மறுநாள் ஜமுனா மருத்துவமனையில் உடனிருந்தார். வேளைக்கு வீட்டில் இருந்து உணவு வந்தது. தர்மாவும் நவீனாவும் மாறி மாறி குழந்தையின் அறையின் முன்பு உட்கார்ந்திருந்தனர்.
குழந்தையைப் பற்றி எதுவும் தவறான செய்தி கேட்டுவிடக் கூடாதே என்ற அச்சத்திலேயே, கீர்த்தித் தர்மாவோடு கூடச் சரியாகப் பேசாமல் இருந்தாள். அவன் வரும் போதெல்லாம் என்ன சொல்லப் போகிறானோ என அச்சத்திலேயே அவள் அவனைப் பார்க்க, அதை உணர்ந்து தர்மாவும் அவனாகவே குழந்தை நலமாக இருப்பதாகச் சொல்வான்.
அன்று வந்த ஸ்ருதி, “நாங்க இருந்து பார்த்துக்கிறோம். நீங்க ஆபீஸ் வேணா போங்க அத்தான்.” என… நவீனாவும் ஆமாம் நாங்க பார்த்துக்கிறோம் என்றார்.
“பரவாயில்லை மா…. நல்லபடியா அவளும் குழந்தைகளும் வீட்டுக்கு வந்ததுமே நான் ஆபீஸ் போயிக்கிறேன். இந்த நேரத்தில கூட இருக்கலைனா எப்ப இருக்கிறது? பணம் எப்ப வேணா சம்பாதிக்கலாம்.” என்றான்.
இன்குபேட்டர் அறையில் இருந்த குழந்தையை மேலும் இரண்டு நாட்கள் இருக்கட்டும் என்றவர்கள், மறுநாள் கீர்த்தியையும் நன்றாக இருந்த குழந்தையும் மட்டும் வீட்டுக்குச் செல்லலாம் எனச் சொல்ல… கீர்த்தி மீண்டும் ஒரு ஆட்டம் ஆடினாள்.
அப்படி விட்டுவிட்டு சென்று அந்தக் குழந்தைக்கு ஏதாவது ஆகிவிடுமோ என்ற அச்சத்தில், “நான் அப்படியெல்லாம் என் குழந்தையை விட்டுட்டு போக மாட்டேன்.” எனத் தர்மாவிடம் கீர்த்திக் கொஞ்சம் கடுமையாகத்தான் சொன்னாள்.
“சரி சேர்ந்தே போகலாம்.” என்ற தர்மா மருத்துவரிடம் சென்று பேசினான்.
முன்தினம் மாலை தர்மா இன்குபேட்டர் அறையின் முன்பு உட்கார்ந்திருக்க… அப்போது ஒரு தம்பதிகள் தங்கள் குழந்தையுடன் வெளியே வந்தனர். ஆனால் முகத்தில் மகிழ்ச்சி இல்லை.
இவனைப் போலத்தான் அந்தக் குழந்தையின் அப்பாவும் வெளியே உட்கார்ந்திருப்பார். இரண்டொரு முறை அவர்கள் குழந்தையைத் தர்மாவை பார்த்துக் கொள்ளச் சொல்லிவிட்டு வெளியே சென்று விட்டும் வந்திருக்கிறார். அதனால் அவனுக்குத் தெரியும்.
“வீட்டுக்குப் போகலாம் சொல்லிட்டாங்களா மகேஷ்?” எனத் தர்மா கேட்க,
“இல்லை சார். நாங்க பிரசவமே இங்க பார்க்கிறதா இல்லை. அவசரத்துல இந்த ஹாஸ்பத்திரிதான் பக்கத்தில இருந்தது. அதனால வேற வழியில்லாம வந்தோம். இன்னும் பத்து நாள் இருக்கணும் சொல்றாங்க. எங்களுக்குக் கட்டுபடியாகாது, அதுதான் வேற ஹாஸ்பிடல் போறோம்.” எனச் சொல்ல…
பணமில்லாத காரணத்தால் அவர்கள் வேறு மருத்துவமனை செல்வதாகச் சொல்வது வருத்தமாக இருந்தது. தன் குழந்தைப் போலத்தானே அந்தக் குழந்தையும். தன்னிடம் பணம் இருக்கிறது பார்க்கிறோம், இல்லாவிட்டால் என்ன செய்வது? தனக்கும் இதே நிலைதானே என யோசித்தவன்,
“குழந்தை இங்கேயே இருக்கட்டும். நான் பணம் கொடுக்கிறேன்.” என்றான் தர்மா. சக மனிதரின் துன்பம் பொறுக்காமல் உதவுவது ஒன்றும் அவனுக்குப் புதிதல்ல… ஆனால் மகேஷுக்குத் தெரியாது அல்லவா….
