NVNN-17

அத்தியாயம் 17

கார்த்திக் வெண்பா திருமண வரவேற்பிற்காக, பழனிவேல் தன் குடும்பத்துடன் கரூருக்கு புறப்பட்டார். புறப்பட்டு சென்றவர்களில் டாலியும் அடக்கம்.

‘யாருமில்லாத வீட்டுல நாய் காவல் இருக்கும்னு பேரு. இங்கே என்னடான்னா நாயையும் கூட கூப்பிட்டுகிட்டு சுத்துறாங்க. குடும்பத்தலைவன் எனக்கிருக்கிற மரியாதையை விட இந்த டாலிக்கு கொஞ்சம் ஓவராதான் இருக்கு’ என மனதிற்குள் நினைத்து கொண்டார் பழனிவேல்.

வந்தவர்களை வரவேற்று கொண்டிருந்தனர் தமிழரசுவும் பிரேமாவும். பழனிவேலையும் அவர் குடும்பத்தாரையும் வரவேற்ற பிரேமா ஆதியை தவிர்த்தார். வேறு ஏதோ வேலையாக இருப்பதால் தன்னை கவனிக்கவில்லை என்று தான் ஆதி நினைத்துக் கொண்டான். பழனிவேல் குடும்பத்தினருக்கும் தவறாக ஒன்றும் தெரியவில்லை. ஆனால் தமிழரசுவும் நங்கையும் கண்டு கொண்டனர்.

எல்லோரும் உள்ளே சென்றபின் தமிழரசு பிரேமாவை கடிந்துக் கொள்ளவும் செய்தார். தான் வரவேண்டாம் என்று சொல்லியும் வந்து இப்படி அவமானப் படுகிறானே என்று ஆதியின் மீதுதான் நங்கைக்கு கோபமாக வந்தது.

தன் முதல் மாப்பிள்ளை அசோக்கை ஓடி ஓடி கவனித்த பிரேமா ஆதியை கண்டுகொள்ளவே இல்லை. என்னவோ ஆதிதான் விவரம் இல்லா பிள்ளைகளுக்கு சொல்லிக் கொடுத்து திருமணம் செய்து வைத்து விட்டான் என நினைத்துக் கொண்டார் பிரேமா. அனைத்தையும் கவனித்துக் கொண்டுதான் இருந்தாள் நங்கை.

ஆதியின் மீது கோபமாக இருந்ததால், மண்டபத்தில் ஆதி நங்கையிடம் நெருங்கி நெருங்கி வர, நங்கை விலகி விலகி சென்றாள்.

நங்கை ஒரு நாற்காலியில் அமர்ந்திருந்தாள். அவளுக்கு பக்கத்தில் வந்து இன்னொரு பெண் அமர்ந்தாள்.

“ஹாய் நான் வினிதா ஆனந்த்தோட வைஃப்” என தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டாள்.

“ஹலோ” என இவளும் பதிலுக்கு கூறிவிட்டு வேறு பக்கம் திரும்பிக் கொண்டாள்.

தன் அன்னையின் செயல்களால் மனம் கொதிப்படைந்திருந்த நங்கை வேறு யாரிடமும் பேசும் எண்ணம் இல்லாமல் வெறுமனே உட்கார்ந்து இருந்தாள்.

“ஆனந்த் உங்கள நினைச்சு ரொம்ப ஃபீல் பண்ணுவார்” என வினிதா கூற அவளை திரும்பி பார்த்தாள்.

“அவர் உங்களை கல்யாணம் பண்ணிக்க சம்மதிச்சு கடைசி நேரத்தில் விட்டுட்டு வந்ததனாலதான் உங்க லைஃப் ஸ்பாயில் ஆயிடுச்சுன்னு சொல்லிட்டே இருப்பார்” என்றாள் வினிதா.

“உங்க ஹஸ்பண்ட கொஞ்சம் இங்க வரச் சொல்றீங்களா?” எனக் கேட்டாள் நங்கை.

வினிதாவும் மேடைக்கு அருகில் நின்று கொண்டிருந்த ஆனந்தை அழைத்தாள். அவனும் இவர்களைத்தான் பார்த்துக்கொண்டிருந்தான். உடனே இவர்களை நோக்கி வந்து விட்டான்.

