காவ்யாவைப் பார்ப்பதற்காக கீர்த்தி வந்திருந்தாள். தன் அண்ணியிடம் சென்று துக்கம் விசாரித்தாள். காவ்யாவுக்கு கீர்த்தி மீது எந்த வருத்தமும் இல்லாததால் அவளிடம் சாதாரணமாகவே நடந்து கொண்டாள். காவ்யாவை கீர்த்தியும் பரிசோதித்துவிட்டு, “பயப்பட ஒன்றும் இல்லை. சாதாரண காய்ச்சல்தான். ரெஸ்ட் எடுத்தா சரியாகிடும்” என்று கூறினாள்.
காவ்யா சோர்வாக இருக்க சோஃபாவிலேயே படுத்துக் கொண்டாள். அர்ஜுனுடன் கீர்த்தி சிறிது நேரம் விளையாடினாள். அவள் வீட்டில் யாரிடமும் சொல்லிக் கொண்டு வரவில்லை. நந்தாவிடம் முகவரி கேட்டுக்கொண்டு தனியாகத்தான் வந்திருந்தாள்.
கீர்த்தி அர்ஜுனுடன் இருக்க, நந்தா மதிய சமையல் செய்தான். தன் அண்ணியிடம் வந்த கீர்த்தி, “அண்ணனை சின்ன வயசிலிருந்து பார்க்கிறேன். எப்பவும் அளந்துதான் பேசுவார். வாய்விட்டு சிரிச்சு கூட நாங்க யாரும் பார்த்ததில்லை. உங்களை கல்யாணம் செஞ்சுகிட்டு வந்த பிறகுதான் அண்ணன் முகத்தில் சந்தோஷத்தையே பார்த்தேன். அது கூட அண்ணனுக்கு நிலைக்கல. திருப்பியும் பழைய மாதிரியே ஆயிட்டார். அவருக்கு நீங்கதான் அண்ணி எல்லாமே. என்ன கோவம் இருந்தாலும், மறந்து அவரோட நீங்க சேர்ந்து வாழனும்” என்றாள்.
“நீ எப்போ இவ்ளோ பெரிய பொண்ணு ஆன?” எனக் கேட்டாள் காவ்யா.
“அண்ணி நான் இப்போ பெரிய பொண்ணுதான். இன்னும் மூணு மாசத்துல நான் ஒரு டாக்டர் தெரியுமா?” எனக் கேட்டாள் கீர்த்தி.
“இல்லன்னா இப்ப போனாதான் நான் மதியம் ஹாஸ்பிடல் போக முடியும். லஞ்ச் எடுத்துட்டுதான் வந்திருக்கேன். நான் கிளம்புறேன். இன்னொரு நாள் வர்றேன்” என கூறி விட்டு விடைபெற்று சென்றாள் கீர்த்தி.
“உங்க வீட்டிலேயே மனசாட்சி உள்ள ஒரே ஆளு இவ மட்டும்தான்” என்றாள் காவ்யா.
“ஏன்? அப்ப எனக்கு மனசாட்சி இல்லையா?” எனக் கேட்டான் நந்தா.
“மனசாட்சி இருந்திருந்தா கட்டின பொண்டாட்டியை…” என காவ்யா ஆரம்பிக்க, “ஐயோ காவ்யா அடுப்புல எதையோ வச்சுட்டு வந்துட்டேன் போல, தீயுர வாடை வருது. இதோ வந்துடறேன்” என ஓடியே சென்றுவிட்டான் நந்தா.
நந்தா மதியத்திற்கு குழைவாக சாதம் வடித்து ரசம் மட்டும் செய்திருந்தான். அர்ஜுனுக்கு சாப்பாடு ஊட்டி விட்டு அவனை உறங்க வைத்தான். பின் காவ்யாவையும் சாப்பிட அழைத்தான். இருவரும் அமைதியாக சாப்பிட்டு முடித்தனர்.
“சரி… அது என் வீடாவே இருக்கட்டும். எனக்கு அங்க போக பிடிக்கலை. நான் இங்கேயே இருந்துக்கிறேன்” என்றான்.
“நீங்க நினைச்சா விட்டுட்டு போவீங்க. நினைச்சா திரும்பி வருவீங்க. இதெல்லாம் சரியா வராது. மூணு வருஷமா எப்படி இருந்தோமோ அப்படியே இருந்துக்கலாம். முறைப்படி டிவோர்ஸ் வாங்கிக்கலாம். நீங்க உங்க குடும்பத்தை பாருங்க. அவங்க சொல்ற பொண்ணை கல்யாணம் பண்ணிக்குங்க” என்றாள் காவ்யா.