“சார், ஒரு நாள் ரெண்டு நாள் இல்லை பத்து நாள் இருக்கனுமாம்.” என்றான் தயக்கத்துடன்.
“பரவாயில்லை… ஒன்னும் பிரச்சனை இல்லை. நீங்க குழந்தையை முதல்ல உள்ள கொண்டு போங்க.” என்றவன் நர்ஸிடம், “இங்கேயே இருக்கட்டும்.” என்றதும் நர்ஸும் சரியென்றார்.
அந்தக் குழந்தையின் பெற்றோருக்கு பேச வார்த்தையே இல்லை. அந்தக் குழந்தையின் தாய் நன்றியுடன் கை கூப்பியவர், குழந்தையை எடுத்துக் கொண்டு உள்ளே சென்றார்.
“சார்… நீங்க செஞ்ச உதவியை மறக்கவே மாட்டேன். நான் எப்படியும் அந்தப் பணத்தை உங்களுக்குத் திரும்பக் கொடுத்திடுவேன்.”
“ரொம்ப வருத்திக்காதீங்க மகேஷ். என்கிட்டே இருக்குக் கொடுக்கிறேன். உங்ககிட்ட இருக்கும் போது, இதே போல வேற யாருக்காவது உதவி தேவைப்படும் இல்ல.. அவங்களுக்குக் கொடுங்க. அவ்வளவுதான் இதுல பெரிசா ஏதும் இல்லை.” என்றான் தர்மா அவன் செய்த உதவியைச் சாதாரணமாக்கி.
“கண்டிப்பா சார்.”
மருத்துவமனையில் படுக்கை இருந்தாலுமே தேவையான நாட்களுக்கு மேல் இருக்க அனுமதிக்க மாட்டார்கள். இந்தக் காரணத்துக்காகத்தான் மருத்துவர் தர்மா வைத்த கோரிக்கையை ஏற்றுக்கொண்டது.
அங்கேயும் இங்கேயும் நடப்பதற்கு, அதோடு இனி கீர்த்திக்கும் வைத்தியம் தேவையில்லை என்பதால்… நவீனா அவர்கள் அறையைக் குழந்தை இருந்த ப்ளாக்கில் மாற்றிக் கேட்டார்.
தர்மா இரவில் கூடக் குழந்தையின் அறை முன்பு இருக்கும் சேரில் தான் உட்கார்ந்தபடி உறங்குவான். அங்கேயே அறையை மாற்றிக்கொண்டால்… அவனுக்கு வசதியாக இருக்கும் என்ற எண்ணத்திலேயே கேட்டார்.
அவர்கள் கேட்டது போல அறை கிடைத்ததும், அங்கே சென்றனர். பெரிய அறை தான் என்பதால் வசதியாக இருந்தது.
மதியம் உண்ண வந்தவனிடம், “ரெண்டு நாளா நீங்க தூங்கவே இல்லை. சாப்பிட்டு கொஞ்ச நேரம் படுங்க. நான் அங்க இருக்கேன்.” என நவீனா சொல்லிவிட்டு செல்ல… இதற்கு மேல் முடியாது எனத் தர்மாவுக்கும் தெரிந்திருந்தது.
மதியம் உண்டுவிட்டு படுத்து நன்றாக உறங்கி விட்டான். ஜமுனாவும் நவீனாவோடு சென்று இருப்பதாகச் சொல்லி சென்றுவிட்டார். இரண்டு மணி நேரம் நன்றாக உறங்கியவன், திடுக்கிட்டு விழித்தான், ரொம்ப நேரம் தூங்கிட்டேனோ என எழுந்து உட்கார்ந்தவன், உடனே இன்குபேட்டர் அறையில் இருக்கும் குழந்தையைப் பார்க்க கிளம்ப…
“ஹலோ… இங்கேயும் ஒன்னு இருக்கு. இதுவும் உங்க குழந்தைதான். இதைக் கண்டுக்கிறதே இல்லை… உங்க அப்பாவுக்கு உன்னைத் தெரியவேயில்லை டா…” எனக் கீர்த்திக் கணவனிடம் ஆரம்பித்து, மகனிடம் முடிக்க…
“ஹே… அப்படியெல்லாம் இல்லை மா. நீதான் இவனைப் பார்த்துக்கிற இல்ல…” என்றவன், மனைவியின் கட்டிலில் வந்து உட்கார்ந்து, குழந்தையைத் தூக்கிக் கொண்டான்.
