சாரல் மழையே

அத்தியாயம் 9

திருமண வேலைகள் வேகமெடுக்க… விஷாலும் ஜமுனாவும் சென்னையில் இருக்கும் நெருங்கிய உறவினர்களுக்குப் பத்திரிகை வைத்துக் கொண்டிருந்தனர்.

அன்று தர்மா இரவு உணவு உண்ணும் போது, ஜமுனா அவர்கள் பத்திரிக்கை வைக்கச் சென்ற கதையைச் சொன்னார்.

“ஒவ்வொரு வீட்லயும் போய் ரெண்டு நிமிஷம் கூட இருக்க விட மாட்டேங்கிறான். போனதும் பத்திரிக்கையை எடுத்து நீட்டி, அவங்க வாங்கினதும் என் கையைப் பிடிச்சு இழுத்திட்டு வந்திடுறான்.” என்றார். கேட்ட தர்மாவுக்குச் சிரிப்பு தான்.

“போஸ்ட்மேன் பார்க்கிற வேலையை ரெண்டு பேரும் பார்க்கிறீங்கன்னு சொல்லுங்க”
“ஆனா ஒன்னு, நேரத்துக்குக் குடிக்கச் சாப்பிட எதாவது வாங்கிக் கொடுத்திடுவான். அதெல்லாம் அவன் தங்கம் தான்.”

“அவன்கிட்ட நிறைய நல்ல குணம் இருக்கு மா. இன்னும் கொஞ்சம் பொறுப்ப இருந்தா போதும்.”

“கொஞ்ச நாள் போனா பொறுப்பு தானா வந்திடும்.” என ஜமுனா விஷாலுக்கு வக்காலத்து வாங்க…

“ஆடி போய் ஆவணி வந்தா… உங்க மகன் டாப்பா வந்திடுவான் அப்படித்தானே?” எனத் தர்மா கேலி செய்ய…. ஜமுனாவும், நாயகியும் சிரித்தனர்.

வேலையின் காரணமாகத் தர்மா இரண்டு நாட்களாகக் கீர்த்தியுடன் பேசி இருக்கவில்லை. அதனால் அன்று நேரமே அவன் அழைக்க… அப்போது அவளே அவள் பெற்றோர் வெளிநாடு சென்றதை பற்றிச் சொன்னாள். பிறகுதான் தர்மா அவர்கள் வீட்டிற்குச் சென்றதைச் சொன்னான்.

“உன்னை எதுவும் கோபமா பேசினாங்களா? நீ எதுவும் சண்டை போட்டியா?” என அவன் கவலையாகக் கேட்க,

“பேசினாங்கதான். ஆனா நான் எதுவும் சண்டை போடலை… சமாதானமா தான் பேசி வச்சேன். இனி தொந்தரவு பண்ணலைன்னு சொல்லிட்டேன்.” என மேலோட்டமாகத்தான் சொன்னாள்.

“அவங்களுக்கு நம்மைப் பேச உரிமை இருக்கு கீர்த்தி. உன் அம்மாதானே பேசினாங்க. பரவாயில்லை, ஒருநாள் அவங்க நம்மைப் புரிஞ்சிப்பாங்க.”

“ம்ம்…”

“நாளைக்கு மதியம் நான் உன்னை அங்க இருந்து கூடிட்டு வந்து ஏர்போர்ட்ல விடுறேன். காலையிலேயே உன் லக்கேஜ எடுக்கக் கார் அனுப்புறன்.”

“கையில ஒரு சின்னப் பேக் மட்டும் வச்சுக்கோ… தாத்தாவுக்கு ரொம்ப நேரம் உட்காரவோ நிற்கவோ முடியாது. அதனால லக்ககேஜ் எல்லாம் கார்ல போகட்டும். மதுரையில ஏற்போட்ல இறங்கினதும், உடனே நீங்க வீட்டுக்கு போயிடலாம்.”

“சரி….”

தர்மா சொன்னது போல மறுநாள் மதியம் கீர்த்தியை அழைக்க வந்துவிட்டான். அவன் வருவது தெரிந்து ராஜேஷும் வீட்டில் இருக்க… அவர்களுடனே மதிய உணவை அருந்தி விட்டு இருவரும் காரில் கிளம்பினர்.

