“ஹார்லிக்ஸ் குடி கீர்த்தி.” என்ற அருணா டம்ளரில் ஹார்லிக்ஸ் விட்டுக் கொடுக்க… நவீனா மகளுக்கு அதைக் குடிக்கக் கொடுத்தார். கீர்த்திப் படுத்தபடி தான் குடித்தாள். 


குடித்துவிட்டு அவள் மீண்டும் உறங்கி விட… அருணாவுக்கு நிம்மதியாக இருந்தது. வெளியே வந்து தம்பியை அழைத்துச் சொன்னாள். 


வினோத் வரும் போது மாற்று உடை எடுத்து வந்திருக்க… நவீனா அறையில் இருந்த குளியல் அறையில் குளித்துவிட்டு வர.. அருணா அவருக்கு உணவுப் பரிமாறினாள். 


நவீனா மூன்று இட்லிகளை மட்டும் உண்டுவிட்டு போதும் என்றவர், தான் போய்த் தர்மாவை அனுப்புவதாகச் சொல்லி வெளியே சென்றார். 


“நீங்க போய்ச் சாப்பிட்டு வாங்க. நான் இங்க இருக்கேன்.” என அவர் சொல்ல… தர்மாவும் சரியென்று கிளம்பினான். 


அவன் வந்து கீர்த்தியையும் தொட்டிலில் இருந்த மகனையும் பார்த்தவன், அருணா பரிமாற உண்டான். வினோத் அவர்கள் வீட்டிலேயே உண்டுவிட்டு வந்தாகச் சொன்னான். தர்மா உண்டதும் உடனே கிளம்பி விட்டான். அவனுடன் வினோத்தும் சென்றான். 


மதிய உணவை எடுத்துக் கொண்டு ஸ்ருதியும், சௌமியாவும் காரில் வந்தனர். அவர்களும் அங்கே முதலில் சென்று குழந்தையைப் பார்த்து விட்டு இங்கே வந்தனர். அப்போதும் கீர்த்தி உறங்கிக் கொண்டுதான் இருந்தாள். 


சௌமியா பார்த்துவிட்டு உடனே தாங்கள் வந்த காரிலேயே கிளம்பி விட… ஸ்ருதி மட்டும் இருந்தாள். அருணா நவீனாவை உண்ண சொல்ல… 


“கீர்த்திக் காலையில இருந்து சாப்பிடலை, அவள் சாப்பிடட்டும் நான் சாப்பிடுறேன்.” என்றவர், “நீ சாப்பிடு மா…” என அவர் அருணாவை சொல்ல… அருணா தனக்கு எடுத்துக் கொண்டு உண்டாள். 


அவள் உண்டு முடித்த போது கீர்த்தி எழுந்து விட்டாள். எழுந்ததும் குழந்தைகளைத் தான் கேட்டாள். ஒன்று மட்டும் இருக்க… இன்னொரு குழந்தை எங்கே என்பது போல அவள் பார்க்க…
எதோ செக்கப் பண்ணுனும்னு சொல்லி எடுத்திட்டு போயிருக்காங்க. தர்மாவும் கூடத்தான் இருக்கான் என்றதும் கீர்த்தி அமைதியாகி விட்டாள்.
நர்ஸ் வந்து கீர்த்தியை சாய்வாக உட்கார வைத்து விட்டு செல்ல… அவள் குழந்தையைக் கேட்க, நவீனா அவள் மடியில் வைத்தபடி அவர்தான் பிடித்துக் கொண்டு இருந்தார். இன்னும் குழந்தையைத் தூக்க கூட அவளுக்குத் தெம்பு இல்லை. 


“நீ முதல்ல சாப்பிடு கீர்த்தி. அப்பத்தான் குழந்தையைத் தூக்க கூடத் தெம்பிருக்கும். நாளையில இருந்தாவது நீ பால் கொடுக்கணும்.” என நவீனா சொல்லிவிட்டு குழந்தையை ஸ்ருதியிடம் கொடுத்துத் தொட்டிலில் போட சொன்னார். 