“எப்படி இருக்கீங்க நங்கை?” எனக் கேட்டான் ஆனந்த்.

“ம்… ரொம்ப நல்லா இருக்கேன். உங்களைத்தான் பார்க்கணும்னு ரொம்ப நாளா நினைச்சுட்டு இருந்தேன்” என்றாள் நங்கை.

“என்னையா? ஏன்?” எனக் கேட்டான் ஆனந்த்.

“தேங்க்ஸ் சொல்லத்தான்” என நங்கை கூற, ஆனந்தும் வினிதாவும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர்.

“நீங்க மட்டும் கல்யாணத்தன்னைக்கு ஓடாமல் இருந்திருந்தால் என் ஆதி எனக்கு கிடைச்சிருக்க மாட்டார்ல, அதுக்குதான் தேங்க்ஸ். ரொம்ப தேங்க்ஸ்” என்றாள் நங்கை.

“நீங்க ஆதியோட சந்தோஷமா இருக்கீங்களா?” என ஆனந்த் கேட்டான்.

“ரெண்டு வருஷமா லவ் பண்ணின பொண்ண விட்டுட்டு, வேற ஒரு பொண்ண அப்பா மிரட்டுறாருன்னு கல்யாணம் பண்ணிக்க சம்மதிச்சு, அப்புறம் லவ் பண்ண பொண்ணு விஷம் சாப்பிட்டதனால அவகிட்டயே திரும்ப ஓடின உங்களை கட்டிக்கிட்ட இவங்க உங்க கூட சந்தோஷமா வாழும்போது, நான் லவ் பண்ணாதப்பவே அஞ்சு வருஷமா என்னையே நெனச்சி வாழ்ந்துகிட்டு இருந்த என் ஆதி கூட நான் சந்தோஷமா வாழ மாட்டேனா?”

“இதையெல்லாம் உங்ககிட்ட சொல்லணும்னு எனக்கு எந்த அவசியமும் இல்லை. ஆனா என்னை நினைச்சு நீங்க ஃபீல் பண்றதா உங்க வைஃப் சொன்னாங்க. அப்படி கூட உங்க நினைப்பில் நான் வரக்கூடாது புரிஞ்சுதா” என நங்கை கேட்க, கணவன் மனைவி இருவரது முகங்களும் சுண்டி போய்விட்டன.

அவ்வளவுதான் இனி சொல்வதற்கு ஒன்றும் இல்லை என்பதாக நங்கை முகம் திருப்பிக் கொள்ள, ஆதி அங்கே வந்தான். அவள் அருகில் வந்து அவளது தோளில் கை போட்டு, “என்ன சொல்றாங்க என் பொண்டாட்டி?” என ஆனந்திடம் கேட்க, தோளில் இருந்த அவனது கையை வேகமாக விலக்கிவிட்டு விறுவிறுவென சென்று விட்டாள் நங்கை.

“எப்படி இருக்கம்மா?” என வினிதாவை பார்த்து ஆதி கேட்க, “நல்லா இருக்கேன்” என பதிலளித்தாள் வினிதா.

“என் பொண்டாட்டி கோபப்பட்டு போற அளவுக்கு, நீ என்ன சொன்ன?” என ஆனந்திடம் கேட்டான் ஆதி.

தயங்கிய ஆனந்த், ஆதியிடம் நடந்ததை கூற, வினிதாவை ஒரு முறை பார்த்த ஆதி, ஆனந்திடம் “உன் வைஃபை நல்லா கவனிச்சு பார்த்துக்க” என கூறிவிட்டு அங்கிருந்து சென்றான். ஆதியின் கூற்றில் ‘உன் பொண்டாட்டியை மட்டும் பாரு’ என்ற மறைமுக செய்தி இருந்தது.

கொஞ்சம் தூரமாக நின்று ஆதியை பார்த்து முறைத்துக் கொண்டிருந்தாள் நங்கை.

‘எனக்கு வில்லன் ஒருத்தன் ரெண்டு பேரா இருந்தா சமாளிக்கலாம். சுத்தி இருக்கிற அம்புட்டு பேருமே வில்லனா இருந்தா எப்படி சம்பாதிப்பேன்’ என எண்ணியவனாய் நங்கையின் அருகில் சென்றான் ஆதி.

