கடைக்கு கிளம்பிக் கொண்டிருந்த காவ்யாவின் தந்தை, நந்தகுமார் வந்ததைப் பார்த்து விட்டு, கடைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்து கொண்டார். நந்தாவும் கருணாகரனும் ஹாலில் சோஃபாவில் எதிரும் புதிருமாக அமர்ந்திருந்தனர். காமாட்சி காஃபி கொடுக்க, வாங்கி கொண்டவனின் கண்கள் காவ்யாவின் தரிசனத்திற்காக வீடெங்கும் சுழன்றன. ம்ஹூம்….. அவளை வெளியில் எங்கும் காணவில்லை.
நந்தா காஃபி அருந்தும் வரை அமைதியாக இருந்த கருணாகரன், “எங்க பொண்ணு நல்லா வாழ்வான்னு நம்பித்தான் உங்களுக்கு கல்யாணம் செஞ்சு வச்சோம்” என்றார்.
“மாமா, நேத்து ஒரு நாள் நடந்தத மனசுல வச்சுக்கிட்டு பேசாதீங்க. அது ஏதோ கோவத்துல அப்படி பண்ணிட்டேன். இனிமே அப்படி எதுவும் நடக்காது” என்றான் நந்தா.
“நான் அதை மட்டும் சொல்லலை. உங்க வீட்டுல என் பொண்ணு நிம்மதியாவே இல்ல. அங்க யாருமே சரியில்லை. கல்யாணம் ஆனதிலிருந்து என் பொண்ணுன்னா அவங்க யாருக்கும் பிடிக்கல. உங்களுக்குள்ள என்ன பிரச்சனைன்னு தெரியலை. ஆனா உங்க வீட்டுல உள்ளவங்க வச்சுதான் பிரச்சனையா இருக்கணும்னு தெரியும்” என்றார்.
நந்தா பதில் எதுவும் கூறாமல் அவர் பேசுவதை அமைதியாக கேட்டுக் கொண்டிருந்தான்.
“உங்க சின்னம்மா பொண்ணுங்களுக்கு செய்ய வேண்டாம்னு நாங்க யாரும் சொல்லலை. உங்க சக்திக்கு மீறி செய்ய வேண்டாம்னுதான் சொல்றோம். இப்படி அவங்களுக்கே செஞ்சிகிட்டு இருந்தா உங்களுக்குன்னு என்ன இருக்கும்? அதனால இவ்வளவு செலவு பண்ணி எல்லாம் கல்யாணம் பண்ணாதீங்க. உங்க வசதிக்கு தகுந்த மாதிரி வேற இடம் பாருங்க”
“நீங்க என்னமோ வெளிநாடு போறதாக சொன்னீங்களாம். காவ்யாவுக்கு நீங்க போறதுலையும் இஷ்டமில்லை. அவளுக்கும் வெளிநாடு வர விருப்பமில்லை. நீங்க சென்னையிலேயே இருக்கீங்கன்னுதான் நான் என் பொண்ணை கல்யாணம் பண்ணிக் கொடுத்தேன். அதனால வெளிநாட்டுக்கு போற முடிவ மாத்திக்குங்க. அப்புறம்…. இனி என் பொண்ணு அந்த வீட்டுல அவங்களோட சேர்ந்து வாழ முடியாது. நீங்க என் பொண்ணு கூட இங்க வந்திடுங்க, இல்லனா தனிக்குடித்தனம் போயிடுங்க. இதுக்கெல்லாம் ஒத்துகிட்டீங்கன்னா அவ வருவா. இல்லைன்னா வரமாட்டா” என நீளமாக பேசி முடித்தார்.
அவர் பேசிய எதற்கும் பதில் கூறாமல், “காவ்யா எங்க?” எனக் கேட்டான் நந்தா.
“நான் காவ்யாவை பார்த்துட்டு வர்றேன்” என எழுந்து நின்றான் நந்தா.
“தாராளமா போய்ப் பாருங்க. ஆனா இனிமே அந்த வீட்டுக்கு என் பொண்ணு வர மாட்டா” என அழுத்தம் திருத்தமாக கூறினார் கருணாகரன். கோவம் வந்தாலும் அவரிடம் எதுவும் பேசாமல் காவ்யாவின் அறைக்கு சென்றான்.
