அத்தியாயம் – 55
வன்னி சாரங்கனிடம் பேரரசரின் அறையில் நடந்ததை சொல்லிக்கொண்டு வந்தாள். சாரங்கன் அவள் சொல்வதற்கு, “ம்ம்…” என்று சொல்லிக் கொண்டு அவளை கைகளில் ஏந்தி அறைக்கு வந்து சேர்ந்தான்.
வன்னி ஒரு பெருமூச்சுவிட்டு, “இளவரசர் சாரங்கன். நல்ல வேளை. பேரரசரின் செயலால், நான் அத்தனை பேர் முன்னிலையில் என் சக்கர நிலை சொல்ல வேண்டிய அவசியம் ஏற்படவில்லை.” என்றாள்.
சாரங்கன் புன்னகைத்து, “வன்னி, அநேகமாக உன் அச்சம் பேரரசர் முன்பே அறிந்துவிட்டிருப்பார் என்று தோன்றுகிறது. அதனால்தான் என்னமோ மற்ற இளவரசர்கள் அறிமுகத்தின் போது இடைபுகாதவர், உன் அறிமுகத்தில் இடைபுகுந்து கேள்வி கேட்டார்.
இதனால் தங்களின் சக்கர நிலை அறிமுகம் செய்யவில்லை என்று யாரும் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. மாறாக பேரரசர் தங்களை தூக்கியதால் அவர்களின் கவனம் வேறுபுரம் திசைதிரும்பிவிட்டது.” என்றான் புன்னகையுடன்.
அதனை கேட்ட வன்னி கிளுக்கி சிரித்தாள். இருந்தும் மறுத்து பேசவில்லை. எல்லா நிகழ்வுகளையும் சாரங்கனிடம் வன்னி சொன்ன போதும், அவளது வெள்ளி எலும்பு குறித்து பேரரசர் சொன்னதை, அவளது குரு சந்திரரிடம் பேசாமல் சாரங்கனிடம் பேச வன்னி துணியவில்லை.
ஆனால் பாவம் அவள் வெள்ளி எலும்பு குறித்து சாரங்கனுக்கு ஏற்கனவே தெரியும் என்று வன்னி அறியவில்லை. இப்படியாக இருவரும் வன்னியின் அறையில் அமர்ந்து பேசிக் கொண்டிருக்க வன்னி சிநேகிதர்கள் ஒருவர் பின் ஒருவராக இரண்டு நாட்கள் கழித்து கண் விழித்தனர்.
“வன்னி.” என்று வன்னியை விளித்து எழுந்து அருகில் வந்தாள் மதி. அவள் குரல் கேட்டு அவள்புரம் திரும்பிய வன்னி ஓடிச் சென்று, “மதி!! விழித்துவிட்டாயா?” என்று அவளை அணைத்துக் கொண்டாள்.
மதி, “ம்ம்.” என்று தலையசைத்து வன்னியை பதிலுக்கு அரவணைத்துக் கொண்டாள்.
வன்னி, “நல்லது. உன்னுடைய முதல் சக்கர நிலை நிலைப்பட்டுவிட்டதா? இன்னமும் எத்தனை நாட்களுக்கு தவம் செய்ய வேண்டி இருக்கும்.?” என்று கேட்டு மதியின் கை மணிக்கட்டை தொட்டு பார்த்து கேட்டாள்.
மதி புன்னகையுடன், “வன்னி, நம் குருவின் அந்த மந்திரகல்லால் ஒரு மாதம் தவம் செய்ய வேண்டியிருந்த நான், ஓரிரு நாளிலே என் சக்கர நிலையை நிலைப்படுத்திவிட்டேன். இன்னும் இருநாள் இந்த மந்திரகல்லுடன் தவம் செய்தால் என்னால் முதல் முறையாக பறக்கும் சக்கரத்தின் நுணுக்கத்தை செயல்படுத்த முடியும்.”என்றாள்.