அவன் அருகில் வர காத்திருந்தவள், அவன் வரவும் வேண்டுமென்றே விலகிச் சென்றாள். பெருமூச்சு விட்ட ஆதி, ‘இருக்கிற கொஞ்ச நேரத்துல இது என்ன விளையாட்டு. என்னையே முறைச்சு முறைச்சு பார்க்க வேண்டியது, பக்கத்துல வந்தா பிகு பண்ணிக்கிட்டு போக வேண்டியது’ என நினைத்தவனாய் மீண்டும் அவள் பின்னால் சென்றான்.

ஆதி நங்கையின் பின்னாலேயே செல்வதும் அவள் விலகி விலகி செல்வதையும் பழனிவேல் கவனித்துக் கொண்டுதான் இருந்தார்.

‘சின்னஞ்சிறுசுகள இப்படி பிரிச்சி வச்சிட்டோமே’ என மனதிற்கு கவலையாக இருந்தாலும், ‘பய இப்பத்தான் ஒழுங்கா படிக்கிறான், இன்னும் கொஞ்ச நாள்தானே’ என தனக்குத் தானே சமாதானம் செய்து கொண்டார்.

பிரேமா தனது மூத்த மாப்பிள்ளை அசோக்கை குடும்பத்துடன் அழைத்து புகைப்படத்திற்கு நிற்க வைத்தவர், ஆதியை கண்டுகொள்ளவே இல்லை. தனது அன்னை ஆதியை புறக்கணிப்பதை ஜீரணிக்க முடியாத நங்கை, அங்கே இருக்க முடியாமல் பெண்ணின் அறைக்கு சென்றாள்.

வெண்பாவின் பொருட்கள் இருந்த பையில் இருந்து கைப்பேசியின் ஒலி எழுந்தது. பையைத் திறந்து கைபேசியை தேட, ஒரு சிறிய கைப்பையில் இருந்து தான் சத்தம் வந்து கொண்டிருந்தது.

கைப்பையை திறந்து கைபேசியை எடுக்க, ஒரு காகிதம் கீழே விழுந்தது. நுகர்வோர் சேவையிலிருந்து வந்த அழைப்பாக இருக்க அலைபேசியை அணைத்து விட்டு மீண்டும் உள்ளே வைத்தவள், கீழே விழுந்த காகிதத்தை எடுத்து பார்க்க, பார்த்தவளுக்கு மயக்கம் வந்தது.

வெண்பாவின் கர்ப்பத்தை உறுதி செய்யும் ஆய்வக பரிசோதனை முடிவு அது. ஆதி அவசர அவசரமாக கார்த்திக் வெண்பா திருமணத்தை நடத்தி வைத்ததற்கான காரணம் இப்போது புலப்பட்டது நங்கைக்கு.

என்னென்ன காரணங்களையோ யோசித்தவளுக்கு இப்படி ஒரு காரணம் இருக்கும் என்று துளி அளவு கூட தோன்றவில்லை. தன் தங்கையின் மீது அத்தனை நல் அபிப்பிராயம் வைத்திருந்தாள். திருமணத்தை நடத்தி எப்பேர்ப்பட்ட அவமானத்திலிருந்து என் கணவன் குடும்பத்தைக் காப்பாற்றி இருக்க, அவன் செய்த நன்மை புரியாமல் அவனை திட்டிய எல்லோருக்கும் முன்பும் இந்தக் காகிதத்தை விட்டெறிய வேண்டும் என்று ஆத்திரம் எழுந்தது நங்கைக்கு.

சில நிமிடங்களில் தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டவள், அவ்வாறு செய்தால் ஆதியின் செயலுக்கு அர்த்தமே இல்லாமல் போய்விடும் எனக்கருதி, யாரோ வரும் சத்தம் கேட்டு அவசரமாக அந்த காகிதத்தை பழையபடியே கைப்பையில் வைத்து மூடினாள்.