“தாத்தாவுக்கு ஒத்தாசையா விஷால் உங்களோட வரான். அங்க போய்த் தேவையானது ஷாப்பிங் பண்ணலாம்னு பாட்டி சொன்னாங்க. அதோட உனக்கு என்ன தேவையோ வாங்கிக்கோ. முடிஞ்சா எனக்கும் நீயே வாங்கிடு கீர்த்தி. எனக்கு ஷாப்பிங் போக எல்லாம் டைம் இல்லை. பணம் உன்னோட அக்கௌன்ட்க்கு அனுப்பி இருக்கேன்.”

“மத்தபடி அக்கா இப்ப சேலத்துல இருந்து கார்ல கிளம்பி சாயங்காலம் மதுரை வந்திடுவா… அவ வந்து எல்லாத்தையும் பார்த்துப்பா…”

“வேற ஏதும் கேட்கணுமா உனக்கு?” காரை ஓட்டியபடி தர்மா கீர்த்தியைப் பார்க்க…

“நீங்க எப்படி இவ்வளவு எனர்ஜியோட இருக்கீங்க. எனக்கு ரொம்ப லோவா இருக்கு… உங்ககிட்ட இருந்து எனக்கும் கொஞ்சம் தாங்களேன்.” என்றவளை பார்த்து தர்மா, “எப்படி?” எனப் புன்னகைக்க…

“எனக்குத் தெரியாது. உங்களுக்குத் தான் தெரியனும்.” என்றால் எங்கோ பார்த்துக் கொண்டு.

தர்மா காரை ஓரமாகச் சென்று நிறுத்தியவன், அணிந்திருந்த சீட் பெல்ட்டை கழட்டிவிட்டு, கீர்த்தியின் பக்கம் திரும்பி, அவளை இதமாக அனைத்துக் கொண்டான்.

அவன் உடனே இப்படிச் செய்வான் எனக் கீர்த்தியும் எதிர்பார்த்திருக்கவில்லை… அவன் அணைப்பில் கட்டுண்டு, அவள் விலக மனமில்லாமல் இருக்க….

“இப்ப ஓகே வா…” என்றவன், விலகும் போது அவள் கன்னத்தில் அழுத்தமாக இதழொற்றி விலக, எதிர்பாரா முத்தத்தில் கீர்த்தி முகம் சிவந்து போனாள்.

விமானத்திற்கு நேரமாவதை உணர்ந்த தர்மா காரை எடுக்க,
“எனக்குச் சமைக்கத் தெரியாதுன்னு உங்க வீட்ல சொல்லிடீங்களா?” எனக் கீர்த்திக் கேட்டதும், தர்மாவுக்குச் சிரிப்பு வந்துவிட்டது.

“அது எப்படிக் கீர்த்திச் சொல்ல முடியும்?” என்றான் வேண்டுமென்றே…

“ஹே… ப்ளீஸ் சொல்லிடுங்க.” எனக் கீர்த்திப் பதட்டமாக…

“கார்ல கணேசனையும் மதுரைக்கு அனுப்பி இருக்கேன். அவர் சமையலைப் பார்த்துப்பார். அதோட அம்மா இருக்காங்க. அக்கா வர்றா… உன்னை எதுவும் செய்யச் சொல்ல மாட்டாங்க பயப்படாதே. நீ எல்லார்கிட்டயும் சந்தோஷமா பேசி சிரிச்சிட்டு இரு போதும்.”

“எதுக்கும் நீங்க சொல்லிடுங்க.”

“கவலைப்படாதே காபி கூடப் போட தெரியாதுன்னு சொல்லிடுறேன்.”

“காபி போட தெரியம். டீ தான் போட தெரியாது.” என்றதும் தர்மாவுக்கு மேலும் சிரிப்பு தான்.

உண்மையாகவே கீர்த்திக்கு சமையல் தெரியாது. அவள் அம்மாவே அதிகம் சமைத்து அவள் பார்த்தது இல்லை. சமையல் ஆள் வரவில்லை என்றால்தான் சமைப்பார். அதுவும் சில நேரம் வெளியே வாங்கி விடுவார்கள். அப்படியிருக்கக் கீர்த்தி எங்கிருந்து சமையல் பழகுவது.

