அத்தியாயம் 4
காலை தினசரி அலுவலக வேலைகள் அடுத்தடுத்து வந்து ஷானு + சூர்யாவை பிழிந்தெடுத்தன. அன்று மட்டுமே ஒரு கொலை இரண்டு தற்கொலை கேஸ்களின் அறிக்கைகளை முடிக்க வேண்டி இருந்தது. இறந்தவர்கள் என்ன மருந்து எடுத்துக் கொண்டனர்?, அதன் வீர்யம் என்ன? எப்படி எடுத்துக் கொண்டார்கள் ஊசி மூலமா, வாய் வழியா, அதன் விளைவுகள் என்னென்ன?, உடலின் எந்தெந்த பாகங்கள் எப்படி தாக்கமுற்றன? என்பதைப் போன்ற ஏகப்பட்ட நுணுக்கமான தகவல்களை சேகரித்து அனுப்புவார்கள்.
இன்னமும் அந்த கடற்கரை வீட்டில் இறந்து போனவர்களின் பிரேத பரிசோதனை அறிக்கை தயாராகவில்லை என்ற தகவல் ஷானுவிற்கு வந்திருந்தது. மதியம் மூன்று மணி அளவில் இருவரும் சற்றே ஓய்வாக இருக்க, ஷானு, சிவராமனுக்கு, “அடோப்சி ரிப்போர்ட் கிடைத்ததா?”, என்று கேட்டு தகவல் (மெசேஜ்) அனுப்பினாள்.
அரைமணிநேரம் பொறுத்து, “பதினைந்து நிமிடங்களில் துல்கரை தொடர்பு கொள்ளவும் – confidential”, என்று சிவராமனிடம் இருந்து செய்து வர, ஷானு இதை சூர்யாவிடம் தெரிவித்தாள். அடுத்த நொடி கையில் சாவி+ஹெல்மெட்டோடு சூர்யா அறையின் வாசலில் நிற்க, தலையை இடவலமாய் அசைத்து, ‘கார்-ல போலாம்’, என்று கூறி அவளுடன் வெளியேறினாள் ஷானு. இருவரும் துல்கர் குறிப்பிட்டிருந்த குழம்பியகத்தை (குழம்பாதீங்க காஃபி ஷாப் தான் )அடைந்தபோது பதிமூன்று நிமிடங்கள் நாற்பத்தியாறு வினாடிகள் கடந்திருந்தது.
அறையிருளில் இருந்த அந்த காபி ஷாப்புக்குள் இருவரும் சென்று மூன்று பானங்களை தயாரிக்க சொல்லி அமர்ந்தனர்.  அடுத்த ஐந்தாவது நிமிடத்தில் துல்கர் வந்து சேர்ந்தான். உள்ளிருந்த கண்ணாடி வழியே அவனைப் பார்த்த சூர்யா பரவசமாய் “இதுதாண்டா போலீஸ்” என்க,
ஷானு..  சூர்யா உளறுவதை அலட்சியப்படுத்தி இவர்களை நோக்கி வருபவனை கண்களால் அளவெடுத்தாள். துல்கர்… கண்களின் கூர்மை + தீவிரம் & விளையாட்டுத்தனம் சுத்தமாய் இல்லை. ஓ.கே. ரகம்.
(துல்கர் என்றில்லை, ஆணழகனே ஷானு முன் வந்தாலும் கல்லையும் மண்ணையும் பார்ப்பதுபோலதான் பார்ப்பாள். கணவன் கணேஷை காதலித்து கரம் பிடித்தவள் என்பதால்கூட இருக்கலாம்.)
இவர்கள் ஆர்டர் செய்த கோல்டு காஃபி வந்தது.
தினசரி உடற்பயிற்சி செய்பவன் என்றும், தினசரி யோகா / தியானம் பழகுகிறான் என்பதும் துல்கரின் உடற்கட்டிலும், அவனது அலைபாயாத பார்வையிலும்  தெரிந்தது. அதற்குள்ளாக இவர்கள் ஆர்டர் செய்த கோல்டு காஃபி வந்தது.
