NNVN-10

அத்தியாயம் 10

புகுந்த வீட்டில் கோபம்கொண்டு, தன் பிறந்த வீட்டிற்கு வந்துவிட்ட காவ்யா தன் பெற்றோரிடத்தில் விஷயத்தைக் கூற அவர்களுக்கும் கோபம் வந்தது. கருணாகரன் வெகுண்டெழுந்து விட்டார்.

“அவங்க எல்லாரும் சேர்ந்து மாப்பிள்ளை தலையில் மிளகாய் அரைக்க பார்க்கிறாங்க. சொந்த அண்ணன்களே இந்த காலத்துல இப்படி செய்யமாட்டாங்க. இப்படியே அவங்களுக்கு செஞ்சிகிட்டு இருந்தார்ன்னா நாளைக்கு உங்களுக்கும் குழந்தைங்க பிறக்கும். அப்போ என்ன பண்ணுவார்?” எனக்கேட்டார் கருணாகரன்.

“அதானே…. இதென்ன இவ்வளவு மோசமானவங்களா இருக்காங்க? மாப்பிள்ளை வந்ததும் இதையெல்லாம் பேசி ஒரு முடிவு எடுத்துக்கிட்டு அதுக்கப்புறம் காவ்யாவை வீட்டுக்கு அனுப்பலாம்” என்றார் காமாட்சி.

“இன்னும் என்ன பேசுறது? அவங்க கூட எல்லாம் இருந்து என் பொண்ணு கஷ்டப்பட வேண்டாம். ஒண்ணு காவ்யாவோட மாப்பிள்ளை நம்ம கூட வந்து இருக்கட்டும். இல்ல அப்படி இருக்கிறது சங்கடமா இருந்தா 2 பேரும் தனிக்குடித்தனம் போகட்டும். இவ்வளவு செலவு பண்ணியெல்லாம் இந்த கல்யாணமும் பண்ணக்கூடாது. இதுக்கெல்லாம் ஒத்துக்கிட்டா அதுக்கப்புறம் காவ்யாவை அனுப்பிவைக்கலாம்” என்றார் கருணாகரன்.

“அப்பா தனிக்குடித்தனம் அது இதுன்னு எல்லாம் பேசாதீங்க. அவருக்கு சங்கடமா இருக்கும். தனிக்குடித்தனத்துக்கு ஒத்துக்கவும் மாட்டார். இவர் இவ்வளவு செலவு செய்கிறது பிடிக்கல. அவருக்கு தேவையில்லாத பர்டன் ஆகும். அதை நான் எடுத்து சொன்னா புரிஞ்சுக்குவார். அவர் வர்ற வரையிலும் எனக்கு அங்க இருக்க பிடிக்கலை. அதான் இங்க வந்துட்டேன். நீங்க என்னைக் கேட்காம எதுவும் பேசிடாதீங்க” என்றாள் காவ்யா.

அன்று இரவுதான் நந்தாவும் கனடாவில் இருந்து கிளம்புவதாக இருந்தது. அவனிடம் பேசிய காவ்யா விளக்கமாக எதுவும் கூறாமல், அவர்கள் அதிகமாக எதிர்பார்க்கிறார்கள் என்று மட்டும் சொல்லியிருந்தாள்.

“ஏய் செல்லக்குட்டி…. இதைப்பத்தி எல்லாம் அங்க வந்ததுக்கு அப்புறம் பேசு. உன்னை மூணு மாசத்துக்கு அப்புறம் பார்க்க போறேன். எவ்வளவு சந்தோஷமா இருக்கு தெரியுமா? இந்த மூணு மாசம் கூட வேகமா ஓடிப் போச்சு. இங்கேயிருந்து கிளம்ப போறேன். இப்பதான் டைமே ஓட மாட்டேங்குது” என்றான்.

காவ்யாவும் அவன் வருவதில் மிகவும் சந்தோஷமாகத்தான் இருந்தாள். “நாளைக்கு அப்பாவை அழைச்சிக்கிட்டு ஏர்போர்ட் வந்துடுறேன்” என்றாள்.

