என் நெஞ்சிலே இனி ரத்தம் இல்லை கண்ணீருக்கே நான் தத்துப் பிள்ளை என் காதலி……. உன் போல என்னாசை தூங்காது ராணி தண்ணீரில் தள்ளாடுதே தோனி ஈரமான ரோஜாவே…. ஏக்கம் என்ன ராஜாவே கண்ணில் என்ன சோகம் தீரும்…. ஏங்காதே என் அன்பே ஏங்காதே….
காதோடு பாடல் ஒலித்துக் கொண்டிருக்க, வெறுமனே கண்களை மட்டும் மூடிக்கொண்டு தூங்காமல் படுத்திருந்தான் நந்தகுமார். இரவு மணி 1.20. நந்தகுமார் தன் உறக்கத்தை தொலைத்து சில வருடங்கள் ஆகின்றன. இரவின் தனிமையை இப்படி பாடல்களின் துணையுடன் தான் கழித்துக் கொண்டிருக்கிறான்.
அவன் மனதின் வலி அவன் மட்டுமே அறிவான். வலியை கொடுத்துச் சென்றவளின் நினைவுகள் அவன் நெஞ்சத்தில் நிறைந்திருக்க, மூடியிருந்த தன் கண்களுக்குள் அவளின் சிரித்த முகத்தை பார்த்துக் கொண்டே, விடியும் வேளையில் மெல்ல கண்ணயர்ந்தான்.
காலையில் கண்விழித்த போதும் அவளின் நினைவுகள்தான் மீண்டும் அவனை ஆக்கிரமித்தன. இந்த கஷ்டம் இனி வேண்டாம். அவளுடன் எப்படியாவது இணைந்து விட வேண்டும், இன்றே காரியத்தில் இறங்குகிறேன் என முடிவெடுத்தவனாய் அவளைப் பார்க்க தயாராகினான். அவளை பார்க்கப் போகிறோம் என்ற எண்ணமே சிறிது உற்சாகத்தை அளித்தது போல இருக்க, விரைவாக கிளம்பி கீழே சென்றான்.
நந்தகுமாரின் தாய் சாந்தி, உணவு வகைகளை எடுத்து வைத்துக் கொண்டிருக்க, சாந்தியின் அன்னை சுந்தராம்பாள், “அவன் வந்ததுமே பேசிடு, அவன் சம்மதத்தை எப்படியாவது வாங்கு” என சாந்தியை முடுக்கி விட்டுக் கொண்டிருந்தார்.
சாந்தியின் 2-வது பெண் கீர்த்தி, சாப்பிட வந்தமர்ந்தவள், தன் பாட்டியைப் பார்த்து முறைத்தாள். மனதிற்குள் ‘சரியான சூனியக்கார கிழவி’ என நினைத்துக்கொண்டாள். ஆனால் வெளியே சொல்லவில்லை. சொல்ல தைரியம் இல்லாமல் இல்லை. அதற்குப் பின் சுந்தராம்பாளின் அர்ச்சனையை கேட்டால், இந்த நாளே வீணாகி விடும் எனக் கருதி விட்டு விட்டாள்.
கீர்த்தி மருத்துவம் பயிலும் மாணவி. ஐந்தாம் வருடம், ஹவுஸ் சர்ஜனாக இருக்கிறாள். நந்தகுமார் உணவருந்த வரவும், “அண்ணா நீ ரொம்ப இளைச்சுட்ட” என்றாள் வாஞ்சையாக.
“ரொம்ப நாள் கழிச்சி பார்க்கிற இல்ல, அதான் உனக்கு எப்படி தெரியுது. நான் நல்லா தான் இருக்கேன்” என்றவன் சாப்பிட தொடங்கினான். சாப்பிட்டுக்கொண்டே கீர்த்தியின் படிப்பு பற்றி விசாரித்துக் கொண்டிருந்தான். சுந்தராம்பாள் ‘பேசு’ என சாந்தியிடம் சாடை காட்ட,
“நந்தா இப்படி ஒத்தையிலேயே இருக்க போறியா?” என சாந்தி கேட்க, வாய்க்கு எடுத்துச்சென்ற சாப்பாட்டை அப்படியே தட்டில் வைத்துவிட்டு சாப்பாட்டை வெறித்தான்.
