“ஓ… செக்யூரிட்டி ராஜன் வீட்டைக் கண்டு பிடிச்சுட்டிங்களா… அவனை விசாரிச்சீங்களா சார்…” இன்ஸ்பெக்டரிடம் ஆவலுடன் கேட்டான் தேவ்.
“ப்ச்… அதுல ஒரு பிரச்சனை இருக்கு…”
“என்ன பிரச்சனை சார், அவன் வீட்டுல இல்லாம பயந்து எங்காச்சும் ஓடிப் போயிட்டானா…”
“எங்க ஓடினாலும் கண்டு பிடிச்சுடலாம்… ஆனா அவன் உலகத்தை விட்டே ஓடிப் போயிட்டான்…”
“எ..என்ன சார் சொல்லறீங்க…”
“எஸ், மிஸ்டர் பிரம்மா… நாங்க ராஜன் வீட்டைக் கண்டுபிடிச்சு அங்க போனப்போ வீடு வெளிப்பக்கமா பூட்டி இருந்துச்சு… பக்கத்துல விசாரிச்சப்ப அவனைப் பத்தி யாருக்கும் தெரியலை… சரி, பூட்டை உடைச்சு அவனைப் பத்தி எதுவும் தெரிஞ்சுக்கலாம்னு உள்ள போனப்ப தான் அவன் தூக்குல தொங்கிட்டு இருந்தான்…”
“ச..சார், எப்படி, போலீஸ்ல மாட்டிப்போம்னு ஒருவேளை தற்கொலை பண்ணிகிட்டானா…”
“வீட்டு வெளிப்பக்கம் பூட்டிட்டு தற்கொலை பண்ணிக்க முடியாதே… யாரோ கொன்னுட்டு தூக்குல மாட்டிட்டுப் போயிருக்காங்க… பாரன்சிக் பீப்பிள் வந்து செக் பண்ணிட்டு இருக்காங்க… பாடியை போஸ்ட்மார்ட்டம் பண்ணினா தான் எந்த மாதிரி மரணம்னு ஒரு முடிவுக்கு வர முடியும்…” அவர் சொன்னதைக் கேட்டு பிரம்மா அதிர்ந்து நின்றான்.
“ஓகே பிரம்மா, சிவநேசனைக் கொன்னது ராஜன்னு நாம நினைச்சா அவனையும் யாரோ கொன்னிருக்காங்க… இதெல்லாம் பார்க்கும்போது விசாரணைக்குப் பின்னாடி ஏதோ பெரிய விவகாரம் ஒளிஞ்சிருக்குன்னு எனக்குத் தோணுது… உங்ககிட்ட விவரம் சொல்ல தான் கால் பண்ணேன்… பார்மாலிட்டீஸ் முடிஞ்சு அப்புறம் பேசறேன்…”
இன்ஸ்பெக்டர் அழைப்பைத் துண்டிக்க யோசனையுடன் உறைந்து நின்ற தேவ் தோளில் யாரோ கை வைக்கவும் சட்டென்று திரும்பினான்.
“என்னடா தேவ், ஏதோ டென்ஷனா பேசின போலத் தோணுச்சு… யாரு கால் பண்ணாங்க…”
“இன்ஸ்பெக்டர் தான் மா… அந்த ராஜனை யாரோ கொலை பண்ணி அவன் வீட்டுல தொங்க விட்டிருக்காங்களாம்…”
“தெரியலையே மா… எனக்கும் அதான் பயம்… இதுக்குப் பின்னாடி ஏதோ பெரிய விவகாரம் இருக்குமோன்னு மனசு கிடந்து அடிச்சுக்குது…”
“சரி… நீ டென்ஷனாகி ஓவி கிட்ட இதைப் பத்தி சொல்லிடாத, பயந்துக்கப் போறா…”
“ம்ம்…” தேவ் சொல்ல, “புள்ளைங்களுக்கு கல்யாணம் முடிவு பண்ண நேரத்துல என்னெல்லாமோ நடக்குதே, கடவுளே…” புலம்பிக் கொண்டே உள்ளே சென்றார் ஆருத்ரா.
