மறுநாள் காலையில் விடுமுறை என்பதால் ஒரு வழியாக பத்து மணிக்கு எழுந்த ராம்குமார் நண்பர்களை எட்டிப்பார்க்க எல்லோரும் படுத்திருந்த நிலையே அவர்கள் எழுந்திருக்க இன்னும் சில மணி நேரங்கள் ஆகும் என்று புரிந்தது.
பழைய பழக்கமாக வஞ்சுவுக்கு “ஹாய் ஸ்வீட்டி! குட் மார்னிங்!“ என்று சில முத்த ஸ்மைலிகளோடு வாட்சப்பில் போட்டவன் அவள் முந்தைய மேசெஜுக்கே பதில் போடவில்லை என்பதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. ஏதும் வேலை இருந்திருக்கும் என்று நினைத்துக் கொண்டான்.
அதனால் அவளுக்கு அழைக்க நினைத்தவன் அவள் பதில் போட்ட பிறகு பேசிக்கொள்ளலாம் என்று அடுத்து வீட்டுக்கு அழைத்து முதலில் பெற்றோரிடம் சில நிமிடங்கள் பேசியவன் அடுத்து அக்காவுக்கு முன்பு செய்வது போல செல் பேசி அழைப்பு விடுத்தான்.
போன் பல ரிங்குகள் போயும் எடுக்காமல் போக அவனுக்கு ஆச்சரியம். இது வாராவாரம் அவர்கள் பேசும் நேரம். அதனால் புவனா போன் பக்கத்தில் தவம் இருப்பாள்.
ஷ்யாம் கூட கிண்டல் செய்வது உண்டு.
“நீ பத்து மணிக்கு போன் பண்ணுவன்னு உங்க அக்கா காலையில ஏழு மணிக்கே எல்லா வேலையும் முடிச்சு குளிச்சு முழுவி குண்டா சோத்தையும் மொக்கிட்டு உக்காந்து இருக்கறா.
கேட்டா நீ பேசும் போது பசிச்சிருமாம். எங்களையும் அப்பவே சாப்பிட்டு முடிக்க சொல்லி வம்பு பண்ணுவா. ரெண்டு மணி நேரம் பாச மலர் ரெண்டும் அரைச்ச மாவையே அரைக்க நாங்க குடும்பமே கஷ்டப்பட வேண்டி இருக்குடா. “
அவர் கிண்டல் செய்வதை எல்லாம் இருவரும் கேட்கவே மாட்டார்கள் வாராவாரம் பேசினாலும் என்னவோ ரொம்ப நாள் கழித்து பேசுவது போல தான் இருக்கும் அவர்கள் பேச்சு.
அவன் அழைக்க சில சமயங்களில் தாமதமானாலும் புவனா அழைத்து விடுவாள். இரண்டு வாரங்களாக தம்பி அழைக்காமல் இருந்ததில் புவனாவுக்கு பயங்கர கோபம். இப்போது அவனாகவே அழைக்க பக்கத்தில் இருந்தாலும் போனை எடுக்கவே இல்லை.
ஷ்யாம் அவள் முகத்தை பார்த்து விட்டு அவனே போனை எடுத்தான்.
“சொல்லு மாப்ள! என்ன கொஞ்ச நாளா பாச மலரை அழைக்கக் காணோம்? ரொம்ப வேலையா? எப்படி இருக்கே?”
ஷ்யாம் பழையபடி சரளமாக பேச்சை ஆரம்பிக்க அதுவரை குற்றவுணர்வில் இருந்த ராம்குமார் நிம்மதியாக மூச்சு விட்டான்.
அவரிடம் சில நிமிடங்கள் பேசியவன் “அக்கா இல்லையா மாமா?” என்று கேட்க ஷ்யாம் பேசு என்று பார்வையால் உத்தரவிட்டு விறைப்பாக உட்கார்ந்து இருந்த மனைவியிடம் போனை கொடுத்தான்.
“அக்கா! என்னக்கா? எப்படி இருக்கீங்க? “
ராம்குமார் பேச்சைத் தொடங்க புவனாவுக்கு பொறுக்கவில்லை.
“என்னடா அக்கா ஞாபகம் வர இத்தனை நாளாச்சா? புதுசா ஒரு சொந்தத்தை கண்டுட்ட இல்ல? இனி நாங்க கண்ணுக்குத் தெரிவோமா?”
ஷ்யாம் பார்வையால் அப்படிப் பேசாதே என்று அதட்ட அவனுக்கு அழகு காட்டி விட்டு அந்தப் பக்கம் திரும்பி உட்கார்ந்து கொண்டாள் புவனா.
