குழந்தை எப்போது பிறக்கும் என்றெல்லாம் யாராலும் தீர்மானிக்க முடியாது. அது நம் கையில் இல்லை. அடுத்த இரண்டாவது நாளே அதிகாலையில் கீர்த்திக்கு வலி எடுக்க… தர்மா மருத்துவரை கைப்பேசியில் அழைத்துச் சொல்ல…
“உடனே ஹாஸ்பிடல் வந்திடுங்க. நானும் வந்திடுறேன். எல்லாம் நல்லபடியா நடக்கும்.” என்றார்.
முப்பத்தி ஒன்பது வாரங்கள் முழுமையான கர்ப்ப காலம். ஆனால் கீர்த்திக்கு முப்பத்தியாறு வாரங்கள் தான் ஆகியிருந்தது. இன்னும் ஒரு வாரம் சென்று என்றால் கூடப் பரவாயில்லை. குறை பிரசவம் என்றில்லை ஆனால் இன்னும் ஒரு வாரம் சென்றிருந்தால் குழந்தைகளின் வளர்ச்சி முழுமையாக இருந்திருக்கும்.
அதைச் சொல்லி கீர்த்திப் பயந்து கொண்டே வர… தர்மா கீர்த்திக்கு அத்தனை தைரியம் சொல்லி அழைத்துச் சென்றான். அவளுடையே தைரியமே அவன்தானே… செல்லும் வழியிலேயே அவள் அம்மாவுக்கும் அழைத்துச் சொல்லிவிட்டனர். அவர்களும் ஒரு மணி நேரத்தில் வந்துவிட்டனர்.
அடுத்து மூன்று மணி நேரம் கீர்த்திக்கு நல்ல வலி. அவள் அலறுவதைப் பார்த்து நவீனா தாங்க முடியாமல் வெளியே சென்றுவிட்டார். பிள்ளை பெறுவதற்குள் தர்மாவைத்தான் ஒரு வழியாக்கினாள்.
அபிநயா ஒருத்தியே என்றும் அவர்களின் இளவரசி என்று தீர்மானிப்பது போல… இரண்டு ஆண் குழந்தைகளை அடுத்தடுத்துச் சுகப்பிரசவத்திலேயே கீர்த்திப் பெற்றெடுத்தாள்.
ஒரே மாதிரி இரட்டையர்கள். ரொம்பவும் சின்னதாக இருந்தனர். தர்மா தான் கையில் வாங்கிக் கீர்த்திக்குக் காட்டினான். அத்தனை நேர வலி போராட்டம் எல்லாம் குழந்தைகளைப் பார்த்ததும் கீர்த்திக்கு மறந்து போனது…
“என் வயிறு எவ்வளவு பெரிசா இருந்தது. ஆனா இவங்க இவ்வளவு சின்னதா இருக்காங்க.” என்ற மனைவியைப் பார்த்து புன்னகைத்தவன்,
“ரெண்டு குழந்தைகள் இல்ல டா… இதுக்கே நீ எவ்வளவு கஷ்ட்டபட்ட.” என்றான்.
அது என்னவோ உண்மைதான். அத்தனை நேர வலி… அதுவும் இரட்டை குழந்தைகளைப் பெற்றெடுத்தது எனக் கீர்த்தி மிகவும் அசந்து போயிருக்க… பிரசவம் பார்த்த அறையிலேயே அவளைச் சுத்தபடுத்தி முடிப்பதற்குள் மயக்கமா உறக்கமா என்று தெரியாத நிலைக்குச் சென்றிருந்தாள்.
வெளியே இருந்த கீர்த்தியின் பெற்றோர், ஜமுனா என எல்லோருக்கும் குழந்தைகளைக் கொண்டு வந்து காட்டிவிட்டு உடனே உள்ளே எடுத்து சென்றுவிட்டனர். இன்னும் பரிசோதனைகள் எல்லாம் முடிந்திருக்கவில்லை.
