NVNN-12

அத்தியாயம் 12

நடு இரவில் வீட்டிற்கு வந்த மகளை பார்த்த பிரேமாவுக்கு பயம் வந்தது. “என்னங்க எதுவும் பிரச்சனையா?” என கேட்டார்.

“நீ போம்மா போய் ரெஸ்ட் எடு” என்று நங்கையை உள்ளே அனுப்பியவர், பிரேமாவிடம் விவரத்தைக் கூறினார்.

“நங்கை வீட்டுக்காரருக்கு இப்போ எப்படி இருக்கு?” என கேட்டார் பிரேமா.

“கையிலயும் கால்லயும் ஆபரேஷன் பண்ணி பெரிய கட்டு போட்டு இருக்காங்க. நல்லாகிடுவார்ன்னுதான் டாக்டர் சொல்லியிருக்காங்க. அதுக்குள்ள இந்த மாப்பிள்ளையோட அப்பாதான் குட்டையை குழப்பிட்டார்” என்றார் தமிழரசு.

“அவரைத் திட்டாதீங்க. எனக்கு என்னமோ அவர் செஞ்சது சரின்னுதான் படுது. நான் சொன்னதை கேட்காம என் மனசையும் மாத்தி உங்க பொண்ணுக்கு கல்யாணம் பண்ணி வச்சீங்க. ஆனா என்ன வாழ்க்கை வாழ்ந்தா? விடுங்க…. அவர் நல்ல வேலைக்கு போயிட்டு அப்புறமா நங்கையை கூட்டிட்டு போகட்டும். அதுவரைக்கும் கஷ்டப்படாம நம்ம கூடவே இருக்கட்டும்” என்றார் பிரேமா.

“உன்கிட்ட சொன்னேன் பாரு. மாப்பிள்ளை அடிபட்டு கிடக்கும் போது, நங்கைக்கு இங்க எப்படி நிம்மதியா இருக்க முடியும். மாப்பிளையும்தான் எப்படி நங்கை இல்லாம சமாளிப்பார்”

“அவ என்ன அம்போன்னா விட்டுட்டு வந்திருக்கா? பார்த்துக்கதான் ஆள் இருக்காங்களே. அப்புறம் என்ன? அவ கொஞ்ச நாள் கஷ்டப்படாம நம்ம கூட இருக்கட்டும்”

“அடி போடி… உன் பொண்ண பத்தி இவ்வளவுதானா நீ தெரிஞ்சி வச்சிருக்கிறது? என்ன கஷ்டம்னாலும் மாப்பிள்ளை கூட இருக்கிறதுதான் நங்கைக்கு சந்தோஷம். அந்த சந்தோசத்தை உன்னால என் பொண்ணுக்கு கொடுக்க முடியாது”

“உங்களுக்கு நிதர்சனம் புரியல அந்த வீட்டில் எவ்வளவு கஷ்டத்துல இருந்திருப்பா? நீங்க வேணா பாருங்க நங்கை ரெண்டு மூணு நாள்ல சரியாயிடுவா. அப்புறம் சந்தோஷமா தான் இருப்பா” என பிரேமா கூற,

சிலருக்கு உண்மையை கூறி புரிய வைக்க முடியாது எனும் போது விளக்கிப் பேசி தனது சக்தியை குறைத்து கொள்வதைவிட பேசாமலே விட்டு விடுவது சிறந்தது என்று எண்ணியவராய் அமைதியாய் பிரேமாவை கடந்து சென்றார் தமிழரசு.

அடுத்த நாள் மதியத்தில் அறைக்கு மாற்றப்பட்டு விட்டான் ஆதி. காலையிலிருந்தே நங்கையை எதிர்பார்த்திருந்தவன் தன் அன்னையிடம் “நங்கை எங்கம்மா?” என கேட்டான்.

“நீ முதல்ல சாப்பிடு” என கஞ்சியை அவன் அருகில் எடுத்துச் செல்ல, “நீ முதல்ல நங்கை எங்கன்னு சொல்லு?” என்றான்.