அதை கேட்ட வன்னி குதுகலத்துடன், “நல்லது. முகிலன் இன்னமும் கண் விழிக்கவில்லை. அவனும் கண் விழித்ததும் மூவரும் சேர்ந்து, இளவரசர் சாரங்கனுடன் உண்வோம்.” என்றாள்.
அப்போதுதான் சாரங்கன் அங்கிருப்பதை உணர்ந்த மதி, “வணக்கம் இளவரசர் சாரங்கன்.” என்றாள். சாரங்கனும் பதிலுக்கு வணங்க, அதன்பிறகு வன்னி இரு தினங்கள் நடந்த கதையை மதியிடம் சொல்ல ஆரம்பித்தாள்.
அதற்குள் முகிலனும் கண் விழிக்க அவனும் மதி சொன்னது போலவே சொல்ல வன்னி திருப்தியாக தன் சிநேகிதர்களை பார்த்தாள். நால்வரும் உண்டப்பின் சாரங்கன் அவனது அறைக்கு சென்றுவிட்டான்.
முகிலன், “இளவரசி. நாம் எப்போது நம் அரசு போவோம்.?” என்று கேட்டான்.
வன்னி, “பேரரசர் எத்தனை நாள் மாதங்க அரசில் இருக்கிறாரோ? அதுவரை நாம் இங்கு இருக்க வேண்டும். எப்போது எந்த இளவரசர் இளவரசியை அவர் காண நினைத்தாலும் உடனே அவர்கள் அழைக்கும் தொலைவில் நாம் இருக்க வேண்டுமென்று நம் குரு கௌரி சொன்னார்.
முந்தைய இளவரசர் அறிமுக விழா தினங்களில் குறைந்தது மூன்று தினங்களாவது, பேரரசர் விழா நிகழ்ந்த அரசில் தங்குவது வழக்கம். அதனால் அநேகமாக குறைந்தது மூன்று தினங்களாவது ஆகும்.” என்றாள்.
முகிலன், “ஓ…புரிகிறது. இன்றும் நாளையும் நாங்க எங்கள் தவத்தை முடித்துவிடுகிறோம். நாம் மூவரும் நாளை மறுநாள் வெளியில் சுற்றி பார்க்க போகலாம்.” என்றான்.
வன்னி கிளுக்கி சிரித்து, “ம்ம்!” என்றாள்.
அதன் பிறகு முகிலனும், மதியும் மீண்டும் தவம் செய்ய ஆரம்பிக்க, வன்னி உறங்க முயன்றாள். ஆனால் மாலை உறங்கியதாலோ என்னமோ! அவளுக்கு உறக்கம் வரவில்லை. அதனால் சில நிமிடம் வெளியில் நடந்துவிட்டு வர நினைத்து, தன்னை சக்கர நிலையே இல்லாத சாதரண பரி யாளி பெண் போல மாற்றிக் கொண்டாள்.
அறையை விட்டு வெளியில் வந்த வன்னி, “காவலர்களே!. நான் கொஞ்சம் காற்று வாங்கிவிட்டு வருகிறேன். ஒருவர் மட்டும் என்னுடன் வந்தால் போதும். ஆனால் கண்ணெட்டும் தொலைவில் தொடர்ந்தால் போதும்.” என்றாள்.
“உத்தரவு இளவரசி.” என்று ஒரு காவலன் வன்னியின் பின் தொடர்ந்தான்.
வன்னி இன்று நடந்ததை மனதுள் அசைப் போட்டுக் கொண்டு நடந்து வந்தாள். அந்த விருந்தினர் மாளிகைக்குப்பின் இருந்த தோட்டத்தில் கல் இருக்கையில் வந்து அமர்ந்த வன்னி முழுவதும் புலர்ந்திருந்த இரு நிலவுகளை நிமிர்ந்து பார்த்தாள்.
இதமான வெப்பத்தில் தென்றல் அவள் முகத்தில் பட்டு அவளது நெற்றி முடி அவள் கன்னத்தில் வருட செய்தது. அப்போது ஏதோ சப்தம் கேட்டு அரண்மனையின் மதில் சுவர் பக்கம் திரும்பினாள்.
