திருச்சியிலிருந்து கிளம்பிய பேருந்து இரண்டு மணி நேரத்தில் கரூர் வந்தடைந்தது. ஆட்டோ பிடித்து நங்கையின் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தான் ஆதி. உள்ளத்தில் இனம் புரியாத உணர்வொன்று பரவியது. மூன்று மாதங்களுக்கு பிறகு நங்கையை பார்க்கப்போகிறோம் என்ற உணர்வுடன், உடம்பின் ஒவ்வொரு அணுவும் நங்கையை பார்ப்பதற்காக துடித்துக்கொண்டிருந்தது.
மதிய சமையலுக்காக காய் நறுக்கிக் கொண்டிருந்தாள் நங்கை. சோபையின்றி அமர்ந்திருந்த நங்கையை பார்த்த பிரேமாவுக்கு அவளின் சந்தோஷம் எது என்று இப்போது புரிந்திருந்தாலும், மீண்டும் ஆதியின் வீட்டிற்கு அழைத்து செல்ல எந்த முயற்சியும் எடுக்கவில்லை.
பிரேமா முயற்சி செய்தாலும் நங்கை வரமாட்டாள்தான். ஆனாலும் பிரேமாவுக்கு பழனிவேலின் கொள்கையில் நியாயம் இருப்பதாகவே பட்டதால் ஆதியுடன் அனுப்புவதை பற்றி யோசிக்கவே இல்லை. இப்போது கஷ்டப்பட்டாலும் பின்னாளில் நங்கை நலமுடன் வாழ இந்த கஷ்டம் படட்டும் என விட்டு விட்டாள்.
அழைப்பு மணி ஒலிக்க, நங்கை எழுந்து சென்று கதவை திறந்தாள். ஒரு நிமிடம் பிரம்மையோ என நினைத்தாள். “எப்படியிருக்கீங்க நங்கை?” என்று இத்தனை நாட்கள் அவளை பார்க்காத பரிதவிப்பையும், இப்போது பார்த்துவிட்ட மகிழ்ச்சியையும், தான் அவள் மீது கொண்ட காதலையும் கண்களில் தேக்கி ஆதி கேட்டான்.
ஒரு நொடி அவன் உருவத்தை தன் கண்களில் நிறைத்த நங்கை, ஆதி அருகில் வரவும், தன் அறைக்கு ஓடிச் சென்று கதவை அடைத்துக் கொண்டாள்.
பிரேமா வந்து பார்த்துவிட்டு “வாங்க தம்பி” என அழைத்து அவனின் நலம் விசாரித்தார். வீட்டில் பிரேமாவும் நங்கையும் மட்டுமே இருந்தனர்.
“நல்லா இருக்கேன் அத்தை” என்று கூறிக்கொண்டே நங்கை சென்ற அறையின் வெளியில் நின்று கதவை தட்ட ஆரம்பித்தான் ஆதி. “கதவைத் திறங்க நங்கை ப்ளீஸ்…” எனக் கூறிக் கொண்டே கதவை தட்டிக் கொண்டிருந்தான்.
நங்கைக்கு அழுகை முட்டிக்கொண்டு வந்தது. அவனைப் பார்த்ததில் எல்லையற்ற ஆனந்தமாக இருந்தபோதிலும், அவனிடம் பேச முடியாமல் அவள் செய்து கொடுத்த சத்தியம் தடுத்தது.
ஆதி விடாமல் கதவைத் தட்டிக் கொண்டிருக்க, பிரேமா தன் கணவருக்கு அலைபேசியில் தகவல் சொன்னாள்.
“தம்பி இங்க உட்காருங்க. நங்கை அப்பா இப்ப வந்துடுவார். இவ சரியான வீம்புக்காரி. அவர் வந்து சொன்னா கதவை திறப்பாள்” என்றார் பிரேமா.
கதவை அடித்து உடைத்து திறந்து விடலாமா என்று யோசித்தவனுக்கு பிரேமா இப்படி கூறவும் அமைதியாக தமிழரசுவின் வருகையை எதிர்பார்த்து உட்கார்ந்து கொண்டான். அடுத்த 20 நிமிடங்களில் தமிழரசுவும் வந்துவிட்டார்.