அருணா உணவை தட்டில் போட்டு பிசைந்து ஸ்பூன் போட்டுக் கொடுக்க…. அதை வாங்கிக் கீர்த்திக்கு ஊட்டி விட்டார். பசியில் இருந்திருப்பாள் போல முழுவதையும் உண்டு விட்டாள். 


கீர்த்திக்கு உண்டதும் உட்கார்ந்திருக்கவே முடியவில்லை. அவள் படுத்து உறங்கி விட… எல்லோருக்கும் நிம்மதியாக இருந்தது. 


காலையில் போலத் தான் உண்டதும், நவீனா சென்று மருமகனை அனுப்பி வைத்தார். தர்மா உண்டுவிட்டு சென்ற சிறிது நேரத்திற்க்கெல்லாம் கீர்த்தி எழுந்து விட்டாள் .குழந்தைகளைப் பார்க்க.. அப்போதும் ஒரு குழந்தை மட்டும் இருக்க… எங்கே என்றாள். 


இந்த முறை சமாளிக்க முடியாமல் அருணா திணற… 


“என்கிட்டே எதையாவது மறைக்கிறீங்களா… என் குழந்தை இப்ப இங்க வரணும்.” என்றவள், “எங்க மா என் குழந்தை? என்ன ஆச்சு?” என அந்த அறையே அதிர்வது போலக் கத்தினாள். 


“பத்திரமா இருக்கு கீர்த்தி. நீ டென்ஷன் ஆகாத.” என்றார் நவீனா. அதை அவள் காது கொடுத்து கேட்க வேண்டும் அல்லவா… 


இவளுக்கு எதாவது ஆகி விடுமோ என அருணாவுக்குப் பயமாகி விட்டது. இவளுக்கு எதாவது ஆகினால் தர்மா தங்களைத் தொலைத்து விடுவான் எனத் தெரியும், ஸ்ருதி நீ போய்த் தர்மாவை வர சொல்லு என அனுப்பி வைத்தாள். 


ஸ்ருதி தர்மாவுக்குப் போன் செய்து பேசியபடியே சென்றாள். பாதி வழியில் அவளை எதிர்கொண்டவன்,” நீ இங்க இரு மா…” எனச் சொல்லிவிட்டுச் சென்றான்.

“நான் இப்ப என் குழந்தையைப் பார்க்கணும்.” என் அதிலேயே கீர்த்தி நிற்க… தர்மா உள்ளே நுழைந்தான்.

“ஹே… நீ எழுந்திட்டுயா?” எனச் சாதாரணமாகக் கேட்டவன் அவளை நெருங்க, அங்கேயே நில்லுங்க என்பது போலக் கைக் காட்டியவள், “என் குழந்தை எங்கே?” எனக் கேட்க,


“பொறுமையா கேளு கீர்த்தி.” என்றவன் குழந்தையை இன்குபேட்டர் அறையில் வைத்திருப்பதாகச் சொல்ல… 


“என் குழந்தையை எடுத்திட்டு போனா என்கிட்டே சொல்லிட்டுத்தானே எடுத்திட்டு போகணும். நான் எப்படி உங்களை நம்புறது?” எனக் கேட்டாள். 


“நான் பொய் சொல்வேனா கீர்த்தி?” எனத் தர்மா கேட்க, 


“எனக்காக நீங்க சொல்வீங்க தர்மா.” என்றால் அசராமல். உண்மையில் கீர்த்திக்காக என்றால் தர்ம பொய் கூடச் சொல்வான். தன்னை எவ்வளவு புரிந்து வைத்திருக்கிறாள் என அந்த நேரத்திலும் தர்மாவுக்கு வியப்பு தான்.


“நான் மயக்கத்தில தான் இருந்தேன். செத்து ஒன்னும் போகலை… என்கிட்டே சொல்லிட்டு குழந்தையை எடுத்திட்டு போயிருக்கலாமே…. நீங்க மட்டும் பொய் சொல்லி இருந்தீங்க… உங்களை நான் கொன்னுடுவேன் சொல்லிட்டேன்.” என்றால் ஆத்திரமாக. 


“கீர்த்தி அப்படியெல்லாம் பேசாத…. குழந்தை நல்லா இருக்கு. நாங்க சொல்றதை நம்பு…” என்றார் நவீனா. 


