“என் அக்கா அழகுக்கு என்ன குறைச்சல்?! அவ கண்ணழகுக்கே ஊரே மயங்குமே!” என்ற காயு, தான் வாங்கி வந்திருந்த கண்ணாடி வளையல்களையும் அக்காவின் கைகளில் அணிவித்து, மல்லிகைப் பூவையும் பின்னலில் சூட்ட, அந்த கருத்த மைவிழியாளின் அழகு மேலும் கூடியது!
“என்னடி கண்ணாடி வளையல் எல்லாம் வாங்கிட்டு வந்திருக்க?!” என்று மையு ஆச்சர்யமாய் கேட்க,
“வர்ற வழியில ஒரு தாத்தா, நாம சின்னப் பிள்ளையா இருக்கும் போதெல்லாம் சின்னதா பெட்டியில வச்சு வித்துட்டுப் போவாங்களே அது போல வித்துட்டுப் போய்ட்டு இருந்தார் க்கா. உனக்குத்தான் கண்ணாடி வளையல்னா ரொம்பப் புடிக்குமே அதான் வாங்கிட்டு வந்தேன்! வா வா! அப்படியே என்கூடவும் ஒரு செல்பி எடுத்துக்கோ. நானும் என் ஸ்டேடஸ்ல வைக்க வேணாமா?!” என்று காயு செல்பி எடுக்க வர,
“இல்லை இல்லை! முதல்ல போய் முகம் கழுவி தலைவாரி நீயும் பூ வச்சுட்டு வாடி. ரொம்ப களைப்பா தெரியுற பாரு” என்றாள் மையு.
“ஆமாக்கா நல்லாவே இல்லை! போ போய் மேக்கப் பண்ணிட்டு வா! மூணு பேரும் செல்பி எடுத்துக்கலாம்!” என்று வைஷு குட்டியும் சொல்ல,
‘சரி! அவர்கள் செல்பி சூட் முடியட்டும். அதுவரை நாம் அங்கு மித்ரனின் குடும்பம் ப்ரியா வீட்டிற்குக் கிளம்பினார்களே என்ன ஆனது என்று பார்த்துவிட்டு வருவோம்!’
******
தங்கமலரும் மற்றவர்களும் ப்ரியா வீட்டை அடைந்த போது, ப்ரியா இரவு உணவுக்காக சப்பாத்தி செய்ய கோதுமை மாவை பிசைந்து கொண்டிருக்க, அவளது மாமியார் குருமா செய்வதற்காக காய்களை நறுக்கிக் கொண்டிருந்தார்.
பிரேம் கால்மேல் கால் போட்டபடி அமர்ந்து கைப்பேசியில் லயித்திருக்க, அவன் தந்தை டிவி சீரியலில் மூழ்கி இருந்தார்.
பிரேம் வீட்டின் தெரு சற்றுக் குறுகலாய் இருந்ததால், சற்று தொலைவிலேயே ப்ரியா குடும்பத்தினர் காரை நிறுத்திவிட்டு நடந்து வந்திருக்க, வீட்டு கேட்டைத் திறந்து கொண்டு யாரோ வரும் சப்தம் கேட்டதும் மாடியில் அமர்ந்து படித்துக் கொண்டிருந்த தீபா இறங்கி ஓடி வந்தாள்.
அவள் கீழே வருவதற்குள் அவர்கள் உள்வாயிலை நெருங்கிவிட, ப்ரியா யாரோ வரும் அரவம் கேட்டு தலைநிமர்ந்து பார்க்க, தங்கமலரை அங்குப் பார்த்ததும்,
“அம்மா!” என்று குரல் கொடுத்தபடி எழுந்து ஓடிவந்துத் தவிழுக் கொண்டாள் அன்னையாய் வளர்த்தவரை.
“அம்மா! அம்மா! என்னை மன்னிச்சிட்டீங்களா ம்மா?!” என்று அவள் தேம்ப, தங்கமலருக்கும் அழுகையைக் கட்டுபடுத்த முடியவில்லை.
