NNVN-6

அத்தியாயம் 6

காவ்யாவின் நினைவுகளுடன் நந்தா மாடியில் தனது அறைக்கு வெளியில் நின்றிருக்க, சிறு தூறல்களாக மழை பெய்ய ஆரம்பித்தது. தன்னுடைய அறைக்குள் சென்றான். காவ்யாவுடன் தான் கூடியிருந்த நாட்கள் நினைவுக்கு வர, இப்போது தன் படுக்கையை பார்க்க விரக்தியாக உணர்ந்தான்.

படுத்துக் கொள்ளாமல் ஜன்னலுக்கு அருகில், நாற்காலியைப் போட்டுக் கொண்டு மழையை பார்த்துக்கொண்டே, மீண்டும் தன் கடந்த காலத்தை நினைவு கூர்ந்தான்.

கருணாகரனிடம் நந்தகுமாரைத்தான் திருமணம் செய்து கொள்வேன் என பிடிவாதம் செய்து காவ்யா அவரது சம்மதத்தைப் பெற்று விட, நந்தாவும் அவன் வீட்டில் பேசினான். அவனின் உறுதியை பார்த்த சாந்தியும், இவனாக திருமணம் செய்து கொள்வதை விட, தான் சம்மதிப்பதே சிறந்தது என்றெண்ணி அரைமனதாக நந்தா காவ்யாவை மணந்துகொள்ள சம்மதித்தார். இருவரது திருமணமும் நிச்சயிக்கப்பட்டது.

முகூர்த்த புடவை எடுக்க அனைவரும் கடைக்கு வந்திருக்க, காவ்யா அவளுக்குப் பிடித்தது போல புடவையை தேர்ந்தெடுத்தாள். காவ்யா விலையைப் பார்க்கவில்லை. அவளுக்கு பிடித்ததாக தேர்ந்தெடுத்தாள். இத்தனைக்கும் நந்தாவிடம் “என்ன பட்ஜெட்?” என்று வருவதற்கு முன்பே கைப்பேசியில் கேட்டிருந்தாள்.

“மேரேஜ் ஒருமுறைதான், உன் மனசுக்கு பிடிச்சிருக்கணும் அவ்வளவுதான், பட்ஜெட் பற்றி கவலைப்படாதே” என்று அவன் கூறியிருந்ததால் விலையை பற்றி அவள் யோசிக்கவே இல்லை.

ஆனால் புடவையின் விலையை பார்த்த சாந்திக்குதான் மயக்கம் வராத குறையாகிப்போனது. சுந்தராம்பாள் “விலை ரொம்ப அதிகம்” என வாய் விட்டே சொன்னார். காவ்யா முகம் சுருங்க, அவள் பெற்றோரும் முகம் சுருக்கினர்.

“தப்பா எடுத்துக்காதீங்க” என்று கருணாகரனிடம் கூறிய நந்தா, “அம்மா இந்த விலை ஒன்னும் பிரச்சனை இல்லை. கல்யாணப் புடவை காவ்யாவுக்கு பிடிச்ச மாதிரி இருக்கிறதுதானே முக்கியம்” என்று சாந்தியிடம் கூற, விலையை பார்த்து மலைத்தாலும் ஒன்றும் கூறாமல் விட்டு விட்டார். இப்படியெல்லாம் பேச்சு வரும் என்று நந்தா நினைக்கவில்லை. தெரிந்திருந்தால் முன்பே சாந்தியிடம் விலையைப் பற்றி பேச வேண்டாம் என்று கூறி அழைத்து வந்திருப்பான்.

‘அவர் சம்பாதிக்கிறார், வரப்போற பொண்டாட்டிக்கு செய்றார். இடையில இவங்களுக்கு என்ன வந்தது?’ என காவ்யாவின் பெற்றோர் நினைக்க, ‘இன்னும் கல்யாணமே ஆகலை, அதுக்குள்ள விலையை பத்தி கவலைப்படாம, என்கிட்ட கூட கேட்காம காசை வாரியிரைக்கிறான். இப்படி செலவு பண்ணினா நாளைக்கு என் பொண்ணுங்களுக்கு எப்படி செய்ய முடியும்?’ என சாந்தி நினைத்தார்.