அங்கு கருநிற முக்காடு அணிந்திருந்த மனிதனும் ஒரு மாதங்க யாளியும் நின்று பேசிக் கொண்டிருந்தனர். இரவென்ற போதும் வன்னியின் பார்வையில் அவர்கள் நின்றிருப்பது தப்பவில்லை.
பார்க்க முடிந்த போதும் என்ன பேசுகிறார்கள் என்று வன்னியால் அறிய முடியவில்லை. அநேகமாக ஒலி மறைக்கும் சக்கரம் போட்டிருக்க வேண்டும். முகம் பார்க்காத போதும், அந்த முக்காடு மனிதன்தான் அன்று வன்னியை கனவு சக்கரத்திலிருந்து எழுப்பியது என்பது அவளுக்கு நினைவு வந்தது.
நன்றி சொல்லும் என்னமுடன் வன்னி அவர்கள் இருந்தபுரமாக நடந்துச் சென்றாள். அவள் வரும் சத்தம் கேட்டு அவர்கள் இருவரும் பேசுவதை நிறுத்திவிட்டு வன்னியை பார்த்தனர். வன்னி எதுவும் பேசுமுன்னே ஒலி மறைக்கும் சக்கரத்தை நிறுத்திவிட்டு கனகனே முதலில் பேசினான்.
“பரி இளவரசி. தாங்கள் ஓய்வெடுக்கவில்லையா? நள்ளிரவில் தோட்டத்திற்கு வந்திருக்கிறீர்கள். ஏதேனும் உதவி வேண்டுமா?” என்று கேட்டான் கனகன்.
வன்னி சிறுப்பிள்ளையின் அறியாமையுடன், இல்லை என்பது போல் தலையாட்டி, “மாலையே பேரரசரின் மடியிலே உறங்கிவிட்டேனா? அதுதான் இப்போது உறக்கம் பிடிக்கவில்லை.” என்றாள்.
வன்னி மற்றும் கனகனின் பேச்சுவார்த்தையில் அந்த முக்காடு உருவம் ஒரு அடி முன் வந்து அறியாதவன் போல, “ஓ. தாங்கள் இளவரசியா? அது அறியாமல் நேற்று தகுந்த முறையில் தங்களுக்கு வணக்கம் சொல்ல இயலவில்லை. வணக்கம் இளவரசி.” என்றான்.
‘சாதாரண மனித யாளி என்று எண்ணியிருந்த முக்காடு மனிதன் எப்படி மாதங்க அரசின் பிரதேக பாதுகாப்பில் உள்ள விருந்தினர் மாளிகைக்குள் எளிதாக வர அனுமதித்தனர்.’ என்ற எச்சரிக்கை உணர்வில்லாமல், வன்னி முக்காடு மனிதனை பார்த்து, “பரவாயில்லை.” என்றாள்.
தொடர்ந்து, “தங்களுக்கு நன்றி சொல்லவே தங்களை பார்த்ததும் இங்கு வந்தேன். தங்கள் உதவிக்கு நன்றி.” என்றாள் வன்னி.
அதற்கு, “அது என் கடமை.” என்றான் முக்காடு உருவம்.
“தங்களின் பெயர் என்ன.? என் குருவிடம் தங்கள் நற்செயல் பற்றி சொல்ல வேண்டும். தங்கள் உதவி தகுந்த நேரத்தில் கிட்டாமலிருந்தால் என்ன நிகழ்ந்திருக்குமோ!” என்று மனதில் அச்சம் பரவ சொன்னாள் வன்னி.
அந்த கருப்புருவம், “தங்களுக்கு உதவ முயன்றது என் பாக்கியம் இளவரசி. அடியேனுக்கு வேறெந்த நற்பெயரும் வேண்டாம்.” என்றான்.