பிரேமாதான் வந்திருந்தார். “நீ இங்கதான் இருக்கியா? இங்க பாரு நங்கை. குட்டி போட்ட பூனையாட்டம் உன் புருஷன் உன்னையே சுத்தி சுத்தி வர்றாரு. பெரியவ புருஷன் பேங்க்ல வேலையில இருக்காரு. இதோ லவ் மேரேஜா இருந்தாலும் வெண்பா வீட்டுக்காரரும் ஈ பி யில வேலையில இருக்காரு. உன் கூட பிறந்தவங்க ரெண்டு பேரும் நல்லா இருக்குறப்போ நீ மட்டும் பாரு கஷ்டப்படுற. இப்பவே நம்ம சொந்தக்காரவங்க கேட்கிற கேள்விக்கு என்னால் பதில் சொல்ல முடியல. உன் புருஷன் என்னென்னா… படிக்கிறாரா என்னன்னே தெரியலை. உன்னையே சுத்திக்கிட்டு இருக்காரு. இதுல குழந்தை உண்டாகிட்டீனா நல்லா இருக்காது. ஜாக்கிரதையா இரு சொல்லிட்டேன்” என கூறி விட்டு வெளியேற, சுற்றியிருக்கும் பொருட்களை எல்லாம் உடைத்தெறியும் ஆவேஷம் எழுந்தது நங்கைக்கு.

வெண்பாவின் பரிசோதனை முடிவை பிரேமாவிடம் காட்டி தன் கணவன் தங்கமானவன் என்பதை நிரூபிக்க ஒரு நொடி ஆகாது நங்கைக்கு. ஆனால் அதை செய்ய விரும்பவில்லை நங்கை. ஆதாரத்தை காட்டிதான் தன் கணவன் நல்லவன் என்று நிரூபிக்கும் அவசியமில்லை என நினைத்தவள், பிரேமா ஆதியிடம் பேசும் தகுதியை கூட இழந்து விட்டதாகவே நினைத்தாள்.

வெண்பா மறைத்து வைத்திருக்கும் இந்த உண்மையை எத்தனை நாட்கள் அவளால் மறைக்க முடியும். உண்மை ஒரு நாள் வெளியில் வரும். அதுவரை தன் வாயால் எதுவும் கூறக்கூடாது என்று முடிவெடுத்துக் கொண்டாள்.

தன் கணவனை உடனே பார்க்கவேண்டும் போல இருக்க, அறையை விட்டு வெளியே வந்தாள். மேடையில் நின்று சிரித்துக் கொண்டிருந்த கார்த்திக்கையும் பெண்பாவையும் பார்த்த நங்கைக்கு பற்றிக் கொண்டு வந்தது. எவ்வளவு சுயநலவாதிகள். செய்வதையும் செய்துவிட்டு ஆதியை எல்லோரும் பேசும்போது வேடிக்கை பார்த்து நின்று கொண்டிருந்த அவர்களை பார்க்க முடியாது முகத்தை திருப்பி தன் கணவனை தேடினாள். அவனை மண்டபத்தில் காணவில்லை.

அம்பிகாவிடம் சென்று ஆதியைப் பற்றி விசாரிக்க, “அவன் டாலிக்கு சாப்பாடு எடுத்துகிட்டு இப்பதான் போனான். டாலி மண்டபத்துக்கு பின்னாடிதான் இருக்கு” என்றாள். நங்கையும் ஆதியை தேடி அங்கே சென்றாள்.

‘எல்லோரும் என் ஆதியைப் பற்றி என்ன நினைச்சுகிட்டு இருக்காங்க. கண்டவங்களும் வந்து நான் ஆதியை கட்டிக்கிட்டேன்னு பரிதாப படுறாங்க. இவன் அவசரமா ரிஜிஸ்டர் மேரேஜ் பண்ணி வச்ச உண்மை காரணம் தெரியாம, தப்பு செஞ்சங்களை விட்டுட்டு யாருக்கும் தெரியாம அவங்க மானத்தை காப்பாத்தினவனையே தப்பா பேசறாங்க. மரியாதையும் கொடுக்க மாட்டேங்கிறாங்க’ என வேதனைப்பட்டுக் கொண்டே ஆதி இருந்த இடம் வந்தடைந்தாள் நங்கை.

ஆதி டாலிக்கு உணவு கொடுத்துக் கொண்டிருந்தான். டாலி குரைக்க, ஆதி திரும்பிப்பார்த்தான். கோபமாக இல்லாமல் சஞ்சலத்துடன் நின்று கொண்டிருந்த நங்கையை பார்த்தவன் தன் அருகில் அழைத்தான்.

