“உங்க அண்ணனை அப்படியெல்லாம் லேசா எடை போடாத. பெரிய இடத்துப் பெண்ணைப் பிடிச்சிருக்கான். என்னைக்கு இருந்தாலும் அந்தப் பெண்ணுக்கு அவங்க பிறந்த வீட்டு சொத்து வரும். அதெல்லாம் யோசிக்காமலா இருப்பான்.” 

“ஏன் ஒரு வசதி இல்லாத பெண்ணைக் காதலிச்சிருக்க வேண்டியது தான… சும்மா அவன் நல்லவன் வேஷம் போடுறான். நீங்களும் நம்பிட்டு.” எனச் சந்துரு சகுனி வேலைப் பார்க்க… மற்றவர்களுக்கும் அப்படித்தானோ எனத் தோன்றியது. 

விஷால் அறைக்கு உறங்க செல்ல… அங்கே தரையில் போர்வை கூட விரிக்காமல் வெறும் தலையணை மட்டும் வைத்துத் தர்மா படுத்து நன்றாக உறங்கி இருந்தான். 

உண்மையாகவே இவர் நல்லவரா இல்லை நல்லவர் போல வேஷம் போடுகிறாரா என நினைத்தபடி விஷால் கட்டிலில் படுத்துக் கொண்டான். 

அதிகாலையில் தர்மா எழுந்து குளித்துவிட்டு வந்து விஷாலை எழுப்பினான். கீர்த்தி இரவு நண்பர்கள் தங்கியிருந்த வீட்டிலேயே இருந்து கொண்டாள். 

காலையில் எழுந்து தயாராகிக் கீர்த்தி மண்டபத்திற்கு வந்திருந்தாள். மணப்பெண் அறையில் அவள் இருக்க… பட்டு வேட்டி சட்டை அணிந்து தர்மா மண்டபத்தின் வெளியே நின்று நண்பர்களுடன் பேசிக் கொண்டிருக்க…. அப்போது கார் வந்து நிற்கவும், யாரென்று பார்த்தவன், கீர்த்தியின் தாய்மாமா குடும்பத்துடன் இறங்குவதைப் பார்த்தும் அங்கே விரைந்தான். 

தாய்மாமா அவரின் மனைவி மகன் மற்றும் அவரின் அம்மா எனக் குடும்பமாக வந்திருந்தனர். அவர்களை வரவேற்று உள்ளே அழைத்து வந்தான்.

அவர்களைத் தங்கள் வீட்டினருக்கு அறிமுகம் செய்தவன், அவர்களுக்குக் குடிக்கப் பழசாறு கொடுத்து, பிறகு கீர்த்தி இருந்த அறைக்கு அவனே அழைத்துச் சென்றான். 

அவர்கள் வந்தது கீர்த்திக்கு இன்னும் நம்பவே முடியவில்லை. அவள் பாட்டியைப் பார்த்ததும், ஓடிச்சென்று கட்டிக் கொண்டாள். அவளுக்கு அவள் பெற்றோரின் நினைவு வர…. அவள் கண்கள் கலங்க துவங்கியது. 

அதைக் கவனித்த வாசன், “எல்லாப் பெத்தவங்களும் தன்னோட பிள்ளைகளுக்கு அவங்க பார்த்துக் கல்யாணம் செய்யணும்னு தான் நினைப்பாங்க. ஆனா கல்யாணம் பண்ணிக்கப் போறவங்களோட விருப்பமும் முக்கியம். நான் ஆரம்பத்திலேயே உன் அப்பா அம்மாகிட்ட சொன்னேன். கீர்த்திகிட்ட கேட்டுட்டு முடிவு பண்ணுங்கன்னு. அவங்க எதோ நம்பிக்கையில அப்படிப் பண்ணிட்டாங்க.” 

“உன்னையும் தவறு சொல்ல முடியாது. இன்னைக்குக் காலம் அப்படித்தான் இருக்கு. நாளைக்கு என் பையனும் அவனே அவன் வருங்கால மனைவியைத் தேர்வு செய்யலாம். அப்படிச் செஞ்சா, நாங்க ஏத்துக்கத்தான் வேணும்.” 

“உன் அம்மாகிட்ட பேச நினைச்சேன். ஆனா முடியலை. என்ன காரணமோ உங்க அம்மா எங்ககிட்டயும் பேசுறது இல்லை. வந்த பிறகு சமாதானம் பண்ணிக்கலாம்னு நினைச்சு, நாங்க கிளம்பி வந்துட்டோம்.” 

“யாரும் இல்லாத மாதிரி உன்னை எப்படி விட முடியும்?” என வாசன் சொன்ன போது, கேட்டுக் கொண்டிருந்த தர்மா கீர்த்தி இருவருக்கும் அவ்வளவு நெகிழ்ச்சியாக இருந்தது. கீர்த்தியை விட்டுக் கொடுக்காமல் அவர்கள் வந்தது பெரிய விஷயம் தான். 

