NNVN-8

அத்தியாயம் 8

காமாட்சி இறந்து போய் விட்டார் என்பதை நந்தாவாலும் நம்பமுடியவில்லை. காலையில்தான் அவர் கையால் உணவருந்தி விட்டு சென்றான். அவர் இப்போது உயிருடனே இல்லை எனும்போது துக்கம் தொண்டையை அடைத்தது. தன் மேல் மயங்கி விழுந்த காவ்யாவை தரையில் கிடத்தி, தண்ணீர் தெளித்து மயக்கத்தை தெளிய வைத்தான். “காவ்யா, வா… வந்து உங்க அம்மாவை பாரு” என்றான். அவனை நிமிர்ந்து பார்த்தவளின் கண்களில் இருந்தது என்னவென்று அவனால் கண்டறிய முடியவில்லை. வரமாட்டேன் என்பதாய் அங்கேயே உட்கார்ந்துகொண்டாள்.

வலுக்கட்டாயமாக அவளை காமாட்சியின் உடலுக்கருகில் அழைத்துச் சென்றான். அவர் மேல் விழுந்து காவ்யா அழுத அழுகையில் அனைவரின் உள்ளமும் கரைந்தது. நந்தா அவளை சமாதானம் எதுவும் செய்யவில்லை. நன்றாக அழட்டும் என்று விட்டு விட்டான்.

தன் அலுவலகத்திற்கு விவரம் அளித்தான். தன் வீட்டிற்கு சொல்லவில்லை. சொன்னால் வருவார்கள்தான். அவர்களைப் பார்த்து காவ்யா எவ்வாறு நடந்து கொள்வாள் என தெரியாது. அவர்களுக்கும் காமாட்சி மீது பெரிய பாசமெல்லாம் கிடையாது. அதனால் வேண்டாமென்று விட்டு விட்டான்.

ஈரோட்டில் அவர்கள் சொந்தங்கள் சிலர் இருந்தனர். விவரம் சொல்ல வேண்டுமா, வேண்டாமா என நந்தாவுக்கு தெரியவில்லை. அவனே சென்று அழுது கொண்டிருந்த காவ்யாவிடம் கேட்டான். வேண்டாம் என்று சொல்லிவிட்டாள். அவளது அப்பா இறந்தபோதே சொந்தங்களை பற்றி அறிந்து வைத்திருந்தாள். போலியான சொந்தங்கள் வர வேண்டியதில்லை என நினைத்துதான் அவர்களுக்கு சொல்ல மறுத்துவிட்டாள்.

அலுவலகத்தில் இருந்தும், அந்த அப்பார்ட்மெண்டில் தெரிந்த சிலரும் இறுதிச் சடங்கிற்கு வந்தனர். எதிர் வீட்டுப் பெண்மணி மங்களம் அர்ஜுனை பார்த்துக்கொண்டார். எல்லாம் முன் நின்று நந்தாவே செய்தான். அலுவலகத்தில் காவ்யாவிற்கு தெரிந்தவன் என்று அப்பார்ட்மெண்டில் உள்ளவர்கள் நினைத்தனர். தனது குழுவில் இருப்பதால் உதவியாக செய்கிறான் என அலுவலகத்தினர் நினைத்தனர்.

இப்படியாக யாருக்கும் அங்கு நந்தாதான் காவ்யாவின் கணவன் என்பது தெரியவில்லை. காவ்யாவின் அலுவலக தோழி நளினி அவளை ஆதரவாக பிடித்துக்கொண்டாள். அழுது அழுது கரைந்தாள் காவ்யா.

