அந்த அறையில் இருந்த பெரிய பெரிய டெட்டி பேர் பொம்மைகளைப் பார்த்த அபி… இதெல்லாம் யாருது எனக் கேட்க, “உங்க அம்மாவோடது தான்.” என்றதும், அப்படியா என்பது போல அவள் கீர்த்தியைப் பார்க்க… கீர்த்தி ஆமாம் என்றாள்.
“நீ வேணா எடுத்துக்கோ…” என நவீனா சொல்ல…
“வேண்டாம் அப்பா யார் வீட்ல இருந்தும் எதுவும் கேட்க கூடாது சொல்லியிருக்காங்க.” என்றால் மழலையில்…. “உங்க அம்மாவோடது தான்.” எனச் சொல்லியும் கேட்கவில்லை.
“இவ விட மாட்டா?” என்றவள் எழுந்து வினோத்தை நகர்ந்துகொள்ளச் சொல்லிவிட்டுச் சோபாவில் அமர்ந்தாள்.
அபிக்கு அங்கிருந்த குட்டி மேஜையில் வைத்து சேர் போட்டுக் கொடுக்க… சிந்தாமல் சிதறாமல் அவள் உண்ணும் அழகை பார்ப்பதற்கே கண்கள் போதவில்லை. சோம சேகர் காபியை பருகியபடி தன் பேத்தியைத்தான் ரசித்துப் பார்த்திருந்தார்.
கேக், பிரெஞ்சு பிரைஸ் அதோடு பழச்சாறும் இருந்தது.
நிறைய உண்டு விட்டாள் ஆனால் இன்னும் கொஞ்சம் மீதம் இருக்க… அவள் திணறுவதைப் பார்த்து நவீனா, “பரவாயில்லை வச்சிடு.” எனச் சொல்ல… ஆனாலும் அபி மீதம் வைக்காமல் உண்ண… நவீனா மீண்டும் சொல்ல… “அவ தட்டில் இருக்கச் சாப்பாடை வேஸ்ட் பண்ண மாட்டா மா…” என்றால் கீர்த்தி.
தான் உண்ட தட்டை எடுத்து வந்து வைத்து விட்டு, தான் உபயோகித்த டிஷு பேப்பரை குப்பை கூடை தேடி போட்டு விட்டு வந்த அபி, மெத்தையில் கலைந்திருந்த போர்வையை நேர் செய்ய….
“இதெல்லாம் உனக்குத் தெரியுமா? உங்க அம்மா சொல்லிக் கொடுத்தாங்களா?” என வினோத் கேட்க,
“எங்க அம்மா இல்லை… எங்க அப்பா பண்ணுவாங்க.” என அபி சொல்ல…
“இவங்க தூங்கி எந்திரிச்சு அப்படியே போயிடுவாங்க. ஒண்ணுமே பண்ண மாட்டாங்க.” என அவள் கீர்த்தியைக் காட்டி நவீனாவிடம் சொல்ல…
“எதுக்கு டி இவ இது மட்டும் என்னைப் பார்த்து சொல்றா?” என நவீனா கேட்க,
“நீ உன் பெண்ணை ஒழுங்கா வளர்க்கலைன்னு சொல்றா மா…” என்றால் கீர்த்தி. எல்லோருக்கும் சிரிப்பு வந்துவிட்டது.
“நீ சொல்லாதீங்க நீங்க சொல்லுங்க.” என அபி அதையும் திருத்த….
“சாரி சாரி…” என்றால் கீர்த்தி.
“டிக்ஷனரியில டிசிப்ளின்னுக்கு அர்த்தம் எங்க அபி தான். அப்படியே அவங்க அப்பாவோட ஜெரக்ஸ்.” என்றவள், “வாங்க டா பட்டு…” என மகளை அருகில் அழைத்துக் கொஞ்சினாள்.
அபியை பார்க்க பார்க்க எல்லோருக்கும் அவ்வளவு வியப்பு. ஒரு குட்டி பெண்ணிடம் இவ்வளவு ஒழுக்கம் இருக்குமா… நாம் எப்படிபட்டவர் என்பதை நாம் குழந்தையை வளர்க்கும் லட்சனத்திலேயே அறிந்து கொள்ளலாம். தர்மா என்ற மனிதனின் மேல் இருந்த மரியாதை இன்னும் கூடியது.
“வாங்க கீழ தோட்டத்தில இருக்கலாம்.” என அபி வினோத்தை அழைத்துச் சென்றாள். சோம சேகரும் அவர் அறைக்குச் சென்றார்.
“உன் வீட்டுக்காரர் என்ன சாப்பிடுவார்? நைட்டுக்கு அதே செய்யச் சொல்லலாம்.” என நவீனா கேட்க,
“நீங்க அவரைக் கூப்பிடீங்களா… கூப்பிடாம எப்படி வருவார். அவர் வந்தாலும் சாப்பிட எல்லாம் மாட்டார்.” என்றால் கீர்த்தி.
