காவ்யாவின் அன்னை இறந்து ஒரு வாரம் ஆகியிருந்தது. நந்தாவின் நான்கு நாட்கள் விடுப்பு முடிந்து, வார இறுதி விடுமுறையும் முடிந்து அன்று அலுவலகம் செல்ல வேண்டும். தன் மேல் படுத்து உறங்கிக் கொண்டிருந்த அர்ஜுனை படுக்கையில் கிடத்திவிட்டு எழுந்து கொண்டான்.
காவ்யாவை பார்த்தான். இரவில் அழுதிருப்பாள் போல. கண் இமைகள் இரண்டும் தடித்திருந்தன. இப்படித்தான்…. நன்றாக இருக்கிறாள், திடீரென தன் அன்னையை நினைத்து அழுகிறாள். அவனுக்கு காவ்யாவை தனியே விட்டுச் செல்ல மனமில்லை. இருந்தாலும் சென்றே ஆக வேண்டிய சூழல். அவனுடைய ப்ராஜெக்ட் சம்பந்தமாக முக்கியமான சில வேலைகள் இருந்தன.
சத்தமில்லாமல் குளியலறை சென்று வந்தான். கதவை திறந்து பால் பாக்கெட்டை எடுக்க, மங்களமும் பால் பாக்கெட் எடுக்க வெளியே வந்தார்.
“எப்படி இருக்கா காவ்யா?” எனக் கேட்டார்.
“நல்லாத்தான் இருக்கா. திடீர் திடீர்னு அவங்க அம்மாவை நினைச்சு அழறா. நான் இன்னைக்கு ஆஃபீஸ் போயே ஆகணும். தப்பா எடுத்துக்கலைன்னா நீங்க கொஞ்சம் ஃப்ரீயா இருக்கிற நேரத்துல காவ்யாவை வந்து பார்த்துட்டு போக முடியுமா?” எனக் கேட்டான்.
“இதுல தப்பா எடுத்துக்க என்ன இருக்கு? நான் பார்த்துக்கிறேன்” என உறுதியளித்தார்.
காவ்யாவை எழுப்பாமல் நந்தாவே சமையலை செய்ய ஆரம்பித்தான். மாவு இல்லாததால் சேமியா உப்புமா செய்து கொண்டு மதியத்திற்கு காய்கறி சாதம் செய்து முடித்தான். நேரம் 8 ஆகியிருந்தது. அறைக்குள் சென்று பார்த்தான். தாயும், மகனும் இன்னும் உறக்கத்தில்தான் இருந்தனர்.
‘தான் இல்லாவிட்டால் ஒழுங்காக சாப்பிட மாட்டாள். இப்போது எழுப்பினால்தான் காலை சாப்பாட்டையாவது அவளை சாப்பிட வைக்கலாம்’ என்றெண்ணி அவளை எழுப்பினான். இரவு சரியாக தூங்காததால் இவன் எழுப்பியும் அவள் விழிக்கவில்லை.
கையால் அவளை எழுந்திருக்க சொல்லி உலுக்க, உறக்கத்தில் அவன் கையைப் பற்றி இழுத்தாள் காவ்யா. பேலன்ஸ் இல்லாத நந்தா தடுமாறி காவ்யாவின் மேலே விழுந்தான். அதிர்ச்சியில் கண்விழித்த காவ்யா, “அறிவிருக்கா? எழுந்திருங்க முதல்ல” என்றாள்.
“என் கையை பிடிச்சு நீதாண்டி என்னை இழுத்த. நான் விழுந்துட்டேன். என்னை பார்த்து அறவிருக்கான்னு கேட்குற?” என அவள் மேலிருந்து எழும்பாமலேயே கேட்டான்.
“வலிக்குது எழுந்திருங்க?” என்றாள் காவ்யா. கைகளை ஊன்றி எழுவது போல எழுந்து, வேண்டுமென்றே அவள் மீது வலிக்காதவாறு மெதுவாக மீண்டும் விழுந்தான். காவ்யா அவஸ்தையில் நெளிந்தாள்.
“தள்ளுங்க, எனக்கு மூச்சு விட முடியல” என்றாள். அவளிடமிருந்து விலகி, அவள் பக்கத்தில் படுக்கையில் படுத்துக் கொண்டே, அவளைப் பார்த்து குறும்பாக சிரிக்க, தலையணையை எடுத்து அவன் மீது விட்டெறிந்தாள். விட்டெறிந்த தலையணையை பிடித்த நந்தா அதை இறுக அணைத்துக் கொண்டான். வேகமாக அவன் அணைப்பில் இருந்த தலையணையை பிடித்திழுத்தாள்.