எல்லாம் முடித்துவிட்டு நந்தா வீட்டிற்கு வந்த போது, வீட்டில் காவ்யாவுடன் நளினியும், எதிர் வீட்டு பெண்மணி மங்களம் மட்டும்தான் இருந்தனர். மங்களத்தின் கணவர் படுக்கையில் இருக்கும் நோயாளி. கணவருடன் தனியாகத்தான் இருக்கிறார். அதனால் வெகுநேரம் இருக்க முடியாமல், குழந்தையை காவ்யாவிடம் கொடுத்துவிட்டு, “குழந்தையை பாரு காவ்யா. நான் எவ்வளவு மல்லுக்கட்டியும் ஒண்ணுமே சாப்பிடலை. இவனுக்காகவாவது நீ மனசை தேத்திக்கோ” எனக்கூறிவிட்டு சென்றுவிட்டார்.

நளினியின் வீட்டிலிருந்து அழைப்பு வர, “வாங்க நளினி, உங்கள நான் பஸ் ஸ்டாப்ல ட்ராப் பண்றேன்” என்று அவளை அழைத்துக்கொண்டு, “அர்ஜுனை பார்த்துக்க” என்று மட்டும் காவ்யாவிடம் கூறிவிட்டு நந்தாவும் வெளியேறினான்.

‘என்னை விட்டுட்டு திரும்பியும் போறானா? போகட்டும். நானே பார்த்துக் கொள்வேன்’ என மனதில் நினைத்தவாறு, தலையின் ஈரத்தை கூட காய வைக்காமல் அப்படியே படுத்திருந்தாள். மதியத்தில் இருந்து அழுது அழுது சோர்ந்து போன அர்ஜுனும் காவ்யாவின் அருகில் படுத்துக்கொண்டான்.

ஒரு மணி நேரத்தில் வெறுமனே சாத்தியிருந்த கதவை திறந்து கொண்டு, இரண்டு பைகளுடன் உள்ளே வந்தான் நந்தா . அவன் வந்ததை பார்த்து விட்டு ஒன்றும் கூறாமல் கண்களை மூடிக்கொண்டாள் காவ்யா.

கதவை அடைந்தவன், கடையில் அவசரத்திற்கு வாங்கி வந்திருந்த மாற்று உடைகளை பையிலிருந்து எடுத்துக்கொண்டு, அவளிடம் எதுவும் கூறாமல் குளியலறை சென்று குளித்து விட்டு ஆடை மாற்றிக் கொண்டு வந்தான்.

காவ்யாவின் அருகில் வந்தவன் அவள் கையைப் பிடித்து “காவ்யா” என அழைக்க, வேகமாக அவன் கையை உதறியவள், “உன்னாலதான்…. உன்னாலதான்…. அம்மா என்னை விட்டுட்டு போய்ட்டாங்க” என பெருங்குரலெடுத்து அழ ஆரம்பித்தாள். காவ்யா அழுவதைப் பார்த்த அர்ஜுனும் சத்தமாக அழ ஆரம்பித்தான்.

அர்ஜுன் அழுவதைப் பார்த்த நந்தா அவனை தூக்கினான். அவன் தூக்கியதும் இன்னும் அழ ஆரம்பித்த அர்ஜுன் காவ்யாவிடம் செல்ல கைகளை நீட்டிக் கொண்டு அழ, “இங்க பாரு, நீ அழுறத பார்த்து அர்ஜுனும் அழறான். ப்ளீஸ் கொஞ்சம் அமைதியாய் இரு” என்றான் நந்தா.

அர்ஜுனை காவ்யா வாங்கிக் கொள்ள அவன் சற்று சமாதானம் ஆனான்.

“அத்தை இறந்ததுல எனக்கும் வருத்தம்தான் காவ்யா. அவங்க இறந்ததுக்கு நான் எப்படி காரணம் ஆவேன்?” எனக் கேட்டான் நந்தா.

“நீதான் காரணம்…. நீ திரும்ப வந்ததாலதான் அவங்க இறந்துட்டாங்க. மாப்பிள்ளை வந்துட்டாரு இனிமே எனக்கு எந்த கவலையும் இல்லன்னு சொன்னாங்க. அதான் என்னைப் பத்தி கவலைப்படாம என்னை விட்டுட்டு போய்ட்டாங்க” என தேம்பி தேம்பி அழ, அவளை தன் நெஞ்சோடு அணைத்துக் கொண்டவன், “அழாதம்மா, அர்ஜுனும் அழுவான், அழாதே” என்றான்.