தங்களுக்குள் நடந்த சண்டையை நினைத்து அழுதழுது அவளுக்கு காய்ச்சல் வந்திருந்தது. கண்களை மூடி ஒருக்களித்து படுத்திருந்த காவ்யாவின் அருகில் சென்று அவளது இடது கன்னத்தை மென்மையாக வருடி விட்டான். கண்விழித்த காவ்யா பட்டென அவன் கையைத் தட்டிவிட்டாள்.
“சாரிடி…. நீ அப்படி சொன்னதுல கோவம் வந்து அடிச்சிட்டேன். இனிமே இப்படியெல்லாம் பண்ண மாட்டேன். வா வீட்டுக்கு போகலாம்” என்றான்.
“என்னை கை நீட்டி அடிச்சிட்டீங்கல்ல… சின்ன வயசிலிருந்து யாருமே என்னை அடிச்சதில்லை தெரியுமா?” என அழுகையும் ஆத்திரமுமாய் கேட்டாள்.
காவ்யாவை வலுக்கட்டாயமாக எழுப்பி தன்னோடு அணைத்துக் கொண்டு, “சாரிம்மா…. சாரி… உன்னை அடிச்சது தப்புதான். நீ பேசுனது பொறுக்க முடியாம இப்படி பண்ணிட்டேன். இனிமே இது மாதிரி நடந்துக்க மாட்டேன்” என்றான்.
“ம்….” என அழுது கொண்டே கூறினாள்.
அவள் கண்களை துடைத்துவிட்டு, “சரி வா கிளம்பு போகலாம். நான் இன்னைக்கு லீவ்தான் எடுத்திருக்கேன். உனக்கு உடம்பு சரியாகிற வரைக்கும் நான் லீவ் போட்டுக்கறேன். நீ இல்லாம எனக்கு அங்க பிடிக்கவே இல்லை. சீக்கிரம் கிளம்பு” என்றான்.
“இல்ல நான் அங்க வரலை?” என்றாள்.
“ஏன் உடம்பு சரியானதுக்கு அப்புறம் வர்றியா?” எனக் கேட்டான்.
“இல்ல… எப்பவும் நான் அங்க வரமாட்டேன். எனக்கு உங்க அம்மா, பாட்டி, வாசுகி யாரையும் பிடிக்கல. எப்ப பாரு ஒரே சண்டை. நாம எங்கேயாவது தனியா போயிடலாம். இல்லன்னா நீங்க இங்க வந்திடுங்க” என்றாள்.
அவளை விட்டவன், அவள் அருகில் அமர்ந்து கொண்டு, “இதையேதான் இப்ப உன்னோட அப்பாவும் சொன்னார். அவர் சொல்றாருன்னா அவருக்கு என்னை தெரியாது. நீயும் இப்படி பேசினா என்ன அர்த்தம்?”
“நான் யுஎஸ் போற வரையிலும் என் கூட அங்கு வந்து இரு. நான் போனதுக்கப்புறம் இங்கே வந்துடு. போய் கொஞ்ச நாள்ல உன்னை கூப்பிடுக்கிறேன். நீ என்னோடேயே அங்க இருக்க வேண்டாம். ஆறு மாசத்துக்கு ஒரு தடவை இங்க வந்துட்டு போலாம். முடிஞ்சா உங்க அப்பா அம்மாவ கூட இடையில அங்கு கூப்பிட்டுக்கலாம். ரெண்டு வருஷம் தானே சீக்கிரம் ஓடிடும். அதுக்கப்புறம் கீர்த்தி கல்யாணத்தையும் முடிச்சிட்டேன்னா அதுக்கப்புறம் எந்த கமிட்மெண்ட்ஸ்ம் கிடையாது. நாம இங்கே வந்திடலாம்” என்றான்.
“நான் சொல்றது உங்களுக்கு புரியுதா… இல்லையா? நான் வெளிநாடு வர மாட்டேன். நீங்களும் போகக்கூடாது. சுயநலமும் பேராசையும் பிடிச்ச அவங்களுக்காக நீங்க தியாகியா இருங்க. நான் ஏன் தியாகி ஆகணும். என்னை விட்டுட்டு என் அப்பா அம்மா ஏன் கஷ்டப்படணும்?” என குரலில் கடுமையோடு கேட்டாள்.
