நந்தகுமார் தன் அறையின் கண்ணாடி கதவின் வழியே தெரிந்த காவ்யாவின் உருவத்தை பார்த்துக்கொண்டே, முதன் முதலாக தான் அவளை பார்த்ததை நினைவுகூர்ந்தான்.
நந்தகுமாருக்கு 28 வயது நடந்து கொண்டிருந்தது. திருமண வயதை நெருங்கி விட்டான், அவனே யாரையும் காதலித்து மணந்து கொள்ளப் போகிறான் என பயந்த சுந்தராம்பாள் தன் மகன் வழி பேத்தி ராணியை நந்தாவுக்கு திருமணம் செய்து வைத்து விடலாம் என சாந்திக்கு யோசனை வழங்கினார்.
ராணிக்கு பதினேழு வயதுதான் நடந்துகொண்டிருந்தது. பத்தாவது வரைதான் படித்திருந்தாள். பார்க்கவும் அப்படி ஒன்றும் இருக்க மாட்டாள். ஆனால் அமைதியான பெண். இதையெல்லாம் காரணம் காட்டி சாந்தி யோசிக்க, “படிப்பையும் அழகையும் வச்சி என்ன செய்யப் போற? உனக்கு ரெண்டு பொண்ணுங்க இருக்காங்க. வேற யாராவது வந்தா உன் பொண்ணுங்களுக்கு செய்ய விடுவாங்களா? இதே ராணின்னா நம்ம கைக்குள்ள இருப்பா. உன் பொண்ணுங்களுக்கும் எந்த குறையும் இல்லாம, எல்லாம் நல்லவிதமா செய்யலாம்” என சாந்தியிடம் தூபம் போட்டார் சுந்தராம்பாள்.
நந்தகுமாருக்கு ராகு-கேது தோஷம் இருந்ததால் அதே தோஷம் உள்ள பெண்ணைதான் மணமுடிக்க வேண்டும் என்று இருக்க, ராணிக்கும் ராகு கேது தோஷம் இருக்க சாந்தியும் ‘ராணியையே கல்யாணம் செய்து வைத்துவிடலாமா?’ என யோசித்தார்.
“என்னடி யோசிக்கிற?” எனக்கேட்டார் சுந்தராம்பாள்.
“இல்லம்மா…. வாசுகி, கீர்த்தி ரெண்டுபேருமே அவளை விட பெரிய பொண்ணுங்க. நந்தாவுக்கும் ராணிக்குமே வயசு வித்தியாசம் அதிகம்” என சாந்தி கூற,
“அடி என்னடி நீ….? இதெல்லாம் ஒரு காரணமா? ராணி சின்ன பொண்ணா இருந்தாலும் பார்த்தா இவங்க ரெண்டு பேரையும் விட பெரிய பொண்ணு மாதிரிதான் இருப்பா. உன் தம்பி வீட்டிலேயே எந்த பிரச்சனையும் இல்ல வயசு வித்தியாசம் பத்தி. உனக்கென்ன?” என சமாதானம் செய்து சாந்தியை சம்மதிக்க வைத்தார்.
இவர்கள் பேசிக்கொண்டிருப்பதை எதேச்சையாக அந்தப் பக்கம் வந்த நந்தகுமார் கேட்டு விட்டான்.
சாந்தி ஒத்துக்கொண்டால் நந்தகுமாரும் ஒத்துக் கொள்வான் என இருவரும் தப்புக்கணக்கு போட்டு விட்டனர். அவன் சிறுவயதிலிருந்தே யாருடனும் எதுவும் பகிர்ந்து கொள்ள மாட்டான். அதிகம் பேச மாட்டான். அதற்காகக் பேசவே மாட்டான் என்று இல்லை. தேவைப்படும் நேரங்களில் தன்னுடைய கருத்தை ரத்தினச் சுருக்கமாகவும் அழுத்தமாகவும் பதிவு செய்வான். அவனைச் சுற்றி ஒரு மாய சுவர் இருந்தது. யாரும் அவனுடன் அவ்வளவு சீக்கிரம் நெருங்க முடியாது.
