சாரல் மழையே 

அத்தியாயம் 17

யாரும் இப்போது சொத்துப் பிரிப்பது பற்றி யோசிக்கவே இல்லை. ஆனால் உமாபதியின் பதினாறாம் நாள் காரியத்துக்கு வந்த சுபாவின் பிறந்த வீட்டினர். மதிய உணவு முடித்து வீட்டினர் மட்டும் இருக்கும்போது அதைப் பற்றிப் பேச்சை ஆரம்பித்தனர்.

“அவர் இருந்தார்… அதனால நாங்க எதிலேயும் தலையிடலை… இப்போ அத்தான் இல்லை. எங்க அக்காவுக்கும் பசங்களுக்கும் முறையா செய்ய வேண்டியது செய்யணும் இல்லையா…” எனச் சுபாவின் தம்பி ரங்கநாதனைப் பார்த்து சொல்ல…

“அதெல்லாம் நீங்க பேச வேண்டாம். எங்க தாத்தாவுக்கு எப்ப என்ன செய்யணும்னு தெரியும்.” என்றான் விஷால் பட்டென்று.

“டேய், உன் மாமா நமக்காகத்தான் பேசுறார். உங்க அப்பாவும் இல்லை. நமக்காக யார் இருக்கா?” எனச் சுபா சொல்ல..

“ஏன் சித்தி பிரிச்சு பேசுறீங்க. நாம எல்லாம் ஒரே குடும்பம்தான். ஏன் நாங்க இல்லையா உங்களுக்கு?” என்றான் தர்மா.

“நான் இருக்கும் போதே பிரிச்சிக்கிறதா தான் முன்னாடியே பேசி இருந்தோம். முப்பது நாள் முடியட்டும்.” என ரங்கநாதன் சொல்லிவிட்டு, தர்மாவைப் பார்க்க… அவன் அவரை அங்கிருந்து அழைத்துக் கொண்டு சென்றான்.

“ஏன் மா சும்மா இருக்க மாட்டீங்களா?” என விஷால் கோபத்தைச் சுபாவிடம் காட்ட…

“உங்க அப்பா இருந்தா நான் எதிலேயும் தலையிட மாட்டேன். எனக்கு என் பசங்க எதிர்காலத்தைப் பத்தி கவலை இருக்காதா… நம்மை அப்படியே விட்டுட்டா என்ன பண்றது?” என்றார். 


அருணா அன்றே கணவனுடன் ஊர் செல்லக் கிளம்ப…. “இன்னைக்கே போகனுமா நாளைக்குப் போகலாமே.” என்றான் சந்துரு. 


இவன் வரும் நேரமெல்லாம் சேர்ந்து குடிப்பதை கவனித்துத் தர்மா அருணாவிடம், 

“அக்கா, இவர் தானே பெரியவர். அவங்களுக்கு நல்லது கெட்டதைச் சொல்றதை விட்டு, இவரும் சேர்ந்து குடிக்கிறாரே. நானே அவர்கிட்ட நேர்ல சொல்லிடுவேன். ஆனா ஏற்கனவே எங்களுக்குள்ள சரியா பேச்சு வார்த்தை இல்லை. இன்னும் இடைவெளி ஆகிடும்னு தான் பேசாம இருக்கேன்.” எனச் சொல்லி இருந்தான். அதிலிருந்து அருணா சந்த்ருவை இங்கே தேவைக்கு மேல் தங்க விடுவதே இல்லை. நாம் தான் நம் மரியாதையைக் காப்பற்றிக் கொள்ள வேண்டும் என நினைத்தாள். 


இன்று காலைதான் காரியத்துக்காக வந்தனர். ஆனால் இன்றே கிளம்புவதில் ஆருணா பிடிவாதமாக இருக்க.. சத்துருவும் வேறுவழியில்லாமல் கிளம்பினான்.

அதன் பிறகு வந்த நாட்கள் ரங்கநாதனுக்கும் தர்மாவுக்கும் சொத்துக்களை முறைபடுத்தி, அதன் மதிப்பீடுகளைக் கணக்கிடுவதிலேயே சென்றது.

தந்தை இருந்த போது வேறு, சண்டை போட்டு கூடப் பணம் வாங்கிச் செலவு செய்வான். ஆனால் இப்போது அப்படியில்லை. இத்தனைக்கும் தர்மா அவர்கள் கேட்காமலே எல்லாம் பார்த்துக் கொண்டான். ஆனாலும் இனியும் அப்படியே இருக்க முடியாது இல்லையா… விஷால் யாரும் சொல்லாமலே, அவனாகவே சிமெண்ட் கம்பெனி சென்றான்.