“என் வீட்ல உள்ளவங்க கிட்ட நான் பேசினா, என்னமோ நான் நன்றி கெட்டவன்ங்கிற மாதிரி பேசுவாங்க. அவங்க என்னை புரிஞ்சுக்க ட்ரை பண்ண மாட்டாங்க. நீயே என்னை புரிஞ்சுக்காம இவ்ளோ பிடிவாதம் பண்ணும்போது, அம்மாவும் வாசுகியும் என்னை புரிஞ்சுபாங்கன்னு நினைக்கிறியா?”
“என்னோட முடிவை நான் தெளிவா சொல்லிட்டேன். நான் முக்கியம்ன்னா நான் சொல்றதை நீங்க கேளுங்க. இல்ல அவங்கதான் முக்கியம்ன்னா…. உங்க இஷ்டம், என்னை விட்டுடுங்க” என்றாள் காவ்யா.
“விட்டுடுங்கன்னா என்ன அர்த்தம்?” என கோவமாகக் கேட்டான் நந்தா.
“விட்டுடுங்கன்னா விட்டுடுங்கன்னுதான் அர்த்தம். வேறு அர்த்தம் எதுவும் இல்லை”
“என்னை விட்டுட்டு நீ இருந்துடுவியா?”
“நல்லா இருப்பேன். நான் முக்கியமில்லைன்னு நினைக்கிற உங்கள விட்டுட்டு இருப்பேன். என்னால இருக்க முடியும்” என்றாள் காவ்யா.
“நமக்குள்ள அவ்வளவுதானா காவ்யா? என்னை விட்டுட்டு ஈஸியா போயிடுவியா?”
“அப்படின்னா நான் சொல்றதைக் கேளுங்க”
“நீ பிளாக்மெயில் பண்ற”
“நீங்க எப்படி வேணா வச்சுக்குங்க”
காவ்யாவின் பிடிவாதக் குணம் அறிந்தவன் அதற்கு மேலும் வாதிடாமல், “மனசு மாறிச்சுன்னா சொல்லு வரேன். என்னோட யுஎஸ் வர முடியாதுன்னா நான் கம்பெல் பண்ணலை. இங்கேயே உன் அப்பா அம்மாவுவோடேயே இரு. பைத்தியக்காரத்தனமா விட்டுட்டு போயிடுவேன்னு எல்லாம் பேசாதே” எனக் கூறி விட்டு வெளியே செல்ல கதவில் கை வைத்தவன், ஒரு நொடி நின்று திரும்பி அவளைப் பார்த்து, “அப்புறம் நீ சொன்ன காரணத்துக்காக உன்னை என்கூட யுஎஸ் கூப்பிடலை. நீதான் எனக்கு எல்லாம். நீ இல்லாம உன் புருஷன் ஒன்னுமே இல்ல. அதை புரிஞ்சுக்க” எனக் கூறி விட்டு வெளியே வந்தவன் காவ்யா பெற்றோரிடம் எதுவும் கூறிக் கொள்ளாமல் சென்று விட்டான்.
அவன் சென்றதும் வெளியே வந்த காவ்யாவிடம் “என்ன சொன்னார் மாப்பிள்ளை?” எனக் கேட்டார் காமாட்சி.
அவன் கூறியதை காவ்யா சொல்ல, “ நீ இவ்வளவு சொல்லியும் அவர் கேட்கலையா? ஒத்த கால்ல நின்னு அடம் பிடிச்சி அவரை கல்யாணம் பண்ணிக்கிட்டியே…. இப்ப பார்த்தியா? உன்னைவிட அவங்க எல்லாரும் அவருக்கு முக்கியமா போயிட்டாங்க. நாங்க இருக்கும்போதே நீ இப்படி கஷ்டப்பட்டடீன்னா, எங்க காலத்துக்கு அப்புறம் உன் நிலைமை என்னாகும்?” எனக்கேட்டார் கருணாகரன்.