“உண்மையிலேயே அந்த மகனை பார்த்த அளவிற்கு இந்த மகனை பார்க்கவில்லை தான்.”
அவன் வைத்துக்கொண்டிருக்கும் போதே… மகன் விழித்து அவன் கையில் நெளிய ஆரம்பிக்க…
“ஹே… பேபி அப்பாவைப் பாருங்க டா…” எனத் தர்மா மகனிடம் பேச…. அவன் மகனும் கண் திறந்து பார்த்தான்.
“இவனைப் போல அவனும் நல்லா இருக்கான் தானே தர்மா. என்கிட்ட நீங்க எதுவும் மறைக்கலை தானே…” கீர்த்திக் கணவனிடம் மெதுவாகக் கேட்க,
“ரெண்டு பேருக்குமே எல்லா டெஸ்டும் எடுத்தாச்சு. எல்லாமே நல்லா இருக்கு. அவன் கொஞ்சம் வெயிட் கம்மியா இருக்கிறதுனால… இன்பெக்ஷன் எதுவும் ஆகிடக் கூடாதுன்னு தான்… அம்மா வயித்துக்குள்ள இருக்க மாதிரி கதகதப்பா வச்சிருக்காங்க. வேற ஒன்னும் இல்லை.” என்றான்.
மறுநாள் கீர்த்தி இன்குபேட்டர் அறையில் இருந்த மகனைப் பார்க்க சென்றாள். நர்ஸ் அவளைப் பால் கொடுக்கச் சொல்ல… பக்கத்தில் இருந்த பீடிங் அறைக்குக் குழந்தையை எடுத்து சென்றாள். தர்மாவும் உடனிருந்தான்.
மகனுக்கு முதல் முதலாகப் பாலூட்டும் பரவசத்தில் கீர்த்தி இருக்க… அவள் மகன் எங்கே குடித்தான். அவனுக்கு நோகாமல் பீடிங் பாட்டிலில் குடிப்பது போல இல்லை போல… அதனால் அவன் நாக்கிலேயே தள்ளி விட…தர்மாவுக்குச் சிரிப்பு வந்துவிட்டது.
“உன்னோடது வேண்டாமாம்.” அவன் சிரித்துக் கொண்டு சொல்ல… “பிறந்ததுல இருந்து அம்மாவையும் மகனையும் பிரிச்சு வச்சா…” எனக் கீர்த்திக் கணவனை முறைத்தாள்.
அறைக்கு வந்தவள் நவீனாவிடம், “அம்மா, நான் பால் கொடுத்தா அவன் குடிக்கலை மா…” என அவள் அழுகைக்குச் செல்ல…
“அவன் பாட்டில்ல குடிச்சு பழகிட்டான். நீ ரெண்டு குழந்தைக்கு உட்கார்ந்து பாலும் கொடுக்க முடியாது. அவனுக்குப் பம் பண்ணி பீடிங் பாட்டில்ல எடுத்து வச்சு கொடு.” என, மறுநாளில் இருந்து கீர்த்தி அப்படித்தான் செய்தாள்.
மறுநாள் தாய்ப்பாலை பாட்டிலில் எடுத்து சென்று கொடுத்தவள், கணவனைக் கெத்தாகப் பார்க்க… “உங்க அம்மா ஐடியா தானே… ஏதோ நீயா யோசிச்சது போலப் பில்டப் கொடுக்கிற.” என்றான்.
அன்று மகளைப் பார்க்க வந்த கணவரிடம் “உங்க பொண்ணு அந்த மனுஷனைப் போட்டு அந்தப் பாடு படுத்துறா… எப்படித்தான் அவர் இவ்வளவு பொறுமையா இருக்காரோ தெரியலை… எதோ அவர்தான் காரணம் போல அவர்கிட்ட எல்லாத்துக்கும் கத்துறா…”
“அவங்க அம்மா முன்னாடி அக்கா முன்னாடி எல்லாம் கத்துறா… அவங்க எல்லாம் இவளுக்காக ரொம்ப விட்டுக் கொடுத்து போறாங்க.” என நவீனா சொல்ல…
சோமசேகர் மகளைப் பார்க்க… “நான் முன்னாடி எல்லாம் இப்படிப் பேசினதே இல்லை பா… இப்பதான். அவருக்கு என்னைத் தெரியும்.” என்றால் கீர்த்தி ரோஷமாக.
