காவ்யாவின் வீட்டிற்கு வந்த நந்தகுமார், அவள் கையில் தன் முக சாயலில் இருந்த குழந்தையைப் பார்த்துவிட்டு அதிர்ச்சியில் உறைந்து நின்றான். காவ்யாவிற்கு நந்தா எப்படியும் தேடிக் கொண்டு வருவான் என்று தெரியும். ஆனால் இன்றே எதிர்பார்க்கவில்லை.
நந்தா காவ்யாவின் கையிலிருந்த குழந்தையைதான் பார்த்திருந்தான். தன்னுடைய குழந்தைதான் என்று உள் மனது அடித்துக் கூற, காவ்யா மீது சொல்ல முடியாத அளவு கோபம் வந்தது. குழந்தையை வாங்க நந்தாவின் கைகள் தானாக நீள, புதிதாக ஒருவனை கண்ட குழந்தை தன் தாயை இறுகப் பற்றிக் கொண்டு முகம் திருப்பிக் கொண்டது. நந்தாவின் கண்கள் இரண்டும் சிவந்து போனது.
“யாரு காவ்யா?” என கேட்டுக்கொண்டே காவ்யாவின் அன்னை காமாட்சி வர, அவரைப் பார்த்தவன் மேலும் அதிர்ந்தான். எப்பொழுதும் நெற்றியில் பெரிய குங்குமப் பொட்டிட்டு, நெற்றி வகிட்டிலும் குங்குமம் வைத்திருப்பவர், இப்பொழுது வெறும் திருநீற்றுக் கீற்றுடன், மெலிந்து போயிருந்த அவரது தோற்றம் சொன்னது கருணாகரன் இப்பொழுது உயிருடன் இல்லை என்பதை.
காமாட்சி, நந்தாவை பார்த்துவிட்டு ஒரு நொடி ஆச்சரியத்தில் கண் விரித்தவர் பின் சுதாரித்து “வாங்க தம்பி” என்றார்.
“எதுக்கு உள்ள கூப்பிடுற?” என வழியை மறித்து கொண்டே கேட்டாள் காவ்யா.
“நீ முதல்ல தள்ளுடி, அவரை உள்ள விடு. அப்பாவும் பொண்ணும் தேவையில்லாமல் ஆட்டம் போட்டுட்டு, இப்போ தேடி வந்திருக்கிறவரை இப்படி வெளியே நிறுத்துறியே….? உனக்கு அறிவிருக்கா?” எனக் கேட்டார் காமாட்சி.
காவ்யா தன் அன்னையை முறைத்துவிட்டு வழிவிடாமலேயே நிற்க, “தள்ளுடி” என அவள் கையை பிடித்து காமாட்சி இழுக்க, உள்ளே நுழைந்தான் நந்தா.
“இந்த ஆள முதல்ல வெளியில போகச் சொல்லு” என காவ்யா கத்த, குழந்தை பயந்து போய் அவள் முகத்தைப் பார்த்தது. “ஏண்டி இப்படி கத்துற?” என கேட்டுக்கொண்டே அவசரமாக கதவை அடைத்தார் காமாட்சி.
“நீங்க வாங்க தம்பி, உட்காருங்க” என்றார் காமாட்சி. தன் குழந்தையை பார்த்துக்கொண்டே சோஃபாவில் வந்தமர்ந்தான் நந்தகுமார். தலை நிறைய முடியுடனும், நெற்றியிலும் கன்னத்திலும் மையில் பொட்டிட்டு, காலில் கொலுசு அணிந்து, கையில்லாத டி-ஷர்ட்டும், லோயரும் அணிந்து, கையில் வைத்திருந்த குரங்கு பொம்மையை ஆராய்ந்து கொண்டிருந்தது குழந்தை. நந்தாவுக்கு ஆணா, பெண்ணா என்று கூட அறிய முடியவில்லை.