தர்மா அவர்களை உட்கார சொல்லிவிட்டு வெளியே செல்ல… “நாங்க வந்ததுக்கு இன்னொரு காரணம் உன் தர்மாவும் தான். அன்னைக்குக் கொஞ்ச நேரம் இருந்தாலும், அவர் பேசினது எனக்கு ரொம்பப் பிடிச்சது.” என்றார் வாசன். கீர்த்திக்கு அதில் ஒன்றும் ஆச்சர்யமில்லை. பழகி பார்ப்பவர்களுக்கு தர்மாவின் குணம் புரியும். 

எல்லோரும் கிளம்பி அருகில் இருந்த பெருமாள் கோவிலுக்குச் செல்ல.. அங்கே திருமணதிற்கு என்று தனியாகப் பெரிய மண்டபம் இருந்தது. அங்கே மனமேடை அமைத்திருந்தனர். அந்த இடம் மட்டும் அல்லாமல் கோவில் முழுவதுமே வண்ண வண்ண மலர்களால் அலங்காரம் செய்திருந்தனர். 

தர்மா வழி உறவினர்கள், நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர். அதே போல விஷாலின் நண்பர்கள், கீர்த்தியின் நண்பர்கள் என அதுவே ஒரு பெரிய கூட்டம் இருந்தது. 

மணமக்கள் இருவரும் மணமேடைக்கு வர… அங்கே அக்கினி வார்த்து, மந்திரங்கள் சொல்லப்பட்டு, நாதஸ்வரம் மற்றும் மேளம் ஒலிக்க, தர்மா கீர்த்தியின் கழுத்தில் திருமாங்கல்யத்தை அணிவித்துத் தனது மனைவி ஆக்கிக் கொண்டான். 

வாசனும் அவர் மனைவியும் பெற்றோர் ஸ்தானத்தில் இருந்து கீர்த்தியை தாரைவார்த்துக் கொடுத்தனர். யாரை வைத்துச் செய்வது என்ற நாயகியின் கவலையும் தீர்ந்தது. 

தர்மாவும் கீர்த்தியும் தம்பதிகளாகச் சென்று சாமி தரிசனம் செய்துவிட்டு, மண்டபத்திற்கு வர… உறவினர்கள் நண்பர்களுடன் புகைப்படம் எடுப்பதில் நேரம் செல்ல… கீர்த்தியின் தாய்மாமா குடும்பமும் மேடைக்கு வந்தனர். 

வாசன் கீர்த்திக்கு நகைகளைப் பரிசளிக்க…. “நீங்க வந்ததே எங்களுக்குச் சந்தோஷம். இதெல்லாம் நாங்க கண்டிப்பா எதிர்ப்பார்க்கலை.” என்றான் தர்மா. 

“எங்களுக்குக் கீர்த்திக்கு செய்யணும்னு ஆசை இருக்கும் தானே… அதோட அவ பாட்டியோட விருப்பமும்.” என வாசன் சொல்ல… 

தங்களை மதித்து திருமணத்திற்கு வந்தவர்களின் மனம் நோக வைக்க வேண்டாம் என தர்மா மௌனம் காக்க, கீர்த்தியும் அவர்களை வருத்தம்கொள்ள வைக்க வேண்டாம் என்ற எண்ணத்தில் வாங்கிக் கொண்டாள். 

மேடையின் கீழே இருந்து பார்த்த சந்துரு, “சொன்னேன் இல்ல… பார்த்தியா எப்படி வசூல் பண்றான். எங்கையோ அவனுக்குப் பெரிய மச்சம் இருக்கு.” எனச் சொல்ல… அதை அருணா கேட்டுவிட்டாள். 

“அப்பா, அம்மா, வசதியான வாழ்க்கை, பெரிய இடத்து மாப்பிள்ளை… இதை எல்லாம் விட்டு, தர்மாதான் முக்கியம்னு ஒரு பொண்ணு வந்திருக்கா, அது உங்க கண்ணுக்கு தெரியலை…. இதெல்லாம் மட்டும் தெரியும்.” 

“உங்களை எல்லாம் என்ன சொல்றது?” எனத் தலையில் அடித்துக் கொண்டு அருணா செல்ல… சந்துரு அப்படியொரு சம்பவமே நடக்காதது போல உட்கார்ந்திருக்க…. 

“அக்காகிட்ட அடிக்கடி வாங்கி மச்சானுக்குப் பழகிடுச்சு போல…” என விஷால் கேலி செய்ய…. சந்துரு காதில் விழுந்தது போலவே காட்டிக்கொள்ளவில்லை. 

உள்ளே மட்டும் அல்ல வெளியேயும் ஏழை, எளியோர் உண்ண வசதியாகப் பக்கத்து காலி இடத்தில் பந்தல் அமைத்து விருந்து பரிமாறினர். நிறையப் பேர் வந்து உண்டு வீட்டிற்கும் எடுத்துக் கொண்டும் சென்றனர். யார் வந்தாலும் இல்லையென்று சொல்லாமல் உணவளிக்க வேண்டும் எனத் தர்மா சொல்லியிருக்க… அதன்படியே உணவு வழங்கப்பட்டது.” 