ஆனால் அவனுக்கும் தன் வாழ்க்கைத் துணை பற்றிய கனவு இருந்தது. பெரிய அழகியாக இருக்க வேண்டும், பெரிய படிப்பு படித்திருக்க வேண்டும், வசதியாக இருக்க வேண்டும் என்று எந்த எதிர்பார்ப்பும் அவனுக்கு கிடையாது. ஆனால் தன் வாழ்வை பகிர்ந்து கொள்ளப் போகும் பெண் தன் மனதிற்கு கண்டிப்பாக பிடிக்க வேண்டும் என்று நினைத்திருந்தான்.
ராணியைப் பற்றி சொன்னதுமே உடனே மறுத்து விட்டான். காரணம் எதுவும் கூறவில்லை. ஆனால் முடியவே முடியாது எனத் தெளிவுபடக் கூறிவிட்டான். அவனை வற்புறுத்தினாலும் சம்மதிக்க வைக்க இயலாது என்பதை அழுத்தம் திருத்தமாக கூறியிருந்தான். சாந்தி புரிந்து கொண்டார்.
அவனே யாரையும் கொண்டு வருவதற்கு முன், தானே அவனுக்கு பிடித்தது போல எந்த பெண்ணையாவது மணமுடித்து வைத்து விட எண்ணி ஒரு தரகரிடம் பெண் பார்க்க சொன்னார். அவர் மூலம் வந்த ஜாதகம்தான் காவ்யாவின் ஜாதகம். 21 வயது நிரம்பி இருந்த காவ்யாவின் புகைப்படத்தை பார்த்த நந்தாவிற்கு அவளை பிடித்திருந்ததது. தரகருடன் சாந்தி, சுந்தராம்பாள், நந்தா ஆகிய மூவரும் காவ்யா வீட்டிற்கு ஒரு நல்ல நாளில் மாலை நேரத்தில் பெண் பார்க்கவென சென்றனர்.
கருணாகரன், காமாட்சி தம்பதியினரின் ஒரே மகள்தான் காவ்யா. அவர்களுக்கு திருமணமாகி 10 வருடங்கள் கழித்து பிறந்த காவ்யா அவர்கள் வீட்டில் மிகவும் செல்லம். கேட்டது உடனே கிடைத்துவிடும். அவள் கேட்டு மறுக்கப்பட்டது என்று எதுவும் இல்லை. முன் கோபமும் அதிகம். பட்டென பேசி விடுவாள்.
காவ்யா பிறக்கும் பொழுது கருணாகரனுக்கு 40 வயது. கட்டுமான பொருட்கள் விற்கும் கடை வைத்து நடத்திக் கொண்டிருந்த கருணாகரனுக்கு இப்போது வயது அறுபதை கடந்து விட்டது. அதனால், தன் மகளுக்கு விரைவிலேயே மணமுடித்து வைத்து விடவேண்டும் என்றெண்ணி மாப்பிள்ளை பார்க்க ஆரம்பித்தார். மேலே படிக்கலாம் என்ற ஆசையில் இருந்த மகளின் மனதையும், திருமணத்திற்கு பின் படிக்கலாம் என்று கூறி மாற்றியிருந்தார்.
காவ்யாவுக்கும் ராகு கேது தோஷம் இருக்க, தோஷமுள்ள வரன்களையே பார்க்க, வந்தவர்களில் அத்தனை திருப்தி இல்லாமல் இருந்தார் கருணாகரன். தரகர், நந்தகுமாரின் ஜாதகத்தையும் புகைப்படத்தையும் கொடுக்க, அவர் மனதிற்கு பிடித்துவிட்டது. பெண் பார்க்க வரச் சொல்லிவிட்டார்.
அதிக அலங்காரம் ஏதுமின்றி எளிமையான ஒப்பனையுடன், முகமலர்ச்சியுடன் வந்த காவ்யா, பார்த்த உடனே நந்தாவின் மனதில் நுழைந்து விட்டாள். காவ்யா முன்பே தன் தந்தையிடம் தான் பையனிடம் தனியே பேசிப் பார்த்து பிடித்தால்தான் சம்மதம் சொல்வேன் என்று தெரிவித்திருந்ததால், இருவரையும் பேசிக் கொள்ளுமாறு வீட்டிற்கு பின்னால் இருந்த சிறிய தோட்டத்திற்கு அனுப்பி வைத்தார்.