“உன் இஷ்டத்துக்கு ஏதாவது செய்யு. இந்தாளு போனதும் சொல்லு, வர்றேன்” என்றவள் குழந்தையுடன் அறைக்குள் சென்று கதவை அடைத்துக் கொண்டாள்.
“இருங்க தம்பி, நான் காஃபி போட்டு எடுத்துட்டு வர்றேன்” என காமாட்சி உள்ளே செல்ல, அவளை தடுத்தான் நந்தா.
“எனக்கு எதுவும் வேண்டாம் அத்தை, முதல்ல நீங்க வந்து இங்க உட்காருங்க” என்றான்.
காமாட்சி அவனுக்கு எதிரில் இருந்த ஒற்றை சோஃபாவில் அமர்ந்து கொண்டார்.
“என்னாச்சி மாமாவுக்கு?” எனக் கேட்டான்.
“ஹார்ட் அட்டாக்” என்றவர், ஒரு பெருமூச்சுவிட்டு தொடர்ந்தார். “நல்லாதான் இருந்தார். திடீர்னு மயக்கம் போட்டு விழுந்துட்டாரு. ஹாஸ்பிட்டல் கூட்டிட்டு போனா இறந்துட்டதா சொல்லிட்டாங்க” என்றவரது கண்கள் கலங்கியிருந்தது.
“எனக்கு ஏன் எதையுமே தெரியப்படுத்தல?” எனக் கேட்டான்.
“காவ்யாதான் பிடிவாதமா சொல்லக் கூடாதுன்னு சொல்லிட்டா. அவளுக்கு அவள் பிரக்ணன்டா இருக்கிறது தெரிஞ்சும், நீங்க வரலைன்னு உங்க மேல கோவம்” என்றார்.
“என்ன சொல்றீங்க? காவ்யா பிரக்ணன்டா….” என சற்று கோபமாக குரலை உயர்த்தி ஆரம்பித்தவன், பின் சற்று தன்னை அடக்கிக்கொண்டு சாதாரண குரலில், “காவ்யா பிரக்னண்டா இருந்தது எனக்கு தெரியாது. இப்போ என் குழந்தையை பார்த்த இந்த நிமிஷம் வரை எனக்கு குழந்தை இருக்கிற விஷயமே தெரியாது. எனக்கு ஏன் தெரியப்படுத்தலன்னு என் குழந்தையையும் சேர்த்துதான் கேட்டேன்” என்றான்.
“உங்களுக்கு தெரியும்னுதான் காவ்யா அப்பா சொன்னார்” என்று யோசனையாக சொன்ன காமாட்சி, “தெரிஞ்சிருந்தா வந்திருப்பீங்களா?” எனக் கேட்டார்.
“எனக்கு குழந்தை இருக்கிற விஷயம் தெரியாமலேயே இப்போ உங்க பொண்ணை தேடிக்கிட்டுதானே வந்திருக்கேன். தெரிஞ்சிருந்தா அப்பவே வந்திருக்க மாட்டேனா?” என கேட்டான் நந்தா.
அவனுடைய பதிலில் நிம்மதியடைந்தவர், “என்னென்னமோ நடந்துடுச்சு. இப்போ எல்லாம் இவளை நினைச்சுதான் எனக்கு கவலையே. இவள் வாழ்க்கை இப்படி ஆயிடுச்சேன்னு நெனச்சு, நெனச்சு தினம் தினம் அழுது சாகிறேன். அவ என்ன தப்பு பண்ணியிருந்தாலும், அதையெல்லாம் மறந்து, மன்னிச்சு, அவளை உங்க கூட கூப்பிட்டுக்குங்க” என கையெடுத்துக் கும்பிட்டார் காமாட்சி.
