நகை விற்ற பணத்தில் கட்டணம் செலுத்தி தேர்வு எழுத விண்ணப்பித்து விட்டான் ஆதி.
மீதம் இருந்த பணத்தை எடுத்துக்கொண்டு வீட்டுக்கு வர, அவனைப் பார்த்த முரளியின் அம்மா சாந்தி, “தம்பி நீ இன்னும் வீட்டுக்கு அட்வான்ஸ் தரலை. அவருக்கு தெரிஞ்சி நேத்து முரளிக்கும் அவருக்கும் சண்டை. சீக்கிரம் கொடுத்திடுவேன்னு நான்தான் சொல்லி சமாதானப் படுத்தினேன்” எனக்கூறினார்.
கையில் இருந்த பணத்தை அவரிடம் கொடுத்தவன் “அட்வான்ஸாக வைத்துக் கொள்ளுங்கள், முரளிக்கு நான் கொடுத்தது தெரிய வேண்டாம். முரளி அப்பாகிட்ட மட்டும் சொல்லிடுங்க” என்றான்.
தன் அண்ணிக்கு கைபேசியில் அழைத்து தன்னுடைய புத்தகங்களை எல்லாம் எடுத்து தருமாறு கூறினான்.
அன்று இரவு ரஞ்சித் அவனை குடிக்க வருமாறு அழைக்க, “டேய் நான் நல்லா இருக்குறது உனக்கு பிடிக்கலையா? இனி அந்த பக்கமே நான் வரமாட்டேன். நீயும் அந்த கருமத்தை எல்லாம் விட்டுட்டு, வேலைக்கு போற வழியை பாரு” என அவனுக்கு உபதேசம் செய்தான்.
ஆதி பேசியதை நங்கை கேட்டுக் கொண்டுதான் இருந்தாள். அவனிடம் எதுவும் கூறவில்லை. இரவு உணவு உண்ணும் பொழுது, நங்கை ஆதியிடம்,
“ஏங்க இப்படி தாடி வச்சி சுத்திக்கிட்டு இருக்கீங்க?” என்று கேட்டாள்.
“லவ் ஃபெயிலியர்ங்க “ என ஆதி கூறினான்.
அவனை முறைத்துப் பார்த்தவள், “ஏன் உங்க லவ் இன்னும் சக்சஸ் ஆகலையா?” எனக் கேட்டாள்.
“அதை நீங்கதான் சொல்லணும்” என்றான் ஆதி.
“எனக்கும் உங்களுக்கும் கல்யாணம் ஆயிடுச்சுங்க. இன்னும் என்ன டவுட் உங்களுக்கு?”
‘கல்யாணம் ஆயிடுச்சுன்னா என் லவ் சக்ஸஸ் ஆகிடுச்சுன்னு அர்த்தமா? உங்க வாழ்க்கையில எனக்கு இடம் கொடுத்திருக்கீங்க. மனசுல இடம் கொடுத்தாதானே என் லவ் சக்ஸஸ் ஆகும்”
“நீங்க ஏன் என்னை தேடி வரலை?”
“நீங்கதான் சாரி எனக்கு சம்மதம் இல்லைன்னு சொல்லிட்டீங்களே, அப்புறம் எப்படிங்க தேடி வர்றது?”
“ஒரு வேளை வந்திருந்தா அப்பவே என் மனசுல இடம் கொடுத்திருப்பேனோ என்னவோ?” என்றவள், அடுத்த வாய் சாப்பாட்டை வாய்க்கருகில் கொண்டு செல்ல,
அவள் கையைப் பிடித்து நிறுத்தியவன், “ஏங்க நீங்க என்ன சொல்ல வர்றீங்கன்னு நான் தவிச்சு போய் பார்த்துட்டு இருக்கேன். நீங்க என்னடான்னா கேப் விட்டு கேப் விட்டு என்னை டென்ஷன் பண்றீங்களா?” என்றான்.
“நான் என்ன டென்ஷன் பண்றேன்?”