அர்ஜுனை தன் மடியில் வைத்திருந்த காவ்யா, நந்தாவின் நெஞ்சில் தலைவைத்து சத்தமில்லாமல் அழ, அவளை சில நிமிடங்கள் அழ விட்டவன், “அர்ஜுன் எதுவும் சாப்பிடல, வா அவனுக்கு சாப்பாடு கொடு” என்றான்.

தான் வாங்கி வந்திருந்த சாப்பாட்டை வெளியில் எடுத்து வைத்தான். இரண்டு இட்லிகளை அர்ஜுனுக்கு ஊட்ட, அதிசயமாய் அடம் பண்ணாமல் சாப்பிட்டு முடித்தான் அர்ஜுன். “நீயும் சாப்பிடு” என நந்தா கூற, பெயருக்கு அவளும் இரண்டு இட்லிகளை சாப்பிட்டுவிட்டு, அர்ஜுனை தூக்கிக்கொண்டு படுக்கையறைக்குள் சென்று விட்டாள்.

சாந்தியிடமிருந்து அழைப்பு வர, காவ்யாவின் அம்மா இறந்து விட்டதை கூறி, தான் காவ்யாவுடன் இருப்பதாகவும் கூறி, நாளை பேசுவதாக சொல்லி கைப்பேசியை வைத்துவிட்டான். அவனும் சாப்பிட்டு, ஹாலில் இருந்த சோஃபாவிலேயே படுத்துக் கொண்டான். காமாட்சி திடீரென்று இறந்தது அவனுக்கு பேரதிர்ச்சியாக இருந்தது. காவ்யா சொன்னது போல, அவன் வந்து விட்டதால்தான், தன் பெண்ணைப் பற்றிய எந்த கவலையும் இல்லாமல் அவர் இறந்து விட்டார் என நினைத்துக்கொண்டான். அசதியில் அப்படியே உறங்கி விட்டான்.

அர்ஜுனை உறங்க வைத்த காவ்யா, உறக்கம் வராமல் சிறு வயது முதலான தன் பெற்றோரின் நினைவுகளை நினைத்துக் கொண்டிருந்தாள். எல்லாவற்றையும் அசைபோட்டு வந்தவள், தன் திருமணத்திற்கு பின் நடந்தவற்றையும் நினைவு கூர்ந்தாள்.

நந்தகுமாரும் காவ்யாவும் தேனிலவு சென்று வந்த பிறகு நந்தாவின் வீட்டினரிடத்தில் மாற்றம் ஏற்பட்டது. நந்தா காலை 10 மணிக்கு அலுவலகம் கிளம்புவான். அவனுக்கு மதியத்திற்கும் சேர்த்து சமைத்து தர வேண்டும். காவ்யா தாமதமாக எழும் பழக்கம் உள்ளவள். சமையலிலும் ஒன்றும் தெரியாது. இவர்கள் தேனிலவு செல்லும் முன்பு வரை சாந்தியே எல்லாம் செய்து விடுவார். காவ்யா 7 மணிக்கு மேல் எழுந்து குளித்து தயாராகி கீழே செல்ல 8 மணியாகிவிடும். அதற்குப்பின் ஏதாவது சிறு சிறு உதவிகள் செய்வாள். வாசுகிக்கும், கீர்த்திக்கும் கூட மதிய உணவு தயார் செய்ய வேண்டுமென்பதால், காவ்யா கீழே வருவதற்குள் பாதி வேலைக்கும் மேல் முடிந்திருக்கும். நந்தா ஒன்பது மணி வாக்கில் வருவான். காலை உணவருந்தி விட்டு மதியத்திற்கும் எடுத்துக்கொண்டு கிளம்பி விடுவான்.

