மூன்று மாத பயிற்சியை முடித்து விட்டு ஒரு வாரம் கழித்து வருவதாகத்தான் நங்கைடமும், வீட்டிலும் ஆதி கூறியிருந்தான். எல்லோருக்கும் ஆனந்த அதிர்ச்சி அளிக்க முன்பே கிளம்பிவிட்டான்.
திருச்சியில் தனது வீட்டிற்கு வந்து பார்க்க, வீட்டில் யாரும் இல்லை. டாலி மட்டும்தான் இருந்தது. தன் அண்ணனுக்கு அழைத்துப் பேச, அவர்கள் அனைவரும் நர்மதாவின் நிச்சயதார்த்த விழாவில் இருந்தனர். ஆதியின் அத்தை டாலியை அழைத்து வரக்கூடாது என்று கண்டிப்பாக சொல்லியிருக்க டாலியை விட்டு விட்டே சென்றனர்.
தன் அண்ணன் மூலமாக அவனது நண்பனின் காரை வாங்கிக்கொண்டு, எப்பொழுதும் போல டாலியை தனியே விட விரும்பாத ஆதி டாலியையும் அழைத்துக்கொண்டு காரில் தன் நங்கையை பார்க்க கரூரை நோக்கி புறப்பட்டான்.
நங்கையின் நினைவுகளுடனும், அவளை பார்க்கப்போகும் மகிழ்ச்சியுடனும், மிகவும் சந்தோஷமாக காரை ஓட்டிக்கொண்டு சென்றான் ஆதி.
டாலியும் வெகு நாட்களுக்கு பிறகு ஆதியை பார்ப்பதால், தன் முகத்தால் முட்டி மோதி தன் அன்பை வெளிப்படுத்திக் கொண்டிருந்தது. தன் இடக்கரத்தால் அதன் தலையை தடவி கொடுத்தவன், “ஆதி சோ ஹேப்பி டாலி. நங்கையை ரொம்ப நாளைக்கு அப்புறம் பார்க்க போறேன்” என கூறினான்.
கரூர் வந்தடைந்து விட்டான். நங்கை வேலை பார்க்கும் பள்ளியைத் தாண்டித்தான் அவளது வீட்டிற்கு செல்ல வேண்டும். ஒரு பூ கடையை பார்த்து நிறுத்தியவன் நங்கைக்கு பூ வாங்கலாம் என இறங்கி சென்றான். டாலி காரிலேயே இருந்தது.
கார் பள்ளியின் எதிர்ப்புறத்தில் நின்றிருந்தது. நங்கை வாட்ச்மேனை தேடிக் கொண்டு வர, டாலி பார்த்துவிட்டது. பூ வாங்கியவன் காருக்குள் ஏறி அமர, கார் கதவை திறந்தான். குரைத்துக் கொண்டிருந்த டாலி வேகமாக காரில் இருந்து இறங்கியது.
“என்னாச்சு டாலி?” என ஆதி கேட்க, அவன் சட்டையின் கை பகுதியை தன் பற்களால் கவ்வி அவனை இழுத்தது.
“என்ன சொல்ற?” என ஆதி மீண்டும் கேட்க, சத்தமாக குரைத்துவிட்டு எதிர்ப்பக்கம் ஓடியது.
“டாலி எங்க ஓடுற?” என கேட்டுக்கொண்டே பின்னே சென்றான் ஆதி.
டாலி வேகமாக பள்ளிக்கூடத்தின் உள்ளே சென்றது. இது நங்கை வேலை பார்க்கும் பள்ளி ஆயிற்றே என நினைத்துக் கொண்டே ஆதியும் உள்ளே சென்றான். டாலி ஒரு கட்டிடத்தின் ஜன்னலுக்கு வெளியே தன் இரண்டு முன்னங் கால்களையும் ஜன்னலில் தூக்கி வைத்தவாறு சத்தமாக குரைத்து கொண்டிருந்தது.
பின்னாலேயே ஓடி வந்த ஆதி டாலியிடம் “என்ன டாலி? என்ன?” என கேட்டுக்கொண்டே உள்ளே பார்த்தான்.