“வேண்டாம், நான் வரும்போது அன் டைம் ஆகிடும்” என்றான் நந்தா.

“அதனாலதான் அப்பாவோட வர்றேன்னு சொன்னேன்”

“நீ உன் அப்பாவோட வந்து, நான் அவர் கிட்ட பேசி, அவரை வீட்டுக்கு அழைச்சிட்டு போய், அங்க வேற உபசரிச்சி, திருப்பி அவரை வீட்டுக்கு அனுப்பி….. இப்பவே கண்ண கட்டுதே” என்றவன் “என் மனசு உனக்கு புரியுதா… இல்லையா காவ்யா?” என கெஞ்சலாய் கேட்டான்.

“புரியுது…..” என சிரித்தவள், “இப்போ என்ன பண்ணனும்? அதை சொல்லுங்க, பண்றேன்” என்றாள்.

“அப்படி கேளுங்க பொண்டாட்டி மேடம். நான் சென்னை வந்ததும் டாக்ஸி எடுத்துட்டு நானே வீட்டுக்கு வந்துடுறேன். மேடம் தூங்கி வழியாம எனக்கு கருணை காட்டுங்க போதும்” என்றான்.

“ம்…ம்…. பார்க்கிறேன்” என காவ்யா முறுக்கிக் கொள்ள, “என்னை பார்த்தா பாவமா தெரியலையா?” என நந்தா கேட்க, கலகலவென சிரித்தாள் காவ்யா.

கருணாகரன் நந்தா வந்தவுடன் அவனிடம் பேசிய பிறகே செல்லலாம் என காவ்யாவிடம் கூற, நந்தாவின் ஏக்கம் புரிந்த காவ்யா, “அப்பா அவர் வர்ற அன்னைக்கு நான் அங்க இல்லனா ரொம்ப ஃபீல் பண்ணுவார்.ரெண்டு நாள்ல அவரை அழைச்சிக்கிட்டு நானே வர்றேன்” என தந்தைக்கு சமாதானம் கூறி விட்டு புகுந்த வீடு சென்று விட்டாள்.

கீர்த்தி தவிர மற்றவர்கள் அவளிடம் முகத்தை திருப்பிக் கொண்டு இருக்க, காவ்யாவும் எதையும் பெரிதுபடுத்தாமல், ‘இது என் வீடு, நீங்க என்ன என்னை வரவேற்கிறது?’ என்கிற ரீதியில் இருந்துகொண்டாள்.

அன்று இரவு உணவு முடித்துவிட்டு, எல்லோரும் உறங்கிவிட, நந்தாவுக்காக காத்திருந்தாள் காவ்யா. சரியாக நள்ளிரவு ஒரு மணிக்கு வீட்டிற்கு வந்து விட்டான் நந்தா. கைப்பேசியின் மூலம் காவ்யாவை அழைக்க, ஓடிவந்து கதவைத் திறந்தாள். அவளைப் பார்த்தவுடன் அணைத்துக்கொண்டான் நந்தா. அவளும் அவனை அணைத்துக் கொண்டாள்.

“என்ன நீங்க இப்படி இளைச்சு போயிட்டீங்க?” எனக்கேட்டாள் காவ்யா.

“நான் நல்லாதான் இருக்கேன்” என்றான் நந்தா.

“ம்ப்ச்… எனக்கு தெரியாதா? உங்களை கட்டிப்பிடிக்கும் போது, எனக்கு தெரியுது. அட்லீஸ்ட் ரெண்டு கிலோவாவது இளைச்சுப் போயிருப்பீங்க” என்றாள்.

“அடிப்பாவி அப்படியே கரெக்டா சொல்ற?” என்றான்.

“நீங்க எனக்கு அவ்ளோ அத்துபடி” என்றாள்.

“சரி இங்கேயே நிக்க வைக்கப் போறியா? உள்ள அழைச்சிட்டு போற எண்ணம் இல்லையா?” எனக் கேட்க, அதற்குப் பின்னர்தான் அவனை விட்டாள்.

