“நீங்க சொல்லுங்க தாத்தா…” என்றதும், ரங்கநாதன் சொத்துக்களின் விவரம், அதன் இப்போதைய மதிப்பு, அதை எப்படிப் பிரிகிறார்கள் எனச் சொல்லிக் கொண்டே வர…. சூரியா, வசீகரன், விஷால் தாங்கள் வைத்திருந்த தாளில் குறித்துக் கொண்டே வந்தனர்.
அவரவர் இப்போது இருக்கும் வீடு அவர்களுக்கே… அதில் ஒன்றும் மாற்றம் இல்லை. அதே போல நாயகியின் நகைகள் அவர் காலத்திற்குப் பிறகு மூன்று குடும்பத்திற்கும் சரி பங்கு.
அதேபோல…..வாழும் காலம் வரை, ரங்கநாதன் நாயகிக்கு என வாடகைக்கு வரும் சில சொத்துக்களைத் தனியாக வைத்திருந்தனர். அவர்கள் யாரையும் சார்ந்திருக்கக் தேவையில்லையே… அவர்கள் காலத்திற்குப் பிறகு மூன்று குடும்பத்திற்கும் அதிலும் சரி பங்கு என ரங்கநாதன் சொல்லிவிட்டார். பிறகு மற்ற சொத்துக்களை… அளவு மற்றும் மதிப்பை வைத்து பிரித்திருந்தனர்.
பெரிய நிறுவங்களின் தயாரிப்புகளை மொத்தமாகக் கொள்முதல் செய்து… அதைப் பெரிய வியாபாரிகளுக்கு மற்றும் நிறுவனங்களுக்கு விநியோகம் செய்கிறார்கள் என்பதால்…
“இருக்கிற ஸ்டாக் காலியானதும், கண்ணக்கை முடிச்சிட்டு. இனி அவங்கவங்க என்ன வேணுமோ தனிதனியா கொள்முதல் பண்ணி வியாபாரம் பண்ணுங்க. இனி அவனவன் திறமையை வச்சு…. முன்னேறுவது உங்க சாமர்த்தியம்.” என்றுவிட்டார் ரங்கநாதன் பேரன்களிடம்.
“அப்பா, நியாயபடி பார்த்தா… நீங்க எங்களுக்கு கூட சொத்து கொடுத்திருக்கணும். அதுதான் கொடுக்கலை. ஆனா இனி ஆர். எஸ் அப்படிங்கிற பேராவது எங்களுக்கு இருக்கட்டும்.” என ரவீந்தர் கேட்டார்.
ஆர் எஸ் என்பது அவர்கள் குழுமத்தின் பெயர். வெறும் பெயர் மட்டும் அல்ல… அவர்களின் அடையாளமும். வாடிக்கையாக வாங்குபவர்களுக்கு அந்த பேர்தான் தெரியும். அதை யார் இப்போது நடத்துகிறார்கள் என்றெல்லாம் பார்க்க மாட்டார்கள் என்ற எண்ணத்தில் தான் ரவீந்தர் கேட்டது. ஏற்கனவே இருக்கும் வாடிக்கையாளர்களை இழக்க வேண்டாம் அல்லவா….
ரங்கநாதன் தர்மாவைப் பார்க்க…. அவன் அவர்களே வைத்துக்கொள்ளட்டும் என்றுவிட்டான். அடுத்து ரங்கநாதன் விஷாலைப் பார்க்க, நமக்கு சொத்து கொடுத்ததே பெரிசு… இதுல போரையும் கேட்டா அடிக்க வருவானுங்க. அவங்களே வச்சுகட்டும் என நினைத்தவன், அப்போதும் கெத்தாக வேண்டாம் என்பது போல தோளைக் குலுக்கினான்.
தர்மாவுக்கு வந்த சில சொத்துகளில் குறிப்பாக, அவன் இப்போது வைத்து நடத்தும் அலுவலகம் மற்றும் மதுரையில் இருக்கும் அவர்களின் பூர்வீக வீட்டை ரங்கநாதன் அவனுக்கே கொடுத்திருந்தார்.
அதற்கும் சுனிதா சண்டைக்கு வந்தார். “அது எப்படிப் பூர்வீக வீட்டை அவனுக்குக் கொடுப்பீங்க. என் வீட்டுக்கரார் இருக்கும் போது அவருக்குத்தானே கொடுக்கணும்.”
