறிய சிலரிடமும் பேசிப் பார்த்தான். பலன்தான் கிட்டவில்லை. என்ன செய்யலாம் என யோசித்து யோசித்து வழி ஒன்றும் புரியாமல் இருந்தான்.
காவ்யாவும் அலுவலகத்திற்கு கிளம்ப, கிளம்பும் முன்பே நந்தா உதவி செய்ய, காவ்யா காலை, மதிய சமையலை முடித்து விட்டாள். தேவகி வந்தவுடன் அர்ஜுனை அவரிடம் ஒப்படைத்து விட்டு இருவரும் கிளம்பினர். அழ ஆரம்பித்த அர்ஜுனை விட்டுச் செல்ல இருவருக்கும் மனமே இல்லை.
“நீங்கள் போன பிறகு அழுகையை நிறுத்தி விடுவான். நான் பார்த்துக்கொள்கிறேன்” என தேவகி உறுதியளித்த பின் மனமில்லாமல் இருவரும் அலுவலகம் கிளம்பினர்.
காவ்யாவை தன்னுடன் காரில் வருமாறு நந்தா அழைக்க, “நான் என் ஸ்கூட்டியிலேயே வந்துக்குறேன்” எனக் கூறி மறுத்து விட்டாள். நந்தாவுக்கு எரிச்சலாக இருந்தாலும், பொறுத்துப் போனான். அலுவலகம் வந்ததும் வேலை அவர்களை இழுத்துக் கொண்டது.
“ஹாய் காவ்யா” என்ற குரல் கேட்டு நிமிர்ந்து பார்த்தாள் காவ்யா.
“தருண் நீங்களா…?” என ஆச்சரியமும், அதிர்ச்சியும் சேர்ந்து கேட்டாள்.
“எஸ் நானேதான். ஹவ் ஆர் யூ?” என்றான் தருண்.
“ஃபைன் நீங்க எப்படி இருக்கீங்க?” எனக் கேட்டாள் காவ்யா.
“நல்லா இருக்கேன். லாஸ்ட் வீக்தான் இங்க ஜாய்ன் பண்ணினேன்” என்றான். பதில் எதுவும் கூறாமல் அவன் பேசுவதை கேட்டுக்கொண்டிருந்தாள்.
“என்னை ஏன் ஃபேஸ்புக்ல அன்ஃபிரெண்ட் பண்ணிட்ட? வாட்ஸ் ஆப்லயும் ப்ளாக் பண்ணிட்ட. கால் பண்ணினாலும் போக மாட்டேங்குது. என் நம்பரையும் ப்ளாக் பண்ணிட்டியா? என்னை அவாய்ட் பண்றியா?” எனக் கேட்டான்.
“லுக் தருண். நீங்க பேசினது எனக்கு பிடிக்கல. அவாய்ட் பண்ணனும்னுதானே இதெல்லாம் பண்ணியிருக்கேன். தெரியுதுதானே. அப்புறம் என்ன…. தெரியாத மாதிரி கேக்குறீங்க?” என்றாள் காவ்யா.
சிரித்தவன், “கூல் காவ்யா. அதையெல்லாம் மறந்துட்டு ஃப்ரண்ட்ஸா இருக்கலாம்தானே?” எனக் கேட்டான்.
“நீங்க பழைய மாதிரி எதுவும் பேசாம இருந்தா… ஃப்ரண்ட்ஸா இருக்கலாம்” என்றாள் காவ்யா.
“உன் ஹஸ்பண்ட் உன் கூட இருக்கார் போல. உங்க ப்ராப்ளம் எல்லாம் சரியாயிடுச்சா?” எனக் கேட்டான்.
“எங்களுக்குள்ள எந்த ப்ராப்ளமும் இல்லை. இதைப் பத்தி உங்க கூட டிஸ்கஸ் பண்ண எனக்கு விருப்பமில்லை” என்றாள்.
“ஓகே நோ ப்ராப்ளம். உன் அம்மா இறந்துட்டதா கேள்விப்பட்டேன். ஆழ்ந்த இரங்கல்கள். என்கிட்ட எதுவும் ஹெல்ப் வேணும்னா தயங்காம கேளு” என்றான்.
“தேங்க்ஸ்… உங்க உதவி எனக்கு எதுவும் தேவைப்படாது. எனக்கு கொஞ்சம் வேலையிருக்கு” எனக் கூறி கணிப்பொறியில் கவனம் வைக்க, காவ்யாவை பார்த்து சிரித்துக் கொண்டே நகர்ந்து விட்டான் தருண்.