நங்கை மயங்கிக் கீழே கிடக்க, மதன் அவர்களை பார்த்து பயந்து போய் நின்றிருந்தான்.
என்ன நடக்கிறது என்பதை உணர்ந்த ஆதி, “டேய் தெருப்பொறுக்கி***** கதவைத் திற டா. என் நங்கைக்கு மட்டும் எதுவும் ஆச்சு. உன்னை துடிக்க துடிக்க கொல்வேண்டா”என கத்தினான்.
நங்கை மீதிருந்த ஆசைவெறி தலைக்கேறியவன், நங்கையை தூக்கிக் கொண்டு உள்ளே இருந்த அறைக்கு செல்லலாம் என நினைத்து அவள் அருகில் செல்ல, பக்கத்தில் கிடந்த கருங்கல்லை எடுத்து குறி பார்த்து அடித்தான் ஆதி. குறி தவறாமல் அது மதனின் தலையில் பட மயங்கினான் மதன்.
வேகமாக சென்று கதவை அடித்து உதைத்து திறக்க முற்பட, பர்மா தேக்கால் ஆன கதவை ஆதியால் திறக்க முடியவில்லை.
மீண்டும் ஜன்னலுக்கு அருகே வந்து, “நங்கை எழுந்திரு, நங்கை…” என ஆதி கத்த, டாலியும் சத்தமாக குரைக்க அசைவே இல்லாமல் கிடந்தாள் நங்கை.
ஆதி உள்ளே ஆராய்ந்து பார்த்தான். அந்த ஆய்வுக் கூடத்தின் தொடக்கத்தில் மாடிப்படிகள் தெரிந்தது. ஆதி வேகமாக குழாயை பிடித்துக் கொண்டு மேலே ஏறினான். மொட்டை மாடியை வந்தடைந்து அங்கிருந்து கீழே இறங்கி ஆய்வுக்கூடத்தின் உள்ளே வந்துவிட்டான்.
ஓடிச்சென்று நங்கையின் தலையை தன் மடியில் வைத்துக் கொண்டவன், “நங்கை… நங்கை…” என அவள் கன்னத்தை தட்ட அவளிடம் அசைவில்லை.
பக்கத்தில் இருந்த தண்ணீர் கேனில் இருந்து தண்ணீரை எடுத்து வந்தவன், அவள் முகத்தில் தெளிக்க மெல்ல அசைந்தாள் நங்கை.
“நங்கை… நங்கை… இங்க பாரு” என ஆதி கூற, எங்கிருந்தோ ஆதியின் குரல் கேட்பது போல இருந்தது நங்கைக்கு. கண்களைத் திறக்க முடியாமல் “ஆதி… ஆதி….” என அரற்றினாள்.
“ஆதிதான் நங்கை… உன் ஆதிதான். உன் கிட்ட வந்துட்டேன். கண்ணை திறந்து பாரும்மா” என்றான் ஆதி.
சிரமப்பட்டு நங்கை கண்களைத் திறக்க, ஆதியை பார்த்ததும் முகம் மலர்ந்தாள். அவளை தன் நெஞ்சோடு அணைத்துக் கொண்டான் ஆதி. அவளை கைத்தாங்கலாக எழுப்பியவன் தன்னோடு சேர்த்து அணைத்து நடக்க வைத்தான். கீழே விழுந்து உளறிக் கொண்டிருந்த மதனின் முகத்தில் ஆவேசத்துடன் தன் ஷூ அணிந்த காலால் நன்றாக மிதித்தான் ஆதி.
அவனது கோபத்தை பார்த்தவள், “வேண்டாங்க, ஏதாவது ஆகிடப்போகுது, இவனை போலீசில் ஒப்படைச்சிடலாம்” என்றாள்.
“இவனை அப்படியே விட சொல்றியா? என்ன தைரியம் இருந்தா இப்படி பண்ணியிருப்பான். இவனை…” என்றவன் நங்கையை உட்கார வைத்துவிட்டு தன் ஆத்திரம் தீருமட்டும் அடித்து தீர்த்தான்.