வன்னி கிளுக்கி சிரித்து, “நான் பார்த்ததிலே தாங்கள் மிகவும் வித்தியாசமானவர்.” என்றாள்.
பின் அருகில் கனகனிடம் திரும்பி அவன் பெயர் தெரியாததால், “மாதங்க யாளியாரே. தங்களை இனி நான் தொந்தரவு செய்யவில்லை. அப்போது இருவரிடமிருந்தும் நான் விடைப்பெற்றுக் கொள்கிறேன்.” என்று திரும்பி நடந்தாள்.
கனகன், “நிச்சயம் இளவரசி.” என்றான்.
கனகன் அவள் போவதையே பார்த்திருந்துவிட்டு, “நாம் பேசுவதை இந்த சிறுப்பெண் பார்த்துவிட்டாளே!. நம் திட்டம் அவளுக்கு தெரிந்துவிட்டால் என்ன செய்வது!” என்று அருகிலிருந்த முக்காடு மனிதனிடம் கேட்டான்.
அதற்கு சின்ன சிரிப்பை உதிர்த்தவன், “சுவாரசியமான பெண்.” என்று வன்னி செல்வதையே பார்த்தான் முக்காடு மனிதன்.
இருந்தும் கனகனும் பதிலாக, “கவலை படாதே. நான் பார்த்துக் கொள்கிறேன். இப்போது நான் சொன்னதை தவறாமல் செய்.” என்றுவிட்டு, முக்காடு மனிதன் அந்த தோட்டத்திலிருந்து மதில் சுவர் மேல் ஒரு தாவில் ஏறி அங்கிருந்து மறைந்தே போனான். வன்னியும் அதன் பிறகு வெளியில் உலவாமல் அறைக்கு வந்து உறங்கியும் விட்டாள்.
ஏற்கனவே கணித்தபடி பேரரசர் மூன்று தினங்களுக்கு பின் தவம் புரிய மீண்டும் அவரது மலைக்குச் சென்று விட ஒவ்வொரு அரசை சேர்ந்தவர்களும் மெல்ல கலைந்து அவரவர் நாட்டை நோக்கி கிளம்பிவிட்டனர்.
வன்னியும் இந்த இரண்டு தினகளில் தன் குரு சந்திரரிடம் வெள்ளி எலும்பு குறித்து ஓரளவு அறிந்துக் கொண்டாள். அதனை அறிந்த பின் முன்பிருந்த விளையாட்டுதனம் சற்று குறைந்து தன் பாதுகாப்பில் வெகு கவனம் செலுத்தினாள்.
எல்லா இளவரசர்களும் கிளம்பிவிட்டிருக்க, வன்னியும், இடமாற்றும் சக்கரம் இருந்த இடத்திற்கு வந்து சேர்ந்தாள். அவளுடன், மதி, முகிலன், இரு காவலர்கள் மற்றும் அவர்களது குரு சந்திரர் என அறுவரும் இருந்தனர்.
மாதங்க அரசர் அரசி கடைசியாக அவர்களையும் இடமாற்றும் சக்கரத்தில் அனுப்பிவிட்டு பெருமூச்சுவிட்டு அங்கிருந்த இருக்கையில் அமர்ந்தனர். “எல்லாம் முடிவதற்குள் கிட்டத்தட்ட சேமிப்பு கிடங்கில் இருந்த அனைத்து ஆன்மீக ஆற்றலும் தீர்ந்தே போனது.” என்றார் மாதங்க அரசர்.
அவருக்கு பதிலாக, “நல்லவேளை அனைத்தும் நல்லவிதமாக முடிந்தது. ஆனால் இன்னுமொரு இடமாற்று சக்கரம் பயன்படுத்த வேண்டுமென்ற நிலை ஏற்படுமேயானால் நம்மிடம் ஆன்மீக ஆற்றல் இல்லாமல் போயிருக்கும். ஆன்மீக ஆற்றல் சேரும் வரை அவர்கள் இங்கேயே காத்திருக்க நேர்ந்திருக்கும். அல்லது தரைவழியே சென்றிருக்க நேரிட்டிருக்கும்.” என்று நிம்மதியுற்றாள்.