மூன்றாவது நாள் சாமி கும்பிட சொந்தமும், நட்பும் கூடி சிறப்பாய் முடித்துக் கொடுத்து கிளம்பினர். ஓவியாவை தேவ் வீட்டுக்கு அழைத்து செல்வதாக ஆருத்ரா சொல்ல அவள் தயங்கினாள். ஆனால் ராதிகாவுக்கு அதுவே சரியென்று தோன்ற தோழியிடம் பேசினாள்.
“ஓவி, நடந்ததை மாத்த முடியாது… எப்பவும் அழுதுட்டே இருந்தா அப்பா திரும்பி வந்திடுவாரா என்ன… பிரம்மா சாரும், அம்மாவும் உன்னை நல்லா கவனிச்சுக்கிறாங்க… உன்னை பாதுகாப்பான இடத்துல விட்டுட்டு தான் அப்பா கண்ணை மூடி இருக்கார்… இனி உன் தேவைகளை அவங்க பார்த்துப்பாங்க… நீ அவங்களோட போறது தான் சரி…”
“எப்படி ராதி… அப்பா வாழ்ந்த வீட்டை விட்டு, கல்யாணத்துக்கு முன்னாடியே அவர் வீட்டுக்குப் போனா நாலு பேர் நாலு விதமாப் பேச மாட்டாங்களா…”
“பேசறவங்க எப்பவும் பேசிட்டு தான் இருப்பாங்க… அவங்க வாயை நாம மூட முடியாது… அதுமில்லாம உங்களுக்கு தான் மேரேஜ் பிக்ஸ் ஆகிடுச்சே, அப்புறம் என்ன… உனக்கு இந்த நேரத்துல பாதுகாப்பும், அன்பான அக்கறையும் தேவை… அது அவங்க கூட இருந்தா தான் கிடைக்கும்… பிரம்மா சாரும் எத்தனை நாள் தான் வேலை எல்லாம் விட்டுட்டு இங்கயே உன்னோட இருக்க முடியும்… அவருக்கும் கஷ்டம் தானே… நீ அங்க போனா உன்னையும் கவனிக்கலாம்… வேலையும் முடிக்கலாம்… மறுக்காத ஓவி…”
“ம்ம்…” என்றவளுக்கும் அதுவே சரியென்று தோன்றியது. வீட்டில் எந்தப் பக்கம் திரும்பினாலும் தந்தை அவளை நோக்கி சிரிப்பது போலவும், ஏதோ சொல்வது போலவும் நினைவுகள் வந்து கண்ணை நிறைத்தது. பிரம்மாவும் தனியே விட மாட்டானென்று மறுக்காமல் கிளம்பினாள்.
போகும் வழியில் நாட்டியப் பள்ளியைக் காண சென்றனர். சிவநேசன் மரித்துக் கிடந்த இடத்தில் சாக்பீஸால் வரைந்த கோடுகளைக் கண்ணீருடன் பார்த்து நின்ற ஓவியாவை கைபிடித்து காருக்கு அழைத்துச் சென்றான் தேவ்.
ஆருத்ராவுக்கும் மிகவும் சங்கடமாய் இருந்தது. அவர் இல்லாமல் ஊரில் கணவரை கவனித்துக் கொள்ள முடியாமல் சஞ்சய் தள்ளாடிக் கொண்டிருக்க உதவிக்கு ஆளை அழைத்துக் கொண்டாலும் சரியாகவில்லை.
“ஓவி இப்படி இருக்கும்போது எப்படிப்பா நான் கிளம்புவேன்…”
“அவளை நான் பார்த்துக்கறேன் மா… அப்பாவையும் கவனிக்கனும்ல…” தேவ் சொல்ல, “ஆமாம்மா, என்னை நினைச்சு பீல் பண்ணாதீங்க… இங்க என்னை கவனிக்க தான் உங்க பிள்ளை, ஜானும்மா, ராகவ், அமிர்தா எல்லாரும் இருக்காங்களே… நீங்க ஊருக்குப் போயிட்டு வாங்க…” என்று ஓவியாவும் சமாதானப்படுத்த அரைமனதுடன் சம்மதித்தார். அடுத்தநாள் ஆருத்ரா கிளம்ப ராகவை அன்னையுடன் துணைக்கு அனுப்பினான் தேவ்.
நிறைய வேலைகளை முடிக்க வேண்டி இருந்ததால் பிரம்மா மதியம் வரை பிசியாய் இருந்தான். வார இதழ் ஆசிரியர் ஒருவரை சந்தித்துவிட்டு சில புதிய கதைகளுக்கு வேண்டிய ஓவியங்களைப் பற்றி கலந்தாலோசித்து விட்டு வீட்டுக்கு வரும்போது சமயம் இரண்டைத் தாண்டியிருந்தது.