தனது தங்கைகள், சாந்தி, சுந்தராம்பாள் ஆகியோருக்கும் விலையுயர்ந்த ஆடைகளையே வாங்கிக் கொள்ளச் சொன்னான் நந்தா. ஆனால் சாந்திக்குத்தான் மனது நிறையவில்லை. திருமணத்திற்கு பிறகு எங்கே தங்களை விட்டு விடுவானோ என பயப்பட ஆரம்பித்தார்.

காவ்யாவுக்கு தாலிக்கொடி வாங்கிய பின்னர், அவளுக்கு ஒரு காதணி பிடித்துவிட, தந்தையிடம் சொல்லி வாங்கிக் கொண்டாள். ஆனால் கட்டாயப்படுத்தி நந்தாவே அதற்கும் பணம் செலுத்தினான். இதெல்லாம் சாந்திக்கு கொஞ்சம் கூட பிடிக்கவில்லை. போதாததற்கு, சுந்தராம்பாள் வேறு “பாருடி, நல்லா பாரு, அவன் கொஞ்சம் கொஞ்சமா உன் கையை விட்டு போறான்” என ஏற்றி விட்டுக் கொண்டிருந்தார்.

நந்தா தன் படிப்பு முடிந்ததுமே வேலைக்கு சென்று விட்டான். வேலை பார்த்துக்கொண்டேதான் மேலே எம்பிஏ படித்தான். வீட்டின் லோனும் முடியும் தருவாயில் உள்ளது. தன் தங்கைகளுக்கு எனவும் தனித்தனியாக சேர்த்து வந்தான். வேறு வேலைக்கு மாற முயற்சி செய்து வருகிறான். மாறிவிட்டால் சம்பளம் இன்னும் உயரும். அதனால் நந்தா பணத்தைப் பற்றி கவலைப்படாமல், காவ்யாவிற்கு செய்வதில் எந்த குறையும் இல்லாமல் செய்ய வேண்டும் என்று நினைத்தான். நந்தா நன்றாக சம்பாதிக்கிறான் என சாந்திக்கு தெரியும். ஆனால் எவ்வளவு என்ற விவரமெல்லாம் தெரியாது. அதனால் அவன் அதிக செலவு செய்வதாக எண்ணி பயம் கொண்டார்.

சுந்தராம்பாள் தன் பேத்தியை விடுத்து காவ்யாவை மணக்கப் போவதால் காவ்யாவின் வீட்டினரிடத்தில் ஏதாவது குறை கண்டுபிடித்து சொல்லிக் கொண்டிருக்க, ‘நீ எல்லாம் எங்களுக்கு ஒரு பொருட்டே இல்லை என்பது போல’ “எல்லாம் எங்க மாப்பிள்ளைகிட்ட சொல்லுக்கிறோம்” என ‘எங்க மாப்பிள்ளை’ என்பதில் ஒரு அழுத்தமும் கொடுத்து கூறினார் கருணாகரன். பார்த்துக்கொண்டிருந்த சாந்திக்கு, தன் அன்னை நடந்து கொள்ளும் விதத்தால்தான் அவர்கள் அவ்வாறு நடந்து கொள்கிறார்கள் என்பது புரியாமல், பெண் வீட்டினரின் கை ஓங்கியிருப்பதாக பட, மனதில் ஒருவித பதற்றம் தொற்றிக்கொண்டது.

பெண் வீட்டின் சார்பில் திருமணம் நடைபெற, கருணாகரன் தன் ஒரே பெண்ணின் திருமணத்தை, ஊரே மெச்சும்படி செய்தார். திருமணத்திற்கு முதல்நாள் வரவேற்பு நடந்தது. நந்தாவின் நண்பர்களும் காவ்யாவின் நண்பர்களும் வந்திருக்க, இசைக் கச்சேரி ஒருபுறம் நடக்க வரவேற்பு களைகட்டியது.