“தெரியுது தெரியலை… அதுக்காக அப்படியெல்லாம் பேசாத… இந்த ஹாஸ்பிடளுக்கே தெரியும் அந்த மனுஷன் உன்னை எப்படித் தாங்கிறாருன்னு… ஒழுங்கா ஹாஸ்பிடல்ல இருந்து நம்ம வீட்டுக்கு வர்ற… போதும் அந்த மனுஷனை படுத்தினது. அவர் இனியாவது ஆபீஸ் போய் வேலை பார்க்கட்டும்.” என,
ஆறாவது நாள் மாலை இன்குபேட்டரில் இருந்த குழந்தையையும் கொடுத்துவிட்டனர். தர்மா குழந்தையைக் கொண்டு வந்து மனைவியின் கைகளில் கொடுக்க, ஒரு வாரம் எவ்வளவு போராட்டம், கீர்த்தி அழுதே விட்டாள்.
“சாரி… உங்களைப் போட்டு ரொம்பப் படுத்திட்டேன்.” எனக் அவள் கணவனிடம் சொல்ல,
“அப்படியெல்லாம் இல்லை…. நீ எந்த நிலைமையில இருந்தன்னு எனக்குத் தெரியும்.” என்றான் தர்மா.
மறுநாள் அதிகாலையே குழந்தைக்களைப் பரிசோதித்துவிட்டு மருத்துவர் வீட்டுக்குச் செல்லலாம் எனச் சொல்ல… தர்மா மீதி இருக்கும் மருத்துவமனை தொகையைக் கட்ட சென்றவன், அப்படியே மகேஷை சென்று பார்த்துத் தாங்கள் கிளம்புவதாகச் சொல்ல… அவன் தயக்கத்துடன் பார்க்க…
“பத்து நாளுக்குப் பணம் கட்டிட்டேன். அதுக்கு மேலையும் தேவைபட்டாலும், எனக்குச் சொல்ல சொல்லி நம்பர் கொடுத்திருக்கேன்.” எனத் தர்மா சொன்னதும்,
“ரொம்பத் தேங்க்ஸ் சார்… உங்களை மறக்கவே மாட்டேன்.” என மகேஷ் தர்மாவின் கைபிடித்து நன்றி சொன்னான்.
கீர்த்தி நேராகக் குழந்தைகளுடன் புகுந்த வீடு செல்ல… நவீனாவும் உடன் சென்றார். காலை உணவுக்கு முன்பே வீட்டுக்கு வந்துவிட்டனர். நாயகி வந்து கொள்ளுப் பேரன்களுக்கு ஆரத்தி எடுத்தார்.
ரங்கநாதனுக்கு இரண்டு கொள்ளுப்பேரன்களைப் பார்ப்பதற்குக் கண்கள் போதவில்லை. மற்றவர்கள் எல்லாம் மருத்துவமனை சென்று பார்த்த போதும், இரண்டு கொள்ளு பேரன்களையும் சேர்த்துதான் பார்ப்பேன் என நாயகி மருத்துவமனை செல்லாமலே இருந்தார்.
“வளைகாப்புக்கு வந்த அத்தை திரும்ப அலையக் கூடாதுன்னு சீக்கிரமே என் மருமகனுங்க பிறந்துட்டாங்க.” என அருணா தம்பி மக்களைக் கொஞ்ச… அபி தன் இரண்டு தம்பிகளையும் ஒன்றாகப் பார்த்த மகிழ்ச்சியில் இருந்தாள்.
குழந்தைகள் வீட்டிற்கு வந்தது தெரிந்து, மற்ற இரு குடும்பத்தினரும் பார்க்க வந்தனர். சிறிது நேரத்திலேயே ஹாஸ்பிட்டல்ல இருந்து இன்னைக்குதான் வந்திருக்காங்க. ரெஸ்ட் எடுக்கட்டும் எனச் சொல்லி நாயகி எல்லோரையும் கிளப்பி விட்டார்.
தர்மாவும் கீர்த்தியும் கூட ஏன் இருந்தால் என்ன என்பது போலப் பார்த்தனர்.
“அம்மா எனக்குக் குளிக்கணும்.” எனக் கீர்த்திச் சொல்ல.. ஏழு நாள் ஆச்சே தலைக்கே ஊத்திடுங்க என நாயகி சொல்ல… ஜமுனா கடலைமாவு மஞ்சள் எல்லாம் எடுத்து வந்து தந்தார்.
“நல்லா தண்ணி சூடா வச்சு குளிப்பாட்டுங்க. இல்லைனா சளி பிடிச்சுக்கும்.” என்ற நாயகி, “ரொம்ப நேரம் தண்ணியில நிற்காத கீர்த்தி.” எனச் சொல்லித்தான் அனுப்பினார்.