“உன்னைக் கட்டிப்பிடிச்சான் தப்பு. தலையணையைக் கூட கட்டிப்பிடிக்க கூடாதா? ஏன் உனக்கு பொறாமையா இருக்கா?” எனக் கேட்டான்.
“நீ என்னை மனசுல நினைச்சுக்கிட்டுதான் அந்த தலையணையை கட்டிப்பிடிக்கிற” என்றாள்.
“இது என்னடி வம்பா இருக்கு? என் மனசு… நான் என்ன வேணா நினைப்பேன். உன்னை எதுவும் பண்ணினேனா? இல்லதானே?” என கேட்டுக்கொண்டே, சில்மிஷமாய் அவளை பார்த்து தலையணையை இன்னும் இறுக கட்டிபிடித்து முத்தமிட்டான்.
கடுப்பாகிப் போன காவ்யா படுக்கையிலிருந்து எழுந்து ஹாலிற்கு சென்றுவிட்டாள். அவள் பின்னாலேயே சென்ற நந்தா, “காலையிலேயே மூஞ்சை தூக்கி வெச்சுகாதே. நான் இன்னைக்கு ஆஃபீஸ்க்கு போகணும். இன்னும் ஒரு மணி நேரத்தில நான் கிளம்பிடுவேன். அதுக்குள்ள சமைச்சீன்னா சாப்பிட்டுட்டு போவேன். இல்லன்னா பட்டினிதான்” எனக் கூறினான்.
காவ்யா எழுந்து சமையலறைக்கு போக, அவள் கையை பிடித்து தடுத்து “ பல்லு கூட விளக்காம போய் சமைப்பியா? போடி… போய் முதல்ல பல்ல விளக்கிட்டு வா” என்றான்.
காவ்யா அவசரமாக குளியலறைக்கு சென்றுவிட்டு திரும்பி வர, மற்றொரு அறையில் இருந்த குளியலறையில் குளித்துக் கொண்டிருந்தான் நந்தா. வேகமாக காவ்யா சமையலறைக்கு செல்ல, அங்கே எல்லாம் சமைக்கப்பட்டிருந்தது. “எல்லாத்தையும் முடிச்சுட்டு என்னை டென்ஷன் பண்றான்” என புலம்பிக்கொண்டே அவனுக்கு மதிய சாப்பாட்டை சாப்பாட்டு டப்பாவில் அடைத்தாள்.
அதற்குள் அர்ஜுனும் எழுந்துவிட, அவனை காவ்யா சுத்தப்படுத்தி பால் கலந்து கொடுத்தாள். குளித்து தயாரான நந்தா காவ்யாவுடன் சேர்ந்து உணவருந்திவிட்டு, அர்ஜுனையும் கொஞ்சிவிட்டு,
“அழுதுகிட்டே இல்லாம குழந்தையை கவனி. நீயும் பட்டினியா இல்லாம சாப்பிடு. நான் ஈவ்னிங் சீக்கிரம் வந்துடுறேன். எதுவும்னா எனக்கு உடனே கால் பண்ணு” என சொல்லிச் சென்றான்.
‘இப்போது அம்மா இல்லை. இவனும் தன்னைத் தேடி வராவிட்டால்…..?’ என்ற நினைவே காவ்யாவிற்கு பயங்கரமானதாக இருந்தது. நந்தா இப்போது காவ்யாவுடன் இருப்பதால்தான் அவளால் காமாட்சியின் இழப்பை தாங்கிக் கொள்ள முடிந்தது.
அவனின் முக்கியத்துவம் தெரிந்தாலும், ‘அவன் வீட்டு ஆட்கள்தான் முக்கியம் என்று அவர்களுக்காக என்னை விட்டுச் சென்றான். எனக்கு தேவைப்படும் நேரத்தில் என் அருகில் இல்லாது போனான்’ என்றும் நினைத்தாள்.
இப்படியாக நந்தாவின் வருகை காவ்யாவின் மனதுக்கு ஒரு புறம் ஆறுதலாக இருக்க, இவ்வளவு நாள் அவளுடன் இல்லாது போனதால் அவள் மனதில் ஏற்பட்ட ரணம் இன்னும் ஆறாமலேயே இருந்தது.
