சாரல் மழையே


தன் பிள்ளைகளை எழுப்பிப் பாலைக் கொடுக்க வேண்டிய பொறுப்பைக் கீர்த்திக்கு கொடுத்துவிட்டு அருணா மாடி அறையைத் தயார் செய்யச் சென்றாள். அவள் சொன்னபடி பிள்ளைகளை எழுப்பிப் பாலைக் குடிக்க வைக்க, இருவரும் குடித்து முடித்து வெளியே சென்று விளையாட… தர்மாவும் கீர்த்தியும் திண்ணையில் உட்கார்ந்து அவர்களைப் பார்த்துக் கொண்டிருந்தனர். 

எட்டு மணி ஆனதுமே, ஜமுனா இரவு உணவு உண்ண அழைக்க… எல்லோரும் சேர்ந்தே உண்டனர். உணவு உண்டு ஹாலில் தர்மாவும் கீர்த்தியும் உட்கார்ந்து டிவி பார்க்க…. அறையில் அருணாவின் பிள்ளைகளை ஜமுனா கதை சொல்லி உறங்க வைக்க…. குட் நைட் என இருவரிடமும் பொதுவாகச் சொல்லிவிட்டு அருணாவும் அறைக்குள் சென்றுவிட்டாள். 

தர்மா சென்று வாயில் கதவை தாழிட்டு வந்தவன், கீர்த்தியிடம் வா போகலாம் என, 

“எனக்கு இவ்வளவு சீக்கிரம் தூக்கம் வராது.” என்றாள். 

வாயின் மீது விரலை வைத்து பேசாதே என்றவன், அவள் கைப் பிடித்து எழுப்பி, ஹாலில் விளக்கனைத்துவிட்டு அவளோடு மாடிக்குச் சென்றான். 

“மத்தியானம் வேற தூங்கி இருக்கேன். எனக்குத் தூக்கமே வராது.” எனப் புலம்பியபடி கீர்த்தி வர… தர்மா அவளை அறைக்கு அழைத்துச் செல்லவில்லை. மொட்டை மாடிக்குதான் அழைத்துச் சென்றான். 

மாடியில் காற்று சிலு சிலுவென்று அடிக்க… நிலவு வெளிச்சமே போதுமானதாக இருக்க… இருவரும் சென்று சுவர் ஓரமாக நின்றனர். 

அங்கிருந்து இருவரும் தெருவைப் பார்க்க…. ஆள் நடமாட்டம் அவ்வளவாக இல்லை. சாலையே வெறிச்சோடித்தான் இருந்தது. 

“இங்க எல்லாம் சீக்கிரம் தூங்கிடுறாங்க.” என்றால் கீர்த்தி. 

“இங்க விவசாயம் தான் தொழில். விடியற்காலையில எழுந்து தோட்டம் தொரவுன்னு போயிடுவாங்க. தோட்டத்துக்கு மருந்தடிக்கிறது, உரம் வைக்கிறது, தண்ணி பாயச்சுறது, மாடு, கண்ணு பார்க்கிறதுன்னு எல்லாமே உடலுழைப்புச் சம்பந்தப்பட்ட வேலை. காலையில இருந்து சாயங்காலம் வரை வேலை இருந்திட்டே இருக்கும். ரொம்பக் களைச்சு போயிருப்பாங்க. அதோட நைட் சீக்கிரம் படுத்தாதான் அடுத்த நாள் காலையில எழுந்து வேலை பார்க்க முடியும். அதுதான் சீக்கிரமே தூங்க போயிடுறாங்க.” என்றான். 

ஒ… இவ்வளவு இருக்கா என்பது போலக் கீர்த்தி வியந்து பார்க்க…. தர்மா அருகில் நின்ற மனைவியை ஆராய்ந்தான். 

மயில் பச்சையில் அழகான வேலைப்பாடு செய்யப்பட்ட முழுநீள மேலாடையும், சந்தன நிறத்தில் துப்பட்டாவும் அணிந்து இருந்தாள். அவள் பேன்ட் போட்டிருக்கிறாளா இல்லையா என்றே தெரியவில்லை. 