காவ்யாவின் உள்மனது அவளை எச்சரிக்கை செய்ய, எழுந்து நந்தாவின் அறைக்கு சென்றாள். அவன் கஸ்டமர் காலில் இருக்க, ‘உட்கார்’ என சைகை செய்துவிட்டு அவளை கண்களால் அளவிட்டுக் கொண்டே பேசிக்கொண்டிருந்தான். பேசி முடித்துவிட்டு, “என்ன காவ்யா… ஏன் ஒரு மாதிரி இருக்கே?” எனக் கேட்டான்.
“ஆமாம்… லாஸ்ட் வீக் ஜாய்ன் பண்ணியிருக்கார். அவருக்கு என்ன?” என்றான்.
“எனக்கு முன்னாடியே தெரியும். என்னோட சீனியர்” என்றாள். மேலே சொல் என்பது போல அவளைப் பார்த்திருந்தான் நந்தா.
காலேஜ்ல ரொம்ப பழக்கம் எல்லாம் இல்லை. நான் ஃபர்ஸ்ட் இயர் படிச்சப்ப இவன் ஃபைனல் இயர். எப்பவாவது பார்த்தா பேசுவான், அவ்வளவுதான். அவன் முடிச்சுட்டு போனதுக்கு அப்புறம் நான் பார்க்கவே இல்லை. அர்ஜுன் பிறந்து, நான் சென்னை வந்ததுக்கு அப்புறம் ஒரு நாள், அவன் என்னை வெளியில பார்த்து பேசினான். நான் வேலை தேடிக்கிட்டிருக்கிறது தெரிஞ்சு, அவன் ஃஆபீஸ்லேயே வேகண்ட் இருக்கு ரெஃபர் பண்றேன்னு சொன்னான். நானும் சரின்னு சொன்னேன். வேலையும் வாங்கித் தந்தான்”
“ஆரம்பத்துல ஃப்ரெண்ட் மாதிரிதான் பேசினான், பழகினான். அப்புறம் என்கிட்ட கொஞ்சம் உரிமையா நடந்துக்கிற மாதிரி இருந்தது” என்றாள்.
“உரிமைன்னா எப்படி?” எனக்கேட்டான் நந்தா.
“நான் வேலை முடிச்சுட்டு போக லேட்டானா நான் போற வரையிலும் எனக்காக வெய்ட் பண்ணுவான். சில சமயம் நீ போன்னு சொல்லிட்டு என் வேலையையும் அவனே பார்ப்பான். ஒரு தடவை என் வேலையை டைமுக்குள்ள முடிக்க முடியாம என் ஹெட் என்னைக் கூப்பிட்டுத் திட்டினார்”
“அர்ஜுன் அந்தசமயம் நைட் எல்லாம் என்னை தூங்க விட மாட்டான். அதனால வேலையில கான்சன்ட்ரேட் பண்ண முடியாம என்னால டைம்க்குள்ள முடிக்க முடியலை. டூ டேஸ் டைம் தந்து என்னை முடிக்க சொன்னார். அந்த டைம்ல கண்டிப்பா என்னால முடிக்க முடியாது. ஆனா நான் செஞ்சு தரேன்னு டூ டேஸ்ல அவனே பண்ணி கொடுத்தான். கண்டிப்பா அவன் டே அண்ட் நைட் பண்ணலைன்னா அவனால முடிச்சிருக்கவே முடியாது”
“இதெல்லாம் எனக்கு என்னமோ ஃப்ரெண்டா செய்ற மாதிரி தெரியலை. அதையும் தாண்டி ஏதோ இருக்குன்னு சந்தேகப்பட்டேன். அதே மாதிரி ஒருநாள்…. ஒருநாள்…..” என காவ்யா தயங்க,
“ஒரு நாள் என்கிட்ட வந்து ப்ரொபோஸ் பண்ணினான்” என்றாள்.
“வாட்….?” என அதிர்ந்தான் நந்தா.
“உனக்கு கல்யாணம் ஆனது அவனுக்கு தெரியாதா?” எனக் கேட்டான்.
“தெரியும்” என்றாள்.
“தெரிஞ்சும் உன்கிட்ட வந்து ப்ரொபோஸ் பண்ணினான்னா அவனுக்கு எவ்வளவு தைரியம்?” என கை முஷ்டியை இறுக்கினான் நந்தா.
“நீங்களும், நானும் சேர்ந்து வாழலைல்ல…. அதனால வந்து கேட்டிருக்கான்” என்றாள்.
“எனக்கும் உனக்கும் பிரச்சனைன்னு ஊருக்கெல்லாம் போய் சொல்லுவியா?” எனக் கோபமாகக் கேட்டான் நந்தா.