கைகளை கட்டிக் கொண்டு அவளைத் தீர்க்கமாக பார்த்தான். “இப்ப என்ன உன் பிரச்சனை? எப்படியும் நான் உன்னை விட்டு போக மாட்டேன்னு உனக்கு நல்லா தெரியும். உன் கூட நான் இருக்கணும்னுதான் நீயும் நினைக்கிற. இப்படி எல்லாம் நீ பேசி, நான் கெஞ்சி அது மூலமா உன் ஈகோவுக்கு தீனி போட்டுக்கணும். அவ்வளவுதானே…? நீ நடத்து. நல்லா நடத்து” என்றான்.
காவ்யா முறைத்துக் கொண்டிருக்க, “நைட் எல்லாம் புள்ள தூங்க விட மாட்டேங்கிறான். பகல்ல பொண்டாட்டி கண்டதையும் பேசி மூட் அவுட் ஆக வச்சி தூங்கவிட மாட்டேங்குறா” என புலம்பிக்கொண்டே அர்ஜுன் அருகில் சென்று படுத்துக் கொண்டான்.
பின்னாலேயே கோவமாக காவ்யா வர, “என்னடி இப்போ? எதுக்கு பின்னாடியே வர? தூக்கம் கண்ணை கட்டுது. கொஞ்ச நேரம் மனுஷன தூங்க விடு. தூங்கி எந்திரிச்சு வந்து ஃபிரஷ்ஷா பேசலாம்” எனக்கூறி குப்புறப் படுத்துக் கொண்டான். காவ்யா வெளியே சென்று சோஃபாவில் படுத்துக் கொண்டாள்.
மாலையில் எதிர்வீட்டு மங்களம் காவ்யாவை பார்க்க வந்திருந்தார். அவளின் நலன் விசாரித்த பிறகு, “ஏன் கவலைப்படுற? உன் அம்மாவுக்கு மகன் மாதிரி, உன் புருஷன் எல்லாம் செஞ்சு நல்லவிதமா அனுப்பி வச்சிட்டார். உனக்கு உடம்பு முடியல்லன்னதும் எப்படி பார்த்துக்கிறார். இனிமே இவங்க ரெண்டு பேருக்காகவும் மனச தேத்திக்கிட்டு கவலையிலிருந்து வெளியில வா. நீ சந்தோஷமா இருந்தாதான் உன் அம்மாவோட ஆன்மா சாந்தி அடையும்” எனக் கூறிச் சென்றார்.
அம்மாவின் ஆன்மா என்றதும் நேற்று காலையில், தன் அம்மா கூறியது நினைவுக்கு வந்தது. ‘நந்தாவுடன் சேர்ந்து வாழ்ந்தால்தானே நிம்மதி என்று கூறினார். இப்போது இவனோடு சேர்ந்து வாழாமல் போனால் அம்மா ஆன்மா சாந்தி அடையாதோ?’ என நினைத்தாள்.
ஆனால் தான் முக்கியம் இல்லை என்று, தான் கர்ப்பமாக இருப்பது தெரிந்தும் தன்னை விட்டு அவன் வெளிநாடு சென்றதை மன்னிக்க முடியாமல் தவித்தாள். ஒருமனம் அவனுடன் சேர்ந்து வாழ எடுத்துக்கூற, ஒருமனம் அவன் வேண்டாம் எனக் கூற முடிவு எடுக்க முடியாமல் தடுமாறினாள். தலையைப் பிடித்துக் கொண்டு உட்கார்ந்திருந்தாள். நந்தா எழுந்து வந்ததை கவனிக்கவில்லை. இவளைப் பார்த்துக் கொண்டே சமையலறை சென்றவன் தேநீர் தயாரித்து எடுத்து வந்தான்.
“காவ்யா இதை குடி, பெட்டரா இருக்கும்” என ஒரு தேநீர் கோப்பையை நீட்டினான். தயக்கத்தோடு வாங்கிக் குடித்தாள்.