அறைக்கு வந்தவுடன் காவ்யா பெரிதாக கொட்டாவி விட, “என்னடி நீ….? நான் ஆசை ஆசையா வந்தா இப்படிக் கொட்டாவி விடுற?” எனக் கேட்டான்.

“மணி என்னன்னு பார்த்தீங்களா? எனக்கு ஒரே தூக்கம் தூக்கமா வருது” என்றவள் போய் படுக்கையில் படுக்க, “என் செல்ல குட்டில்ல, ஒரு 5 மினிட்ஸ் டி, வந்துடுறேன், தூங்கிடாத” எனக் கூறிக் கொண்டே குளியலறைக்குள் சென்றான்.

சிரித்துக் கொண்டே கண்களை மூடி தூங்குவது போல பாவனை செய்ய, குளித்தவன் தன் உடலின் ஈரத்தை கூட துடைக்காமல், அவளருகில் வந்து படுத்து, அவளை அணைத்தான்.

“ ஐயோ…. இப்படியா ஈரத்தோடு வந்து படுப்பீங்க…? முதல்ல உடம்பை துவட்டுங்க, நான் டவல் எடுக்கிறேன்” என காவ்யா எழுந்திருக்க, எனக்கு டவல் எல்லாம் வேண்டாம். இதிலேயே துடைச்சுக்கிறேன்” என அவள் புடவையிலேயே துடைக்க ஆரம்பித்தான்.

“என் புடவையெல்லாம் ஈரம் ஆயிடுச்சு” என சிணுங்கினாள் காவ்யா.

“ஆமாம் ஈரமாயிடுச்சு இல்ல….. ஈரம் உனக்கு ஒத்துக்காது. சளி பிடிச்சுக்கப் போவது. இது வேண்டாம்” என நந்தா கூற, “உங்களை…..” என அவன் நெஞ்சில் செல்லமாய் அடித்தாள் காவ்யா.

சில நாட்கள் பிரிவுக்குப் பின், சேர்ந்த கணவன் மனைவி இருவரையும் ஜன்னல் வழியே கண்ட வெள்ளி நிலா வெட்கப்பட்டு மேகங்களுக்கு இடையில் ஒளிந்து கொண்டது.

நந்தாவின் அணைப்பில் படுத்திருந்த காவ்யா, “இனிமே இப்படியெல்லாம் என்னை விட்டுட்டு போகாதீங்க. ரொம்ப கஷ்டமா இருக்கு” என்றாள்.

“ம்… போகல” என்றான்.

“ரொம்ப மிஸ் பண்ணினேன்…..” என்றாள்.

“நானும் தாண்டி பொண்டாட்டி…. ரொம்ப…..ரொம்ப….. உன்னை மிஸ் பண்ணினேன்” என்றான்.

“திருப்பியும் உங்க ஆஃபீஸ் ல அப்ராட் போக சொன்னா என்ன பண்ணுவீங்க?” என கேட்டாள்.

“நான் வேற வேலை மாறப் போறேன். ரெடி பண்ணிட்டேன். இந்த வாரத்திலேயே பேப்பர் போட போறேன்” என்றான்.

“நிஜமாவா… சொல்லவே இல்லை”

“ம்… ட்ரை பண்ணிட்டு இருந்தேன். கன்ஃபார்ம் ஆனதும் சொல்லலாம்னு இருந்தேன். சென்னை வந்ததுக்கு அப்புறம்தான் மெயில் பார்த்தேன். உன்னை பார்த்ததும் உன்னை தவிர வேற எதுவும் நெனப்புல இல்லை” என்றான்.

வெட்கத்தில் சிரித்தவள், பின் நினைவு வந்தவளாய், “வாசுகியை பிரபு வீட்டிலிருந்து பாத்துட்டு போனதைப் பத்தி உங்ககிட்ட சொன்னாங்களா?” எனக் கேட்டாள்.