“ஜானும்மா… பசிக்குது, லஞ்ச் எடுத்து வைங்க…” சொல்லிக் கொண்டே உள்ளே நுழைந்தவன், “ஓவி சாப்பிட்டாளா…” என்று கேட்க, “இல்ல தம்பி, நீங்க வரட்டும்னு சொல்லிட்டாங்க…” என்றார் ஜானும்மா.
“ஓ… சரி எடுத்து வைங்க, அழைச்சிட்டு வரேன்…” என்றவன் தனது அறைக்குள் நுழைந்து கை கால் அலம்பிக் கொண்டு ஓவியாவைத் தேடி அவளது அறைக்கு வந்தான்.
அவனது ஓவியங்கள் கொண்ட ஆல்பத்தை மடியில் வைத்துப் பார்த்துக் கொண்டிருந்தாள்.
“அம்மு…” அவனது அழைப்பில் சட்டென்று நிமிர்ந்தவள் அந்தப் பெயரைக் கேட்டதும் சட்டென்று கலங்கினாள். இந்த உலகத்தில் அவளை அம்மு என்று அழைப்பது தந்தைக்குப் பிறகு தேவ் மட்டும் தானே.
“அம்மு, செமப் பசி… வா சாப்பிடலாம்…”
“தேவ்… நீ என்னை அம்முன்னு கூப்பிடும்போது அப்பா கூப்பிடற போலத் தோணுது…” அவள் சொல்லவும் பின்னிருந்து தோளோடு அணைத்துக் கொண்டு, “ஓ… அப்ப நீ வேணும்னா என்னை அப்பான்னு கூப்பிட்டுக்க…” என்றதும் சட்டென்று முறைத்தவளைக் குறும்புடன் நோக்கினான்.
புருவம் தூக்கி, “என்னடா, நம்ம புள்ளைக்கு அப்பாவாகப் போறவன், நம்மளை அப்பான்னு கூப்பிட சொல்லுறான்னு தோணுதா…” கேட்டுக் கொண்டே அருகில் அமர்ந்தான்.
“ச்சீ… எனக்கு அப்படி எல்லாம் தோணல, இந்த லூசுப் பாண்டியை நிச்சயம் கல்யாணம் பண்ணத்தான் வேணுமான்னு தோணுது…” அவள் இயல்பாய் அவனிடம் சண்டை போடவும் புன்னகைத்தவன் தொடர்ந்தான்.
“ஓஹோ, அவ்ளோதூரம் யோசிச்சுட்டியா… அப்படி எல்லாம் கஷ்டப்பட்டு லூசான என்னைக் கல்யாணம் பண்ணிக்க வேண்டாம்… உனக்குப் பொருத்தமா டைட்டான ஒருத்தனை கண்டுபிடிச்சு தரட்டுமா…” கேட்டுக் கொண்டே கட்டிலில் மல்லாந்தவனை வாயிலேயே ஒன்று கொடுத்தாள் ஓவியா.
“அய்யாக்கு அப்படி வேற எண்ணமிருக்கா… வாய்ப்பில்ல ராசா, வாய்ப்பில்ல… அப்படில்லாம் உன்னை சந்தோஷமா இருக்க விட்டுற மாட்டேன்…”
“என்னது, நான் உனக்குத் தொல்லையா, பெரிய மனசு பண்ணி அட்ஜஸ்ட் பண்ணிக்கறியா… உன்னை…” என்று குத்தத் தொடங்கியவளின் கையைப் பிடித்து வைத்தவன்,
“அடியே பார்த்து அடி… இதயத்துல பட்டுடப் போகுது… அப்புறம் உனக்கு தான் பிரச்சனை ஆகிடும்…”
“ஓஹோ, உங்க இதயத்துல நான்தான் இருக்கேன்னு டயலாக் பேசி சீன் போடப் போறீங்களா…” கேட்டவளின் கையைப் பிடித்து அருகே இழுத்து, அவள் முகத்தை நெருக்கமாய்ப் பார்த்தவனின் பார்வையில் மனது உருகத் தொடங்க தவிப்புடன் பார்த்தாள் ஓவியா.