நந்தா தன் அலுவலகத்திற்கு வந்து விட்டான். ஆர்த்தி ஏதோ சந்தேகம் கேட்பது போல அவனது அறைக்கு வந்தாள். வாசுகி அவளிடம் விவரம் ஏதும் சொல்லாததால் நந்தா காவ்யாவுடன் தங்கியிருப்பது அவளுக்கு தெரியாது. காவ்யாதான் அவன் மனைவி என்பது கூட அவளுக்கு தெரியாது.
இவன் அவளது சந்தேகத்தை தெளிவுபடுத்தியதும் உடனே செல்லாமல், “என்ன சார் இவ்ளோ நாள் லீவ். உடம்புக்கு முடியலையா?” எனக் கேட்டாள்.
“ஆமாம், உடம்பு முடியலை. எனக்கில்லை. என் மனைவிக்கு, அதான் ஒன் வீக் லீவ்” என்றான் நந்தா.
அதிர்ச்சியடைந்த ஆர்த்தி, “நீங்க…. உங்களுக்கு டிவோர்ஸ் ஆகப்போகுதுன்னு அண்ணி சொன்னாங்க?” எனக் கேட்டாள்.
“அவ ஏதாவது லூசுத்தனமா உளறியிருப்பா. அப்படி எதுவும் இல்லை. நான் என் மனைவி கூடவும், மகன் கூடவும்தான் இருக்கேன். என் மனைவி யாருன்னு தெரியுமா?” எனக் கேட்டான்.
‘தெரியாது’ என்பதாக இடவலமாக தலையாட்டினாள் ஆர்த்தி.
“காவ்யா… காவ்யாதான் என் மனைவி. என் சிஸ்டர் சொல்றதையெல்லாம் கேட்டுகிட்டு தேவையில்லாம எதையும் மனசுல நினைச்சுக்காதீங்க. இந்த ப்ராஜெக்ட்ல இருந்து மாறணும்னா கூட நான் ஹெல்ப் பண்றேன்” என்றான்.
அவள் பிரம்மை பிடித்தவளாய் நின்றிருக்க, “ஆர்த்தி…. ஆர்த்தி…” என அழைத்தான். இரண்டாவது அழைப்பில் சுயநினைவு அடைந்தவள், “இல்ல வேணாம் சார். நான் இந்த ப்ராஜக்டிலேயே இருக்கேன்” என கூறி விட்டு வெளியே சென்றாள்.
சில நிமிடங்கள் யோசனையில் ஆழ்ந்தவள், வாசுகியிடம் கைப்பேசியில் பேசினாள். நந்தா கூறியதை சொன்னாள். வாசுகிக்கும் அப்பொழுதுதான் காவ்யா இந்த அலுவலகத்தில் வேலை பார்ப்பதே தெரியவந்தது.
“இங்க பாரு ஆர்த்தி. அண்ணனுக்கு குழந்தை இருக்கிற விஷயம் இப்பதான் தெரியும். அதுதான் காவ்யாகிட்ட போய் இருக்கார். அவங்களுக்குள்ள இன்னும் எதுவும் சரியாகலை. காவ்யா ரொம்ப வீம்பு பிடிச்சவ. இதெல்லாம் கொஞ்ச நாளைக்குதான்”
“நீதானே என் அண்ணனை என் கல்யாணத்துல பார்த்ததிலிருந்து அவரை லவ் பண்றதா சொன்ன. அவருக்காகதானே அவர் ஆஃபீஸ்ல போய் வேலைக்கு சேர்ந்த. அவருக்கு கல்யாணமானது உனக்கு முன்னாடியே தெரியும்தானே. தெரிஞ்சும் அவரை கல்யாணம் பண்ணிக்க ஆசைப்பட்டதானே. கொஞ்ச நாள் பொறுமையா இரு. என் அண்ணனுக்கும் உனக்கும் கல்யாணம் செய்ய வேண்டியது என் பொறுப்பு” என்றாள் வாசுகி.
நந்தா சொல்லியதில் குழம்பிப்போன ஆர்த்தி வாசுகியிடம் பேசிவிட்டு இன்னும் குழம்பிப் போனாள். கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த ஆர்த்தி, தன் அண்ணனின் திருமணத்தின் போதுதான் நந்தாவைப் பார்த்தாள். அவன் மணமானவன் என்று அறியாமலேயே விரும்பத் தொடங்கி விட்டாள். பின் ஒரு வாரத்தில் அவன் வெளிநாடு சென்று விட்டான். அதற்குப் பின்னர்தான் அவன் பற்றிய விவரங்கள் அவளுக்கு தெரிய வந்தது.
