திருமணம் செய்து வந்தவர்களை விட்டுவிட்டு, எல்லோரும் ஆதியை குறைகூற பொறுக்கமுடியாத நங்கை, “எல்லோரும் கொஞ்சம் நிறுத்துறீங்களா?” என கத்தினாள்.
அனைவரும் நங்கையை பார்க்க, “இவங்க ரெண்டு பேரும் ஒன்னும் தெரியாத பச்சை புள்ளைங்க இல்லை. என்னமோ என் புருஷன் ரெண்டு பேரையும் கடத்திட்டு வந்து கட்டாயக் கல்யாணம் செஞ்சு வச்ச மாதிரி எல்லோரும் அவரையே பேசுறீங்க. உதவின்னு என் வீட்டுக்காரர் கிட்ட இவங்கதான் போயிருப்பாங்க. உடனே இரக்கப்பட்டு இவரும் இப்படி சிக்கலில் மாட்டிக்கிட்டார்” என்றாள்.
“அப்படி இவங்க உதவின்னு போனாலும், இவர் என்ன பண்ணனும்? நம்ம கிட்ட பேசி பாருங்கன்னு சொல்லனுமா, இல்லையா? நம்ம கல்யாணத்துக்கு ஒத்துக்குவோமா இல்லையான்னு தெரியாமலேயே, எடுத்தவுடனே திருட்டு கல்யாணம் பண்ணி வச்சிடுவாரா? எங்க கிட்டதான் சொல்லல, உன் கிட்டயாவது சொன்னாரா?” என பிரேமா கேட்டார்.
ஆதியை ஆழ்ந்து பார்த்த நங்கை, “அப்படி என்கிட்ட கூட சொல்லாம, அவசரமா இவர் கல்யாணம் பண்ணி வச்சிருக்கார்ன்னா கண்டிப்பா ஏதாவது காரணம் இருக்கும்” என்றாள்.
“என்னடி காரணம்? பொல்லாத காரணம்? சொல்லச் சொல்லு உன் வீட்டுக்காரரை” என பிரேமா கூற,
“அதை இதோ கல்யாணம் பண்ணிக்கிட்டு வந்து நிற்கிறாங்களே அவங்க கிட்ட கேளு” என்று கூறிய நங்கை, மணமக்கள் இருவருக்கும் அருகில் சென்று, “சொல்லுங்க. நீங்க கேட்காமதான் என் வீட்டுக்காரர் உங்களுக்கு கல்யாணம் பண்ணி வச்சாரா? எதுக்காக இவ்ளோ அவசரமா இந்த கல்யாணம் நடக்கணும்? பதில் சொல்லுங்க” என நங்கை கேட்ட தோரணையே பதில் சொல்லித்தான் ஆகவேண்டும் என்பது போல் இருந்தது.
“காரணம் இருக்கு நங்கை. அதை என் கிட்ட கேளுங்க நான் சொல்றேன்” என ஆதி கூற, வெண்பா பார்வையால் ஆதியிடம் கெஞ்சிக் கொண்டிருந்தாள். நங்கை உட்பட எல்லோரும் இப்பொழுது ஆதியை பார்க்க,
“கார்த்திக்கை எங்க அத்தை பொண்ண கல்யாணம் பண்ணிக்க சொல்லி கட்டாயப்படுத்தினாங்க. இவனுக்கு வீட்டுல சொன்னா எங்க அவன் அப்பா சம்மதிக்காம, மிரட்டி நர்மதாவை கட்டி வச்சிடுவாரோன்னு பயம். வெண்பா படிச்சுட்டு இருக்கறதுனால நீங்களும் உடனே கல்யாணத்துக்கு சம்மதிக்க மாட்டீங்க. அதான் ரெண்டு பேரும் வேற வழி இல்லாம ரிஜிஸ்டர் மேரேஜ் பண்ணிகிட்டாங்க” என பேசி முடித்தான் ஆதி.