தேனிலவு சென்றுவிட்டு வந்த பிறகும் அதே போல காவ்யா தாமதமாக எழுந்து எட்டு மணிவாக்கில் கீழே சென்றாள். “நீ இப்படி லேட்டா வந்தா நந்தாவுக்கு மதிய சாப்பாடு எப்படி செய்வ?” எனக் கேட்டுவிட்டு சாந்தி அவர் அறைக்குள் சென்றுவிட்டார். வேண்டுமென்றே அவர் எதுவும் செய்யவில்லை என்பது காவ்யாவிற்கு புரிந்தது.

சாந்தி தனக்கு கீழ்தான் காவ்யா இருக்கவேண்டும் என்றெண்ணிதான் எதுவும் செய்யவில்லை. அவளுக்கு சமைக்க தெரியாது என்பது சாந்திக்கு தெரியும், தன்னிடம் வந்து சமைக்க சொல்லி அவளே கேட்கவேண்டும், தன்னுடைய முக்கியத்துவம் அவளுக்கு தெரியட்டும் என்று நினைத்தார். வாசுகியையும், கீர்த்தியையும் கூட இன்று வெளியில் சாப்பிட்டுக் கொள்ள கூறியிருந்தார்.

காவ்யாவிடம் பொறுமையாக, “சீக்கிரம் எழுந்து வா, நந்தாவுக்கு நீதான் சமைக்கணும்” என சொல்லியிருந்தால் கண்டிப்பாக கேட்டுக் கொண்டிருப்பாள். ஆனால் சாந்தியின் குரலில் இருந்த பேதம் காவ்யாவை கோபமடையச் செய்தது. ‘நீங்க இல்லன்னா என்னால செய்ய முடியாதா?’ என நினைத்தவள் கைப்பேசியில் யூடியுப் உதவியுடன் சமையல் செய்ய ஆரம்பித்தாள்.

சாதம் வடிக்க தெரியாததால், குக்கரிலேயே வைத்தாள். சாப்பாட்டுக்கு தேங்காய் உடைக்க தெரியாததால், தேங்காய் அரைத்து ஊற்றாமலேயே, சாம்பார் வைத்தாள். காலை உணவுக்கு மாவு இருக்க, வெங்காய சட்னி செய்தாள். பொரியல் எதுவும் செய்ய நேரமில்லாததால் ஆம்லெட் செய்தாள்.

மதிய உணவிற்கு சாதம் சாம்பார் முட்டை என பேக் செய்து விட்டாள். நந்தா கீழே வர தோசை ஊற்றி சட்னியை வைத்தாள். தோசை மெலிதாக ஊற்றத் தெரியாமல், கனமாக ஊற்றியிருந்தாள். சட்னியும் தாளிக்கவில்லை.

“என்ன நீ சமைச்சியா…??” என ஆச்சரியத்துடன் கேட்டான் நந்தா.

“ஆமாம், சாப்பிட்டு பாருங்க” என ஆசையாக காவ்யா கூற, சுமாராக இருந்தாலும் குறை எதுவும் கூறாமல் சாப்பிட்டான் நந்தா. தன்னை அழைக்க வருவாள் என காத்திருந்த சாந்தி, காவ்யா வராததால், என்ன செய்கிறாள் எனப் பார்க்க வெளியில் வந்தார்.

சமையல்கட்டிற்கு வந்த சாந்தி அவள் சமைத்து விட்டதை பார்த்து, தன்னிடம் கெஞ்சுவாள் என நினைத்திருக்க அவளே சமைத்து விட்டதை எதிர்பார்க்காமல் அதிர்ச்சியானார். குறை எதுவும் கூறாமல் நந்தா சாப்பிடுவதை பார்க்கவும் சாந்திக்கு இன்னும் எரிச்சலானது.

“என்ன காவ்யா தோசை இப்படி கணமா ஊத்தியிருக்க? மெல்லிசா ஊத்தினால்தான் அவனுக்கு பிடிக்கும்” என சாந்தி கூற,

“அப்படியெல்லாம் இல்லம்மா. நல்லாதான் ஊத்தியிருக்கா. எனக்கு பிடிச்சிருக்கு” என தன் மனைவியை விட்டுக் கொடுக்காமல் பேசினான் நந்தா.