பெருமூச்சு விட்ட சந்திரா அனைத்தையும் கூறிவிட்டார்.

“நங்கை போய்ட்டாங்களாம்மா?” என பரிதவிப்புடன் கேட்டான் ஆதி.

“ம்… போய்ட்டா ஆதி. உன் அப்பா இப்படி பண்ணுவார்ன்னு நினைக்கல டா” என்றார்.

கண்களை மூடி படுக்கையில் சாய்ந்து கொண்டான். “சாப்பிடுடா” என சந்திரா கூற, கண்களை திறந்தவன் “உன் ஃபோனை எடு” என்றான்.

ஆதியின் இடதுகையில் சலைன் ஏறிக் கொண்டிருக்க, “நான் நம்பர் சொல்றேன், நீ போடு” என்றான்.

நங்கைக்கு கால் செய்து அவனிடம் நீட்ட, “லவுட் ஸ்பீக்கர்ல போடும்மா” என்றான். அவரும் அவ்வாறே செய்தார். நங்கையிடம் சந்திராவின் எண் இல்லை. யாரோ என நினைத்து அழைப்பை ஏற்றாள்.

“ஹலோ” என்றாள் நங்கை.

“ஏன் இப்படி பண்ணுனீங்க?”

ஆதியின் குரலைக் கேட்டதும் நங்கைக்கு அழுகையில் நெஞ்சம் விம்மியது.

“எங்க அப்பா சொன்னா என்னை விட்டுட்டு போய்டுவீங்களா? உங்க பணமே வேண்டாம்னு என்னை ஜி ஹெச் ல கொண்டு போய் சேர்க்க வேண்டியதுதானே? எனக்கு உங்களை பார்க்கணும். உடனே கிளம்பி வாங்க” என்றான் ஆதி. நங்கை பதிலே பேசவில்லை.

“உங்களுக்கு தெரியும்தானே நீங்க இல்லாம என்னால இருக்க முடியாதுன்னு, எப்படி உங்களுக்கு மனசு வந்தது என்னை விட்டுட்டு போக?”

“நங்கை ஏதாவது பேசுங்க” என்றான்.

அழைப்பை துண்டித்தாள் நங்கை. மீண்டும் அழைக்க கைப்பேசி அணைக்கப்பட்டு இருப்பதாக செய்தி வந்தது.

“உன் புருஷன் என் வாழ்க்கையில விளையாடிட்டார்லம்மா? எனக்கு தெரியாது, எனக்கு என் நங்கை வேணும். ஏதாவது பண்ணி கூட்டிட்டு வா. அதுவரைக்கும் நான் சாப்பிட மாட்டேன்” என்றான் ஆதி.

விஜய் உள்ளே வர, “நீயும் இருந்தியா? ஏன் நங்கையை போக விட்ட?” எனக் கோவமாக கேட்டான்.

“நாங்க எல்லாருமே சொன்னோம்டா. அந்த பொண்ணு சத்தியத்தை மீற மாட்டேன்னு போயிடுச்சு” என்றான் விஜய்.

“அவன்கிட்ட சொல்லுடா, சாப்பிட மாட்டேங்குறான்” என்றார் சந்திரா.

“இங்க பாருடா, உன் உடம்பை கெடுத்துக்காத, நிறைய பிளட் லாஸ் ஆகியிருக்கு. நீ வீட்டை விட்டுப் போனதிலிருந்து வீட்ல யாரும் நிம்மதியா இல்லை. இப்போ உனக்கும் இப்படி ஆயிடுச்சு. என்ன பிரச்சனை வந்தாலும் சாப்பிடாம இருக்கிறதுனால சரியாகிடாது. ஒழுங்கா சாப்பிடு. எல்லாத்தையும் சரி பண்ணலாம்” என்றான்.

தன் அன்னையை பார்த்த விஜய் “நீ சாப்பாடு கொடும்மா” என்றான்.