“யாருக்கு அதோட மதிப்பு தெரியுமோ அவங்களுக்குக் கொடுத்திருக்கேன். அங்க இருக்கிற நிலங்களை எல்லாம் உங்க ரெண்டு பேருக்கும் தானே கொடுத்திருக்கேன். அது உனக்குக் கண்ணுக்கு தெரியலையா…”
“அதோட தர்மா அங்க இருக்க வீட்டை மட்டும் அல்ல ஊரையும் பார்த்துப்பான். அதுக்கு அவனுக்குப் போய் வர வசதியாத்தான் வீட்டை அவனுக்கே கொடுத்திருக்கேன். அதுவும் நீங்க யார் போனாலும், அவன் வேண்டாம்ன்னு சொல்லப் போறது இல்லை…” என்றார் ரங்கநாதன்.
“ஒருவேளை தர்மாவுக்கு அடுத்தக் குழந்தையும் பெண்ணா பிறந்தா…. அப்போ எங்க ரெண்டு பேர்ல யாருக்கு ஆண் வாரிசு இருக்கோ அவங்களுக்கு வீட்டை கொடுக்கணும்.” என அப்போதும் சுனிதா விடுவதாக இல்லை.
“அப்படியெல்லாம் கொடுக்க முடியாது. பையனோ பெண்ணோ அந்த வீடு அவனுக்குதான்.” என்றார் ரங்கநாதன்.
“தர்மா, நீயே உங்க தாத்தா பாட்டியை வச்சு பார்த்துக்கிற மாதிரி இனி பேசாத. செலவு எல்லாம் பொதுவுல தான் செய்யுறோம். ஆனா பேரு மட்டும் உனக்கா?” எனச் சுனிதா தர்மாவை மேலும் வம்புக்கு இழுத்தார்.
அவருக்குத் தர்மா விஷால் பக்கம் நின்றது. அதோடு தன் பிள்ளைகளுக்கு அதிகம் கிடைக்காமல் செய்துவிட்டானே என அவ்வளவு கோபம். அதனால் முடிந்தவரை அவனைக் காயப்படுத்த பார்த்தார்.
“பார்க்கிறதுன்னா என்ன சுனிதா? மூன்னு வேலை சோறு போடுறதா…. அதுதான் உன்னைப் பொறுத்தவரை இல்லையா? ஆனா நான் இன்னைக்கு இந்த அளவுக்கு இப்படி உட்கார்ந்து இருக்கேனா… அது அவன் என் மேல காட்டிய அன்பும், அக்கறையும் தான் காரணம். உண்மையா சொன்னா, நான் என் பங்கை முழுக்க அவனுக்குதான் கொடுக்கணும். அதை அவனே விரும்பமாட்டான். அதனாலதான் மூன்னு பேருக்கும் கொடுக்கிறேன்.” என்றதும், சுனிதாவுக்கு முகத்தை எங்கே கொண்டு போய் வைப்பது எனத் தெரியவில்லை.
சூரியா, வசீகரன் மற்றும் விஷால் எத்தனை தடவை அவர்களின் சொத்தின் மதிப்பைக் கூட்டி பார்த்தாலும் சமமாகத்தான் வந்தது. உண்மையில் சொத்து மதிப்பு சற்று குறைவாக இருந்தது தர்மாவுக்குதான். கோடு போட்டது போலச் சமமமாகப் பிரிக்க முடியாது. சற்று முன்னே பின்னே வர… தர்மா அதைப் பற்றிக் கவலைப்படவில்லை.
“உனக்கு விஷாலைத்தான் பிடிக்கும்னு நீ காட்டிட்ட.” என்றார் சுனிதா கடைசி அஸ்திரமாக.
வாரிசு அடிப்படையில்… இருப்பதிலேயே அதிகம் உழைத்தது எனப் பார்த்தால்…. கண்டிப்பாகத் தர்மா தான். அவனுக்குக் குறைவு தங்களுக்கு அதிகம் என்பது மற்ற மூவருக்குமே சற்று உறுத்தலாகவே இருந்தது. ஆனால் தர்மா இருந்த மனநிலையே வேறு…. சுனிதா பேசியதில் தர்மா மிகவும் காயப்பட்டுப் போயிருந்தான்.
“தாத்தா உங்ககிட்ட பேசணும்.” என ரங்கநாதனை அறைக்குள் அழைத்துச் சென்றான். நாயகி சிறிது நேரம் வெளியில் வந்து நிற்பது, பின்னர் வந்து படுப்பது என்றுதான் உறங்காமல் இருந்தார்.
“தாத்தா, ஊர்ல இருக்க வீட்டை அவங்களுக்கே கொடுத்திடுங்க. அவங்களுக்கு அதிகமா கிடைக்காத வரை சுனிதா சித்தி விடவே மாட்டாங்க.” என,
“நீ அவங்களுக்குக் கொடுத்தா விஷாலுக்கும் கொடுக்கணும். சுபா மட்டும் விடுவாளா?”