சாந்தி கூறியதில் கோபமடைந்த காவ்யா, தன் கணவனின் பதிலில் கோபம் குறைந்து ஒன்றும் கூறாமல் நின்றிருந்தாள்.

“மதியத்துக்கு என்ன சமைச்ச காவ்யா?” எனக் கேட்டார் சாந்தி.

“ம்… சாம்பார்” என்றாள் காவ்யா.

“வெறும் சாம்பார் மட்டும்தானா? தொட்டுக்க எதுவும் செய்யலையா?” எனக் கேட்க,

“ஆம்லெட்” என்றாள் காவ்யா.

“என்ன நீ..? காய்தான் அவ்வளவு இருந்ததே…. ஏதாவது கூட்டு, பொரியல், வறுவல்ன்னு செய்யாம வெறும் ஆம்லெட் மட்டும்தானா?” என்றவர், “நந்தா கொஞ்சம் இரு. உனக்கு கத்திரிக்காய் வறுவல்ன்னா ரொம்ப பிடிக்கும் இல்ல. நொடியில நான் செஞ்சு தரேன்” என சமையல் கட்டுக்குள் ஓடினார்.

“ஏன் அவருக்கு கத்திரிக்காய் வறுவல் பிடிக்கும்னு முன்னாடியே தெரியாதா உங்களுக்கு? அவர் கிளம்பிகிட்டிருக்கிற நேரத்துலதான் வந்து செய்யப் போறீங்க? உங்க கத்திரிக்காய்க்காக இவர் வெயிட் பண்ணிக்கிட்டு இருந்தா… ஆஃபீஸ்க்கு லேட் ஆகும்னு வண்டியை விரட்டிட்டு போவார். நாளைக்கு செஞ்சு தாங்க, இன்னைக்கு கிளம்பட்டும்” என்றாள் காவ்யா.

“எனக்கு கொஞ்சம் முடியாத மாதிரி இருந்தது. நீ செஞ்சிடுவேன்னு நம்பி, நான் கொஞ்ச நேரம் உள்ள ரெஸ்ட் எடுத்தேன். நீ செய்யாம விடுவேன்னு தெரிஞ்சிருந்தா முன்னாடியே செஞ்சு வச்சிருப்பேன்” என்றார் சாந்தி.

நந்தாவை பேச விடாமல் இருவரும் மாறிமாறி பேசிக்கொண்டிருந்தனர்.

“நீங்கதானே நீயே செஞ்சுக்கன்னு சொல்லிட்டு போனீங்க? எனக்கு தெரிஞ்சத நானும் செஞ்சேன். கடைசி நேரத்துல வந்து பார்த்து, என் சமையலை அவர்கிட்ட வந்து குறை சொல்லிக்கிட்டு இருந்தீங்க? இப்போ நான் செஞ்சிருப்பேனே, நீ செய்யலையான்னு கேக்குறீங்க?” எனக் கேட்டாள் காவ்யா.

“எனக்கு முடியல, அதான் அப்போ செய்ய முடியல” என்றார் சாந்தி.

“இப்போ மட்டும் உடம்பு சரியாகிடுச்சா? கத்திரிக்காய் நொடியில் செஞ்சு தரேன்னு ஓடுறீங்க?”

“அது….. மாத்திரை போட்டுகக்கிட்டேன். இப்போ நல்லா ஆயிடுச்சி” என்றார் சாந்தி.

இருவரையும் பார்த்த நந்தா, “விடுங்கம்மா, உங்களுக்குத்தான் முடியலன்னு சொல்றீங்களே? ஏன் சிரமப்படறீங்க? கத்திரிக்காய் நாளைக்கு செஞ்சு தாங்க. இப்ப நான் கிளம்புறேன்” எனக்கூறி வெளியே சென்றான்.