சந்திரா கஞ்சியை கொடுக்க சாப்பிட்டவன், கண்களை மூடி படுத்துக்கொண்டான். மூடிய கண்களுக்குள் நங்கை சிரித்தாள்.

வீட்டு ஆட்கள் யாருடைய எண்ணிலோ இருந்துதான் அழைக்கிறான் என்று நினைத்தவள், தன் தங்கையின் எண்ணிலிருந்து சந்திராவின் எண்ணிற்கு அழைத்தாள். சந்திரா பேசவும் பேசிய நங்கை ஆதியின் நலனை விசாரித்து தெரிந்து கொண்டாள். ஆதிக்கு தெரியாமல் தினமும் அவனது நலனை தெரிவிக்க வேண்டுமென்றும் கேட்டுக் கொண்டாள்.

ஒருவர் மீது ஒருவர் உயிரையே வைத்திருக்கும் தன் மகனையும் மருமகளையும் பிரித்த பழனிவேலிடம் பேசுவதையே நிறுத்தி விட்டார் சந்திரா.

ஆதியை பார்க்க வந்த பழனிவேலிடம் ஆதி ரகளை செய்ய, விஜய் பழனிவேலை வர வேண்டாம் என்று கூறிவிட்டான். பழனிவேலிடம் சந்திரா சுத்தமாகப் பேசுவதே இல்லை. விஜய்யும் தன்னுடன் ஒரு விலகலை காண்பிப்பது போல தான் உணர்ந்தார் பழனி.

விஜய்யின் பிள்ளைகள் கூட “மீசை தாத்தா யூ ஆர் பேட்” என கூறினர்.

விசாலம் நேரடியாகவே பழனிவேலை ஏதாவது திட்டிக்கொண்டே இருப்பார். ஆதி வீட்டை விட்டு வெளியில் சென்ற பொழுதே, ஒரு ஒதுக்கம் காண்பிக்க தொடங்கிய குடும்பத்தினர், இப்போது தன்னை ஒட்டுமொத்தமாக ஒதுக்கி வைத்து விட்டதாகவே உணர்ந்தார். என்ன நடந்தாலும் நங்கையிடம் தான் பெற்ற சத்தியத்தை திரும்பக் கொடுக்கும் எண்ணம் மட்டும் இல்லை பழனிவேலுக்கு.

நங்கையுடன் வாழ்ந்த இரண்டு மாத காலத்தை நினைத்துக்கொண்டே மருத்துவமனையில் பொழுதை கழித்தான் ஆதி. நங்கையும் ஆதியின் நினைவுகளுடனே வாழ்ந்தாள்.

இரண்டு வாரங்களில் ஆதி வீட்டிற்கு வந்து விட்டான். இன்னும் நடக்க முடியவில்லை. சக்கர நாற்காலியில்தான் இருந்தான். விஜய் அம்பிகாவை அழைத்துச்சென்று முரளி வீட்டிலிருந்த ஆதி மற்றும் நகைகள் உடைமைகளை எடுத்து வந்துவிட்டான்.

வீட்டிற்கு வந்தவனுக்கு பழனிவேல் விஜய் மூலமாக புத்தகங்கள் வாங்கி கொடுக்க, படிக்கலாம் என்று எடுத்தாலும் ஆதிக்கு கவனம் பதியவில்லை.

புத்தகத்தை விரித்து வைத்துக் கொண்டு நங்கையையே நினைத்துக் கொண்டிருப்பான். பகல் வேளையில் டாலியுடனும் மாலை வேளைகளில் தன் அண்ணன் பிள்ளைகளிடமும் நேரத்தை செலவிடுவான். முரளி எப்பொழுதாவது வந்து பார்த்து செல்வான். ரஞ்சித் வெளிநாடு சென்றுவிட்டான்.

ஒரு மாதத்தில் வாக்கர் உதவியுடன் நடக்க ஆரம்பித்தான். அவனது தேர்வு முடிவுகளும் வந்து விட்டது. நல்ல மதிப்பெண்கள் பெற்றே தேர்ச்சி பெற்றிருந்தான்.