“அக்கா! நீங்களே இப்படி சொன்னா எப்படி? எங்க கல்யாணத்துக்கு நீங்க தானே அம்மா அப்பா கிட்ட பேசி சம்மதம் வாங்கித் தரணும்? கொஞ்சம் வேலைல பிஸி கா…”
ராம்குமார் தன் தவறை சமாளிப்பதாக நினைத்து தானே வாயை விட்டு மாட்டிக்கொண்டான்.
“ஆமாடா! தெனம் புதுசு புதுசா டிக்டாக் போட நேரம் இருக்கும். வாரம் ஒரு தடவ அக்கா கிட்ட பேச நேரம் இருக்காது.. அப்படித்தானே?”
புவனா குத்தலாக என்றாலும் கரெக்டாக கேட்டு விட ராம்குமாருக்கு அக்காவுக்கு எப்படித் தெரிந்திருக்கும் என்று நொடியில் புரிந்தது.
அதான் அவர்கள் டிக்டாக் செய்வதை எல்லாம் முகநூலில் வஞ்சு போட்டு விடுகிறாளே?
என்ன சமாதானம் சொல்வது என்று தெரியாமல் விழிக்க புவனாவே தொடர்ந்தாள்.
“ஆமா நேத்தில இருந்து என்ன சண்டை உங்க ரெண்டு பேருக்கும்? நீ அவளை ஏதும் கோவமா திட்டினியா?”
ராம்குமாருக்கு கொஞ்ச நேரம் ஒன்றுமே புரியவில்லை.
‘என்ன சண்டை? எப்ப திட்டினேன்?’
“என்ன சொல்றீங்க கா?”
“டேய்! அதான் உன் வஞ்சு ஊருக்கே சொல்லி இருக்காளே? அது இன்னும் உனக்கு தெரியலியா? எல்லா விஷயத்தையும் மூஞ்சி புக்ல சொல்றதுனா அதுலயே நாளைக்கு குடும்பம் நடத்துவீங்களா டா? உங்களுக்குன்னு ஒரு பர்சனல் என்று எதுவும் கிடையாதா…..?”
புவனா கடுப்பாக பேசிக் கொண்டே போக ராம்குமார் காதில் இருந்த போனை எடுத்து ஸ்பீக்கரில் போட்டு விட்டு முகநூலைத் திறந்தான்.
உள்ளே போனதுமே நோடிபிகேஷனில் வஞ்சுளவல்லி உங்களை போஸ்டில் இணைத்திருக்கிறார் என்று காட்ட அங்கே அவசரமாக போனவனுக்கு வந்த கடுப்பில் செல்லை உடைக்க வேண்டும் போல இருந்தது.
என்னால இனி உனக்கு
எந்த தொந்தரவும் வராது!
உன் மனசுக்குப் பிடிச்சவங்க
கூட சந்தோஷமா இரு!
என்று போட்டு ஒரு கண்ணில் இருந்து கண்ணீர் வருவது போல் ஒரு படமும் போட்டிருக்க பல்லைக் கடித்தான்.
என்ன காரணம் என்று தெரியாவிட்டாலும் அதை அவனிடம் சொல்லாமல் இங்கே போட்டு ஊருக்கே தெரிய வைக்கிறதா?
அவளை…. என்று வண்ணமாக திட்ட வாயைத் திறந்தான் ராம்குமார்.
அதற்குள் அவனிடம் இருந்து பதில் எதுவும் வராததால் புவனாவே பேச ஆரம்பித்திருந்தாள்.
“இதெல்லாம் என்னடா தம்பி? இந்த மாதிரி பொண்ணு உனக்கு ஒத்து வருமா? சொல்லு! அவ….”
அவள் மேலே பேசுமுன் அவர்கள் பேச்சை கவனித்துக் கொண்டிருந்த ஷ்யாம் அவள் கையில் இருந்த போனை வாங்கி இல்லை பிடுங்கி
“மாப்ள! தீபு குட்டி அழுவுறா! உங்க அக்காவை அப்புறம் பேச சொல்றேன்…நீ அந்த பொண்ணு கிட்ட எதா இருந்தாலும் பொறுமையா பேசு.. என்ன?” என்று அவன் பேசுவதற்குள் போனை வைத்திருந்தான்
ராம்குமாருக்கு பார்வை இன்னும் அந்த போஸ்டிலேயே இருக்க கீழே வந்திருந்த நக்கலான கமெண்ட்கள் இன்னும் கடுப்படித்தது.
