உஷ்.. பேசாதே.. கொல்..

அத்தியாயம் 2

ஷானு அலுவலகத்தின் கோப்புகளை பார்வையிட்டபடி இருந்தாள், மேஜையில் இருந்த மொபைல் என்னைக் கவனி என்று அழைக்க, திரையைப் பார்த்தாள். மறுபுறம் பேசியில் இவளது தொடர்புக்காக காத்திருந்தது சிவராமன் சார், என்று காண்பித்தது திரை. அவளது அனைத்து புலன்களும் அலர்ட்டாக, அழைப்பை ஏற்று, “குட் மார்னிங் சார்”, என்றாள்.

“எனக்கு வெரி பேட் மார்னிங் ஷானு, பிஸி?”

“இல்ல சார், ரெகுலர் ஒர்க்தான். இனிமே தான் ஆரம்பிக்கணும், சொல்லுங்க..”, என்றாள். காரணம், ஏதேனும் முக்கியமான விஷயமாக இருந்தால்தான் சிவராம் அழைப்பார்.

“ஒரு கேஸ், ரொம்ப பெரிய இடம், க்ளூஸ் இல்லாம நீட்-ஆ மாஸ் மர்டர் நடந்திருக்கு, ஆக்சுவலா இன்னும் கொலை எப்படி நடந்ததுன்னே கண்டுபிடிக்க முடியல. நீ வரமுடியுமா?”

“எங்கன்னு சொல்லுங்க சார்”

“உத்தண்டி தாண்டி ஒரு ரிசார்ட் பக்கம் ஒரு பீச் ஹவுஸ்-ல.  ஜங்சன் க்ராஸ் பண்ணினதும் கால் பண்ணுங்க.”

“ஓகே சார், ஒரு மணி நேரத்தில அங்க இருக்கேன்”, இணைப்பை துண்டித்தாள்.

“சூர்யா, கொஞ்சம் என்னோட வர முடியுமா?”, அடுத்த அறையில் கணினியில் முக புத்தகத்தில் தொலைந்திருந்த அவளது உதவியைக் கூப்பிட..

“மேம், எங்கன்னு சொல்லுங்க நா வர்றேன், வெறும் ஜடங்களா பாத்து பாத்து சலிச்சு போச்சு. இப்பொத்தான் கொஞ்சம் பச்ச பசுமையா பாத்திட்டு இருக்கேன்”, திரையில் யாரோடோ கடலை வறுத்து கொண்டே சூர்யா.

“இப்போ போற பக்கம் பச்சை, நீலம் எல்லாம் பாக்கலாம் வா”

அடுத்த இரு நொடிகளில் சூர்யா ஆஜர், “ஐ டி கம்பெனியா? ஆக்சிடென்ட்? மர்டர்? நம்ம தலைக்கு வேல இருக்குமா? இல்ல உப்மா வா?”

“சூர்யா, கூட வந்தா தெரியப்போகுது, சிவராமன் சார் கூப்பிட்டு இருக்கார்”

“அப்போ மண்டை காயப்போகுதுன்னு சொல்லுங்க, ஐயோ இருக்கிற இந்த நாலைஞ்சு முடி கொட்றத்துக்குள்ள கல்யாணம் முடிக்கலாம்னு நினைச்சா ஒன்னும் கூடி வர மாட்டேங்குதே?”, என்று தனது கவலையில் சூர்யா புலம்ப..

“பரவால்ல, மொட்டை அடிச்சுக்க, இந்த க்ராப்புக்கு அது எவ்வளவோ தேவலாம். அப்டியே இதான் லேட்டஸ்ட் ஃபாஷன்-ன்னு சொல்லி உன்னை யார் தலைலயாவது கட்டிடலாம்”, புன்முறுவலித்தபடி ஷானு.

“மேம்…”

“அரட்டை போதும் வா.., ஹெல்மெட் எடு”

“ஹூம்.. இந்த டிபார்ட்மெண்ட்-ல  ட்ரைவர் லேர்ந்து அசிஸ்டன்ட் வரைக்கும் நான்தான் போல, ஆனாலும் மேம் நமக்கு குடுத்த போர் வீலரை விட 2 வீலர் தான் அதிகம் யூஸ் ஆகுது. ஆனாலும் (ராயல் என்பீல்டு) ஆர்.ஈ.க்கு ட்ரைவர் கொஞ்சம் ஜாஸ்தியா இல்ல?”