அவனைத் தன் அறைக்கு அழைத்த ரவீந்தர், “இன்னும் இரண்டு வாரம்தான். யாருக்கு என்னன்னு தெரிஞ்சிடும். நீ அதுக்குப் பிறகு வா.“ எனச் சொல்லி அவனை அனுப்பிவிட… சூரியாவும் உடன் இருந்தான். நீ இரு என அவனும் ஒன்றும் சொல்லவில்லை.

விஷாலுக்கு அவமானமாகப் போய்விட்டது. அவன் தர்மாவிடம் சென்று சொல்ல… “நீ இங்க ஆபீஸ்ல இரு.” என்றவன், வெகு நேர யோசனைக்குப் பிறகு,

“நான் ஏன் படிப்பை முடிக்கலைன்னு தெரியுமா? என்றவன்,

“எங்க அப்பா இறந்து, தாத்தாவும் முடியாம படுத்திட்டார். நான் பீஸ் கட்ட பணம் கேட்டு வரும் போதெல்லாம், அது எதோ தெண்ட செலவு போல… எனக்குப் பணம் கொடுக்காம, இப்ப வா அப்ப வான்னு சொல்லி அலைகழிப்பாங்க.”

“எங்க அப்பா இருந்த வரை… நான் எதுக்காகவும் யார்கிட்டயும் நின்னது இல்லை. எப்படி இருந்திருக்கும் எனக்கு.”

“அன்னைக்கு எங்க அப்பாவோட அருமை தெரிஞ்சது. வாழ்க்கையின் முக்கியமான தருணத்தில், முக்கியமான நபரை இழந்தா என்ன ஆகும்னு எனக்குப் புரிஞ்சது.”

“இவங்க இப்படிப் பண்றாங்கன்னு நான் தாத்தாகிட்ட சொல்லி இருக்கலாம். ஆனா எனக்கு அப்படிக் கேட்க பிடிக்கலை.”

“அப்ப இப்படிப் படிக்கணுமான்னு தோணுச்சு. வாங்கிற இடத்துல இருக்கிறதுனாலதான இப்படிப் பண்றாங்க. கொடுக்கிற இடத்துக்கு நான் வரேன்னு சொல்லி… அன்னைக்கு இந்தச் சேர்ல உட்கார்ந்தேன்.” எனத் தர்மா சொல்லும் போதே… அன்றைய அவனின் வேதனையை இப்போது அனுபவிப்பது போல… அந்த வலி அவன் முகத்தில் தெரிந்தது. 


“இத்தனைக்கும் எங்க அப்பா பேர்ல பேங்கல பணம் இருந்தது. அதையும் அது கம்பனி பணம்னு சொல்லி வாங்கிட்டாங்க.” 


“நமக்கே உரிமை இருந்தாலும், இந்தான்னு யாரும் தூக்கி கொடுக்க மாட்டாங்க. எல்லா நிராகரிப்பும், அவமானமும் சந்தித்துதான் வரணும். இவங்க இப்படிப் பேசிட்டாங்க நினைக்காத… ஒருநாள் இவங்க எல்லாம் உன்னை வியந்து போய்ப் பார்க்கணும்.” என்றான். 


தர்மா நேரடியாகச் சொல்லவில்லை என்றாலும், தன் அப்பாவும் சேர்ந்து செய்த வேலைதான் என விஷாலுக்குப் புரிந்தது. 


உண்மைதான் ரங்கநாதன் அப்போது இப்போது போல அல்ல… அவருக்கு ரொம்பவும் முடியவில்லை. இந்த அளவுக்குப் பிழைத்து எழுந்திருப்பார் என்றெல்லாம் யாரும் நினைக்கவில்லை. 


உண்மையில் தர்மா மிகவும் அமைதி. நாம் கொடுப்பதைக் கொடுத்தால் வாங்கிக் கொண்டு சென்று விடுவான். அவர்கள் தந்தை காலத்திற்குப் பிறகு அதைப் பார்த்துக் கொள்வோம் என்று தான் ரவீந்தரும், உமாபதியும் நினைத்திருந்தனர். ஆனால் தர்மா அவர்கள் நினைத்தது போல இல்லை. விஸ்வரூபம் எடுத்து நின்றான். 


எத்தனை முறை நீங்க படிக்கவில்லை என விஷாலும்தான் சொல்லிக் காட்டியிருப்பான். ஆனால் அதற்குப் பின்னால் இப்படியொரு நிகழ்வு இருக்கும் என அவன் நினைக்கவே இல்லை. 


சனிக்கிழமை இரவு ஒன்பது மணிக்கு மேல் தர்மாவின் வீட்டில் எல்லோரும் கூடினர்.
சொத்து பிரிக்கும் அன்று… யாருக்கு எது எனத் தெரிந்துகொள்ளும் ஆர்வத்தில் எல்லோரும் இருந்தனர் என்றால்.. சண்டை என்று எதுவும் வந்துவிடக் கூடாது எனப் பயத்தில் இருந்தது ஜமுனாவும், நாயகியும் தான். 