“அப்ப நான் இப்பவே பார்க்கணும்.” என்றாள். 


“இப்ப முதல்ல உன்னால நடக்க முடியுமா? அதோட அங்க நம்ம குழந்தை மட்டும் இல்லை…. மத்த குழந்தைகளும் இருக்கு. நம்மகிட்ட இருந்து அவங்களுக்கு எந்த நோய் தொற்றும் போகக் கூடாது கீர்த்தி.” என்றான் தர்மா. 


“இதுவும் இல்லை.. அதுவும் இல்லை. அப்ப என்னை என்னதான் பண்ண சொல்றீங்க?” எனக் கீர்த்தி இன்னும் கத்த… 


“குழந்தையோட நல்லதுக்குதான் அங்க வச்சிருக்காங்க. அதை நினைவில் வை. அமைதியா இரு கீர்த்தி. நம்மகிட்ட கையில இருக்கக் குழந்தையாவது ஒழுங்கா பார்க்கணும். நான் உன்னைப் பார்க்கிறதா… அங்க குழந்தைகிட்ட இருக்கிறதா?” எனத் தர்மா அவளுக்குப் புரியும்படி கேட்க, 


“நீங்க அங்கப் போங்க.” என்றாள். 


“அப்ப நீ அமைதியா இருக்கணும். அப்பத்தான் என்னால அங்க இருக்க முடியும்.” என்றதும், 


“சரி நான் இருக்கேன். நீங்க போங்க.” என்றாள். தர்மா அங்கேயே நிற்க… ப்ளீஸ் போங்க என்றாள். 


அவன் சென்ற பிறகு கீர்த்தி அமைதியாக இருந்தாலும் யாரோடும் பேசவில்லை. 


குழந்தைகள் சீக்கிரமே பிறந்ததால் எதாவது உடல்நலக் குறை இருக்குமோ என அவளுக்குப் பயம். அவள் உடல் நடுங்குவது பார்த்து, “டென்ஷன் ஆகாத கீர்த்திக் குழந்தை நல்லா இருக்கு. பயப்படாம இரு.” என்றார் நவீனா. 


அவள் கத்தியதில் அதிக உதிரப் போக்கு ஏற்பட்டிருக்க… நர்சை கூப்பிடுங்க என்றாள். 


நர்ஸ் வந்து அவளைப் பாத்ரூம் அழைத்துச் சென்று பேட் மாற்றிவிட்டு செல்ல… அருணா அவளுக்கு ஹார்லிக்ஸ் எடுத்து வந்து கொடுத்தாள். அப்போது தேவையாக இருக்க… ஒன்றும் சொல்லாமல் குடித்தாள். குடித்த பிறகே தெம்பாக உணர்ந்தாள். 


தொட்டிலில் கிடந்த குழந்தையைக் காட்டி, கட்டிலில் அவள் அருகில் போட சொன்னாள். இந்தக் குழந்தையாவது என்னுடன் இருக்கட்டும் என்பது போல… குழந்தையைச் சுற்றி கைபோட்டுக் கொண்டாள். அதன் பிறகு அவள் உறங்கவே இல்லை… 


திருமணமாகி இத்தனை ஆண்டுகளில் அவள் தர்மாவை இப்படிக் கத்தியதே இல்லை. தர்மாவுக்கு அதெல்லாம் வருத்தமே இல்லை. மனைவி இன்னும் குழந்தைக்கு என்ன ஆனதோ எனப் பயத்தில் தான் இருப்பாள் என அவனுக்கு அதுதான் கவலையாக இருந்தது. 


மாலையில் குழந்தையை உள்ளே சென்று பார்க்கலாம் என மருத்துவர் சொல்ல… அருணாவை குழந்தை அறையின் முன்பு விட்டு, வீட்டிற்குக் குளிப்பதற்காகச் சென்றான். 


வீட்டிற்குச் சென்றதும் நேராகக் குளிக்கச் சென்றவன், எப்படி இருக்காங்க என்ற ரங்கநாதனிடம் நன்றாக இருக்கிறார்கள் எனச் சொல்லிவிட்டு நிற்காமல் உடனே அபியை அழைத்துக் கொண்டு வந்துவிட்டான். மொத்தமே ஒரு மணி நேரம் கூட ஆகி இருக்காது. 