‘எல்லாரும் நீங்க சொல்ற கதையை நம்பலாம். நான் நம்ப மாட்டேன்’ என்பதாய் இரு கைகளையும் கட்டிக்கொண்டு ஆதியை பார்த்து நின்றாள் நங்கை.
நங்கை நம்பவில்லை என்பதை ஆதி உணர்ந்தாலும், இவர்களைத்தான் முதலில் சமாளிக்க வேண்டும் என கருதி, மாணிக்கவேலிடம் சென்றவன், “சித்தப்பா என்மேல தப்பாவே இருக்கட்டும். நீங்க சொல்ற மாதிரி நான் தான் ரிஜிஸ்டர் மேரேஜ் பண்ணிக்க சொன்னேன். பண்ணியும் வச்சேன். அவங்களை மன்னிச்சு ஏத்துக்கோங்க” என்றான்.
கல்பனாவும் “ஏங்க மூத்த பிள்ளையைத்தான் ஒதுக்கி வச்சுட்டீங்க. இவனையும் ஒதுக்கிடாதீங்க. என்னால தாங்க முடியாது” என கண்ணீர் விட்டார்.
மாணிக்கவேலுக்கும் சிறிது நாட்களாக ஆனந்தை ஒதுக்கி வைத்ததே மனதை உறுத்திக் கொண்டிருக்க, தமிழரசுவிடம் சென்றவர், “பசங்க தப்பு பண்ணிட்டாங்க. நாமதான் சரி செய்யணும். நம்ம எப்படியும் சம்பந்திகள் ஆகணும்னு விதியிருந்திருக்கு. ஊரறிய ஒரு ரிசப்ஷன் வச்சிடுவோம்” எனக்கூற,
“வேற வழி? நாம யாரை உயர்வா நினைக்கிறோமோ அவங்களே நமக்கு எதிரா நடக்கும் போது மனசு தாங்க மாட்டேங்குது” என கூறிக்கொண்டே பெரிதாக மூச்சு விட்டார் தமிழரசு.
“எங்க அண்ணன் அப்பவே அவனை கண்டிச்சு வளர்க்காம விட்டுட்டார். அதனால அவன் எப்பவும் இப்படித்தான் அதிகப்பிரசங்கித்தனமா நடந்துக்குவான். கொஞ்சம் கூட பொறுப்பே கிடையாது. குடி அது இதுன்னு சுத்துனான். சரி கல்யாணம் பண்ணியாவது பொறுப்பா இருப்பான்னு நினச்சேன். இன்னும் அப்படியேதான் ஊர் சுத்திட்டு இருக்கான்”
“இவன்கிட்ட போய் யோசனை கேட்டா இப்படி விளங்காத ஐடியாதான் கொடுப்பான். இவனையும் மனுஷன்னு மதிச்சு இவன்கிட்ட போய் நின்ன இவங்க ரெண்டு பேரையும்தான் சொல்லணும்” என மாணிக்கவேல் கூற, கேட்டு கொண்டிருந்த தன் தந்தையும் அவரை மறுத்து ஒன்றும் கூறாமல் இருக்க நங்கைக்கு ஆத்திரமாக வந்தது.
மாணிக்கவேலிடம் சென்று, “உங்க பிள்ளையை பத்தியும் உங்க மருமகளை பத்தியும் என்ன வேணா பேச உங்களுக்கு உரிமையிருக்கு. ஆனா என் புருஷனைப் பத்தி ஒரு வார்த்தை பேச கூட உங்களுக்கு எந்த உரிமையும் கிடையாது. முதல்ல உங்க பிள்ளைங்கள நல்லா வளர்த்தீங்களான்னு யோசிங்க. அதுக்கப்புறம் மத்தவங்கள பத்தி பேசலாம்” என்றாள் நங்கை.