இயந்திரத்தனமாக காஃபி ஷாப் உள்ளே நுழைந்த துல்கர், ஷானுவைப் பார்த்து, “ஹெலோ மேம்”, என்று முகமன் உரைத்து சூர்யாவைப் பார்த்து, “ஹாய்”, சொல்லி கைகுலுக்கினான்.
சூர்யாவிற்கு ‘பார்த்த விழி பார்த்த படி பூத்து இருக்க…’, பிஜிஎம் மனதுக்குள் பாடியது. சூர்யாவின் கையை குலுக்கி அவளை அழுத்தமாய் ஒரு பார்வை பார்த்து அமர்ந்தான் துல்கர். அவனது தொடுகையினால் ‘ஒன்பதாவது மேகத்தில்’ சில கணங்கள் இருந்த அவள் அவனது குறிப்புணர்த்தும் பார்வையின் பொருள் புரியாது விழிக்க, துல்கரைக் குலுக்கிய அவளது கையில் சின்ன மெமரி கார்டு நிரடியது. சட்டென இளையராஜா பிஜிஎம் எல்லாம் காணாமல் போய் முழு விழிப்பு நிலைக்கு வந்து, புரிந்தது என்பதுபோல கண்ணை விரித்து, இரண்டு பாகையில் (2 டிகிரி ) தலையசைத்து அமைதியானாள் சூர்யா.
இரண்டே நிமிடத்தில் அவர்களிடம் பேசவேண்டியதை பேசி, குறைந்தது ஒரு மணி நேரமாவது ஆற அமர குடிக்க வேண்டிய ‘காப்பி நிர்வாணா’ (கோல்டு காஃபி )வை, அனாயாசமாக இரண்டு நிமிடத்தில் காலி செய்து துல்கர் கிளம்பி விட்டான்.
“மேம்”, என்று கையை நீட்டி அந்த சிறிய சிப்-பை காண்பித்து படபடப்பாக, “நாம கிளம்பலாம்”, என்றாள் சூர்யா.
“பத்து நிமிஷம் பொறுத்து போகலாம்”, என்று சொல்லி, தனது கண்ணாடி குவளையை எடுத்துக் கொண்டு நிதானமாக நிர்வாணாவை ரசித்துக் குடித்தாள். அந்த மெமரி கார்ட்-ல் என்ன தகவல்கள் இருக்கும்? என்ற யோசனையோடு அமைதியாக அமர்ந்திருந்தாள்.
ஷானுவின் அந்த மௌனம் + அந்த சூழலின் அமைதி சூர்யாவின் படபடப்பை சற்றே குறைத்தது. ஷானுவோட பேச தோன்றியும்.அவளது தீவிர முகபாவம் கண்டு வாளாவிருந்தாள். இன்னும் பத்து நிமிடங்களை செலவழித்த பின்னரே, அங்கிருந்து இருவரும் கிளம்பினார்கள்.
காரில் ஏறியதும் சூர்யா, “ஏன் மேம் டிலே பண்ணினீங்க? யாராவது துல்கரை ஃபாலோ பண்ணி இருப்பாங்கன்னு நினைக்கிறீங்களா?”
“மே பி”, யோசனையுடன் கூறிவிட்டு, “ஆனா, ஏன் இவ்ளோ சீக்ரெட்-ன்னு தெரில, அந்த மெமரி கார்டு பாத்தாத்தான் என்ன விஷயம்னு புரியும்னு நினைக்கிறன்.”
“ஆபிஸ் போலாமா மேம்?”
“யா”, என்றதும் இருவரும் அலுவலகம் சென்றனர்.
வேறு கேஸ் விஷயமாக வெளியே சென்று வருவதாக அலிபி தயாரித்து ( வேற கேஸ் ன்னு சாக்கு சொல்லி) வைத்திருந்ததால், இவர்களை யாரும் எதுவும் கேட்கவில்லை. தவிரவும், சூர்யா என்றுமே ஷானுவின் வலதுகை என்பது அனைவர்க்கும் தெரிந்த ஒன்று. ஷானு ஊடகத்துறையில் இருக்கும் கனேஷின் மனைவி என்பதும், ஏதேனும் உதவி தேவையென்றால் உடனே மீடியாவை தொடர்பு கொள்ள முடியும் என்பதும் ஷானுவிற்கு கூடுதல் அனுகூலம்.