சூர்யாவை ஏற இறங்க எடை போடுவது போல ஒரு பார்வை பார்த்த ஷானு, இடவலமாய் தலையசைத்து “இல்ல.. வா, ஓசி வைஃபை யூஸ் பண்றதான? அதுக்கு இது சரியா போச்சு, கிளம்பு”.

ஷானு சொன்னதுபோல, கையில் ஹெல்மெட்டை எடுத்துக்கொண்டே, “ஐயோ மேம், பத்து ரூபாக்கு ரீசார்ஜ் பண்ணினா பத்து நாள் மொக்க போடலாம், இதெல்லாம் நியாயமே இல்ல.. சொல்லிட்டேன்”, அலறிய சூர்யாக்கு வாய் அதிகம், வாயோடு கண்ணும் புத்தியும்.

சற்றே வயதுகோளாறில் அலைபாய்வது போல இருந்தாலும், தேர்ந்த டிடெக்ட்டிவ் மூளை. யாரும் யோசிக்காத கோணத்தில் சூர்யாவின் சிந்தனை இருக்கும். இல்லையென்றால், தமிழகத்தின் சிறந்த பாரன்சிக் நிபுணி ஷானுவிடம் ஜுனியராய் இரண்டு வருடம் காலம் தள்ள முடியுமா? இருவருமாய் சேர்ந்து கண்டுபிடித்த கேஸ்கள் ஏராளம். அதில், சக போலீசாரால் சாதாரணமாக கண்டுபிடிக்க முடியாத கேஸ்களும் அநேகம்.

இப்போது இவர்களை அழைத்திருக்கும் சிவராமன் காவல் துறை மேல்மட்டத்தில் இருப்பவர். அவரால் அவர்களது சகாக்களால் கண்டுபிடிக்க இயலாத, அல்லது கண்டும் காணாமல் இருங்கள் என்று ஆட்சியாளர்களால் தடுக்கப்படும் குற்றங்களின் மூலங்களை ஷானுவின் மூலம் புலனாய்ந்து விடுவார். இயன்றால் சாட்சிகள் திரட்டப்பட்டு தயாராய் கையில் வைத்திருப்பார். என்று ஆட்சி மாறும் என்று தோன்றுகிறதோ அல்லது என்று அந்த கிரிமினல்-க்கு ஆட்சியாளர்கள் தரும் சலுகை போகிறதோ அன்று சரியாய் காய் நகர்த்தி, கிரிமினல்களை உள்ளே அடைப்பார்.

காவல்துறை நேர்மையாய் இருக்க வேண்டும் என்று நினைக்கும் அதிகாரிகள் பலரில் இவர் முதன்மையானவர். அதனால்தானோ என்னமோ, இன்னமும் உயர்நிலைக்கு போகாமல் மேல்மட்டத்திலேயே பந்தாடப் படுகிறார்.

அவரது கேஸ்களை ஷானுவிடம் கொடுப்பது ஏனென்றால், அவளிடமிருந்து எந்த ஒரு விஷயமும் அவ்வளவு எளிதில் கசியாது. ஒவ்வொரு நிகழ்வுக்கும்(கேஸுக்கும்) மூன்று கோப்புகள் வைத்திருப்பாள், ஒன்று உண்மையானது (சிவராமனுக்கானது), இன்னொன்று துறை மேலிடத்திற்கு, மற்றொன்று பொதுமக்கள் பார்வைக்கு அதாவது ஊடகத்திற்கு என்று பகுத்து வைத்திருப்பாள். எது யாருக்கானது என்பது அவளும் அதை தயாரிக்கும் அவளது வலது கை சூர்யாவும் மட்டுமே அறிந்த ரகசியம். இருவரும் மூளைக்காரர்கள், எங்கு யாருக்கு என்ன தேவையோ அதை மட்டுமே வெளிப்படுத்துவார்கள் என்பது அவர்களின் கூடுதல் சிறப்பு.

ஷானு சூர்யா இருவரும் கிளம்பி முக்கால் மணி நேரத்திலேயே, சிவராமனுக்கு அழைத்திருந்தனர், “சார் உத்தண்டி ஜங்க்ஷனுக்கு வந்துட்டோம், ரிசார்ட் எங்கன்னு சொல்லுங்க?”