கீர்த்தி மட்டும் எதைப் பற்றியும் கண்டுகொள்ளவே இல்லை. இன்றைக்கு ஒன்றுமில்லாமல் வெளியே வந்தாலும், தன் கணவன் தன்னையும் பிள்ளைகளையும் வைத்து காப்பாற்றும் அளவு திறமை வாய்ந்தவன் என்ற நம்பிக்கை தான் காரணம்.

கீர்த்தி உண்டு முடித்து அறைக்குச் செல்கையில், அவளுடன் தர்மாவும் சென்றான்.

“நீ தூங்கு கீர்த்தி. பேசி முடிக்க முன்ன பின்ன ஆகும்.”

“நீங்க எதுக்கும் டென்ஷன் ஆகாதீங்க. என்ன கொடுக்கிறாங்களோ வாங்கிட்டு வாங்க. நமக்குப் போதும். நாம பார்த்துக்கலாம்.” என்றாள்.

இதைவிட என்ன வேண்டும், தர்மா மனைவியை ஆசையாக அனைத்து அவள் கன்னத்தில் முத்தமிட…. எனக்கு இதெல்லாம் பத்தாது என்றவள், அவன் முகத்தைப் பற்றி, அவன் இதழில் அழுத்தமாக முத்தமிட்டாள். 


“எனக்கும் இதெல்லாம் பத்தாது தான். ஆனா இப்ப எனப் பண்ண முடியும்?” என அவளின் ஏழு மாத வயிற்றை வருட, போதும் கிளம்புங்க என்றால் கீர்த்தி.
அவன் சென்றதும் சிறிது நேரம் அறையின் பால்கனியில் நடந்தவள், பிறகு உடைமாற்றிக் கட்டிலில் படுத்தாலும் உறக்கம் வருவேனா என்றது. 


கோபம் வந்தால் விஷாலும் மற்றவர்களும் எப்படிப் பேசுவார்கள் என்பதை அவள் அறிவாள். கணவனை எதுவும் பேசி விடுவார்களோ என்று ஒருபுறம் மனதிற்குள் கவலை இருக்கவே செய்தது. 


தாத்தாவை நான் பார்த்துக்கொள்வதாகச் சொல்லி நாயகி, ஜமுனா இருவரையும் தர்மா அவர்களின் அறைக்கு அனுப்பி இருந்தான். அவர்களுக்கும் கீர்த்தியின் நிலைதான். இன்று கடந்து விட்டால் போதும் என்றிருந்தது.

ரங்கநாதனும் தர்மாவும் யாருக்கு என்ன எனக் ஏற்கனவே குறிப்பெடுத்து வைத்துதான் இருந்தனர். இருந்தாலும், எடுத்ததும் அப்படிச் சொல்லாமல், இருக்கிறதை சமமா மூன்னு பங்கா பிரிச்சிடலாம் இல்லையா என்றதும்,

“அதெப்படி தாத்தா சமமா பிரிப்பீங்க? தர்மா அண்ணன் ஆரம்பத்தில இருந்தே பிஸ்னஸ்ல இருக்கார். அதே போல நானும், வசீகரனும் படிச்சு முடிச்சதுல இருந்து பிஸ்னஸ் பார்க்கிறோம். ஆனா விஷால் இதுவரை கம்பெனி பக்கமே வந்தது இல்லை. அவனுக்கும் எங்களுக்கும் சமப்பங்கு கொடுப்பீங்களா?” எனச் சூரியா கேட்டானே பார்க்கலாம்.

தர்மா உடனே விஷாலைத்தான் பார்த்தான். எத்தனை தடவை சொல்லியிருப்பான் கம்பெனிக்கு வா என்று கேட்டானா அவன். ஒருமுறை தானே அழைத்துச் சென்று விட்டான். அப்போதும் விஷால் தர்மாவை மதித்தானா?”

விஷாலுக்குப் பயங்கிற அதிர்ச்சி. அடப்பாவி அப்போது எல்லாம் தர்மா அண்ணனை குறை சொல்லிவிட்டு, இப்போது இப்படிப் பேசுகிறானே… என்பது போலப் பார்த்துக் கொண்டிருந்தான்.

அதோடு சூரியா விடவில்லை. “நானும் வசீகரனும் எங்க உழைப்பை மொத்தமா இதுலதான் போட்டிருக்கோம். எங்களுக்குதான் சிமெண்ட் கம்பெனி இருக்கிற இடம், அதோட கோடௌன் இடங்கள் எல்லாம் எங்களுக்குத்தான் கொடுக்கணும்.” என்றான்.