நந்தாவின் குறும்புக்கார நண்பனொருவன் பூங்கொத்தை நந்தாவின் கையில் கொடுத்து, மண்டியிட்டு காவ்யாவின் கையில் தரவேண்டும் என்று கலாட்டா செய்ய, மற்ற நண்பர்களும் ஊக்குவிக்க, வேறு வழியில்லாமல் வெட்கப்பட்டுக்கொண்டே நந்தாவும் மண்டியிட்டு காவ்யாவிற்கு பூங்கொத்தை கொடுத்தான். எல்லோரும் கைதட்டி ஆர்ப்பரிக்க, “சாமியாராய் இருந்த எங்க நந்தாவையே மாற்றிய சிஸ்டருக்கு எல்லோரும் ஒரு ஓ போடுங்க” என அந்த நண்பன் சத்தமாக கூற, மற்றவர்களும் சத்தமாக “ஓ” என்று ஆர்ப்பரிக்க, ஒரே சந்தோஷ கலாட்டாவாக இருந்தது.

“பார்த்தியாடி இந்த பூனையும் பால் குடிக்குமாங்கற கதையா, நாலு வார்த்தை சேர்ந்தாப்புல யார்கிட்டயும் பேசக்கூட மாட்டான். இப்ப என்னென்னவெல்லாம் செய்றான். நீ ஜாக்கிரதையா இல்லை அந்த பொண்ணு விட்டோடவே போய்டுவான்” என சுந்தராம்பாள் கூற, “நீ கொஞ்சம் சும்மா இரு” என அவர் மீது எரிந்து விழுந்தார் சாந்தி.

நந்தாவை பாடச்சொல்லி அவனது நண்பர்கள் வற்புறுத்த, அதற்கு மறுத்து விட்டான் நந்தா. காவ்யாவும், “நீங்கதான் நல்லா பாடுவீங்களே, பாடுங்களேன்” எனக்கூற “ உன் முன்னாடி பாடுறப்போ ஒன்னும் தோணல. எல்லார் முன்னாடியும் எல்லாம் பாட முடியாது” எனக் கூறி விட்டான்.

வரவேற்பு முடிந்த பின் அனைவரும் உறங்கச் செல்ல, மண்டபத்தில் படுத்தால் உறக்கம் வராது எனக்கூறி, வீட்டிற்கு சென்று விட்டு காலையில் வருவதாக கூறினாள் காவ்யா.

“பொண்ணழைப்பு முடிஞ்சு, மண்டபம் வந்த பின்னாடி கல்யாணம் முடியுற வரை எங்கேயும் போகக்கூடாது” என சுந்தராம்பாள் கண்டிப்பாக கூற, “வீடு கிட்டதானே இருக்கு. அவளுக்கு இடம் மாறினால் தூக்கம் வராதுன்னு சொல்றா. நாளைக்கு கல்யாணம். இன்னைக்கு நைட் இவ நல்லா தூங்கி எழுந்திருச்சாதானே நாளைக்கு நல்லா இருக்கும். இதை பெரிசு பண்ணாதீங்க, காலையில் சீக்கிரமே நான் அழைச்சுட்டு வந்துடுறேன்” என காமாட்சி கூற, தன் உரிமையை நிலைநாட்ட, சாந்தியும் போகக்கூடாது என மறுத்தார்.

இவர்கள் பேசிக்கொண்டிருக்கும்போதே காவ்யா நந்தாவை கைப்பேசி மூலம் அழைத்து விட்டாள். “இங்கதானே வீடு இருக்கு. போயிட்டு வரட்டும்” என நந்தா சொல்லிவிட, சாந்திக்கு கொஞ்சம் கூட பிடிக்க வில்லை.

சுந்தராம்பாளின் தோரணையான பேச்சும், அதிகாரமும் காவ்யாவிற்கு ஆரம்பத்திலிருந்தே பிடிக்கவில்லை. அதனால்தான் இவர்களுடன் வாதிட விரும்பாமல் நந்தாவை அழைத்துவிட்டாள். திருமணத்திற்கு முன்பே தன்னை மதிக்காமல் நந்தாவிடம் தன் காரியத்தை சாதித்துக் கொள்கிறாள் இந்தப் பெண் என சாந்தி நினைத்துக்கொண்டார்.