“அப்பா நீங்க பயப்படற மாதிரி எல்லாம் என்னை விடமாட்டார். இவங்களுக்கு செய்றத பெரிய கடமையா நெனச்சுக்கிட்டு அவங்க பேராசை படறது புரியாம இருக்கார். என்னை விட்டுட்டு அவரால இருக்க முடியாது” என்றாள்.
“நான் சொல்றதை கொஞ்சம் பொறுமையா கேளு காவ்யா. எங்களுக்கு வயசாயிடுச்சு. உனக்குன்னு கூட பிறந்தவங்க யாரும் இல்லை. உன் வீட்டுக்காரர் நல்லவரா இருந்தாலும், அவர் வீட்டுல உள்ளவங்க உங்களை நிம்மதியா வாழ விட மாட்டாங்க. இவரும் தனியா போக ஒத்துக்க மாட்டாங்குறார். பேசாம இவரை டிவோர்ஸ் பண்ணிடு, நான் வேற நல்ல இடத்தில உனக்கு கல்யாணம் பண்ணி வைக்கிறேன்” என கருணாகரன் சொல்ல, “அப்பா…” என கத்தி விட்டாள் காவ்யா.
“உங்களுக்கு என்ன அறிவு மழுங்கிப் போச்சா? மூட்டை பூச்சிக்கு பயந்து வீட்டை கொளுத்தின கதையா மத்தவங்க சரி கிடையாதுன்னு உங்க பொண்ணுக்கு விவாகரத்து வாங்கி தரேன்னு சொல்றீங்க. மாப்பிள்ளை மாதிரி தங்கமான பையன போய் விவாகரத்து பண்ண சொல்றீங்க?” எனக் கேட்டார் காமாட்சி.
“உனக்கு ஒன்னும் தெரியாது வாயை மூடிக்கிட்டு சும்மா இரு. தங்கமான மாப்பிள்ளையாம், அந்த தங்கமான மாப்பிள்ளை பண்ணி வச்சதை என் பொண்ணு முகத்தைப் பாரு தெரியும். இப்பவே இவ்வளவு பிரச்சனையா ஆகுது. போகப்போக இன்னும் நிறைய பிரச்சனை வரும். நாம இருக்கிறவரை சரி. அதுக்கப்புறம் காவ்யாவுக்கு யார் ஆதரவு?” எனக் கேட்டார் கருணாகரன்.
“உங்க பொண்ணும் ஒண்ணு லேசு பட்டவ கிடையாது. இவ துடுக்கா ஏதாவது பேசியிருப்பா. இல்லன்னா இவ்வளவு அமைதியானவரு கை நீட்டியிருப்பாரா? கல்யாணமான புதுசுல எல்லோருக்கும் பிரச்சினை வரத்தான் செய்யும். அதை என்னன்னு பார்த்து பேசி தீர்த்து வைக்கணும். இப்படி விவாகரத்து அது இதுன்னு பேசக்கூடாது. அந்த மனுஷன் வெளியில் போகும்போது முகத்தை பார்க்க முடியல. இவளும் படுத்துறா…. அவங்க வீட்டிலேயும் படுத்துறாங்க. பாவம் அவர். நீ முதல்ல இங்கேயிருந்து கிளம்புடி. எதா இருந்தாலும் பொறுமையா, அன்பா அவர்கிட்ட எடுத்து சொல்லு. அவர் கேட்டுக்குவார்” என்றார் காமாட்சி.
“அப்பா நீங்க டிவோர்ஸ் கேட்டு அவருக்கு நோட்டீஸ் அனுப்புங்க” என காவ்யா கூற, “சரிம்மா” என்றார் கருணாகரன்.
“இல்லம்மா சும்மா நோட்டீஸ்தான் அனுப்ப சொல்றேன். அவருக்கு என்னை விட்டுட்டு இருக்க முடியாது. நான் எவ்வளவோ சொல்லிப் பார்த்துட்டேன், அவர் கேட்க மாட்டேங்கிறார். டிவோர்ஸ் நோட்டீசை பார்த்தா பயந்துபோய் நான் சொல்றத அவர் கேட்பார். அதுக்குதான் இது. மத்தபடி அப்பா சொல்ற மாதிரி அவரை பிரியணும்ங்கிற எண்ணம் எனக்கு கிடையாது. அவர் வெளிநாடு போறதை தடுக்க எனக்கு வேறு வழி தெரியலைம்மா” என்றாள் காவ்யா.
