NVNN-19

அத்தியாயம் 19

ஆதி பயிற்சிக்காக முசோரி கிளம்ப இன்னும் நான்கு நாட்களே இருந்தன. அன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் வீட்டிலிருந்த தன் அண்ணன் பிள்ளைகளுடன் ஆதி கேரம் விளையாடிக் கொண்டிருந்தான்.

யாரோ தன் கண்களைப் பொத்த இன்பமாய் அதிர்ந்தான் ஆதி. அவனுக்கு தெரியாதா அவன் நங்கையை. “எப்ப வந்தீங்க நங்கை?” என ஆதி கேட்க, கைகளை விலக்கி “எப்படி கண்டுபிடிச்சீங்க?” என நங்கை ஆச்சரியமுடன் கேட்டாள்.

“நீங்க வரும்போதே சித்தப்பா உங்களை பார்த்திருப்பார். என்ன சித்தப்பா?” என சம்யுக்தா கேட்க, “ஆமாம்” என்றவன், “போங்க, போய் பாட்டிட்ட சித்தி வந்திருக்காங்கன்னு சொல்லுங்க” என இருவரையும் உள்ளே அனுப்பினான்.

“என்னை பாத்துட்டீங்களா?” என நங்கை கேட்க, இல்லை என தலையாட்டியவன், “உங்க டச்லேயே, என்னால உங்கள ஃபீல் பண்ண முடியும்” என காதலாய் கூறினான். நங்கை தன்னைத் தேடி வந்தது அவ்வளவு மகிழ்ச்சியாக இருந்தது ஆதிக்கு.

“சொல்லவே இல்லை. என்ன எனக்கு சர்ப்ரைஸா?” எனக்கேட்டான் ஆதி.

“ஆமாம்” என நங்கை கூறும் பொழுதே விசாலம், சந்திரா, அம்பிகா அனைவரும் வந்து விட்டனர்.

விஜய்யும், பழனிவேலும் வீட்டில் இல்லை. நங்கை தான் வாங்கி வந்த பரிசுப் பொருட்களை அனைவருக்கும் கொடுக்க எல்லோருக்குமே மகிழ்ச்சியானது. அனைவரும் சேர்ந்து உணவருந்தினர். சிறிது நேரம் பேசியிருந்து விட்டு ஆதிக்கும் நங்கைக்கும் தனிமை கொடுத்து விட்டு எல்லோரும் சென்று விட்டனர்.

தன்னுடைய அறைக்கு நங்கையை அழைத்துச் சென்றவன், இரு கைகளாலும் அவளை தூக்கி தட்டாமாலை சுற்றினான். “போதும், விடுங்க விழுந்திட போறேன்” என நங்கை கூற, அவளை விடுவதுபோல விட்டு, பயமுறுத்தி மீண்டும் விழாமல் பிடித்துக் கொண்டான்.

அவளை கீழே விடாமல் நேரே படுக்கையில் விட்டான். நங்கை சங்கடமாய் ஆதியை பார்க்க, “என்னாச்சி” எனக்கேட்டான் ஆதி.

நங்கை தனக்கு மாதவிலக்கு ஆகியிருப்பதாக கூற, ஆதிக்கு மிகுந்த ஏமாற்றமாக போய்விட்டது. ஆனால் ஒரு நொடிதான், மீண்டும் உற்சாகமாய் “நீங்க என்னை பார்க்க வந்ததே போதும். இப்போ என் பக்கத்துல என் பொண்டாட்டி இருக்காங்க. அதுவே பெரிய சந்தோஷம்” என்றான் ஆதி.

“சாரி” என் நங்கை கூற, “எதுக்கு சாரி? இதுக்கு நீங்க என்ன பண்ணுவீங்க? அதை விடுங்க. உங்களுக்கு என்ன வேணும்? சொல்லுங்க. வெளியில போய் வாங்கிட்டு வரலாம்” என ஆதி கேட்டான்.

“எனக்கு ஒன்னும் வேண்டாம்” என்றாள் நங்கை.

“நீங்க மட்டும் எனக்கு சர்ப்ரைஸ் கிஃப்ட் கொடுத்தீங்கல்ல. நான் ஏதாவது தர வேண்டாமா?” என ஆதி கேட்க, ஆதியை பார்த்து ஒருக்களித்து படுத்தவள் “நான் கேட்கிற கிஃப்ட நீங்க தாங்க” என்றாள் நங்கை.