‘ஐயோ… இந்த அம்மா சாப்பிடும் போதுதான் பேசணுமா?’ என மனதிற்குள் நினைத்தாள் கீர்த்தி.
“நம்ம ராணி உனக்காகவே காத்துகிட்டு இருக்கா. ரொம்ப அமைதியான பொண்ணு. நம்ம குடும்பத்துக்கு ஏத்த பொண்ணு. உன் வாழ்க்கை இப்படி இருக்கிறது எனக்கு பொறுக்கலை. சரின்னு சொல்லுப்பா” என்றார் சாந்தி.
நந்தகுமார் பதிலேதும் சொல்லாமல் தன் கோபத்தை அடக்கிக் கொண்டிருந்தான். அப்போது சாந்தியின் முதல் பெண் வாசுகி தன் கணவன் பிரபுவுடனும், தன் ஒரு வயது மகன் நகுலுடனும் உள்ளே நுழைந்தாள்.
சம்பிரதாய வரவேற்புகளுக்குப் பின், “அண்ணா உன்னை பார்த்து மூணு வருஷம் ஆயிடுச்சு. அதான் காலையிலேயே இவரை தொந்தரவு பண்ணி, உன்னை பார்க்க வந்துட்டேன்” என்றாள் வாசுகி.
வாசுகி-பிரபுவின் திருமணம் முடிந்து ஒரு வாரத்தில் அமெரிக்கா சென்றவன். இரண்டு நாட்கள் முன்னர்தான் வந்திருந்தான். நந்தகுமாருக்கு வேலை சென்னையில் உள்ள ஒரு தனியார் கணிப்பொறி நிறுவனத்தில். மூன்று வருடங்களுக்கு முன்பு புதிதாக இந்த நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்த நேரத்திலேயே ஆன்சைட் என்று வெளிநாடு செல்ல வாய்ப்பு வந்ததும் சென்றுவிட்டான்.
அப்போது அவனுக்கு இங்கு இருக்கப் பிடிக்கவில்லை. ஆனால் அங்கு சென்ற பிறகு யோசித்திருக்கிறான். வராமல் அங்கேயே இருந்திருக்கலாம் என்று. அப்போது இருந்த கோபம் அவன் கண்ணை மறைத்து விட்டது. வெளிநாடு செல்லாமல் இங்கேயே இருந்திருந்தால் ஏதாவது செய்து அவனுடைய வாழ்க்கையை காப்பாற்றி கொண்டிருப்பான்.
வெளிநாடு செல்ல அக்ரிமெண்ட்டில் கையெழுத்திட்டு விட்டுதான் சென்றான். அதை முறித்துக்கொண்டு இடையில் வரமுடியவில்லை. வந்தாலும் எதுவும் பலன் இருக்குமா எனத் தெரியாத போது வரவேண்டாம் என்று விட்டு விட்டான்.
வாசுகி வந்தபின், சாந்தி தான் பேச வந்த விஷயத்தை விட்டுவிட, சாப்பிட்டு முடித்த நந்தகுமார் தன் தங்கையின் குழந்தையை வாங்கி கொஞ்சினான். அவனுக்கு வாங்கி வந்த விளையாட்டு பொருட்களை அவனிடம் கொடுத்தான். பிரபுவிடம் பொதுவாக பேசிக் கொண்டிருந்தான்.
“அம்மா, அண்ணா வந்துடுச்சு. இனிமேல் அண்ணனுக்கு ஒரு நல்ல வாழ்க்கையை நாம அமைச்சு கொடுக்கணும். அதை பத்தி பேசணும்னுதான் நான் வந்திருக்கிறேன்” என்றாள் வாசுகி.
‘இவள் வேறயா? அண்ணா ரொம்ப பாவம்தான். அண்ணனோட மனசு யாருக்குமே புரியாதா..?’ என நினைத்துக்கொண்டே கீர்த்தி தனக்கு நேரமாவதை உணர்ந்து, விடை பெற்று தன்னுடைய ஸ்கூட்டியை எடுத்துக் கொண்டு கிளம்பிவிட்டாள்.