“தயவுசெய்து கையைக் கீழ இறக்குங்க. என் பொண்டாட்டி பிள்ளையோட சேர்ந்து வாழ நீங்க ஏன் கெஞ்சுறீங்க? நான் இன்னும் கொஞ்சம் பொறுமையா இருந்திருக்கலாம்” எனக் கூறி சற்று இடைவெளி விட்டு, “வீட்டை விற்குற அளவுக்கு என்னாச்சு? ஏன் இங்கே வந்துட்டீங்க?” எனக் கேட்டான்.
“தொழில்ல பெரிய நஷ்டம் வந்துடுச்சு. எங்களுக்கு தெரியாது. கடைசி நேரத்தில் தான் சொன்னார். ஏகப்பட்ட கடன். கடன் கழுத்தை நெறிக்கும் போதுதான் எங்ககிட்ட சொன்னாரு. கடையையும் வீட்டையும் வித்துட்டோம். கடனை எல்லாம் அடைச்சிட்டு மீதி பணத்தை வச்சி ஏதாவது தொழில் செய்யலாம்னு எங்கள் சொந்த ஊரு ஈரோட்டுக்கு போயிட்டோம். கையில இருந்த பணம்தான் கரைஞ்சுது. என்ன தொழில் செய்யலாம்ன்னு இவர் யோசிச்சிட்டு இருக்கும்போதே, ஒரு நாள் ஹார்ட் அட்டாக்ல…..” என முடிக்க முடியாமல் மீண்டும் அழுதார்.
நந்தா எழுந்து சென்று, நீர் எடுத்து அவருக்கு பருக கொடுத்தான். வாங்கி அருந்தியவர், கண்களைத் துடைத்துக் கொண்டு, “சொந்தக்காரங்க எல்லாம் நாம நல்லா இருக்கும்போது காட்டுற முகம் உண்மை இல்லன்னு, நாம கஷ்டப்படுற காலத்துல காட்டிக் கொடுத்துடுறாங்க. சொந்த ஊருக்கு போயும் எங்களுக்கு ஆதரவு யாரும் இல்லை. காவ்யாவுக்கு குழந்தை பிறந்து மூணு மாசம் இருக்கும் போது, அங்க இருந்தா சரியா வராதுன்னு சென்னைக்கே திரும்ப வந்துட்டோம். காவ்யா இங்க வந்த ரெண்டு மாசத்துல ஒரு வேலைக்கும் சேர்ந்துட்டா. குழந்தையை நான் பார்த்துகிட்டேன். அவ வேலைக்கு போய் வந்துகிட்டு இருந்தா. முதல்ல வேலைக்கு போயிட்டிருந்த இடத்துல ஏதோ பிரச்சனைன்னு, வேற வேலை மாத்திகிட்டா” என்றார்.
பல நாட்கள் கழித்து, தன் மனதின் சோகங்களை நந்தாவுடன் பகிர்ந்து கொண்டதில் அவருக்கும் சற்று மனது லேசாக இருந்தது.
“எப்படி மாமா எனக்கு காவ்யா பிரக்னண்ட்டா இருக்கிறது தெரியும்ன்னு சொன்னார்?” எனக் கேட்டான்.
“உங்களுக்கு தெரியும்னுதான் சொன்னார். இனி என்ன செய்றார்ன்னு பார்ப்போம்னும் சொன்னார். அதுக்கப்புறம் நீங்க வருவீங்கன்னு நாங்க நினைச்சோம். ஆனா நீங்க வெளிநாடு போயிட்டீங்க” என்றார் காமாட்சி.
“எனக்கு உண்மையிலேயே தெரியாது. தெரிஞ்சிருந்தா போயிருக்க மாட்டேன். அப்போ இங்க இருக்க பிடிக்கல. புது வேலை மாறி, வெளிநாடு போக ஆஃபர் வந்ததும் உடனே போய்ட்டேன். அக்ரிமெண்டில் போனதால இடையில வர முடியல”
“அப்போ காவ்யா மேல கோபமா இருந்தேன். இங்க இருந்தா பிரச்சனை பெருசாகும்முன்னுதான் யு எஸ் போனேன். போய் கொஞ்ச நாள் கழிச்சு நான் காவ்யா நம்பருக்கு ட்ரை பண்ணினேன். நாட் எக்ஸிஸ்ட் ன்னுதான் மெசேஜ் வந்துச்சி” என்றான்.