கூந்தலில் அளவாக மல்லிகையைச் சூடியிருந்தவள், நெற்றி வகுட்டில் குங்குமமும் வைத்திருந்தாள். அவளைப் பார்க்கும் போதே மனதிற்குள் சாரல் அடிக்க…. அவள் கைபிடித்து அருகில் இழுத்தவன், அவள் தோளில் கைபோட்டுக் கொண்டான். 

“நம்ம கல்யாணம் உனக்குப் பிடிச்சிருந்ததா… உன் குடும்பத்தைக் கண்டிப்பா மிஸ் பண்ணி இருப்ப… அதைத் தவிர வேற எப்படி இருந்தது சொல்லு.” என்றான். 

“நான் ரொம்பச் சிம்பிள்லா இருக்கும்னு நினைச்சேன். ஆனா எனக்குக் கிராண்டா தான் இருந்த மாதிரி இருந்தது. கோவில அவ்வளவு அழகா அலங்காரம் பண்ணி இருந்தாங்க. பிறகு இங்க மண்டபத்திலேயும் நிறையப் பேர் வந்து சாப்பிட்டாங்க. ஆமாம் அவங்களுக்கு எல்லாம் எப்படித் தெரியும்.” எனக் கீர்த்தி வியக்க… 

“உள்ளூர் ஆளுங்க மூலமா, பொது விருந்துன்னு நோட்டீஸ் அடிச்சு ஊர் முழுக்கக் கொடுத்திருந்தோம்.” 

“எப்படி உங்களுக்கு இதெல்லாம் தோணுது.” 

“நம்ம கல்யாணம் ஒரு சாதாரணக் கல்யாணமா போயிடக் கூடாது. அதனால யாருக்காவது நன்மை செய்ய முடியுமான்னு யோசிச்சேன்.” 

“எல்லோரும் தான் கல்யாணத்துக்கு விருந்து சாப்பாடு போடுறாங்க. ஆனா அதை யார் சாப்பிடுறாங்கிறது தான் முக்கியம். இன்னைக்கு நம்மால சில பேர் வயிறார சாப்பிட்டு இருக்காங்க. ஆயிரம் பத்திரிகை அடிச்சு, பெரிய மண்டபத்தில நம்ம கல்யாணம் நடந்திருந்தா கூட அது பத்துல பதினொன்னா போயிருக்கும்.” 

“யூ ஆர் டூ குட்.” எனக் கீர்த்தித் தர்மாவைப் பாராட்ட… 

“நான் மட்டும் தனியா செய்யலை… பணம் காசு அதிகமா சம்பாதிச்சேனா தெரியாது. ஆனா நாலு நல்ல மனுஷங்களைச் சம்பாதிச்சிருக்கேன். இன்னைக்கு என் பிரண்ட்ஸ் கூட நின்னு அவ்வளவு சப்போர்ட் பண்ணாங்க. அதே போல இந்த ஊர் ஆளுங்களும் உதவி பண்ணாங்க. இல்லைனா தனியா என்னால இதைச் செஞ்சிருக்க முடியாது.” 

அவன் சொல்வது உண்மைதான். கீர்த்திக்கும் அது புரிந்தது. 

“சரி எனக்கு எப்படி இருந்தது நீ கேட்கலையே?” எனத் தர்மா கீர்த்தியை பார்த்து புன்னகைக்க… 

“சொல்லுங்க.” என்றாள். 

“செமையா இருந்த கீர்த்தி. அதுவும் கல்யாணப் புடவையில நீ நடந்து வந்த போது, எனக்கு உன்கிட்ட இருந்து பார்வையைத் திருப்பவே முடியலை தெரியுமா?” என்றவன், தோளில் இருந்த கையை அவள் இடைக்கு மாற்றி அவளை இன்னும் தன் அருகில் இழுத்தான். 