“இவரோட தங்கச்சி ஆர்த்தி. அண்ணனோட ஆபீஸ்ல தான் வேலை பார்க்கிறாம்மா. நல்ல அழகு, புத்திசாலி. அண்ணனை பத்தி எல்லாம் தெரியும். எங்க கல்யாணத்தப்பவே அண்ணனை பார்த்ததிருக்காதானே, அவளுக்கும் இஷ்டம்” என தன் அன்னையிடம் கூறுவதுபோல அண்ணனுக்கும் சேர்த்தே கூறினாள் வாசுகி.
“ஏண்டி என் மகன் பொண்ணு ராணி காத்துக்கிட்டு இருக்கிறப்ப நீ வேற யாரையோ இங்க கொண்டு வருவியா? அஞ்சு வருஷமா இவனையே நெனச்சுக்கிட்டு இருக்கா. அவளுக்கு என்ன பதில் சொல்றது?” என்றார் சுந்தராம்பாள்.
“என்ன ராணியா….? அண்ணனுக்கு கொஞ்சமாவது பொருந்துவாளா ராணி? படிப்பு இருக்கா? பார்க்கவும் அண்ணனுக்கு ஏத்த மாதிரி இருப்பாளா? அண்ணன் பார்க்க எப்படி இருக்கு? அதுக்கு ஏத்த மாதிரி பார்க்க வேண்டாமா? ஆர்த்தி அண்ணனுக்கு ரொம்ப பொருத்தமா இருப்பா” என்ற வாசுகி, நந்தாவை பார்த்து, “அண்ணா ஆர்த்தி இப்போ உன் ஆபீஸ்ல தான் வேலை பார்க்கிறா. நீ கூட என் கல்யாணத்தப்ப பார்த்திருப்பியே. அவ கூட நீ ஒரு தடவை பேசி பாருண்ணா. உனக்கு அவளை கண்டிப்பா பிடிக்கும்” என்றாள்.
கட்டுக்கடங்காமல் கோபம் வந்தது நந்தகுமாருக்கு. பிரபு இருப்பதால் மரியாதை கருதி, தன் கோபத்தை அடக்கி, சத்தமில்லாமல் ஆனால் அமைதியாக, “இந்த மாதிரி பேச்சு இனிமே யாராவது பேசினா….. நான் திருப்பியும் வெளிநாடு போய்டுவேன். திரும்பி வரவே மாட்டேன்” என கூறிவிட்டு வேகமாக வெளியே சென்று தனது காரை எடுத்துக்கொண்டு கிளம்பி விட்டான்.
“நீங்க ராணியை பத்தி பேசினதாலதான் அண்ணன் மூட் அவுட் ஆகியிருக்கும்” என வாசுகி கூற, “ஆமாம் நீ அந்த ஆர்த்தியை பத்தி பேசவும் உன் அண்ணன் அப்படியே சந்தோஷப்பட்டுட்டானா” என சுந்தராம்பாள் நொடிக்க, தன் கணவனை சங்கடமாக பார்த்தாள் வாசுகி.
“பாட்டி நீ கொஞ்சம் பார்த்து பேசு” என்றவள், தன் அன்னையிடம் “அண்ணனுக்கு ராணியை பிடிக்காதும்மா. நீ அதையே சொல்லிட்டு இருந்தா அண்ணன் கண்டிப்பா கல்யாணத்துக்கு சம்மதிக்காது. நீ ஆர்த்திக்கு சரின்னு சொல்லு” என்றாள்.
“எங்கடி…? நீயும் அந்த பொண்ண பத்தி பேசினதானே? அவன் ஒன்னும் சொல்லவே இல்லையே?” என்றார் சாந்தி.
“ஆர்த்தியும் அண்ணா ஆபீஸ்தானேம்மா, அவளை பார்த்து பேசினா அண்ணன் மனசு கண்டிப்பா மாறும். அண்ணனுக்கு ஒரு நல்ல வாழ்க்கை அமையனும். அது வரை எனக்கு தூக்கமே வராது” என்றாள் வாசுகி.