“நீ என்ன வீட்டுக் கொடுத்தாலும் அவங்க திருப்தி அடையவே மாட்டாங்க. அதோட நீ ஏன் கொடுக்கணும்?” என ரங்கநாதன் கேட்டார்.
“அடுத்து பிறக்கிற ரெண்டு குழந்தையுமே பெண்ணா இருந்தாலும் எனக்கு வரம் தான். பெண்ணா இருந்தா மட்டும் அவங்க என் வாரிசு இல்லையா? அவங்க ஏன் அதெல்லாம் பேசுறாங்க? வீட்டை அவங்களுக்கே கொடுத்திடுங்க.” என்றான்.
“உனக்கு அதுதான் கோபம் இல்லையா?”
“தர்மா கொடுக்கிறது இல்லை பிரச்சனை. யாருக்கு கொடுக்கிறோம்னு இருக்கு. எனக்கு அந்த வீட்டை உனக்குத்தான் கொடுக்கணும். அது என்னோட அசை.” என்றுவிட… அதற்கு மேல் மறுக்க முடியாமல் தர்மா சரியென்றான்.
“சரி இனி நான் படுக்கலாம் இல்லையா… அவங்களை அனுப்பி விட்டு நீயும் போய்ப் படு.” என, “நீங்க எட்டு மணிக்கு சாப்பிட்டது. இப்போ ஒரு மணி ஆச்சு… நீங்க எதாவது குடிச்சிட்டு படுங்க. நான் உங்களுக்கு ஓட்ஸ் எடுத்திட்டு வரேன்.” எனத் தர்மா சொல்ல…
“இதுதான் அவன். அவன் காட்டும் அன்பும் அக்கறையும் அவர்களுக்கு என்ன தெரியும்?” என ரங்கநாதன் பெருமையாக நினைத்துக் கொண்டார்.
“அத்தை உங்களுக்கும் கொண்டு வரேன்.” என நாயகியிடம் சொல்லிவிட்டு ஜமுனா செல்ல…. உடன் தர்மாவும் சென்றான்.
இவர்கள் ஹாலுக்கு வரும் போது எல்லோரும் கிளம்பிக் கொண்டிருந்தனர். தர்மா அவர்களிடம் நல்லபடியாகவே பேசி வழியனுப்பினான்.
தர்மா இல்லையென்றால் விஷாலுக்கு அவனுக்குரிய பங்கு சரியாக கிடைத்திருக்காது என்பது சுபாவுக்கு புரிந்ததால்…. “தேங்க்ஸ் தர்மா, நீ விஷாலுக்காக பேசுவேன்னு நான் நினைக்கவே இல்லை.” என்றார்.
“இப்ப உங்களுக்கு சந்தோசம் தானே…. இனி நிம்மதியா இருங்க.” என்றான் தர்மா.
அவர்கள் சென்றதும், சமையல் அறைக்கு வந்தவன், “அப்பா இருக்கும் போது சொன்னது போல, அருணா அக்காவுக்கு அவர் கொடுக்க நினைச்ச இடத்தோட, என் பங்குக்கும் சேர்த்து அக்காவுக்கு இன்னும் நல்லாவே செய்யலாம் மா…” என்றான்.
“இதுக்கு முன்னாடியும் நீ அவளுக்கு நிறையச் செஞ்சிருக்க. உனக்குத் தெரியும் என்ன பண்ணனும்னு… எனக்கு அந்தக் கவலை எல்லாம் இல்லை. நீ அவளை நல்லா பார்த்துப்ப எனக்குத் தெரியும்.” என்றார் ஜமுனா.
தாத்தா பாட்டிக்கு கஞ்சி கொடுத்து, அவர்களைப் படுக்க வைத்து, ஜமுனாவையும் குடிக்கச் சொல்லி, தர்மா தனக்கும் மனைவிக்கு எடுத்துக் கொண்டு மாடிக்கு வந்தான்.
கீர்த்தி முழு உறக்கத்திற்குச் செல்லாமல்… உறங்குவதும் விழிப்பதுமாக இருந்தவள், தர்மா அறைக்கு வந்து விளக்கை போட்டதும், எழுந்து உட்கார்ந்து அவனைத் தலை முதல் கால் வரை ஆராய்ந்துவிட்டு பிறகு மீண்டும் படுத்துக்கொள்ள…
“நல்ல எண்ணம் மேடம் உங்களுக்கு.” என்றவன், “இந்தாக் கஞ்சி குடிச்சிட்டு தூங்கு.” என்றதும்,
“நான் இதை லைக் பண்றேன். நிஜமா பசிச்சது.” என்றவள், எழுந்து உட்கார்ந்து அவன் கொடுத்த கஞ்சியைக் குடித்து டம்ளரை மேஜையில் வைத்தாள்.
