இரவில் தாமதமாக உறங்கினாலும், காலையில் சீக்கிரமாகவே விழிப்பு வந்துவிட்டது நந்தகுமாருக்கு. தன் மகனை பார்க்க வேண்டும் போல இருக்க, விரைவாக தயாராகி காலை உணவு கூட உண்ணாமல், வேலை இருப்பதாக வீட்டில் சொல்லிக் கொண்டு கிளம்பிவிட்டான்.
ஏழு மணிக்கெல்லாம் அழைப்பு மணி அடிக்க யாராக இருக்கும் என்று எண்ணிக்கொண்டே காமாட்சி கதவைத் திறந்தார். நந்தாவை பார்த்ததும் மகிழ்ச்சியுடன் அவனை வரவேற்றார். காமட்சிக்கும் பின்னால் அவர் புடவைத் தலைப்பை பிடித்து கொண்டு நின்றிருந்தான் அர்ஜுன்.
நந்தகுமார் தன் குழந்தையை ஆசையாய்த் தூக்கச் செல்ல, தன் பாட்டியுடன் பின்னால் மறைந்து கொண்டான் அர்ஜுன். நந்தா ஏமாற்றமாய் பார்க்க, காமாட்சியே அர்ஜுனை தூக்கி நந்தகுமாரிடம் “அஜ்ஜும்மா உன் அப்பா கிட்ட போ” எனச் சொல்லி கொடுத்தார்.
“மாத்தேன் போ” என்றான் அர்ஜூன்.
“புதுசா யார்கிட்டயும் அவ்வளவு சீக்கிரம் போக மாட்டான். நீங்க வருத்தப்படாதீங்க, உங்கள அடிக்கடி பார்த்தா வருவான்” என அவனுக்கு சமாதானம் கூறினார்.
“காவ்யா எங்கே?” எனக் கேட்டான்.
“அவ இன்னும் எழுந்துருக்கலை. எப்பவும் சீக்கிரம் எழுந்துக்குவா, இன்னைக்கு அர்ஜுன் விடிய காத்தாலேயே எழுத்துகிட்டு காவ்யாவையும் எழுப்பி விட்டுட்டான் போல.. விடிஞ்ச பிறகு என்கிட்டே விட்டுட்டு கொஞ்ச நேரம் தூங்கிக்கிறேன்னு சொல்லிட்டு போனா. எழும்புற நேரம்தான். இப்போ வந்திடுவா. நான் எழுப்பட்டுமா?” எனக்கேட்டார்.
“வேண்டாம்” என மறுத்தவன், அங்கேயே உட்கார்ந்து கொண்டான். அர்ஜுனை கீழே உட்கார வைத்து பொம்மைகளையும் அவன் பக்கத்தில் போட்டார் காமாட்சி. “குழந்தையோட இருங்க” எனக் கூறி உள்ளே சென்று விட்டார் காமாட்சி.
நந்தா குழந்தையின் பக்கத்தில் கொஞ்சம் இடைவெளி விட்டு கீழேயே அமர்ந்துகொண்டான். “டேய் கண்ணா அப்பா உனக்காக என்ன வாங்கிட்டு வந்திருக்கேன்னு பாரு” எனக்கூறி தன் சட்டைப் பையிலிருந்து பெரிய சாக்லேட்டை எடுத்து நீட்டினான். சாக்லேட்டை பார்த்த அர்ஜுன் “சாக்கி கொது” என தன் கையை நீட்ட, “என்கிட்ட வா தர்றேன்” என்றான். அர்ஜுன் எழுந்து அவனருகில் வந்து, மீண்டும் சாக்லேட்டை கொடுக்கச் சொல்லி கேட்டான். “இங்க உட்காரு தர்றேன்” என தன் மடியை காட்டினான் நந்தா. மிகவும் பலத்த யோசனைக்குப்பின் சாக்லேட்டையும் நந்தாவையும் மாறிமாறி பார்த்த அர்ஜுன், அவன் மடியில் அமர்ந்து கொண்டான்.