மதன் அனுப்பும்போது தயக்கத்தோடே சென்ற வாட்ச்மேன், யோசித்து பிரின்சிபாலுக்கு அழைத்து சொல்லிவிட, அவனை உடனே பள்ளிக்கு திரும்புமாறு கூறி விட்டு அவரும் பள்ளிக்கு வந்து விட்டார்.
விஷயத்தைத் தெரிந்து கொண்ட பிரின்சிபால், பள்ளியின் முன்னாள் தாளாளர் கணேசனுக்கும் போலீசுக்கும் உடனே தகவல் அளித்து விட்டார்.
டாலி உள்ளே வந்து நங்கையிடம் அன்பாய் தன் முன்னங்கால்களை நீட்ட, நங்கை பயமாய் ஆதியை பார்க்க, அவளின் கைகளைப் பிடித்து டாலியின் தலையை தடவ செய்தான்.
“டாலி இல்லைன்னா நீ இங்க இருக்கிறது எனக்கு தெரிஞ்சு இருக்காது நங்கை. நினைச்சு பார்க்கவே பயமாயிருக்கு. அவனை…” என மீண்டும் மதனை அடிக்க ஆதி பாய, அவன் கைகளைப் பிடித்துக் கொண்டாள் நங்கை.
மதன் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டான். பள்ளியின் தாளாளர் கணேசன் நங்கையிடம் மன்னிப்பு கேட்டு, “இனி அந்த ராஸ்கல் என் பொண்ணுக்கு வேண்டாம். இந்த கேசை நானே பாத்துக்கிறேன்” என்று கூறினார்.
ஆதி அவருக்கும், முதல்வருக்கும் நன்றி கூறிவிட்டு நங்கையை அழைத்துக்கொண்டு தமிழரசுவின் வீட்டிற்கு சென்றான்.
“நீங்க இங்கேயே இருங்க. நான் போய் சொல்லிட்டு வந்துடுறேன்” என்றாள் நங்கை.
அவளைப் பார்த்தவன், “இன்னும் நீ எதையும் பெருசாக்காத நங்கை. தப்பு பண்றது மனித இயல்புதான். நானே ஒருகாலத்தில் பொறுப்பில்லாம இருந்து அப்புறம் மாறலையா? ஒருத்தவங்க தப்புக்கு வருந்தி மாறும்போது அவங்கள புறக்கணிக்கக் கூடாது. நானும் வரேன்” என்றான். சரி என்றவள் ஆதியுடனும் டாலியுடனும் வீட்டிற்கு சென்றாள்.
பிரேமாவும் தமிழரசுவும் ஆதியிடம் மன்னிப்பு கேட்டுக்கொண்டனர். பெருந்தன்மையுடன் “மன்னிப்பு எல்லாம் வேண்டாம். பழசையெல்லாம் மறந்து விடலாம்” என்று கூறிவிட்டான் ஆதி. நங்கையையும் உடன் அழைத்துக் கொண்டு திருச்சி புறப்பட்டான்.
திருச்சியில் ஆதியின் வீட்டில் அவனது அறையில் இருந்தனர் நங்கையும் ஆதியும்.
“இன்னைக்கு டாலியோட நான் அங்க வரலைன்னா..?? என ஆதி கூற, “இதையே பேசிக்கிட்டு இருக்காதீங்க, வேற ஏதாவது பேசுங்க” என்றாள் நங்கை.
“என்ன பேச? நம்ம அதிகமாவே பேசிட்டோம். இவ்வளவு நாள் ஃபோன்ல அதைத்தானே பண்ணிக்கிட்டு இருந்தோம். ஏதோ ஒரு நாள்… ஒரே ஒரு நாள்… வருண பகவான் கருணை காட்டி மழை பெய்ய வச்சி, என் வாழ்க்கையில ஒளியேத்தி வச்சார்”
“அந்த ஒரு நாளையே நெனச்சுக்கிட்டு எத்தனை நாளை நானும் ஓட்டுறது. இனிமே முடியாது” என்றவன் நங்கையை படுக்கையில் தள்ளி தானும் விழுந்தான்.