அவளது அறைக்கு சென்றவர்கள் மெமரி கார்டை கணினியில் பொருத்தி அதில் இருந்த பதிவுகளை பார்க்க ஆரம்பித்தனர். அதில் நான்கு வேறு வேறு கொலை சம்பவங்கள், அது குறித்த தகவல்கள், பிரேத பரிசோதனை அறிக்கைகள், புகைப்படங்கள், இறந்தவர்களை பற்றிய விபரங்கள், கொலையான விதம் என்று அனைத்தும் இருந்தது. ஒரு மணி நேரத்திற்கு மேல் அந்த பதிவுகளில் இருவரும் தொலைந்து போயினர்.
முடித்ததும், “ஹ்ம்..”, என்று சூர்யாவிடம் மெமரி கார்ட் குடுத்தாள் ஷானு. சூர்யா அந்த கொலை சம்பவங்களை அக்குவேறு ஆணி வேறாக குறிப்பெடுக்க ஆரம்பித்தாள். இரவு கவிழ ஆரம்பிக்க, மாயா (கணேஷின் அக்கா) விடமிருந்து அழைப்பு வந்தது.
“மா, எப்போ வருவீங்க?”, அழைத்திருந்தது ஷானுவின் மகன் பரத்.
“தோ கிளம்பிட்டேன் பரத், இன்னும் ஹாஃப் அன் ஹர்-ல வந்துடுவேன், அதுக்குள்ள ஹோம் ஒர்க் முடிச்சுடு கண்ணா,  அத்தை பக்கத்துல இருக்காங்களா? குடு”, சொன்னதும் போன் கைமாறியது.
“சொல்லு ஷானு”, மாயா.
“அண்ணி, நேர அங்கதான் வர்றேன், அவனோட ஸ்கூல் ஒர்க்..”
“அதெல்லாம் பசங்களோட சேந்து எப்போவோ முடிச்சிட்டான். இப்போ மூணு பேரும் கேம்ஸ் ஆடறாங்க.  உனக்கும் சேர்த்து நைட் டின்னர் ரெடி பண்ண சொல்லிட்டேன். சரி.. அவன் எப்ப வர்றான்?”, இந்த அவன் அவளது தம்பி கணேஷ், பணி நிமித்தமாக வெளி மாநிலம் சென்றுள்ளான்.
“தெரில அண்ணி, இந்த பிசினெஸ் வென்ச்சர் முடிச்சிட்டுதான் வருவாருனு நினைக்கறேன்”
“சரி ஓகே நீ சீக்கிரமா வா”, சொல்லி அழைப்பை துண்டித்தாள், மாயா.
அதற்குள் ஷானு அவளது குறிப்புகளோடு வந்து சேர, “டைம் ஆயிடுச்சு சூர்யா நாளைக்கு பாக்கலாம்”, என்று விட்டு ஷானு கிளம்பினாள்.
ஆனால் சூர்யா, அந்த தரவுகளை மீண்டும் ஆராய ஆரம்பித்தாள். இரண்டு மணி நேரத்திற்கு பிறகு, ‘இன்ட்ரெஸ்ட்டிங் கேஸ்’, என்று மனதுக்குள் நினைத்தபடி, மெல்லிய விசில் சப்தத்தோடு அவளது அலைபேசியை பாக்கெட்டில் போட்டுக் கொண்டு ஹாஸ்டலுக்கு கிளம்பினாள்.
********************
இந்தியாவின் எங்கோ இரு பகுதியில், அலைபேசியில் இருவர் பின் வருமாறு பேசிக்கொண்டிருந்தனர்.
“மந்த்ரா கூட  யார் தங்கி இருந்தாங்க?”