“எல்லாம் ஓகே தானே…” என அவள் கேட்க,
“எல்லாம் ஓகே…. நல்லபடியா பேசி முடிச்சாச்சு.” என்றதும், கணவனைத் தன் அருகில் வர சொல்லி… உட்காரந்தபடியே அவனைக் கட்டிக் கொண்டாள்.
“சாரி, முக்கியமான நேரத்தில நான் உங்களோட இருக்கலை. உங்களை எதாவது சொன்னா… நான் பதிலுக்குச் சண்டை போட்டுடுவேன்னு எனக்குப் பயம். உங்களுக்குள்ள நீங்க பேசிக்கிறது வேற… நான் பேசினா தப்பாயிடும் தான…” என்றதும்,
“எனக்குத் தெரியும் கீர்த்தி. நாம சண்டை இல்லாம பிரிச்சுக்கதான் நினைச்சோம். நீ இந்த நிலைமையில டென்ஷன் ஆகக் கூடாது. அதுதான் நானும் உன்னை அங்க இருக்க வேண்டாம்னு சொன்னேன்.” என்றவன் மனைவியை எழுப்பி நிறுத்தி, அவளை இதமாக அனைத்துக் கொண்டான். அப்போது அவனுக்கு அது மிகவும் தேவையாக இருந்தது.
உண்மையில் தர்மா தொழிலில் இணைந்த பிறகுதான் வருமானமும் அதிகம். அதிகச் சொத்தும் வாங்கிச் சேர்த்ததும் அவன்தான். அவன் நிறையவே உழைத்திருக்கிறான். அதைச் சொல்லி அதிகம் கேட்பான் என நினைத்தார்கள். ஆனால் அவன் அப்படி எதுவும் கேட்கவில்லை.
தங்கள் வீட்டிற்கு வந்து வசீகரன் அதை நினைவுபடுத்த, “அவனுக்கு அவன் பொண்டாட்டி வீட்டு சொத்து வரும். இதெல்லாம் அவனுக்குப் பெரிசே இல்லை.” என்றார் சுனிதா.
“எனக்கும் தான் என் பொண்டாட்டி வீட்டு சொத்து வரும் அதுக்காக. நீங்க ஏன் மா தேவையில்லாம பேசுறீங்க? பையன் பொண்ணுன்னு எல்லாம் ஏன் பேசுறீங்க? அவர் முகமே மாறிடுச்சு.” என்ற வசீகரன்,
“அவர் அதிகம் கேட்கவும் இல்லை. அதே போல அவர் எல்லோருக்கும் சமமா கிடைக்கிற மாதிரி தான் பார்த்துகிட்டார். இனியும் அவர்கிட்ட எந்தப் பிரச்சனையும் வேண்டாம்னு நினைக்கிறேன்.” எனச் சொன்னதற்கு,
“ஆனா இந்த விஷாலுக்குச் சமமா கொடுத்தது தான் தாங்க முடியலை. இதுவரை அவன் என்ன செஞ்சிருக்கான்.” எனச் சூரியா சொல்ல… வசீகரனும் உண்மை என்றான்.
“அப்பா செஞ்சதுலேயே உருப்படியானது நமக்கு கம்பனி பேர் கேட்டு வாங்கினது தான்.” என சூரியா தந்தையை நினைத்து பெருமைப்பட….
“எப்படிப்பா உங்களுக்கு தோனுச்சு?” என வசீகரனும் கேட்க,
“இத்தனை நாள் பிஸ்னஸ் பார்த்திருக்கேன். எனக்கு இதுக்கூட தெரியாதா…. நம்ம வாடிக்கையாளர்களை விட்டுட கூடாது.” என்றார் ரவீந்தர் பெரிய ராஜதந்திரி போல…
ஆர் . எஸ் என்ற பெயருக்காக அல்ல… தர்மா என்ற தனி மனிதனுக்காகவே நிறைய வாடிக்கையாளர்கள் இருக்கிறார்கள் என அவர் அறியவில்லை.
ஆர். எஸ் என்ற வெறும் பெயரை வைத்து ஒன்றும் வேலைக்கு ஆகப்போவது இல்லை. தர்மா தான் வாடிக்கையாளர்களின் நம்பிக்கை.