“ஆமாம்ம்மா. நீ சொல்றதும் சரிதான். மாப்பிள்ளையை நம்ம வழிக்கு வர வைக்க இதுதான் சரியான வழி. நான் இன்னைக்கே லாயரை போய் பார்க்கிறேன்” எனக் கூறிச் சென்றார் கருணாகரன்.
“என் மனசுக்கு இதெல்லாம் சரியா படலை காவ்யா. ஏதாவது விபரீதமா ஆகப்போகுது. கொஞ்சம் பொறுமையா இருடி. பொறுமையா அவர்கிட்ட பேசு. புருஷனை அன்பால ஜெயிக்கலாம். இப்படி மிரட்டி காரியத்தை சாதிக்க நினைச்சா வேற மாதிரி போயிடும்” என பெரியவராய் காவ்யாவுக்கு அறிவுரை வழங்கினார் காமாட்சி.
அவரின் அறிவுரையை அலட்சியப்படுத்தினாள் காவ்யா. தன் தந்தையுடன் சேர்ந்து கொண்டு, விவாகரத்து கேட்டு நந்தாவுக்கு நோட்டீஸ் அனுப்ப தயாரானாள்.
வீட்டிற்கு வந்த நந்தாவிடம் சாந்தி “என்ன பிரச்சனை?” எனக் கேட்டார்.
“ஒரு சின்ன சண்டை. சீக்கிரம் வந்துடுவா” எனக் கூறியவன், மெதுவாக தயங்கி “அம்மா உங்ககிட்ட கொஞ்சம் பேசணும்” என்றான்.
“என்ன நந்தா?” எனக் கேட்டார் சாந்தி.
“பிரபு வீட்டுல ரொம்ப எதிர்பார்க்கிற மாதிரி இருக்கு. எல்லாம் இப்பவே செய்ய கொஞ்சம் சிரமம். அதனால கல்யாணத்தை முடிச்சிட்டு அவங்க கேட்டது எல்லாத்தையும் கொஞ்சம் கொஞ்சமா செஞ்சிடலாம்ன்னு பேசிப் பார்க்கலாமா?” எனக் கேட்டான்.
“என்ன நந்தா நீ…? முன்ன எல்லாத்துக்கும் ஒத்துகிட்ட தானே. நாமளும் எல்லாத்துக்கும் சம்மதிச்சு தானே கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்டோம். இப்ப போய் எப்படி அப்புறமா செய்றோம்ன்னு சொல்ல முடியும்?” எனக் கேட்டார்.
இவர்கள் பேசுவதைக் கேட்டுக் கொண்டிருந்த வாசுகி, “அம்மா இதெல்லாம் அண்ணி பண்ற வேலை. எனக்கு செய்யக்கூடாதுன்னு அவங்கதான் சொல்லியிருப்பாங்க. என்னை அவங்களுக்கு பிடிக்காது. அதான் இப்படி பண்ணி என்னை பழி வாங்குறாங்க” என்றாள்.
நந்தாவுக்கு கோவம் வந்து விட்டது. “தெரியாம நீயா எதுவும் பேசாத வாசுகி. காவ்யா பட்டு பட்டுனு பேசுவாளே தவிர யாருக்கும் கெடுதல் நினைக்க மாட்டா. பழிவாங்குறது மாதிரியெல்லாம் சீப்பா திங்க் பண்ண மாட்டா. எனக்கு உண்மையிலேயே இப்போ இவ்வளவு செய்ய முடியாது. நான் வெளிநாட்டுக்கு வேலைக்குப் போய் சமாளிச்சுக்கலாம்ன்னு நினைச்சுதான் முதல்ல சரின்னு சொன்னேன். காவ்யாவுக்கு நான் வெளிநாடு போறது பிடிக்கல. இங்கேயே வேலை பார்த்து அதுல எல்லா செலவும் செய்யணும்னா இப்ப கொஞ்சம் கஷ்டம். அதனால தான் சொன்னேன்” என்றான் நந்தா.