அன்று இரவு உணவுக்குப் பிறகு, தன் தந்தையின் அறைக்கு சென்றான் ஆதி. தன்னுடன் பேசுவதையே நிறுத்திவிட்ட மகன் தன்னை தேடி வந்ததை ஆச்சரியத்துடன் பார்த்திருந்தார்.

“நான் வச்ச அரியர்ஸ் எல்லாத்தையும் கிளியர் பண்ணிட்டேன்” என்றான் ஆதி.

“தெரியும்” என்றார் பழனிவேல்.

“கண்டிப்பா படிச்சு கவர்ன்மெண்ட் எக்ஸாம்லயும் பாஸ் பண்ணிடுவேன்” என்றான்.

“ரொம்ப சந்தோஷம்” என்றார் பழனிவேல்.

“என் நங்கை நீங்க சொன்னாதான் திரும்ப வருவாங்க. அவங்கள வர சொல்லுங்க” என்றான் ஆதி.

“நீதான் பாஸ் பண்ணிடுவியே. நான் சொன்னாதான் உங்க பொண்டாட்டி வருவாங்கன்னு இல்லை. நீங்க பாஸ் பண்ணி வேலை கிடைச்சு போய் கூப்பிட்டாலும் வந்துடுவாங்க” என்று கூறினார்.

“உங்களுக்கு இரக்கமே இல்லையாப்பா?” என கேட்டான் ஆதி.

“டாக்டர் கத்தி வைக்காம ஆபரேஷன் பண்ண மாட்டார். இரக்கப்பட்டா காயத்தை எப்படி சரி பண்ணுவார்?” என கேட்டார் பழனிவேல்.

“நீங்க ஒன்னும் டாக்டர் இல்லை. கசாப்பு கடைக்காரர்” என்றான் கோவமாக.

“இருந்துட்டு போறேன். இப்ப எனக்கு தூக்கம் வருது” என்று படுத்து கொண்டார்.

அவரை வெறுப்புடன் பார்த்த ஆதி தனது அறைக்கு வந்து விட்டான். பைத்தியம் பிடிப்பது போல இருந்தது. கோபத்தில் படுக்கையில் இருந்த தலையணைகளை தூக்கி வீசினான்.

ஒரு முடிவுடன் வெளியே வந்த ஆதி, வெளியே கிளம்பினான்.

“எங்கடா போற?” எனக் கேட்டான் விஜய்.

“எனக்கு இங்க இருக்க பிடிக்கலை. இவர் சத்தியம் கேட்டாராம். அவங்க சத்தியம் கொடுத்துட்டாங்களாம். என்னை பத்தியோ, என் மனச பத்தியோ யாரும் கவலைப்படலை. நான் எங்கேயாவது போறேன்” என்றான் ஆதி.

“நீ போடா… போ… நான் நெஞ்சடைச்சு செத்து போறேன்” என்றார் விசாலம்.

சந்திராவும் கண்களில் கண்ணீருடன் அவனை பார்க்க, “யாருமே என்னை புரிஞ்சுக்க மாட்டேங்கிறீங்க. நங்கை இல்லாம என்னால இருக்க முடியல. பைத்தியம் பிடிக்கிற மாதிரி இருக்கு” என்றான் ஆதி.

