“உன்னை யாரும் கல்யாணம் பண்ணிக்கச் சொல்லி போர்ஸ் பண்ணலை. இப்ப ஏன் வேண்டாம் காரணம் சொல்லு.”
“என்னவோ பிடிக்கலை.”
“தர்மா அண்ணாவே லவ் பண்ணித்தான் கல்யாணம் பண்ணி இருக்கார். நம்ம வீட்ல காதலுக்கு யாரும் எதிரி இல்லை. யாரையாவது விரும்பினா தைரியமா சொல்லு. நான் பார்த்துக்கிறேன்.” என விஷால் தைரியம் கொடுக்கவும், கல்லூரியில் தன்னுடன் படிக்கும் விகாஸை காதலிப்பதாகச் சொன்னவள், அவன் வெளிநாடு சென்று மேற்படிப்பு முடித்துவிட்டு வரும் வரையில் தான் காத்திருக்க வேண்டும் என்றும் சொல்ல…
“ஓகே இது தானா… இதுக்கு ஏன் டென்ஷன்?” என்றவன், “நீ இதைத் தர்மா அண்ணாகிட்ட தனியா கூப்பிட்டு சொல்லி இருக்கலாம். நீ டென்ஷன் ஆகி அவரையும் டென்ஷன் பண்ணி இருக்க வேண்டாம்.”
“என்னவோ அன்னைக்கு அப்படிக் கோபம் வந்திடுச்சு.”
“நீ நாளைக்கு அண்ணியைப் பார்க்கிற மாதிரி போய் அவர்கிட்ட சாரி கேட்டுடு.”
“நான் சாரி கேட்க மாட்டேன். நீ எத்தனை தடவை அண்ணன்கிட்ட சண்டை போட்டிருக்க, நீ கேட்டிருக்கியா?”
“நாங்க ரெண்டு பேரும் அடிக்கடி சண்டைப் போட்டுப்போம். நான் எதாவது அவரைச் சொல்லுவேன், அவர் என்னைச் சொல்லுவார். அது ரொம்பச் சகஜம். ஆனா நீ அப்படியில்லை… நீ எப்பவும் மரியாதையா அவர்கிட்ட பேசிட்டு, இப்ப சட்டுன்னு எடுத்தெறிஞ்சு பேசினதும், அவர் ஹர்ட் ஆகிட்டார். இல்லைனா ஆபீஸ் கூட வராம ரெசார்ட்ல போய் இருப்பாரா…”
“எனக்குப் பயமா இருக்கு. நான் பேசினா பேசுவாரா?”
“அதெல்லாம் பேசுவார். இப்ப கூட அவ்வளவு கோபத்தில இருந்தாலும், உன்னை விசாரிக்கச் சொல்லி அவர்தான் சொன்னார்.”
சரியென்று சொன்னாலும் தர்மாவைப் பார்க்கவே ரித்விகாவுக்குத் தயக்கமாக இருந்தது. அதனால் இன்று நாளை எனத் தள்ளிப் போட்டுக் கொண்டு இருந்தாள்.
விஷால் ரித்விகா பற்றிய விஷயத்தைக் கீர்த்தியின் காதில் போட்டு வைத்தான். அவள் அதைத் தர்மாவிடம் சொல்லி இருக்க, “ஸ்கூல் படிக்கும் போதே வீட்டுக்கு தெரியாம கல்யாணம் பண்ற இந்தக் காலத்தில… அவன் படிச்சிட்டு வர்ற வரை வெயிட் பண்றேன் சொல்றா பாரு… நிச்சயமா நல்ல பையனாத்தான் இருப்பான். எதுக்கும் விசாரிக்கச் சொல்லு.” என்றான்.
“நீங்க விசாரிப்பீங்கன்னு தான் விஷால் என்கிட்டே சொன்னது.”
“வேண்டாம் கீர்த்தி. நாம விலகி நிற்கிறதே நல்லது. ரொம்பவும் அக்கறை எடுத்து நான் எதாவது சொல்லப் போய், அவங்க எல்லாம் என்னைத் தப்பாதான் புரிஞ்சிக்கிறாங்க. நாம ஒரு மரியாதையான இடைவெளியில நிறுத்திக்கலாம்னு நினைக்கிறேன்.” எனக் கணவன் சொன்னதும்,
யாரு நீங்க என்பது போலக் கீர்த்திப் பார்க்க…
“ஹே… அப்படிப் பார்க்காத… இனி பழக்கிக்கணும்.” என்றான்.
கீர்த்திக்கு நம்பிக்கை இல்லை. தர்மாவுக்கு அவன் குடும்பம் எவ்வளவு முக்கியம் என அவளுக்குத் தெரியும்.
“விஷாலை நம்பி நான் இறங்கினேன் பாருங்க என்னைச் சொல்லணும்.”
