கீர்த்தி அவள் அம்மாவை அழைத்துக் கொண்டு மேலே அவள் அறைக்குச் சென்றாள். மகளின் தலைக்கு ஷாம்பூ தேய்த்து விட்டவர், பிறகு சோப்பை எடுக்க… “அம்மா, சோப்போட கடலை மாவு, மஞ்சளும் தொட்டுக்கோங்க… தனித் தனியா தேச்சு குளிச்சா… ரொம்ப நேரம் தண்ணியில இருக்க மாதிரி ஆகிடும். அப்புறம் சளி பிடிச்சுக்கும்.” என்றாள்.
மகள் சொன்னது போலச் சோப்போடு கடலைமாவு மஞ்சள் கையில் எடுத்து, நன்றாக அவளின் உடலில் தேய்த்து விட்டார். பிறகு நன்றாக வெந்நீரில் குளித்துக் கீர்த்தி வெளியே வர… மகளின் தலை துவட்டி… ஹேர் டிரையரில் மகளின் கூந்தலைக் காய வைத்தவர், நானும் குளிச்சுட்டு வந்திடுறேன் எனக் குளிக்கச் சென்றார்.
குளித்து முடித்து இருவரும் கீழே வர… கீர்த்திக்கு மட்டன் சூப்பும் காலை உணவும் தயாராக இருந்தது. கீர்த்தி உண்ணும் போதே ஜமுனா நவீனாவுக்கும் காலை உணவைப் பரிமாறினார்.
குழந்தைகளுக்கும் எண்ணெய் தேய்த்து நாயகி உருவி விட்டவர், ஒரு பேரனின் மண்டை கோணல் மாணலாக இருக்க… தரையில் வேட்டியை விரித்து அதில் அவனைப் படுக்க வைத்தார். பிறகு நாயகி குழந்தைகளுக்குப் பின்கட்டில் வைத்து தலைக்கு ஷாம்பூ தேய்த்து ஊற்றியவர், உடம்பிற்குச் சோப்பில் மஞ்சள் கடலை மாவு கலந்து நன்றாகத் தேய்த்துக் குளிப்பாட்டினார்.
பிறகு குழந்தைகளுக்குக் கீர்த்திக்கு எனச் சாம்பிராணி போட்டுத் தூபம் காட்டினர். வெற்றிலை, ஓமாம், மிளகு வேகப் போட்டு சாறு எடுத்து இரு பேரன்களுக்கும் ஆளுக்கு ஒரு சங்கு மருந்து ஊற்றினார் நாயகி.
இதில் இவ்வளவு இருக்கா என்பது போல நவீனா பார்த்துக் கொண்டிருந்தார். அவருக்கு உண்மையாகவே இதெல்லாம் தெரியாது.
“பாட்டி, கீர்த்தியும் குழந்தைகளும் இன்னைக்கு அவங்க வீட்டுக்கு கிளம்பட்டும்.” எனத் தர்மா சொல்ல…
இரண்டும் சின்னக் குழந்தைகளாக இருக்க… கீர்த்தி அம்மாவால் பார்த்துக்கொள்ள முடியுமா என அவர் யோசிக்க…
ஏற்கனவே வளைகாப்போடு கேட்டு விடவில்லை… இப்போது அனுப்பவில்லை என்றால் நன்றாக இருக்காது எனத் தர்மா நினைக்க… கீர்த்தியும் அம்மா எதாவது நினைத்து கொள்ளப்போகிறார் என அவளும் நவீனாவோடு செல்லும் முடிவில் இருந்தாள்.
“ரெண்டும் ரொம்பச் சின்னக் குழந்தையா இருக்கு. ஒரு மாசம் ஆகிட்டா கூட நீங்க ஆள் போட்டு பார்த்துக்கலாம்.”
“இங்க இருந்தா என்ன? நீங்க தினமும் வந்து உங்க மகளைப் பேரன்ங்களைப் பாருங்க. முப்பது நாள் முடிஞ்சதும், உங்க வீட்டுக்கு அழைச்சிட்டு போங்க.” என நாயகி சொல்ல… எல்லோரும் நவீனா என்ன சொல்வாரோ எனப் பார்க்க…
“இங்க நீங்களே எல்லாம் பண்றீங்க. அங்க நான் ஆள் வச்சுதான் பார்க்கணும். அவங்க எப்படிப் பண்ணுவாங்களோ தெரியலை… சரி இங்கேயே இருக்கட்டும். முப்பது நாள் முடிஞ்சு அழைச்சிட்டு போறேன்.” என்றார்.