அடுத்த நாள் காலையில், நந்தகுமார்- காவ்யா திருமணம் இனிதே நடந்தேறியது. இருவரின் உள்ளங்களும், தங்கள் மனதிற்கு இனியவரே வாழ்க்கை துணையாக கிடைத்து விட்டதில் உவகை கொண்டன.

திருமணம் முடிந்து மணமகன் வீட்டிற்கு சென்றுவிட்டு அன்று இரவு விசேஷத்திற்காக மணமகள் வீடு வந்தனர் மணமக்கள்.

அலங்கரிக்கப் பட்ட அறையில் தனிமையில் இருந்ததனர் இருவரும். வாய் ஓயாது நந்தாவிடம் வார்த்தையாடும் காவ்யா, பேச்சிழந்து அமர்ந்திருந்தாள்.

“ஹேய் சரவெடி மாதிரி பேசிகிட்டே இருப்ப, என்ன இப்படி அமைதியா இருக்க?” என கேட்டுக்கொண்டே காவ்யாவின் கைகளை நந்தா பற்ற, அவளது கைகள் சில்லிட்டிருந்தது.

“என்ன கையெல்லாம் இவ்வளவு சில்லுன்னு இருக்கு? பயப்படுறியா?” எனக்கேட்டான் நந்தா.

“ம்…” என்று மட்டும் பதிலுரைத்தாள் காவ்யா.

“என்கிட்ட என்ன பயம்?” என நந்தா கேட்க, அவனை நிமிர்ந்தும் பார்க்காமல் அமைதியாகவே இருந்தாள் காவ்யா.

“சரி கொஞ்ச நேரம் பேசிக்கிட்டு இருக்கலாம்” என நந்தா கூற, அதற்கும் அமைதியாகத்தான் உட்கார்ந்திருந்தாள்.

“இங்க நடக்கப் போறத பத்தி எதையும் நினைக்காம, சாதாரணமா என்கிட்ட பேசு காவ்யா” என்றான் நந்தா.

அவனை நிமிர்ந்து பார்த்தவள் என்ன பேசுவதென்று தெரியாமல், “என்ன பேசறதுன்னு தெரியல?” என்றாள். வெட்கம், பயம், பதற்றம் என எல்லாம் கலந்து இருந்தவளை பார்த்து ரசித்தவன், “நேத்து என்னை எல்லார் முன்னாடியும் பாட சொன்னியே, இப்ப பாடட்டுமா?” எனக் கேட்டான். காவ்யா சம்மதமாய் தலையசைக்க,

“என்னவளே அடி என்னவளே
எந்தன் இதயத்தை தொலைத்து விட்டேன்
எந்த இடம் அது எந்த இடம்
அந்த இடத்தையும் மறந்து விட்டேன்
உந்தன் கால் கொலுசில் அது தொலைந்ததென்று
உந்தன் காலடி தேடி வந்தேன்
காதல் என்றால் பெரும் அவஸ்தையென்று
உன்னை கண்டதும் கண்டு கொண்டேன்’

பாடலை முழுவதும் பாடினான். பாடி முடித்ததும், “எப்படி பாடினேன்?” என அவளை நெருங்கியமர்ந்து கேட்டான்.

“ரொம்ப நல்லா பாடுனீங்க” என்ற காவ்யாவுக்கு இப்போது பதற்றம் குறைந்தது போல இருந்தது.

அவளது கன்னத்தில் இருந்த சிறு கரும்புள்ளியில் கைவைத்து, “என்ன இது கருப்பா?” எனக் கேட்டான்.

ஒரு நொடி யோசித்தவள், “ ஓ இதுவா? திருஷ்டி பொட்டு…. அம்மா வச்சி விட்டாங்க” என்றாள்.

“நான் கூட திடீர்னு எப்படி இவளுக்கு மச்சம் வந்துச்சுன்னு யோசிசேன்” என்றான்.