“ம்…. சொன்னாங்க” என்றான்.

“நீங்க என்ன முடிவு பண்ணியிருக்கீங்க?” எனக் கேட்டாள்.

“நான் முடிவு பண்ண என்ன இருக்கு. வாசுகி பிரபுவை லவ் பண்றா. அம்மாவுக்கும் இந்த இடம் பிடிச்சிருக்கு. அம்மா இந்த இடத்தையே முடிச்சிடலாம்னு சொல்றாங்க”

“நீங்க என்ன முடிவு பண்ணியிருக்கீங்கன்னு கேட்டா மத்தவங்கள பத்தி பேசாதீங்க? அவங்க என்ன டிமாண்ட் பண்றாங்கன்னு தெரியுமா? உங்களால சமாளிக்க முடியுமா?” எனக் கேட்டாள்.

“செலவு கொஞ்சம் அதிகம்தான். கொஞ்சம் கஷ்டப்பட்டாலும் சமாளிச்சுக்கலாம் காவ்யா” என்றான் நந்தா.

“எப்படி சமாளிப்பீங்க?”l

“வாசுகி, கீர்த்தி ரெண்டு பேர் பேரிலும் நான் சேவிங்ஸ் வச்சிருக்கேன். கீர்த்திக்குன்னு உள்ளதையும் இப்ப எடுத்து யூஸ் பண்ணிக்கலாம். மத்தது லோன் போடலாம்னு இருக்கேன்” என்றான்.

“அப்போ கீர்த்திக்கு செய்யறப்போ என்ன பண்ணுவீங்க?”

“அதுக்கு இன்னும் ரெண்டு மூணு வருஷம் டைம் இருக்கு. அதுக்குள்ள இதையெல்லாம் சரி பண்ணிடுவேன்” என்றான்.

“ம்… இப்ப லோன் போட்டு அதை அடைங்க. அப்புறம் அக்காவுக்கு செஞ்ச மாதிரிதான் அவ தங்கச்சிக்கும் செய்யணும்னு சொல்வாங்க. அவளுக்கும் லோன் போட்டு செஞ்சுட்டு, அதை அடைங்க. ரெண்டு பேருக்கும் வெறும் கல்யாணம் மட்டும் தானா. பிரசவம், அப்புறம் குழந்தைக்கு பேர் வைக்கிறது, அப்புறம் குழந்தைக்கு காது குத்துறது இப்படி லிஸ்ட் நீண்டுகிட்டே போகும். நீங்க செஞ்சுக்கிட்டே இருங்க” என கடுப்பாக பேசினாள் காவ்யா.

“என்ன காவ்யா இது? இப்படி பேசுற….. அவங்களுக்கு செய்றது என் கடமை இல்லையா?” எனக் கேட்டான் நந்தா

“அவங்களுக்கு செய்ய வேண்டாம்னு ஒன்னும் நான் சொல்லலை. உங்களால் என்ன முடியுமோ அதை செய்யுங்க. அதுக்கு தகுந்த மாதிரி ஒரு நல்ல இடத்தில கல்யாணம் பண்ணி கொடுங்க. அதை விட்டுட்டு சக்திக்கு மீறி செஞ்சு சுமையை ஏத்திக்காதீங்க. நமக்குன்னு ஒரு லைஃப் இருக்கு. அதை பீஸ் ஃபுல்லா நம்ம வாழ வேண்டாமா? லோன் மேல லோன் போட்டு நீங்க பர்டன ஏத்திகிட்டா நீங்கதான் கஷ்டப்படுவீங்க, உங்களோடு சேர்ந்து நானும் கஷ்டப்படணும்” என்றாள்.

“இந்த சின்ன மூளை எப்படியெல்லாம் யோசிக்குது?” என அவள் தலையை பிடித்து ஆட்டிக்கொண்டே கூறினான் நந்தா.

“பேச்சை மாத்தாதீங்க” என்றாள் காவ்யா.