நந்தகுமார்தான் பதட்டமாக இருந்தான். காவ்யா மிகவும் சாதாரணமாகத்தான் இருந்தாள். நந்தகுமாருக்கு, இவளுக்கு என்னை பிடிக்க வேண்டுமே என்று இருந்ததால் அந்த பதட்டம். காவ்யா இன்னும் அவனைப் பற்றி எதுவும் நினைக்கவில்லை. அதனால் சாதாரணமாக இருந்தாள்.
“என்ன படிச்சிருக்கீங்க?” என கேட்டு பேச்சை ஆரம்பித்தாள் காவ்யா. மெல்ல நந்தாவும் பேச ஆரம்பித்தான். பேசும் பொழுதே நந்தாவுக்கு அவளுடன் தனக்கு ஒரு இலகுத்தன்மை ஏற்பட்டிருப்பது தெரிந்துவிட்டது. எந்த தயக்கமும் இன்றி அவளுடன் சரளமாக பேச முடிந்தது. ஒருவர் குடும்பத்தைப் பற்றி இன்னொருவர் தெரிந்து கொண்டனர். தன்னைப் பற்றி எதுவும் மறைக்காமல் உள்ளது உள்ளபடியே கூறினான் நந்தகுமார். அவனுடன் பேசப் பேச காவ்யாவுக்கும் அவனை பிடிக்க ஆரம்பித்தது. ஆனால் உடனே கூறவில்லை.
இருவரும் பேசிவிட்டு அடுத்து என்ன பேசுவது என தெரியாமல் நிற்க, “நீங்க பாட்டு பாடுவீங்களா?” எனக் கேட்டாள் காவ்யா.
“என்ன?” என ஆச்சரியமாய் கேட்டான் நந்தா.
“இல்ல… பாட்டு பாடத் தெரியுமான்னு கேட்டேன்”
“சுமாரா தெரியும்”
“அப்ப சரி, ஒரு பாட்டு பாடுங்க”
“விளையாடுறீங்களா?”
“இதுல என்ன விளையாட்டு. நான் நிஜமாத்தான் கேட்டேன். எனக்கு பாட்டுன்னா ரொம்ப பிடிக்கும். சந்தோஷமா இருந்தாலும் வருத்தமா இருந்தாலும் பாட்டுதான் கேட்டேன். ஆனா எனக்கு பாட வராது. வரப்போற ஹஸ்பண்டுக்கு பாட்டு பாட தெரிஞ்சா, நல்லா இருக்கும்னு யோசிச்சு இருக்கேன். அதான் உங்களுக்கு பாட தெரியுமா? தெரிஞ்சா பாடுங்கன்னு சொல்றேன்” என்றாள் காவ்யா.
‘பாட்டு பாட தெரிஞ்சாதான் ஓகே சொல்வாளா? இல்லை, உங்களை எனக்கு பிடிச்சுருக்கு பாட்டு பாட தெரியுமான்னு கேட்கிறாளா?’ என குழம்பியவன், எப்படியும் இவளை சம்மதம் சொல்ல வைக்க வேண்டும் என்றெண்ணி,
‘இல்லை இல்லை சொல்ல ஒரு கணம் போதும் இல்லை என்ற சொல்லைத் தாங்குவதென்றால் இன்னும் இன்னும் எனக்கோர் ஜென்மம் வேண்டும் என்ன சொல்லப் போகிறாய்?’
என பாட ஆரம்பித்தான். நன்றாகவே பாடினான். நந்தா ஒரு பெண்ணிடம் பார்த்த சில மணித்துளிகளில் தனியே பாட்டு பாடி காட்டினான் என்றால், அவனைப்பற்றி நன்கறிந்தவர்கள் சத்தியம் செய்து சொல்லியிருந்தால் கூட நம்பியிருக்க மாட்டார்கள். ஆனால் முதன் முதலாக தன் மனதை கவர்ந்த காவ்யாவிடம் நந்தா பாடினான். அவன் பாடலை ரசித்துக் கேட்டாள் காவ்யா. பாடி முடித்ததும்,
“நான் பாட சொன்னதுக்காக பாடுனீங்களா… இல்ல இன்டைரக்ட்டா என்கிட்ட எஸ் சொல்ல சொல்றீங்களா?” எனக்கேட்டாள் காவ்யா.