“தர்மா அப்பவே சொன்னார். அவன் எனக்கு எதிரா போக மாட்டான்னு. அதே மாதிரி ஆகிடுச்சு. இப்ப நான் எந்த முகத்தை வச்சிட்டு தர்மாவைப் பார்ப்பேன்.” என இனியா கொந்தளிக்க,
“நான்தான் ஏற்கனவே சொல்லி இருக்கேனே… அவங்க வெளியிலதான் அடிச்சுப்பாங்க. அவங்களுக்கு ஏதாவதுன்னா ரெண்டு பேரும் ஒன்னு சேர்ந்துப்பாங்க.” என்றான் சூரியா.
“நமக்கென்ன வந்தது ரெண்டு பேரும் என்னவும் பண்ணிட்டு போறாங்க. நாம கேட்டது நமக்குக் கொடுக்கணும்.” எனச் சூரியா சொல்ல… அதை வசீகரன் ஆமோதித்தான்.
விஷால் இப்படித்தான் வாய்கிழிய பேசிட்டு… இப்போ அவங்க அண்ணன் பக்கம் சேர்ந்திட்டார். அடுத்து நீங்க ரெண்டு பேரும் என்ன கிழிக்கிறீங்க நானும் பார்க்கிறேன்.” என்றாள் இனியா கடுப்பாக.
வசீகரன் சௌமியா திருமணம் வெகு கோலாகலமாக நடந்தேறியது. தர்மாவாகட்டும் கீர்த்தியாகட்டும் தங்கள் மனஸ்தாபம் எதையும் காட்டிகொள்ளாது திருமணத்தில் முழு மனதுடன் வந்து பங்கேற்றனர்.
ரித்விகா தர்மாவுடன் பேசுவதைத் தள்ளிப் போட்டுக் கொண்டு வந்தவள், அன்று திருமணம் முடிந்து மண்டபத்தில் இருக்கும் போது, தர்மாவிடம் சென்று மன்னிப்புக் கேட்க,
“பரவாயில்லை… நீ சின்னப் பொண்ணு தானே…. நானும் அன்னைக்கு அவ்வளவு டென்ஷன் ஆகியிருக்க வேண்டாம்.” எனத் தர்மா சொன்னதும், ரித்விகாவுக்கு ஆச்சர்யமாக இருந்தது.
அன்று ரித்விகாவின் மீதுதான் தவறு. ஆனாலும் தர்மா நானும் அப்படிப் பேசி இருக்க வேண்டாம் என்றது, அவன் பெருந்தன்மையைக் காட்ட… நாம்தான் அண்ணனை சரியாகப் புரிந்துகொள்ளவில்லையோ என நினைத்தாள்.
தர்மா ரித்விகாவின் தோளில் கைப் போட்டு பேசிக் கொண்டிருக்க…. அருணா வந்ததவள் தம்பியின் இன்னொரு பக்கம் நின்றுகொள்ள… அவளின் தோளின் மீதும் அவன் கைப் போட்டுக்கொள்ள… “எங்களை போட்டோ எடு டா.” என அருணா சொல்ல, மூன்று போரையும் விஷால் தனது கைப்பேசியில் படம் பிடித்தான்.
“நீயும் வா…” என அருணா அழைக்க…. விஷால் கீர்த்தியை எடுக்கச் சொல்லிவிட்டு அருணாவின் அருகே சென்று நிற்க, அவள் தம்பியின் இடையில் கைப் போட்டுக் கொண்டாள்.
நால்வரும் சிரித்த முகத்துடன் சேர்ந்து நிற்க… கீர்த்தி அவர்களைப் படம் பிடித்தாள். ரங்கநாதனும் நாயகியும் அவர்களைத்தான் பார்த்துக் கொண்டிருந்தனர்.
தர்மா கீர்த்தியின் கண்களில் என்ன கண்டானோ, “டேய், என்னையும் கீர்த்தியும் எடு.” என்றவன், மனைவியை அழைக்க… கணவன் தன்னைப் புரிந்து கொண்டதில், கீர்த்தி மகிழ்ச்சியாக அவன் அருகில் செல்ல,
“என் தம்பியை நீ மிரட்டி வச்சிருக்க… எப்படிப் பயப்படுறான் பாரு. நாங்க அக்கா தங்கச்சி அவனோடு சேர்ந்து போட்டோ எடுத்தா என்ன?” என அருணா சண்டைக்கு வர…
“உங்களை யாரு எடுக்க வேண்டாம் சொன்னா…. ஆனா நான்தான் அவருக்கு முதல்ல…” எனக் கீர்த்தியும் மல்லுக்கு நின்றவள், கணவனின் அருகில் சென்று நிற்க….
“இன்னும் ஸ்கூல் பசங்க மாதிரியே வரிசையில நில்லுங்க.” என்ற விஷால்,
“அண்ணி நீங்க அண்ணனுக்கு முன்னாடி வாங்க. அண்ணா, நீங்க அவங்க கழுத்தை சுத்தி கைப்போடுங்க.” என அவன் ஒரு ரொமாண்டிக் போஸில் இருவரையும் படம்பிடித்தான்.