“கல்யாண வயசுல வீட்டுல பொண்ணுங்க இருக்கும்போது, யாரும் பையனுக்கு கல்யாணம் செய்ய மாட்டாங்க. ஆனா நான் உன் மேல உள்ள நம்பிக்கையில உனக்கு கல்யாணம் செஞ்சு வச்சேன். அது தப்புன்னு இப்போ எனக்கு புரியுதுப்பா. நீ சொல்ற மாதிரி சொன்னா இந்த கல்யாணம் நின்னு போயிடும். அப்புறம் வாசுகி வாழ்க்கை என்னாகிறது?” என கண்ணீர் சிந்தினார் சாந்தி.
“எனக்காக யாரும் ஒன்னும் கஷ்டப்பட வேண்டாம். நான் செத்து போயிடுறேன்” எனக் கூறி அழ ஆரம்பித்தாள் வாசுகி.
“நான் அப்பவே சொன்னேன். கேட்டீங்களா? வெளியில பொண்ணு எடுத்தா இப்படித்தான் நடக்கும். இந்நேரம் அவ இடத்துல ராணி இருந்திருந்தா ஜாம் ஜாம்னு முன்ன நின்னு இவ கல்யாணத்தை நடத்தி வச்சிருப்பா. அமைதியானவ, இப்படி வீட்டைவிட்டெல்லாம் போக மாட்டா. மனசு புரிஞ்சு நடந்துகிட்டு இருந்திருப்பா. உங்களுக்கு கொடுத்து வைக்கலை” என சுந்தராம்பாள் அவர் பங்குக்கு புலம்ப,
“எல்லாரும் ஏன் காவ்யாவையே குறை சொல்றீங்க? உங்களுக்கு செய்யக்கூடாதுன்னு எல்லாம் அவள் சொல்லவே இல்லை. என்னை வெளிநாடு போகக் கூடாதுன்னுதான் சொல்றா. என்னால வெளிநாடு போகாமல் சமாளிக்க முடியாது. அதனால உங்க கிட்ட கேட்டேன். முடியாதுன்னு சொல்லிட்டீங்க இல்ல. விடுங்க. அவங்க சொன்ன மாதிரி எல்லாம் பண்ணி கல்யாணம் செஞ்ச்சிடலாம்” எனக் கூறி எழுந்து சென்று விட்டான்.
ஆவணி முதல் முகூர்த்தத்தில் வாசுகிக்கு திருமணம் செய்ய நாள் குறிக்கப்பட்டது. ஒரு வாரமாகியும் காவ்யாவிடமிருந்து அழைப்பு எதுவும் வரவில்லை. பதிவுத் தபால்தான் வந்தது. பிரித்துப் பார்த்த நந்தாவுக்கு ஆத்திரம்தான் வந்தது. விவாகரத்து பத்திரம் அனுப்பியிருந்தாள் காவ்யா.
கோவத்தோடு அந்தத் தபாலையும் எடுத்துக் கொண்டு காவ்யா வீட்டிற்கு சென்றான். அவளும் காமாட்சியும்தான் இருந்தனர். சோஃபாவில் அமர்ந்து தொலைக்காட்சியில் ஏதோ நிகழ்ச்சி பார்த்துக் கொண்டிருந்தாள் காவ்யா. கோபமாக உள்ளே நுழைந்த நந்தா, அவள் முன் இருந்த டீப்பாயின் மீது அந்த விவாகரத்து பத்திரத்தை விட்டெறிந்தான்.
“என்னடி இது?” எனக் கேட்டான்.
“ஏன் உங்களுக்கு தெரியலையா?” எனக் கேட்டாள் காவ்யா.
“இப்ப நமக்குள்ள என்ன நடந்துச்சுன்னு என்கிட்டயிருந்து டிவோர்ஸ் கேட்டுருக்க?”
“நான் சொல்ற எதுக்கும் நீங்க ஒத்து வர மாட்டேங்கறீங்க, அப்புறம் ஏன் நாம சேர்ந்து வாழனும்?” என்றாள் காவ்யா.