“என்ன அவசரம்?” என நங்கை கேட்க, “என்ன அவசரமா…? எனக்கப்புறம் கல்யாணம் ஆனவங்க எல்லாம் புள்ள குட்டியோட இருக்காங்க. நான் இன்னும் ஒருநாள் நடந்ததை நினைச்சுகிட்டே வாழ்ந்துட்டு இருக்கேன். இதுவே ரொம்ப லேட்” என ஆதி கூற, நங்கை ஏதோ சொல்ல வாய் திறக்க, ‘இதுக்கு மேலே எதுவும் பேசாதே’ என்பதாய் அவள் வாயை அடைத்தான்.
காத்திருந்த காதல் தம்பதிகள் இருவரும் ஆத்மார்த்தமாக காதல் செய்ய ஆரம்பித்தனர்.
சில நாட்கள் ஆதியும் நங்கையும் இணைந்திருக்க, மீண்டும் பயிற்சிக்காக நாக்பூர் சென்றான் ஆதி.
மீண்டும் நங்கை ஆதியின் நினைவுகளுடன் நாட்களை கழித்தாள். நங்கை ஆதியின் வீட்டிலேயே இருந்து கொண்டாள். விசாலம், சந்திரா, அம்பிகா, டாலி இவர்களுடன் பகலில் பொழுது செல்ல, மாலை வேளைகளில் பார்த்திபன் சம்யுக்தாவுக்கு சொல்லிக் கொடுப்பது, விளையாடுவது என பொழுதை கழித்தாள்.
இரவில் ஆதியுடன் பேசிவிட்டுதான் படுக்க செல்வாள். எவ்வளவு நேரம் பேசினாலும் இருவருக்கும் பத்தாது. ஆதியின் நினைவுகள் அவளை வருத்தும். இவ்வளவு நாட்கள் பிரிந்து இருந்தாலும் மீண்டும் சந்தோஷமாக ஆதியுடன் வாழ்ந்துவிட்டு அதற்குப் பின்னரான இந்த பிரிவு நங்கையை மிகவும் வாட்டி வதைத்தது.
அவளின் கஷ்டம் ஆதிக்கு தெரியாதா என்ன? மீண்டும் அவளை பள்ளிக்கு வேலைக்கு செல்ல சொன்னான். அவளும் சரி என்று செல்ல ஆரம்பித்தாள். அதற்குப் பின்னர் ஓரளவு தன்னை தேற்றிக் கொண்டாள்.
அவன் வரும் நாட்களை எண்ணிக் கொண்டிருந்தாள். இருவரும் தனித்தனியே பிரிந்திருந்தாலும், மனதில் ஒருவர் மீது மற்றொருவருக்குள்ள காதலை வளர்த்துக் கொண்டிருந்தனர்.
நங்கை ஆதியின் வீட்டில் தன்னை பொருத்திக் கொண்டாள். அம்பிகா தன் சொந்த சகோதரியை போல பார்த்துக் கொண்டாள். சந்திராவும், விசாலமும் ஆதி இல்லாததால் அவனாகவே நங்கையை பாவித்து பார்த்துக்கொண்டனர். ஆதி அருகில் இல்லாத குறையை தவிர வேறெதுவுமில்லை நங்கைக்கு.
மாதங்கள் ஓடிச் செல்ல, ஒரு ஞாயிற்றுக் கிழமையில் மதிய உணவருந்திவிட்டு தூங்கிக்கொண்டிருந்தாள் நங்கை. எப்பொழுதும் பகலில் உறங்க மாட்டாள். இரவு ஆதியின் நினைவுகளால் சரியாக உறங்காமல், இன்று பகலிலேயே உறங்கினாள்.
உறக்கம் கலைந்து கண்களைத் திறக்க பக்கத்தில் ஆதி சிரித்துக்கொண்டே படுத்திருந்தான். கனவோ என நினைத்து அவன் கன்னத்தைக் கிள்ளிப் பார்க்க, “என்னை பார்த்துட்டு ஆசையா வந்து கட்டிப்பிடிச்சி முத்தம் கொடுப்பன்னு பார்த்தா, இப்படி கிள்ளுறியே?” என ஆதி கேட்டதுதான் தாமதம், ஆதியை கட்டியணைத்துக் கொண்டாள் நங்கை.