“ம்…. உண்மையை சொல்லனும்னா உங்க யார்கூடவும் அப்போ பேச பிடிக்கல. எல்லோர் மேலேயும் கோபமா இருந்தேன். பேசி இருந்திருக்கலாமேன்னு இப்ப தோணுது” என தன்னைப் பார்த்து வர மறுத்த தன் குழந்தையை நினைத்துக்கொண்டே நந்தா கூற, ஒன்றும் கூறாமல் தலை கவிழ்ந்து கொண்டார் காமாட்சி.
நந்தாவுக்கும் குழப்பமாக இருந்தது. ‘கருணாகரன் தன்னிடம் காவ்யா கருவுற்றிருப்பது குறித்து எதுவும் கூறவில்லை. ஒருவேளை வீட்டில் யாருக்கும் சொல்லி அவர்கள் மறைத்து விட்டார்களா? இல்லை, கருணாகரன் பொய் சொல்லியிருப்பாரா?’ என யோசித்துக் கொண்டிருந்தான்.
“நடந்தது நடந்துடுச்சு, எங்களை மன்னிச்சி என் பொண்ணை ஏத்துக்குங்க” என்றார் காமாட்சி.
அப்போது சரியாக வெளியே வந்த காவ்யா, “ம்… அப்படியே அவர் கால்ல விழுந்து கெஞ்சு….. உன் பொண்ணுக்கு வாழ்க்கை தரச்சொல்லி” என கோபாவேசமாக கூறினாள்.
நந்தா அவளைப் பார்த்தான். கன்னங்களும், கண்களும் சிவந்து போயிருந்தன. அவளை விடுத்து அவளுக்கும் பின்னால் பார்த்தான். குழந்தையை தேடினான். குழந்தையைக் காணாமல் எழுந்து காவ்யாவை கடந்து அறைக்குள் சென்றான்.
கட்டிலில் குழந்தை தூங்கிக் கொண்டிருந்தது. குழந்தையின் அருகில் போய் உட்கார்ந்தான். வாரியணைத்துக் கொள்ள உள்ளமும் கைகளும் பரபரத்தன. எங்கே குழந்தையை தொட்டால் உறக்கம் கலைந்து விடுமோ என்றெண்ணி தன்னை கட்டுப்படுத்திக் கொண்டு பார்வையாலேயே குழந்தையை தழுவிக் கொண்டிருந்தான்.
“மெதுவா பேசு காவ்யா. குழந்தை முழிச்சிக்கப் போகுது” என்றான் நந்தா.
“ஆஹா…. ரொம்பதான் அக்கறை? வெளியே போ முதல்ல” என அடிக்குரலில் சீறினாள் காவ்யா.
அவளின் கோபத்தை பொருட்படுத்தாமல், குழந்தையின் அருகிலேயே உட்கார்ந்து கொண்டு, “என்ன குழந்தை காவ்யா?” எனக் கேட்டான்.
ஏளனமாக சிரித்த காவ்யா, “குழந்தை பிறந்து ரெண்டு வருஷத்துக்கு மேல ஆகியும், குழந்தையோட அப்பாவுக்கு குழந்தை ஆணா பெண்ணான்னு தெரியலை. இதுக்கு மேல தெரிஞ்சி என்ன செய்யப் போறார்?” என நக்கலாக கேட்டாள்.
“குழந்தை பிறந்ததே எனக்கு தெரியாது. அப்புறம் எப்படி ஆம்பள புள்ளையா, பொம்பள புள்ளையான்னு தெரியும். இத மறைச்ச குழந்தையோட அம்மாவை என்ன பண்றது?” என ஆயாசத்துடன் கேட்டான் நந்தா.