சாக்லேட்டை பிரித்து அவன் கையில் நந்தா கொடுக்க, வாங்கி சுவைக்க ஆரம்பித்தான். தன் மடியில் அமர்ந்திருந்த தன் மகனை அவன் பின்னாலிருந்து அணைத்து அவன் கன்னத்தில் முத்தமிட்டான். அவன் அணைத்திருந்ததால் சாக்லேட்டை சரியாக சாப்பிட முடியாமல், “விது” என சிணுங்கினான் அர்ஜுன். “சரி… சரி, அப்பா உன்னை டிஸ்டர்ப் பண்ணல நீ சாப்பிடு” என நந்தா கூறிக் கொண்டிருக்கும் பொழுதே காஃ பியுடன் வந்தார் காமாட்சி.
“சீக்கிரம் யார்கிட்டயும் போக மாட்டான். உங்ககிட்ட வந்துட்டானே. என்ன இருந்தாலும் உங்க ரத்தம் இல்லையா?” என சொல்லிக் கொண்டே காஃபியை அவனிடம் நீட்டினார். அதை வாங்கிக் கொண்டே, “சும்மா எல்லாம் என்கிட்ட வரலை, சாக்லேட்டை காட்டவும்தான் வந்தான்” என கொஞ்சம் வருத்தமாக கூறினான் நந்தா.
“அப்படி எல்லாம் உங்க பிள்ளை சாக்லேட்டை காட்டினாலும் புதுசா யார்கிட்டயும் போகமாட்டான். என்னமோ உங்ககிட்ட வந்துட்டான்” என காமாட்சி கூறினார். அவர் அப்படி சொன்னது நந்தாவின் மனதுக்கு இதமாக இருந்தது. காஃபியை பருகிவிட்டு நந்தா கோப்பையை கீழே வைக்க, காவ்யா வந்தாள்.
கோவமாக சென்று குழந்தையை தூக்கியவள், “காலையிலேயே இவ்வளவு பெரிய சாக்லேட் சாப்பிடுறியே, உடம்புக்கு முடியாம போனா யார்டா கஷ்டப்படுறது. நீயும் நானும்தானே. அதைப்பத்தி எல்லாம் உன் அப்பாவுக்கு கவலை என்ன?” என அர்ஜுனிடம் கோவமாக கேட்டாள்.
“சும்மா அவரை ஏதாவது சொல்லனும்னு சொல்லாதே. ஏன் நீ அவனுக்கு சாக்லேட் வாங்கிக் கொடுத்ததே இல்லையா?” என்றாள் காமாட்சி. அவரையும் முறைத்த காவ்யா, “இப்படி ஏன் அடிக்கடி வந்து தொந்தரவு பண்றார்? அவரை முதல்ல போகச் சொல்லு” என்றாள்.
“நான் ஏன் போகனும்? என் பிள்ளையை பார்க்க நான் வருவேன். தினம் வருவேன். நினைச்சேன்னா இங்கேயே தங்க கூட செய்வேன்” எனக் கூறிய நந்தா, அர்ஜுனனை நோக்கி கைகளை நீட்டி “ நீ வாடா என் கிட்ட” என இப்போது அவனிடம் செல்ல தாவினான் அர்ஜுன்.
“நம்மள பத்தி எந்த கவலையும் இல்லாமல் மூணு வருஷம் எங்கேயோ இருந்துட்டு இன்னைக்கு வந்து வான்னு கூப்பிட்டா நீ போயிடுவியா?” என அர்ஜுனிடம் காவ்யா கேட்க, “ஏண்டி நீ திருந்தவே மாட்டியா? இப்படி பேசிப் பேசியே இன்னும் உன் வாழ்க்கையை கெடுத்துக்கப் போறியா? ரொம்ப வருஷம் கழிச்சு நேத்துதான் நிம்மதியா தூங்கினேன். அது உனக்கு பொறுக்கலையா? இன்னும் என் நிம்மதிய கெடுக்கப் போறியா? இனிமேலும் வறட்டுப் பிடிவாதம் பிடிக்காம அவரோட சேர்ந்து வாழ வழியைப் பாரு” என்றார் காமாட்சி.