“ஏன் தேடி வரலைன்னு கேட்கிறீங்க, தேடி வந்திருந்தா அப்பவே மனசுல இடம் கொடுத்தருப்பேன்னு சொல்றீங்க. இப்ப உங்க மனசுல எனக்கு இடம் இருக்கா, இல்லையா? அதை சொல்லுங்க”
“மனசுல உங்களுக்கு இடமெல்லாம் இல்லை” என நங்கை கூற ஆவலுடன் அவளையே பார்த்திருந்த ஆதி அவள் கையை விட்டான்.
“உங்களுக்கு என்ன நான் பாஸ் பண்ணனும் அவ்வளவுதானே. அதுக்காக இருபத்தி நாலு மணி நேரமும் என்னை படிக்க சொல்லாதீங்க. பைத்தியம் பிடிச்சிடும். புக்ஸ் எல்லாம் நாளைக்குதான் வருது. அதுவரை கொஞ்சம் ஃப்ரீயா விடுங்க” என்றான்.
பின்னர் நங்கை பாத்திரங்களைக் கழுவ ஆரம்பிக்க, “நீங்க போங்க நான் கழுவுறேன்” என்றான்.
வேண்டாமென நங்கை மறுக்க, “உங்ககிட்ட முன்னாடியே சொல்லியிருக்கேன்” என கோபமாக ஆதி கூற ஆரம்பிக்க, நங்கை பாத்திரம் கழுவும் வேலையை அவனிடம் விட்டு விட்டு விலகினாள்.
காலையில் பால் வாங்க சென்ற ஆதி தாடியை முழுவதும் சவரம் செய்து விட்டு தலைமுடியையும் திருத்திக் கொண்டு வந்திருந்தான். உள்ளே நுழைந்த ஆதியை பார்த்த நங்கை அசந்து விட்டாள். ஆளே மாறிப் போயிருந்தான்.
“புதருக்குள்ள இருந்த முகம் இப்பத்தான் வெளியிலே தெரியுது” என்றாள் நங்கை.
“நீங்க பார்க்க விரும்பாத மூஞ்சிய வேற யாரும் பார்க்கக்கூடாதுல்ல, அதனாலதான்” என்றான் ஆதி.
‘ம்… நம்பிட்டேன்… நம்பிட்டேன்…” என்றாள் நங்கை.
“நம்பலைன்னா போங்க” என்றவன் அவள் துணிகளையும் சேர்த்து துவைத்து காய வைத்தான். காய வைக்கும் போது தான் நங்கை கவனித்தாள்.
“என் ட்ரெஸ நான் துவைச்சுக்க மாட்டேனா?” என கேட்டாள்.
“ஏன் நான் உங்க டிரஸ்ஸ தொட்டு துவைக்கிறது உங்களுக்கு பிடிக்கலையா?”
“நான் என்ன கேட்டா நீங்க என்ன சொல்றீங்க? போங்க என்ன வேணா செய்யுங்க” என்று விட்டு விட்டாள்.
மாலையில் வீடு திரும்பியதும் நங்கை, காலையிலேயே இட்லி மாவிற்கு அரிசி உளுந்து ஊற வைத்ததை மிக்ஸியில் போட்டு அரைக்க ஆரம்பித்தாள்.
“என்னங்க செய்றீங்க” என்றான் ஆதி.
“எப்பவும் கடையிலேயே மாவு வாங்க முடியுமா? அதான் மிக்ஸியிலேயே அரைக்கிறேன்” என்றாள்.
மிக்ஸி சூடாகி விட, நிறுத்தி நிறுத்தி நங்கை அரைக்க, மாவுக்கு தண்ணீர் ஊற்ற, அரைத்ததை பாத்திரத்தில் இட என பக்கத்திலேயே நின்று கொண்டு உதவினான் ஆதி.