எல்லோருக்கும் அது நல்ல முடிவாக இருக்க… “கவலைப்படதீங்க முப்பது நாள் முடிஞ்சு கீர்த்தியே குழந்தைகளைக் குளிக்க வச்சிடுவா…. நான் சொல்லிக் கொடுத்து அனுப்புறேன்.” என்றார் நாயகி.
“ஆமாம் மா… நம்ம வீட்ல எனக்கு வேற வேலை என்ன இருக்கப் போகுது. நானே குளிப்பாட்டி… மருந்து கொடுத்திடுவேன்.” என்றாள் கீர்த்தி.
மற்ற வேலைகளுக்கு எல்லாம் ஆட்கள் உண்டு. அவரும் கீர்த்தியும் பிள்ளைகளை நன்றாக பார்த்துக் கொண்டால் போதுமே…
பிள்ளைகள் இருவரும் கீழே காட்டன் சேலையில் கட்டியிருந்த தொட்டிலில் உறங்க… “கீர்த்தி, நீ உங்க அம்மாவோட போய் மாடியில ரெஸ்ட் எடு. குழந்தைங்க எழுந்தா அருணா மேல கொண்டு வருவா…” என ஜமுனா சொல்ல, கீர்த்தியும் தன் அம்மாவுடன் மாடிக்கு சென்றாள்.
அறைக்கு வந்ததும், “அம்மா, உங்களுக்கு ஒகே தானே…” எனக் கீர்த்திக் கேட்க,
“அப்பாவும் வினோத்தும் ஆபீஸ் போனதும், நான் இங்க வரேன். நான் வந்து உன்னைக் குளிக்க வைக்கிறேன் சரியா?”
“ம்ம்… நீங்க ஒரு நாள் ரெஸ்ட் எடுத்திட்டு நாளை மறுநாள் கூட வாங்க. இன்னைக்குத் தான் நல்லா குளிச்சு இருக்கேன் இல்ல… நாளைக்கு நான் லைட்டா கூடக் குளிச்சுப்பேன். நீங்களும் ஒரு வாரமா ஹாஸ்பிடல்ல இருந்திருக்கீங்க.” எனக் கீர்த்திச் சொன்னதற்கு, நவீனாவும் சரியென்றார். தலைக்குக் குளித்தது கீர்த்திக்குக் கண்ணைச் சுழட்ட… அவள் உறங்க அவளோடு நவீனாவும் படுத்து உறங்கி விட்டார்.
தர்மா டைனிங் ஹாலில் உட்கார்ந்து காலை உணவை உண்டான். முன்தினம் இரவு அவன் வீட்டிற்கு வந்துதான் உறங்கினான். நன்றாக உறங்கி எழுந்திருந்ததால்… இன்றிலிருந்து அலுவலகம் செல்லும் முடிவில் இருந்தான்.
சௌமியாவை உயர்த்திப் பிடிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தேவையில்லாமல் ஸ்ருதியை சுனிதா மட்டம் தட்ட…. ஸ்ருதி மாமியார் மீதிருந்த கோபத்தில், நாயகியிடம் அவர் பேசியதை சொல்லி இருந்தாள்.
அவன் உண்டு முடித்ததும், எல்லாவற்றையும் அவனிடம் சொல்லி, “எவ்வளவு திமிர் இருந்தா பண்ண பாவம்னு சொல்லி இருப்பா?” என நாயகி கொந்தளிக்க…
“நான் என்ன நினைச்சேன் தெரியுமா பாட்டி? விஷாலை தனியா விட முடியாது. அவனுங்களை விட்டு இவனை மட்டும் சேர்த்துக்கவும் முடியாது. என்னைப் புரிஞ்சு அவங்களே வந்தா…. எல்லோரும் சேர்ந்து புதுசா பார்ட்னர்ஷிப்ல பிஸ்னஸ் ஆரம்பிக்கலாம்னு நினைச்சேன்.” என்றான் தர்மா.
“நல்லா நினைச்ச போ… சுனிதா மட்டும் இல்லை சுபாவும் அப்படித்தான். இப்ப நீ விஷாலுக்குச் சொத்து வாங்கிக் கொடுத்திட்டேன்னு உன்கிட்ட நல்லா பேசுறா… ஆனா எப்ப எப்படிப் பேசுவான்னு தெரியாது.”
அப்போது ஜமுனாவும், “வேண்டாம் தர்மா பிரிஞ்சது பிரிஞ்சதாவே இருக்கட்டும். இவங்க பேசுறது எல்லாம் கேட்க முடியலை.” என்றார்.