“நான் பிரக்னண்டா இருக்கிறது தெரிஞ்சும் எங்கேயோ ஓடி ஒளிஞ்ச உனக்கு, குழந்தை பிறந்தது மட்டும் தெரியாதா? நீ அம்மாகிட்ட சொன்ன கதையை அவங்க வேணா நம்பலாம். நான் நம்ப மாட்டேன்” என்றாள் காவ்யா.
“நீ நம்பலங்கிறத்துக்காக உண்மை பொய்யாகிடாது. என்னை நம்பு காவ்யா” என்றான் நந்தா.
“என் அப்பா ஒன்னும் பொய் சொல்ல மாட்டார். உனக்கு தெரியும்னு அவர் சொன்னார்” என்றாள் காவ்யா.
“உன் அப்பாவை நம்புவ, என்னை நம்ப மாட்ட. அப்படித்தானே. போகட்டும்” என்றவன், பின் “உனக்கு நார்மல் டெலிவரியா? சிசேரியனா” எனக் கேட்டான்.
மௌனத்தையே பதிலாக தந்தாள் காவ்யா. ஒரு பெருமூச்சை விட்டவன் எழுந்து அவளருகில் வந்து, அவள் இடையோடு சேர்த்தணைத்தான். அவள் அவனிடமிருந்து விடுபடத் திமிறிக் கொண்டிருந்தாள். அவள் காதுக்கு அருகில், “என்ன நீ சொல்லலைன்னா எனக்கு தெரியாம போய்டுமா? நீ சொல்ல வேண்டாம். நானே தெரிஞ்சுக்கிறேன்” என்றவன், ஒரு கையால் அவளை அணைத்திருந்ததை விலக்காமல், மறு கையால் அவளது வயிற்றுப் பகுதியில் இருந்த புடவையை விலக்க, “நார்மல் டெலிவரிதான்” என பல்லை கடித்துக்கொண்டே கூறி, அவனிடமிருந்து போராடி விலகினாள். விலகியவள் உடனே தன் புடவையையும் சரிசெய்துகொண்டாள். சிரித்துக் கொண்டவன், “என்ன குழந்தை? குழந்தை பேர் என்ன?” எனக் கேட்க, முறைத்துக் கொண்டே, “ஆண் குழந்தை, பேர் அர்ஜுன்” என்றாள்.
“அர்ஜுன்” என ஒருமுறை முணுமுணுத்து தன் மகனை மீண்டும் பார்த்தான் நந்தா. தூக்கத்தில் புரண்டு படுத்தான் அர்ஜுன். அவனை ரசித்தவன் காவ்யாவை நோக்கி, “நீ பிரக்னண்டா இருந்தது எனக்கு தெரியாது” என்றான். ‘நீ சொல்வதை நான் நம்ப மாட்டேன்’ என்பதாக முகத்தை திருப்பிக் கொண்டாள் காவ்யா.
“என்னை நம்புடி, நான் ஏன் பொய் சொல்லணும்?” என கெஞ்சுதலாய் நந்தா கேட்க,
“உனக்குதான் வேற பொண்ணு பார்த்து வச்சிருக்காங்களே, அப்புறம் ஏன் இங்க வந்து என் நிம்மதியை கெடுக்கிற?” என கேட்டாள் காவ்யா.
“என்ன உளர்ற?”