மணமானவன் எனத்தெரிந்து ஏமாற்றம் அடைந்து விட்டாலும், அவனை ஆர்த்தியால் மறக்க முடியவில்லை. நந்தாவுக்கும் அவன் மனைவிக்கும் பிரச்சனை என தெரிந்த பின்தான் வாசுகியிடம் தன் விருப்பத்தைக் கூறினாள். அவளும் இந்த திருமணத்தை நடத்தி வைப்பதாக உறுதியளித்திருந்தாள். அவனுக்காகவே இந்த நிறுவனத்தில் ஒரு வருடமாக வேலை பார்த்து வருகிறாள்.
ஆர்த்தி ஆசைப்பட்டு வாசுகியிடம் கூறும் பொழுதே, அவள் அறிவுரை வழங்கியிருந்தால் நந்தாவை மறந்திருப்பாள். திருமணத்தை நடத்தி வைக்கிறேன் என உறுதியளித்ததில் மூன்று வருடங்களாக அவனைத்தான் மனதில் நினைத்துக் கொண்டிருக்கிறாள். இனி மறப்பது என்பது அவளுக்கு முடியாத காரியம்.
இப்போது என்ன செய்வது என யோசித்தாள். ‘காவ்யாவும் இவனுடைய குழுவிலிருந்து விலக விரும்பினாள்தானே’ என நினைத்தாள். ‘விலக விரும்பினாள் ஆனால் விலகவில்லையே’ எனவும் நினைத்தாள். எப்படியோ வாசுகி கூறுவது போல இவர்கள் பிரச்சனை சரியாகாமல் தனக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தால் ஏன் அதை விட வேண்டும். காத்திருப்போம் என முடிவெடுத்துக் கொண்டாள்.
அன்று மாலையில் வீடு திரும்பிய நந்தா வீட்டுக்கு தேவையான காய்கறிகள், பழங்கள் என வாங்கி வந்திருந்தான். அர்ஜுனுக்காக மூன்று சக்கர சைக்கிள் ஒன்றும் வாங்கியிருந்தான். அவன் உள்ளே வரவும் அர்ஜுன் ஓடிவந்து அவன் கால்களைக் கட்டிக்கொண்டான்.
“அப்புக்குட்டி…. அப்பா கை கழுவிட்டு டிரஸ் மாத்திட்டு வந்திடறேன். இல்லைன்னா உங்க அம்மா கால் கால்ன்னு கத்துவா” எனக் கூறிவிட்டு, வேகமாக சென்று தன்னை சுத்தப் படுத்திக் கொண்டு வந்தான்.
சைக்கிளின் கவரை பிரித்து அதில் அர்ஜுனை அமர வைத்து சைக்கிள் ஓட்ட சொல்லிக் கொடுத்தான். அர்ஜுன் மிகவும் சந்தோஷமாக வீட்டிற்குள்ளேயே ஓட்டினான். காவ்யா தேநீர் கொண்டு வந்து கொடுத்தாள்.
வாங்கிக் கொண்டவன் “மதியம் ஒழுங்கா சாப்பிட்டியா?” எனக் கேட்டான்.
“ம்…ம்…” என மட்டும் பதிலளித்தாள் காவ்யா.
“ஏன் டல்லா இருக்க? உடம்புக்கு திரும்பி ஏதாவது பண்ணுதா?” எனக் கேட்டு அவள் நெற்றியில் கை வைத்துப் பார்த்தான் நந்தா.
“சும்மா… சும்மா… இப்படி தொடுற வேலையெல்லாம் வச்சுக்காதீங்க” என அவன் கையை தட்டிவிட்டாள் காவ்யா.
“ஏன் நான் தொட்டா… கம்பளிப்பூச்சி ஊருற மாதிரி இருக்கா?” என நக்கலாகக் கேட்டான்.
“இல்ல…. ஆசிட் பட்ட மாதிரி இருக்கு” என கூறிவிட்டு உள்ளே சென்றாள் காவ்யா.
தேநீரை குடித்து முடித்தவன் கோப்பையை வைக்க சமையலறை சென்றான். காவ்யா பாத்திரங்களை கழுவி வைத்துக் கொண்டிருந்தாள். கோப்பையை வைத்தவன், திடீரென காவ்யாவை வேகமாக இழுத்து அணைத்தான். அவன் இழுக்கும்போது தண்ணீர் குழாயின் மேல் காவ்யா கை வைத்திருக்க, லூசாக இருந்த குமிழ் காவ்யாவின் கையோடு கழண்டு வந்து, தண்ணீர் சீறியடித்து இருவரும் நனைந்தனர்.