நவீனா அங்கேயே இருந்து கொள்வதாகச் சொல்ல.. சோமசேகர் மட்டும் வீட்டிற்குக் கிளம்பினார். “வினோத் கிளம்புறதுக்கு முன்னாடி போன் செய்யச் சொல்லுங்க. எனக்குத் தேவையானது எடுத்து வர சொல்லணும்.” எனச் சொல்லி கணவரை நவீனா அனுப்பி வைத்தார்.
சிறிது நேரம் சென்று தர்மாவை மருத்துவர் உள்ளே அழைத்தார். “ஒரு குழந்தை இரண்டு கிலோ எடையுடன் ஆரோக்கியமாக இருக்க… இன்னொரு குழந்தை சற்று எடை குறைவாக இருந்தது. மேலும் எதுவும் சிக்கல் வராமல் இருக்க… அதை இன்குபேட்டரில் வைக்க வேண்டும்.” என்றார் மருத்துவர்.
தர்மா பயந்து போனான். ஒன்னும் பயப்படுற மாதிரி இல்லையில்லை என அவன் மீண்டும் மீண்டும் கேட்க,
“மூச்சு திணறல் அதெல்லாம் இல்லை தர்மா. ஆனா கொஞ்சம் பலகீனமா இருக்கான். நாம ரெண்டு நாள் கவனமா பார்த்துக்கணும் அதுக்குதான் வேற ஒன்னும் இல்லை.” என்றார் மருத்துவர்.
அப்போதே ஒரு குழந்தையை, இன்குபேட்டர் அறைக்கு எடுத்து சென்றனர். தர்மாவும் உடன் சென்றான். அது பெரிய மருத்துவமனை அடுத்த ப்ளாக்கில் தான் இன்குபேட்டர் அறை இருந்தது. அவன் வெளியவே இருக்க… குழந்தையை மட்டும் அறைக்குள் எடுத்து சென்றனர்.
தேவையான உபகரணங்களோடு ஓவ்வொரு குழந்தைக்கும் தனித் தனித் தொட்டில்கள் போல அமைப்பில் இன்குபேட்டர் இருந்தது. அங்கே வைத்தும் குழந்தையைப் பரிசோதித்தனர்.
சுவாசிக்கச் சிரமப்படும் குழந்தைக்கு ஆக்சிஜன் வசதி, பீடிங் ட்யுப் என எல்லாமே இருந்தது. உள்ளேயே இரண்டு செவிலியர்கள் எப்போதும் இருந்தனர். தாயின் வயிற்றிற்குள் இருப்பது போல குழந்தைகளை கதகதப்பாக… நோய் தொற்று எதுவும் ஏற்படாமல் பாதுகாப்பாக வைத்திருப்பார்கள்.
கீர்த்தியையும் குழந்தையும் அறையில் வந்து விட்டு சென்றனர். ஜமுனாவுக்கும் நவீனாவுக்கும் ஒன்றும் புரியவில்லை. கீர்த்திக்கு ட்ரிப்ஸ் ஏறிக்கொண்டு இருக்க… அவள் இன்னும் மயக்கத்தில் இருந்தாள்.
ஜமுனாவை இருக்கச் சொல்லிவிட்டு நவீனா தர்மாவை தேடி சென்றார். செவிலியரிடம் கேட்டு, நவீனா அங்கே செல்ல…. தர்மா அறைக்கு வெளியே நின்றிருந்தான்.
“என்ன ஆச்சு?” என அவர் கேட்க, தர்மா விவரத்தை சொல்ல…
“பயப்படுற மாதிரி ஒன்னும் இல்லையில்ல…” என அவரும் அதேதான் கேட்டார்.
“இல்லை… ஆக்சிஜன் ட்யுப் எதுவும் போடலை… அதனால பயப்படுற மாதிரி இருக்காது.” என்றவன், மனைவியைப் பற்றி விசாரித்தான். நவீனா விவரம் சொல்ல…
“அத்தை கீர்த்திக்கு இப்போ சொல்ல வேண்டாம். அவள் எழுந்து குழந்தை எங்கன்னு கேட்டா, டெஸ்ட் பண்ண எடுத்து போயிருக்காங்க மட்டும் சொல்லுங்க. அவளும் பலகீனமா இருக்கா…. குழந்தைக்கு என்னவோன்னு நினைச்சு டென்ஷன் ஆவா… இன்னைக்கு ஒருநாள் கடந்திட்டா கூடப் போதும்.” என்றான்.