“ரெண்டுமே” என்றான் சிரித்துக்கொண்டே.
“ம்… பெரிய ஆள்தான்” என்றவள், யோசிப்பது போல கன்னத்தில் கைவைத்துக் கொண்டு நிற்க,
“என்னாச்சு…. என்ன யோசிக்கிறீங்க?” எனக்கேட்டான் நந்தா.
“இல்ல…. பாட்டெல்லாம் பாடி காட்டி இம்ப்ரஸ் பண்ணிட்டீங்க. எப்படி நோ சொல்றதுன்னுதான் யோசிக்கிறேன்” எனக் கூற ஒரு நொடியில் இருண்டு போய்விட்டது நந்தாவின் முகம்.
கலகலவென்று நகைத்தவள், “இப்படி பார்க்க உங்க முகம் நல்லாவே இல்ல, அதனால நான் நோ சொல்லல, எஸ்ஸே சொல்லிடறேன்” என்றாள்.
நந்தா முகமலர்ந்து காவ்யாவை பார்க்க, காவ்யாவும் அவனைப் பார்த்தாள். நந்தாவை என்ன உந்தியதோ, சட்டென அவள் கைகளைப் பிடித்துக் கொண்டான். தன் கைகளுக்குள் அவள் கைகளை வைத்து மூடியவன் “தேங்க்ஸ் காவ்யா” என்றான்.
“தேங்க்ஸா….?” என்றவள், அதற்கும் சிரித்து தன் கைகளை உருவ முயல அவன் விடவில்லை.
“விடுங்க…” என்றாள் காவ்யா.
“விட மனசே இல்லை” என்றான் நந்தகுமார்.
“விடுங்க… நம்ம வந்து நேரமாயிடுச்சு, யாராவது வந்தா ஏதாவது நினைக்க போறாங்க” என்றாள்.
“சீக்கிரமா கல்யாணத்த வைக்க சொல்லவா?” என நந்தா கேட்க, “ம்….” என்றவள் வெட்கத்தில் சிரித்தாள்.
இவர்கள் ஹாலுக்குள் வர அங்கே இறுக்கமான சூழல் நிலவியது. நந்தா வந்த உடனே சாந்தி எழுந்து கொண்டு “வாப்பா போகலாம்” என்க நந்தாவுக்கு ஒன்றும் புரியவில்லை.
“என்னாச்சும்மா?” எனக் கேட்டான்.
“போற வழியில சொல்றேன், போகலாம் வா” என கூற, காவ்யாவிடம் கண்களால் விடை பெற்றவன், கருணாகரனிடமும் காமாட்சியிடமும் மறக்காமல் சொல்லிக் கொண்டே கிளம்ப, அவர்கள் முகங்களும் சாதாரணமாக இல்லாமல் இருப்பதைப் போலவே இருந்தது.
அவர்கள் சென்றுவிட தரகரை இருக்க சொன்ன கருணாகரன், “நீங்க எல்லா விவரத்தையும் முன்னாடியே சொல்லியிருந்தா, அவங்கள முன்னாடியே வர வேண்டாம்னு சொல்லியிருப்பேன்” என்றார்.
“என்னப்பா என்ன விவரம்?” என ஒருவித பதற்றத்துடன் கேட்டாள் காவ்யா.
பையனுக்கு அப்பா அம்மா இல்லம்மா, இவங்க அவர் அப்பாவோட இரண்டாம் தாரம். அந்த பெரியம்மா இரண்டாம் தாரத்தோட அம்மா. இரண்டாம் தாரத்துக்கு ரெண்டு பொண்ணுங்க வேற இருக்காம். இன்னும் கல்யாணம் ஆகலை. அந்த பொண்ணுங்களுக்கு எல்லாம் இந்த பையன்தான் செய்யணுமாம். கல்யாணத்துக்கு அப்புறமாவும் இவங்களோட தான் இருப்பாராம். எனக்கு என்னமோ மனசுக்கு பிடிக்கலை. இந்த குடும்பம் உனக்கு சரியா வராது” என்றார் கருணாகரன்.