“நம்ம பட்ட கஷ்டத்தை எல்லாம் மறந்திட்டியா? அதுக்கெல்லாம் யார் காரணம்? இவர் தானே. எல்லாத்தையும் மறந்துட்டு இவரோட என்னால திரும்பியும் சேர்ந்து வாழ முடியாது” என்றாள் காவ்யா.
“நம்ம கஷ்டப்பட்டதுக்கு இவர் ஒன்னும் காரணமில்லை. நீயும் உன் அப்பாவும்தான் காரணம். அவர் நிலைமையை புரிஞ்சுக்காம நீங்க ரெண்டு பேரும் அவர் கழுத்தை பிடிச்சி நெரிச்சீங்க, அவர் கோவப்பட்டு கிளம்பி போய்ட்டார். உன் அப்பா தொழில்ல நட்டப்பட்டு அதிலேருந்து மீள முடியாம ஒரு நாள் நம்மள விட்டுட்டும் போய்ட்டார். நாம கஷ்டப்பட்டோம். இதுக்கெல்லாம் இவர் எப்படி பொறுப்பாவார்?” என்றார் காமாட்சி.
“இவர் வெளிநாடு போகாம இருந்திருந்தா அப்பாவுக்கு தொழில்ல ஏதாவது ஹெல்ப் பண்ணியிருக்கலாம். தொழிலில் நஷ்டம், பொண்ணு வாழ்க்கையும் இப்படி ஆச்சேன்னுதான் மனம் வருந்தி அப்பா இறந்து போயிட்டார்” என்றாள் காவ்யா.
“காவ்யா என்னையே குறை சொல்லாதே. உங்க அப்பாவுக்கு லாஸ் ஆச்சுன்னு எனக்கு எப்படி தெரியும். நீ என்கிட்ட ஏதாவது சொன்னியா? சொல்லியிருந்தா கண்டிப்பா நான் ஏதாவது பண்ணியிருக்க மாட்டேனா? அப்படி பார்த்தா….. சொல்லாம விட்ட உன் மேல தான் தப்பு” என்றான் நந்தா.
“நான் பிரக்னண்டா இருக்கிறது தெரிஞ்சும், என்னை விட்டுட்டு போனவர்கிட்ட பேச எனக்கு விருப்பமில்லை” என்றாள் காவ்யா.
“நான்தான் எனக்கு எதுவும் தெரியாதுன்னு சொல்றேனே, திருப்பி திருப்பி அதையே சொல்லாதே. சின்ன வயசுல அன்பு இல்லாமல் கஷ்டப்பட்டவன் நான். எனக்கு ஒரு குழந்தை வரப் போகுதுன்னு தெரிஞ்சதுக்கப்புறம், என்னோட குழந்தையை எப்படி விட்டுட்டு போவேன்?” என்றான் நந்தா.
“எங்க அப்பா என்கிட்ட தெளிவா சொன்னாரு. உனக்கு தெரியும்னு. அப்புறம் அவர் என்ன பொய்யா சொன்னாரு?” என்றாள் காவ்யா.
“அது எனக்கு தெரியாது. உன் அப்பாதான் உயிரோட வந்து சொல்லணும்” என்றவன் அர்ஜூனை வலுக்கட்டாயமாக அவளிடமிருந்து வாங்கிக் கொண்டான்.
“ம்…போடா…. போ, இன்னும் கொஞ்ச நாள்ல திருப்பியும் நம்மள விட்டுட்டு போயிடுவார். அப்ப திருப்பியும் இந்த அம்மா மட்டும்தான் உனக்கு” என காவ்யா கூற, “உன் அம்மா ரொம்ப பேசுறா டா, சீக்கிரம் இப்படி பேசுறதுக்கு எல்லாம் வருத்தப்படப் போறா” எனக் கூறிவிட்டு குழந்தையுடன் விளையாட ஆரம்பித்தான்.