“வாசுகி பிரபுவைதான் கல்யாணம் பண்ணிக்குவேன்னு அடம்பிடிக்கிறா. அம்மாவும் இந்த சம்பந்தத்தை முடிக்கதான் நினைக்கிறாங்க”

“அவங்ககிட்ட நீங்கதான் எடுத்துச்சொல்லணும்”

‘நான் சொன்னதும் கேட்டுட்டுதான் மறு வேலை பார்ப்பாங்களா? எனக்கு அவங்களை பத்தி நல்லா தெரியும். இந்த கல்யாணத்துல ரொம்ப உறுதியா இருக்காங்க” என்றான்.

“நீங்க முடியாதுன்னு சொன்னா என்ன பண்ணிடுவாங்க”

“நான் முடியாதுன்னு சொல்ல போறதில்லை காவ்யா. இந்த இடத்தையே முடிச்சிடலாம்ன்னுதான் இருக்கேன்” என நந்தா கூற, எழுந்தமர்ந்த காவ்யா கோபமாக முறைத்தாள்.

“காவ்யா இப்படி கோபப்படாதே. நான் வேற வேலை மாற போறதா சொன்னேனே. அது மாறிட்டேன்னா யூ எஸ் போக சான்ஸ் கிடைக்கும். சாலரியும் இப்போ உள்ளதை விட இரண்டு மடங்கு அதிகம் கிடைக்கும். எல்லாத்தையும் சமாளிச்சிடலாம்” என்றான்.

“இப்பதானே என்னை விட்டுட்டு போக மாட்டேன்னு சொன்னீங்க…? அதுக்குள்ள திரும்பியும் யூ எஸ் போகப் போறதா சொல்றீங்க” என கோவத்துடனே கேட்டாள்.

“சொல்றத முழுசா கேட்காம கோபப்படாதடி. நான்னா நான் மட்டும் தனியா போக போறதில்லை. நீயும் என்கூடத்தான் வரப்போற” என்றான்.

“யாரைக் கேட்டு இப்படியெல்லாம் தப்பு தப்பா முடிவெடுக்கிறீங்க?”

“என்ன தப்பா முடிவெடுத்துட்டேன்….? உன்னையும் என்கூட கூட்டிட்டு போறேன்னு சொல்வது தப்பான முடிவா?”

“ஆமாம்… தப்பான முடிவுதான். நான் என் அப்பா அம்மாவுக்கு ஒரே பொண்ணு. அவங்க வயசானவங்க. என்ன விட்டா அவங்களுக்கு வேற யாருமில்லை. நான் அவங்களை விட்டுட்டு எல்லாம் ஃபாரின் வரமாட்டேன்” என்றாள் காவ்யா.

“நம்ம ஒன்னும் நிரந்தரமா அங்கேயே இருக்க போறதில்லை. ரெண்டு இல்லனா மூணு வருஷம் அவ்வளவுதான். அதுக்கப்புறம் திரும்பி இங்கேயே வந்துடலாம்”

“ரெண்டு மூணு வருஷம்ங்கிறது உங்களுக்கு கொஞ்ச நாளா? வயசான என் அப்பா அம்மா உடம்புல ஆயிரத்தெட்டு வியாதி வச்சுக்கிட்டு எவ்வளவு கஷ்டப்படுறாங்க தெரியுமா? அவங்களை விட்டுட்டு நான் எங்கேயும் வர முடியாது” என்றாள் காவ்யா.

“என்ன உன் அப்பா அம்மாவுக்கு ஆயிரத்தெட்டு வியாதி. இப்போ வயசானவங்க எல்லாருக்குமே சுகர், பிரஸர் எல்லாம் இருக்குதானே. இப்போ அவங்க தேவைகளை அவங்க கவனிச்சிக்குறாங்க தானே. நம்ம உதவி அவங்களுக்கு தேவைப்படும்போது நம்ம இங்க வந்துடுவோம். அப்புறம் என்ன?”

“ஓஹோ…. அப்போ என் அப்பா அம்மா படுக்கையில் கிடந்தா தான் நான் அவங்க கூட இருக்கனுமா?” எனக் கேட்டாள் காவ்யா.