“நான் ஒண்ணும் உளறல. நம்ம ஆஃபீஸ்ல வேலை பார்க்கிறாளே ஆர்த்தி. அவ உன் ரிலேட்டிவாமே, அவளே சொன்னா. நாம ப்ராஜெக்ட்ட சேஞ்ச் பண்ணிக்குவோமா, எனக்கும் உன் ப்ராஜெக்ட் ஹெட்டுக்கும் சீக்கிரம் கல்யாணம் ஆகப்போகுது. நாங்க ஒருத்தரை ஒருத்தர் புரிஞ்சுக்க உதவியா இருக்கும் அப்படின்னு கொஞ்சம் கூட வெக்கமே இல்லாம ஈன்னு பல் இளிசிச்சிக்கிட்டு வந்து கேட்டா” என்றாள் காவ்யா. அவள் சொன்ன விதத்தில் பொறாமையின் சாயல் அப்பட்டமாக தெரிய, சிரிப்பை அடக்கிக் கொண்டவன், “அப்படியா நீ சேஞ்ச் பண்ணிகிட்டியா?” என நக்கலாக கேட்டான்.
“ஓ…. சேஞ்ச் பண்ணலைன்னு ரொம்ப வருத்தப்படுற போல” என்றவள், “நான் ஆஃபீஸ்ல வேலை பார்க்கிறேனா, இல்லை புரோக்கர் வேலை பார்க்கிறேனா?” என மெலிதாக தனக்குள் முணுமுணுக்க, அவளது முணுமுணுப்பில் கோவம் வந்தாலும், அவளிடம் தன் கோவத்தைக் காட்டாமல், “பழசை எல்லாம் மறந்திடலாம், யாரு மேல தப்புன்னு எல்லாம் ஆராயாம எல்லாத்தையும் மறந்துட்டு புதுசா லைஃபை ஆரம்பிக்கலாம் காவ்யா. என் மேல தப்பு இருக்கிறதா நினைச்சா நான் மன்னிப்பு கேட்டுக்குறேன். எனக்கு என் பொண்டாட்டியும் என் பிள்ளையும் வேணும்” என்றான்.
‘பழசு’ என்றதில் என்னென்ன காவ்யாவின் நினைவுக்கு வந்ததோ, “எதை மறக்க சொல்ற? எதையும் என்னால மறக்க முடியாது. என்னை விட்டுட்டு போனதான. போன நீ திரும்பி வர வேண்டாம், நீ இல்லாமலேயே என்னால வாழ முடியும்” என்றாள்.
வெறுமையாக சிரித்தவன், “நான் இல்லாம உன்னால வாழ முடியும். நீ இல்லாம என்னால வாழ முடியல காவ்யா” என்றான்.
“ஏன் இந்த மூணு வருஷம் நீ வாழல? அதே மாதிரி இனிமேலும் வாழு. இப்போ இடத்தை காலி பண்ணு” என்றாள்.
ஒரே நாளில் எல்லாவற்றையும் சரி படுத்தி விட முடியாது என்றெண்ணியவனாய் மனமே இல்லாமல், தன் மகனையும் மனைவியையும் மற்றுமொருமுறை பார்த்தவன் “இப்போ போறேன். ஆனா உன்னையும் என் மகனையும் இனியும் விடமாட்டேன்” என கூறிவிட்டு அங்கிருந்து வெளியேறினான்.
வீட்டிற்கு வந்த நந்தாவுக்கு சாப்பாடு எடுத்து வைத்தார் சாந்தி. வாசுகி இன்னும் வீட்டில்தான் இருந்தாள். பிரபு அவளை விட்டு விட்டு சென்று விட்டான் போலும். அமைதியாக உணவருந்திக் கொண்டிருந்தான். வாசுகியும், கீர்த்தியும் அவனுடன் சேர்ந்தமர்ந்தே உணவருந்தினர்.
“அண்ணா நீ பாட்டுக்கு காலையில கோவிச்சுக்கிட்டு அப்படியே போயிட்ட, அவர் என்ன நினைச்சிருப்பார்?” எனக் கேட்டாள் வாசுகி.
‘திருப்பியும் சாப்பிடும் போதுதான் அண்ணன் கிட்ட இப்படி பேசணுமா?’ என பார்த்திருந்தாள் கீர்த்தி.