“அம்மா எனக்கு லேட் ஆகுது. சாப்பாடு என்ன செய்ற?” எனக் கேட்டுக்கொண்டே அடுக்களை சென்று பார்த்தாள். காமாட்சி பரத்தி வைத்திருந்த பொருட்களை பார்த்துவிட்டு, “இதென்ன நீ விருந்து சமைக்க போறியா? இவ்வளவு எடுத்து வச்சிருக்க?” எனக் கேட்டாள் காவ்யா.
“ஆமாண்டி இத்தனை வருஷம் கழிச்சு மாப்பிள்ளை வீட்டுக்கு வந்திருக்கார். சிம்பிளா எப்படி செய்ய முடியும்? அதான் இட்லி,சாம்பார், சட்னி, பொங்கல், கேசரி எல்லாம் செய்யப் போறேன்” என்றார்.
“ஆமாம் இப்பதான் கல்யாணமாகி மறு வீட்டு விருந்துக்கு வந்திருக்கார். நீ நல்லா விருந்து சமைச்சு போடு” என கோபமாக கூறியவள், “ஒழுங்கா எப்பவும் போல செய்யறதை செய். உடம்புல ஆயிரத்தெட்டு பிராப்ளம் வச்சுக்கிட்டு வேலையை இழுத்து விட்டுக்காத” எனக் கூறினாள்.
“ஏண்டி இப்படி கத்துற. மாப்பிள்ளை காதுல விழப் போகுது. இன்னைக்கு மதிய சமையல் எதுவும் செய்யலை. நீ அங்கேயே ஏதாவது வாங்கி சாப்பிட்டுக்க. நான் காலைக்கு மட்டும்தான் செய்றேன். நான் எத்தனை நாளைக்கு இருக்கப் போறேன்? நல்லா இருக்கிறப்பவே என் கையால அவருக்கு ஏதாவது சமைச்சு போடுறேன். என் திருப்திக்காக நீ எதுவும் சொல்லாதே” என்றவர் சமைப்பதில் கவனமானார்.
“உன்னையெல்லாம் திருத்தவே முடியாது. எனக்கு நேரமாகுது, நான் கிளம்பறேன்” எனக் கூறிவிட்டு காவ்யா அவளது அறைக்குள் சென்று விட்டாள்.
அவர்கள் பேசிக்கொண்டிருந்தது நன்றாகவே நந்தாவின் காதில் விழுந்தது. காவ்யா சென்றதும், அடுக்களைக்குள் வந்தவன், “அத்தை நீங்க எதுவும் எனக்காக சிரமப்படாதீங்க. சிம்பிளா ஏதாவது செய்யுங்க” என்றான்.
“ஐயோ தம்பி காவ்யா பேசுனத கேட்டீங்களா?” என பரிதவிப்புடன் கேட்டார் காமாட்சி.
“காதுல விழற மாதிரி தானே உங்க பொண்ணு பேசினா. விழுந்துச்சுதான் அத்தை. இனி அவகிட்ட சூடு, சொரணை, வெட்கம், மானம் எல்லாம் பார்க்க கூடாதுன்னு முடிவு பண்ணியிருக்கேன். நான் அவ பேசினதுக்காக சொல்லல. எனக்கு உண்மையிலேயே விஷயம் தெரியாதுன்னு அவளுக்கு தெரிய வரும்போது, இப்ப பேசனத்துக்கு எல்லாம் என்கிட்ட ஃபீல் பண்ணுவா. அது தெரியாதவரை என்னை ஒரு வழியும் பண்ணுவா. எல்லாத்தையும் ஃபேஸ் பண்ண நான் ரெடியாதான் இருக்கேன்…. உடம்பு முடியாம நீங்க கஷ்டப்பட வேணாம்ன்னுதான் சொன்னேன்” என்றான்.
“எனக்கு ஒரு கஷ்டமும் இல்ல மாப்பிள்ளை. நீங்க வந்துட்டீங்க. இனிமே என் பொண்ணையும் பேரனையும் விட மாட்டீங்கன்னு எனக்கு தெரியும். என் சந்தோசத்துக்காக இதையெல்லாம் செய்றேன்.ஒன்னும் சொல்லாதீங்க” என்றார் காமாட்சி.