கண்களை மூடி மூச்சை இழுத்து கோவத்தை அடக்கியவன், “சரி நீ வர வேண்டாம். நான் போறேன். அதுவரை உன் அப்பா அம்மாவோடேயே இரு” என்றான்.

“என்னை விட்டுட்டு நீங்க போய்டுவீங்களா…?”

“நான் எங்கடி போறேன்னு சொல்றேன்? நீ தான் என் கூட வர மாட்டேன்னு சொல்ற” என கடுப்பாக பதிலளித்தான்.

“என் அப்பா அம்மாவ விட்டுட்டு நானும் வர முடியாது. நீங்களும் என்னை விட்டுட்டு போக கூடாது” என தீர்மானமாகக் கூறினாள் காவ்யா.

“என்ன நீ…. இப்படியும் வர மாட்டேங்குற, அப்படியும் வர மாட்டேங்குற. நான் என்னதான் பண்றது?”

“நான் சொல்றதை நீங்க கேளுங்க. இவ்வளவு எல்லாம் செய்ய முடியாதுன்னு சொல்லுங்க. ஒத்து வரதா இருந்தா இந்த இடத்தில் வாசுகிக்கு கல்யாணம் பண்ணுங்க. இல்லன்னா வேற இடம் பாருங்க. கடன வாங்கி அதை சமாளிக்க ஃபாரின் போறேன்னு சொல்ற கதையெல்லாம் வேண்டாம்” என்றாள் காவ்யா.

“நீ சொல்ற மாதிரி அவங்க ஒத்துக்க மாட்டாங்க காவ்யா. இப்ப கொஞ்சநாள் சிரமப்பட்டாலும் நான் சமாளிச்சிடுவேன்”

“அப்போ நான் சொல்றதை நீங்க கேக்க மாட்டீங்க. என்னைவிட அவங்கதான் உங்களுக்கு முக்கியம் அப்படித்தானே” என சீறினாள் காவ்யா.

“நான் எங்க அப்படி சொன்னேன்? இவங்களுக்கு செய்ய வேண்டியது என்னோட கடமை. அதிலிருந்து என்னால விலக முடியாது. கல்யாணத்துக்கு முன்னாடியே எல்லாம் சொன்னேன் தானே. என் கடமையில் இருந்து என்னால விலக முடியாது. புரிஞ்சுக்க”

“உங்க கடமைக்காக என்னைப் பத்தி கவலைப்படாம என்னை விட்டுட்டு ஃபாரின் போறேன்னு சொல்றீங்களே… இதை கல்யாணத்துக்கு முன்னாடி சொன்னீங்களா?”

“ப்ளீஸ் காவ்யா, ஆர்க்யூ பண்ணாம என்னோட நிலைமையை கொஞ்சம் புரிஞ்சுக்கம்மா. உன்னை விட்டுட்டு போகணும்னு நான் நினைக்கவே இல்லை. நீ இல்லாம எனக்கு மட்டும் கஷ்டம் இல்லையா? ஒரு 2 இயர்ஸ் தான். சீக்கிரம் ஓடிடும். நீயும் என் கூட வா” என்றான்.

“ஒரு பொண்டாட்டியா என்னை மதிச்சு உங்க நல்லதுக்காக நான் சொல்றதை நீங்க கேட்க மாட்டீங்க. அப்புறம் உங்க கூட ஃபாரின் மட்டும் எதுக்கு வரச்சொல்றீங்க….? உங்க கூட அப்பப்ப படுக்கவா?” என காவ்யா கேட்டதுதான் தாமதம். ‘பளார்’ என நந்தா காவ்யாவை அறைந்திருந்தான்.

“ஏண்டி… அதுக்கு மட்டும் தான் நீ எனக்கு தேவையா?”