அவன் வந்ததும் உள்ளே சென்று குழந்தையைப் பார்க்கலாம் என நர்ஸ் சொல்ல.. வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்து கொண்டு அபியையும் உடன் அழைத்துக் கொண்டு சென்றான். 


குழந்தை கதகதப்பான இன்குபேட்டர் அறையில் பாதுக்காப்பாக இருந்தது. அங்கு நிறையக் குழந்தைகள் இருக்க… அபிக்கு யார் அவள் தம்பி எனத் தெரியவில்லை. தர்மா தான் அவளுக்குக் கட்டினான். 

குழந்தையின் அருகே மண்டியிட்டு அமர்ந்தவன். மகளை தன் மடியில் வைத்துக் கொண்டு, “இங்கப் பாருங்க பேபி. உங்களைப் பார்க்க உங்க அக்கா வந்திருக்காங்க.” என்றான். 

அபிக்கு பரவச நிலைதான் இவ்வளவு குட்டியாக ஒரு குழந்தையை அவள் இப்போதுதான் பார்க்கிறாள். 

“பர்ஸ்ட் குட்டியா இருந்து அப்புறம் பெரிசாகிடுவான்.” என அவளே சொல்லிக் கொண்டாள்.

“சீக்கிரம் வந்திடுங்க பேபி. உங்க அம்மாவை சமாளிக்க முடியலை.” என்றான் மகனின் அருகில் குனிந்து. தங்களால் மற்ற குழந்தைகளுக்கு எதுவும் தொந்தரவு வந்துவிடக் கூடாது என அவன் உடனே வெளியே வந்து விட… நர்ஸ் அவனை ஆச்சர்யமாகத்தான் பார்த்தார். இதே மற்றவர்களைப் பிடித்து வெளியே தள்ள வேண்டும். 


அருணாவை அங்கேயே இருக்கச் சொல்லிவிட்டு அபியை அழைத்துக் கொண்டு அறைக்குச் சென்றான். 


தந்தையும் மகளும் ஒன்றாக வந்து நிற்க… கீர்த்தி அவர்களையே பார்க்க… “நான் சொன்னது தான் நம்பலை. அபி சொன்னா நம்புவ தானே…” என்றதும், கீர்த்தி அபியை பார்த்தாள். கண்டிப்பாக மகள் பொய் சொல்ல மாட்டாள். அவளுக்குப் பொய் சொல்லவும் தெரியாது. 


“நான் தம்பியைப் பார்த்தேன் மா…” என்றவள், இங்கேயும் தொட்டிலில் அதே போல ஒரு குழந்தை இருக்க… குழம்பி விட்டாள். 


“ஹே இவன் இங்க இருக்கான்… அதுக்குள்ள இங்க எப்படி வந்தான் என வியந்து கேட்க, 


“ரெண்டு தம்பிகள் டா உனக்கு.” எனத் தர்மா சொன்னதும், அபி வாய்பிளந்து நின்றாள். 


“ரெண்டு பேரும் ஒரே மாதிரி இருக்காங்க மா… எப்படி மா யாருன்னு கண்டுபிடிப்போம்.” என்ற அவளின் கவலையைப் பார்த்து கீர்த்திக்கு கூடச் சிரிப்பு வந்தது. மகளை அழைத்துத் தன் அருகில் படுக்கையில் வைத்து விசாரணை நடத்தினாள். 


சும்மா தான் மா படுத்திருக்கான் என்றாலும் நம்பவில்லை. ட்யுப் எதுவும் போட்டிருக்காங்களா எனக் கேட்க, 


“கையில தான் எதோ போட்டிருந்தாங்க. வேற குட்டி பாப்பாக்கு எல்லாம் நிறையப் போட்டிருந்தாங்க. இவனுக்கு இல்லை. ஆனா ரொம்பக் குட்டியா இருக்கான்.” என்றாள். 

இப்போதாவது நீ நிம்மதியாக இருப்பாயா என்பது போல தர்மா பார்த்தான்.