“இன்னும் பத்து நாள் ஆகும்னு சொல்லியிருந்தீங்க?” எனக்கேட்டாள்.
“திடீர்னு வந்தா ஸ்பெஷலா ஏதாவது கிடைக்கும்னு தான்” என்றான் ஆதி.
“ரொம்ப மிஸ் பண்ணிட்டேன் உங்களை” என நங்கை கூற,
“எவ்ளோ மிஸ் பண்ணின? சொல்லு கேட்போம்” என்றான் ஆதி.
“ரொம்ப ரொம்ப மிஸ் பண்ணினேன்” என்றாள் நங்கை.
“அதுதான் எவ்வளவுன்னு சொல்லு” என்றான் ஆதி.
அவனிடம் இருந்து விலகியவள், “அதான் சொல்றேன்ல்ல ரொம்ப மிஸ் பண்ணினேன்னு. சொல்லு சொல்லுன்னா வேற என்ன சொல்ல?” என பாவமாய் கேட்டாள்.
“பின்ன எவ்வளவு நாள் கழிச்சு வந்திருக்கேன், சும்மா கட்டிப்பிடிச்சுக்கிட்டு, மிஸ் பண்ணிட்டேன் மிஸ் பண்ணிட்டேன்னு சொன்னா…? நான் சொல்லவா உன்னை எவ்ளோ மிஸ் பண்ணினேன்னு” என கேட்ட ஆதி அவளுக்கு காதலின் பாஷையில் புரியவைக்க, புரிந்துகொண்ட நங்கையும் ஆதியின் பாணியிலேயே அவனை எவ்வளவு மிஸ் பண்ணினாள் என சொல்ல ஆரம்பித்தாள்.
ஆதியின் அணைப்பில் இருந்த நங்கை “ஐயோ எல்லோரும் நம்மள பத்தி என்ன நினைப்பாங்க?” என பதறிப்போய் படுக்கையிலிருந்து எழுந்திருக்க, அவளை பிடித்து இழுத்து தன் மேலே போட்டுகொண்டவன், “இன்னைக்கு நான் வர்றது உனக்குதான் தெரியாது. மத்த எல்லோருக்கும் தெரியும். என்னோட அண்ணி எல்லாரையும் மேட்னி ஷோ க்கு கூட்டிட்டு போயிட்டாங்க. நைட்டு தான் வருவாங்க” என்றான்.
“எனக்கு தெரியவே இல்லை” என்றாள் நங்கை.
“நீ நல்லா தூங்கிட்டு இருந்த” என்றவன், “உன்னை நான் எவ்ளோ மிஸ் பண்ணினேன்னு சொன்னேனே, உனக்கு புரிஞ்சுதா?” என கேட்டான்.
நங்கை வெட்கத்தில் சிரிக்க, “என்ன புரியலையா..?? என்ன நங்கை நீ? திருப்பி சொல்றேன், நல்லா புரிஞ்சுக்கோ” என மீண்டும் புரியவைக்க ஆரம்பித்தான் ஆதி.
மிகவும் அழகான காதல் வாழ்க்கை வாழ்ந்தனர் இருவரும்.
இப்போது ஆதி திருச்சியில் இன்கம் டாக்ஸ் டிபார்ட்மெண்டில் அசிஸ்டெண்ட் கமிஷனர். அவனை ஒரு காலத்தில் மதிக்காமல் நடந்து கொண்டவர்கள் இன்று “எனக்கு முன்னாடியே தெரியும் நீ பெரிய ஆளா வருவேன்னு” என சொன்னார்கள்.
இன்னும் பழனிவேலிடம் எக்குத்தப்பாகதான் ஏதாவது பேசிக் கொண்டிருக்கிறான். ஆனால் பழனிவேல் கோபப்படுவதில்லை. ஆதியின் பேச்சை ரசிக்கிறார். தனது கடைக்கு வரும் வாடிக்கையாளர்களிடம் தன் மகன்களின் பெருமையை சொல்வதே பழனிவேலுக்கு வாடிக்கையானது.