ஆனால் அவர்கள் நிம்மதியுற்று அமர்ந்திருக்க விடாமல் சில நாழிகைகாளிலே பரி அரசை சேர்ந்தவர்கள் சென்ற, இடமாற்றும் சக்கரம், பாதி வழியில் பரி அரசிற்கும் மாதங்க அரசிற்கும் இடையில், அதிக ஆன்மீக ஆற்றல் இருந்த பனி மலையில் உடைந்து சிதறுண்ட செய்தி மாதங்க அரசர் அரசியருக்கு வந்து சேர்ந்தது.
அதனை கேட்டதும் அவர்கள் இருவரின் முகத்திலும் வியர்வை பூத்தது. கோபம் எட்டி பார்க்க,“ தளபதி கரணியன். எப்படி இது நிகழ்ந்தது.? யார் மாதங்கம் மற்றும் பரி அரசுக்கு இடையில் அமைக்கப்பட்ட இடமாற்றும் சக்கரத்தின் வழிதடத்தை மாற்றி அமைத்தது.?” என்று கோபமாக கத்தினார் மாதங்க அரசர்.
கரணியனுக்கும் இது எப்படி நிகழ்ந்தது என்று குழப்பமாக இருந்தது. இடமாற்றும் சக்கரத்தின் வழி தடத்தை மாற்ற கூடிய தைரியம் மாதங்க அரசில் யாருக்குமில்லை. அதற்கு மேலும் அதனை மாற்றுவது அவ்வளவு எளிதும் இல்லை.
அப்போது கரணியனுக்கு வன்னி வந்த அன்று அவர்கள் சந்தித்த கருப்புருவமும் கனவு சக்கரத்தில் கேட்ட குரலும் நினைவு வர மனதில் ஒரு பொறி தட்டியது. இருந்தும் முழுதும் அறியாமல் நேரடையாக மாதங்க அரசர் அரசியிடம் அதனை சொல்ல கரணியன் துணியவில்லை.
பணிவாக தலை தாழ்த்தி, “அரசர் அரசியே! கோபம் கொள்ள வேண்டாம். முதலில் மீட்பு பணிக்கு ஏற்பாடு செய்யலாம். பிறகு யார் ஆன்மீக ஆற்றல் அதிகம் நிறைந்த பனிமலை இருக்கும் பக்கமாக இடமாற்றும் சக்கரத்தின் வழி தடத்தை மாற்றியது என்று கண்டு பிடிக்கலாம்.” என்றான்.
மாதங்க அரசர் தலையசைக்க, மாதங்க அரசியும் முதலில் பரி இளவரசியையும் இராஜகுருவையும் காப்பது முதல் கடமை என்று உணர்ந்து, “சரி. இடமாற்றும் சக்கரம் ஆன்மீக ஆற்றல் அதிகம் இருந்த பனி மலையில் சென்றதால், நம் சேமிப்பு கிடங்கில் இருந்த ஆன்மீக ஆற்றலையெல்லாம் உறிஞ்சிகிட்டது.
பறக்கும் சக்கரத்தில்தான் பனிமலை அருகில் வரை செல்ல முடியும். அதன்பிறகு தரை வழியே நடந்துதான் தொலைந்தவர்களை தேட நேரிடும். உடனே அதற்கு ஏற்பாடு செய்யுங்கள் தளபதி.” என்றாள்.
கரணியன், “உத்தரவு அரசி.” என்றான். பின் உடனே ஆட்கள் ஏற்பாடு செய்ய ஐந்து மற்றும் நான்கு சக்கர ஆற்றல் கொண்டவர்களின் பெயர்களை வரிசை படுத்தி மாதங்க அரசர் அரசியிடம் அனுமதி பெற்று அங்கிருந்து கிளம்பினான்.