“என் பொண்டாட்டி பிள்ளை மட்டும் இல்லை. உங்களையும் விட மாட்டேன். மாமாவுக்கு தான் என்னால எதுவும் செய்ய முடியலை. உங்கள கண்டிப்பா நல்லா பாத்துக்கிறேன்” என நந்தா கூறி விட்டு ஹாலுக்கு வர காமாட்சிக்கு கண்கள் கலங்கி விட்டது.
சாப்பாட்டை தயாரித்து விட்டு நந்தாவை சாப்பிட அழைத்தார் காமாட்சி. காவ்யா வந்து விடட்டும் என்று நந்தா கூற, எங்கே அவள் வந்தால், எதுவும் கூறி நந்தா கோவத்தில் சாப்பிடாமல் சென்று விடுவானோ என பயந்த காமாட்சி “அவ மெதுவா வரட்டும், நீங்க வாங்க” என அழைத்தார்.
“பயப்படாதீங்க அத்தை. சாப்பிடும்போது என்னை எதுவும் சொல்ல மாட்டா. இப்போ இவனுக்கு ஏதாவது கொடுங்க” என காவ்யாவை நன்கறிந்த நந்தா கூற, தன் பேரனுக்கு சாப்பாடு ஊட்ட ஆரம்பித்தார் காமாட்சி.
காவ்யா தயாராகி வர, அவளுடன் சேர்ந்தே உணவருந்தினான் நந்தா. அவன் கூறியது போலவே நந்தாவிடம் சாப்பிடும்போது எதுவும் கூறவில்லை. சாப்பிட்டுவிட்டு, “அம்மா கிளம்புறேன். ஈவ்னிங் சீக்கிரம் வந்துடுவேன், அப்பு குட்டி…. ஆச்சியை தொல்லை பண்ணாம, சமர்த்தா இருப்பீங்களாம்” எனக்கூறி அர்ஜுனின் கன்னத்தில் முத்தமிட்டு, “நான் கிளம்பறேன் மா” என தன் தாயிடமும் கூறிவிட்டு வெளியே சென்றாள் காவ்யா. நந்தாவை கண்டுகொள்ளவே இல்லை.
“நானும் கிளம்புறேன் அத்தை. சீக்கிரம் எல்லாம் சரியாகிடும். நீங்க கவலைப்படாதீங்க. வீட்டு வேலைக்கு எல்லாம் ஒரு ஆள் போட்டுக்கங்க, சிரமப் படாதீங்க” என காமாட்சியிடம் கூறிவிட்டு, தன் மகனையும் கொஞ்சிவிட்டு கிளம்பினான் நந்தா.
அவன் கீழே வரும் பொழுது, தன்னுடைய ஸ்கூட்டரில் அவனை கடந்து சென்றாள் காவ்யா. அவள் பின்னேயே தன் காரில் தொடர்ந்து சென்றான் நந்தா.
கீர்த்தி மருத்துவமனையில் பணியில் இருக்கையில், அவளை காண வந்தான் நவீன். அதே மருத்துவமனையில் பிஜி படித்துக் கொண்டிருக்கும் நவீன் கீர்த்தியின் காதலன்.
‘என்ன கீர்த்தி ஒர்க் லோட் அதிகமா? ஏன் டல்லா இருக்க?” எனக் கேட்டான் நவீன்.
“ஒரு டென் மினிட்ஸ்ல கேண்டீன் வர்றேன், அங்க வெயிட் பன்றீங்களா?” எனக் கேட்டாள் கீர்த்தி. சரி என்றவன் கேன்டீன் செல்ல, சொன்னது போல பத்து நிமிடங்களில் வந்து சேர்ந்தாள் கீர்த்தி.
“என்ன விஷயம் கீர்த்தி?” எனக் கேட்டான் நவீன்.