தமிழரசுவும், பிரேமாவும் எத்தனையோ முறை வீட்டில் வந்து தங்கும்படி அழைத்தும், நங்கை ஆதியுடன் ஏதேனும் விசேஷம் என்றால் சென்று வருவாளே ஒழிய தங்க மாட்டாள். அவளுக்கு மனதிலே வடு இன்னும் இருந்தது. காலம் செல்ல செல்ல மாறலாம்.
நங்கையின் தாய் மாமா மகளுக்கு திருமணம் என்று நங்கையும் ஆதியும் சென்றிருந்தனர். எப்போதுமே நங்கையை தாங்குபவன், இப்போது பூவைப்போல பார்த்துக்கொண்டான்.
பின்னே நங்கை கருவுற்றிருந்தாள். ஏழாவது மாதம் நடந்து கொண்டிருந்தது. வெண்பாவும் திருமணத்திற்கு வந்திருந்தாள். நங்கை வெண்பாவிடமும் ஒரு இடைவெளியை கடைபிடித்தாள். ஆதி அப்படி எல்லாம் இல்லை. நன்றாகவே பழகினான். அவர்களும் ஆதியிடம் மன்னிப்பு கேட்டிருந்தனர்.
தென்றலின் கணவன் அசோக், சுற்றி இருப்பவர்களிடம் “என் சகலை, இன்கம்டாக்ஸ்ல அசிஸ்டென்ட் கமிஷனர்” என அறிமுகப் படுத்தி பெருமைப்பட்டு கொள்வான். ஆதி பிகு எதுவும் செய்யாமல் அவனுடனும் நன்றாகவே பழகினான்.
இப்படியாக எல்லோரும் மாறி இருந்தாலும் ஆதி மட்டும் மாறவில்லை. சாலா பாட்டிக்கு இன்னும் அதே செல்ல பேரன்தான். அம்பிகாவுக்கு அதே செல்லத் தம்பிதான். டாலியை இன்னும் அக்கறையுடன் தான் கவனித்துக் கொள்கிறான்.
நங்கையுடன் எப்படி எல்லாம் வாழ வேண்டும் என்று கனவு கண்டு கொண்டிருந்தானோ, அப்படி எல்லாம் ரசித்து வாழ்ந்தான். நங்கையின் வளைகாப்பை தன் வீட்டிலேயே வைத்துக் கொண்டான். பிரசவத்துக்கு கூட நங்கையை பிறந்த வீடு அனுப்பவில்லை. தன்னுடனேயே வைத்துக் கொண்டான்.
சுகப்பிரசவத்தில் பெண் குழந்தையை ஈன்றெடுத்தாள் நங்கை. குழந்தையை கையில் வாங்கிய விசாலம் பாட்டி, “என் ராசாத்தி, அப்படியே என் ராசா மாதிரி இருக்கா என் கொள்ளுப் பேத்தி” என கொஞ்சினார்.
சோர்வில் கண்மூடிப் படுத்திருந்த நங்கை தன் பாதங்களில் முத்தத்தின் ஈரம் உணர்ந்து கண்விழித்தாள். ஆதிதான். அவள் அருகில் வந்த ஆதியின் கைகளை பிடித்தவள், சோபையாய் சிரிக்க, “ரொம்ப கஷ்டப்பட்டியா?” என கேட்டான்.
குழந்தை பிறந்த பிறகும் நங்கை தாய்வீடு செல்லவில்லை. ஆதியுடன்தான் இருந்தாள். எல்லோருடைய அன்பிலும் கவனிப்பிலும் தாய் வீட்டின் ஏக்கமே தோன்றவில்லை நங்கைக்கு.
பிரேமாவுக்குதான் வருத்தமாக இருந்தது. தன் பெண் இத்தனை வைராக்கியமாக இருக்கிறாளே என கவலைப்பட்டார். தமிழரசுவிடம் சொல்லவும் செய்தாள். “இப்போ வருத்தப்பட்டு என்ன செய்றது? நானும் கேட்டுப் பார்த்துட்டேன், வரலைனு சொல்லிட்டா. விடு, போக போக சரியாகிடும்” என்றார் தமிழரசு.