“சொல்றேன், அதுக்கு முன்னாடி நீங்க யாருன்னு அங்க இருக்கிறவங்களுக்கு தெரியாம அப்சர்வ் பண்ணுங்க. சம்பவம் நடந்த இடத்துக்கு பக்கத்து பில்டிங் தான் நான் சொன்ன XXXXXX  ரிசார்ட்.”

“அங்க தங்க வர்றவங்க மாதிரி வர்றோம், ஆனா இங்க ஆற செலவுகளுக்குண்டான பேமெண்ட் உடனே வரணும், ஆறுமாசம் கழிச்சு இல்ல. ஓகே?”,  சூர்யா.

“எஸ். வாங்க”

அடுத்த பத்தாவது நிமிடம், இருவரும் ரிசப்ஷன் முன். உரையாடல் அமெரிக்கன் ஆங்கிலத்தில். இருவரும் பொதுவாகவே சீருடை அணிய மாட்டார்கள். எப்போதாவது அணிவகுப்பு, மேலதிகாரிகள் வருகை என்று இருந்தால் மட்டுமே அவர்களுக்கு சீருடை கட்டாயம். எனவே எவ்வித முஸ்தீபுகளும் இன்றி நேரே அந்த தாங்கும் விடுதியின் வரவேற்புக்கு சென்றனர்.

அந்த ரிசார்டை ஒட்டிய அடுத்த கட்டிடத்தில் காக்கிகள் குவிந்திருந்தால், ரிசப்ஷனில் இருந்த ஆணுக்கும் பெண்ணுக்கும் கொஞ்சம் பதற்றம் இருந்தது. அதை வல்லடியாக மறைத்து, புன்னைகை முகமூடி போட்டிருந்தினர். முதலில் நின்ற வரவேற்ப்புப் பெண், சம்பிரதாய விசாரிப்புகள் முடித்து சின்ன தலையசைப்போடு, “காட்டேஜ் எடுத்துகிறீங்களா? இல்ல ரூம் போதுமா?”

“ரூம் போதும், வேணும்னா மாத்திக்கறோம், என்ன பாபி?”

“ஆங். ஓகே”, சொன்ன ஷானு தனது கூலரை கழற்றாமல், சுற்றி அந்த ரிசார்ட்-ஐ பார்வையால் மேய்ந்து கொண்டிருந்தாள். ஆறடி விட்டம் கொண்ட வட்ட வடிவ மண் பாத்திரத்தில் நீர் நிரப்பி, தாமரை அல்லி வளர்த்திருந்தார்கள். அதில் சின்னஞ்சிறு வண்ண மீன்கள் துள்ளியபடி இருந்தன. இடதுபுறமாக சற்று தள்ளி செயற்கை நீரூற்று. அதை சுற்றி உணவு மேஜை நாற்காலிகள் வரிசையாக அலங்காரமாக அடுக்கப்பட்டு இருந்தன. பத்தடி சுற்றுச்சுவர், சுவர் முழுதும் அலங்கார வகைச் செடிகள் ஏறியிருந்தன. அதிலிருந்த சிகப்பு வெள்ளை ஆழ் ஊதா நிறப் பூக்கள், இலைகளின் பச்சை பின்னணியோடு பார்க்க ரம்மியமாக இருந்தது. ஆங்காங்கு கல்வாழைகள் வளர்ந்து அதில் அடர் சிகப்பாய் பூக்கள் சிரித்தன.

“பாபி..,”, சூர்யா.

“ம்ம். புக் பண்றதுக்கு முன்ன ஒரு தடவை ரூமை பாத்திடலாமா?”, ஷானு.

“யா, ஷ்யூர்”, என்று அந்த ஆடவன் லாபியில் இருந்து கையளவு அட்டையோடு வெளியே வர,  ஷானு சூர்யா, இருவரும் அவனுடன் நடந்தார்கள். அறை மாடியில் இருக்க, அது ஒரு மேற்கு பார்த்த அறை, கதவைத் திறந்தவுடன் ஜன்னல் தாண்டி நேர் எதிரே நீள / நீலக் கடல். கடற்கரையெங்கும் பால் வெள்ளையாய் நுரை அவ்வப்போது கிளம்பி அடங்கியது. ஆனால் ரசிக்கத்தான் நேரமில்லை.