தர்மாவின் நண்பர்கள் அங்கே இருந்து பார்த்துக் கொண்டனர். தர்மா இப்படியொரு ஏற்பாடு செய்தது, குடும்பத்தினருக்கே அப்போதுதான் தெரியும். 

“நேத்து அவர் மண்டபத்துக்கு வந்து இந்த வேலைதான் பார்த்தார்.” என்றான் விஷால். அவன் நேற்று தர்மாவுடன் தானே இருந்தான். 

அக்கம்பக்கம் கிராமத்தில் இருந்து எல்லாம் தெரிந்து வர… ஒருகட்டத்தில் தர்மாவுமே வெளியே பரிமாறச் சென்றுவிட்டான். திருமணமாகி சிறிது நேரம் தான் ஆகியிருந்தது. கணவன் அருகில் இருக்க வேண்டும் என்று கீர்த்தியும் நினைக்கவில்லை. அவள் கீழே உறவினர்களுடன் மகிழ்ச்சியாகப் பேசிக் கொண்டு இருந்தாள். அவன் இப்படித்தான் என அவளுக்குத்தான் தெரியுமே. 

ஒரு சின்னப் பெண் எட்டு ஒன்பது வயது இருக்கும், உணவு எடுத்து செல்ல பாத்திரம் எடுத்து வருவதாகக் கூறி வீட்டிற்குச் சென்றவள், வெறும் இரண்டு பாத்திரங்கள் மட்டும் கொண்டு வர… 

“இது பத்தாதே பாப்பா இன்னும் கொண்டு வா…” எனத் தர்மா சொல்ல… 

“இதுதான் எங்க வீட்ல இருக்கு.” என்றபோது தர்மாவுக்கும் சரி, அங்கிருந்த மற்றவர்களுக்கும் சரி, கண்கள் கலங்கியது என்னவோ உண்மை. 

சாதம், பொரியல் எல்லாம் இலையில் வைத்துத் தனித்தனியாகக் கட்டியவர்கள், சாம்பார், பாயசம் மட்டும் பாத்திரத்தில் விட்டு, “வா நானே உன்னை விட்டுட்டு வரேன்.” எனத் தர்மாவே கிளம்ப, அவனைத் தடுத்த விஷுனு அந்தப் பெண்ணுடன் சென்றான். அந்தப் பெண்ணை வீட்டில் விட்டு, அவர்களிடம் பணமும் கொடுத்துவிட்டு வந்தான். 

காலை திருமணம் முடிந்ததுமே சிலர் கிளம்பியிருக்க, மீதம் இருந்தவர்கள் வீட்டிற்குக் கிளம்ப, கீர்த்தியும் தர்மாவை பார்க்க வெளியே வந்தாள். அங்கே சில பேர் ஓரமாக நின்றிருந்தனர். 

அவள் வருவதற்காகவே காத்திருந்தனர் போல…. “நல்ல மகராசனை கல்யாணம் பண்ணியிருக்க, நல்லா இருக்கணும். இந்த மாதிரி சாப்பாடெல்லாம் நாங்க சாப்பிட்டதே இல்லை. எங்களையும் மதிச்சு பந்தியில உட்கார வச்சு சாப்பாடு போட்டீங்க. நீங்க நல்லாயிருக்கனும்.” என வாழ்த்தினர். 

“ரொம்பத் தேங்க்ஸ். நீங்க எல்லாம் வந்து சாப்பிட்டது எங்களுக்கும் சந்தோஷம்.” என்றால் கீர்த்தி. இதெல்லாம் பெரிய விஷயமே இல்லையென்பது போல… 

“உன் புருஷன் இங்க எல்லாம் முடிச்சிட்டுதான் வருவான் போல… நீ அவனோட சேர்ந்துதான் வீட்டுக்கு வரணும். நாங்க முன்னாடி போறோம்.” என்ற நாயகி, கீர்த்தியின் மாமா வீட்டினரை தங்களுடன் அழைத்துக் கொண்டு வீட்டிற்குச் சென்றார். 

எல்லோரும் உணவருந்திய பின்னர்தான், தர்மாவும் அவன் நண்பர்களும் உணவருந்தினர். உள்ளே மண்டபத்தில் உண்ணவில்லை. வெளியே பந்தியில்தான் நண்பர்கள் ஐவரும் உண்டனர். கீர்த்திப் பசிக்கிறது என முன்பே உண்டிருந்தாள்.
“நீயும் என்னோட சாப்பிடு.” எனத் தர்மா அழைக்க… சரியெனக் கீர்த்தித் தனக்குப் பாயசம் மட்டும் கொடுக்கும்படி கேட்டு வாங்கி உண்டாள். 

எளிமையாகத்தான் திருமணம் நடந்தது. ஆனால் இங்கே தான் அதிகபடியான பேர் உணவருந்தினர். அதுவும் அந்த உணவு தேவைப்பட்டவர்களுக்குக் கிடைத்தது. 

திருமணங்கள் எப்படி வேண்டுமானாலும் நடக்கலாம். சில திருமணங்கள் இப்படியும் நடக்கும்.