“ஏன் ஒரு மாதிரி இருக்கீங்க? உடம்பு முடியலையா?” எனக்கேட்டு அவன் நெற்றியில் கை வைத்து பார்த்தான். சூடாக ஒன்றும் இல்லை. “தலைவலியா?” எனக்கேட்டான். ‘இல்லை’ என்பதாக தலையாட்டினாள்.

“பின்ன என்னங்க?” என கேட்க டாலியை பார்த்தவள், “ஏன் டாலி… ஆதி கிட்ட சொல்றியா, நங்கையை சீக்கிரமா கூட்டிட்டு போகச் சொல்லி” என கேட்டாள்.

டாலி ஆதியின் முகத்தை பார்க்க “என்னாச்சி” எனக்கேட்டான் ஆதி.

“எனக்கு இங்கே இருக்க பிடிக்கலை டாலி. சீக்கிரமா என்னை கூட்டிட்டு போகச் சொல்லு” என நங்கை கூற, இந்த முறை அவள் குரலும் சிறிது உடைந்திருந்தது.

தன் தோளோடு நங்கையை அணைத்து கொண்டவன், என்னவென்று சரியாக தெரியாவிட்டாலும் யாராவது நங்கை மனம் புண்படும்படி பேசியிருப்பார்கள் என கணித்தவன், “ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு மாதிரி பேசுவாங்க. எல்லாத்துக்கும் இம்பார்டன்ஸ் கொடுத்தா நம்ம நிம்மதிதான் கெட்டுப்போகும். இப்ப கூட ஒன்னும் இல்லை. என் கூட வந்துடுங்க, திருப்பியும் நம்ம பழைய மாதிரி தனியா போய்டலாம்” என கூற அவன் முகத்தை இயலாமையுடன் நிமிர்ந்து பார்த்தாள் நங்கை.

“சிலசமயம் உங்க மேல கோவம் கோவமா வருது. இவ்ளோ வறட்டுப் பிடிவாதம் இருக்கக்கூடாது” என ஆதி கூற, நங்கை அவனிடமிருந்து விலகி செல்ல முற்பட்டாள்.

அவள் கையை இழுத்து பிடித்தவன், “எக்ஸாம் தள்ளி தள்ளி வைக்கிறாங்க. சீக்கிரம் வச்சா கூட சீக்கிரமா எழுதி பாஸ் பண்ணிட்டு உங்களை என்கூட கூப்பிட்டுக்குவேன். நான் என்ன பண்ண?” என கேட்டான்.

அவள் முகம் தெளிவடையாமலேயே இருக்க, “ஹேய் டாலி என் மகாராணிக்கு ஷேக் ஹேண்ட் கொடு” என்றான்.

டாலி தன் முன்னங்காலை நீட்ட, அவள் இதுவரையிலும் செல்ல பிராணிகளிடம் பழகியதில்லை என்பதால் தயக்கமாய் ஆதியை பார்த்தாள். அவளது கையைப் பிடித்த ஆதி டாலியை ஷேக் ஹேண்ட்ஸ் கொடுக்க செய்தான்.

பின் டாலி தனது இரண்டு கால்களையும் மேலே தூக்கி நங்கையை நெருங்கி வந்து தன் அன்பை காட்ட, பயந்து போன நங்கை ஆதியுடன் ஒட்டிக்கொண்டாள்.

“பயப்படாதீங்க அது பாசமா உங்க கிட்ட வருது” என்றவன் “டாலி பயப்படுறாங்க பாரு, வேண்டாம்” எனக் கூற அமைதியாய் அவளை பார்த்து உட்கார்ந்து கொண்டது.

“டாலி, ஆதி சொன்னா என்ன வேணா கேட்பியா?” என நங்கை டாலியிடம் கேட்க, டாலி குரைத்தது.

“அது கூட என்னை மாதிரிதான். நான் என்ன சொன்னாலும் அது கேட்கும். நானும் அப்படித்தான். நீங்க என்ன சொன்னாலும் நானும் கேட்பேன்” என ஆதி கூற, பெருமையாய் தன் கணவனை பார்த்தவள், சற்று முன் தன் தாய் தன் சகோதரிகளுடன் தன்னை ஒப்பிட்டு பேசியதை நினைத்து அவரின் அறியாமையை எண்ணி சிரித்துக் கொண்டாள்.