“பெருசா கேட்றாதீங்க. வேலைக்கு போய் சம்பளம் கிடைச்சதும் என்ன வேணா வாங்கி தருவேன். இப்போ பட்ஜெட்டுக்குள்ள தான். நம்ம குடியிருந்த வீட்டுக்கு அட்வான்ஸ் கொடுத்தோம் இல்லையா? அந்தப் பணம் திரும்பி கொடுத்துட்டாங்க. இப்போ டெல்லி போயிட்டு வந்த செலவு போக மீதி பணம் கொஞ்சம் இருக்கு” என்றான் ஆதி.

“ரொம்ப எல்லாம் நான் செலவு வைக்க மாட்டேன். கவலைப்படாதீங்க. நான் கேட்கிற கிஃப்ட்டே வேற” என்றாள் நங்கை.

“என்ன வேணும் கேளுங்க” என்றான் ஆதி.

“நீங்க இப்படி வாங்க போங்கன்னு பேசுறது எனக்கு பிடிக்கல. உரிமையா வா போன்னு பேசணும். அதுதான் நான் கேட்கிற கிஃப்ட் “ என்றாள் நங்கை.

“ இது என்னங்க இப்படி ஒரு கிஃப்ட்”

“இப்படி வாங்க போங்கன்னு கூப்பிட்டா எனக்கு பிடிக்கல. ஏதோ மிஸ் ஆகற மாதிரி இருக்கு. எனக்காக ப்ளீஸ்…”

“உடனே எப்படி மாத்திக்கிறது?” எனக் கேட்டான் ஆதி.

“எல்லாம் மாறும், எங்க சொல்லுங்க” என்றாள் நங்கை.

“என்னங்க இது?” என ஆதி கேட்க, நங்கை முறைத்தாள்.

தன் இரு கண்களையும் மூடிக்கொண்டவன், “உன்னை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு நங்கை. நீதான் எனக்கு எல்லாம்” என்றவன் சிறிது இடைவெளி விட்டு “நீ என்னை ரொம்ப படுத்துற” எனக்கூறி கண்களைத் திறக்க, “அவ்வளோதான்” எனக்கூறி கைதட்டிச் சிரித்தாள் நங்கை. அவனும் நங்கையின் அருகில் படுத்துக்கொண்டான்.

‘எத்தனை மாசம் ஆயிடுச்சு இப்படி உங்க கூட, உங்க பக்கத்துல படுத்து” என்றவன் அவளை இறுக்கியணைக்க, “வலிக்குது” என்றாள் நங்கை.

கொஞ்சம் தளர்த்தியவன் “இந்த தலையணையை பாருங்க… ப்ச்… பாரு இதுக்குதான் என் கஷ்டம் தெரியும். இதைத்தான் இவ்வளவு நாள் கட்டி பிடிச்சுட்டு தூங்குவேன். தெரியுமா?” என பாவமாக கூறினான்.

“இன்னும் கொஞ்ச நாள் தானே” எனக் கேட்டாள் நங்கை.

“என்ன கொஞ்ச நாள்? மூணு மாசம் ட்ரெய்னிங். அதை சக்ஸஸ்ஃபுல்லா முடிச்சுட்டா அப்புறம் 16 மாசம் திருப்பியும் ட்ரெய்னிங் இருக்கு, நாக்பூர்ல” என்றான் ஆதி. கவலையாய் நங்கை ஆதியை பார்க்க, ஆதியும் சோகமாய் நங்கையை பார்த்தான்.

“நான் போன ஜென்மத்துல யாருடைய லவ்வையோ பிரிச்சி வெச்சுட்டேன்னு நினைக்கிறேன். அதான் இப்போ என் பொண்டாட்டி கூட சேர்ந்து வாழ முடியாம அவஸ்தைப் படுறேன்” என்றான் ஆதி.

“மூணு மாசம் ட்ரெய்னிங் முடிச்சுட்டு இங்க வருவீங்கதானே” என நங்கை கேட்க, “அடுத்த நாளே உன்னை பார்க்க ஓடி வந்துடுவேன்” என்றான் ஆதி.