“திடீர்னு எப்படி மச்சம் வரும்? நல்ல அறிவாளிதான் நீங்க” என காவ்யா அவள் தலையில் மெல்ல அடித்துக்கொள்ள, அவளது திருஷ்டிப் பொட்டை தொட்டுக் கொண்டிருந்த நந்தாவின் விரல்கள் மெல்ல அவள் இதழ்களை வருடியது. அவனது கையை காவ்யா பிடித்துக்கொள்ள, அவளை இன்னும் நெருங்கியமர்ந்த நந்தா “பயப்படாத காவ்யா, ஒரு 5 மினிட்ஸ் என்னைப் பொறுத்துக்கோ. அதுக்கப்புறமும் வேண்டாம்னா வேண்டாம்” என அவள் காதில் கிசுகிசுப்பாய் கெஞ்சினான்.

மென்மையாய் நந்தா முன்னேற, காவ்யாவின் சின்ன தயக்கங்களும், நந்தாவின் செல்ல தவிப்புகளுமாய் முதலில் இருவரும் கொஞ்சம் தடுமாறி, பின் ஒருவரை ஒருவர் உணர்ந்து காதல் பேராழியில் மூழ்க ஆரம்பித்தனர்.

இரண்டு நாட்களில், நந்தாவின் வீட்டிற்கு வந்து விட்டனர். காவ்யாவை மிகவும் அன்பாக நடத்தினான் நந்தா. காவ்யாவிற்கு சுந்தராம்பாளை பிடிக்காவிட்டாலும், மற்றவர்களுடன் இனிமையாகவே பழகினாள். இவர்களது அறை மாடியில் தனித்து இருக்கும். அங்கு மட்டும்தான் நந்தா அவளுடன் சுதந்திரமாக இருப்பான். கீழே வந்துவிட்டால் கொஞ்சம் இடைவெளி கடைபிடிப்பான்.

வாசுகி பொறியியல் கடைசி வருடமும், கீர்த்தி மருத்துவம் முதல் வருடமும் படித்துக் கொண்டிருந்தனர். தங்கைகள் இருவரும் வயது பெண்கள் என்பதால் அவர்களுக்கு முன் காவ்யாவிடம் நெருங்கி பழக மாட்டான்.

“காவ்யா தப்பா எடுத்துக்காத, தங்கச்சிக்கு ரெண்டு பேரும் சின்ன பொண்ணுங்க. அவங்க முன்னாடி நாம கொஞ்சம் பார்த்துதான் நடந்துக்கணும்” என சொல்லவும் செய்தான்.

“புரியுது. எல்லார் முன்னாடியும் உங்ககிட்ட சாதாரணமா பழக முடியலை. உங்க கூட தனியா டைம் ஸ்பென்ட் பண்ணனும்னு ஆசையா இருக்கு” என காவ்யா சொல்லி அவன் நெஞ்சில் சாய்ந்து கொள்ள, ஒரு வாரத்தில் தேனிலவுக்காக கூர்க் செல்ல ஏற்பாடு செய்தான் நந்தா.

காவ்யாவிடம் கூட சொல்லவில்லை. கிளம்பும் அன்று காலையில்தான் சொன்னான். அப்போதுதான் வீட்டினருக்கும் கூறினான்.

தன்னிடம் முன்பே கூறாமல் கடைசி நேரத்தில் பெயருக்கு செல்வதாக சாந்தி நினைத்துக்கொண்டார். காவ்யா கூட தன்னிடம் சொல்லவில்லையே என அவள் மீதும் வருத்தம் கொண்டார்.

“ஏண்ணா எப்ப கூர்க் போய் சேருவ?” என வாசுகி கேட்க, “இன்னைக்கு நைட்” என்றான் நந்தா.

“அவ்ளோ சீக்கிரமாவா?” என வாசுகி கண்களை விரிக்க, “பெங்களூர் வரையிலும் ஃபிளைட்லதான் போறோம். அங்கிருந்து காருக்கு சொல்லியிருக்கேன். அதனால நைட்டே ரீச் ஆகிடுவோம்” எனக் கூறிக் கொண்டே ஏர்போர்ட் செல்ல கால் டாக்ஸி புக் செய்ய, அப்போதுதான் அவர்கள் விமானத்தில் போகப் போவது எல்லோருக்கும் தெரியும்.