“ஆமாம்… அப்படித்தான். அதனாலதான வந்தவுடனே என்ன ஏதுன்னு ரெண்டு வார்த்தை கூட பேசாம… அவசர அவசரமா உங்க தேவையை மட்டும் முடிச்சிகிட்டீங்க” என அவனது அடியால் எரிந்த தன் கன்னத்தில் கை வைத்துக்கொண்டே கோவமாக கத்தினாள்.

“போதுண்டி, போதும்… இதுக்கு மேல பேசி என்னை கொலைகாரனா மாத்தாத” என்றவன் கொஞ்சம் இடைவெளி விட்டு “கொஞ்ச நேரம் முன்னாடி இந்த பெட்ல என்கிட்டேயிருந்து என்ன நீ ஃபீல் பண்ணின? என்னோட உனக்கான தேடல் வெறும் லஸ்ட் மட்டும்தானா….? அதுல என்னோட அன்பு, காதல் எதையுமே நீ உணரலையா…? போடி…..” என்றவன் குளியலறைக்குள் சென்று, ஷவரை திறந்து அதற்கடியில் நின்றுகொண்டான். வெறும் படுக்கைக்காக மட்டும்தான் அவளை தன்னுடன் அழைக்கிறேன் என்ற அவளது பேச்சால்அவன் மனம் மிகவும் அடிவாங்கியிருந்தது. தன் கோபம் தீரும் வரை நின்றவன், தன் மனம் ஒருநிலைப்படவும் வெளியே வந்தான்.

‘அவதான் புரியாமல் கோவத்துல பேசுறான்னா பொறுமையா அவகிட்ட பேசிப் புரிய வைக்கிறதை விட்டுட்டு அவசரப்பட்டு கைநீட்டிட்டியே” என அவன் மனசாட்சி குரலெழுப்ப காவ்யாவை தேடினான். அவள் அறையில் இல்லை எனவும், அவசரமாக தன் ஈர உடையை மாற்றிக் கொண்டு கீழே வந்து தேடினான். நேரம் அப்போதுதான் நான்கை கடந்திருந்தது. கீழேயும் இல்லாமல் போக வெளியே வந்து தேடினான். அவளது ஸ்கூட்டி இல்லை. வெளியில் உள்ள இரும்பு கதவும் திறந்திருந்தது.

அவசரமாக தன் அறைக்கு ஓடியவன், அவளது கைப்பேசிக்கு தொடர்பு கொண்டான். ரிங் சென்று கொண்டே இருந்தது எடுக்கப்படவில்லை. தாமதிக்காமல் தன் வண்டி சாவியை எடுத்துக் கொண்டவன், அவள் வீட்டிற்குதான் சென்று கொண்டிருக்க வேண்டும் என யூகித்து காவ்யாவின் பிறந்த வீட்டிற்கு வண்டியை விரட்டினான்.

வழியெங்கும் தேடிக் கொண்டே சென்றான். அவள் வீட்டிற்கும் வந்துவிட்டான். அவளது வீட்டிற்கு வெளியே அவளது ஸ்கூட்டியை பார்த்த பின்தான் நிம்மதி அடைந்தான். வெளிக் கதவு திறந்தே இருந்தது. அழைப்பு மணியை அழுத்த, உடனே வீட்டின் கதவு திறக்கப்பட்டது. கருணாகரன்தான் திறந்தார். நந்தா உள்ளே எட்டிப்பார்க்க, காவ்யா காமாட்சியின் மடியில் தலை வைத்து அழுது கொண்டிருந்தாள்.

“காவ்யா” என நந்தா அழைக்க, நிமிர்ந்து பார்த்தவள் அவனைக் கண்டதும் தன் அறைக்கு வேகமாக சென்று கதவை அடைத்துக் கொண்டாள். காவ்யா நிமிர்ந்து பார்க்கும் போதுதான் அவளது முகத்தை பார்த்தித்திருந்தான். இடது கன்னம் அவனது விரல் தடங்கள் பதிந்து கன்றிச் சிவந்து போயிருந்தது. ‘எப்படி இவ்வளவு ஆத்திரம் தனக்கு வந்தது?’ என தன்னையே நொந்து கொண்டான்.