“எங்கேயாவது வெளியில் போகலாமா?” என ஆதி கேட்க, “வேண்டாங்க… வெளியில போனா உங்க கூட தனியா இருக்க முடியாது. உங்க கூட இப்படியே இருந்துக்குறேன்” என்று அவன் நெஞ்சில் தலை வைத்து படுத்துக் கொண்டாள். ஆதி நங்கையின் தலையை வருடி கொடுக்க, நங்கை கண்மூடி இருந்தாள்.

தன்னுடைய நெஞ்சத்தில் ஈரத்தை உணர்ந்தவன், நங்கையின் முகத்தை தூக்கி பார்க்க, அவள்தான் அழுது கொண்டிருந்தாள்.

“இப்படி அழுதா நான் அங்க எப்படி நிம்மதியா இருப்பேன்?” என ஆதி கேட்க, உடனே தன் கண்களைத் துடைத்துக் கொண்டவள், “எப்பவும் ஒன்னும் அழுதிட்டே இருக்க மாட்டேன். உங்க கூட சேர்ந்து வாழனும்னு நினைக்கிறப்போ, அது தள்ளி தள்ளி போனா கஷ்டமா இருக்காதா. அதான் அழுகை வந்துடுச்சு. இனிமே அழ மாட்டேன்” என கூறும் பொழுதே கண்ணிலிருந்து மீண்டும் கண்ணீர் வர, ஆதிக்கும் அழுகை வருவது போல தான் இருந்தது.

சிரமப்பட்டு தன்னை அடக்கிக் கொண்டவன், “மூணு மாசம் கழிச்சு நான் வரும்போது, உன்னை இங்கே அழைச்சிட்டு வந்துடறேன். அதுக்கப்புறம் நீ இங்கேயே இரு. கரூர் போகவேண்டாம். இடையில ஒரு நாள் லீவ் கிடைச்சா கூட நான் உன்னை பார்க்க வந்துடுவேன்” எனக்கூற நங்கை சம்மதமாய் தலையாட்டினாள். சிறிது நேரம் இருவரும் மௌனமாய் இருந்தனர்.

பின்னர் ஆதிக்கு பேக் செய்ய உதவினாள் நங்கை. அவனுடைய வாலட் எடுத்து தன்னுடைய ஏடிஎம் கார்டை அதில் வைத்தாள்.

“என்ன இது? இதுல எதுக்கு வைக்கிற?” எனக் கேட்டான் ஆதி.

“இது என்னோட சேலரி கார்டு. உங்களுக்கு யூஸ் ஆகும்” என்றாள் நங்கை.

“எனக்கு வேண்டாம்” என்றான் ஆதி.

“வேணுமா வேண்டாமான்னு நான் கேட்கவே இல்லையே” என்றாள் நங்கை.

“எல்லாத்துலேயும் பிடிவாதம்” என்றான் ஆதி.

சிரித்துக் கொண்டாளே தவிர பதில் ஒன்றும் கூறவில்லை. மாலையில் தேநீர் அருந்திவிட்டு நங்கை புறப்பட ஆதியும் அவளுடன் வந்தான். பேருந்தில் ஏற்றிவிட்டு சென்று விடுவான் என நங்கை நினைத்திருக்க, அவனும் பேருந்தில் ஏறினான்.

“நீங்களும் வர்றீங்களா? வேண்டாம்” என நங்கை கூற, “உன் அம்மா வீட்டுக்கு எல்லாம் நான் வரலை. வீடு வரையிலும் உன்னை விட்டுட்டு வந்துடுறேன்” என்றான் ஆதி.

“எதுக்கு வீண் அலைச்சல்” என நங்கை கூற, “எது வீண் அலைச்சல்? ரெண்டு மணி நேரம் உன் கூட இருக்க போறேன். திரும்பி வரும்போது தான் கடியா இருக்கும். அது பரவாயில்லை” என்றான் ஆதி.

பேருந்தில் இருவர் அமரும் இருக்கையில் ஜன்னலோரம் நங்கையை அமரவைத்து, பக்கத்தில் தானும் அமர்ந்து கொண்டான். மாலை வேளையில் எதிர்காற்று வீச, இசைஞானியின் பாடல்கள் பேருந்தில் ஒலிக்க, அவளின் கை கோர்த்து பயணம் செய்வது மிகவும் இதமாய் இருந்தது ஆதிக்கு. சுற்றிலும் ஆட்கள் இருந்தாலும் ஒருவரின் அருகாமையை மற்றொருவர் ரசித்து பயணம் செய்தனர்.