வயிறு ஒரு தினுசான சைஸ்ஸில் இருப்பதால்… கீர்த்திப் புடவை கட்டவில்லை. அடர் பச்சையில் அழகான வேலைப்பாடு செய்யப்பட்ட கையில்லா நீள டாப்பும், அதற்கு மேல் அதே நிறத்தில் முழுக்கை நெட்டட் அங்கியும் அணிந்து இருந்தாள். வித்தியாசமான தலையலங்காரத்தில், காதில் பச்சை எமரால்ட் ஜொலிக்க…. மார்டனாக இருந்தாள். அவளுக்குப் பொருத்தமாகத் தர்மா ஐவரி நிறத்தில் பேண்ட்டும், பச்சை நிற முழுக்கை சட்டையும் அணிந்திருந்தான். இருவரும் பார்த்ததும் கண்ணைக் கவரும் வகையில் இருந்தனர்.
இவர்களைப் பார்த்தபடி வந்த சூரியா, “இங்க இன்னைக்கு யாருக்குக் கல்யாணம். இன்னைக்குக் கல்யாணம் ஆனவங்க கூட இப்படி நிற்கலையே… என்ன டா நடக்குது இங்க.” என அண்ணன் அண்ணி இருவரையும் கேலி செய்ய…
“அது தானே இவங்கதான் புதுசா கல்யாணம் ஆன ஜோடி மாதிரி இருக்காங்க.” என ஸ்ருதியும் சேர்ந்துகொள்ள… அப்போது அபி நானும் என ஓடி வர…
“எங்களைச் சொன்னியே இப்ப இவளை என்ன சொல்ற?” என அருணா கேட்க,
“இவளை நான் ஒன்னும் சொல்ல முடியாது.” என்றாள் கீர்த்தி. தர்மா மகளைத் தூக்கிக்கொண்டு, மனைவியின் தோளைச் சுற்றி கைபோட்டு நிற்க, விஷால் அதை அழகாகப் படம்படித்தான்.
“நாங்க நாலு பேரும் எடுத்தோம், நீயும் வா சேர்ந்து எடுப்போம்.” என சூரியாவை அருணா அழைக்க, அப்படியே வசீகரனும் வர… அவர்கள் சகோதர சகோதரிகள் சேர்ந்து எடுத்து முடித்ததும், தங்கள் ஜோடியோடு குடும்பமாக நின்றவர்கள், பிறகு பெரியவர்களை அழைத்து, ரங்கநாதன் நாயகியை நடுவில் இருக்கையில் உட்கார வைத்து, அவர்கள் குடும்ப உறுப்பினர்கள் அத்தனை பேரும் சேர்ந்து புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.
அன்று எல்லோரும் சேர்ந்தே உணவருந்தினர். அந்த நாள் மிகவும் மகிழ்ச்சியாகச் சென்றது.
அன்று ஆரம்பித்த மகிழ்ச்சி அடுத்த நாளும் தொடர்ந்தது. மறுநாள் விருந்தில் இதே போல எல்லோரும் சேர்ந்தே இருந்தனர். கேலி கிண்டல் என நேரம் செல்ல… இவர்களுக்குள் பிரச்சனை இருக்கிறது என்றால் நம்பவே முடியாது.
கீர்த்திக்கு இப்போது ஆறு மாதம் நடந்து கொண்டிருந்தது. இரண்டு நாட்கள் கல்யாண வீட்டில் இங்கும் அங்கும் அலைந்தது, அவளுக்கு மிகுந்த களைப்பாக இருந்தது. சொன்னால் தர்மா கவலைப்படுவான் என அவளே தைலம் தேய்த்துக்கொள்ள,
“என்ன பண்ணுது?” எனத் தர்மா அவனே கவனித்துக் கேட்டான்.
“கால் வலிக்குது. கீழ் முதுகும் வலிக்குது.” என்றதும், எதற்கும் தீபக்கிடம் கேட்போம் என அழைத்துக் கேட்க,
“தைலம் லேசா தடவிக்கலாம். ஆனா அழுத்தி எல்லாம் தேய்க்க கூடாது. ஐஸ் பேக் இல்ல ஹாட் வாட்டர் ஒத்தடம் கொடுக்கலாம். ரெண்டு குழந்தை இல்லையா… மாசம் அதிகம் ஆகும் போது, முதுகு வலி வரத்தான் செய்யும். இனிமே அவளை எங்கையும் அலைய விடாத.” என்றான்.
அவனிடம் பேசிவிட்டு வைத்த தர்மா தீபக் சொன்னதைச் சொன்னவன், கீழே சென்று ஐஸ் பேக் எடுத்து வந்து மனைவிக்கு அவனே ஒத்தடம் கொடுக்க… கீர்த்தி முதுகு வலி குறைந்து உறங்க தொடங்கினாள். தர்மாவும் களைப்பில் அன்று நேரமே உறங்கிவிட்டான்.