“சரிடி, அவன் வாழ்க்கையில் எதுவும் நல்லது நடந்தா போதும்” என சாந்தி கூற, “என் பேத்தி காத்துகிட்டு இருக்காளே, அவளை என்ன பண்றது?” என ஆத்திரமாய் கேட்டார் சுந்தராம்பாள்.
“யாரு அவளை காத்துக்கிட்டு இருக்க சொன்னது? நாங்க யாரும் சொல்லல? நீ சொன்னேனா நீதான் பதில் சொல்லணும்” என்றாள் வாசுகி.
‘ம்ஹூம்…. நீங்க நடத்துங்கடி, என் பேத்தியை தவிர யார் இந்த வீட்டுக்கு மருமகளா வர்றான்னு நானும் பார்க்கிறேன்’ என மனதில் நினைத்தார் சுந்தராம்பாள்.
காரில் புறப்பட்ட நந்தகுமாரின் உள்ளம் உலைக்களமாய் கொதித்துக்கொண்டிருந்தது. என்ன நினைத்து இவர்கள் இப்படி பேசுகிறார்கள் என நினைத்து அனைவர் மீதும் கடும் கோபம் வந்தது. அவளிருந்த நெஞ்சத்தில் இன்னொரு பெண்ணுக்கு இடம் அளிக்க முடியுமா? முடியவே முடியாது. அவள் இடத்தில் இன்னொரு பெண்ணை நினைத்து பார்க்கவே அருவருப்பாக இருந்தது நந்தகுமாருக்கு.
சிறுவயதிலிருந்தே மகிழ்ச்சி என்பதை பார்த்திராத நந்தாவின் வாழ்க்கையில் வசந்தத்தை காட்டியவள், பின்னொருநாள் அவன் வாழ்வை பாலைவனமாக்கி விட்டு சென்று விட்டாள். யாரை என்னவென்று குறை கூறுவது. தான் இன்னும் பொறுமையாக கையாண்டிருக்க வேண்டுமோ என்றுதான் நினைத்துக் கொண்டான்.
சிந்தனைகளோடே சென்னையின் போக்குவரத்து நெருக்கடியில் காரோட்டியவன் தானாக அவளது வீட்டின் முன்பு நிறுத்தினான். அழைப்பு மணியை அழுத்தி விட்டு, தடதடக்கும் நெஞ்சத்தோடும, ஒருவித எதிர்பார்ப்போடும் நந்தகுமார் காத்திருக்க, அவன் இதுவரை பார்த்திராத சற்று பருமனாக இருந்த ஒரு பெண்மணி கதவைத் திறந்தார்.
“யார் நீங்க? என்ன வேணும்?” என கேட்டார்.
“இங்க கருணாகரன்னு….. ஒருத்தர் இருந்தாரே, அவர்…. அவரை பார்க்கணும்” என்றான் நந்தா.
“எங்களுக்கு தெரியாதுங்க. எங்க ஓனர் பேரு மயில்வாகனன். அவரு இப்போ குடும்பத்தோட மலேசியாவில் இருக்காரு. கருணாகரன்னு யாரும் தெரியாது?” என்றார் அந்தப் பெண்மணி.
“உங்க ஓனர் நம்பர் தர முடியுமா?” எனக் கேட்க, அந்தப் பெண்மணி தயக்கமாய் பார்த்தார்.
“ப்ளீஸ்ங்க” எனக் கூறிய நந்தாவின் தோற்றத்தைப் பார்த்தார். அவன் மனதின் வலி முகத்தில் பிரதிபலித்ததோ என்னவோ? சரி என்றவர் தன் கணவரிடம் கூட கேட்காமல் மயில்வாகனத்தின் கைபேசி எண்ணை கொடுத்தார்.
நன்றி உரைத்துவிட்டு காருக்குள் ஏறியவன், அந்த எண்ணுக்கு அழைத்தான். எடுத்துப் பேசியவரிடம் கருணாகரனை பற்றி விசாரிக்க, அந்த வீட்டுக்கு முன்னாடி ஓனர் கருணாகரன்னு யாரோதான். நான் அவர்கிட்ட இருந்து டைரக்டா வாங்கல. புரோக்கர் ஒருத்தர் ஏற்கனவே அவர் கிட்ட இருந்து வாங்கிட்டார். அவர் கிட்ட இருந்துதான் நான் வாங்கினேன்” என்றார் மயில்வாகனன்.