ஆதியின் நலத்தை விசாரித்தார் தமிழரசு. பதிலளித்த ஆதி “மாமா எனக்கு நங்கையை பார்க்கணும், கதவைத் திறக்கச் சொல்லுங்க” என்றான்.
தமிழரசு அறைக்கு வெளியில் நின்றுகொண்டு, “கதவைத் திற நங்கை. உன்னை பார்க்கதானே அவ்வளவு தூரத்தில் இருந்து வந்திருக்கிறார். நீ இப்படி செய்றது சரியில்லை” என்றார். இன்னும் ஏதேதோ கூறி பார்த்தார். நங்கை செவிசாய்த்து கதவை திறப்பதாக தெரியவில்லை.
சோர்வடைந்த தமிழரசு ஆதியிடம் வந்து, “மாப்பிள்ளை அவ என் அப்பாவுக்கு செஞ்சு கொடுத்த சத்தியத்திற்காக இதுவரைக்கும் ஐஸ்கிரீமே சாப்பிட்டதில்லை. அவ்வளவு அழுத்தம், வீம்பு. இனிமே உங்க சாமர்த்தியம்தான்” என்றவர், “பிரேமா வா, நாம வெளியில போயிட்டு வரலாம்” என கூறி பிரேமாவையும் அழைத்துக்கொண்டு வெளியேறினார்.
“என்னங்க இது? என்னை எதுக்கு இப்போ வெளியில கூட்டிட்டு கிளம்புறீங்க?” எனக் கேட்டார் பிரேமா.
“மாப்பிள்ளை ஏதாவது சொல்லி நங்கையை சமாதானப்படுத்தி கதவை திறக்க வைப்பார். நம்ம இருந்தா அவர் மனசுல உள்ளதை எப்படி வெளிப்படையா பேசமுடியும்? நங்கையை பார்க்கிறதானே, அவரை பிரிஞ்சு கஷ்ட படுறதை. அவரே சரி செய்யட்டும். நம்ம எதுக்கு குறுக்க?” எனக் கேட்டார்.
“நங்கை கதவைத் திறக்க போறீங்களா இல்லையா?” என கத்தினான் ஆதி.
“நீங்கதானே என்கிட்ட பேச மாட்டேன்னு சத்தியம் பண்ணியிருக்கீங்க. நீங்க பேச வேண்டாம். நான் உங்க கிட்ட பேசலாம் தானே. பார்க்கலாம்தானே. பைத்தியம் பிடிக்குதுங்க. கதவை திறங்க” என ஆதி கூற, நங்கையும் யோசித்தாள்.
“கைவலிக்குதுங்க கதவை திறங்க” என ஆதி கூறுவதற்கும் நங்கை கதவை திறப்பதற்கும் சரியாக இருந்தது. உள்ளே வந்தவன் மின்னல் வேகத்தில் அவளை கட்டியணைத்திருந்தான். ஆதியின் இறுக்கமே சொன்னது அவனது பிரிவுத் துயரத்தை. நங்கை அவனை அணைக்காமல் அவனது அணைப்புக்கு மட்டும் கட்டுண்டு இருந்தாள்.
அவள் கன்னத்தோடு தன் கன்னம் இழைத்தான். கழுத்தில் முகம் புதைத்தான். ஆதியின் கண்ணீர் நங்கையின் கழுத்தை சுட்டது. நங்கையின் கண்ணீர் அவன் நெஞ்சத்தை நனைத்தது.
சிறிது நேரத்தில் தன்னை சமன் செய்து கொண்டவன் இருகைகளாலும் அவள் முகத்தை தாங்கி பிடித்தான். நங்கை எதுவும் கேட்காமலேயே, அவள் கேட்க நினைத்த கேள்விகளுக்கு பதிலளித்தான்.
“நான் இப்போ நல்லா ஆகிட்டேன். எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை. அரியர்ஸ் எக்ஸாம் எல்லாத்திலயும் பாஸ் பண்ணிட்டேன். உங்கள ரொம்ப மிஸ் பண்றேன்”
“எங்க அப்பா உங்ககிட்ட சத்தியம் வாங்கி உங்கள என்கிட்டேயிருந்து பிரிச்சு வச்சா, உங்கள என்கிட்ட வரவைக்க முடியாதா? நீங்க வந்தா தான் அடுத்த வேளை சாப்பாடே சாப்பிடுவேன்னு நான் உண்ணாவிரதம் இருந்தா என்ன பண்ணுவீங்க? சத்தியம் தான் பெருசுன்னு வர மாட்டீங்களா? சத்தியமாவது மண்ணாவதுன்னு எங்கிட்ட ஓடி வருவீங்களா?” என ஆதி கேட்க, திருதிருவென்று விழித்தாள் நங்கை.