நங்கையை வீடு வரையிலும் விட்டவன் “வீட்டுக்கு வரவா?” என நங்கையிடம் கேட்க, அவளின் முறைப்புக்கு ஆளாகி, பின் அவளை சமாதானம் செய்து புறப்பட்டு விட்டான்.

நங்கை வீட்டுக்குள் வர, “என்னம்மா தனியாவா வர்ற? மாப்பிள்ளை வரலையா?” என கேட்டார் தமிழரசு.

“இல்லப்பா என் கூட தான் வந்தார். என்னை இங்கே வரையிலும் விட்டுட்டுதான் கிளம்பினார். நான் தான் இங்க வர வேண்டாம்னு அனுப்பி வச்சிட்டேன்” என்றாள் நங்கை.

“என்னம்மா உங்கம்மா பண்ணினதை மனசுல வெச்சுக்கிட்டு இப்படி பண்ணிட்டியே மா?” என தமிழரசு கேட்க, பிரேமாவும் பக்கத்தில்தான் உட்கார்ந்து இருந்தார்.

“என்னை ஏன் குறை சொல்றீங்க. நானா அவரை வீட்டுக்கு வர வேண்டாம்னு சொன்னேன்?”

“நீ வெண்பா ரிசப்ஷன் அன்னைக்கு வாங்கன்னு கூட கூப்பிடலை. அதான் நங்கை அவரை இங்கு அழைச்சிட்டு வர மாட்டேங்குறா” என்றார் தமிழரசு.

“அன்னைக்கு எத்தனை பேர் நம்மகிட்ட வந்து படிக்கிற பொண்ணுக்கு ஏன் அவசரமாக கல்யாணம் பண்றீங்க? கல்யாணத்துக்கு கூப்பிடாம ஏன் ரிசப்ஷனுக்கு கூப்பிடுறீங்கன்னு எல்லாம் கேட்டிருப்பாங்க? நாம என்னென்ன சொல்லி சமாளிச்சோம். மறந்துட்டீங்களா? இதெல்லாம் யாரால?” எனக் கேட்டார் பிரேமா.

“யாரால?” என கத்தினாள் நங்கை.

“என்னடி சத்தம் போடுற? யாரால… எல்லாம் உன் புருஷனாலதான்” என்றார் பிரேமா.

“என் புருஷனாலதான் உங்களுக்கு எல்லாம் அவமானம் ஆயிடுச்சு. அப்படித்தானே?” எனக் கேட்டாள் நங்கை.

“ஆமாம்” என பிரேமா கூற,

“உங்களையெல்லாம் அவமானப்படுத்துனவரு எதுக்காக இங்க வரணும். அதான் வர வேண்டாம்னு சொல்லிட்டேன்” எனக் கூறி விட்டு தன் அறைக்குள் சென்று விட்டாள் நங்கை.

“பிரேமா நீ நடந்துக்கிறது கொஞ்சம் கூட சரியில்லை. அவர் கல்யாணத்தை பண்ணி வச்சது எனக்கும் வருத்தம்தான். கல்யாணம் பண்ணிகிட்டவங்களையே நம்ம ஏத்துக்கிட்டோம்தானே. உனக்கு ஆரம்பத்திலிருந்தே ஆதி மாப்பிள்ளையை பிடிக்காது. அதனாலதான் நீ அவர்கிட்ட ரொம்ப ஓவரா நடந்துக்கிற. இது நல்லதுக்கு இல்லை” என்றார் தமிழரசு.

“உங்களுக்கு எப்பவும் என்னைதான் குறை சொல்லணும்” என அவரிடம் கூறிவிட்டு உள்ளே சென்று விட்டார் பிரேமா.

ஆதி முசோரி சென்றுவிட்டான். நங்கையின் மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நடந்து கொண்டிருந்தது. வெண்பா படிப்பை முடித்து விட்டு, தன் மாமியார் வீட்டில்தான் இருந்தாள். அவளது மாமியார் முதற்கொண்டு அனைவரும் வேலைக்கு செல்வதால், வீட்டில் இருப்பது அவளுக்கு மிகவும் போராடித்தது. சில நாட்கள் தன் தாய் வீட்டில் இருக்கலாம் என்று வந்திருந்தாள்.