“என் அண்ணனை பத்திதான்” என்றவள், நேற்று காலையிலும் இரவிலும் வீட்டில் நடந்ததைக் கூறினாள்.
“ம்… அதான் மேடம் அப்செட்டா? உன் வீட்டில உள்ளவங்களுக்கு எல்லாம் மன நிலை சரியில்லையா? ஏன் இப்படி நடந்துக்கிறாங்க? சரி விடு… அதான் உன் அண்ணன் உன் அண்ணியோட சேர்ந்து வாழப் போறதா சொல்றாரே. அவர் பார்த்துப்பார்” என்றான் நவீன்.
“அதுக்கு மத்தவங்க விடணுமே” என்றாள் கீர்த்தி.
“உன் அண்ணன் அவர் முடிவில் உறுதியாக இருந்தா யாராலயும் ஒன்னும் பண்ண முடியாது. நம்மால எதுவும் உதவ முடிஞ்சா நாமளும் கண்டிப்பா உதவி செய்வோம். நீ கவலை படாதே. இப்ப கொஞ்சம் சிரி” என்றான் நவீன்.
அலுவலகத்தை வந்தடைந்த காவ்யா, நந்தாவை கண்டுகொள்ளாமல் தன் வேலையை பார்க்க ஆரம்பித்தாள். ஆர்த்தி வேறு யார் மூலமாகவோ நந்தாவின் குழுவில் இணைந்திருந்தாள். அவளின் எண்ணம் நந்தாவிற்கு நன்றாகவே புரிந்தது. ‘தன்னிடம் ஏதாவது முயற்சி செய்யட்டும், பிறகு பேசிக் கொள்ளலாம்’ என விட்டுவிட்டான்.
காவ்யாவின் கைப்பேசி ஒலி எழுப்ப, எடுத்துப் பார்த்தாள். நந்தாதான் செய்தி அனுப்பியிருந்தான்.
‘மண்ணைத் திறந்தால் நீர் இருக்கும் என் மனதைத் திறந்தால் நீ இருப்பாய் ஒளியைத் திறந்தால் இசை இருக்கும் என் உயிரைத் திறந்தால் நீ இருப்பாய்’
என நந்தா அனுப்பியிருந்த செய்தியைப் பார்த்துவிட்டு, கோவமாக கைப்பேசியை வைத்துவிட்டு வேலையில் கவனம் வைக்கலனாள் காவ்யா. நந்தாவும் வேலையில் மூழ்கி விட்டான்.
“எதிர் வீட்டு ஆண்ட்டி ஃபோன் பண்ணினாங்க. வீட்டில குழந்தை அழற சத்தம் கேட்டுட்டே இருக்காம். காலிங்பெல் அடிச்சா அம்மா வந்து திறக்கலையாம். நானும் அம்மாவுக்கு ஃபோன் பண்ணிட்டே இருக்கேன். ரிங் போகுது, எடுக்க மாட்டேங்கிறாங்க” என அழுகையை வெகு சிரமப்பட்டு அடக்கிக் கொண்டே கூறினாள் காவ்யா.
குழந்தை அழுற சத்தம் என்பதிலேயே திகிலடைந்த நந்தா உடனே எழுந்து விட்டான். “வா நானும் வர்றேன் போலாம்” என்றான்.
“இல்ல வேணாம், எனக்கு பெர்மிஷன் மட்டும் கொடுங்க. நானே போயிப்பேன்” என்றாள் காவ்யா. அவளை முறைத்தவன், “இவ்ளோ டென்ஷன்ல வண்டி ஓட்டிக்கிட்டு தனியா எப்படி போவ, அதோட உள்ள அழுதிட்டு இருக்கிறது என்னோட மகன், அத்தைக்கு என்னாச்சுன்னு தெரியலை. நான் எப்படி இங்கே உட்கார்ந்திருக்க முடியும்? ஆர்க்யூ பண்ணிட்டு இல்லாம சீக்கிரம் கிளம்பு” என சொல்லிவிட்டு அறையிலிருந்து அவளுக்கு முன் வெளியேறினான்.