விமானம் என்றதுமே சாந்தியிடம் சுந்தராம்பாள் “பாருடி காச எப்படி கரைக்கிறான்னு. பெரியவ படிப்பு முடிச்சதும், சீக்கிரம் கல்யாணத்த பண்ண பாரு. இப்பவே இப்படி ஆடுறான். குழந்தை கிழந்தை வந்துட்டுன்னா உங்களுக்கு ஒன்னும் செய்ய மாட்டான்” என கூற, சாந்திக்கும் அவர் கூறுவது சரியென்றுதான் பட்டது.

நந்தாவின் தேனிலவு ஏற்பாட்டில் காவ்யா மிகவும் அகமகிழ்ந்து போனாள். அவள் ஊட்டி, கொடைக்கானல் என தமிழ்நாட்டிற்குள் சென்றிருக்கிறாளே தவிர, வேறு எங்கும் சென்றதில்லை. அவளுடைய பெற்றோர் அனுமதித்ததில்லை. கூர்க் வருவது காவ்யாவிற்கு இதுதான் முதல் முறை. நந்தாவிற்கும் இதுதான் முதல் முறை.

அவர்கள் தங்கியிருந்த விடுதியிலேயே வெளியில் சுற்றி பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பகல் முழுவதும் வெளியே சுற்றினார்கள். மாலையில் வீடு திரும்பி விடுவார்கள். அவர்கள் இருவரின் உலகில் அவர்களைத் தவிர வேறு யாருமில்லை.

மனதில் உள்ளதை யாரிடமும் பகிர்ந்து பழக்கப்பட்டிராத நந்தா, காவ்யாவுடன் மிக இயல்பாக அனைத்தையும் பகிர்ந்து கொண்டான். அவனை சுற்றி இருந்த மாய சுவரை கடந்து, காவ்யாவால் மிக எளிதாக அவனை அணுக முடிந்தது. நந்தகுமார் காவ்யாவை தன்னுடைய ஆன்மாவின் துணையாக கருதினான். காவ்யா தன்னை விட அதிகமாக நந்தாவை நேசித்தாள்.

அப்பொழுதே சிறு சிறு விஷயங்களுக்கும் காவ்யா பிடிவாதம் செய்வாள். சின்ன விஷயத்திற்கும் அவள் நினைத்ததுதான் நடக்க வேண்டும் என்று இருப்பாள். எளிதாக விட்டுக் கொடுத்து விடுவான் நந்தா. அவளின் மகிழ்ச்சிக்காக எதையும் செய்ய தயாராக இருந்தான். அவளின் மகிழ்ச்சியைப் பார்த்து தான் மகிழ்ச்சியடைந்தான்.

மழை விட்டிருந்தது. தன் நினைவுகளில் இருந்து விடுபட்ட நந்தகுமார் நேரத்தைப் பார்த்தான். நடு இரவைத் தாண்டியிருந்தது. தன் வலது கையை நீட்டி பார்த்தான். இதே கையால்தான் தன் அன்பு மனைவியை கைநீட்டி அடித்தான். ‘அப்படி என்ன கோபம் உனக்கு? அவள் கோபத்தில் என்ன பேசினாலும் பொறுத்து அட்ஜஸ்ட் பண்ணிக்குவேன்னு கல்யாணத்துக்கு முன்னாடி சொன்னதானே. சொன்ன வார்த்தையை காப்பாற்றினாயா?’ என அவன் மனசாட்சி கேள்வி கேட்க, பதில் எதுவும் இல்லை நந்தாவிடம்.

‘உன்னில் தவறோ, அவளில் தவறோ, இனி அதைப் பற்றி யோசிக்காமல் உன் வாழ்க்கையை காப்பாற்றிக் கொள். மனைவியிடம் தாழ்ந்து போவதில் தவறொன்றுமில்லை’ என அவனை கேள்வி கேட்ட மனசாட்சியே அறிவுரையும் வழங்கியது.