“அந்த புரோக்கர் நம்பர் கிடைக்குமா?” என நந்தா கேட்க, “இல்லைங்க, அவர்கூட நான் இப்போ காண்டாக்ட்லேயே இல்லை. அவர் நம்பரும் மிஸ் ஆயிடுச்சு” என கூறி வைத்து விட்டார்.
நந்தகுமாருக்கு பெரும் குழப்பமாக இருந்தது. ‘வீட்டை ஏன் வித்துட்டாங்க? வித்திட்டு எங்க போயிருப்பாங்க?’ கட்டுமானப் பொருட்கள் விற்கும் கடை வைத்து தொழில் செய்து வந்த கருணாகரனின் கடை இருக்கும் இடத்திற்கு தேடிச் சென்றான். அங்கே கடை இருந்ததற்கான அடையாளமே இல்லை. அவரைப்பற்றிய உபயோகமான தகவலும் கிடைக்கவில்லை.
பலவித கேள்விகள் வண்டாய் அவன் மூளையை குடைய, காரை எடுத்துக் கொண்டு அலுவலகம் கிளம்பி விட்டான்.
அவனுடைய விதியை எழுதும்போது கடவுள் ஏதும் கோபத்தில் இருந்திருப்பாரோ என நினைத்துக்கொண்டான். நந்தகுமாருக்கு ஐந்து வயது இருக்கும் போதே, அவனை பெற்றெடுத்த தாய் பூரணி இறைவனடி சேர்ந்து விட்டார். ஆமாம், சாந்தி அவனைப் பெற்றெடுத்தவர் இல்லை. நந்தகுமாரின் தந்தை தனசேகரின் இரண்டாவது மனைவிதான் சாந்தி. வாசுகியும் கீர்த்தியும் தனசேகர்- சாந்தி தம்பதியினரின் பெண்கள்.
தன் தாயைப் பற்றிய நினைவுகள் கூட அவ்வளவாக அவனுக்கு இல்லை. பூரணி அவனுக்கு உணவூட்டியது, குளிப்பாட்டியது, தூக்கி வைத்துக்கொண்டது என மிகச் சில நினைவுகள் மட்டுமே கருப்பு வெள்ளையாய் அவனுக்கு நினைவில் இருக்கிறது. திடீரென பூரணி படுக்கையில் விழுந்தார். நுரையீரல் புற்றுநோய் கடைசி கட்டத்தில் இருந்தது அப்பொழுதுதான் தெரிந்தது.
அரசு நிறுவனம் ஒன்றில் குமாஸ்தாவாக வேலை பார்த்து வந்த தனசேகர், தன் கையிலிருந்த சேமிப்பையும், பூரணியின் நகைகளை விற்றும், பூரணியின் வைத்தியத்திற்காக செலவு செய்ய, பணம் கரைந்தது தான் மிச்சம். பூரணி தனசேகரையும் நந்தகுமாரையும் ஏமாற்றிவிட்டு, இந்த பூவுலகை விட்டு பூத உலகம் சென்று விட்டார். பூரணியின் தாய் வீட்டிலிருந்து வந்தவர்களும், பூரணியின் இறுதிச் சடங்கு வரை இருந்துவிட்டு, பிள்ளையை நன்றாக பார்த்துக் கொள்ளுங்கள் என தனசேகருக்கு அறிவுரையை வழங்கிவிட்டு சென்றுவிட்டனர்.
தாயை இழந்த பிள்ளைக்கு ஆதரவாக இல்லாமல் மனைவியின் பிரிவை தாங்க இயலாத தனசேகர் குடியில் தன்னை தொலைக்க ஆரம்பித்தார். ஐந்து வயதிலேயே அன்னையை இழந்து தந்தையின் அரவணைப்பும் இன்றி அந்த பிஞ்சின் மனம் அன்பிற்காக ஏங்கி இறுகத் தொடங்கியது.