கிளம்பும்போது காவ்யாவை கண்களாலேயே வெளியே அழைத்தான்.

“ஏன் காவ்யா அவங்ககிட்ட ஹார்ஸா பேசுற?” எனக் கேட்டான். நடந்ததை சுருக்கமாக காவ்யா கூற, “சரி விடு… அவங்களுக்கு முடியலைன்னு உன்ன சமைக்க சொல்லியிருக்கலாம். இதையெல்லாம் நீ பெருசு பண்ணாத. அவங்களால செய்ய முடியாதப்ப, உனக்கு என்ன தெரியுமோ சமைச்சு கொடு. நான் அட்ஜஸ்ட் பண்ணிக்கிறேன். முடியலன்னாலும் நான் வெளியில பார்த்துக்குவேன். ஒன்னும் பிரச்சனையில்லை. நீ எதுவும் சிரமப்பட வேண்டாம். இதையெல்லாம் ஏன்னு நான் அவங்ககிட்ட கேட்க முடியாது. கேட்டா உன்னை தப்பா நினைப்பாங்க. உங்களுக்குள்ள பிரச்சனை இன்னும் பெருசாகும். இதை இதோட விடு” எனக் கூறிவிட்டு சென்றான்.

இவர்கள் தனியாக வெளியே பேசுவதை கூப்பிட்டு காட்டிய சுந்தராம்பாள், “பார்த்தியா நந்தா கிட்ட உன்னை பத்தி தப்பு தப்பா சொல்லிக்கிட்டு இருக்கா?” எனக்கூற, சாந்திக்கு வயிற்றில் புளி கரைத்தது போலிருந்தது.

அடுத்த நாள் காலையில் ஐந்தரை மணிக்கு எல்லாம் அலாரம் வைத்து கண் விழித்தாள் காவ்யா. அலாரம் சத்தம் கேட்டு நந்தாவும் விழித்துவிட, “எதுக்கு இவ்ளோ காலையில அலாரம்?” என அவளை அணைத்துக் கொண்டே கேட்டான்.

“ம்… உங்களுக்கு சமைக்க” என்றாள் காவ்யா.

“அதுக்கு ஏன் இவ்வளவு சீக்கிரம் எழுந்திருக்கிற? நைட் லேட்டாதானே தூங்கின?” என சொன்னான்.

“ம்…. லேட்டாதான் தூங்க விட்டேன்னு சொல்லுங்க” என்றாள் காவ்யா.

“சரிடீ…. நான்தான் உன்னை தூங்க விடல. நான்தான் இப்பவும் சொல்றேன், கொஞ்ச நேரம் தூங்கு” என்றான் நந்தா.

“எனக்கு சீக்கிரம் சமைக்க வராது. இப்ப எழுந்தாதான் சரியா இருக்கும்” என்றாள் காவ்யா.

“அம்மா எப்படியும் கீர்த்திக்கும், வாசுகிக்கும் செய்யும் போது எனக்கும் சேர்த்து செய்வாங்க. நீ நேத்து நடந்ததை மறந்திடு. இப்போ தூங்கு” என்று தன் அணைப்பை இறுக்கினான்.

“விடுங்க ப்ளீஸ். நேத்து உங்க அம்மா மறைமுகமா இனிமே உங்களுக்கு நான்தான் சமைக்கனும்ன்னு சொன்னாங்க. இனிமே அவங்க ஒன்னும் உங்களுக்காக சிரமப்பட வேண்டாம். நான்தான் உங்களுக்கு சமைப்பேன்” என உறுதியாக கூறி அவனது அணைப்பிலிருந்து விடுபடத் திமிறினாள்.

அவளை விட்டவன், “ நீ அவங்களை ஒன்னும் மிஸ்அண்டர்ஸ்டாண்ட் பண்ணிக்கலையே?” எனக் கேட்டான்.