“தர்மா, தனியா பிஸ்னஸ் தான் டா பண்ணப்போறீங்க. அவனுங்களுக்கு எதாவது ஒண்ணுன்னா நீ முன்னாடி நிற்கத்தான் போற… அவனுங்களும் உன்னை விட்டுக் கொடுக்க மாட்டாங்க. இப்படியே இருக்கட்டும் தர்மா. திரும்ப நெருங்கி போய் அடி வாங்காத. உனக்குத் தெம்பு இருக்கோ இல்லையோ எங்களுக்கு இல்லை.” என்ற அருணா அழுதே விட…
“நம்ம அப்பா எல்லோரோடும் சேர்ந்து இருக்கனும்னு தானே கா சொல்லி வளர்த்தார். அதுவும் அவங்க யாரும் பிரிச்சுக்கணும் சொல்லலை… நான்தான் பிரிஞ்சு போறேன் சொன்னேன். நாளைக்கு அவங்க பிஸ்னஸ் சரியாப் போகலைனா எனக்குக் கஷ்டமா இருக்கும். அதனால அப்படி நினைச்சேன்.” என்றான்.
“அவங்க எப்படிச் சொல்வாங்க. நீ அவங்களுக்கும் சேர்த்து நல்லா சம்பாதிச்சு கொடுத்திட்டு இருந்த. செஞ்ச வரை போதும் தர்மா.” என நாயகி முடிவாகச் சொல்ல….
“சரி பாட்டி.” என்றான் தர்மா. அதன் பிறகே எல்லோருக்கும் நிம்மதியாக இருந்தது.
கீர்த்தி எனத் தர்மா லேசாகத் தட்டி எழுப்ப… உறக்கத்தில் இருந்த கீர்த்திக் கண் விழிக்க…
எழுந்து கட்டிலில் வசதியாகச் சாய்ந்து உட்கார்ந்தவள், பிறகே மகனை கையில் வாங்கினாள்.
“இவனா… இவன் பாட்டில்ல இல்ல குடிப்பான்.” எனக் கீர்த்திச் சொல்ல…
“கொடுத்து பாரு…” என்றவன், அலுவலகம் செல்ல உடைமாற்ற தேவையான உடையுடன் வெளியே சென்றான்.
கீர்த்திக்கு நம்பிக்கை இல்லாமல்தான் கொடுத்தாள். ஆனால் தலைக்குக் குளித்தது, பாட்டி மருந்து ஊற்றியது எல்லாம் சேர்த்து நல்ல பசியில் இருந்ததால்… அவளிடமே பால் குடித்தான், அவளின் செல்ல மகன். கீர்த்திக்கு மிகுந்த மகிழ்ச்சி.
தர்மா உடை மாற்றி வந்ததும், “குடிக்கிறாங்க.” எனச் சொல்லி அவள் ஆச்சர்யப்பட.. அவனுக்கும் மகிழ்ச்சி. “இப்படிப் பசிக்கும் போதே கொடு.” என்றான்.
“கீர்த்தி, நான் ஆபீஸ் போயிட்டு வரேன். காலையில சாப்பாடே இப்பதான் சாப்பிட்டேன். மதியம் ஆபீஸ்ல சாப்பிட்டுகிறேன். சாயந்திரம் தான் வருவேன்.” என்றவன், பால் குடித்துக் கொண்டிருந்த மகனை முத்தமிட்டு, அம்மாவை தொந்தரவு பண்ணாம சமத்தா இருங்க பேபி. அம்மாவை நல்லா பார்த்துக்கோங்க.” எனச் சொல்லிவிட்டுச் சென்றான்.
இவர்கள் பேச்சுச் சத்தத்தில் நவீனா விழித்து விட்டார். ஆனால் அப்போது எழுந்தால் அவர்களுக்குத் தர்ம சங்கடமாக இருக்கும் எனக் கண்ணை மூடி படுத்தே இருந்தார்.
மகனைப் பார்த்துகொள் என மனைவியிடம் சொல்லாமல்… மனைவியைப் பார்த்துகொள்ள மகனிடம் சொல்லிவிட்டுச் செல்லும் கணவனை இப்போது தான் பார்க்கிறார்.
இந்தப் பெண் உண்மையாகவே கொடுத்து வைத்தவள் என்றே தோன்றியது.
அன்று மாலை வரை இருந்துவிட்டு கிளம்பிய நவீனா, மறுநாள் காலை பத்து மணி போல வந்து நிற்க…
“ஏன் மா ரெஸ்ட் எடுக்கலையா? நாளைக்கு வந்திருக்கலாம் இல்ல..” எனக் கீர்த்திக் சொல்ல,
“நாளைக்கு ஞாயிற்றுக்கிழமை உன் வீட்டுகாரர் வீட்டில் இருப்பார். அதுதான் இன்னைக்கு வந்தேன்.” என்றார்.
“ஏன் அவரு இருந்தா..,, நீங்க வரமாட்டீங்களா?”