தர்மாவுக்குத் தெரியும் அவர்கள் கண்டிப்பாக அந்த இடத்தைக் கேட்பார்கள் என்று. இருப்பதிலேயே அளவில் பெரியது மட்டும் அல்ல… மதிப்பும் அதிகம் கொண்டது. கோடிகளில் விலைப் போகும்.

அப்போது இதைச் சொல்லியிருந்தால், எங்களுக்கு அப்படியொரு எண்ணமே இல்லையென்று தர்மாவின் பக்கம் திருப்பியிருப்பார்கள். அதனாலதான் தர்மா விஷாலை சிமெண்ட் கம்பெனிக்கு போ எனச் சொன்னது. அவன் எங்கே புரிந்து கொண்டான். தர்மா காரணத்தைச் சொல்லியிருந்தாலும் நம்பி இருக்க மாட்டான்.

“என்னை என்ன தர்மா அண்ணன்னு நினைச்சீங்களா? நான் அவரை மாதிரி நல்லவன் இல்லை… நான் அக்கியுஸ்ட்டு…. எனக்கு இல்லைனா இங்க யாருக்கும் இல்லை…” என விஷால் சண்டைக்கு நிற்க… சூரியாவும் எதிர்க்க… இருவருக்கும் கைக்கலப்பு ஆனது. 


தர்மா விஷாலை பிடித்து இழுக்க, வசீகரன் சூரியாவை பிடித்துத் இழுத்தான். 


“சொத்து பிரிக்க வந்து, நாம ஆளாளுக்குப் பிரிஞ்சு நிற்கப் போறோமா… இத்தனை நாள் சேர்ந்து இருந்தோம், இப்ப தனியாப் போனாலும் சண்டை இல்லாம போவோம். நாளை பின்ன நாம ஒருத்தரையொருத்தர் பார்த்துக்க வேண்டாமா?” என்றான் தர்மா. 


“அப்போ என்னைக் கம்பெனிக்கு வர வேண்டாம் சொல்லிட்டு… இப்போ இப்படிப் பேசினா?” என விஷால் கேட்க, 


“அவன் சொன்னா உனக்கு எங்க போச்சு புத்தி?” எனத் தர்மா நன்றாகத் திருப்பிக் கேட்டான். 


“உனக்கு வயசில்லையா… நீ பொறுப்பா இருந்திருக்கணும் இல்ல….” என்றதும் விஷால் அமைதியாக… 


“சூரியா நான் உன்னைக் கேட்கிறேன். நீயும் வசியும் பிசனஸ் பார்த்தீங்க இல்லைன்னு சொல்லலை…. ஆனா அதுக்கான பணம் எடுக்காம இருந்தீங்களா… அதை மட்டும் சொல்லுங்க.” என்றதும், சூரியாவும் வசீகரனும் பதில் பேசவில்லை. ஏனென்றால் அவர்கள் பார்த்த வேலைக்கு உடனுக்குடன் பணம் வாங்கி விடுவார்கள். ஏன் அதற்கு மேலேயே எடுப்பார்கள். அது தர்மாவுக்குத் தெரியும். 


“நீங்க அப்பப்ப பணம் வாங்கிட்டீங்க… அதுக்குப் பிறகு சொத்து அதிகம் கொடுன்னு கேட்கிறது நியாயம் இல்லை.” 


“இத்தனை நாள் உமாபதி சித்தப்பா பிஸ்னஸ் பார்த்திருக்கார். அப்ப அவங்களுக்கு மட்டும் எப்படி குறைச்சு கொடுப்பீங்க. இங்க எல்லோருக்கும் சமமான்ன பங்குதான்.” என்றான் தர்மா முடிவாக. அதுவரை வெட்டவா குத்தவா என்பது போல இருந்த விஷாலும் இருக்கையில் அமர்ந்தான். 


தொழிலில் வரும் லாபத்தில்… மீண்டும் சரக்கு வாங்க மற்றும் குடும்பச் செலவிற்குப் போக… சேர்ந்து கொண்டிருக்கும் பணத்தில் இரண்டு வருடத்திற்கு ஒருமுறை சொத்தாக வாங்கி விடுவார்கள். அதனால் சொத்துக்கள் அதிகம். 


தர்மாவுக்குக் கைப்பேசியில் மெசேஜ் வர… கீர்த்தித் தான் அனுப்பி இருந்தாள். 


“இஸ் எவரிதிங் ஓகே?” என வர… அவள் கவலையை உணர்ந்தவன், 


“பைன்… நத்திங் டு வொர்ரி. குட் நைட்.” என மெசேஜ் அனுப்ப, அதன் பிறகே சற்று நிம்மதியடைந்தாள்.