“பைத்தியமாடி உனக்கு… என்னை விட்டுட்டு நீ இருந்துடுவியா?”
“ஏன் என்னை விட்டுட்டு நீங்க வெளிநாடு போக நினைக்கலை? அதுக்கு ஒரேடியா பிரிஞ்சிடலாம். உங்க வாழ்க்கையை நீங்க பார்த்துக்குங்க, என் வாழ்க்கையை நான் பார்த்துக்குறேன்”
“வெளிநாட்டுக்கு வேலைக்குப் போறவங்க பொண்டாட்டி எல்லாம் இப்படித்தான் உன்னை மாதிரி டிவோர்ஸ் கேட்கிறாங்களா?”
“நீங்க ஏன் மத்தவங்கள பத்தி பேசுறீங்க? அவங்களுக்கு எல்லாம் புருஷன் வெளிநாடு போறது கல்யாணத்துக்கு முன்னாடியே தெரிஞ்சிருக்கும். பொண்டாட்டி சம்மதத்தோட போவாங்க. உங்கள மாதிரி பொண்டாட்டி சம்மதம் இல்லாம போக மாட்டாங்க”
“என் நிலைமை நல்லா தெரிஞ்சும் ஏன் இப்படி எல்லாம் பண்ற?”
“இப்பவும் ஒண்ணும் கெட்டுப் போகலை. நான் சொல்றதை கேளுங்க. இதை இப்பவே கிழிச்சு போட்டுடுறேன்”
“என்ன மிரட்டுறியா? நீ சொல்றத நான் கேட்டா இந்த டிவோர்ஸ் வேண்டாம்..??”
“வேண்டாம்”
“நீ சொல்றத கேட்கலைன்னா என்னை டிவோர்ஸ் பண்ணிடுவ…?”
“ஆமாம்”
தன் சட்டைப்பையில் இருந்து பேனாவை எடுத்தவன், அவள் கண் முன்னேயே விவாகரத்து பத்திரத்தில் கையெழுத்திட்டான்.
“என்ன நான் சைன் பண்ண மாட்டேன்னு பூச்சாண்டி காமிக்கிறியா? எல்லாத்துலயும் சைன் பண்ணிட்டேன். முடிஞ்சா நீ என்னை டிவோர்ஸ் பண்ணிக்கடி. ஆளையும் மூஞ்சியும் பாரு, தள்ளு” என வழியில் நின்றவளை தள்ளிக்கொண்டு, செல்லும் முன்பு காமாட்சியை பார்த்து “நான் இன்னும் ஒரு மாசத்துல யுஎஸ் போறேன். உங்க பொண்ணுக்கு நல்ல புத்தி சொல்லி அனுப்பி வைங்க” எனக் கூறிவிட்டு சென்றான்.
விவாகரத்து பத்திரத்தைக் காட்டி பயமுறுத்தி தன்னை அவள் நினைக்கும்படி செய்ய வைக்கிறாள் என்பதை புரிந்து கொண்ட நந்தா, அவள் எதிர்பார்க்காத வண்ணம் அதில் கையெழுத்திட்டு அவளையே பயமுறுத்தி விட்டு வந்துவிட்டான். அவள் வருவாள் என நந்தா காத்திருக்க வரவேயில்லை.
‘இதெல்லாம் வேண்டாம். வெளிநாட்டுக்கு நான் போகவில்லை, உன்னுடனே இருக்கிறேன்’ என சொல்வான் என காவ்யா எதிர்பார்த்திருக்க, அவனும் கையெழுத்திட்டு சென்றதை காவ்யாவால் தாங்க முடியவில்லை. தன்னைவிட நந்தாவுக்கு சுயநலம் பிடித்த அவன் குடும்பத்தார் முக்கியமாய் போய்விட்டதாக எண்ணிக்கொண்டாள்.
ஒரு வாரம் கழித்து மீண்டும் காவ்யாவைப் பார்க்க வந்தான் நந்தா. அறைக்குள் இருந்து கொண்டு வெளியே வரவேயில்லை காவ்யா.
கருணாகரன், “அதான் டிவோர்ஸ் பேப்பர்ல சைன் பண்ணிட்டீங்களே. அப்புறம் என்ன? கோர்ட்டுல பார்க்கலாம்” எனக் கூறினார்.