ஆதியும், நங்கையும் தங்கள் மகளுக்கு ‘தமிழ்நிலா’ என பெயரிட்டனர்.
ஒரு வயது நிரம்பப் போகும் தமிழ்நிலாவுக்கு குலதெய்வ கோயிலில் மொட்டை அடித்து காது குத்தும் விழா நடைபெற்றுக் கொண்டிருந்தது. சொந்தங்கள் அனைவரையும் அழைத்து சிறப்பாக கொண்டாடினான் ஆதி.
காதுகுத்து முடிந்துவிட்டாலும், கூட்டத்தைப் பார்த்து அழுது கொண்டே இருந்தது குழந்தை. கோவிலுக்கு வெளியே வந்து அழும் குழந்தையை சமாதானப் படுத்திக் கொண்டிருந்தான் ஆதி.
கூட்டத்தில் இருந்து வெளிவந்ததும் பயம் தெளிந்து குழந்தை கொஞ்சம் ஆசுவாசம் ஆனது. வெளியிலேயே வைத்து வேடிக்கை காட்டிக் கொண்டிருக்க, அவர்களை தேடிக் கொண்டு வந்தாள் நங்கை.
“அப்பாவும் பொண்ணும் இங்க என்ன பண்றீங்க? குழந்தைக்கு அர்ச்சனை செய்யணும், உள்ள வாங்க” என்றாள் நங்கை.
“உள்ள வந்தா என் பொண்ணு அழுவா” என்றான் ஆதி.
அவனை முறைத்த நங்கை குழந்தையை கையில் வாங்க முற்பட, ‘வரமாட்டேன்’ என்பதாய் ஆதியின் கழுத்தை கட்டிக் கொண்டது.
“ஓஹோ நிலாக்குட்டி அம்மாட்ட வர மாட்டீங்களா?” என நங்கை கேட்டுக்கொண்டே கட்டாயப்படுத்தி குழந்தையை தூக்க, குழந்தை மீண்டும் அழ ஆரம்பித்தது.
குழந்தையை மீண்டும் ஆதியிடமே கொடுத்துவிட்டு அவனை பார்த்து முறைக்க, தன் தந்தையிடம் வரவும் சமர்த்தாய் குழந்தை அழுகையை நிறுத்தி விட, சிரித்த ஆதி, “நான் என்ன பண்றது? என் பொண்டாட்டி மாதிரியே என் பொண்ணுக்கும் பிடிவாதம் அதிகம்” என்றான்.
“சீக்கிரம் சமாதானப்படுத்தி அழைச்சிட்டு வாங்க” என நங்கை கூறிவிட்டு உள்ளே செல்ல முற்பட, ஒரு கையில் குழந்தையை பிடித்தவன், மறு கையால் அவளை பிடித்து நிறுத்தினான்.
“பாரு எப்படி வேர்த்து வழியதுன்னு? இங்க நல்லா காத்து வீசுது. கொஞ்ச நேரம் இங்கேயே இரு” என்றவன், தன் கைக்குட்டையை எடுத்து நங்கையின் வியர்வையை துடைத்து விட்டான்.
“போதும் யாராவது பார்க்கப் போறாங்க” என்றாள் நங்கை.
“பார்த்தா பார்க்கட்டும், என் பொண்டாட்டிக்கு நான் பண்றேன். எவன் என்னை கேட்க முடியும்?” என்று அவனது செயலிலேயே கண்ணாக இருந்தான் ஆதி.
ஆதியை கணவனாகப் பெற்றதில் மனம் மகிழ்ச்சியில் விம்ம அவனைப் பார்த்து சிரித்தாள் நங்கை.
தமிழ்நங்கையை பார்த்தவுடன் காதல் கொண்டு, காதல் கை சேராமல், பொறுப்பில்லாமல் ஊர் சுற்றியவன், விதியின் வசத்தால் அவளையே மணந்து, மனைவியின் துணையுடன் வாழ்க்கையையும் வெற்றிகொண்ட ஆதித்திய வேந்தன் மனநிறைவுடன் நங்கையை பார்த்து நின்றான்.
இனி அவர்கள் வாழ்வில் இனிய கீதம் மட்டுமே இசைக்கும்.