“நான் ஒன்னும் குழந்தை கிடையாது. அவங்க அந்த அர்த்தத்தில்தான் சொன்னாங்க” என்றவள் வேகமாக எழுந்து குளியலறை சென்றாள்.

‘ஏன் இப்படி நடந்துக்கிறாங்க? காவ்யாவை பிடிக்காமல் இப்படி செய்றாங்களா?’ என நினைத்தவன் காவ்யா வெளியே வரும் முன் கீழே சென்று பேசவும் செய்தான்.

“அம்மா காவ்யாவும் சின்ன பொண்ணுதானே. வாசுகியை விட ஒரு வயசு தான் பெரிய பொண்ணு. அவளுக்கு இன்னும் சரியா சமைக்க தெரியாது. அவங்க வீட்ல செல்லம்மா வளர்ந்துட்டா. கொஞ்சம் பொறுமையா சொல்லி கொடுங்க கேட்டுக்குவா” என சாந்தி மீது எதுவும் குறையாக கூறாமல் காவ்யாவிடம் பொறுமையாக நடந்து கொள்ளுமாறு கேட்டுக் கொண்டான்.

சாந்தியும் அவனிடம் சரி என கூறினார். ஆனால் மனதிற்குள் ‘தன்னைப்பற்றி தவறாக ஏதோ குற்றப்பத்திரிக்கை காவ்யா வாசித்திருக்கிறாள். இல்லையென்றால் தன்னிடம் மிகவும் அளந்து பேசும் நந்தா இப்படி அவளுக்காக பேசுவானா?’ என நினைத்துக் கொண்டார். உண்மையில் சாந்தியிடம் பேசப் போவதாக காவ்யாவிடம் நந்தா கூறவில்லை. பேசிய பிறகும் ஒன்றும் சொல்லவில்லை.

காவ்யா கீழே வந்த பிறகு, தான் சமைப்பதாக சாந்தி கூறியும் விடாப்பிடியாக தானே சமைத்தாள். தன் அன்னையிடம் ஏற்கனவே கேட்டு வைத்திருந்தபடி எளிதாக செய்யக்கூடிய பூண்டுக் குழம்பும், பீன்ஸ் பொரியலும் மதியத்திற்கு செய்து, காலை உணவுக்கு, தக்காளி சட்னியும் செய்து முடித்தாள். எல்லோருக்கும் சேர்த்தே செய்ய நினைத்து அவள் செய்தாலும், அளவு தெரியாமல் குழம்பு குறைவாகவே இருந்தது. வாசுகிக்கும், கீர்த்திக்கும் தனியே எலுமிச்சை சாதம் செய்து கொடுத்தனுப்பினார் சாந்தி.

அன்று மதியம் உணவருந்தும் போது சுந்தராம்பாள், “ச்சீய்… என்ன குழம்பு இது? ஒரே புளிப்பு. இப்படி ஒரு குழம்ப நான் சாப்பிட்டதே இல்லை” எனக்கூற கேட்டுக்கொண்டிருந்த காவ்யாவிற்கு கோவம் வந்துவிட்டது.

“உங்களுக்கு பிடிக்கலைனா பிடிச்ச மாதிரி நீங்களே சமைச்சு சாப்பிடுங்க. நான் ஒன்னும் உங்களுக்காக எதுவும் செய்யலை. என் புருஷனே ஒன்னும் சொல்லாம சாப்பிடுறார். உங்களுக்கு என்ன?” என கேள்வி கேட்டாள்.

உண்மையில் குழம்பு நன்றாக இல்லை என்றாலும் பரவாயில்லை. புளிப்பு மட்டும் கூடுதலே தவிர நன்றாகத்தான் இருந்தது. சுந்தராம்பாள் குறை கூறிய விதம் பிடிக்காமல் உடனே சூடாக பேசிவிட்டாள் காவ்யா.

காவ்யா பேசியதை திரித்து சாந்தியிடம், “இந்த சாப்பாடு நமக்கெல்லாம் சேர்த்து அவ சமைக்கலையாம். நம்மள தனியா சமைச்சு சாப்பிட்டுக்க சொல்லிட்டா” எனக் கூறினார்.