“உன் மனசுக்குள்ள எவ்வளவு வருத்தம் இருந்தாலும், நீ அதை வெளிய காண்பிக்கவே இல்லை. இந்த நாள் நம்மோட நாள். அந்த நாளோட மகிழ்ச்சி குறையாம நீ பார்த்துகிட்ட.” என்றபோது கணவனின் புரிதலில் கீர்த்தி வியக்கவே செய்தாள். 
அவள் மட்டும் தன் பெற்றோரை நினைத்து முகத்தை தூக்கி வைத்திருந்தால்… அந்த நாளின் இனிமையே குறைந்திருக்கும் தானே…. எல்லோருக்குமே சங்கடமாக இருந்திருக்கும். 

இடையில் அழுந்திய அவன் கையை அவள் எடுத்துவிட, தர்மா ஏன் என்பது போல அவளைப் பார்க்க… 

கீர்த்தி இன்றுதான் இவ்வளவு நேரம் புடவை கட்டி இருக்கிறாள். புதுப் பாவாடையும், ஜரிகை புடவையும் அவள் இடையில் அழுத்தமாகத் தடம் பதித்திருக்க… தர்மாவின் கை அழுத்தம் தந்த வலியில்தான் கையை எடுத்துவிட்டாள். 

தர்மா அது புரியாமல் விலகி நிற்க… மறுபக்கம் சென்று அவன் கைகளுக்குள் நுழைந்தவள், அவன் இடது கையை எடுத்து தன் இடையைச் சுற்றி படரவிட்டாள். 

“எங்கையும் கீழே விழுந்தியா?” எனத் தர்மா பதட்டமாக…. கீர்த்திக் காரணத்தைச் சொல்ல…. அவ்வளவு இறுக்கமாவா பாவடையைக் கட்டுவ…” என்றான். 

“பாவடையை இறுக்கமா கட்டலைனா புடவை நிற்காதே….” எனக் கீர்த்திச் சொன்னதும், தர்மாவுக்கு அடக்க முடியாத சிரிப்பு. அவளை அந்தக் கோலத்தில் கற்பனை செய்து பார்த்தானோ என்னவோ. 

மனைவியின் நெருக்கம் மயக்கத்தைக் கொடுக்க… கீழே போகலாமா எனத் தர்மா கேட்க, கீர்த்திச் சரியென்றாள். 

முதல் தளத்தில் இருந்த அறைக்கு வந்தனர். அருணா அந்த அறையைச் சுத்தம் செய்து, கட்டிலில் புதுப் போர்வை விரித்திருந்தவள், தம்பியின் விருப்பம் தெரிந்தோ என்னவோ தட்டில் பழங்கள் மட்டும் நிறைய வைத்திருந்தாள். கூடவே மண் பானையில் தண்ணீரும் இருந்தது. இருவருமே இரவில் பால் குடிக்க மாட்டார்கள் என அவளுக்குத் தெரியும். 

சீக்கிரமே உண்டது கீர்த்திக்கு பசித்தது போல… தட்டில் இருந்த திராட்சை பழங்களை எடுத்துக் கொண்டு கட்டிலில் உட்கார்ந்து உண்டவள், தர்மாவுக்கு வேண்டுமா எனக் கேட்க, நீ சாப்பிடு என்றான். 

அவன் வேறு ஒரு எதிர்பார்ப்பில் இருந்தான். ஆனால் இன்றே கீர்த்தி ஒத்துக்கொள்வாளா என்றும் தெரியவில்லை. அவன் கவலை அவனுக்கு. 

சிறிது நேரம் மனைவியைப் பார்த்துக் கொண்டு நின்றவன், அந்த அறையின் ஜன்னலை சாத்த…. ஏன் என்பது போலக் கீர்த்திப் பார்க்க… அவளைக் கண்டுகொள்ளாமல் சாற்றிவிட்டு கட்டிலுக்கு வந்தவன், அவள் முன்பிருந்த தட்டை எடுத்து மேஜையில் வைத்து விட்டு, அவளைக் கைப்பிடித்து எழுப்ப… எதற்கு எனப் புரியாமல் கீர்த்தி எழுந்து நிற்க, தர்மா அவளை இறுக அனைத்திருந்தான்.