“இது எங்களுக்கு ஓகே, நீ பே பண்ணிட்டு வந்துடு, நான் இங்க இருக்கேன்”, ஷானு.

“ஓகே பாபி”, என்ற சூர்யா, “வாங்க போலாம்”, என்று அந்த வரவேற்பாளரை அழைத்து கொண்டு கீழே இறங்கி, பணம் செட்டில் செய்து வந்து, “சொல்லுங்க மேம், கிட்டத்தட்ட பதினாலாயிரம் ரூபா, சிவா சார்ட்ட சொல்லி வாங்கி தர்றீங்க “

“சூரி, இதெல்லாம் அவருக்கு ஒன்னுமேயில்ல, அத விடு, இங்கிருந்தே பாரு, அதான் வீடு”, என்று ஷானு சொன்ன வீடு ( பீச் ஹவுஸ்)  கசகசவென்று காக்கிசட்டைகள் இருக்க, இருவரும் ஜன்னலின் அருகே யாருக்கும் தெரியாதவாறு நின்று, தங்களது பைனாகுலரை எடுத்து சூம் செய்து மூளைக்குள் தகவல்கள் சேகரித்தனர்.

“இன்க்வஸ்ட் முடிஞ்சிடுச்சா?”, சூரி கேட்க..

“முடிஞ்சிருக்கும்னுதான் நினைக்கிறன். சார் லைன்-ல வருவாரு, அதுக்குள்ள அவுட்டர்ல நம்ம என்ன அப்ஸர்வ் பண்ண முடியும்னு பாரு”

“ம்ம்”, என்று விட்டு தனது தேடுதலை ஆவணப்படுத்த கேமெரா மூலம் சில பல க்ளிக்குகள் எடுத்த சூர்யா, “பாஸ், வீட்டுக்குள்ள ஆளுங்க வர்றத பாக்கறதுக்கு ஒரு கேமரா இருக்கு, ஆனா நம்ம காக்கீஸ் அதெல்லாம் அலசி ஆராய்ஞ்சிருப்பாங்களே?”

“அப்படியே வெளியே சர்வன்ட் குவார்ட்டர்ஸ் போற வழிலையும் ஒரு கேமரா இருக்கு பாரு”, என்று ஷானு சொல்ல..

சூரி, தனது பைனாகுலரில் ஷானு சொன்னதை சரி பார்க்க, “ஆமா அங்கேயும் இருக்கு”, என்று விட்டு…”ஊஊஒ… பாஸ்… பிரகாஷ் அதுல்கரா இந்த கேஸ் ஹாண்டில் பண்றார்?”,என்று ஆச்சர்ய அதிர்ச்சியோடு கூவி,  “ஐயோ.. சொக்கா சொக்கா. உன் கருணையே கருணை..”,என்று இரு கைகளையும் கூப்பி மேலே பார்த்து இறைக்கு நன்றி சொல்லி ( ? ) ,  “மேம்.. மேம்.. இப்போவே போய் ஒரு ஹாய் போட்டுட்டு வந்துடறேன் மேம்”, என்று பரபரத்தாள்.

“ம்ப்ச். சூரி, அங்க போறதுக்காக நாம வரல. அண்ட் அந்த அதுல்கருக்கு  கல்யாணம் ஆயிடுச்சு”, ஷானு.

“அடப்போங்க மேம், என்ன என்னை கேட்டா கல்யாணம் பண்ணினார்?  அவரா பண்ணிக்கிட்டா நானா பொறுப்பு? இல்ல தெரியாமத்தான் கேக்கறேன்.. கல்யாணம் ஆன பொண்ணுங்கள எல்லாம் இந்த ஆம்பளைங்க  லுக் விடறதே இல்லையா? அழகு பொதுவானது மேம், ஆராதிக்கணும், ஆராயக்கூடாது….”, பேச்சு ஷானுவிடம், ஆனால் பார்வையோ  இன்னும் பைனாகுலரில்.

இவள் திருந்த மாட்டாள் என்பது போல தலையை இடவலமாய் அசைத்து, “மாஸ் மர்டர். நாலு பேரு, எல்லாம் பெரிய இடம்.. ஹ்ம்.. அதுக்குமேல எதுவும் தெரில”, தனக்குள் பேசி  காரியத்தில் கண்ணாயினாள் ஷானு. பேச்சோடு பேச்சாக சிவராமனுக்கு ‘தொந்தரவாக இல்லையென்றால் அழைக்கவும்’, என்று  ஒரு தகவலையும்  தட்டி விட்டாள்.