வெண்பாவுக்கு அவளது கணக்குபடி ஏழாவது மாதம், ஆனால் உண்மையில் எட்டாவது மாதம் நடந்து கொண்டிருந்தது. திடீரென அவளுக்கு வயிற்று வலி ஏற்பட, அவளை மருத்துவரிடம் அழைத்துச் சென்றார் பிரேமா.

வெண்பா கார்த்திக் வீட்டிற்கு அருகில் உள்ள வேறு ஒரு மருத்துவரிடம் தான் எப்பொழுதும் காட்டிக் கொண்டிருக்கிறாள். இன்று முடியாமல் போகவே தன் வீட்டிற்கு அருகில் உள்ள மருத்துவரிடம் அழைத்துச் சென்றார் பிரேமா.

மருத்துவரிடம் காட்டும் பொழுது வெண்பாவின் குட்டு வெளியாகிவிட்டது. அவள் உண்மையில் எப்போது கருவுற்றாள் என்ற உண்மை வெளிப்பட்டு விட்டது. பிரேமா அதிர்ச்சியில் உறைந்து விட்டார்.

வாய் அதிகம் பேசினாலும் ஒழுக்கம் என்று வந்தால் கொஞ்சமும் விட்டுக்கொடுக்காத தனக்கு இப்படி ஒரு பெண்ணா என நினைத்தார். வெண்பாவை பரிசோதித்த மருத்துவர் பயப்பட ஒன்றும் இல்லை எனக்கூறி, சில மருந்துகள் கொடுத்து வீட்டிற்கு அனுப்பிவிட்டார்.

ஆதி அவசர அவசரமாக பதிவு திருமணம் செய்து வைத்த காரணம் இப்போது தான் பிரேமாவுக்கு விளங்கியது. மருத்துவ மனையிலிருந்து வீட்டுக்கு வரும் வரையிலும் ஒன்றும் கூறாமல் வந்தார் பிரேமா. வீட்டிற்குள் இருவரும் நுழைய வெண்பா அவசரமாக தனது அறைக்கு செல்ல முற்பட,

“நில்லுடி” என்றார் பிரேமா.

வெண்பா நிற்க, அவள் அருகில் வந்தவர் மாறி மாறி அவள் இரு கன்னங்களிலும் அறைய ஆரம்பித்தார். பள்ளி முடித்து விட்டு அப்பொழுது தான் வீட்டுக்கு வந்த நங்கை பிரேமாவை தடுத்து “உனக்கு என்ன பைத்தியமா? பிரக்னண்ட்டா இருக்கிறவளை இப்படி போட்டு அடிக்கிற?” என கேட்டாள்.

“ஐயோ நங்கை இவ என்ன காரியம் செய்திருக்கா தெரியுமா? பாவி… பாவி… இவ கல்யாணத்துக்கு முன்னாடியே…” என சொல்ல முடியாமல் தலையில் அடித்துக்கொண்டு அழுதார் பிரேமா. நங்கை அதிர்ச்சி எதுவும் ஆகாமல் அப்படியே நிற்க,

“என்னடி ஒன்னும் சொல்லாம நிக்கிற? உனக்கு முன்னாடியே தெரியுமா?” எனக் கேட்டார்.

“தெரியும்” என்றாள் நங்கை.

வெண்பா அதிர்ச்சியோடும் பயத்தோடும் நங்கையை பார்க்க, “என்னடி என் புருஷன் என்கிட்ட சொல்லிட்டார்ன்னு நினைச்சியா? இல்ல… இந்த நிமிஷம் வரையிலும் அவர் என்கிட்ட இது பத்தி ஒரு வார்த்தை கூட சொல்லல. உன் ரிசப்ஷன் அன்னைக்கு உன்னோட ஹேண்ட்பேக்ல இருந்த உன் டெஸ்ட் ரிப்போர்ட்ட பார்த்துதான் தெரிஞ்சிகிட்டேன்” என்றாள் நங்கை.

“ஏண்டி என்கிட்ட முன்னாடியே சொல்லலை?” எனக் கேட்டார் பிரேமா.