“நான் உன்னை விட்டு எங்கேயும் போகமாட்டேன். முன்னாடி நீ சொன்ன மாதிரியே நாம அவங்களோட சேர்ந்து இருக்க வேண்டாம். உன்னை விட்டுட்டு நான் வெளிநாடும் போக மாட்டேன். அப்படியே தவிர்க்க முடியாமல் நான் போறதா இருந்தாலும், இப்ப என்கூட நீயும் அர்ஜுனும் வரலாம்தானே. கீர்த்திக்கு எந்த கடனும் வாங்காமல் செய்யுற அளவுக்குதான் இப்போ என் நிலைமை இருக்கு. இன்னும் என்ன தடை நம்ம சேர்ந்து வாழ?” எனக் கேட்டான் நந்தா.
“இது எல்லாம் இப்ப நீங்க சொல்றப்போ நல்லாயிருக்கு. ஆனா அன்னைக்கு நான் முக்கியம் இல்லன்னு விட்டுட்டு போனீங்கதானே? உங்க பிள்ளையை நான் சுமக்கிறேன்னு தெரிஞ்சும் போனீங்கதானே? அதை என்னால மறக்கவும் முடியாது, மன்னிக்கவும் முடியாது” என்றாள்.
“சரி, நீ பிரக்னண்ட்டா இருந்தது எனக்கு தெரியாதுன்னு உனக்கு நான் ப்ரூவ் பண்றேன். உண்மை தெரிஞ்சதுக்கப்புறம் என்னோட சேர்ந்து வாழ்வதானே?” எனக்கேட்டான் நந்தா.
“இது ஒன்னும் சினிமாவோ டிராமாவோ கிடையாது. நான் ப்ரூவ் பண்றேன், அப்படி பண்ண முடியலைன்னா உன்னை விட்டுட்டு போயிடுறேன்னு சொல்ல. வாழ்க்கை….. நம்ம ரெண்டு பேரோட வாழ்க்கை மட்டும் இல்லை, நம்ம பையனோட வாழ்க்கையும் இதுல அடங்கியிருக்கு. அர்ஜுனுக்கு அப்பா அம்மா ரெண்டு பேருமே வேணும்”
“நான் சொல்றத நீ நம்ப மாட்டேங்குற. நானும் உண்மை என்னன்னு உனக்கு நிரூபிக்கிறேன்னு சொல்லிட்டேன். என்னால நிரூபிக்க முடிஞ்சாலும், முடியாட்டாலும் உங்களை விட்டு மட்டும் போக மாட்டேன். உண்மை தெரிஞ்சா என்னோட சேர்ந்து சந்தோஷமா வாழு. உண்மை என்னன்னு தெரியாம, நீயும் என்னை நம்பாம போனீன்னா இப்ப இருக்கிற மாதிரி முறைச்சிகிட்டே நீ ஒரு பக்கம் இரு. உன்னைப் பார்த்து ஏங்கிகிட்டே நான் ஒரு பக்கம் இருக்கேன் ” எனக்கூறிவிட்டு காலிக் கோப்பைகளை எடுத்து கொண்டு உள்ளே சென்று விட்டான்.
‘இவன் சொல்வதை நம்புவதா….? அப்படியென்றால் அப்பா பொய் சொல்லியிருப்பாரா? அப்பா ஏன் என்னிடம் பொய் சொல்ல வேண்டும்? பிறந்ததிலிருந்து அப்பா பொய் சொன்னதே கிடையாது. இந்த விஷயத்தில் மட்டும் சொல்லியிருப்பாரா?’ என அவள் அப்பாவுக்கு சாதகமாக யோசிக்க, ‘அப்போ நந்தா மட்டும் உன்கிட்ட பொய் சொல்லியிருக்கானா?’ என மனசாட்சி கேள்வி எழுப்ப, ‘அவன்தான் அவன் தங்கைக்கு எப்படியும் கல்யாணம் பண்ணனும்னு இருந்தானே? அதனால என்னை பற்றி தெரிந்திருந்தும் போயிருப்பான். இப்பொழுது எனக்கு பதில் சொல்ல முடியாமல் அவனுக்கு தெரியாதுன்னு சொல்கிறான். என்னைவிட அப்படி என்ன அவன் குடும்பம் அவனுக்கு முக்கியம்?’ என மனசாட்சிக்கு பதிலளித்து கேள்வியும் கேட்டாள். தன் அருகில் இருக்கும் கணவனின் வார்த்தைகளை நம்பாமல், எப்பொழுதோ மறைந்துவிட்ட தந்தையின் கூற்றை நம்பி, நந்தாவுடன் சேர்ந்து வாழாமல் முரண்டு பிடித்துக் கொண்டிருந்தாள் காவ்யா.