“நான் அப்புறமா ஃபோன்ல பேசறேன் மா” என்றான் நந்தா.
“நாங்க கேட்டதுக்கு இன்னும் நீ பதில் சொல்லவே இல்லையே?” என மீண்டும் வாசுகி கேட்க, காலையில் நடந்ததை கூறுகிறாள் என்பதை உணர்ந்தவன், “நான்தான் காலையிலேயே சொல்லிட்டேனே. எனக்கு இந்த ஜென்மத்துல ஒரு கல்யாணம்தான். அது முடிஞ்சிருச்சு. இதுக்கு மேல யாரும் எதுவும் பேச வேண்டாம்” என்றான்.
“அவங்கதான் நீ வேணாம்னு உன்னை விட்டுட்டு போய்ட்டாங்களே. நீ இப்படியே தனியா இருக்கப் போறியா?” எனக் கேட்டாள் வாசுகி.
“இல்ல கண்டிப்பா இப்படி தனியா இருக்க மாட்டேன். சீக்கிரம் என் பொண்டாட்டியோட சேர்ந்து வாழப் போறேன்” என்றான் நந்தா. இவர்கள் பேசுவதைக் கேட்டுக் கொண்டிருந்த சுந்தராம்பாளுக்கு ‘திக்’ என்று இருந்தது. ‘என்ன அந்தப் பிடாரியை திருப்பி கூட்டிட்டு வரப் போறானா?’ என அதிர்ச்சியடைந்து நின்றார்.
எல்லோருமே அதிர்ச்சியில்தான் இருந்தனர். கைகழுவி விட்டு அந்த நந்தா அறைக்கு செல்ல தயாராக, “உங்களுக்குள்ளதான் பிரச்சனை ஆச்சே?” என தயக்கமாய் கேட்டாள் வாசுகி.
திரும்பாமலேயே நின்றவன், “பிரச்சனை ஆனா என்ன? திரும்பி சேர்ந்து வாழ கூடாதா?” என்றவன் திரும்பி நின்று, “எங்களுக்கு ஒரு பையன் இருக்கான் 2 வயசுல” என்றான். எல்லோரும் இன்னும் அதிர்ந்து அவனை பார்க்க, “கீர்த்தி சாப்பிட்டுட்டு மேலே வா” என தன் தங்கையிடம் கூறி விட்டு அவன் அறைக்கு சென்று விட்டான்.
கீர்த்தி தவிர மற்ற மூவரும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொள்ள, “அண்ணனோட சந்தோஷமே அண்ணிதான். அத புரிஞ்சுக்காம ஏன் எல்லோரும் அவரை போட்டு படுத்துறீங்க?” என கேட்டாள் கீர்த்தி.
“சட்டப்படி முதல் மனைவி இருக்கும் போது, நீங்க நினைக்கிறது மாதிரி ரெண்டாவது கல்யாணம் எல்லாம் பண்ண முடியாது. படிச்சிருக்கதானே உனக்கு தெரியாதா?” என கேட்டாள் கீர்த்தி.
“எல்லாம் எனக்கு தெரியும். அண்ணன் வேணாம்னுதானே விவாகரத்து பத்திரத்தில் கையெழுத்து வாங்கினாங்க. அப்புறம் என்ன?” எனக் கேட்டாள் வாசுகி.
“பத்திரத்தில் கையெழுத்து போட்டா உடனே விவாகரத்து ஆயிடுமா? இன்னும் சட்டப்படி அண்ணிதான் அண்ணனோட மனைவி. நீங்க பைத்தியக்காரத்தனமா ஏதாவது பேசாம அண்ணனை அவர் இஷ்டத்துக்கு விடுங்க. அவர் வாழ்க்கையை அவர் பாத்துக்குவார்” எனக்கூறிவிட்டு அண்ணனை பார்க்க மேலே சென்றாள் கீர்த்தி.