அவள் நெற்றி கன்னம் என அழுத்தி முத்தமிட்டவன், அவள் இதழில் அதிக நேரம் எடுத்துக்கொள்ள…. அவள் உண்ட திரட்சையின் இனிப்பு அவன் இதழுக்கு இடம் மாறியது. கீர்த்திக்கும் கிறக்கம் தான். ஆனால் அடுத்து அவன் இதழை அவள் கழுத்துக்கு இடம்மாற்றம் செய்ய…. அவளுக்குப் பயம் வந்துவிட்டது. அவள் பதட்டத்தை உணர்ந்து தர்மாவும் விலகி நின்றான். 


“என்ன கீர்த்தி?” என அவன் கேட்க, 

“இன்னைக்கே வா…. இன்னொரு நாள்.” என இப்போதைக்குத் தள்ளிப் போடும் எண்ணத்தில் கீர்த்திச் சொல்ல… சரியென்று அவளைப் படுக்கச் சொன்னவன், விளக்கணைத்து அவள் அருகில் படுத்துக் கொண்டான். 

கீர்த்தி “கோபமா?” எனக் கேட்க, 

“உன்னோட விருப்பம் தான் கீர்த்தி. ஆனா ஒன்னு புரிஞ்சிக்கோ. நாளைக்கா இருந்தாலும் சரி, இல்லை இன்னும் பத்து நாள் கழிச்சு இருந்தாலும் சரி, ஒரே மாதிரிதான். அப்போ மட்டும் எதுவும் மாறிடாது. நீ இதைக் கடந்து தான் ஆகணும்.” என்றான் தெளிவாக. 

அவன் சொல்ல வருவது கீர்த்திக்குப் புரியாமல் இல்லை. அவள் அவன் அருகில் நெருங்கிப்படுக்க, தன் தோளில் அவளுக்கு இடம் கொடுத்தான். விடிவிளக்கின் ஒளியில் இருவரும் அமைதியாகப் படுத்திருந்தனர். 

கணவனின் விருப்பம் தெரிந்த பிறகு கீர்த்திக்கும் அவனை மறுக்க மனமில்லை. அவன் பக்கம் திரும்பிப் படுத்தவள், அவனைத் தன் பக்கம் திருப்ப… அவள் பக்கம் திரும்பி படுத்தவன், “இவ்வளவு கிட்ட படுத்திட்டு. என்னால ஒன்னும் செய்யாம இருக்க முடியாது கீர்த்தி.” என, வார்த்தையால் பதில் சொல்லாமல் அவன் இதழில் அவள் முத்தமிட…. அதன் பிறகு விளக்கம் வேண்டுமா என்ன? 

காதல் மழையில் இருவரும் சொட்ட சொட்ட நனைந்தனர். தன் விருப்பம் நிறைவேறினால் போதும் எனத் தர்மா இருக்கவில்லை. அவனது ஒவ்வொரு செயலும் மனைவியைச் சந்தோஷப்படுத்தவே முனைந்தது. இப்படி எத்தனை ஆண்கள் நினைப்பார்கள் என்பது கேள்விக்குறியே?
உறங்கும் முன் மனைவியின் இடையில் இருந்த காயத்திற்கு அவன்  எண்ணெய் வைக்கவும் மறக்கவில்லை. 

காலையில் முதலில் கீர்த்திக்கு விழிப்பு வர…. தன் அருகில் உறங்கும் கணவனையே கண்ணெடுக்காமல் பார்த்திருந்தாள். 

இத்தனை காதலை அவனிடம் எதிர்பார்க்கவில்லை. முன்பே அவளிடம் காதல் இருந்தும், ஒருமுறை கூட அதை அவன் தெரியவிட்டது இல்லை. ஆனால் நேற்று இரவு ஒட்டுமொத்த காதலையும் கொட்டி இருந்தான். இப்படியொரு கட்டுப்பாடான மனிதனா என வியக்காமல் இருக்க முடியவில்லை. 