நங்கையை நகர்த்திவிட்டு ஆதியே மிக்ஸியில் மாவு அரைக்க, மிக்ஸி சூடாக இருந்ததாலும், இவன் தண்ணீரை அளவுக்கதிகமாக ஊற்றி விட்டதாலும் மாவு வெளியில் சீறி அடித்தது.
உடனே நங்கை மிக்ஸியை அணைத்து விட்டாள். மிக்ஸியில் வழிந்திருந்த மாவை எடுத்து, “எல்லாத்தையும் வேஸ்ட் பண்ணிட்டீங்க, இப்போ என்ன பண்றது? என கேட்டாள்.
“அழகா இருக்கறதுக்காக இப்படித்தானே வெள்ளை வெள்ளையா கிரீம் பூசுறாங்க. அதை மாதிரி யூஸ் பண்ண முடியாதா?” என ஆதி விளையாட்டாய் கேட்க, கையிலிருந்த மாவை ஆதியின் முகத்தில் பூசினாள் நங்கை. பதிலுக்கு ஆதியும் நங்கையின் முகத்தில் மாவை பூச, ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்து சிரித்துக்கொண்டே திரும்ப,
மோவாயில் கை வைத்த வண்ணம் விசாலம் பாட்டியும், வாயை பிளந்த வண்ணம் அம்பிகாவும் நின்றிருந்தனர்.
அவர்களை எதிர்பார்க்காத நங்கை, “வாங்க” என கூறிவிட்டு அவசரமாக குளியலறைக்கு ஓடினாள். அசடு வழிய நின்றிருந்தான் ஆதி.
“போடா போய் மூஞ்சியை கழுவிட்டு வா” என அம்பிகா கூற, வெளியில் இருந்த தண்ணீர் குழாயில் முகம் கழுவச் சென்றான் ஆதி. அதற்குள் நங்கை வந்துவிட, இருவரும் நங்கையிடம் பேசிக்கொண்டிருந்தனர். முகம் கழுவிவிட்டு உள்ளே வந்த ஆதியை இருவரும் அதிசயித்து பார்த்தனர்.
“என் ராசா… அப்படியே உன் அப்புச்சி மாதிரி இருக்கடா” எனக்கூறி விசாலம் திருஷ்டி எடுத்தார்.
“ஐ லவ் யூ சாலா” எனக் கூறி அவரை அணைத்துக் கொண்டான் ஆதி.
“உனக்குத்தான் மூட்டுவலி இருக்குல்ல. ரெண்டு மாடி ஏன் ஏறி வந்தே?” என கடிந்து கொண்டான் ஆதி.
“சொன்னா கேட்டாதான. உன் புக்ஸ் எல்லாம் கொடுக்கலாம்னு நான் கிளம்பினேன். என்னையும் கூட்டிட்டு போன்னு ஒரே அடம். இன்னும் ஒரு வாரம் மூட்டுவலியில் படுத்துக்கப் போறாங்க” என்றாள் அம்பிகா.
“இனிமே பார்க்க வந்தீனா கீழேயே நில்லு. நான் உன்னை தூக்கிட்டு வரேன். இப்ப பாரு மூட்டுவலியில கிடந்து அவஸ்தைப்பட போற” என்றான் ஆதி.
“எனக்கு என்னடா, உன் பிள்ளைய நான் கையில தூக்கிட்டேனா, நிம்மதியா கண்ணை மூடுவேன்” என பாட்டி கூற, அம்பிகா, “முன்னாடி எல்லாம் ஆதி கல்யாணத்தை பார்த்தா கண்ணை மூடிடுவேன்னு சொன்னாங்க. இப்போ உன் பிள்ளையை பார்க்கணும். ஏன் பாட்டி அந்த பிள்ளையோட கல்யாணத்தை எல்லாம் நீங்க பார்க்க வேண்டாமா?” எனக் கேட்க, “ஏண்டி நான் இருந்து பார்க்கக் கூடாதா?” என்றார் விசாலம்.
“நல்லா இருந்து பாருங்க” என்றாள் அம்பிகா.