“கவலைப்படாதீங்க அப்படியெல்லாம் பைத்தியக்காரத்தனம் நான் பண்ண மாட்டேன். உங்களுக்கு என்னமோ, சந்தர்ப்பத்தை பயன்படுத்தி எங்கப்பா வாங்கி கிட்ட சத்தியம்னாலும் காப்பாத்தணும்னு நினைக்கிறீங்க. உங்க உணர்வை நான் மதிக்கிறேன்”
“இதே பழைய ஆதியா இருந்தா, எங்க அப்பா கடைக்கு எதிர்ல இருக்குற கடையில நாள் கூலிக்கு வேலைக்கு சேர்ந்து அவரை வெறுப்பேத்தியிருப்பேன். இப்போ இருக்கிற ஆதி என் நங்கையோட ஆதி. எங்க அப்பா போடுற கண்டிஷனுக்காக எல்லாம் நான் வேலைக்கு போகணும்னு நினைக்கலை. உங்களை நல்லா வச்சுக்கணும். உங்களோட சந்தோசமா வாழனும். நமக்கு பிறக்கப் போற பிள்ளைகளை நல்லா பாத்துக்கணும். அதுக்காகத்தான் வேலைக்கு போகணும்னு நினைக்கிறேன்”
“வீட்ல எல்லாரும் படி படின்னு சொன்னா…? புக்க திறந்தாலே உங்க நினைப்பாவே இருக்குங்க. எதுவும் மண்டையில ஏற மாட்டேங்குது. இப்படி இருந்தா எப்படிங்க படிப்பேன்?”
“அந்த மீசை என்னமோ பெரிய அறிவாளியாட்டம் எனக்கு டார்கெட் வைக்கிறார். அந்தாளுக்கு சொன்னாலும் புரிய மாட்டேங்குது. அவர்தான் பைத்தியக்காரத்தனமா நினைக்கிறார். உங்களுக்கு தெரிய வேணாமா நீங்க இல்லாம என்னால எதுவும் செய்ய முடியாதுன்னு?”
“இப்ப என்ன? எனக்கு வேலை கிடைக்கிற வரைக்கும் என்கிட்ட பேச மாட்டீங்க, என் கூட வரமாட்டீங்க. வேணாங்க, பேச வேண்டாம். என்கிட்டயும் வரவேண்டாம். நான் உங்க கிட்ட பேசுறேன், நீங்க கேட்க மட்டும் செய்யுங்க. நான் கால் பண்ணா தயவுசெஞ்சு அட்டென்ட் பண்ணுங்க. வீடியோ கால்ல தினமும் உங்க முகத்தை காட்டுங்க. நீங்க பேசணும்னு நினைக்கிறதை மெசேஜ் பண்ணுங்க. இதெல்லாம் செய்யக் கூடாதுன்னு அந்த மீசை ஒன்னும் உங்ககிட்ட சத்தியம் வாங்கலையே? இதெல்லாம் நீங்க செஞ்சாதான் என்னால கான்சன்ட்ரேட் பண்ணி படிக்க முடியும்ங்க” என ஆதி நீளமாக பேசி நங்கையின் முகத்தையே பார்க்க, நங்கை யோசனையாய் இருந்தாள்.
“ரொம்ப யோசிக்காதீங்க. நான் ரொம்ப எல்லாம் நல்லவன் கிடையாது. அப்புறம் உங்களை எங்கேயாவது காட்டுக்கு கடத்திட்டு போயிடுவேன். எவனாலையும் என்னை தடுக்க முடியாது” என ஆதி கூற நங்கை ஆதியை முறைத்தாள்.
“இப்படி முறைச்சு முறைச்சு பார்க்காம நான் கேட்டதுக்கு சரின்னு சொல்லுங்க” எனக் கூறிவிட்டு, “அட நீங்க தான் என்கிட்ட பேச மாட்டீங்கல்ல? தலையை மட்டுமாவது ஆட்டுங்க?” என்றான்.