“நான் இங்க இருக்கேன். நீங்க அங்க பார்த்துக்கோங்க.” என நவீனாவை அனுப்பி வைத்தவன், அங்கிருத்த இருக்கையில் உட்கார்ந்து கொண்டான். அங்கே அவனைப் போல இன்னும் சிலர் இருந்தனர்.
“அருணாவுக்கு அழைத்து விவரம் சொன்னவன், பாட்டிக்கு சொல்லு… தாத்தாக்கு குழந்தைங்க நல்லா இருக்காங்க மட்டும் சொல்லு.” என வைத்து விட்டான்.
என்ன டா இது? குழந்தை பிறந்த பிறகும் மகிழ்ச்சியாக இருக்க முடியவில்லை என அருணாவுக்கு வருத்தமாகப் போய்விட்டது.
தர்மாவுக்கும் அதே நிலைதான். அபிக்கு ஒரே நேரத்தில் இரு குழந்தைகளையும் காட்ட வேண்டும் என எவ்வளவு ஆசையாக இருந்தான். இப்போது ஒரு குழந்தை இவர்களிடத்தில், இன்னொரு குழந்தை வேறு இடத்தில் இருக்க…. நாம் நினைக்காது எல்லாம் நடப்பது தான் வாழ்க்கை.
“ரொம்பச் சீக்கிரம் எல்லாம் பிறக்கலை… ரெண்டு வாரங்கள் முன்னாடி பிறந்திருக்கு, அதனால சீக்கிரம் சரியாகிடும்.” என்ற நாயகி…
“நீ காலைலைக்கு எல்லோருக்கும் டிபன், கீர்த்திக்கு ஹார்லிக்ஸ் எல்லாம் எடுத்திட்டு ஹாஸ்பிடல் கிளம்பு.” என்றபோது, ஸ்ருதி என்ன ஆச்சு என வர… அருணா விவரம் சொல்ல… அவளுக்கும் கவலையாக இருந்தது. “அண்ணி நான் உங்க பசங்களைப் பார்த்துகிறேன். நீங்க ஹாஸ்பிடல் போயிட்டு வாங்க.” என்றாள்.
“சரி நான் கிளம்பிட்டு போன் பண்றேன்.” என அருணா சொல்ல… தன் வேலைகளை முடித்துவிட்டு வரலாம் என ஸ்ருதி வீட்டிற்குச் சென்றாள்.
“ரெண்டும் பையன்…” என அவள் உள்ளே சென்றதும் மகிழ்ச்சியாகச் சொல்ல… இரண்டுமே பையன்கள் என்றதும் சுனிதா முகம் அப்போதே மாறிவிட்டது.
“ஏன் குழந்தை பிறந்திருக்குன்னு யாருமே போன் பண்ணலை… அண்ணன் அப்படிப் பண்ணாம எல்லாம் இருக்க மாட்டாரே…” என்றான் சூரியா. ஸ்ருதி விவரம் சொல்ல…
“பண்ண பாவம் அப்படி.” எனச் சுனிதா சொல்லித்தான் இருப்பார்…
“அம்மா…” என ஆத்திரமாக இரண்டு மகன்களும் கத்தி விட்டனர்.
“எப்படி மா இப்படிச் சொல்ல உங்களுக்கு மனசு வருது?” என வசீகரனும்,
“அவர் என்ன பாவம் பண்ணார். நாம கேட்டது எல்லாம் கொடுக்கத்தான் செஞ்சார். இன்னும் உங்களுக்கு என்ன வேணும்?”