ஸ்ருதியோடு அபியை வீட்டுக்கு அனுப்ப… கிளம்ப மனமில்லாமல் தான் சென்றாள். மகள் சொன்னது கேட்ட பிறகே தைரியம் வந்து கீர்த்தி எழுந்து உட்கார்ந்தாள். மாலை பாலுடன் வந்த சிற்றுண்டியும் உண்டுவிட்டு அவள் இருக்க.. நர்ஸ் வந்து குழந்தைக்குப் பால் கொடுக்கப் பழக்கினார். 


அன்று இரவு சூரியா வசீகரன் விஷால் என மூவரும் வந்திருக்க… இரவு வெகு நேரம் இருந்தனர். தர்மா அவர்களைக் கிளம்பச் சொல்ல…. நவீனா மகளுக்குத் துணையாக அங்கேயே இருக்க.. அருணா விஷாலுடன் கிளம்பி சென்றாள். 

ஆயிரம் கைக்கொண்டு மறைத்தாலும் ஆதவன் மறைவது இல்லை என்பது போல… தர்மாவைப் பற்றி இல்லாததும் பொல்லாததும் சொல்லி கேட்டிருந்தது எல்லாம் சொத்து பிரித்த அன்றே சுக்குநூறாக உடைந்துவிட்டது. அவன் வரையில் அவன் சரியாகவே இருந்திருக்கிறான், நாம்தான் அவரை தவறாக புரிந்து கொண்டோம் என்பதை தம்பிகள் உணர்ந்திருந்தனர். இன்னுமே தர்மா மீதிருந்த மதிப்பும் மரியாதையும் அதிகமாகியது. அதனால் வந்த மாற்றம் தான்.


மறுநாள் காலை உணவு உண்டுவிட்டு வந்த தர்மா, இன்குபேட்டர் அறை முன்பு கவலையுடன் உட்கார்ந்திருந்த நாவீனாவை பார்க்க அவனுக்குக் கஷ்டமாக இருந்தது. ஒரு நாளிலேயே துவண்டு போனது போல இருந்தார். 


கான்டீன் சென்று டீ வாங்கி வந்தவன், அவரிடம் ஒன்று கொடுத்துவிட்டு, ஒரு இருக்கை விட்டு அவரைப் பார்ப்பது போல் அமர்ந்தான். 


“நான் உங்ககிட்ட சாரி சொல்லணும். வளைகாப்பு அன்னைக்கு நீங்க கேட்டு நான் கீர்த்தியை விட மாட்டேன் சொல்லிட்டேன். நான் அப்படிச் சொல்லி இருக்கக் கூடாது. என்ன இருந்தாலும் உங்களுக்குத் தான் உங்க மகள்கிட்ட முதல் உரிமை. அம்மாவுக்கு மேல யார் இருக்க முடியும்.” 


“டாக்டர் கீர்த்திக்கு ஆபரேஷன் பண்ணும்னு சொல்லி இருந்தாங்க. அதுவும் கடைசி நேரத்தில வேற ஹாஸ்பிடல்ல பார்க்கிறது ரிஸ்க் அந்த டென்ஷன்ல பேசிட்டேன் சாரி.” என்றான். 


அவன் மன்னிப்பு கேட்க வேண்டும் என அவசியமே இல்லை. நான் செய்வது தான் சரி என்றில்லாமல்… தன் செயல் தவறு என உணரும் போது மன்னிப்புக் கேட்கவும் தயங்காத அவனின் பண்பு பார்த்து நவீனாவுக்கு வியப்பே… 


அப்போது கோபம் இருந்தது என்னவோ உண்மை. ஆனால் அவருக்கு இப்போது அவன் மீது துளி கூடக் கோபமில்லை. மகளை அவன் எந்த அளவிற்கு உயிராகப் பார்த்துக்கொள்கிறான் என அவர்தான் நேரிலேயே பார்த்தாரே… ஒரு பெற்றவர்களுக்கு இதை விட வேறு என்ன வேண்டும். தன் மகளை நன்றாக வைத்துக்கொள்ள வேண்டும் என்பது தானே அவர்களின் எதிர்பார்ப்பாக இருக்கும். 


“நீங்க கீர்த்தீக்காகத்தான் சொன்னீங்க. எனக்கு அது இப்ப புரியுது.” என்றார்.