“நீதான்டா செல்லம் என்னை மன்னிக்கணும்! நீ என் பக்கத்துலயே இருந்தும் உன் மனசைப் புரிஞ்சிக்காம, நீ பட்ட கஷ்டத்தைக் கூட புரிஞ்சிக்க முடியாத முட்டாளா இருந்திருக்கேனே?!” என்று தங்கமலர் மகளைத் அணைத்தபடி கண்கலங்க,
“என்ன மலர் இது?! உன் பொண்ணைப் பார்க்காமதான் இத்தனை நாள் அங்க அழுத்திட்டு இருந்த! இப்போ பார்த்த பிறகும் அழுகையா! கண்ணைத் துடை முதல்ல! உன்னால அவளும் அழறா பாரு!” என்று ராஜசேகர் மனைவியைக் கண்டிக்க,
“போங்க. இது என் மகளைப் பார்த்ததுனால வந்த ஆனந்தக் கண்ணீர்!” என்றவர்,
அவர்கள் வந்ததுமே பிரேம் உட்பட அனைவரும் எழுந்து நின்றிருந்தனர் மரியாதை நிமித்தமாய்.
“உட்காருங்க உட்காருங்க அத்தை! உட்காருங்க மாமா! உட்காருங்க மாமா” என்று முதலில் வீட்டுப் பெரியவர்களை உபசரித்து அமரச் சொன்ன பிரேம், ப்ரியாவின் அக்கா, அண்ணன், அண்ணி, தங்கை, அவர்கள் வீட்டு வாண்டுகள் என்று இன்னும் பலர் அங்கு அமர நாற்காலி இல்லாது போனதால்,
“தீபா.. பக்கத்து வீட்ல போய் சேர் கேட்டு வாங்கிட்டு வா” என்று தங்கையை விரட்ட,
“இல்லை பரவாயில்லை! நாங்க கீழேயே உட்கார்ந்துக்கறோம்!” என்று அவர்கள் அமரப் போக,
பிரேம் ஓடிப் போய், இரண்டு போர்வையை கொண்டு வந்து தரையில் விரித்தான் அவர்கள் அமர்வதற்காக.
‘பரவாயில்லை! இந்தப் பையன் நல்லாதான் கவனிக்குறான்!’ என்று யோசித்தபடியே தங்கமலர் தன் கணவரைப் பார்க்க, மனைவியின் எண்ண ஓட்டத்தைப் புரிந்தவராய், மெல்லச் சிரித்தார்.
“ம் ங்க!” என்றவர், மகளை அழைத்து அருகே அமர வைத்து, வாஞ்சையாய் மகளின் தலைவருடிக் கொடுத்தபடியே, அவளின் மாமியாரைப் பார்த்து,
“எல்லாம் சரியா நடந்திருந்தா எங்க பொண்ணை மகாராணி மாதிரி உங்க வீட்டுக்கு அனுப்பி வச்சிருப்போம்! ஆனா,” என்று சற்று நிறுத்தியவர்,
“என்னவோ நேரம்! இப்படி யாருமே இல்லாம என் மக கல்யாணம் நடந்து போச்சு!” என்று பெருமூச்சொன்றை விட்டு,
“அந்த சமயம் ஏதோ ஒரு கோபத்துல அவளை ஏத்துக்க மறுத்துட்டாலும் மனசு கிடந்து அவமேலேயேதான் அடிச்சிக்கிட்டு இருந்தது.” என்றவர், மகளைப் பார்த்து,
“ஆனாலும் இந்தப் பொண்ணு வாயைத் திறந்து நடந்ததைச் சொல்லி இருக்கலாம்! அப்படிச் சொல்லி இருந்தா யாருக்கும் இவ்வளவு மனக்கஷ்டம் ஏற்பட்டிருக்காது” என,
“என்ன சம்மந்தி செய்யிறது?! இந்தக் காலத்துப் பசங்க மனசுல என்ன இருக்குன்னு கொஞ்சம் கூட கண்டு பிடிக்க முடியலை! என் பையனையே எடுத்துக்கோங்க! தாலியைக் கட்டி முடிச்சிட்டுத்தான் வீட்டுக்கு போன் பண்ணி விவரம் சொல்லுறான்! என்ன நாங்க உங்க அளவுக்கு வசதி இல்லாதவங்க! அதனால உடனே வீட்டுல சேர்த்துகிட்டோம்! நாங்களும் உங்களை மாதிரி வெளியே போகச் சொல்லி இருந்த பிள்ளைங்க நிலைமை!” என்று பிரேமின் தந்தை சுருக்கென சொல்ல, மித்ரன் ப்ரேமை முறைத்தான்.
அவனின் முறைப்பில், “அப்பா… இப்போ எதுக்கு அதெல்லாம்? அதான் அத்தையும் மாமாவும் எங்களைப் பார்க்க வந்துட்டாங்கல்ல?! இனி ஆக வேண்டியதைப் பாருங்க” என்று எதையோ பூடகமாய் உணர்த்திவிட்டு,
“நான் கடைக்கு போய் கூல்ட்ரிங்க்ஸ் வாங்கிட்டு வரேன்” என்று சட்டென வெளியேறினான்.