“நங்கை நீங்க உள்ள போங்க” என ஆதி கூற, பிரேமாவும் “என்னடி இது வயசுல பெரியவங்க கிட்ட எப்படி பேசுறதுன்னு தெரியாதா உனக்கு?” என கோபப்பட்டார்.
“வயசால யாரும் பெரியவங்க ஆகிட மாட்டாங்க. அவங்க நடந்துக்கிற முறையிலதான் எல்லாம் இருக்கு. உங்களுக்கும் சேர்த்துதான் சொல்றேன்” என்றவள், ஆதியை காட்டி “இனி இவரை பத்தி யாராவது ஏதாவது பேசினீங்க… நடக்குறதே வேற” என அசோக்கையும், மாணிக்கவேலையும் ஒரு பார்வை பார்த்துவிட்டு தனது அறைக்கு சென்றாள்.
“பாருடா உன் பொண்டாட்டியும் உன்னை மாதிரியே இருக்கு. யாரையும் மதிக்கிறது இல்ல. ரெண்டு பேருமே இதுல மட்டும் ஒரே மாதிரி இருக்கீங்க” என ஆதியை பார்த்து மாணிக்கவேல் கூற, ஆதிக்கும் எரிச்சலாகத்தான் இருந்தது. சூழ்நிலை வேறாக இருந்திருந்தால் கண்டிப்பாக நல்ல பதிலடி கொடுத்திருப்பான். இப்போது எதுவும் கூற விரும்பாமல் அமைதியாக நின்று கொண்டிருந்தான்.
தன் அறையிலிருந்து வெளியே எட்டிப் பார்த்த நங்கை, “இப்போ என் வீட்டுக்காரர் இங்கேயிருந்து கிளம்பாம கண்டவங்ககிட்ட பேச்சு வாங்கிட்டு நின்னா, நான் என்ன பண்ணுவேன்னு எனக்கே தெரியாது” என சத்தமாக கூறினாள்.
‘கொஞ்சம் அமைதியா இருங்களேன்’ என கண்களால் நங்கையிடம் கெஞ்சியவன், கார்த்திக்கிடம் வந்து, “இனி நீதான் சமாளிக்கணும்” எனக்கூறிவிட்டு அங்கிருந்து கிளம்பி விட்டான்.
நங்கைக்கு எல்லோர் மீதும் கோவமாக வந்தது. திருமணம் செய்துகொண்டு வந்தவர்களை விட்டுவிட்டு, ஆதியை எல்லோரும் குறை கூறுவதை அவளால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.
எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டிருந்த ஆதியின் மீதும் கோபமாக வந்தது. காரணம் இல்லாமல் இந்த திருமணத்தை நடத்தியிருக்க மாட்டான் என்று அவள் நம்பினாலும், எதிர்த்துப் பேசாமல் எல்லோரிடமும் வாங்கி கட்டிக் கொள்வது அவளுக்கு பிடிக்கவில்லை.
அவன் சொன்ன காரணத்தையும் நங்கை நம்பவில்லை. இதெல்லாம் காரணமாக இருந்திருந்தால் என்னிடம் கண்டிப்பாக சொல்லியிருப்பான். என்னிடமே சொல்லமுடியாத காரணம் என்னவாக இருக்கும் என சிந்தித்தாள்.
ஒரு வேளை வெண்பாவின் கல்லூரியில் யாரும் அவளிடம் காதல் என்று மிகவும் பிரச்சனை கொடுக்கிறார்களோ என்றெல்லாம் யோசித்தாள். தன்னுடைய தங்கையை துளியும் தவறாக நினைக்க தோன்றாததால் உண்மையான காரணம் அவளுக்கு தோன்றவில்லை.
ஒரு வாரத்தில் இருந்த அடுத்த முகூர்த்த நாளில் ஊரறிய ரிசப்ஷன் வைத்து விடலாம் என பேசி முடிவு செய்துவிட்டு, கார்த்திக்கையும் வெண்பாவையும் அழைத்துக்கொண்டு, மாணிக்கவேலும், கல்பனாவும் தங்கள் வீட்டிற்கு சென்றனர்.