சிறிது நேரம் அந்த வீட்டையே நோட்டமிட்ட சூரி, “எவ்ளோ பெரிய இடம் மேம்? வர்ற ஆளுங்களுக்கு பாதுகாப்பு ரொம்ப ஜாஸ்தியா இருக்கு?”, என்று கேட்டாள்.

“ஏன் தெரிஞ்சி என்ன பண்ணப்போற?”

“ஒண்ணுமில்ல, அடி எவ்ளோ பலமா விழும்ன்னு தெரிஞ்சிக்கலாம்னுதான்”

“சொல்றேன், ஓடிப்போயிடக்கூடாது”

“ஹ ஹ யாரு சூர்யாவாவது ஓடறதாவது?”, காலரை தூக்கி விட..

பார்ப்போமே என்ற தோரணையில், “இந்த பீச் ஹவுஸ் உள்துறை அமைச்சரோட பினாமியோடது”

“ஆ!!”, என்று அதிர்ச்சியில் வாய் திறந்த சூர்யா, “மேம்…, செத்தவன் அந்தாளுக்கு…?”

“பையன் கம் வாரிசு கம் அடுத்த எலெக்சன்ல எம்பி-யாக போற, இல்ல எம்பி யா ஆகவேண்டிய ஒரு மாண்புமிகு”

“ம்ம்ம். இன்ட்ரஸ்ட்டிங்.”, என்று யோசனையோடு சொன்ன சூர்யா, “அப்போ நிறைய குப்பையை கிளற வேண்டியிருக்கும்னு சொல்லுங்க”

“யெஸ்”

“ஆமா அந்த பார்பர் ஷாப் குப்பையெல்லாம் பெரிய காக்கிங்களே கிளருமே, நாம எதுக்கு?”

“தெரில, சிவராமன் சார் கூப்பிட்டார், அவர் நுழைய முடியாத விஷயம் இருக்கும்-னு என்னோட அபிப்ராயம்”, என்றவளை கூர்மையாக பார்த்து,

“வில்லங்கமான விஷயம் இருக்கும்னு என்னோட அபி.. ம்ம். வாட் இஸ் தட்… பிராயம்?”, என்றாள் சூர்யா. தமிழ் நன்றாக பேசுவாள்தான். அவ்வப்போது கொஞ்சம் முட்டி மோதும்,  காரணம் இவள் படித்தது இன்டெர்னேஷனல் பள்ளி. ஜெர்மன், பிரென்ச்-ல் கவிதை கூட வரும். சுத்த தமிழ் செத்த திணறும்.

ஷானுவின் பேசி அடிக்க, திரையில் தெரிந்த பெயரைக் கண்டு சூர்யாவின் முகம் விளையாட்டுத்தனத்தை தொலைத்து, கூர்மையாய் ஷானுவைப் பார்த்தது. “கணேஷ் சார் லைன்-ல”, கணேஷ் ஷானுவின் கணவன்,பிரபல செய்தி தொலைக்காட்சி சேனல்களை நடத்துபவன். தொலைக்காட்சியில்  உண்மை உரைக்கும் உரைகல்.

சாமான்யமாய் அழைக்க மாட்டான், இப்போது அதுவும் வேலை நேரத்தில் அழைக்கிறானென்றால்..?, என்ற யோசனையோடு.., “ஹாய் கணேஷ் என்ன திடீர்னு கால்?”

“உத்தண்டி பக்கமா போனியா?”

கணெஷின் குரலில் காரம் அதிகமாக இருக்க, ‘என்ன விஷயம்? கனேஷ் இத்தனை பதட்டமடையுமளவு?’, சிந்தனையில் அவன் நேரில் இருக்கிறான் என்று நினைத்து ஆமென தலையசைத்தாள்.

“கேக்கறேன் இல்ல? பதில் சொல்லு மதி”, அனைவருக்கும் இவள் ஷானு, கணேஷுக்கு மட்டும் மதி, அதிலும் இவர்களின் தவப்புதல்வன் பரத் பிறந்த பின், இந்த காவல்துறை வேலைக்கு முழுக்கு போட சொல்லி எவ்வளவோ சொல்லியும் அவள் தொடர்ந்து இங்கே பணிபுரிவதால், அவனுக்கு கோபம்.