“என் இதயத்துல நீ இருக்கேன்னு யாரு சொன்னா… அது துடிப்பை நிறுத்திட்டா நீ இல்லாமப் போயிடுவ, நீ என் உணர்வுல இருக்கடி… என் எண்ணத்துல நிறைஞ்சிருக்க… ஒருவேளை, எனக்கு எதுவும் ஆகிட்டா கல்யாணம் பண்ணாமலே நீ விதவை ஆகிடக் கூடாதுல்ல, அதுக்கு தான் நெஞ்சுல குத்தாதேன்னு சொன்னேன்…”
அதைக் கேட்டதும் கோபத்துடன் அவன் முகத்தை நெருங்கியவள் கன்னத்தில் கடித்து வைக்க அலறினான்.
“என்ன பேசறோம்னு யோசிச்சு தான் பேசறியா தேவ்… உன்னைல்லாம் கடிச்சாப் போதாது… சொன்ன வாயை அப்படியே அயர்ன் பாக்ஸை சூடாக்கி பொசுக்கிடனும்…” சொல்லும்போதே குரல் கமற கண்கள் நிறைந்துவிட்டது.
அதன் பின்னரே “அப்படி என்ன சொல்லிட்டோம்…” என யோசித்தவன், தலையில் அடித்துக் கொண்டான்.
“ஹேய் ஓவி, சாரிடி… அது சும்மா விளையாட்டுக்கு சொன்னேன்… சீரியஸா எடுத்துக்காத…” அவள் தோளில் கை வைத்து சமாதானம் செய்ய முயல கையைத் தட்டி விட்ட ஓவியாவின் கண்கள் கண்ணீரைக் காட்டின.
“எது விளையாட்டு… முன்னமே அம்மாவை இழந்து, இப்ப அப்பாவையும் இழந்து நீ தான் இனி எனக்கு எல்லாமேன்னு நினைச்சுட்டு இருக்கற என்கிட்ட பேச வேண்டிய வார்த்தையா இது…” கேவியவளைக் கண்டு தவித்தான்.
“ஹேய், சாரிமா… நான் அப்படி சொல்லிருக்கக் கூடாதுதான்… இன்னைக்கு ஏதோ நீ கொஞ்சம் ஜாலியாப் பேசவும் அப்படியே கண்டின்யூ பண்ணனும்னு லூசுத்தனமாப் பேசிட்டேன்… வேணும்னா இந்தக் கன்னத்துலயும் ஒரு கடி கடிச்சுக்க…” என்றவன் அவள் முன்னில் சென்று தனது மறு கன்னத்தையும் காட்ட முறைத்தாள்.
“ஆமா, இவரு பெரிய ஏசுநாதர்… ஒரு கன்னத்தைக் கடிச்சா மறுகன்னத்தைக் காட்டுறதுக்கு…”
“ஏய், நான் சொன்னது தப்புதான்டி… அதுக்கு என்ன பண்ணனும்னு சொல்லு… பசியோட வந்தவன் கிட்ட இப்படி கோபப் படாத அம்மு…” பாவமாய் கெஞ்சியவனின் முகத்தில் தெரிந்த சோர்வு அவளை இறங்கி வரச் செய்தது.
“என்ன பனிஷ்மென்ட் ஓவி… இன்னைக்கு பட்டினி கிடக்க மட்டும் சொல்லிடாதே…” என்றான் அவன் சோகமாக.
“சேச்சே, அதெல்லாம் பண்ண மாட்டேன்… எனக்கு அர்ஜன்டா ஒரு ஹக், ஒரு கிஸ் வேணும்… தருவியா…” என்றதும் அவன் பசிக் கண்கள் ருசிக் கண்களாய் மாறி ஜொலித்தது.
புன்னகையுடன் தன் இரு கைகளையும் விரித்து அவளை நோக்கி வாவென்று அழைக்க தாயின் மடி கண்ட குழந்தை போல் வேகமாய் அவன் நெஞ்சில் தஞ்சம் கொண்டாள்.
தேவ் இதமாய் அணைத்து அவள் நெற்றியில் முத்தமிட நெகிழ்ந்து அவனை இறுக்கிக் கொண்டவளின் கண்கள் ஈரத்தில் பளபளத்தது. ஆயிரம் வார்த்தைகள் சொல்லாத சமாதானத்தை, மனதுக்குப் பிடித்தவனின் சிறு அணைப்பும், முத்தமும் தந்துவிடும் என்பதை அப்போது உணர்ந்தாள்.