கல்பனா தனது மூத்த மகனிடம் யாருக்கும் தெரியாமல் பேசிக் கொண்டுதான் இருந்தார். தன் கணவரிடம் அழுது புலம்பி அவர்களையும் வரவேற்பிற்கு அழைக்கச் செய்தார்.
நர்மதா வீட்டில் அவளது பெற்றோர், கோபமடைந்து நர்மதாவிற்கு விரைவிலேயே திருமணம் செய்ய எண்ணி மும்முரமாக மாப்பிள்ளை தேட ஆரம்பித்தனர்.
ஆதிதான் கார்த்திக்-வெண்பா திருமணத்தை நடத்தி வைத்தது என்பது தெரிந்து, பழனிவேல் சத்தம் போட்டார்.
ஆத்திரமடைந்த விசாலம், “டேய் உன் பவுசு எனக்கு தெரியாதா? இல்ல உன் தம்பி பவுசு தான் எனக்கு தெரியாதா? ரெண்டு பேருமே நான் புடிச்ச முசலுக்கு மூணு கால்ன்னு சொல்றவனுவோ. உங்க ரெண்டு பேரையும் அப்பவே நாலு சாத்து சாத்தி வளர்த்திருந்தேனா இப்படியெல்லாம் அராஜகம் பண்ணுவீங்களா? அது என்னங்கடா ஆ ஊ ன்னா என் ராசாவையே குறை சொல்றீங்க? உங்க முதுகுல இருகிற அழுக்க முதல்ல துடைங்க, அப்புறம் அவன் கிட்ட வாங்கடா” என்றார்.
“அம்மா நீ கொஞ்சம் வாய மூடுறியா? நீ செய்யறது எல்லாம் சரியா?” எனக் கேட்டார் பழனிவேல்.
“சரியில்ல தாண்டா, உனக்கு கல்யாணம் ஆனப்பவே நானும் ஏதாவது கண்டிஜன் போட்டு, உன் பொண்டாட்டிய அவ அம்மா வீட்டுக்கு அனுப்பியிருக்கணும். செய்யாம விட்டுட்டேன் இல்ல. நான் சரி இல்லதான்” என விசாலம் கூற, முறைத்துக் கொண்டே வெளியே சென்றுவிட்டார் பழனிவேல்.
நங்கையிடம் காணொலி காட்சியில் பேசிக்கொண்டிருந்த ஆதி, அவளது கோவ முகத்தை பார்த்துவிட்டு, “இப்படி கோபப்படாதீங்க, உடம்புக்கு நல்லதில்லை” என்றான்.
தான் கேட்க நினைத்ததை எல்லாம் குறுஞ்செய்தியாக ஏற்கனவே நங்கை அனுப்பியிருந்ததால், “நீங்க நினைக்கிற மாதிரி வேற காரணம் இருக்குதான். நான் சொல்ல மாட்டேன்னு சொல்லியிருக்கேன். அப்புறம் எப்படி சொல்றது? சொன்ன வார்த்தையை மீறக் கூடாதுதானே” எனக் கேட்டு அவளையே மடக்கினான்.
“எல்லாரும் என்னை திட்டினா திட்டிட்டு போறாங்க. நான் எந்த தப்பும் செஞ்சிருக்க மாட்டேன்னு நீங்க நம்புறீங்கதானே. மத்தவங்கள பத்தி எனக்கு கவலை இல்லை. என் பொண்டாட்டியை தவிர மத்த யாருக்கும் நான் பதில் சொல்லனும்னு அவசியமும் இல்லை” என கூறினான் ஆதி.