“விடுங்க… விடுங்கன்னு சொல்றேன்ல” என காவ்யா திமிற, “நான் தொட்டா ஆசிட் பட்ட மாதிரி இருக்கும்னு சொன்ன? பார்த்தியா இப்போ சில்லுன்னு இருக்குல்ல” என்றான்.
“எங்க பார்த்தாலும் தண்ணியாகிடுச்சு, என்னை விடு” என ஒருமைக்கு தாவியிருந்தாள் காவ்யா.
“அப்பப்ப இப்படி நீ வா போன்னு நீ பேசறது கூட கிக்காதாண்டி இருக்கு” என்றான்.
“தண்ணி வேஸ்ட் ஆகுது” என்றாள்.
“சொல்லு…. இப்ப நான் தொட்டா ஆசிட் பட்ட மாதிரி இருக்கா?” எனக் கேட்டான்.
“இல்ல” என்றாள் காவ்யா.
“சென்னையில தண்ணிக் கஷ்டம். அதனால இத்தோட விடுறேன். இல்லைனா இன்னும் ஒரு மணி நேரம் உன்னை இப்படியே நிக்க வச்சிருப்பேன்” எனக் கூறி, அவளை விட்டுவிட்டு குமிழை வாங்கி குழாயை அடைத்தான்.
உடல் முழுவதும் ஈரத்துடன், அவனை முறைத்துக் கொண்டே நின்றிருந்தாள் காவ்யா.
“வேற ஏதாவது என்கிட்ட சொல்லணுமா?” எனக் கேட்டான் நந்தா. அவன் கேட்ட விதத்தில் பயந்து போன காவ்யா, வேகமாக அவள் அறைக்கு சென்று கதவை அடைத்துக் கொண்டாள். உடை மாற்றிக் கொண்டு இவள் திரும்ப வரும் பொழுது, நந்தா தரையைத் துடைத்து முடித்திருந்தான். அர்ஜுனும் அவன் அருகில் நின்று கொண்டிருந்தான்.
“போங்க போய் டிரெஸ் மாத்துங்க” என்றாள் காவ்யா.
அவளை ஆழ்ந்து பார்த்தவன், அர்ஜுனின் கன்னத்தில் இருந்த மையை லேசாக வழித்து, காவ்யாவின் கன்னத்தில் வைத்து விட்டு, “திருஷ்டிப் பொட்டுடி. அவ்ளோ அழகா இருக்க. என் கண்ணு படக்கூடாதுல்ல அதுக்குதான்” என்றான்.
கன்னங்கள் இரண்டிலும் செம்மை பரவ, தன் வெட்கத்தை மறைக்க முகத்தை திருப்பிக் கொண்டாள். “மூஞ்சை திருப்பாத, நீ வெட்கப்படுறதை நான் எப்பவோ பார்த்துட்டேன்” எனக் கூறிக் கொண்டே அங்கிருந்து சென்றான்.
உடை மாற்றிக் கொண்டு வந்தவன், அர்ஜுனை தூக்கிக் கொண்டு “வா… கீழ பார்க் இருக்குல்ல அங்க போகலாம்” என அழைத்தான். காவ்யாவிற்கும் வீட்டிற்குள்ளேயே இருப்பது இறுக்கமாக இருக்க அவனுடன் சென்றாள்.
அப்பார்ட்மெண்டின் உள்ளேயே குழந்தைகளுக்கென சிறிய பூங்கா இருந்தது. அங்கிருந்த மரப் பெஞ்சில் காவ்யா அமர்ந்துகொள்ள, அர்ஜுனை ஊஞ்சல், சறுக்கு என எல்லாவற்றிலும் வைத்து விளையாடினான் நந்தா.
காவ்யாவை தெரிந்த சிலர் அவளிடம் நலம் விசாரித்தனர். அவர்களுடன் பேசிக் கொண்டிருந்தாலும் நந்தாவையும் அர்ஜுனனையும் இடையிடையே பார்த்துக் கொண்டேயிருந்தாள்.
“இது என்ன கன்னத்துல கருப்பா?” என ஒரு பெண் கேட்க, “அது… அது…” என தடுமாறியவள் “அர்ஜுன் மை பொட்டு, அவனை தூக்கும்போது பட்டிருக்கும்” எனக்கூறி சமாளித்தாள்.