“அவ தம்பி மட்டும்தான், எட்டு ஒன்போது வயசு இருக்கும். கூட நம்மாளு ஒருத்தங்க இருக்காங்க”
“சரி, ஆக்சிடெண்ட்ல இறந்து போனது இவதான்னு கண்டு பிடிச்சிட்டாங்கன்னா போலீஸ் அவனை கேள்வி கேக்க வருவாங்க. அவங்க என்க்குயரி எல்லாம் முடிஞ்சதும் எங்க ஊருக்கே கூட்டிட்டு போறேன்னு அக்கம் பக்கத்துல சொல்லிட்டு நம்ம இடத்துக்கு கூட்டிட்டு வந்துட சொல்லுங்க. ஓகே?”
“ஓகே”, என்று விட்டு கொஞ்சம் தயக்கத்துடன், “இன்னும் எத்தனை பேரை..?”, என்று இங்கிருந்து கேட்க…
“தேவைப்படற வரைக்கும்…”, என்று அழுத்தமாக கூறி பேசி துண்டிக்கப்பட்டது.
********************
மாலை நான்கு மணி சுமாருக்கு, துல்கர் ஷானுவை பேசியில் தொடர்பு கொண்டான். “சொல்லுங்க அதுல்கர்”
“மேம், வாட்சப்ல குரூப் கால் போடறேன், சார் லைன்-க்கு வர்றேன்னு சொன்னார்”
“செக்யூர்ட் லைன் தான?”
“யா”
“ம்,  அப்டியே சூர்யாவையும் கனெக்ட் பண்ணிடுங்க”, என்று சொல்லி இவள் காத்திருந்த சில வினாடிகளில் சிவராமனும், ஷானுவின் அருகே இருந்த சூர்யாவும் அழைப்பில் சேர்ந்திருந்தனர்.
வீடியோவில் சிவராமன் தெரிந்ததும், “குட் நூன் சார்”, ஷானு & சூர்யா.
“எஸ், ஷன்மதி, சொல்லுங்க நேத்து நா குடுத்த மெமரி கார்ட் பாத்தீங்களா?”
“எஸ் சார், பாத்தோம், அதுல சில இதே மாதிரியான கொலைகள், சில வேற மாதிரி கொலைகள் பத்தின கேஸ் விவரம் குடுத்திருக்கீங்க”
“ஆமா”
“ஹ்ம்.. அஸ்ஸாம்-ல மூணு பேர் இதே மாதிரி விஷத்தால கொல்லப் பட்டிருக்காங்க. நொய்டா-ல ரெண்டு பேர் சயனைட்-னாலே இறந்து போயிருக்காங்க, அண்ட் ஒருத்தன் பாம்பு கடிச்சு இறந்து போயிருக்கறதா இருக்கு. இன்னொரு ஆக்சிடென்ட் கேஸ் இருக்கு,  ஹிட் அண்ட் ரன் ன்னு இருக்கு, அண்ட் மூணு பேரும் ஸ்பாட் டெட்”
“குட்”, சிவராமன்.
“ஆனா சார், இந்த கொலை சம்பவங்களுக்கும் இப்போ நடந்த கொலைக்கும் என்ன சம்பந்தம்? கண்டிப்பா எதோ தொடர்பு இருக்கணும்..”, நேரடியாக விஷயத்துக்கு வந்தாள் ஷானு.
” எஸ் யு ஆர் ரைட், இந்த எல்லா கொலைகள்-லையும் இறந்துபோனவங்க எல்லாரும் பிக் ஷாட்ஸ் அல்லது அவங்க தொடர்புடையவங்க. பாதி பேர் அரசியல்வாதிங்க இன்னும் சில பேர் அதிகார வர்க்கத்துக்கு ரொம்ப நெருக்கமானவங்க.  மேலோட்டமா பாத்தா இது வேறே வேற கேஸ்தான். ஆனா, இது எல்லாத்தையும் தொடர்பு படுத்தற விஷயம்-ன்னா அது இந்த கொலைகளை யார் யார் செஞ்சாங்களோ அல்லது செய்திருப்பாங்கனு சந்தேகப்படறா மாதிரி இருக்காங்களோ அவங்க சம்மந்தப்பட்டவங்க கூட எல்லாருமே தற்கொலையோ அல்லது ஆக்சிடென்ட் -லயோ இறந்து போயிருக்காங்க.”