இன்னும் கோபமாகவே நங்கை இருக்க, “என் பக்கத்துல இருந்தா எப்படியும் உங்கள சமாதானப்படுத்திடுவேன். தூரமா இருக்கீங்க, எப்படி சமாதான படுத்துறதுன்னே தெரியலைங்க” என ஆதி கூற கேள்வியாய் அவனைப் பார்த்தாள் நங்கை.
“பக்கத்துல இருந்தா எப்படி சமாதானப்படுத்துவவேன்னு கேட்கிறீங்களா?” என ஆதி கேட்க ‘ஆம்’ என தலையை ஆட்டினாள் நங்கை.
“கட்டுன புருஷன் கிட்ட மட்டும் பேச மாட்டீங்க. மத்த எல்லார்கிட்டயும் பாயிண்ட் பாயிண்டா கேள்வி கேக்குறீங்க. இதே மாறி அன்னைக்கு எங்கப்பன் கிட்டயும் நல்லா நாலு கேள்வி கேட்கிறத விட்டுட்டு இப்போ என்கிட்ட சைன் லாங்குவேஜ்ல பேசிகிட்டு இருக்கீங்க. உங்களை என்ன சொல்றது?” என சலித்துக் கொண்டவன், நினைவு வந்தவனாய்,
“உங்களை எப்படி சமாதானப்படுத்துவேன் தெரியுமா?” என கேட்க, ஆர்வத்துடன் நங்கை ஆதியை பார்த்தாள்.
“வந்து… வந்து…” என வெட்கப்பட்டுக் கொண்டும், குழைந்து கொண்டும் கூற, ‘ஐயோ ஏடாகூடமாக ஏதோ கூற போகிறான்’ என நங்கை நினைக்க, “பட்டுன்னு கால்ல விழுந்துடுவேன்” என ஆதி கூற நங்கையால் சிரிப்பை அடக்க முடியவில்லை.
“என்னங்க இப்படி சிரிக்கிறீங்க? சும்மா சொல்றேன்னு நினைக்கிறீங்களா? உண்மையிலேயே வேற மாதிரிதான் சமாதானப் படுத்துவேன். ஃபோன்ல அதையெல்லாம் சொல்ல முடியாது. நேர்ல உங்கள சமாதானப் படுத்துற மாதிரி சந்தர்ப்பம் வந்தா நீங்களே தெரிஞ்சுக்குவீங்க. அப்படியும் சமாதானம் ஆகலைன்னா கடைசியா கால்ல விழுந்திட வேண்டியதுதான்” என ஆதி கூற, “ரீல் சுத்தாதீங்க’ என்பது போல சைகை காட்டினாள் நங்கை.
“சும்மா எல்லாம் சொல்லலை. நெஜமாத்தான் சொல்றேன். அவன் அவன் பத்து பதினைந்து வருஷம் குடும்பம் நடத்திட்டு ஒருத்தரை ஒருத்தர் புரிஞ்சுக்காம சண்டை போட்டுட்டு பிரிஞ்சு போறதையெல்லாம் பார்த்திருக்கேன். வெறும் ரெண்டு மாசம் என்கூட குடும்பம் நடத்திட்டு, எல்லாரும் என்னை தப்பு சொல்லும்போது, ஏன் யாருக்காக நான் திட்டு வாங்கிட்டு நிக்கிறேனோ அவங்களே எதுவும் சொல்லாம நிக்கும்போது, என் புருஷன் என்ன செஞ்சாலும் அதுல காரணம் இருக்கும்ன்னு என்னை நம்புனீங்க பாத்தீங்களா? உங்க கால்ல விழறெதெல்லாம் பெரிய விஷயமாங்க?” என ஆதி முகத்தை தீவிரமாக வைத்துக்கொண்டு சொல்ல, அவனை காதலுடன் பார்த்தாள் நங்கை.