காவ்யாவிற்கு காய்ச்சல் நன்றாக குறைந்திருந்தது. அர்ஜுன் எழுந்துவிட்டான். “பாத்தி….பாத்தி எங்க?” என காவ்யாவிடம் கேட்க, அவனை அணைத்துக்கொண்டு தன் தாயின் நினைவில் மீண்டும் கண்ணீர் சொரிந்தாள். அவளைப் பார்த்த நந்தா, “நைட் டின்னர் செய்யணும். கிச்சன்ல சேர் போடுறேன். அங்க வந்து உட்கார்ந்துகிட்டு என்ன செய்யணும்னு சொல்லு. நான் செஞ்சுடுறேன்” எனக்கூறி அழைத்துச் சென்றான்.
“நீங்க நகருங்க, நானே செய்றேன்” என்றாள்.
“நீ நல்லா சமைக்க ஆரம்பிச்சுட்டியா… இல்ல முன்ன மாதிரிதானா?” எனக் கேட்டு அவளது முறைப்புக்கு ஆளானான்.
“எதுக்கு ரிஸ்க்? இன்னைக்கு நானே செய்றேன்” எனவும் கூறினான்.
“அப்போ நல்லாயிருக்கு, நல்லாயிருக்குன்னு சாப்பிட்டீங்களே. அதெல்லாம் பொய்யா?” எனக் கேட்டாள் காவ்யா.
“அம்மா தாயே, நீ எங்கேயிருந்து எங்க போறேன்னு எனக்கு நல்லா தெரியுது. புது பொண்டாட்டி, சமையலே தெரியாமல் புருஷனுக்காக ஆசையா சமைக்கும்போது, டேஸ்ட் எப்படி இருந்தாலும் நல்லா இருக்குன்னுதான் சொல்வாங்க. அதை பிடிச்சிக்கிட்டு அப்போ பொய் சொன்னீங்க… அதே மாதிரி நான் பிரக்னண்ட்டா இருந்தது தெரியாதுன்னு இப்பவும் பொய் சொல்றீங்கன்னு விதண்டாவாதமா பேசக்கூடாது” என்றான்.
“நான் எவ்வளவு கஷ்டத்தை வேணா தாங்கிக்குவேன். பாவம் அர்ஜுன். உனக்கு வேற உடம்பு முடியல. உங்க ரெண்டு பேருக்காகவும்தான் சொல்றேன். நானே சமைக்கிறேன், நீ அமைதியா உட்காரு” என்க காவ்யா கோபமாக வெளிநடப்பு செய்ய, அவள் கையைப் பிடித்துக் கொண்டவன்,
“நிலவெங்கே சென்றாலும் நிழல் பின்னால் வராதா? நீ வேண்டாம் என்றாலும் அது வட்டமிடாதா?” எனப் பாடினான்.
அவள் கையை உதறிவிட்டு செல்ல, அருகில் நின்ற அர்ஜுனை தூக்கிக்கொண்ட நந்தா,
“வானம் வரும் மேகம் வரும் கூட உன்னோடு நானும் வந்தால் என்னடியம்மா? நாம் வாழ்ந்திருக்கும் காலம் வரை ஆண் துணையாக ஏழை என்னை ஏற்றுக் கொள்ளம்மா” என வார்த்தைகளை கொஞ்சம் மாற்றிப் பாடினான்.
அவள் திரும்பி நின்று கைகளை கட்டிக்கொண்டு முறைத்துப் பார்க்க,
“என் நெஞ்சினில் தான் ஹொய்யா என் நெஞ்சினில் தான் நின்றாடும் வெள்ளி நிலவே” என தொடர்ந்து பாட, காவ்யாவுக்கு இதழோரம் சின்ன சிரிப்பு வந்தது.
“சிரிப்பு வந்தா சிரிக்கணும். அதுக்காக எல்லாம் நீ மனசு மாறிட்டேன்னு நினைக்க மாட்டேன். பயப்படாத” எனக் கூறினான் நந்தா.