“புரியாமல் என்னடா? எல்லாம் தெரியுது தான். அப்பாவுக்கு எப்பவுமே அவர் செய்றதுதான் சரின்னு எண்ணம். இக்கட்டான சூழ்நிலையில் நங்கையும் சத்தியம் பண்ணி கொடுத்துட்டு வேற வழி இல்லாம அவங்க அம்மா வீட்டுக்கு போயிடுச்சு”

“இவர் வீம்பு பிடிக்கிறார். நாங்க எவ்வளவு சொல்லியும் சத்தியத்தை மீற மாட்டேங்குது அந்த பொண்ணு. நீ இப்படி வீட்டை விட்டு வெளியே போறேன்னு சொன்னா எல்லாம் சரியாகிடுமா? நீ இவ்ளோ கஷ்டப்படுறியே? அந்த பொண்ணும் அங்க கஷ்டப்பட்டுகிட்டுதானே இருக்கும். அந்த பொண்ணுக்காகவாவது, நீ வேலைக்கு போகணும் டா. அதுக்கு என்ன செய்யணுமோ அதை செய். அதை விட்டுட்டு வீட்டைவிட்டு வெளியே போறேன்னு மெச்சூரிட்டி இல்லாதவன் மாதிரி பேசாதே” என்றான் விஜய்.

விசாலம் அவன் கையை பிடித்து அழைக்க, சந்திரா இன்னொரு கையை பிடிக்க, தனது அறைக்கு சென்றான் ஆதி.

நங்கை சிறிது நாட்களில் மாறிவிடுவாள் என நினைத்திருந்த பிரேமாவும், இப்போது நங்கையை பார்த்து வருத்தப் பட்டார். ஏதோ சாப்பிட்டாள், கேட்பதற்கு பேசினாள், இரவில் தூங்க வேண்டும் என்று படுத்துக் கொண்டாளே தவிர உறங்கவில்லை என்பதை அவளது கண்ணின் கருவளையங்களே காட்டின. உடலும் மெலிந்து போயிருந்தாள்.

பழனிவேலிடம் செய்து கொடுத்த சத்தியத்தை பொருட்படுத்த வேண்டாம் என்று எல்லோரும் கூறினார்கள்தான். தன்னுடைய தாத்தா சந்தானபாரதியின் வளர்ப்பில் வளர்ந்த தமிழ்நங்கைக்கு தான் செய்து கொடுத்த சத்தியத்தை மீற முடியவில்லை.

அந்த சூழ்நிலையிலும் பழனிவேல் கூறியதை ஒத்துக்கொள்ளாமல், வேறு ஏதாவது செய்யலாம் என்று முயற்சி செய்தாள்தான். அவளுடைய நேரம் அவளுக்கு அவசியமான நேரத்தில் யாரும் உதவ முடியாத சூழ்நிலை.

ஆதியை அந்த நிலையில் விட்டுவிட்டு வர துளியும் மனமில்லாமல்தான் வந்தாள் நங்கை. வந்த பிறகும் நரகத்தில் இருப்பது போல தான் இருக்கிறாள். எப்படி தன் தேவைகளை கவனித்துக் கொள்வானோ, சாப்பிட்டானா தெரியலையே, என்னை நினைத்து வருத்தப்படுவானே என அவனைப் பற்றியே சிந்தித்துக் கொண்டிருப்பாள்.

தன்னுடைய துணிகளை காய வைக்கும் பொழுது அவனை நினைத்துக் கொள்வாள். அவனுடன் இருந்த பொழுதுகளில் ஒரு நாளும் அவள் துணிகளை நங்கை துவைத்ததே கிடையாது.

இங்கு வந்த பிறகு தேநீரே பருகுவது கிடையாது நங்கை. ஆதியின் தேநீரை சுவைத்தவளுக்கு பிரேமாவின் தேநீர் கசந்தது.

காலையில் அவள் சமைக்கும் பொழுது அவனும் அவளுக்கு உதவி செய்கிறேன் என்று பக்கத்தில் நின்று கொள்வான். அவள் சொல்லும் வேலையை முடித்துவிட்டு அடுத்து என்ன செய்யணும் என்று கேட்டு கேட்டு பாதி வேலைகளுக்கும் மேல் அவனே செய்துவிடுவான். அவனின் ஒவ்வொரு செயலிலும் நங்கையின் மீதான அன்பும், காதலும் வெளிப்பட்டுக் கொண்டே இருக்கும்.