ஆறு ஆண்டுகள் தன்னுடன் அந்நியோன்யமாக வாழ்ந்த அன்பு மனைவியின் நினைவில், அவர்களது அன்பின் அடையாளத்தை மறந்து போனார் தனசேகர்.
நந்தகுமார் அவன் அன்னையைப் போலவே மிகவும் அமைதியானவன். பள்ளியில் நண்பர்கள் உண்டு என்றாலும், நெருக்கமானவர்கள் என்று யாரும் கிடையாது. இயல்பிலேயே புத்திசாலி என்பதால் படிப்பு நன்றாக வந்தது.
மூன்று வேளையும் வீட்டிற்கு அருகில் இருந்த மெஸ்ஸில் இருந்து தான் சாப்பாடு. சாப்பாடு வாங்கி கொடுப்பதோடு சரி சாப்பிடுகிறானா, இல்லையா என்பதை கூட கவனிக்க மாட்டார் தனசேகர்.
ஒருநாள் இரவு குடித்துவிட்டு சுயநினைவின்றி கிடந்த தனசேகர் காலையில், தன்னுடைய ஏழு வயது மகன் நந்தகுமாரின் அனத்தல் சத்தம் கேட்டுதான் கண் விழித்தார். அனலாய் கொதித்துக் கொண்டிருந்தது அவன் உடல். அவசரமாக மருத்துவமனைக்கு தூக்கிச் செல்ல, மருத்துவர் பார்த்துக்கொண்டிருக்கும்போதே அதிக காய்ச்சல் காரணமாக வலிப்பு ஏற்பட்டது நந்தாவுக்கு. அவசர சிகிச்சை அளித்து பின் வலிப்பு சரியான பிறகும், ஒரு வாரம் மருத்துவமனையில் இருந்தான் நந்தா.
தனசேகர் பயந்து போய் விட்டார். அதிக உடல் வெப்பத்தினால் ஏற்பட்ட வலிப்பு தான் என்று மருத்துவர் கூறினாலும், தன்னுடைய அலட்சியத்தால் தான் ஏற்பட்டது என்பது புரிந்த தனசேகர், முதல் முறையாக குற்ற உணர்ச்சி அடைந்தார். ஓரிரு மாதங்களில் ஏழ்மை நிலையில் இருந்த சாந்தியை இரண்டாவதாக தன் மகனுக்காக திருமணம் செய்து கொண்டார். சொந்த ஓட்டு வீடும், அரசு வேலையும் இருந்ததால் சாந்தியின் வீட்டில் வறுமையின் பிடியில் இருந்த சாந்தியின் அன்னை சுந்தராம்பாள் இரண்டாம் தரமாக இருந்தாலும் பரவாயில்லை என்று தனசேகருக்கு சாந்தியை மணமுடித்து வைத்தார்.
சாந்தி நல்ல பெண்தான். நந்தகுமாருக்கு எல்லாம் செய்தாலும் அதில் கடமை மட்டுமே இருக்கும். தன் கணவரின் பிள்ளை என்று நினைத்தாரே தவிர, தன் பிள்ளையாக ஒரு போதும் அவரால் நினைக்க முடியவில்லை. அம்மா என நந்தகுமார் அழைத்தாலும் அன்னையின் அன்பை அவரிடம் அவனால் உணரவே முடியவில்லை.
தனசேகர் சாந்தியின் மூலம் வாசுகி, கீர்த்தி என இரண்டு பெண் குழந்தைகளுக்கு தந்தையான பின்னரும் குடியை மட்டும் நிறுத்தவில்லை. நந்த குமாருக்கு 12 வயது இருக்கும்பொழுது குடித்து விட்டு வண்டியை ஓட்டிக் கொண்டு வந்த தனசேகர் விபத்தொன்றில் சிக்கி அகால மரணம் அடைந்தார். நந்தகுமாரிடமிருந்து தாயை பறித்துக் கொண்ட இறைவன் தந்தையையும் விரைவிலேயே பறித்துக் கொண்டார்.
நந்தகுமாருக்கு அவனுடைய சிறுவயதில் அன்பு என்பது கிட்டா பொருளாகிப் போனது.