“வாட்?”, ஷானு.
“சார் புரியல”, சூர்யா.
“துல்கர் நீங்க சொல்லுங்க, ஏன்னா இப்படி ஒரு லிங்க் கன்டுபிடிச்சு சொன்னதே அவர்தான்”, என்று துல்கர் முகம் பார்க்க.
“யா.”, அவருக்கு தலையசைத்து, மற்ற இருவரையும் பார்த்து,  “ஃபர்ஸ்ட்  கேஸ் எடுத்துக்கோங்க”,
“அஸாம் ல மூணு பேர் இறந்துபோயிருக்காங்க. அவங்க தங்கின இடத்துக்கு வந்து போன ஆளை அங்க இருந்த வாட்ச் மேன் பாத்திருக்கார்.”
“அப்போ ஈஸியா ட்ரேஸ் பண்ணி இருக்கலாமே?”
“எஸ், பொலிஸ் ட்ரேஸ் பண்ணினாங்க, பட் ஒரு ட்ரெயின்-ல கூபே ல டெட் பாடியா”
“ஓஹ்!”
“இது நாலு வருஷம் முன்னாடி நடந்தது”, என்று சொல்லி..
“அடுத்து, நொய்டா சயனைட் கேஸ், CCTV கேமரா-ல தெளிவா கொலையாளி பதிவாயிருக்காங்க. இந்த கேஸ்லயும் கொலையை யார் பண்ணினாங்கன்னு போலீஸ் கெஸ் பண்ணிட்டாங்க. ஆனா, கொலையாளி, ஒரு பப்ளிக் பார்க்-ல, கையை அறுத்துட்டு இறந்து போனதுக்கப்பறம்தான் பொலிஸ் ரீச் பண்ணுச்சு.”
“ஹ்ம். இன்ட்ரெஸ்ட்டிங்”
“யா, அடுத்து பாம்பு, அபார்ட்மெண்ட்-ல ஏழாவது மாடில எப்படி கட்டுவிரியன் பாம்பு வரும்? ஆனா சரியா அவரோட பிளாட்-க்கு வந்திருக்கு, அவரை கடிச்சிருக்கு. அதுவும் கொரியர் மூலமா. கொரியர் டெலிவரி பண்ணின ஆளை பக்கத்து ஃபிளாட் காரங்க பாத்து அடையாளம் சொன்னாங்க. ஆனா, அடுத்த சிக்னல்-லேயே அவன் ட்ரைலர்-ல அடிபட்டு செத்து போயிட்டான்னு கேஸை க்ளோஸ் பண்ணிட்டாங்க.”
“அடுத்து ஒரே நேரத்துல மூணு பேரை பலி வாங்கின ஆக்சிடென்ட் கேஸ். ஆக்சிடென்ட் பண்ணின ட்ரைவர் போலீஸ்ல சரண்டர் ஆகிட்டார். அன்னிக்கு நைட்டே அவரோட மணிக்கட்டை அறுத்து தற்கொலை பண்ணிகிட்டார்.”
சூர்யா போனில் இருந்து பார்வையை மாற்றி, ஷானுவைப் பார்த்து, “வாட் ஈஸ் மணிக்கட்டு?”, என்று கிசுகிசுத்தாள். ஷானு தனது மணிக்கட்டை காண்பித்த அதே நேரத்தில்..
“ரிஸ்ட்”, என்று பதில் சொன்னது துல்கர். கொஞ்சம் கிண்டல் த்வனி இருந்ததோ? ‘என்னடா இது ? சந்தேகம் வந்தா கேட்டு தெரிஞ்சிக்க தான வேணும்?’ சூர்யாவின் மனக்குரல்.
“அப்போ நேத்து நடந்த கொலை சம்பந்தப்பட்ட யாரவது இறந்து போயிருக்காங்களா ஐ மீன், கொலைகாரன் ..?”