தந்தையின் இழப்பில் வாடுபவளுக்கு தனது அருகாமையே மருந்து என்பது புரிய அவன் மனமும் கனிந்திருந்தது.
மெல்ல அவளை விடுவித்தவன், “இப்ப ஓகேவா… சாப்பிடப் போகலாமா…” என்று கேட்க, நாணத்தில் புன்னகைத்தவளின் கையைப் பற்றி கீழே அழைத்து வந்தான் தேவ். இருவரும் சாப்பிட்டு முடிக்க பிரம்மாவுக்கு நிறைய ஓவியங்களை முடிக்க வேண்டி இருந்தது. வழக்கம் போல் அவன் வரையத் தொடங்க பார்த்துக் கொண்டிருந்தவள் அங்கிருந்த கட்டிலில் உறங்கத் தொடங்கினாள்.
ஆருத்ரா ஊருக்கு சென்றதும் அழைத்து விசாரித்தார். ராகவை அடுத்த நாள் வருமாறு சொல்லி விட்டான் தேவ். மாலையில் அமிர்தா வீட்டுக்கு வந்துவிட அவளுடன் பேசிக் கொண்டிருந்ததில் நேரம் ஓடிவிட்டது.
“அண்ணி, நாளைக்கு எங்க வீட்டுக்கு வரீங்களா…” கிளம்பும்போது அமிர்தா கேட்க, ஓவியா பதிலுக்காய் தேவ் முகத்தைப் பார்த்தாள்.
“இல்ல, இப்ப எங்கயும் வேண்டாம் மா… கொஞ்ச நாள் போகட்டும், வந்துக்கலாம்…” தேவ் சொல்ல முகத்தை சுளித்தவள், “என்னண்ணா, நம்ம வீட்டுக்கு தானே… நான் அண்ணியைப் பார்த்துக்க மாட்டேனா…” சிணுங்கினாள்.
“நீ அண்ணியைப் பார்த்துக்குவ… ஆனா, உன் அண்ணியைப் பார்க்காம என்னால தான் இருக்க முடியாது…” என்றவன் ஓவியாவை நோக்கிக் கண்ணாடிக்க வெட்கத்தில் சிவந்தாள்.
“ஓ, விஷயம் அப்படிப் போகுதா… ஓகே ஓகே…” என்றவள்,
“ராகவ் நாளைக்கு எப்போ வருவார்ணா…” என்று கேட்க,
“ஹாஹா, ஏன்… மச்சானைப் பார்க்காம என் தங்கைக்கும் இருக்க முடியலியோ…” எனவும் சிரித்தாள்.
“ஹாஹா… என்ன பண்ணறதுண்ணா, கடவுள் நம்ம ரெண்டு பேரையும் ஒரே டிஸைன்ல படைச்சுட்டாரே…” சிரிப்புடனே அவர்களிடம் விடை பெற்று வீட்டுக்கு சென்றாள் அமிர்தா.
“சத்யா, ராஜனோட போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட் வந்திடுச்சா…” ஸ்டேஷனுக்குள் நுழைந்து கொண்டே இன்ஸ்பெக்டர் கேட்க, விறைப்பாய் ஒரு சல்யூட்டைக் கொடுத்த சத்யா, “எஸ் சார்…” என்று ஒரு கவரை எடுத்து அவரிடம் கொடுத்தான்.
“இவனைப் பத்தி டான்ஸ் ஸ்கூல் பக்கத்துல எல்லாம் விசாரிக்க சொன்னனே…”
“எஸ் சார், அங்க உள்ளவங்ககிட்ட எல்லாம் நல்லா தான் பழகிருக்கான்… அப்புறம் அவனோட கால் லிஸ்ட்ல தினமும் ராத்திரி பத்து மணிக்கு மேல ஒரு கால் வந்திருக்கு… அதை டிரேஸ் பண்ணதுல ஒரு ஆட்டோ டிரைவர் நம்பர்னு தெரிஞ்சுது சார்… அவன் கூட அதே ஏரியால தான் இருக்கான்…”
“ம்ம்… இன்னும் எந்த ரூட்டுல போறதுன்னு கிளியர் ஆக மாட்டேங்குது… கமிஷனருக்கு வேற அந்த பிரம்மாவோட பழக்கம் போல… எதாச்சும் விவரம் தெரிஞ்சுதான்னு காலைலயும் மாலைலையும் பிரஷர் மாத்திரை போடறாரோ இல்லையோ எனக்கு கால் பண்ணி பிரஷர் ஏத்திடறார்…” அவர் சொல்லிக் கொண்டிருக்கும்போதே கசங்கிய காக்கி சீருடையுடன் கண்ணில் மிரட்சியும் காலில் தயக்கமுமாய் ஸ்டேஷனுக்குள் நுழைந்தான் ஒருவன்.