நவீனா எழுந்து சென்று சோம சேகரிடம் சொல்ல… அவர் தர்மாவுக்கு அழைத்து, “நைட் சாப்பிடுறது போல வாங்க.” என அழைக்க….
“தர்மா இருக்கட்டும் மாமா.” எனச் சொல்ல… சோமசேகர் விடவில்லை. “அதெல்லாம் கண்டிப்பா வரணும். நாங்க டின்னர் ரெடி பண்றோம்.” என வைத்து விட்டார்.
தர்மா அலுவலகத்தில் இருந்து ஏழு மணி போலக் கிளம்பியவன் கீர்த்தியின் வீட்டிற்கு வந்த போது எட்டு மணி ஆகியிருந்தது.
கீர்த்தி வீட்டில் எல்லோரும் ஹாலில் தான் இருந்தனர். கணவனின் கார் உள்ளே நுழையும் சத்தம் கேட்க, கீர்த்தி வாயிலுக்குச் செல்ல… அதற்கு முன்பு அபி ஓடி இருந்தாள்.
காரில் இருந்து இறங்கிய தர்மா தன்னை நோக்கி வந்த மகளைத் தூக்கிக்கொள்ள… பின்னே கீர்த்தி மெதுவாக நடந்து வந்தாள்.
“என் பொண்ணுக்கு தான் என் மேல பாசம் இருக்கு. நீ மெதுவா வர்ற…” எனத் தர்மா மனைவியை வம்பிழுக்க…
“இந்தப் பானை வயிறை வச்சிட்டு நான் ஓடி வரவா?” எனக் கீர்த்திக் கேட்க,
“ஹே… அப்படியெல்லாம் பண்ணிடாத…” என்ற தர்மா மனைவியின் தோளைச் சுற்றி கைப்போட்டுக் கொண்டான்., “உங்க அம்மா வீட்டுக்கு வந்ததும், உன் முகத்துல ஒரு தனிக் கலை தெரியுது.” என அவன் கேலி செய்ய… கணவனைப் பார்த்து, “தெரியுதா… தெரியும் தெரியும்…” என்றால் கீர்த்தியும் கிண்டலாக.
வினோத் வெளியே வந்தவன், “வாங்க…” என அழைக்க… தர்மா அவனுடன் பேசிக்கொண்டே உள்ளே சென்றான்.
சோம சேகரும் நவீனாவும் அவனை வரவேற்க… தர்மா தான் வங்கி வந்த பழங்களை நவீனாவிடம் கொடுக்க, தன் அருகில் இருந்த இருக்கையில் அவனைச் சோமசேகர் உட்கார சொன்னார். அவர்களுடன் வினோத்தும் இருந்தான்.
“நான் இன்னைக்கு அப்படியே வீட்லயே ரெஸ்ட்டா இருந்துட்டேன்.” என்றார் சோமசேகர்.
“படிப்பு முடிச்சிட்டு வந்தாச்சு… அடுத்து எண்ணப் பண்ண போறீங்க வினோத்?” எனத் தர்மா கேட்க,
“அதுதான் இன்னும் சரியா முடிவு பண்ணலை. நம்ம பாக்டரியில இருக்கலாமா… இல்ல வெளிய எங்காவது கொஞ்ச நாள் வேலைப் பார்க்கலாமா யோசிக்கிறேன்.” என்றதும்,
“உங்களுக்குத் தான் சொந்த பாக்டரி இருக்கே… நீங்க வேலை கத்துக்கனும்னு நினைச்சா எங்க இருந்தாலும் கத்துக்கலாம். உங்க பாக்டரியா இருந்தா இன்னும் உரிமையா… எல்லா இடங்களுக்கும் போகலாம். நம்முடையதுன்னா இன்னும் கூடுதல் பொறுப்பு தானே.. யாரோ ஒருத்தரை விட உங்க அப்பாவுக்குக் கீழ இருந்து கத்துக்கும் போது அது உங்களுக்கு ஈஸியா இருக்கும்.”
“வேற ஒரு இடத்தில வேலைப் பழகி, திரும்ப இங்க வந்து அதைச் செய்றதுக்கு…. உங்க இடத்தில இருந்து செய்யும் போது உங்க அப்பாவுக்கும் உதவியா இருக்கும்.” என்றான் தர்மா.
நம் சொந்த பாக்ட்ரி என்றால்… வேலை கற்றுக்கொள்ளாமல் அலட்சியமா இருந்திடுவோமோ… என்ற எண்ணம் வினோதிற்கு இருந்தது. அதையேதான் சோம சேகரும் நினைத்திருந்தார். ஆனால் இப்போது தர்மாவுடன் பேசியபோது, அவன் சொல்வது தான் நல்லது எனத் தோன்றியது.
யாரோ ஒருவர் என் மகனை பழக்குவதற்கு, நானே பழக்குவது நல்லது எனச் சோம சேகரும் நினைத்தார்.