“என்னங்கடி… இவன் புள்ள அது இதுன்னு சொல்றான். அப்போ திரும்ப அவளை இங்க கொண்டு வரப் போறானா?” எனக் கேட்டார் சுந்தராம்பாள்.
“அவ திரும்பி இங்கே வந்தா ஓவரா ஆட்டம் போடுவா. நம்மள அடக்கி வைப்பா. நான் சொல்றமாதிரி ராணியை இங்கே மருமகளா ஆக்கினா காலத்துக்கும் நாம நிம்மதியா நல்லா இருக்கலாம்” என்றார் சுந்தராம்பாள்.
“ரெண்டு பேரும் கொஞ்சம் அமைதியா இருங்க. அவனுக்கு ஒரு பையன் இருக்கிறதா சொல்றான். அவன் எப்படி விடுவான்?” என சாந்தி கேட்க,
“அந்தப் பையனை வேணும்னா அண்ணன் கூட வச்சுக்கட்டும்” என வாசுகி கூற, பதில் எதுவும் கூறாமல் சாந்தி உள்ளே சென்றுவிட்டார்.
கீர்த்தி தன் அண்ணனை பார்க்க மாடிக்கு வந்திருந்தாள். கீழே மூன்று படுக்கை அறைகளுடன் வீடு வசதியாகவே கட்டப்பட்டிருக்க, முதல் மாடியில், ஒரு ஹால், அட்டாச்டு பாத்ரூமுடன் கூடிய படுக்கையறை மட்டுமே இருந்தது. மற்ற இடமெல்லாம் மொட்டைமாடியாக இருந்தது. நந்தா வெளியேதான் நின்றிருந்தான்.
“என்ன அண்ணா?” எனக்கேட்டாள் கீர்த்தி.
“கீர்த்தி நல்லா யோசிச்சு சொல்லு. பிரச்சனை ஆனதுக்கு அப்புறம் காவ்யாயோட அப்பா இங்கே எப்பவாவது வந்தாரா?” எனக் கேட்டான் நந்தா.
“நன்றாக யோசித்தவள், நான் வீட்டில இருக்குறப்ப வந்தது கிடையாது. ஆனா இல்லாதப்போ வந்தாரான்னு தெரியலை” என்றாள்.
“காவ்யா பிரக்னண்டா இருந்த விஷயம் இங்கே வேறு யாருக்கும் தெரியுமா?” எனக் கேட்டான். அவனை குழப்பத்தோடு பார்த்தவள், “இல்லனா உங்களுக்கு குழந்தை இருக்கிற விஷயம் இப்பதான் எல்லோருக்கும் தெரியும்னு நினைக்கிறேன்” என்றாள்.
இன்று தான் காவ்யாவை சந்தித்ததில் இருந்து காமாட்சி கூறியது வரை அனைத்தையும் அவளிடம் கூறியவன், “உனக்கு ஏதாவது தெரியவந்துச்சுன்னா என்கிட்ட சொல்லு” என்றான்.
சரியென்றவள் “குழந்தை பேர் என்னண்ணா? யாரு மாதிரி இருக்கான்? உன்ன மாதிரியா? அண்ணி மாதிரியா?” எனக் கேட்டாள்.
“அவன் பேர் அர்ஜுன். என்ன மாதிரி தான் இருக்கான். நிறம் உன் அண்ணி மாதிரி போல” என்றவன் முகம் இப்போது மகிழ்ச்சியைத் தத்தெடுத்திருக்க, “சீக்கிரம் உங்க கூட அண்ணி சேர்ந்து வாழுவாங்க” எனக்கூறி சென்றாள் கீர்த்தி.
வானத்தில் தெரிந்த வெள்ளிநிலவை நந்தா பார்க்க, அவன் நெஞ்சில் வெள்ளிநிலவாய் நின்றாடினாள் காவ்யா.