நங்கையும் சிரித்துக் கொண்டே சரி என்பதாய் தலையாட்டினாள்.
அவளை நெஞ்சோடு அணைத்துக் கொண்டவன், “என்னங்க இது இப்படி இளைச்சு போயிருக்கீங்க? என்னை பாருங்க. உங்க புருஷனை உங்க மாமியார் எப்படி கவனிச்சுக்குறாங்கன்னு தெரியும். என் மாமியார் சரியில்லை, என் பொண்டாட்டிக்கு சாப்பாடு போடுறாங்களா இல்லையா?” எனக் கேட்க நங்கை மெலிதாய் சிரித்தாள்.
வெளியில் பேச்சுக் குரல்கள் கேட்க ஆதியிடமிருந்து விலகினாள் நங்கை. அவசரமாய் அவளை அணைத்து, அவள் இதழில் தன் இதழை பதித்த பின்னரே விலகி நின்றான் ஆதி. அவள் கையை பிடித்து வெளியில் அழைத்து வந்தான்.
“நான் கூப்பிட்டுக்கிற வரை என் நங்கையை நல்லா பார்த்துக்குங்க மாமா” என்றான்.
சரி என்று கூறிய தமிழரசு, நங்கையின் மலர்ந்த முகத்தை பார்த்து நிம்மதி அடைந்தார்.
“நான் கிளம்புறேன்” என ஆதி கூற, “அப்பா அவரை சாப்பிட்டு போக சொல்லுங்க” என அவசரமாக கூறினாள் நங்கை.
சமையல் இன்னும் முடியவில்லை. நங்கை சமைப்பதற்காக செல்ல, பிரேமாவும் பின்னே சென்றார். “நான் பெர்மிஷன் போட்டுட்டு வந்ருக்கேன் மாப்பிள்ளை. தப்பா எடுத்துக்காதீங்க. நீங்க சாப்பிட்டுட்டுதான் கிளம்பனும். நான் வரேன்” என விடைபெற்றார் தமிழரசு.
அரை மணி நேரத்தில் சாப்பாடு தயாராக, பரிமாறினாள் நங்கை. இருவருக்கும் தனிமை கொடுத்து இங்கிதமாக தன்னுடைய அறைக்கு சென்றுவிட்டார் பிரேமா. வேலை கிடைத்துதான் ஆதி நங்கையை அழைத்துச் செல்லப் போகிறான் என்பதை அறிந்த பின்னர்தான் நிம்மதி அடைந்திருந்தார் பிரேமா.
சாப்பாடு பரிமாறியவளை தனது அருகில் இழுத்து அமர வைத்தவன், முதலில் அவளுக்கு ஊட்டி விட, வாயைத் திறக்காமல் இருக்க, “நான் ஊட்டி நீங்க சாப்பிடக் கூடாதுன்னு எல்லாம் எங்க அப்பா சத்தியம் வாங்கியிருக்காரா? இல்லைதானே? ஒழுங்கா வாயை திறங்க” என மிரட்டினான் ஆதி.
அவளுக்கு ஊட்டி முடித்த பின்னர்தான் அவன் உணவருந்தினான். சாதாரண காரக்குழம்பும், புடலங்காய் பொரியலும்தான். நங்கை சமைத்தது என்பது அதன் ருசியிலேயே ஆதிக்கு தெரிந்தது. ரசித்து சாப்பிட்டான்.
கைகழுவி கொண்டவன், “எங்க அப்பனுக்காக இல்ல, என் பொண்டாட்டிக்காக, நான் என்ன பண்ணினாலும் என்னை பொறுத்துகக்கிட்டு என்மேல் அன்பு வச்சிருக்கிற என் வீட்ல உள்ளவங்களுக்காக கண்டிப்பா வேலைக்கு போவேன். அதுக்கப்புறம் எந்த கொம்பனாலும் என்னை உங்ககிட்ட இருந்து பிரிக்க முடியாது. அதுவரைக்கும் இப்படி சாப்பிடாமல், தூங்காமல் உடம்ப கெடுத்துக்காம ஒழுங்கா இருக்கணும். புரிஞ்சுதா….” என்றவன் அவள் தலையை வருடி “நான் உங்கள ரொம்ப கஷ்டப்படுத்திட்டேன்ல, எந்த கஷ்டமும் இல்லாம கண்டிப்பா உங்கள பார்த்துப்பேன்” என கூற, நங்கை கண் கலங்கினாள்.