கார் விமான நிலையத்திற்குள் நுழைய… பார்கிங் பார்த்து நிறுத்திவிட்டு இருவரும் இறங்கி நடந்தனர். அதற்குச் சற்று முன்னர்தான் அவன் வீட்டினரும் வந்திருந்தனர்.
விமான நிலையத்தின் லாபியில் உட்கார்ந்திருந்த விஷாலுக்குத் தர்மாவுடன் வந்த கீர்த்தியைப் பார்த்தும் ஆச்சர்யமே…

எதோ ஒரு சுமாரான பிகர்தான் இவரை லவ் பண்ணும் என முடிவே செய்திருந்தான். ஆனால் ஐந்தரை அடி உயரத்தில், மெழுகு சிலையென வந்து நிறைவளை பார்த்தும் வியப்பே. இத்தனைக்கும் ஒரு காலர் வைத்த குர்த்தியும், ஜீன்ஸும் தான் அணிந்திருந்தாள். பெரிதாக ஒப்பனையும் செய்யவில்லை.

இவருக்கு இப்படியொரு காதலியா? இந்தப் பெண்ணுக்கு இவர்கிட்ட அப்படி என்ன பிடிச்சிருக்கும்? காசு கூடச் செலவு பண்ண மாட்டாரே? என விஷால் மனதில் தீவிரமாக ஆராய்ச்சி செய்ய… தர்மா கீர்த்தியை தனது தாத்தாவுக்கு அறிமுகம் செய்து வைத்தான்.

பின்னர் விஷாலை அறிமுகம் செய்ய… இருவரும் ஹாய் சொல்லிக் கொண்டனர். “டேய், அங்க போய் விட்டதும் உடனே வந்திடாத. ரெண்டு நாள் இருந்து, தாத்தா எப்படி இருக்காருன்னு பார்த்திட்டு வா.” எனத் தர்மா விஷாலிடம் சொல்ல,

“எனக்குத் தெரியும் நான் பார்த்துகிறேன்.” என்றான்.

“டைம் ஆச்சு உள்ளே போங்க.” எனத் தர்மா சொன்னதும், விஷால் தனது தாத்தா உட்கார்ந்திருந்த வீல் சேரைத் தள்ளிக் கொண்டு செல்ல… தர்மாவிடம் சொல்லிக் கொண்ட கீர்த்தி, நாயகி வைத்திருந்த பையை வாங்கிக்கொண்டு அவர்களுடன் இணைந்து நடந்தாள்.

செக் இன் எல்லாம் முடிந்து நேராக விமானத்திற்குச் சென்றவர்கள், இருக்கையைப் பார்த்து அமர…. தனது தாத்தாவை வீல் சேரில் இருந்து விஷால் சீட்டுக்கு மாற்ற, யாரும் சொல்லாமலே கீர்த்தி அவனுக்கு உதவினாள்.

அதே போல விமானத்தில் இருந்து வெளியே வரும்போதும், விஷாலுக்கு உதவினாள். அவள் இருப்பதால் விஷாலுக்கும் சிரமாக இல்லை.
வழியில் ஹைவேயில் இருந்த உணவகத்தில் காரை நிறுத்தி விஷால் பெரியவர்களுக்கு டீ, காபி வாங்கியவன், கீர்த்திக்கு என்ன வேண்டும் என்று கேட்க, அவள் ஜிகிர்தண்டா கேட்க, அவள் கேட்டதை அவனுக்கும் வாங்கி வந்தான். 


பெரியவர்கள் காரில் இருந்தே அருந்த, விஷாலும் கீர்த்தியும் மட்டும் வெளியே நின்று உண்டனர். 

“சென்னை சிட்டி பொண்ணுக்கு மதுரை ஜிகிர்தண்டா எல்லாம் தெரியுது. நீங்க ஏற்கனவே மதுரைக்கு வந்திருக்கீங்களா?” 

“இல்லை… நான் மதுரை வந்தது இல்லை. ஆனா உங்க அண்ணா மதுரையைப் பத்தி சொல்லும்போது, இதுவும் சொல்லி இருக்கார். என் பிரண்ட்ஸ் சொல்லியும் கேட்டிருக்கேன்.” 

“சுத்தம், லவ் பண்ணும்போதும் மொக்கைதான் போடுவார் போல…” என விஷால் நினைத்துக் கொண்டான். 