சத்தம் வராமல் குளியல் அறை சென்று வந்தவள், மீண்டும் கணவனின் அருகில் அவனை ஓட்டிப் படுத்துக்கொள்ள…. உறக்கத்திலேயே மனைவியின் அருகாமையை உணர்ந்தவன், கண்ணைத் திறக்காமலே அவளைத் தன் அருகில் இழுத்துக் கொண்டான். கீர்த்தியும் அவன் அணைப்பில் சுகம் கண்டாள். 

கடந்து சென்ற இன்பமான இரவின் நினைவில் கீர்த்தி இருக்க… தர்மா அவளிடம் இருந்து விலகி எழவும், அவள் முகம் ஏமாற்றத்தைக் காட்ட… தர்மாவின் பார்வைக்கும் அது தப்பவில்லை. ஓய்வறைக்குச் சென்றுவிட்டு வந்தவன், மனைவியின் எதிர்பார்ப்பை பொய்யாக்காமல், அவள் விரும்பிதை கொடுக்க…. கீர்த்திக்கு எங்கும் இன்ப மயமே…. 

மனைவியை விட்டு விலக மனமில்லாமல், அவளை அனைத்து படுத்திருந்தவன், “கீர்த்தி என்கிட்ட என்னானாலும் நீ கேட்கலாம். நீ மட்டும் தான் எதையும் என்கிட்டே கேட்க முடியும். எப்பவும் எதுக்கும் தயங்காதே.” என்றான். 

அங்கிருந்த மூன்று நாட்கள் மட்டும் அல்ல… அதன் பிறகு வந்த நாட்களிலும் அவனின் அன்பும் அக்கறையும் அதிகரிக்கத்தான் செய்ததே தவிர…. சற்றும் குறையவில்லை. அவன் மட்டும் அல்ல அவன் குடும்பத்தினரும் அவளிடம் அன்பாகவே இருந்தனர். 

வீட்டு நிர்வாகம் நாயகி மற்றும் ஜமுனாவிடம் இருந்தாலும், அந்த வீட்டு ஆட்களின் பொறுப்புக் கீர்த்தியிடம் தான். அவர்களுக்குத் தேவையானதை அவள் பார்த்துக்கொள்ள… தர்மா வீட்டு டென்ஷன் இல்லாமல் தனது தொழிலில் இன்னும் கவனம் செலுத்தி மேலும் முன்னேறினான். அதே நேரம் மனைவி மீதான காதலும் குறையாமல் பார்த்துக் கொண்டான். 

இரவு எட்டு மணி போல அலுவலகத்தில் இருந்து வந்தால்… இரவு உணவு முடித்து, வீட்டினருடன் சிறிது நேரம் செலவிட்டு ஒன்பது மணிக்கெலாம் அவர்கள் அறைக்கு வந்துவிடுவார்கள். மீண்டும் அடுத்த நாள் காலை ஒன்பது மணிக்குத்தான் கீழே இறங்குவார்கள். 

இருவரும் நிறையப் பேசுவார்கள். புத்தகம் படிப்பார்கள். காலையில் தர்மா யோகா செய்வான். அப்போது கீர்த்தி அவனுடன் தான் இருப்பாள். அவள் மாலையில் வீட்டை சுற்றியே நடப்பாள். அவளுக்கு அதுதான் பிடிக்கும். 

அவர்களின் முதல் வருட திருமண நாளுக்கு முன்பே, அவர்கள் செல்ல மகள் அபிநயா பிறந்திருந்தாள். கீர்த்தி ஆடம்பர வாழ்க்கையை விரும்பவில்லை அமைதியான வாழ்க்கையைத்தான் விரும்பினாள். அதைத் தன் கணவனுக்கும் கொடுத்தாள். மனநிறைவான வாழ்க்கை அவர்களுடையது. 

தர்மா மனைவியை நினைத்தபடி வீடு வந்து சேர….  அங்கே அவனுக்காக மகிழ்ச்சியான செய்தியுடன் கீர்த்திக் காத்திருந்தாள்.