“மாமா எனக்கு கூல்ட்ரிங்க்ஸ் வேண்டாம். ஐஸ் க்ரீம்” என்று கீர்த்தி சொல்ல,
“எனக்கும், எனக்கும் ஐஸ்க்ரீம்தான்!” என்றனர் உடன் வந்திருந்த அவர்கள் வீட்டுப்பிள்ளைகள்.
‘ம்கும்! வந்த அன்னிக்கே செலவைத்தான் இழுத்து வைக்குதுங்க! என்னமோ இதுங்க வீட்ல ஐஸ்க்ரீமே சாப்பிடாத மாதிரி!’ என்று தனக்குள் சலித்துக் கொண்டவன், வெளியே சிரித்தபடி,
“ஓ! வாங்கிட்டு வந்துடறேன்” என்று சொல்லி வெளியேற, ப்ரியாவிற்கு அவனின் கஞ்சத்தனம் நினைவு வர உள்ளுக்குள் சிரிப்பு வந்தது. எனினும்,
“பிரேம் அப்படியே நல்ல கடையா பார்த்து, கொஞ்சம் ஸ்வீட்டும், காரமும் வாங்கிட்டு வந்துடுங்க!” என்றாள் வேண்டுமென்றே.
“ஸ்வீட்?! காரம்?! ஓ! வாங்கிடலாமே!” என்றவன், பாக்கெட்டில் இருந்த ஐநூறும் மொத்தமாய் தீர்ந்துவிடுமோ, இல்லை அதுவும் பத்தாமல் போய் கடைக்காரன்கிட்ட அசிங்கப் படணுமோ! என்று எண்ணிபடியே தனது ஸ்கூட்டியைக் கிளப்பினான்!
******
“அடியே என்னங்கடி கூத்து நடக்குது இங்க?! வேலையில இருந்து வந்தவ ஒரு காபி கூட போட்டுக் குடிக்காம இவகூட உட்கார்ந்து கூத்தடிச்சிட்டு இருக்க?!” என்று சாந்தி கடையில் இருந்து வரும்போதே கத்த,
“ஆமாம்! நான் குத்தடி குத்தடி சைலக்கான்னு ஆடிக்கிட்டு கிடக்கேன்! இவ என்னோட கூத்தடிக்கா!” என்று பதில் கொடுத்த மையு,
“அது சரி! கடைக்கு போனா ஒரு ஐநூறு ரூவா கெடைக்கும். உன்கூட இருந்தா நீயா காசு தருவ?!” என்று சாந்தி எவ்வளவுதான் தன் குணத்தை மாற்ற முயற்சி செய்ய நினைத்தாலும் எப்போதும் போல் வெடுக்கெனப் பேசிவிட, மையுவிற்கு ஏதோ போல் ஆனது! எனினும் நேற்று அவன் வந்து சென்றது முதல் இருந்த நல்ல குணத்திலும், சாந்தி காலையில் அவளை அப்படி கவனித்து கொண்டதன் காரணத்தினாலும்,
“நீ இப்படியே பேசிட்டு இரு! ஒரு நாள் அந்தப் பணத்தாலேயே உன் வாயை அடைக்கிறேன்! அப்போ இந்த வாயி என்னை எதிர்த்தே பேச முடியாது” என்ற மையு,
“டி காயு! போ போய் அம்மாக்கு காபி போட்டு எடுத்துட்டு வா” என்றாள் கொஞ்சம் அக்கறையும் கொண்டவளாய்.
“அது சரி அது சரி! இந்த வெட்டி வாய் உதாருக்கு ஒண்ணும் குறைச்சலில்லை!” சமாதானம் ஆனார் சாந்தி.
சிறிது நேரத்தில் காயத்ரி அனைவருக்கும் காபி போட்டுக் கொண்டு வர, அவர்கள் வீட்டு ஆண்பிள்ளையும் அதிசயமாய் அக்கா மீது பாசம் கொண்டு அன்று அவளது பிறந்த நாளுக்காக கேக் வாங்கி வந்திருந்தான் கொண்டாடுவதற்காக. உடன் மாதமாக இருந்த உமாவும் வந்திருக்க,
‘என்னடா இது?! இன்னிக்கு காலையில இருந்து எல்லாமே அதிசயமா நடக்குது?!’ என்று எண்ணிக் கொண்டவளுக்கு, ஏனோ அவள் வாழ்வில் அவன் வந்து சேர்ந்த நேரமே இதற்கெல்லாம் காரணமோ என்றும் தோன்றியது.