“வயசுல பெரியவங்களா அவளுக்கு அட்வைஸ் பண்றதை விட்டுட்டு, நீங்களும் அவ கூட சேர்ந்துக்கிட்டு பேசுறீங்களா?” எனக் கேட்டான் நந்தா.
“இன்னும் ரெண்டு வாரத்துல என் தங்கச்சி கல்யாணம். எல்லா ஏற்பாடும் நடந்துகிட்டு இருக்கு. இந்த சமயத்தில இவ இங்கு வந்து உட்கார்ந்துக்கிட்டு விவாகரத்து தான்னு பிரச்சனை பண்ணிக்கிட்டு இருக்கா. அவ போக்குல போறதுன்னா என்னை என்ன பண்ண சொல்றீங்க?” எனக் கேட்டான் நந்தா.
“அவதான் வெளிநாடு போக வேண்டாம்னு சொல்றாளே” என்றார் காமாட்சி.
“அதுமட்டுமா சொல்றா? தனிக்குடித்தனம் கூப்பிடுறா… இவ்வளவு செலவு பண்ணி வாசுகி கல்யாணத்தை பண்ண வேணாம்னு சொல்றா. இதுல எதுவும் என்னால முடியாது” என்றான் நந்தா.
“அப்ப என் பொண்ணு உங்க கூட வர மாட்டா” என்றார் கருணாகரன்.
காவ்யா இருந்த அறையின் கதவை வேகமாக தட்டிய நந்தா, “கதவைத் திறடி, இப்ப வெளியே வரப் போறியா இல்லையா…?” எனக் கத்தினான். பதிலே வராமல் போக, “சும்மா உன் பின்னாடியே சுத்திகிட்டு இருப்பேன்னு நினைக்காதே. நான் உன்கிட்ட ரொம்ப பொறுமையா போறேன். நீ அளவுக்கு மீறி பண்ற. பத்து நிமிஷம் இங்கே இருப்பேன். கதவை திறந்துகிட்டு மரியாதையா என்கூட வா. இல்லன்னா போடின்னு போய்கிட்டே இருப்பேன்” எனக்கூறி ஹாலில் உட்கார்ந்து கொண்டான்.
கேட்டுக்கொண்டிருந்த காவ்யாவிற்கு இன்னும் ஆத்திரம்தான் வந்தது. ‘கையெழுத்து போட்டுட்டு போன தானே. அப்புறம் ஏன் திரும்பி வந்த? பத்து நிமிஷத்துல நான் வரலைன்னா போயிடுவியா? போ’ என நினைத்தவள் வெளியே வராமல் வீம்பாக அறையிலேயே உட்கார்ந்து கொண்டாள்.
“நீங்க என்ன சொன்னாலும் அவ வர மாட்டா” என தெனாவட்டாக கூறி கருணாகரனும் அமர்ந்துகொண்டார். காவ்யா வரவேயில்லை. கருணாகரன் நந்தாவை பார்த்து ஏளனமாக சிரிக்க, கோவமான நந்தா எழுந்து சென்று விட்டான். அன்று போனவனை பின் மீண்டும் அலுவலகத்தில்தான் பார்த்தாள் காவ்யா.
தன் நினைவுகளில் இருந்து மீண்ட காவ்யா, அருகில் படுத்துறங்கும் அர்ஜுனை பார்த்தாள். ‘நீ என் வயித்தில் இருக்கன்னு தெரிஞ்சும் உன் அப்பா என்னை விட்டுட்டு போய்ட்டார், இப்போ திரும்பி வந்தா நான் எல்லாத்தையும் மறந்துட்டு அவர் கூட சேர்ந்து வாழணுமா?’ என மகனிடம் கேட்பது போல தனக்கு தானே கேட்டு கொண்டே அப்படியே உறங்கினாள்.
இவளுடன் எப்படி இணைந்து வாழ்வது என நந்தா நினைக்க, ஏன் இணைந்து வாழ வேண்டும் என்று காவ்யா வீம்பாக இருக்க உறக்கத்தில் சிரித்து கொண்டே புரண்டு படுத்தான் அர்ஜுன்.