நிழல் 2
அவளோடு எப்போதும் சண்டை போட்டுத் தான் அவனுக்குப் பழக்கம். மாயாவும், ருத்ரனும் ஒரே இடத்தில் அதுவும் அமைதியா இருக்கிறார்கள் என்றால் அது அதிசயம் தான். காரணம், இருவருக்கும் எப்போதும் ஏழாம் பொருத்தம் தான்.
மாயா பள்ளியில் சேர்ந்த சில நாட்களில் ருத்ரவிநோதனும் சேர்ந்திருந்தான். இருவருமே இதற்கு முன்பு படித்த பள்ளியிலிருந்து பாதியில் வந்து தான் இங்கு சேர்ந்திருந்தார்கள்.
வந்த முதல் நாளே அவர்களின் ஆட்டம் துவங்கியிருந்தது. அன்றைய பாடம் வானவியல் ஒன்பது கோள்களையும் பற்றி ஆசிரியர் பாடம் எடுத்துக் கொண்டிருந்தார்.
”பசங்களா பாடம் முடிஞ்சுது, மத்தியான நேரம் வேப்ப மரக்காத்துன்னு பலபேர் சொக்கீட்டீங்களே, இப்ப கேக்குற கேள்வியில எவனெனவன் தூங்குனான்னு தெரிஞ்சிடும்…” என்று மூங்கில் பிரம்பைக் கையில் எடுக்கவும் சொக்கிவிழுந்த மாணவர்கள் விழித்து எழுந்து யாரைக் கேட்க போகிறார்களோ என்று அமர்ந்திருந்தனர்.
முதல் வரிசையில் அமர்ந்திருந்த மாயாவிடம் அந்த நேரம் பார்த்து அருகிலிருந்த பெண் பேச்சுக் கொடுக்க, ஆசிரியரின் கண்ணில் முதலில் சிக்கிக் கொண்டாள்.
”மாயா எழுந்திரி…”
பவ்யமாய் கைகளைக் கட்டிக் கொண்டு எழுந்து நின்றாள். முழங்கால் வரையிலான பாவாடையும் வெள்ளைச் சட்டையும், வெள்ளை நிற ரிப்பனில் முடியப்பட்ட குதிரைவால் கூந்தலும், புசுபுசுவென கன்னங்களும் ஆசிரியரின் தொனியில் ஆப்பிளாய் மாறி இருந்தது.
தூங்கிக் கொண்டிருந்தவளுக்கு கேள்வி கேட்டால் சொல்லவென பதில் சொல்லிக் கொண்டிருந்தவளை கவனிக்கவில்லை என எழுப்பி விடுவதா என்ன நியாயம் என்று மனம் பொங்கியதில் வந்த ஆப்பிள் அவை.
நான் நிரபராதி என நிரூபிக்கிறேன் கேள்வியைக் கேளுங்கள் என்ற பார்வையை அவள் வீச, அவளின் ஆசிரியர் இவளைப் பார்த்து,
“பூமி எங்குள்ளது…?” எனக் கேட்டார்.
“ஹா பூ இவ்வளவு தானா என்று மனதில் எண்ணியபடி, “பூமி சூரியக்குடும்பத்தில் உள்ள மூன்றாவது கோள், அங்கு தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்றாள்.
ஓங்கி தலையில் ஒரு குட்டு வைத்தார் அந்த ஆசிரியர். “டீச்சர் நான் சரியாத் தான் சொன்னேன்…” வலியை பல்லால் கடித்துக் கொண்டு கண்களில் நீர் கோர்த்தபடி அவள் சொல்ல,
”நான் உன்கிட்ட என்ன கேட்டா என்ன சொல்ற…” என்றபடி, அடுத்த வரிசையில் நல்ல பிள்ளையாய் அமர்ந்து அடுத்திருந்தவனோடு வம்பளந்து கொண்டிருந்த ருத்ரனை எழுப்பி விட்டார்.
“நீ சொல்லு பூமி எங்குள்ளது…?”
“நம்மை சுற்றியுள்ள நிலப்பகுதியே பூமி…”
“வெரிகுட் உக்காரு…”
“என்ன கவனிச்ச…?”
”நான் கரெக்டா தான் கவனிச்சேன்…”
“பதில் மட்டும் சரியா சொல்ல மாட்ட…”
“உங்களுக்குத் தேவை இந்த பதில்னா, நீங்க நாம் வாழும் கோள் எதுன்னு கேட்டிருக்கனும், என்கிட்ட பூமி எங்க இருக்குன்னு தானே கேட்டீங்க, அப்படீன்ன நான் இதைத் தான் எழுதுவேன், கடைசியா வேணும்னா அந்த பூமியில் தான் நாம் வாழ்கிறோம்னு எழுதுவேன்…”
“நீ அப்படி மட்டும் எழுதுனா நான் தப்புன்னு தான் போடுவேன்…”
“இல்லை சார் நான் சொன்னது சரி தான்… “
“இல்லை சார் நான் சொன்னது தான் சரி அவளோட பதில் தப்பு…”
கடைசியில் இரண்டு பதிலுமே சரி என்று சொல்லும் வரை அன்று சண்டை நீண்டது,
இப்படியாக தினம் தினம் எதாவது ஒரு விசயத்திற்காக மோதிக் கொண்டது, இவர்களுக்கென தனித் தனியாக குழுக்கள் சேரும் வரை தொடர்ந்தது.
படிப்பு விளையாட்டு, தோட்டம் அமைப்பது, கலைநிகழ்ச்சிகளில் பங்கேறபது என இருவருமே போட்டியிலேயே நின்றனர்.