“என்ன பண்ணி வச்சிருக்கீங்க… என் பொண்ணை?” என கருணாகரன் சற்று அதட்டலாக நந்தாவை பார்த்து கேட்டார்.

அவர் முகம் காண முடியாமல், தலைகவிழ்ந்து, “சாரி மாமா. ஒரு சின்ன மிஸ்அண்டர்ஸ்டாண்டிங். நானே காவ்யா கிட்ட பேசி சரி பண்ணுக்கிறேன்” என்றான்.

“என்ன சரி செய்யப் போறீங்க? பத்து வருஷம் கழிச்சி தவமா தவமிருந்து பெத்த பொண்ணு அவ. ஒரு சின்ன துரும்பு கூட படாமல் நாங்க அவளை வளர்த்தோம். உங்க குடும்பத்தில வாழ முடியாதுன்னு தான் இந்தக் கல்யாணம் வேண்டாம்னு நான் மறுத்தேன். கேக்காம அடம் பிடிச்சு உங்களை கல்யாணம் பண்ணிக்கிட்டா. ஆனா நீங்க இப்படி கொடுமை படுத்துறீங்களே” என்றார்.

“கொடுமைன்னு எல்லாம் பேசாதீங்க மாமா. இனிமே இப்படி எல்லாம் நடக்காது” என்றவன் காவ்யா சென்ற அறைக் கதவை தட்ட ஆரம்பித்தான். அவள் திறக்கவில்லை.

காமாட்சியும் மகளை அடித்து விட்டதில் கண்கலங்கி போயிருந்தார். “அத்தை நீங்களாவது கதவைத் திறக்கச் சொல்லி காவ்யாகிட்ட சொல்லுங்க” என்றான்.

“மாப்பிள்ளை அவ மனம் நொந்து போய் வந்திருக்கா. கொஞ்சம் அவள ஃப்ரீயா விடுங்க” என்றார் காமாட்சி.

“அவளைப் பார்த்துக்குங்க” என பொதுவாக கூறிவிட்டு கிளம்பி வந்து விட்டான்.

நந்தா திரும்பி வீட்டுக்கு வரும்போது நன்றாக விடிந்திருந்தது. சாந்தி வெளியில்தான் நின்றிருந்தார். “என்ன நந்தா இது….? எழுந்திருச்சு வந்து பார்த்தா கேட் திறந்து கிடக்குது. உன் வண்டியையும் காணோம். காவ்யா ஸ்கூட்டரையையும் காணோம். நீ எப்ப வந்த? இப்போ எங்க போயிட்டு வர?” என கேள்விகளாக அடுக்கினார்.

“நேத்து நைட்டே வந்துட்டேன். எனக்கும் காவ்யாவும் ஒரு சின்ன சண்டை. கோச்சுக்கிட்டு அவ அம்மா வீட்டுக்கு போய்ட்டா” என்றவன் அதற்கு மேல் ஒன்றும் கூறாமல் தன் அறைக்கு சென்று விட்டான். அன்று முழுவதும் தன் அறையிலேயேதான் அடைந்து கிடந்தான். சாந்திதான் அறைக்கே உணவைக் கொண்டு வந்து கொடுத்தார். பெயருக்கு சாப்பிட்டான். காவ்யாவின் கைப்பேசிக்கு பலமுறை அழைத்து அவளிடம் பேச முயன்று தோற்றான்.

அன்றைய பொழுதை அப்படியே ஓட்டியவன், அடுத்தநாள் காலையிலேயே அலுவலகத்திற்கு விடுப்பு சொல்லிவிட்டு, என்ன சொல்லியாவது அவளை சமாதானம் செய்து அழைத்து வந்து விட வேண்டும் என்றெண்ணிக் கொண்டே காவ்யாவின் வீட்டிற்கு சென்றான். பாவம் அவன் எண்ணியது நடக்கப் போவதில்லை என்பது அவனுக்கு தெரியவில்லை.