“அப்படியில்லை… அவர்தான் உன்னை நல்லா பார்த்துப்பாரே… நான் வரவேண்டியது இல்லை.” என்றார். அது என்னவோ உண்மைதான்.
தர்மா அலுவலகம் செல்லும் முன், “உங்க அம்மாவை நல்லா கவனி.” என்றவன், ஜமுனாவிடமும் சொல்லிவிட்டுச் சென்றான்.
நவீனா இப்படி யார் வீட்டுக்கும் செல்பவர் இல்லை. தனக்காகத் தான் அம்மா வருகிறார் எனக் கீர்த்திக்கும் புரிந்தே இருந்தது. அதனால் நவீனா இருக்கும்போது அவருடன் தான் இருப்பாள்.
சனிக்கிழமை நள்ளிரவு வரை மகன்கள் இருவரும் விழித்திருக்க… இவர்களும் விழித்தே இருந்தனர். ஒரு மகனோடு கீர்த்திக் கட்டிலிலும், இன்னொரு மகனோடு தர்மா கீழே மெத்தையிலும் படுத்திருந்தனர்.
அபி எப்போதும் போலக் காலை இவர்கள் அறைக்கு வந்தவள், “ரெண்டு பேரும் ஒரே மாதிரி இருக்காங்க. எப்படிப் பா கண்டுப்பிடிக்கிறது?” என அதே பல்லவியை ஆரம்பிக்க…
“எதாவது சின்ன வித்தியாசம் இருக்கும் டா…” எனத் தர்மா இரு மகன்களையும் ஆராய்ச்சி செய்ய… அதில் இளையவனுக்கு இன்குபேட்டரில் இருந்தானே அவனுக்கு முன் நெற்றியில் வலதுபக்கம் சின்ன மச்சம் இருக்க… இன்னொருவனுக்கு இல்லை. அபிக்கு அப்போதுதான் நிம்மதி.
“எப்ப பேரு வைக்கிறது? இவங்களை நான் என்ன சொல்லி கூப்பிடுறது?”
“முப்பது நாள்ல பேர் வைக்கணும்.” என்றான் தர்மா.
“என்ன பேர் வைக்கிறது. ஒரே பேர் வைக்காம நிறையப் பேர் வைக்கலாமா?” என அபி கேட்க,
“ஏன்?” எனக் கீர்த்தி மகளைப் பார்க்க…
“ஒரே பேர் வச்சா போர் அடிக்கும்.” என மகளின் காரணத்தைக் கேட்டவள்,
“உனக்கு அபின்னு கூப்பிட்டு போர் அடிக்குதா மேடம்.” என அவள் சரியாகக் கேட்க, அபிநயா ஆமாம் என்றாள்.
“ஒரு பெயர் வைக்கவே மண்டையை உடைக்கணும்… இதுல நிறையப் பேர் வைக்கவாம். நான் வேணா உன்னை எருமை, பன்னின்னு கூப்பிடட்டுமா…” எனக் கீர்த்திக் கேட்க,
“ஹே அப்படியா சொல்வாங்க.” என்ற தர்மா, “எங்க இளவரசி, ராஜாத்தி, அறிவு செல்லம்.” என மகளைக் கொஞ்ச…. அபிக்கு மிகுந்த மகிழ்ச்சி.
எழுந்துகொள்ளும் போது எழுந்துகொள்ளட்டும் என விடும் அப்பாவா தர்மா? மகன்களின் பாலபாடம் அன்றே ஆரம்பித்தது.
அப்போதுதான் காலை வெயில் வர ஆரம்பிக்க… தர்மா பால்கனியின் கதவை திறந்து வைக்க… வெயில் உள்ளே வரை வர… மகன்கள் இருவருக்கும் தலையில் எண்ணெய் வைத்து, வெயில் படும் இடத்தில் இருவரையும் பாயில் படுக்க வைத்தான். பாயில் படுக்கும் போதுதான் குழந்தைகளின் தலை நல்ல வடிவத்திற்கு வரும்.
நல்ல உறக்கத்தில் இருந்தவர்கள், வெயில் ஏற ஏற… கொஞ்சம் கொஞ்சமாகக் கண் திறந்து, கையையும் காலையும் அசைக்க… தாய், தந்தை, மகள் மூவரும் ஒன்றாக உட்கார்ந்து அதைதான் ரசித்துப் பார்த்திருந்தனர்.
வேறு எந்த இயற்கைக் காட்சியும் இதைவிட அழகாக இருந்து விட முடியாது. அவர்கள் மூவருக்கும் அப்படித்தான் இருந்தது.
சின்னஞ்சிறு மழலைகளை மட்டும் நாளெல்லாம் உட்கார்ந்து பார்த்துக்கொண்டே இருக்கலாம். நேரம் போவதே தெரியாது.