அவன் கேட்ட விதத்தில் கோபமடைந்த காவ்யா, “நான் ஒண்ணும் சொல்லலை. அவனுக்கே எப்படியோ தெரிஞ்சிருக்கு” என கடுப்பாகக் கூறினாள்.
மீதியிருந்த தண்ணீரையும் குடித்து முடித்த நந்தா “அப்புறம் என்னாச்சு சொல்லு” எனக் கேட்டான்.
“அவன்கிட்ட நீங்க நினைக்கிற மாதிரி எங்களுக்குள்ள பிரச்சனை எல்லாம் ஒன்னும் இல்லை. அவர் சீக்கிரம் திரும்பி வந்துடுவார். நீங்க இப்படி கேட்டது சரியில்லை. நான் உங்ககிட்ட இருந்து எதிர்பார்க்கலை, எனக்கு பிடிக்கவும் இல்லைன்னு சொன்னேன்”
“அதுக்கு அவன் உங்களுக்குள்ள பிரச்சனைன்னு எனக்கு தெரியும். நீ மனசு மாறுற வரை நான் காத்திருக்கேன். உன்னை காலேஜ்ல இருந்தே எனக்கு பிடிக்கும். உன் படிப்பு முடிஞ்சதும் உன்னை உன் வீட்டில முறைப்படி கேட்டு கல்யாணம் செய்துக்கலாம்ன்னு இருந்தேன். நான் ஆன்சைட்ல ஜெர்மன் போயிருந்தேன், திரும்பிவந்தப்போ உனக்கு கல்யாணமே முடிஞ்சிடுச்சு அப்படின்னு சொன்னான்”
“இதெல்லாம் சரிவராதுன்னு ஸ்ட்ராங்கா அவன் கிட்ட சொல்லிட்டு வந்துட்டேன். அப்பதான் அர்ஜுனுக்கு டெங்கு வந்து ஹாஸ்பிடல்ல அட்மிட் பண்ணியிருந்தோம். இவன்தான் வந்து ஹெல்ப் பண்ணினான். அப்போ…. அப்போ…..” என இழுத்தாள் காவ்யா.
“அப்போ என்னடி…?” என கோபமாகக் கேட்டான் நந்தா.
“இப்படி கோபப்பட்டா நான் சொல்லலை” என்றாள்.
தலையை இரு கைகளாலும் அழுந்தக் கோதி கண்களை மூடி, மூச்சை இழுத்து விட்டவன் நிதானமாக, “அப்போ என்ன பண்ணினான்?” எனக் கேட்டான்.
“அர்ஜுனோட ஹாஸ்பிடல் அட்மிஷன் ஃபார்ம் அவன்தான் ஃபில் பண்ணினான். அதுல அர்ஜுன் அப்பா பேரு கேட்டிருந்த இடத்தில, அந்த ராஸ்கல் அவன் பேரை எழுதி வச்சிட்டான்” என்றாள்.
கையில் கிடைத்த ஃபைல் ஒன்றை எடுத்து தரையில் வேகமாக வீசி எறிந்த நந்தா ***** என கெட்ட வார்த்தையில் அவனை திட்டி, “நீ என்னடி பண்ணின…. பல் இளிச்சிகிட்டு பார்த்துட்டு இருந்தியா?” எனக் கேட்டான்.
“மைண்ட் யுவர் வேர்ட்ஸ். இதெல்லாம் யாரால? உன்னாலதானே. கட்டினவன் விட்டுட்டு போனா கண்டவனும் இப்படி வருவான். இந்த நிலைமைக்கு நீதான் காரணம். நீ என்னை விட்டுட்டு போனதாலதானே இதெல்லாம் நான் ஃபேஸ் பண்ண வேண்டியதா இருந்தது”
“அப்பாவும் இல்லாம, நீயும் இல்லாம கைக்குழந்தையை வச்சிக்கிட்டு வேலைக்கு போய் நான் எவ்ளோ கஷ்டப்பட்டேன்? நீ எவ்வளவு அசிங்கமா பல் இளிச்சிகிட்டு நின்னியான்னு கேட்குற? ஒரு ப்ராப்ளம்ன்னு உன்கிட்ட சொல்ல வந்தா இப்படித்தான் பேசுவியா? என் பிரச்சனையை நானே பாத்துக்கிறேன்” என எழுந்து வெளியே சென்று விட்டாள்.