அவள் நள்ளிரவு போட்டதாலும் இன்று வார விடுமுறை என்பதாலும் நிறைய பேர் பார்க்கவில்லை.
என்ன செய்வது என்று யோசித்துக் கொண்டே இருக்க லாவண்யாவிடம் இருந்து அழைப்பு வந்தது. யோசனையோடு எடுத்தவனிடம் லாவண்யா நேராக விஷயத்தை ஆரம்பிக்கவில்லை.
“ஹலோ அண்ணா! எப்படி இருக்கீங்க? பேசி நாளாச்சேன்னு தான் போன் செஞ்சேன். உங்க டிக்டாக் வீடியோஸ் எல்லாம் பாத்தேன். கலக்கல்ணா. உங்க டான்ஸ் ஸ்டெப்ஸ் எல்லாம் வெறித்தனம். ரொம்ப நல்லா இருந்துச்சுண்ணா…”
அவன் மனம் குளிர பேசுவதாக நினைத்து அவன் மனதில் ஏற்கனவே பற்றி எரிந்த நெருப்பை கிளறினாள்.
வஞ்சுவின் மேல் இருந்த கோபத்தை இவளிடம் காட்டுவானேன் என்று சாதாரணமாகவே பதில் சொன்னான். கூடவே லாவண்யாவை அவனுக்குப் பிடிக்கும்.
“தேங்க்ஸ் மா. அப்புறம் உனக்கு வொர்க் எல்லாம் எப்படி போகுது? இப்ப புதுசா என்ன ப்ராஜெக்ட்ஸ் போயிட்டு இருக்கு?” என்று சகஜமாகவே அவளிடம் பேச்சைத் தொடர்ந்தான்.
இருவரும் பொதுவாக கொஞ்ச நேரம் பேசிய பிறகு லாவண்யா பேச்சை ஆரம்பித்தாள்.
“அண்ணா… என்னண்ணா? வஞ்சு கூட சண்டையா?”
அவள் இப்படி கேட்டதும் ராம்குமாருக்கு வஞ்சு போட்ட போஸ்ட் தான் நினைவுக்கு வந்தது.
அதைப் பார்த்து இன்னும் எத்தனை பேர் தன்னிடம் கேள்வி கேட்கப் போகிறார்களோ?
நினைக்கும் போதே எரிச்சல் வர அதை மறைத்து “அதெல்லாம் இல்லையே மா!” என்று சமாளித்தான்.
அப்படியும் லாவண்யா தோழியாக தன் கடமையைத் தொடர்ந்தாள்.
“உங்க ரெண்டு பேருக்கும் நடுவில் என்ன பிரச்சனை என்று மூணாவது மனுஷி நா கேட்டால் அது நல்லா இருக்காதுண்ணா! ஆனா வஞ்சு சில விஷயங்களில் குழந்தை மாதிரி!
அவ செய்றத சரின்னு சொல்ல மாட்டேன். ஆனா கொஞ்சம் விட்டுப் பிடிங்க அண்ணா! எடுத்து சொன்னா அவ கேட்டுப்பா! அதுக்காக இப்படி அவ கிட்ட கோவமா இருக்காதீங்க ணா. அவ உங்க மேல பைத்தியமா இருக்கா. இப்ப நீங்க திட்டினதில ரொம்ப உடைஞ்சு போய் இருக்கா. அவ கிட்ட பேசுங்க… நா இதுல தலையிடறேன் என்று தப்பா நினைக்காதீங்க ணா!”
லாவண்யா பேசவும் ராம்குமார் மறுத்து எதுவும் சொல்லவில்லை. அதே நேரம் ஆமோதிக்கவும் இல்ல. “சரிமா! “ என்றதோடு வைத்து விட்டான்.
இப்போது வஞ்சுவிடம் பேசினால் வார்த்தைகள் தடித்து வரும் என்று எழுந்து தலைக்குக் குளித்து போய் சாப்பிட்டு வந்தவன் சொந்த வேலைகளைப் பார்த்துக் கொண்டிருந்தான்.
லாவண்யா ராம்குமாரிடம் பேசி முடித்ததும் வஞ்சுவிற்கு போன் போட்டு ராம்குமாரிடம் பேசியது மொத்தமும் சொல்லி விட்டாள்.
அதில் வஞ்சு ராம்குமாரின் அழைப்பை எதிர்பார்த்து காத்திருக்க அது வரவே இல்லை.