“ஏன் சொல்லனும்? இல்ல நான் ஏன் சொல்லணும்? உங்க மானம் போய்டக்கூடாது, இவ வாழ்க்கை பாழாகிடக்கூடாதுன்னு என் புருஷன் இவங்களுக்கு கல்யாணம் பண்ணி வச்சார். ஆனா எல்லாரும் அவரை என்னென்ன பேசினீங்க?”

“கல்யாணம் பண்ணிக்கிட்ட இவங்களை விட்டுட்டு அவரை எல்லோரும் குத்தம் சொன்னீங்க. கல்யாணம் பண்ணிக்கிட்ட இவங்களை ஏத்துக்குவீங்களாம், ஆனால் சாட்சி கையெழுத்து போட்டதால என் புருஷனை மதிக்க மாட்டீங்களாம். அப்படித்தானே “ என நங்கை கேட்க, பிரேமாவால் பதில் சொல்ல முடியவில்லை.

“ஒன்னும் தெரியாத பச்சை புள்ளைங்கள என் புருஷன் மனசை மாத்தி திருட்டு கல்யாணம் பண்ணி வச்சிட்டார் அப்படித்தானே. அவர் மட்டும் இந்த கல்யாணத்தை பண்ணி வக்கலைனா உங்க மானம் மரியாதை எல்லாம் இந்நேரம் கப்பலேறியிருக்கும்”

“தப்பு தாண்டி, தப்புதான். நான் மாப்பிள்ளை கிட்ட பேசினது, நடந்துகிட்டது எல்லாமே தப்பு தான்” என பிரேமா அழுதுகொண்டே கூற,

“இவ்வளவு நாளா உன் புருஷன் உன் புருஷன் னு சொல்லிட்டு இன்னைக்கு மாப்பிள்ளை ஆகிட்டாரா? வேண்டாம்… அவர் என் புருஷனாவே இருக்கட்டும். உனக்கு இந்த கல்யாணத்தாலதான் கோவமா…? கிடையாது… எப்பவுமே என் புருஷன்னா உனக்கு இளக்காரம்தான். அவர் கிட்ட நல்ல வேலை இல்லை, பணம் இல்லை பங்களா இல்லைன்னு… அவர் நல்ல மனச நீ என்னைக்காவது பார்த்திருப்பியா? என் வீட்டுக்காரர் செஞ்சதை தென்றல் வீட்டுக்காரர் செஞ்சிருந்தா, இப்படி அவரை மதிக்காம நடந்திருப்பியா?மாட்டதானே. உன்கிட்ட உண்மையை சொல்லி, என் புருஷன் நல்லவன்னு உனக்கு நிரூபிச்சி, அதனால ஒன்னும் நீ அவர்கிட்ட பேசனும்ன்னு அவசியமில்லை. சொல்லப் போனா உன் உறவே அவருக்கு தேவையில்லை” எனக் கூறினாள் நங்கை.

“நங்கை அப்படி எல்லாம் சொல்லாதடி. மாப்பிள்ளை எப்பேர்பட்ட காரியம் பண்ணி நம்ம குடும்ப மானத்தை காப்பாத்தியிருக்காரு. அவரு மட்டும் அப்படி செய்யலைன்னா இநநேரம் என்னவாகியிருக்கும்? ஐயோ நினைச்சுக்கூட பார்க்க முடியலையே…” என்றவர் வெண்பாவைப் பார்த்து,

“எவ்வளவு நெஞ்சழுத்தம்டி உனக்கு? அவரை அவ்ளோ திட்டினோமே… ஒரு வார்த்தை என்னை தனியா கூப்பிட்டு என்கிட்ட மட்டுமாவது சொன்னியா? வேடிக்கை பார்த்துட்டு ரெண்டு பேரும் நின்னீங்களே. என் வயித்துலதான் நீ பொறந்தியா?” என மீண்டும் வெண்பாவை அடிக்க வர, பயந்துபோன வெண்பா வெளியே செல்ல பார்க்க, எல்லோரும் அதிர்ந்து விட்டனர்.

இவர்கள் பேசுவதை எல்லாம் கேட்டு மலைத்து நின்றிருந்தனர் தமிழரசுவும், மாணிக்கவேலும், கல்பனாவும்.