இது எல்லாமே நந்தாவின் மூலம் காவ்யா அறிந்தவையே. “இதுல என்னப்பா பிரச்சனை?” என தன் தந்தையிடம் கேட்டாள்.
“என்னம்மா நீ? செல்லமா வளர்ந்த பொண்ணு நீ. இந்த குடும்பத்துல உன்னால இருக்க முடியுமா? அந்த பொண்ணுங்களுக்கு கல்யாணம் ஆகியிருந்தாலும் பரவாயில்லை. ரெண்டு பேருமே படிக்கிறாங்க. எல்லாம் பெரிய பெரிய படிப்பு. இவர் ஒருத்தர் தான் சம்பாதிக்கிறார். இவர்தான் எல்லாம் பண்ணனும். எல்லாத்துக்கும் மேல அந்த பாட்டி வேற ஒரு மாதிரி பேசுது. இந்த இடம் சரியா வராது” எனக் கூறிவிட்டு, தரகரை வேறு ஒரு நல்ல இடம் பார்க்க சொல்லிவிட்டு வெளியே கிளம்பி சென்றுவிட்டார்.
நந்தகுமாரிடம் அப்போது கார் இல்லை. வந்திருந்த வாடகை காரில் திரும்பி போய்க் கொண்டிருக்கும் பொழுது, சாந்தி “இந்த இடம் சரியா வராது” என்றார்.
“ஏன்மா?” என கேட்டான் நந்தா.
அவங்க அப்பாவுக்கு நம்ம குடும்பம் பத்தி விவரமா முன்னாடியே தெரியாதாம். நாங்க சொல்ல சொல்லத்தான் தெரிஞ்சுதாம். இந்த தரகர் உன் படிப்பு, வேலை பத்தி மட்டும்தான் சொல்லியிருக்காரு. ரெண்டு பொண்ணுங்களுக்கு கல்யாணம் பண்ணனுமா..? கல்யாணத்துக்கப்புறம் தனிக்குடித்தனம் வைப்பீங்களான்னு? எல்லாம் கேட்கிறார்ப்பா. நாங்க மாட்டோம்ன்னு சொல்லவும் பொண்ணு தர மாட்டேன்னு சொல்லிட்டார்” என்றார் சாந்தி.
நந்தாவுக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. போதாததற்கு சுந்தராம்பாள் வேறு, “நான் தான் அப்பவே சொன்னேனே வெளியில பொண்ணு பார்த்தா குடும்பத்தை உடைக்கத்தான் பார்ப்பார்ங்கன்னு. இப்பவும் ஒண்ணும் கெட்டுப் போகலை. உன் தம்பிக்கு ஒரு ஃபோன் போடு. அடுத்த முகூர்த்தத்திலேயே ராணியோட கல்யாணத்தை வச்சிடலாம்” என கூற, வண்டியை நிறுத்தச் சொன்னவன் “எனக்கு வெளியில வேலையிருக்கு. நீங்க வீட்டுக்கு போங்க. நான் அப்புறம் வரேன்” என கூறி இறங்க முற்பட, சாந்தி அவனை தடுத்து உட்கார வைத்தார்.
“நீ உன் வாயை வச்சுக்கிட்டு கொஞ்சம் சும்மா இருக்க மாட்டியாம்மா? அவன்தான் பிடிக்கலைன்னு சொல்றானே, அப்புறமும் ஏன் அவனை கட்டாயப்படுத்துற? பாரு கோவிச்சுக்கிட்டான் ” என்றார் சாந்தி.
“என்னையே சொல்லாதடி, நான் உன் நல்லதுக்கும், உன் பொண்ணுங்க நல்லதுக்கும்தானே சொல்றேன். நீ இல்லன்னா இவன் இந்த நிலைமைக்கு வந்திருக்க முடியுமா? ஆனா பொண்ணு வீட்ல எவ்வளவு சுளுவா தனிக்குடித்தனம் வைப்பீங்களான்னு கேட்டாங்க” என சுந்தராம்பாள் கேட்க சாந்தி குழம்பித்தான் போனார்.