மதுரையில் இருந்து முப்பது கிலோமீட்டர் தூரத்தில் இருந்த அவர்கள் வீட்டை சென்று சேரும்போது, மாலை மங்கி இருள் சூழ ஆரம்பித்திருக்க, அருணா கீர்த்திக்காக ஆரத்தியுடன் தயாராக இருந்தாள். 

கீர்த்தியை நிற்க வைத்து ஆரத்தி எடுத்து, “இதையே பெண் அழைப்பா வச்சுக்கலாம்.” என்றவள், கீர்த்தியை வலது காலை எடுத்து வைத்து உள்ளே செல்ல சொன்னாள். 

அவர்களுடையது மிகவும் பெரிய வீடு. இப்போது புதிதாக வண்ணம் தீட்டியதில், இன்னும் கம்பீரமாகத் தோன்றியது. அக்கம் பக்கம் உள்ள வீடுகள் இப்போது உள்ள காலத்திற்கு ஏற்ற வகையில் இருக்க…. இவர்கள் வீடு மட்டும் இன்னும் பழமை மாறாமல் இருந்தது. 

வீட்டின் உள்ளே இன்றைய காலத்திற்கு ஏற்றவாறு நிறைய மாற்றம் செய்திருந்தனர். கதவுகள் எல்லாம் அந்தக் காலக் கதவுகள்தான். ஒவ்வொன்றும் அத்தனை கனமாக வேலைப்பாட்டுடன் இருந்து. 
ஜன்னல்கள் எல்லாம் இருபக்க கதவு வைத்த சின்ன ஜன்னல்கள். அதில் ஏறி உட்கார்ந்துகொள்ள இடமும் இருந்தது. மேல் தளத்திற்குச் செல்ல… வீட்டிற்கு உள்ளே மரபடிகட்டுகள் எனப் பழமை மாறாமல் இருந்தது. 

அருணாவின் இரட்டைப் பிள்ளைகள் தீபக், திவ்யா கீர்த்தியுடன் ஒட்டிக்கொள்ள… அவர்களுடனே கீர்த்தி வீட்டை சுற்றிப் பார்த்தாள். 

ரங்கநாதனின் உதவியாளர் இருந்ததால், அவரும் விஷாலும் சேர்ந்து ரங்கநாதனை உள்ளே அழைத்து வந்திருந்தனர். அவரே நடந்துதான் வந்தார். ஓய்வு வேண்டும் என வந்ததும் கீழே இருந்த அவரின் அறையில் சென்று படுத்துவிட்டார். 

வீட்டை பராமரிக்க ஆள் இருந்ததால்… வீடு வெகு சுத்தமாக இருந்தது. பாத்திரம் பண்டமெல்லாம் கழுவி வைத்திருந்தனர். 

கணேசன் அவர் வசதிக்கு ஏற்ப மளிகை சாமன்களைப் பிரித்து அடுக்கி வைத்தார். 

அருணா அவள் வீட்டில் இருந்தே இரவு உணவுக்குத் தேவையான குழம்பு வகைகள் செய்து கொண்டு வந்திருக்க… கணேசன் சப்பாத்தி மட்டும் போட்டு எடுத்தார்.

முதலில் அருணாவின் பிள்ளைகளுடன் விஷால் உணவருந்த உட்கார்ந்தவன், கீர்த்தியையும் தங்களுடன் உணவுண்ண அழைக்க….. ஜமுனாவும் அவளை உண்ண சொல்ல… கீர்த்தியும் அவர்களுடன் சேர்ந்து உண்டாள். அருணா தம்பிக்காக அவன் விரும்பி சாப்பிடும் மட்டன் குழம்பும் வைத்துக் கொண்டு வந்திருக்க… விஷால் உணவை நன்றாகக் கட்டுக் கட்டினான்.

பிறகு மற்றவர்களும் உண்டு முடித்து, பெரியவர்கள் களைப்பில் உறங்க சென்று விட… வெளியே திர்னையில் விஷால், அருணா, கீர்த்தி மூவரும் உட்கார்ந்திருக்க… பிள்ளைகள் இருவரும் விளையாடிக் கொண்டிருந்தனர். வீட்டின் முன்புறம் நிறைய இடம் இருந்தது.