“இப்படியெல்லாம் பார்க்காதீங்க. ஏற்கனவே நீங்க இல்லாம ரொம்ப கஷ்டப்பட்டு தூங்குறேன். இப்படி பார்த்தா சுத்தமா தூக்கம் வராது” என்றவன் கொஞ்சம் இடைவெளி விட்டு “இந்த ஆதி பய அவன் பொண்டாட்டியை ரொம்ப தேடுறான்” என்றான்.
நங்கைக்கு உள்ளம் நெகிழ்ந்து விட்டது. அவளுக்கு தெரியாதா அவனது துன்பம். அவளும் அதே துன்பத்தைதானே அனுபவிக்கிறாள்.
கார்த்திக்- வெண்பா திருமண வரவேற்பில் குடும்பத்துடன் வந்து கலந்துகொள்ளும்படி மாணிக்கவேல் பழனிவேலிடம் முறையாக கூறியிருந்தார். தமிழரசுவும் கூறினார்.
தமிழரசு பெரிய மருமகனிடம் கூறும்பொழுது, பிரேமாவும் அசோக்கிடம் தனியே பேசி வருமாறு அழைத்தார். ஆதியை அவ்வாறு அழைக்கவில்லை. இத்தனைக்கும் ஆதியிடம் தமிழரசு கூறும்பொழுது அருகில்தான் இருந்தார்.
நங்கைக்கு சாதாரணமாக பிரேமா அழைக்காவிட்டால் ஒன்றும் தோன்றியிருக்காது. ஆனால் அசோக்கை மட்டும் அழைத்து, ஆதியிடம் பேசாதது பிரேமா வேண்டுமென்றே செய்தது என்பதால் தன் தாயின் மீது வெறுப்பாக இருந்தது நங்கைக்கு.
ஆதி எழுதிய முதல் கட்ட தேர்வில் வெற்றி பெற்று, அடுத்த நிலை தேர்வுகள் எழுதுவதற்காக தயாராகி கொண்டிருந்தான். இன்னும் 20 நாட்களில் தேர்வு இருந்தது. அதனால் நங்கை, ‘வீட்டிலேயே இருங்கள். வரவேற்புக்கு வரவேண்டாம்’ என்று செய்தி அனுப்பி இருந்தாள்.
மாமா அழைத்தும் தான் போகாவிட்டால் நன்றாக இருக்காது. நங்கையிடம்தான் எல்லோரும் கேட்பார்கள் என நினைத்தான். எல்லாவற்றையும் விட, ஆதிக்கு நங்கையை பார்க்க வேண்டும் போல இருந்தது. பிரச்சனை ஆனதிலிருந்து நங்கையின் வீட்டிற்கு செல்ல ஆதிக்கு பிடிக்காததால், வரவேற்பிற்கு செல்லலாம் என முடிவெடுத்திருந்தான்.
நங்கையிடமும் கண்டிப்பாக நான் வருவேன் என்று கூறியிருந்தான். அங்கு வந்தால் நான் பேசமாட்டேன் என்று நங்கை செய்தி அனுப்பியதற்கும், “இல்லனா மட்டும் என்கிட்ட பேசிடவா போறீங்க? நான் உங்களை பார்க்க தானே வரேன். நீங்க பேச வேண்டாம். நான் பாத்துட்டு போறேன்” என்ற தனது முடிவில் உறுதியாக இருந்தான்.
ஆதி வருவது நங்கைக்கு பிடிக்காவிட்டாலும் அவனை அவளால் தடுக்க முடியவில்லை. தன்னை பார்த்தே தீருவேன் என்று அடம் பிடிப்பவனிடம் என்ன சொல்வது என்று விட்டுவிட்டாள்.
தன்னுடைய தாய் தன்னுடைய கணவனை அவமதிப்பார் என்று தெரிந்திருந்தால் கண்டிப்பாக இன்னும் அழுத்தமாக அவனை வரவேண்டாம் என்று கூறி தடுத்திருப்பாளோ, என்னவோ?