சிறிது நேரம் பேசியிருந்துவிட்டு ஆதியின் புத்தகங்களையும் கொடுத்துவிட்டு மனநிறைவுடன் இருவரும் சென்றனர்.
அதிகாலையில் எழுந்து பழக்கமில்லாத ஆதி ஐந்து மணிக்கெல்லாம் எழுந்து படிக்க ஆரம்பித்தான். காலையில் படித்தால் நன்றாக பதியும் என நங்கை கூறியதின் விளைவுதான் இது.
ஆதிக்கு முதன்மைப் பாடம் கணிதமாக இருந்தாலும் துணைப்பாடம் இயற்பியல்தான். மாலை வேளைகளில் நங்கையே ஆதிக்கு சொல்லிக் கொடுத்தாள்.
“சொல்லிக் கொடுக்கிறத ரொம்ப ஈஸியா புரிஞ்சுக்கிறீங்க, அப்புறம் ஏன் அரியர்ஸ் வச்சீங்க?” எனக் கேட்டாள் நங்கை.
“அப்போ சொல்லிக்கொடுக்க நீங்க இல்லையே” என காதலுடன் ஆதி கூற, அவன் தலையில் வலிக்காமல் கொட்டியவள் “ஒழுங்கா படிங்க” என்றாள்.
“ஏங்க நீங்க கேள்வி கேட்டதுக்கு நான் பதில் சொன்னா கொட்டுவீங்களா? புருஷனை இப்படி நீங்க அடிக்கிறது வெளியில தெரிஞ்சா உங்கள பத்தி என்ன நினைப்பாங்க?”
“எடக்கு மடக்கா பேசினா அப்படித்தான் கொட்டுவேன். இப்போ நாம புருஷன் பொண்டாட்டி இல்லை. நான் டீச்சர் நீங்க ஸ்டுடண்ட்”
“சரிங்க டீச்சரம்மா” என படிக்க ஆரம்பித்தான் ஆதி.
எந்நேரமும் படித்துக் கொண்டிராமல் சிறிய இடைவெளி விடுவான். அந்த நேரங்களிலும் பாத்திரத்தை கழுவி வைப்பது, நங்கையின் துணிகளுடன் தன்னுடையதையும் சேர்த்து துவைத்துவிடுவது. காய்ந்த துணிகளை மடித்து வைப்பது என அனைத்து வேலைகளையும் முடித்து விடுவான்.
நங்கை வேண்டாம் அந்த நேரத்தை வீணாக்காமல் படிக்க சொன்னாலும் “கேப் விடாம படிச்சா என் மூளை உருகி ஊத்திடுங்க. இந்த வேலை எல்லாம் என்னை ரிலாக்ஸ் பண்ணிக்க செய்கிறேன்” என்பான்.
வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. இவர்கள் இரண்டாவது தளத்தில் இருந்ததால், இரவு நேரத்திலும் மேற்கூரை சுவர் வெப்பத்தை கக்க, புழுக்கம் தாளாமல் உறங்க முடியாமல் தவிப்பாள் நங்கை. தனக்கும் வெப்பமாக இருந்தாலும் நங்கையின் துன்பத்தைப் பார்த்து மனதிற்குள்ளேயே புழுங்குவான் ஆதி.
கையில் இருக்கும் பணமும் கிட்டத்தட்ட கரைந்துவிட்டது. நங்கைக்கு சம்பளம் வரும் வரை மீதம் இருப்பதை வைத்துதான் நாட்களை நகர்த்த வேண்டும். எவ்வளவு எளிமையாக முடியுமோ அவ்வளவு எளிமையாக குடும்பத்தை நடத்தினர்.
சமையல் கூட மிகவும் எளிமையாகத் தான் இருக்கும். கலவை சாத வகைகள், ரசம், மோர் அல்லது பொறியல் ஏதுமில்லா குழம்பு என்றுதான் ஓட்டினர்.