கிட்டத்தட்ட 40 மாதங்க யாளிகள் மாதங்க அரசிலிருந்து பனி மலைநோக்கி கிளம்பியது. அதேபோல் பரி அரசிலிருந்தும 20 பரியாளிகளும் மீட்பு பணிக்காக பனி மலை நோக்கி பிராயணப்பட்டனர். பாதி வழியில் மாதங்க அரசிலிருந்து பரி அரசுக்கு தரை வழி கிளம்பிய 25 பரியாளிகளும் திசை மாறி பனிமலை நோக்கி கிளம்பினர்.
***
வன்னியும் மற்றவர்களும் வந்த இடமாற்றும் சக்கரம் பனி மலைக்கு மேல் கடந்த போது திடீரென்று இடமாற்றும் சக்கரத்தில் விரிசல் வர இராஜகுரு எச்சரிக்கையானார். உடனே, “காவலர்களே! இளவரசியை சுற்றி பாதுகாப்பு சக்கரம் உருவாக்குங்கள். ” என்று கத்தினான்.
காவலர்கள் நொடியும் காத்திருக்காமல் சூழல் உணர்ந்து, “உத்தரவு இராஜகுரு.” என்று வன்னியின் அருகில் வந்தனர்.
அவர்கள் இரு கைகளையும் ஒன்றாக சேர்த்து அவர்கள் கை வளைவுக்குள் வன்னியை நிறுத்தினர். வன்னி குழப்பமாக தன் குருவை நிமிர்ந்து பார்க்க, அவர் மதியின் கையையும் முகிலனின் கையையும் இறுக பற்றிக் கொண்டு அவர்கள் மூவரை சுற்றியும் பாதுகாப்பு சக்கரம் உருவாக்கினார்.
வன்னி என்ன ஏது என்று கேள்விக் கேட்குமுன்னே இடமாற்றும் சக்கரம் முற்றிலும் சிதறுர மதி,முகிலன் மற்றும் சந்திரர் அவளிலிருந்து பிளவுற்று இமைக்கும் நேரத்தில் கீழே விழுந்தனர். வன்னி அவர்களை எட்டி பிடித்திட எண்ணி நகர அவளை சுற்றி காவலர்கள் போட்ட பாதுகாக்கும் சக்கரம் அவர்கள் மூவரையும் வேறு இடத்தில் சேர்த்தது.
தக்க நேரத்தில் பாதுகாக்கும் சக்கரத்தை பயன்படுத்தியதில் காயங்கள் எதுவும் இல்லாமல் இரு குழுவாக பரி அரசினர் பிரிந்து பனி மலையின் தரையை அடைந்தனர். ஆனால் வன்னி இருந்த இடத்தில் மிகவும் அதிகமாக ஆன்மீக ஆற்றல் இருக்கும் போல. அவர்களால் பறக்கும் சக்கரமோ அல்லது ஆன்ம இணைப்பில் யரையும் தொடர்பு கொள்ள முடியவில்லை.
அதே சமயம் சந்திரர் தரையிறங்கிய இடத்தில் விட்டுவிட்டு ஆன்மீக ஆற்றலை பயன்படுத்த முடிந்தது. அதனால் எளிதாக ஆன்மீக ஆற்றல் அதிகமிருந்த இடத்திலிருந்து விட்டு விட்டு பறக்கும் சக்கரத்தை பயன்படுத்தி மதி, முகிலனை, அருகிலிருந்த மாதங்க அரசை சேர்ந்த கிராமத்திற்கு கொணர்ந்துவிட்டார்.
சிறிதும் தாமதிக்காமல் மாதங்க மற்றும் பரி அரசிடம் ஆன்ம இணைப்பில் சக்கரத்தில் நிகழ்ந்த விபத்தை எடுத்துரைத்தார். மதி முகிலனை சத்திரத்தில் தங்க ஏற்பாடு செய்துவிட்டு தனியாக வன்னி விழுந்த திசை நோக்கி அவளை மீட்க இராஜ குருவும் கிளம்பினார்.