“அங்க கஷ்டப்பட்டுகிட்டு தானே இருந்த. இங்கே உனக்கு என்ன குறை. ஏன் இப்படி இருக்க?” என பிரேமா அடிக்கடி கேட்பார்.

பதில் எதுவும் கூறாமல் எழுந்து சென்று விடுவாள். இவரிடம் என்ன கூறி புரிய வைப்பது என்பதை விட, ஏன் புரிய வைக்க வேண்டும் என்றுதான் இருந்தது நங்கைக்கு. பணத்தைப் பெரிதாக மதிப்பவர்களிடம் அவனது பண்பை பற்றி கூறினால் புரிந்து கொள்ள மாட்டார்கள் என்று நினைத்தாள்.

மூன்று மாதங்கள் ஆகியிருந்தது. இப்போது ஆதி எந்த உதவியும் இன்றி தானாகவே நடக்க ஆரம்பித்திருந்தான். வேகமாக நடக்கும் பொழுது மட்டும் சிறு வலியை உணர்ந்தாலும் சிறு சிறு உடற்பயிற்சிகள் மூலமே விரைவில் குணமாகிவிடும் என்று மருத்துவர் கூறியிருந்தார்.

விசாலம் பாட்டி சம்யுக்தாவையும், பார்த்திபனையும் உட்கார வைத்து கதை சொல்லிக் கொண்டிருந்தார். பத்துத்தலை இராவணனை இராமபிரான் வதம் செய்ததை பற்றி கூறிக்கொண்டிருந்தார்.

“ராவணன் ஒத்த கால்ல நின்னு தவம் செஞ்சு பிரம்மன் கிட்ட வரம் கேட்டானாம். தேவர்கள், அசுரர்கள், கந்தர்வர்கள், இன்னும் யார் யாரையோ சொல்லி யார்கிட்டயும் நான் தோத்துப் போகக் கூடாதுன்னு கேட்டானாம். பிரம்மனும் அப்படியே ஆகட்டும்ன்னு சொல்லிட்டு போய்ட்டாராம். அவன் அசுரன் ஆச்சே, எப்படியாவது அவனை அழிக்கனுமே, அப்படின்னு யோசிச்சு பார்த்த கடவுள், அவன் வரம் கேட்டதையே பயன்படுத்திக்கிட்டாரு” என்றார் பாட்டி.

“எப்படி பாட்டி?” எனக் கேட்டான் பார்த்திபன்.

“எல்லாரையும் சொன்னானே மனுஷன் கிட்ட தோக்க கூடாதுன்னு அவன் கேட்கவே இல்லை. அதனால கடவுள் மனுஷ பிறப்பெடுத்து ராமர் வடிவுல ராவணனை அழிச்சிட்டாரு” என விசாலம் பாட்டி கூற அருகில் ஆதியும் அமர்ந்து கேட்டுக் கொண்டுதான் இருந்தான்.

“இராவணன் கேட்ட வரத்தில இருந்த ஓட்டையை பயன்படுத்திக்கிட்டு தான் நினைத்ததை முடிச்சுக்கிட்டாரு கடவுள்” என விசாலம் பாட்டி கூற யோசனையுடன் எழுந்து சென்றான் ஆதி.

அடுத்தநாள் காலையிலேயே வெளியில் கிளம்பிக் கொண்டிருந்தான் ஆதி.

“எங்கடா போற?” என கேட்டார் சந்திரா.

“என் ஃபிரண்ட பாத்துட்டு வரேன்மா. வீட்டிலேயே இருந்தா போரடிக்குது” என கூறிவிட்டு வெளியில் கிளம்பி சென்றான்.

ஆட்டோ பிடித்து பேருந்து நிலையம் சென்றவன் கரூர் செல்லும் பேருந்தில் ஏறி அமர்ந்து கொண்டான். பயணச் சீட்டை வாங்கிய ஆதி ஜன்னல் வழியாக வேடிக்கை பார்த்திருக்க, பேருந்து கரூர் நோக்கி பயணமானது.