“யெஸ், நீங்க போன ஹோட்டல்ல தங்கி இருந்த ஒரு லேடி, அவங்க கொலை நடந்த நேரத்துக்கு அரைமணி நேரத்துக்கு முன்னாலதான் ஹோட்டல செக்-அவுட் பண்ணியிருக்காங்க. ஆனா, அந்த நேரத்துல எந்த காரோ, வேற வண்டிகளோ இந்த ரோடை க்ரோஸ் பண்ண மாதிரி டிராபிக்  சிக்னல் கேமரா-ல பதிவாகல. ஆனா, கரெக்ட்டா மர்டர் நடந்ததா பி.எம். ரிப்போர்ட்-ல வந்த நேரத்துக்கு ஒரு மணி நேரம் பொறுத்து அவங்க இந்த ரோடை தாண்டி போயிருக்காங்க”
“மே பி அவங்க யாருக்காவது வெயிட் பண்ணி இருந்திருக்கலாம், கோ-இன்சிடென்ட்-ஆ இருக்கவும் வாய்ப்பிருக்கே?”, ஷானு.
“யா, நானும் அப்படித்தான் நினச்சேன், ஆனா, அவங்க போன அதே கார் நகரி பக்கத்துல ஆக்சிடென்ட் ஆயிருக்கு, அந்த லேடி ஸ்பாட் டெட்”
“ஓஹ்”, சூர்யா.
“இந்த கொலைகளுக்கு ஏதோ ஒரு லிங்க் இருக்குன்னு பட்சி சொல்லுது”
“பட்சி!?”, வழக்கம் போல சூர்யா.
“இன்ட்யூஷன்”, என்று அதுல்கரும்,
“உள்ளுணர்வு”, சிவராமன் சாரும் ஒரே நேரத்தில் பதில்.
சிவராமன் தொடர்ந்து, “எனக்கென்னவோ இது ஒரு நெட்ஒர்க் மாதிரி தோணுது, இந்த எல்லா கேஸ்க்கும் எதோ ஒரு தொடர்பு இருக்கு, ஆனா என்னன்னு தெரில. அங்கங்க அந்தந்த ஸ்டேட்-ல இதை பழிவாங்கறத்துக்காக, பணத்துக்காக நடந்த கொலைகள், எதிர்பாரா ஆக்சிடென்ட்-ன்னு கேஸை முடிச்சிட்டாலும்.. இதுக்குள்ள வேற என்னவோ லிங்க் இருக்கணும்னு தோணுது. இன்னொரு விஷயமும் இதுல இருக்கு”
“என்ன அது?”
“எல்லா கொலைகளையும் பண்ணினது லேடிஸ், ஒரே ஒரு கொலை தவிர. லாரி ட்ரைவ் பண்ணினது கூட ஒரு லேடிதான், கொரியர் பாய் தவிர மத்த நாலு கேஸ்லயும் பெண்கள்தான் சம்மந்தப்பட்ட இருக்காங்க. அந்த கொரியர் பையன் ஒரு மைனர், கொரியர் வாங்கின ஆள் இறந்த அடுத்த நாள் அவனோட அக்காவும் தற்கொலை பன்னிட்டு இறந்துபோயிருக்கா, சோ அதுலயும் ஒரு பெண் சம்பந்தப்பட்டிருக்கா”
“ஓகே ஸார், இதை நாம என் அஃபிசியலா துருவக்கூடாது?”, ஷானு.
“ஒருத்தன் கொலையும் பண்ணிட்டு தற்கொலையும் பண்ணிக்கறான்னா, தான் மாட்டிக்ககூடாது & மாட்டினாலும் அந்த கொலை பத்தி யாரும் மேற்கொண்டு விசாரிக்க கூடாது-ங்கிற எண்ணம் முதல் காரணம். ரெண்டாவது அவங்க உயிரை கொடுத்தாவது ஒரு உயிரை எடுக்க நினைச்சிருக்காங்கன்னா, ரொம்ப ஸ்டராங்-கான மோட்டிவ் இருக்கனும். அது யாருக்கும் தெரியக்கூடாததா, ரகசியமானதா இருக்க அதிக வாய்ப்பிருக்கு.”