அவனுடைய மேலதிகாரிக்கு மெயில் செய்து கொண்டே வெளியே வந்தவன், பின்னால் திரும்பிப் பார்க்க பயத்துடன் காவ்யாவும் வெளியே வந்தாள். காரில் சென்று கொண்டிருக்கும் போதே, “அப்பார்ட்மெண்ட் வீடுதானே… ஸபேர் கீ எதுவும் அசோசியேஷன்ல இருக்காதா? அப்படி இருந்தால் உடனே கதவை திறக்க சொல்லு” என்றான்.
“ஸ்பேர் கீ எதுவும் அவங்க கிட்ட இருக்குமான்னு தெரியல” என்றாள்.
“கீ இல்லன்னாலும் பரவாயில்ல, கதவை உடைசிச்சுட்டாவது உள்ள போக சொல்லு, அப்புறம் நாம சரி பண்ணிக்கலாம்” என்றான்.
அவளும் பேச காலியாக இருக்கும் வீட்டிற்கு மட்டும்தான் மாற்று சாவிகள் அந்த வீடுகளின் ஓனர்கள் கொடுத்திருப்பதாகவும், ஆட்கள் குடியிருக்கும் வீடுகளின் மாற்று சாவிகள் வைத்திருப்பதில்லை எனவும் பதில் வந்தது. கதவை உடைக்க சொல்லி காவ்யா கூற, ‘ஓனருக்கு என்ன பதில் சொல்வது, நீங்களே சீக்கிரமா வந்து கதவைத்திறங்க” என பதில் வர, நந்தாவின் காதிலும் தெளிவாக விழுந்தது. கைபேசியை அவளிடமிருந்து பிடுங்கியவன், “என்ன சார் பேசுறீங்க? உள்ள ரெண்டு வயசு குழந்தை அழுதுட்டு இருக்கான். வயசானவங்களுக்கு என்ன ஆச்சுன்னு தெரியலை. கதவை உடைக்க என்ன செலவானாலும் நான் சரி பண்ணி தந்துக்கிறேன். என்ன பிராப்ளம் வந்தாலும் நான் ஃபேஸ் பண்ணிக்கிறேன்” எனக் கூற, அவரும் முயற்சி செய்வதாக கூறினார்.
“நான் வேகமாத்தான் போறேன் காவ்யா, நீ டென்ஷன் ஆகாம இரு. ஒன்னும் ஆகியிருக்காது” என கூறிக்கொண்டே வேகமாக காரை செலுத்தினான்.
பார்க்கிங்கில் வண்டியை நிறுத்திவிட்டு, இருவரும் வீட்டிற்கு ஓடிச் சென்றனர். அவர்கள் வருவதற்கு முன்னரே அப்பார்ட்மெண்டில் இருக்கும் ஒருவன் குழாய் வழியாக பால்கனிக்கு சென்று வீட்டிற்குள் வந்து கதவை திறந்திருந்தான். வீட்டில் கூட்டமாக இருந்தது. காவ்யாவின் மனதிற்கு ஏதோ உறுத்த, அவளுக்கு உள்ளே செல்லவே பயமாக இருந்தது. நந்தா காவ்யாவின் கையை பிடித்து உள்ளே அழைத்துச்சென்றான்.
அப்பார்ட்மெண்டில் வசிக்கும் மருத்துவர் ஒருவர் வரவழைக்கப் பட்டிருந்தார். அறையில் தரையில் மயங்கி கிடந்த காமாட்சியின் கண்களை டார்ச் லைட் மூலம் பரிசோதித்த மருத்துவர் அவர் உயிர் எப்பொழுதோ பிரிந்துவிட்டதாக கூறினார்.
எதிர்வீட்டு பெண்மணியின் கைகளில் இருந்த அர்ஜுன் அழுது கொண்டிருந்தான்.
தன் தாயின் உடல் அருகில் வராமலேயே அதிர்ச்சியில் நந்தாவின் மேல் மயங்கி சரிந்தாள் காவ்யா.