“இந்த அழுகாட்சி நங்கை வேண்டாம். கொஞ்சம் சிரிச்சுகிட்டே வழியனுப்புங்க” என ஆதி கூற சிரித்தாள் நங்கை.
உங்க அம்மாவை கூப்பிடுங்க சொல்லிக்கிட்டு கிளம்புறேன்” என ஆதி கூற அவள் கூப்பிட மாட்டேன் என்பதாய் நின்றுகொண்டாள்.
அவளை உற்றுப் பார்த்தவன், “என்னங்க முன்னாடி உங்க அம்மா என்கிட்ட சொல்லிக்காம கிளம்புனாங்களே, அதை மனசுல வச்சிக்கிட்டு செய்றீங்களா?” என ஆதி கேட்க, நங்கை ‘ஆம்’ என்பதாய் தலையாட்டினாள்.
“எனக்கு உங்க அம்மா மேல எந்த கோபமும் இல்லை” என்றவன் சற்று நெருங்கி வந்து “லட்டு மாதிரி பொண்ணை பெத்து என்கிட்ட கொடுத்திருக்காங்க. அவங்க கிட்ட கோபப்பட முடியுமா?” என கேட்க, குறுநகை புரிந்த நங்கை தன் அன்னையை அழைத்தாள். பிரேமாவிடமும் சொல்லிக்கொண்டு கிளம்பினான் ஆதி. பிரேமா தன்னுடைய அந்நாளைய செயலுக்காக மனம் வருந்தினார்.
மூன்று மாதங்களாக ஒருவரை ஒருவர் பார்க்காமல் பிரிவுத் துயரில் தவித்துக்கொண்டிருந்த இரு உள்ளங்களும், பார்த்துக் கொண்ட சந்தோஷத்தில் சிறிது நேரம் மகிழ்ச்சியில் திளைத்திருந்தாலும், மீண்டும் ஏற்படும் இந்த பிரிவை எண்ணி மீண்டும் துயரம் கொண்டன.
சீக்கிரம் வேலைக்கு சென்று தன்னை அழைத்துக் கொள்வான் என தன் மனதுக்கு நங்கை சமாதானம் கூற, தேர்வுக்காக எப்படி எல்லாம் தயாராகலாம் என சிந்தித்துக் கொண்டிருந்தான் ஆதி.
பேருந்து நிலையம் செல்வதற்காக ஆட்டோ பிடித்து சென்று கொண்டிருந்தான் ஆதி. வழியில் கார்த்திக் நிற்பது போல இருக்க ஆட்டோவை நிறுத்தச் சொன்னான். கார்த்திகேதான். அவனது பைக்கில் ஏதோ பிரச்சனை போல, சரி செய்து கொண்டிருந்தான். அருகில் துப்பட்டாவில் முகம் மறைத்து ஒரு பெண் நின்றிருந்தாள்.
ஆதி அருகில் வருவதைப் பார்த்த பெண் சட்டென திரும்பி நின்று கொண்டாள். ஆதிக்கும் அவளை எங்கோ பார்த்தது போல தோன்றியது. முகம் மூடி, கண்கள் மட்டுமே தெரிந்ததால் அவனுக்கு யாரென்று சரியாக தெரியவில்லை.
இவனை பார்த்து கார்த்திக்கும் அதிர்ச்சியடைய, “என்னடா, இங்க ஏன் நிக்குற? வண்டியில பிரச்சனையா?” எனக் கேட்டான் ஆதி.
ஆமாண்டா, என்னன்னு தெரியலை என்ற கார்த்திக்கு வியர்த்துக் கொட்டியது. அந்தப் பெண் யாராக இருக்கும் என யோசித்துக்கொண்டிருந்த ஆதி சட்டென “வெண்பா” என அழைத்தான்.
அவள் திரும்பாமலேயே நின்றுகொண்டிருக்க, “வெண்பா திரும்பு” என்றான்.
திரும்பிய வெண்பா தன் முகத்தை மூடியிருந்த துப்பட்டாவை நீக்கினாள். இருவரையும் மாறி மாறி பார்த்த ஆதி, “எவ்வளவு நாளா இது நடக்குது?” என கேட்டான்.