அலுவலகத்தில் காவ்யாவின் நினைவுகளில் மூழ்கியிருந்த நந்தகுமார், அலைபேசியின் ஒலி கேட்டு, கடந்தகால நினைவுகளில் இருந்து வெளிவந்தான். எடுத்துப் பேசிவிட்டு நேரத்தைப் பார்த்தான். மதிய உணவருந்தும் நேரமாகியிருந்தது. தன்னுடைய பையை எடுத்துக்கொண்டு காவ்யா எழுந்து செல்வதை பார்த்தவன், அவள் கேண்டீன்தான் செல்வாள் என நினைத்து அவனும் சென்றான்.
காவ்யா அவளுடன் வேலை பார்க்கும் நளினி என்பவளுடன்தான் எப்பொழுதும் உணவருந்துவாள். இன்று அவள் விடுப்பு எடுத்திருக்க, தனியாக அமர்ந்து தன்னுடைய சாப்பாட்டை பிரித்து ஒரு ஸ்பூன் எடுத்து சாப்பிட்டாள். அவளது இருக்கைக்கு எதிர் இருக்கையில் வந்தமர்ந்தான் நந்தா.
காவ்யா எழுந்து செல்லலாம் என நினைத்தாலும், அங்கு வேறு சிலரும் இருக்க, தான் எழுந்து சென்று அவன் பின்னாலேயே வந்தால், தேவையில்லாமல் தான் காட்சிப்பொருளாகக் கூடும் என நினைத்து அங்கேயே அமர்ந்து சாப்பிடுவதில் கவனமானாள்.
“ஒரு கர்ட்டசிக்கு கூட சாப்பிடுறியான்னு கேட்க மாட்டியா?” என கேட்டான் நந்தா. அவன் யாரிடமோ பேசுவது போல பாவித்து அவள் உண்பதிலேயே கவனமாக இருக்க, அவளது சாப்பாட்டை பறித்துக் கொண்டான்.
“என்ன வம்பு பண்றீங்களா?” என காவ்யா கேட்க, அலட்டிக்கொள்ளாமல் அவள் கையில் இருந்த ஸ்பூனையும் வாங்கியவன், அவள் கொண்டு வந்திருந்த காய்கறி சாதத்தை எடுத்து சுவைக்க ஆரம்பித்தான். காவ்யா சுற்றுமுற்றும் பார்க்க, மற்றவர்கள் இவர்கள் இருவரையும் கவனிப்பது போலவும் இருந்தது, கவனிக்காதது போலவும் இருந்தது. அந்த இடத்தில் எதுவும் பேச முடியாமல் ஒருவித இயலாமையுடன் அவனை முறைத்துப் பார்த்திருந்தாள் காவ்யா.
முழுவதையும் சாப்பிட்டு முடித்தவன், எழுந்துசென்று அவளுக்கு மிகவும் பிடித்த, ஃபிரைடு ரைஸ் வாங்கி வந்தான். காவ்யாவுக்கு நல்ல பசி. மறுக்காமல் வாங்கி சாப்பிட்டாள். தான் வாங்கிக் கொடுப்பதை அவள் சாப்பிடவும் மனதில் மகிழ்ச்சியுடன் நந்தா பார்த்திருக்க, சாப்பிட்டு முடித்தவள் அதற்குரிய பணத்தை மேஜை மீது வைத்து விட்டு அங்கிருந்து வேகமாக அகன்றாள்.
பொங்கி வந்த பால் நீர் தெளித்து அடங்குவது போல அவனது மகிழ்ச்சியும் வடிந்தது.
அலுவலக நேரம் முடிந்து காவ்யா தனது ஸ்கூட்டியில் கிளம்பிச் சென்றாள். அவள் கிளம்பி ஒரு மணி நேரம் கழித்தே கிளம்பினான் நந்தா. அவளது முகவரியை வைத்து அவள் தங்கியிருக்கும் இடத்திற்கும் சென்றான். அது ஒரு அடுக்குமாடி குடியிருப்பு. முதல் தளத்தில் இருந்த அந்த வீட்டின் அழைப்பு மணியை அழுத்த கதவு திறக்கப்பட்டது.
கையில் இரண்டு வயது இருக்கக்கூடிய குழந்தையுடன் நின்றிருந்தாள் காவ்யா. நந்தகுமார் ஸ்தம்பித்துப் போய் நின்றிருந்தான். குழந்தையின் முகவடிவே சொன்னது அது நந்தாவின் வாரிசு என்று.