“சார் எம்பேரு சீனு… ஆட்டோ டிரைவர்… எனக்கு போன் பண்ணி வர சொல்லிருந்தாங்க…” சொன்னவனை எக்ஸ்ரே கண்ணால் எலும்பு வரை உற்று நோக்கிவிட்டு எழுந்த இன்ஸ்பெக்டர் அவன் அருகில் வந்தார்.
“உன் பேரென்னன்னு சொன்ன…”
“சீ..சீனு சார்…” தடுமாற்றமாய் கூறினான்.
“செக்யூரிட்டி ராஜனை எத்தன நாளாத் தெரியும்…”
“அவன் டான்ஸ் ஸ்கூலுக்கு வேலைக்கு வந்ததுல இருந்து தான் தெரியும் சார்…”
“ம்ம்… எந்த மாதிரிப் பழக்கம்…”
“அ..அது வந்து, சும்மா பார்க்கும்போது பேசிப்போம் சார்..”
அவனை அசால்ட்டாய் ஒரு பார்வை பார்த்தவர், “ஆல்ரெடி பஞ்சத்துல அடிபட்ட போல இருக்க… உடம்புல இருக்கிற கொஞ்ச நஞ்ச ரத்தத்தையும் வத்திப் போக வச்சுடாம உண்மையை மட்டும் சொல்லு…” உறுமலாய் கூறினார்.
அவனது கண்ணில் பீதி தெரிய, “இ..இல்ல… சார்… என்னை ஒண்ணும் பண்ணிடாதீங்க, உண்மையை சொல்லிடறேன் சார்… டெய்லி சவாரி முடிஞ்சு வீட்டுக்குப் போகைல டான்ஸ் ஸ்கூல்ல உக்கார்ந்து ராஜனோட குவார்ட்டர் குடிச்சிட்டுப் போவேன் சார்…” கையைப் பிசைந்து கொண்டே சொன்னான்.
“ம்ம்… அப்புறம் எதுக்கு பொய் சொன்ன…”
“ப..பயத்துல பிரச்சனை வேணாம்னு சொல்லிட்டேன் சார்…”
“நீயும், ராஜனும் மட்டும் தானா இல்ல வேற யாராச்சும் வருவாங்களா…”
“நா…நாங்க மட்டும் தான் சார்…”
“ராஜன் ஆள் எப்படி, யாரோட எல்லாம் பழக்கம் இருக்கு…”
“அவன் பாக்கு, தண்ணி, பவுடர் எல்லாம் யூஸ் பண்ணுவான் சார்… என்னோட தண்ணி மட்டும் தான்… அவனுக்கு பஷீர்னு ஒரு சிநேகிதன் இருக்கான்னு சொல்லிருக்கான்…”
“பஷீர்… அவன் எங்க இருக்கான், என்ன பண்ணுறான்…”
“அவன் ஒரு இலக்ட்ரீஷியன் சார்… ஒரு தபா ராஜனைப் பார்க்க வந்தப்ப பார்த்திருக்கேன் சார்…”
“ம்ம்… பஷீரோட போன் நம்பர், அட்ரஸ் எதுவும் இருக்கா…”
“இல்ல சார்… ஆனா அவன் எல்லா வெள்ளிக் கிழமையும் மத்தியானம் நம்ம ஏரியால இருக்கிற மசூதிக்கு தொழுகைக்கு வருவான் சார்…” அவன் சொல்லுவதைக் கேட்டுக் கொண்டிருந்த இன்ஸ்பெக்டர், சத்யா இருவரின் முகத்திலும் ஒரு வெளிச்சப்புள்ளி தோன்றி மறைந்தது.