அடுத்த நாளிலிருந்து இரண்டு சமையல் நடக்கத் தொடங்கியது. சுந்தராம்பாள் கூறித்தான் சாந்தி தனியாக சமைக்கிறார் என காவ்யா கருதவில்லை. தன் கையால் சமைத்து அதை உண்ண கூடாது என வேறு சமையல் செய்கிறார் என நினைத்துக்கொண்டாள்.

ஒருநாள் நந்தாவுடன் வெளியே சென்ற காவ்யா, தனக்கு ஆடைகள் எடுத்துக்கொண்டு, மறக்காமல் சாந்தியின் மகள்களுக்கும் துணிகள் எடுத்துக்கொண்டு வந்தாள். வீட்டிற்கு வந்து அவர்களிடம் கொடுத்தாள். தனக்கு வாங்கியதையும் காட்ட, வாசுகி காவ்யா அவளுக்கென வாங்கியிருந்த சுடிதார் ஒன்றை பார்த்து ஆசைப்பட்டு, “அண்ணி இதை எனக்கு ஒருநாள் போட்டுக்க தாங்களேன். ஒரு நாள் காலேஜ்க்கு போட்டுகிட்டு போயிட்டு வந்து திருப்பி தந்துடுறேன்” என்றாள்.

கூடப் பிறந்தவர்கள் என்று யாரும் காவ்யாவிற்கு இல்லாத காரணத்தால், யாருடனும் அவள் துணிகளை பகிர்ந்து கொண்டதில்லை. அதனால், “சாரி வாசுகி. எனக்கு மத்தவங்க யூஸ் பண்ணினது திருப்பி யூஸ் பண்ண பிடிக்காது. இதைப்போல வேற ஒன்னு உனக்கு அடுத்த தடவை எடுத்து தரேன்” என்று முகத்திற்கு நேரேயே கூறிவிட்டாள்.

வாசுகிக்கு அந்த சுடிதார் மிகவும் பிடித்திருந்தது. “நீயே வச்சுக்க” என கூறியிருந்தால் சந்தோஷப்பட்டிருப்பாளோ என்னவோ. அவளுக்கு வாங்கிய துணிகளையும் வேண்டாம் என்று கூறி விட்டு, முகத்தைத் தூக்கி வைத்துக் கொண்டு சென்றுவிட்டாள்.

இந்த சுடிதார் ‘நானே எடுத்துக்கவா’ என கேட்டிருந்தால் காவ்யா கொடுக்கவும் செய்திருப்பாள். அவளும் ஆசையாக எடுத்ததால் வாசுகியிடம் கொடுக்க தோன்றவில்லை. பயன்படுத்திக்கொண்டு தருகிறேன் என்று கேட்டதற்கு மனதில் இருப்பதை பதிலளிக்க வாசுகி கோவித்துக் கொண்டாள்.

அவள் அவ்வாறு சென்றது பிடிக்காத காவ்யா, வாசுகிக்கு வாங்கியதையும் கீர்த்தியிடமே கொடுத்துவிட்டு சென்று விட்டாள். அன்றிலிருந்து காவ்யாவும், வாசுகியும் பேசிக் கொள்வது குறைந்து போனது.

தன்னுடைய அன்னை வீட்டிற்கு அடிக்கடி சென்று வரும் காவ்யா, புகுந்த வீட்டில் நடப்பதை சாதாரணமாக அவர்களிடம் கூறுவாள். பெற்றவர்கள் தங்கள் பெண் மிகவும் கஷ்டப்படுகிறாள் என நினைத்துக் கொண்டனர். கருணாகரன் ஒருபடி மேலே போய், ‘கூடப் பிறந்தவர்களும் யாருமில்லை. நம் காலத்திற்கு பிறகு நம் மகளின் வாழ்க்கை என்னவாகும்?’ என பயப்படவே ஆரம்பித்தார்.