நந்தாவுக்கு மனம் ஒரு நிலையில் இல்லை. காவ்யாவிடம் ப்ரொபோஸ் செய்தான் என்பதிலேயே ஆத்திரம் வந்துவிட்டது. அர்ஜூனின் அப்பா என்று அவனது பெயரைக் கொடுத்தான் எனவும் உள்ளம் கொதிநிலை அடைந்த நீராய் கொதிக்க ஆரம்பித்தது. தருணை கொன்றுவிடும் ஆத்திரம் வந்தது.
கோவத்தில் காதோரம் இரண்டும் நெருப்பாய் எரிவது போலிருக்க, ஓய்வறை சென்று முகத்தில் தண்ணீரை அடித்து கழுவினான். கொஞ்சம் ஆசுவாசமானான். இருக்கைக்கு வந்தமர்ந்தவன் மீண்டும் காவ்யாவை அழைத்தான். அவள் உள்ளே வர,
“சாரி காவ்யா. ஐ லாஸ்ட் மை டெம்பர். ரியலி சாரி. அவன் மேல உள்ள கோவத்தில உன்னை அப்படி சொல்லிட்டேன். கோவப்படாம நடந்தத முழுசா சொல்லு” என்றான்.
காவ்யா பதில் எதுவும் சொல்லாமல் கோவமாக நின்றிருந்தாள்.
“அதான் சாரி சொல்றேன்லடி. என் பொண்டாட்டிய ஒருத்தன் வந்து ப்ரொபோஸ் பண்ணுவான். என் புள்ளைக்கு….. “ என சொல்ல முடியாமல் கோவத்தில் கண்கள் சிவந்து, மீண்டும் தன்னை நிதானப் படுத்தி, “இதெல்லாம் கேட்டா…. எந்த ஆம்பளைக்கும் கோபம் வரத்தான் செய்யும். அதுக்காக என் மேலயே கோவப்படாம முழுசையும் சொல்லு” என்றான்.
“அவன் அப்படி பண்ணினதுக்காக அவனை திட்டினேன். அவனும் சாரி கேட்டான். அப்புறம் கொஞ்ச நாள் நல்லாதான் இருந்தான். கொஞ்ச நாள் கழிச்சி வாட்ஸ்ஆப், பேஸ்புக் மெசஞ்சர்லன்னு எனக்கு ஒரே கவிதையா அனுப்ப ஆரம்பிச்சான். நான் கூப்பிட்டு வார்ன் பண்ணினேன். அங்க இருக்க வேண்டாம்னு வேற வேலைக்கு ட்ரை பண்ணிக்கிட்டே இருந்தேன். இங்கே வேலை கிடைக்கவும் வந்துட்டேன்” என்றாள்.
“அதுக்கப்புறம் அவன் உன்னை பார்க்கலையா?” எனக் கேட்டான்.
“ஒரு தடவை நான் ஆஃபீஸ் முடிச்சுட்டு வீட்டுக்கு போறப்ப வழியிலே என்னை பார்க்க நின்னுகிட்டு இருந்தான். என்னை நிறுத்தி ஏன் வேலையை விட்டன்னு கேட்டான். என் இஷ்டம்ன்னு சொல்லிட்டு வந்துட்டேன். அவன் நம்பரையும் ப்ளாக் பண்ணிட்டேன். புது நம்பர்ல இருந்து ஒரு தடவை கால் பண்ணினான். அவன்னு தெரிஞ்சதும் நான் கட் பண்ணிட்டேன். அதுக்கப்புறம் தெரியாத நம்பர்ல இருந்து கால் வந்தா அட்டெண்ட் பண்றதையே விட்டுட்டேன்” என்றாள்.
“இன்னைக்கு உன்கிட்ட வந்து எதுவும் பேசினானா?” எனக் கேட்டான். அவன் பேசியதை கூறினாள்.
“சரி… இனிமே எதுன்னாலும் என்கிட்ட உடனே சொல்லு. பயப்படாத. நான் இருக்கேன். நாளையிலிருந்து என் கூட கார்லேயே வா” என்றான்.
“இல்ல நான் ஸ்கூட்டியிலேயே…” என காவ்யா முடிப்பதற்குள்,
“மண்ணாங்கட்டி…..” என்று பல்லை கடித்தவன் பின், “என் கூட கார்ல வந்தா நான் என்ன உன்னை கடிச்சா தின்னுடப் போறேன்? உன் சேஃப்டிக்காகத்தானே சொல்றேன். நீ அப்பவே அவன ஹெச் ஆர் ல கம்ப்ளைண்ட் பண்றதுக்கு என்ன?” எனக் கேட்டான்.