“எப்பப்பாரு எதாவது தப்புத் தப்பா சொல்ல வேண்டியது. இப்படித்தான் எங்ககிட்ட… ஆரம்பத்துல இருந்தே, அவன் எல்லாத்தையும் எடுத்துப்பான்னு சொல்லி சொல்லி… எங்களை அவர்கிட்ட நெருங்க விடாம வச்சிருந்தீங்க. ஆனா அவர் அப்படி என்ன எடுத்துகிட்டார்.”
“இனி இப்படி பேசுற வேலையெல்லாம் வச்சுக்காதீங்க.” என்றான் சூரியா காட்டமாக.
“விடுங்க டா எதோ கோபத்தில சொல்லிட்டேன்.” எனச் சுனிதா பின் வாங்க…
“கோபத்தில என்ன வேணா பேசுவீங்களா? அதுவும் அந்தக் குழந்தை என்ன பண்ணுச்சு?” என்ற சூரியா, “வசி வரியா நாம ரெண்டு பேரும் ஹாஸ்பிடல் போகலாம். அவர் என்ன நிலைமையில இருக்காருன்னு கூடத் தெரியலை?” எனச் சொல்ல…
“ஆமாம் டா… அவர் பிரச்சனையில இருந்தா கூடச் சொல்ல மாட்டார்.” என வசீகரனும் சொல்ல, இருவரும் மருத்துவமனை கிளம்பினர்.
ஸ்ருதி தன் மாமியாரை இதெல்லாம் ஒரு பிறவியா என்பது போலத்தான் பார்த்தாள்.
சௌமியாவுக்குமே அவர் பேசியது பிடிக்கவில்லை. அவளும் குழந்தை உண்டாகி இருக்கிறாள், இவர் செய்யும் பாவத்தை எங்கே சென்று தொலைப்பது, தன் குழந்தையை அது பாதித்து விட்டால் என்ற பயம் அவளுக்கு இருந்தது. அதனால் அவளும் தன் கோபத்தை வெளிப்படையாகக் காட்டிவிட்டு சென்றாள்.
“இன்னுமா குழந்தை பிறக்கலை…” எனச் சுபாவும் புலம்பிக் கொண்டிருக்க… விஷால் தர்மா வீட்டிற்குச் சென்று பார்க்கலாம் என நடந்து வந்து கொண்டிருந்தான். எதிரே சூரியாவும், வசீகரனும் ஒரே பைக்கில் வந்தவர்கள், இவனைப் பார்த்ததும் நிறுத்தி விவரம் சொல்லி,
“அருணா அக்கா சாப்பாடு எடுத்திட்டு ஹாஸ்பிடல் போகணும் சொன்னாங்கலாம். நீ இருந்து அவங்களைக் கூடிட்டு வா.” எனச் சொல்லிவிட்டு செல்ல… அண்ணன்கள் கோபம் மறந்து தன்னுடன் பேசி விட்டதில் விஷாலும் சரியென்றான்.
வீட்டிற்கு வந்து சுபாவிடம் விவரம் சொல்ல, “சரி நீ உடனே கிளம்பு.” என, விஷால் வேகமாக உடைமாற்றித் தன் வண்டியை எடுத்துக் கொண்டு தர்மாவின் வீட்டிற்குச் சென்றான்.
“நான் உன்னைத் தான் கூப்பிடனும் நினைச்சிட்டு இருந்தேன். நீயே வந்திட்ட…” என அருணா சொல்ல… விஷால் அருணாவை அழைத்துக் கொண்டு மருத்துவமனை சென்றான்.
அந்தக் காலையில் தம்பிகள் இருவரும் வந்து நின்றது தர்மாவுக்கு ஆச்சர்யமே…. அடுத்து விஷாலும் அருணாவும் வந்துவிட்டனர். “நீங்க போன் பண்ணுவீங்கன்னு பார்த்திட்டே இருந்தோம். அதுதான் நாங்களே வந்துட்டோம்.” எனச் சூரியா சொல்ல…
“ஒரு குழந்தை அங்க இருக்க, இன்னொரு குழந்தை இங்க இருக்க… எனக்கே என்ன பண்றது எப்படிச் சொல்றது ஒன்னும் புரியலை…” என்றான்.