ஆண்டு விழா நாடகத்தில் கூட அவள் தேவதை வேடமிட்டால் நான் அரக்கனாகத்தான் நடிப்பேன் என்று முறுக்கிக் கொண்டு நின்றான்.
அப்படி சண்டைக்கோழியா எந்நேரமும் சிலுப்பிக் கொண்டிருந்தவள், இன்று எதோ புதுவிதமான வியாதியைப் போல் பயத்தைப் பிடித்துக் கொண்டிருப்பதை சற்றும் அவனால் சகிக்க முடியவில்லை.
அவனுக்கு அவள் எப்போதும் போல் இயல்பாக வரவேண்டும், மீண்டும் தன்னோடு சண்டையிட வேண்டும். திட்டிக் கொண்டே சதா சர்வகாலமும் தன்னைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தவள், இன்று தன் நிழலைப் பார்த்தாலே நடுங்குவது புரியாத புதிராகிப் போனது.
அதிகபட்சம் பத்து பனிரெண்டு வயது பிள்ளைகளுக்கு அதற்கு மேல சிந்திக்க இயலவில்லை. ஆனால் வதந்தி ஒரு கொடிய விஷம், பரவி விட்டால் வேரறுப்பது கடினமாயிற்றே.
அப்படித்தான் மாயாவிற்கு மனநோய் என்ற வதந்தியும் பரவியிருந்தது கடந்த ஒரு வருடமாக. இதை மாற்ற முடியவில்லை. பெயருக்கேற்றார் போல் உடன் படிக்கும் பிள்ளைகள் என்ன செய்தாலும் பயந்து நடுங்கினாள்.
குறிப்பாக ஆண்பிள்ளைகளைக் கண்டாளே கண்களை மூடிக் கொண்டாள். எதாவது செய்து மாயாவை பழைய நிலைக்குக் கொண்டு வந்திட வேண்டும் என்று அவன் பிரயத்தனபட, ஆனால் அவள் நிலையோ இன்னும் மோசமாகிப் போனது.
ஜன்னலோ கதவோ திறந்திருந்தால் அதனைப் பார்க்கும் போதெல்லாம் அவளுக்கு நேகா தெரிந்தாள். வீறிட்டு அழுது மயக்கம் போடுவது வழக்கமாகிப் போனது.
அன்று பள்ளியில் கட்டுரை நோட்டுக்களை அடுக்கி வைக்கையில் நேகாவின் நோட்டு அதிலிருந்தது. தன்னையும் மறந்து மாயா இயல்பாக இருந்த நிமிடங்களில் தான் அதைப் பார்த்தாள்.
“நேகா நேகா நேகாவோட நோட்டு, எப்படி…?”
“பிரிச்சு பாரு…” எங்கிருந்தோ குரல் கேட்டது.
உடல்முழுதும் வியர்க்கத் துவங்கிவிட்டது அவளுக்கு, தொண்டை வறண்டு கூட்டி முழுங்க எச்சிலும் வற்றியிருந்தது
”ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்…” அடித்தொண்டையிலிருந்து உறுமல் வந்தது. திரும்பி பார்த்தவளுக்கு அப்போது தான் தெரிந்தது அது விளையாட்டு பொருட்கள் வைக்கும் அறை என்று,
அங்கு எப்படி தான் மட்டும் தனியாக வந்தோம் என அவளுக்கு தெரியவில்லை.
கையில் நேகாவின் கட்டுரை நோட், உறுமத்துவங்கியிருந்தது.
கீழே போட்டுவிட்டு ஓடலாம் என்று கையிலிருந்த நோட்டை நழுவவிட அது அந்தரத்தில் நின்றது.
கால்கள் நகரமுடியாதபடி, அங்கிருந்த ஸ்கிப்பிங் கயிறு வந்து காலைச் சுற்றிக் கொண்டது
எத்தனை பிரயத்தனம் செய்தும் குரல் வெளியில் வரவில்லை
கட்டுரை நோட்டின் பக்கங்கள் திறக்கத் துவங்கியது.
வெற்றுத்தாள்களில் சட்டென எழுத்துக்கள் தானாக எழுதியது
“இன்னும் எத்தனை நேகாக்களை உருவாக்கப் போகிறாய் மாயா…”
“நானா இல்லை இல்ல…”
“நீதான் நீயே தான் காரணம்…”
“நான் நா இல்லை நேகா என்னை விட்று…”
“உன்னை விடவா பிடிச்சு வைச்சிருக்கேன், வா மாயா நாம சேர்ந்து விளையாடலாம் வா வா மாயா வா…” என்று நேகாவின் குரல் முரட்டுத்தனமாய் சிரிக்கத்துவங்கியது. ஜன்னல் கதவுகள் மிக பலமாய் அடித்துக் கொள்ள ஆரம்பித்தது.
கண்களை இறுக்க மூடிக் கொண்டாள் மாயா, வீட்டில் தெரிந்தது போல் தன்னை சுற்றிலும் இரத்தம் இருக்குமென்ற பயம் அவளுக்கு, அன்று இரவு எவ்வளவு சொல்லியும் அவளின் அம்மா, ஜன்னல் வழியே நேகா வந்ததையோ, வீடுமுழுவதும் இரத்தமாகி கண்ணாடி சிதறல்களை பிரதிபலித்ததையோ நம்பவில்லை. அத்தனைக்கும் மேலாய் அந்த தாடிக்காரன் வந்து சிரித்ததை கோரமான அந்த மிரட்டலையோ நம்பவே இல்லை.
இதையெல்லாம் யோசித்தபடி நின்றிருந்தவளின் தோளைத் தொட்டு “மாயா பயந்துட்டியா…” என்று முகத்தை மிக அருகில் வைத்து ரத்தம் சொட்டச் சொட்ட சிரித்தான் அந்த தாடிக்காரன்.