“ஆம்பளை துணையில்லாம பொம்பளையா தனியா இருக்கும் போது இதையெல்லாம் தவிர்க்கத்தான் பார்ப்பாங்க. பெருசு பண்ண மாட்டாங்க” என்றாள் காவ்யா.
“உங்களோட இந்த பயம் தான் இவனை மாதிரி ஆளுங்களுக்கு இடம் கொடுக்குது. நடந்ததை விடு. இனிமே ஜாக்கிரதையா இருக்கணும். இனிமே என் கூடத்தான் வர்ற, போற. இப்ப போய் வேலையை பாரு” என்றான்.
“இதெல்லாம் ஏதோ பைத்தியக்காரத்தனமா அவன் செஞ்சுட்டான். மத்தபடி அசிங்கமா எதுவும் என் கிட்ட பேசினது இல்லை. மெசேஜும் அனுப்புனது இல்லை. அதனாலதான் நான் அவனைப் பத்தி எந்த கம்ப்ளைன்ட்டும் பண்ணலை. இவனை இங்க பார்த்ததும் உங்ககிட்ட சொல்லணும்னு தோணுச்சு, சொல்லிட்டேன்” என்றாள்.
“அப்படி எல்லாம் யாரையும் ஈசியா நினைச்சிடாதே. இவனே ஒரு சைக்கோவா இருந்தா என்ன செய்வ?” என நந்தா கேட்க, காவ்யா பயந்துபோய் நந்தாவை பார்த்தாள்.
“உன்னை பயமுறுத்த சொல்லலை காவ்யா. எப்பவும் கவனமா இருன்னுதான் சொல்றேன். எதையும் அலட்சியப்படுத்தாத. நான் இருக்கும்போது ஏன் பயப்படுற? உனக்கும் பிள்ளைக்கும் எதுவும் ஆக விட்டுடுவேனா? நான் பார்த்துக்குறேன். பயப்படாம தைரியமா போ” என நந்தா கூற, தைரியமாக வெளியே வந்தாள் காவ்யா.
அப்பொழுது ஆர்த்தி உள்ளே நுழைந்தாள். ஏதோ சந்தேகம் கேட்க நந்தாவும் விளக்கிக் கொண்டிருந்தான். அவன் கூறியதை கவனிக்காமல் அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள். எரிச்சலான நந்தா, “இப்ப என்ன சொன்னேன் திரும்ப சொல்லுங்க?” எனக் கேட்டான்.
ஆர்த்தி தடுமாற, கண்களை மூடி தலையில் கை வைத்துக் கொண்டவன், “எனக்கு கோவம் வர்றதுக்குள்ள வெளியில போங்க” எனக்கூற ஆத்திரத்துடன் வெளியேறினாள் ஆர்த்தி.
அன்று காலையில் காவ்யா ஸ்கூட்டரில் அலுவலகம் வந்ததால் வீட்டிற்கு அன்று மட்டும் ஸ்கூட்டியில் செல்ல அனுமதித்தான். அவள் பின்னாலேயே காரை ஓட்டிக்கொண்டு சென்றான். அவர்கள் வந்தபின் அர்ஜுன் ஓடிவந்து நந்தாவை கட்டிக்கொள்ள, தன்னை விட்டு அர்ஜுன் நந்தாவை தேடுவதும் காவ்யாவிற்கு சந்தோஷமாகத்தான் இருந்தது.
அன்று இரவு, அர்ஜுன் முன்னரே உறங்கிவிட பின்னர்தான் இருவரும் உணவருந்தினர். பின் படுக்கையறைக்குள் காவ்யா செல்ல, அவள் கையைப் பிடித்து நிறுத்தினான்.
“சாரிடி” என்றான். காவ்யா எதற்காக சாரி சொல்கிறான் என்பது போல பார்த்து நிற்க, “நான் இல்லாம நீ ரொம்ப கஷ்டப்பட்டிருக்க. என்னை நினைச்சாலே எனக்கு கோபமா வருது. நீ பட்ட கஷ்டத்துக்கு எல்லாம் சாரி” என்றவன் மெல்ல அவளை அணைக்க, நந்தாவின் இதயத்துடிப்பை கேட்டுக்கொண்டே அவன் மார்பில் சாய்ந்து கண்மூடி தன்னை மறந்து நின்ற காவ்யா, சில நொடிகளில் கோவமாய் அவனை தள்ளி விட்டு அறைக்குள் சென்றாள்.
“எத்தனை நாளைக்கு இந்த கண்ணாமூச்சி ஆட்டம்ன்னு பார்க்கிறேன்” எனக் கூறிக்கொண்டே தானும் படுத்துக் கொண்டான்.