மாலை வேளைகளில் திரும்பி வரும்பொழுது, முருகன் கோவிலுக்கு இருவரும் செல்வர். வெளியில் இருக்கும் பூ விற்கும் பெண்மணி, எப்பொழுதும் “பூ வாங்கிக்கம்மா” என்பார். மறுத்து அவரை கடந்து சென்று விடுவாள் நங்கை. ஒரு முழம் பூ வாங்கி கூட கொடுக்க முடியாத தன் நிலையை எண்ணி தன்னையே நொந்து கொள்வான் ஆதி.
முதல் தளத்தில் குடியிருந்தவர்களுடன் நங்கைக்கு பழக்கமாகியிருந்தது. நங்கை அன்று பள்ளிக்கு செல்ல ஒரு காட்டன் புடவையை எடுத்தாள். அயர்ன் செய்யாமல் கட்ட முடியாது என்பதால் முதல் தளத்திலிருந்த பெண்மணியிடம் துணி தேய்க்கும் இயந்திரத்தை வாங்கி வந்திருந்தாள்.
குளித்துவிட்டு வந்த ஆதி, தானே புடவையை அயர்ன் செய்து விட்டு கீழே சென்று கொடுக்க போனான். கதவு திறந்திருந்ததால் உள்ளே அந்தப் பெண்மணி பேசியது காதில் நன்றாக விழுந்தது.
“கொஞ்சம் சிரிச்சு பேசினா உடனே ஓசி வாங்க வந்திடுவாங்க. அயர்ன் பாக்ஸ் இல்லன்னா அப்படியே கட்டிக்கிட்டு போகணும். அப்படி என்ன ஆடம்பரமா போகணும்?” என அவர் தன் கணவரிடம் கூறிக்கொண்டிருக்க ஆதி நொந்து விட்டான்.
அழைப்புமணியை ஆதி அழுத்த வெளியே வந்தவர் “வாப்பா” என்றார்.
“பரவாயில்லை வேலை முடிஞ்சது. அதான் கொண்டு வந்தேன்” என்றவன் கொடுத்துவிட்டு மாடிப்படி ஏறினான்.
‘ச்சே… ஒரு அயர்ன் பாக்ஸ்க்கு என்ன பேசிட்டாங்க. நங்கை கேட்டிருந்தா எப்படி கஷ்டப்பட்டிருப்பாங்க? நல்ல வேலை நான் வந்தேன்’ என்ற சிந்தனையுடன் வீட்டிற்குள் ஆதி நுழைந்தான்.
“என்னங்க ஏன் ஒரு மாதிரி இருக்கீங்க?” எனக்கேட்டாள் நங்கை.
அரித்மெடிக்ஸ்ல ஒரு பிராப்ளம். காலையிலிருந்து ட்ரை பண்றேன் சால்வ் ஆகமாட்டேங்குது. அதையே நெனச்சிட்டு இருந்தேன். அதான்” என சமாளித்தான்.
“இனிமே உங்க புடவை அயர்ன் பண்ணனும்னா முதல் நாளே எடுத்து வச்சிடுங்க. முக்கத்துல ஒருத்தரு தள்ளுவண்டியில் அயர்ன் பண்ணுவார். அவர் கிட்ட கொடுத்து கையோட வாங்கிட்டு வந்துடுறேன்” என்றான்.
அவனை தீர்க்கமாக பார்த்த நங்கை “ஏன் கீழ் வீட்டில எதுவும் சொன்னாங்களா?” எனக் கேட்டாள்.
“அதெல்லாம் ஒன்னும் இல்லைங்க. அந்த அண்ணனுக்கு அயர்ன் பண்றது தானே தொழில். அதுலதானே குடும்பத்தை ஓட்டணும். ஏதோ நம்மளால முடிஞ்ச உதவி” என ஆதி கூற நங்கையும் ஒத்துக்கொண்டாள்.
அன்றிலிருந்து ஒரு வைராக்கியத்துடன் படிக்க ஆரம்பித்தான் ஆதி.