“இரு துடைச்சி விடுறேன்” என அந்தப் பெண் துடைக்கப் போக, வேகமாக பின் சென்றவள், “வேண்டாம்… இருக்கட்டும்… வீட்டுக்கு போய் நானே துடைச்சிக்கிறேன்” என்றாள்.
அவளை ஒரு மாதிரியாக பார்த்து கொண்டே அந்தப் பெண் சென்று விட்டாள். மீண்டும் பெஞ்சில் போய் அமர்ந்து கொண்டாள் காவ்யா.
காமாட்சி இருக்கும்போது தினமும் அர்ஜுனை இங்கு அழைத்து வந்தாலும், நந்தாவை போன்று அவரால் இப்படி விளையாட முடியாது. காவ்யா ஏதாவது விடுமுறை நாட்களில் அழைத்து வருவாள். அவளாலும் அர்ஜுனுக்கு ஈடு கொடுக்க முடியாது. சோர்ந்து விடுவாள். நந்தா சளைக்காமல் அவனுடன் விளையாடிக்கொண்டிருந்தான். அதனால் என்றுமில்லாமல் அர்ஜுன் மிகுந்த உற்சாகமாக இருந்தான். நந்தாவுடன் மிகவும் ஒட்டிக் கொண்டான்.
காவ்யாவின் மனமும் அர்ஜுன் விளையாடிக்கொண்டிருந்த ஊஞ்சல் போலத்தான் ஊசலாடிக் கொண்டிருந்தது. மனம் அவனை விரும்புகிறது. அதை அவளால் மறுக்க முடியாது. ஆனால் ஏற்றுக்கொள்ள முடியாமல் தடுமாறியது.
சிறிது நேரம் கழித்து “நைட் டின்னர் செய்யணும். நான் கிளம்புறேன். நீங்க அப்புறமா வாங்க” எனக் கூறினாள் காவ்யா.
“நீ இங்கேயே இரு, நானும் டின்னர் செய்ய ஹெல்ப் பண்றேன். சீக்கிரம் பண்ணிடலாம். உனக்கு கொஞ்சம் ரிலாக்ஸா இருக்கும்” எனக் கூறி அவளை அங்கேயே இருக்க வைத்தான்.
நன்றாக அர்ஜுனை விளையாட வைத்துதான் கிளம்பினான். வீட்டிற்கு வந்ததும் “என்ன காவ்யா இது? அர்ஜுனுக்கு ஏன் இவ்வளவு முடி வளர்த்து வச்சிருக்க? எப்படி வேர்த்து வழியுது பாரு” என்றான்.
“அது… அவனுக்கு பிறந்ததிலிருந்து முடியே எடுக்கலை. அதான்” என்றாள்.
“ஏன்..? ஏன் எடுக்கலை?” எனக் கேட்டான்.
“அப்பா இறந்துட்டார், முதல் திதி முடியற வரை செய்யலை. அம்மா குலதெய்வம் கோவிலில் தான் முதல் மொட்டை போடணும்னு சொன்னாங்க. அதுக்குள்ள இவனுக்கு டெங்கு ஃபீவர். இப்படி ஏதாவது தடங்கல் வந்து செய்யவே இல்லை. இப்ப அம்மாவும் இறந்துட்டாங்க” என கண் கலங்கினாள்.
“அப்போ உங்க அம்மாவுக்கு முதல் திதி முடியற வரை மொட்டை போடக் கூடாதா?” எனக் கேட்டான்.
“குழந்தை கஷ்டப்படும்போது இதெல்லாம் பார்க்க கூடாது. என்ன செய்யலாம்னு நாளைக்கு மங்களம் அம்மாகிட்ட கேட்டு வை” என்றான். காவ்யாவும் “சரி” என்றாள்.
நந்தா அர்ஜுனை உடல் கழுவி அழைத்து வந்தான். காவ்யா மாவு அரைத்து வைத்திருக்க இட்லியும், தேங்காய் சட்னியும் செய்து மூவரும் உணவருந்தினர்.
அர்ஜுனை நடுவில் படுக்க வைத்து விட்டு, இருவரும் ஆளுக்கொரு பக்கம் படுத்துக் கொண்டனர். சிறிது நேரம் கழித்து எழுந்த நந்தா, எப்பொழுதும் போல தன் மகனின் நெற்றியில் முத்தமிட்டு, ஆசை மனைவியின் நெற்றியிலும் முத்தமிட்டு விட்டு படுத்துக்கொண்டான்.
மேகமூட்டம் அதிகமில்லா வான் வெளியில், வெள்ளி நிலா காய்ந்து கொண்டிருந்தது.