கொஞ்சம் நன்றாகவே இதழ் விரித்து விட்டு, குழந்தையை வாங்கிக் கொண்டு போய் நாற்காலியில் அமர்ந்து கொண்டாள். இட்லியை ஒரு அடுப்பில் ஊற்றி வைத்துவிட்டு, தக்காளி தொக்கு செய்தான். செய்வதற்கு நந்தாவுக்கு நன்றாக தெரியும். இருந்தும் காவ்யாவின் சிந்தனையை அவள் அம்மாவின் இழப்பிலிருந்து திசைதிருப்ப, அவளிடம் கேட்டு கேட்டு செய்வது போல செய்தான்.
“காரம் கம்மியா போடுங்க. இல்லன்னா அர்ஜுன் சாப்பிட மாட்டான்” என்றாள். எவ்வளவு என்று அதற்கு மட்டும் அளவு கேட்டுக் கொண்டான். சமைத்து முடித்து அர்ஜுனுக்கு முதலில் ஊட்டி, அவனை கண் பார்வையிலேயே விளையாட விட்டு, பின் இருவரும் சாப்பிட அமர்ந்தனர்.
காவ்யா ஒரு இட்லியை விண்டு வாயில் வைக்க, அன்னையின் நினைவில் மீண்டும் சாப்பிட முடியாமல் கண் கலங்கிப் போய் அமர்ந்திருந்தாள்.
“பிறக்கிற எல்லோரும் ஒருநாள் இறந்துதான் போவாங்க. உனக்கும் எனக்கும் கூட இறப்பு வரும். நாம நேசிச்ச ஒருத்தவங்களோட இழப்பு தாங்க முடியாததுதான். அதுக்காக சாப்பிடாம இருந்தா அவங்க திரும்ப வரப்போறதில்லை. சாப்பிடு” என ஆறுதல் கூறி சாப்பிட வைத்தான். சாப்பிட்டு முடித்ததும் மாத்திரைகளையும் போட்டுக்கொள்ள செய்தான்.
அர்ஜுனை தூக்கிக்கொண்டு காவ்யா படுக்கையறை செல்ல, நந்தாவும் அவர்கள் பின்னாலேயே வந்தான். அவனைப் பார்த்தவள், “நீங்க அந்த ரூம்ல தூங்கிக்குங்க” என்றாள்.
“எனக்கு தனியா படுக்க பயமாயிருக்கு, உங்களோடேயே படுத்துக்கிறேன் ” என பயந்தவன் போல கூறினான்.
“ஏன் மூணு வருஷமா தனியாதானே தூங்குனீங்க? அப்போ எல்லாம் பயமில்லையா?” என பட்டென கேட்டாள்.
“சுள்ளு சுள்ளுன்னு பேசாதடி. நேத்து இந்த பெட்லதானே படுத்திருந்தேன். உன்னை ஏதாவது டிஸ்டர்ப் பண்ணினேனா? ரெண்டு வருஷம் என் பிள்ளையை ரொம்ப மிஸ் பண்ணிட்டேன். அவன் கூட அந்த ஓரமா படுத்துக்குறேன். ப்ளீஸ்…” எனக் கூறிவிட்டு, அவள் பதிலளிக்கும் முன் படுக்கையின் ஒரு ஓரமாய் படுத்து கொண்டான்.
வேறு எதுவும் சொல்லாமல் அர்ஜுனை நடுவில் போட்டு காவ்யாவும் படுக்கையின் மற்றொரு ஓரம் படுத்துக்கொண்டாள். அம்மாவும் பிள்ளையும் உறங்கிவிட, மெதுவாய் கண் விழித்துப் பார்த்தான் நந்தா. அவர்கள் உறங்கியதை உறுதிப்படுத்திக்கொண்டு எழுந்து உட்கார்ந்து இருவரது முகங்களையும் பார்த்துக்கொண்டே இருந்தான்.
மெதுவாக நகர்ந்து தன் மகனின் நெற்றியில் முத்தமிட்டவன், மனைவியின் நெற்றியிலும் முத்தமிட்டு விட்டு, அர்ஜுனை அணைத்தவாறே படுத்து கொண்டான்.
நேற்றும் மனைவி மகனுடன் உறங்கினாலும், அவன் அறியாது உறங்கி விட்டதால் ஒன்றும் தெரியவில்லை. ஆனால் இன்று மனதில் ஒரு இதம் பரவியிருக்க, கைவிட்டுப்போன தன்னுடைய வாழ்க்கை தனக்கு கிடைத்து விட்டது என்ற நிம்மதியில் கண்ணயர்ந்தான் நந்தா.