எப்போதுமே தெளிவாக முடிவெடுப்பான் தர்மா. அவனை இப்படிப் பார்க்க எல்லோருக்கும் கஷ்டமாக இருந்தது.
“ரெண்டு நாள் தான சொல்லி இருக்காங்க. நல்லா சரியாகிட்டு வரட்டும் என்றான் வசீகரன்.
“சீக்கிரம் சரியாகும் டா தம்பி. நீ முதல்ல காபி குடி.” என அருணா தர்மாவுக்கு டம்ளர் எடுத்து காபி விட்டுக் கொடுக்க… “அவங்களுக்கும் கொடுக்கா…” என்றான்.
“நாங்க வீட்ல குடிச்சிட்டுத்தான் வந்தோம். நீங்க குடிங்க.” என்றப் பிறகே அவன் அருந்த… அவன் குடித்து முடிக்கும் வரை இருந்தவர்கள், வெளியே இருந்தே குழந்தையைக் கதவின் வழி பார்த்து விட்டு வந்து அமர்ந்தனர்.
“நீங்க கிளம்புங்க கம்பெனிக்கு போகணுமே…” எனத் தர்மா சொல்ல… கீர்த்தியையும் இன்னொரு குழந்தையையும் பார்க்க கிளம்பினர்.
“கீர்த்திக்கு தெரியாது.” எனச் சொல்லியே அனுப்பினான்.
இவர்கள் சென்றபோதும் கீர்த்தி உறங்கிக் கொண்டுதான் இருந்தாள். அருணா சென்று தொட்டிலில் இருந்த குழந்தையைத் தூக்கிக் கொண்டு வர… மற்ற மூவரும் அவளைச் சுற்றிக் கொண்டனர்.
யாரை மாதிரி இருக்கு என மூவரும் ஆராய…
“அண்ணன் மாதிரிதான் இருக்கான்.” எனச் சூரியா சொல்ல…
“இந்நேரம் இவங்களுக்கும் ரூல் புக் ரெடி பண்ணியிருப்பாரே?” என வசீகரன் சொல்ல…
“என்ன ரூல் வேணா போடட்டும். அதைப் பிரேக் பண்ண நான் சொல்லிக் கொடுப்பேன்.” என்றான் விஷால்.
“உனக்கு இதேதான் வேலை.” என்றால் அருணா.
அவர்கள் பேசிக்கொள்வது பார்த்து நவீனாவுக்கே சிரிப்பு வந்துவிட்டது. மருமகன் எப்படி அபியை வளர்கிறார் என அவரும் அறிவார் தானே…
“சரிக்கா நாங்க கிளம்புறோம். அண்ணன் இங்க இருக்கட்டும். நாங்க ஆபீஸ் பார்த்துக்கிறோம். எதாவது வேணும்னா உடனே போன் பண்ணு.” என மூவரும் கிளம்ப… அருணா தான் இங்கிருப்பதாகச் சொல்லி ஜமுனாவை விஷாலுடன் வீட்டுக்கு அனுப்பி வைத்தாள்.
அருணா நவீனாவுக்கும் காபி விட்டுக் கொடுத்தவள், அங்கிருந்த இருக்கையில் உட்கார்ந்து இருக்க.. கீர்த்திக் கண் விழித்தாள்.
கீர்த்திக்கு பயங்கிற அசதி. வளைகாப்பு முடித்து இரண்டாவது நாளே அல்லவா குழந்தை பெற்றிருந்தால்… இந்த அலுப்பு அந்த அலுப்பு என எல்லாம் சேர்ந்து கொண்டது.
அவள் முதலில் தொட்டிளைத்தான் பார்த்தாள். ஆனால் உள்ளே ஒரு குழந்தை தான் இருக்கிறது எனத் தெரியவில்லை. அருணாவுக்கும் நவீனாவுக்கும் முகத்தைச் சாதாரணமாக வைத்துக்கொள்வதே பெரிதும் கஷ்டமாக இருந்தது.