“ஆமா, ஒரு கேஸ் விஷயமா சிவராமன் சார் போன் பண்ணினார்”

“நோ, அந்த கேஸ்  உன் வேலை கிடையாது, நீ ஒர்க் பண்றது போரென்சிக், கிரைம் டிபார்ட்மென்ட் இல்ல”.

“சரி.., ஆனா சிவா சார்…”, என்று இழுத்தவளை குறுக்கிட்டு…

“வேணான்னு சொன்னா கேளு மதி, அவங்க அண்டர்கிரௌண்ட்-ல வேற பிளான் பண்றாங்க”

“அட, முதல்ல விஷயம் என்னன்னு சொல்லுங்க “

“அமைச்சருக்கு நம்பகமான ஆளுங்களை வச்சு யாரு கொலை பண்ணினதுன்னு கண்டுபிடிச்சு என்கவுண்டர் பண்ணப்போறாங்க, ஸோ யூ ஸ்டெப் அசைட்”

“சரி அவங்க பாட்டுக்கு அவங்க கண்டுபிடிக்கட்டும் நாங்க தனியா எங்க ட்ராக்-ல போறோம்”

“முட்டாள்”, வெகு வேகமாக வந்தது வார்த்தைகள் “எல்லா மீடியாகாரங்களையும் கூப்பிட்டு  இந்த விஷயம் ஒரு விபத்துன்னு சொல்லுங்கன்னு ஸ்ட்ரிக்ட்-ஆ சொல்லி இருக்காங்க. பொய் சொல்லக்கூடாதுன்னு நினைக்கிறவங்க ஒரு வரி செய்தியா சொல்லி முடிங்கன்னு ஆர்டர். ரொம்ப தீவிரமா இருக்காங்க மதி, ஏற்கனவே யார் பண்ணியிருப்பாங்கன்னு வெறியோட தேடிட்டு இருக்காங்க. அவங்க ஆளுங்கட்சி வேற, மாட்டிக்காத”

“மீடியா டைக்கூனா இப்படி பேசறது…?”

“பேசறது மீடியா சேர்மேன் இல்ல, மதி ஹஸ்பண்ட்,  பரத்-தோட அப்பாவா  பேசறேன், மைண்ட் இட்”

அரைமனதாக, “சரி கணேஷ், ஜஸ்ட் சிவராமன் எதுக்காக எங்களை கூப்பிட்டாருனு  தெரிஞ்சிகிலாமில்ல?”

“நோ, யூ வோண்ட் ஸ்டாப் தேர், விஷயம் தெரிஞ்சா நிறுத்தமாட்ட”, பட்டு போல கத்தரித்தான்,  மனைவியை தெரிந்தவனாக.

ஷானுவுக்கு சின்ன முறுவல் இழையோட, “எஸ், யூ க்நொ மீ, ஆனா, என்ன கேஸுன்னு கூட தெரியாம பின் வாங்கறது எனக்கு சரின்னு படல. மோரோவர் அவர் எனக்கு காட் பாதர் மாதிரி”

“ஓகே. நீ சொன்னா கேக்கமாட்டேன்னு எனக்கு தெரியும், பட், இப்போ சிவா கிட்ட என்ன விஷயம்னு கேக்க மட்டும்தான் செய்யற, அதுக்கு மேல எது பண்றதா இருந்தாலும் எனக்கு சொல்லிட்டுதான் செய்யணும்”, கண்டிப்பாக கணவனாக சொல்லி அழைப்பை துண்டித்தான் கணேஷ்.

“என்ன மேம், கேஸ் ஆரம்பிக்கவே இல்ல, வீட்லேர்ந்தே எதிர்ப்பு..?”

“ஹ்ம். அவர் சேனல்-ல இந்த நியூஸ் பத்தி கொஞ்சம் கம்மியா வாசிக்க சொல்லியிருக்காங்கபோல”, யோசனையாக.

“இப்போ கேஸ் எடுக்கிறமோ, இல்ல பதினாலாயிரம் ரூபா கோவிந்தாவா?”

“எடுக்கறோம், கண்டிப்பா என்னன்னு தெரிஞ்சிக்கவாவது எடுக்கறோம்”, இருவரும் பேசும்போதே பேசியில் அழைப்பு வந்தது. அதில் சிவராமன்.