“நாளையில இருந்து பாக்டரிக்கு வா வினோத்.” என்றார் சோமசேகர், வினோத்தும் மனம் தெளிவாக இருக்கச் சரியென்றான்.
“உங்க பிஸ்னஸ் எப்படிப் போகுது?” எனக் கேட்க
“நல்லாப் போகுது மாமா… கீர்த்தி டெலிவரிக்குப் பிறகுதான் இன்னும் விரிவாக்க போறேன்.” என்றான்.
எனக்கு இப்போது இருக்கும் ஒரே வேலை, என் மனைவியைப் பார்ப்பதுதான் எனச் சொல்லாமல் சொன்னான்.
நவீனா அவர்களை உண்ண அழைக்க… எல்லோரும் எழுந்து டைனிங் ஹால் சென்றனர்.
“அப்பா நீங்க எனக்கு ஊட்டுங்க என்ற மகளை ஏன் என்பது போலத் தர்மா பார்க்க…
“மேடம் சாயங்காலம் ஸ்நாக்ஸ் திணற திணற சாப்பிட்டாங்க.” எனக் கீர்த்திச் சொல்ல…
தர்மாவிடம் பாதிச் சப்பாத்தி மட்டும் உண்டுவிட்டு அபி போதும் என ஓடி விட்டாள். நவீனா தர்மாவுக்குப் பார்த்துப் பார்த்துதான் பரிமாறினார். அனால் அவருக்கு அவனிடம் சரளமாக பேச வரவில்லை.
உண்ணும் போதும் தர்மாவும் சோம சேகரும் பேசிக்கொண்டே தான் உண்டனர். உண்டு முடித்து வந்தவனை, “அப்பா, ஒரு நிமிஷம் வாங்களேன்.” என அபி அவனின் கைப் பிடித்து இழுக்க… தர்மா செல்லத் தயங்க, வாங்க நானும் வரேன் எனக் கீர்த்தியும் உடன் வந்தாள்.
மாடியில் இருந்த அவள் அம்மாவின் அறைக்கு அழைத்து வந்தவள், “அப்பா பாருங்கப்பா எவ்வளவு பெரிய பொம்மை வச்சிருக்காங்க.” என அபி காட்ட…
“உங்க அம்மா அவ சைஸ்க்கு வாங்கி வச்சிருக்கா?” எனத் தர்மா சிரிக்க… கீர்த்தி அவனை முறைக்க…
“இதை என்னை எடுத்துக்கச் சொன்னாங்க. நம்ம வீட்டுக்கு எடுத்திட்டு போகலாமா?” என அபி தர்மாவின் காதில் கேட்க, மகள் எதற்கு அழைத்து வந்தால் என அவனுக்குப் புரிந்து விட்டது.
“இவ்வளவு பெரிசு எடுத்து வந்து நம்ம வீட்ல எங்க வைப்ப? கொஞ்ச நாள்ல இதெல்லாம் தூசி வந்து அழுக்காகிடும். அப்புறம் அச்சு அச்சுன்னு தும்முவ… வேண்டாம்.”
“உங்களுக்கு ரொம்பக் கொழுப்பு. நான் இதை எடுத்திட்டு தான் வருவேன்.” எனக் கீர்த்தி ஒரு பெரிய கரடி பொம்மையைத் தூக்க….
“சரி எடுத்திட்டு வா… நீ இல்லாத போது, நான் அதைக் கட்டிபிடிச்சிட்டுத் தூங்கிறேன். உன்னை மாதிரி தான் இருக்கு.” எனத் தர்மா சொன்னதும், கீர்த்திப் பொம்மையைக் கட்டிலில் போட்டு விட்டாள். தர்மா சிரித்துக் கொண்டே அங்கிருந்து சென்றான்.
பொண்ணை ஒரு மாதிரி, பொண்டாட்டியை வேற மாதிரி டீல் பண்ண வேண்டியதா இருக்கே என நினைத்தபடி சென்றான்.
எல்லோரிடமும் சொல்லிக் கொண்டு அப்போதே கிளம்பி விட்டனர். கிளம்புவதற்கு முன்பு தன் அம்மாவை அணைத்தவள், “இருக்கலைன்னு கோவிச்சிக்காத மா…. அப்புறம் வந்து நிறைய நாள் இருக்கேன்.” என்றாள்.
“யாரு நீ? உன் புருஷனை விட்டு இருந்திடுவ? இதை என்னை நம்பச் சொல்ற? உலகத்தில இல்லாத புருஷன் மாதிரி ரொம்ப பண்ற நீ? என்றார் நவீனா.
“இது என்ன அதிசயம். இன்னும் கொஞ்ச நாள்ல… என் மாப்பிள்ளையைப் போல யாரு இருக்கான்னு நீ சுத்திரியா இல்லையா பாரு…” என்றால் கீர்த்திச் சவாலாக….