“யா, கரெக்ட்தான்”
“முக்கியமா செல்வாக்குள்ளவங்களுக்கு தெரியக்கூடாததா இருக்கனும்-னு நா ஃபீல் பண்றேன்.”
“ஹூம்”, என்று ஆமோத்தித்து விட்டு, சில நொடி இடைவெளி விட்டு, “ஓகே ஸார், நாங்க என்ன பண்ணனும் சொல்லுங்க?”, ஷானு.
சூர்யா ஷானுவை கேள்வியாய் பார்த்தாள். ஷானுவின் கணவன் கணேஷ், ‘வேண்டாம் இந்த கேஸ் எடுக்காதே என்றானே?’. ஷானுவோ ‘ஆம், இந்த கேஸ் நாம எடுக்கிறோம்’ என்பதுபோல கண் மூடித் திறந்தாள்.
“சால்வ் தி கேஸஸ், ரிப்போர்ட் டு மீ”, சிவராம் ரத்தின சுருக்கினார்.
“சார் நிறைய வருஷங்கள் இடைவெளில இதெல்லாம் நடந்திருக்கு, நீங்க கொடுத்த ரிபோர்ட்ஸ் எங்களுக்கு போதுமானதா இருக்குமான்னு தெரில, எங்களுக்கு வேற தகவல்கள் தேவைப்பட்டா?”
“தனியா மூவ் பண்ணுங்க, எக்காரணம் கொண்டும் டிபார்ட்மென்ட் ஹெல்ப் கேக்காதீங்க, நீக்க டீல் பண்ண போறது வேற வேற ஸ்டேட் கேஸ்கள். துறைரீதியா போனாக்கூட அவங்க ஒத்துழைப்பு சந்தகம்தான்”
“கையில இருக்கற ஆதாரங்களை வச்சிட்டு நம்ம மூளையை உபயோகப்படுத்தி வேலைய முடிங்க-ன்னு இன்டைரெக்ட்டா சொல்றார் மேம்”, சூர்யா அசால்டாக ஷானுவிடம் கூறினாள்.
துல்கர் குறுநகையோடு, “ஆமா மேம், ஒரு மூளை ரொம்ப நாளா உபயோகப்படாம வேஸ்ட்-டா உங்க பக்கத்திலேயே இருக்கு, அதை யூஸ் பண்ணிக்கங்க-ன்னு மறைமுகமா சொல்றார் ஸார்”, என்றான் சிரிப்பை மென்றபடி.
அவனது கேலி புரிந்து, “ஹஹ”, ஷானு.
துல்கர் கிண்டல் செய்வது பொறுக்காமல், “க்ஹம்.க்ஹம்”, என்று செருமி தனது எதிர்ப்பை பதிவு செய்தாள் சூர்யா.
சிவராம் மென்னகையோடு அமர்ந்திருக்க, அவர் தன பதிலுக்காக தொடர்பில் காத்திருக்கிறர் என்பதை அனுமானித்து, “ஓகே ஸார், இப்போ இந்த உத்தண்டி கேஸ்-ல எல்லாத்தையும் ஒரு முறை மறுபடியும் முதலேர்ந்து பாக்கறோம். ஏதாவது லிங்க் கிடைக்குதா பாக்கறோம். இல்லன்னா அடுத்து என்ன பண்றதுன்னு யோசிக்கலாம் ஸார்”
“ஓகே ப்ரோசிட்”
“பை சார், துல்கர் ஏதாவது ஹெல்ப் வேணும்னா உங்களை கூப்பிடலாமா?”
“எஸ் அஃப் கோர்ஸ், என்னோட பிரைவேட் நம்பர் வாட்சப் பண்றேன் அதுல கான்டாக்ட் பண்ணுங்க”, துல்கர்.
பேசி முடித்ததும் போனை வைத்துவிட்டு தீவிர யோசனைக்கு சென்றாள், ஷண்மதி.