அத்தியாயம் – 14
பிரம்மா கொடுத்த கவரைப் பிரித்தவளின் கண்களுக்குள் இருந்த கிருஷ்ண மணிகள் சந்தோஷத்தில் விரிந்தன. அது மெல்லத் திறக்கும் சிப்பிக்குள் பளிச்சிடும் முத்தைப் போல் பளபளப்பதாய் பிரம்மாவுக்குத் தோன்றியது.
“வாவ், அமேஸிங்…” என்றவளின் பார்வைக்குள் அழகாய் பிரம்மாவால் வரையப்பட்ட அவளது உருவம் ஒட்டிக் கொண்டிருக்க, கைகள் மெல்ல அதைத் தடவிப் பார்த்தன.
முதன் முதலில் அவளை சிறு பெண்ணாய் பார்க்கையில் அவன் ஓவியத்தைக் கண்டு எப்படி பிரம்மித்தாலோ அதில் சற்றும் குறைவில்லாத பிரமிப்பு இப்போதும் அவள் கண்ணில் தெரிய மன நிறைவோடு பார்த்தான் பிரம்மா.
“பிடிச்சிருக்கா அம்மு…” ஆவலோடு கேட்டவனின் கையைப் பிடித்துக் கொண்டவள், “சொல்ல வார்த்தையே இல்லை தேவ்… எ..எனக்கு சந்தோஷத்துல அழணும் போலத் தோணுது… இவ்வளவு தத்ரூபமா வரைஞ்சிருக்கீங்க… நானே என்னை இன்னொரு நிஜமாப் பார்க்கிற போல இருக்கு… சான்சே இல்ல… கிரேட்…” என்றவள் பற்றியிருந்த அவன் கையை விட்டுவிட்டு மீண்டும் ஓவியத்தைப் பார்த்தாள்.
அவளது சந்தோஷமும், வியப்பும் அவனுக்கு ஒருவித உற்சாகத்தையும், சிறு போதையையும் கூடக் கொடுத்தது.
“ஓவியத்துக்கு, ஓவியனோட பரிசு பிடிச்சிருக்கா…”
“இதை விட சிறந்த பரிசு வேறெதுவும் இருக்க முடியாது… பிரம்மான்னு எத்தனை பொருத்தமா பேர் வச்சிருக்கீங்க…” வியப்பும், சந்தோஷமுமாய் ஒலித்தது அவள் குரல்.
“இந்தத் திறமை எல்லாருக்கும் வராது, தேவ் மாதிரி ஒரு மகனைப் பெற அவர் பெத்தவங்க எத்தனை பாக்கியம் பண்ணி இருக்கணும்… அவங்களும் நிச்சயம் ஒருநாள் தேவைப் புரிஞ்சுப்பாங்க…” மனதுக்குள் யோசித்தபடி பார்த்துக் கொண்டிருக்க, பிரம்மா அவள் முகத்திலிருந்து கண்ணை விலக்கத் தோணாமல் அதில் மாறி மாறித் தெரியும் உணர்ச்சிகளை மனதுக்குள் கடத்திக் கொண்டிருந்தான்.
“இதையும் பிரேம் போட்டு வச்சுக்கப் போறேன்… அருமையா இருக்கு…” மறுபடியும் சொன்னவள் அவன் தன்னையே பார்ப்பதை உணர்ந்து, “ஹூம், என்ன…” என்றாள்.
“உன்னோட இந்த சந்தோஷம் தான் முதன்முதலா சென்னைக்கு கிளம்பின எனக்கு பெரிய நம்பிக்கையைக் கொடுத்துச்சு… அம்புலிமாமா ஆபீஸ்ல ஆர்டிஸ்ட் வேலைக்கு நிறையப் பேர் இண்டர்வியூக்கு வந்திருந்தாங்க… ஒரு தேவதையை வரைஞ்சு காட்ட சொன்னதும் சட்டுன்னு நான் உன் முகம் வரைஞ்சு தேவதையாக்கிட்டேன்… அது அவருக்கு ரொம்பப் பிடிச்சுப் போயி உடனே என்னை வேலைக்கு சேர்த்துகிட்டார்… உனக்குத் தெரியாமலே நீ எனக்கு ஒரு இன்ஸ்பிரேஷனா இருந்திருக்க அம்மு… உன்னை விதவிதமா வரையணும்னு அப்பவே என் மனசுல தோணுச்சு… காலம் நம்மை ஒவ்வொரு பக்கம் ஆக்கினாலும் அடிமனசுல உன் முகம் பதிஞ்சு போயிருச்சு…”
அவன் சொன்னதை பிரமிப்புடன் கேட்டிருந்தாள் ஓவியா.
அழகாய் நேரம் நகர, மாலை ஜானும்மா கொடுத்த காபியை ரசித்துக் குடித்துவிட்டு வீட்டுக்குக் கிளம்ப தயாரானாள். டாக்ஸி புக் பண்ணப் போனவளைத் தடுத்து பிரம்மா, தானே வீட்டில் விடுவதாக சொன்னான்.
“ஜானும்மா, நான் கிளம்பறேன்…” புன்னகையுடன் விடை பெற்றவளை, “இன்னைக்கு நீங்க வரவும் வீடே கலகலப்பா நல்லாருக்கு… அடிக்கடி வாம்மா… தம்பி சந்தோஷப்படும்…” என்றதும் அவள் பிரம்மாவை நோக்க அவன் கவனிக்காத போல் எங்கோ பார்த்துக் கொண்டிருந்தான்.
கேட் திறந்து கொடுத்த செக்யூரிட்டியிடமும், “போயிட்டு  வர்றேண்ணா…” என்றவளை நோக்கிப் புன்னகைத்தவன், “ஏன், அவங்களோட நிறுத்திட்ட… இங்க உள்ள மரம், செடி கிட்ட எல்லாம் சொல்லிட்டு வர வேண்டியது தானே…” கிண்டலாய் கேட்டவனை முறைத்தவள், “இவங்களும், செடி மரமும் ஒண்ணா… எல்லாரையும் மதிக்க கத்துக்கணும்…” என்றாள்.
“ம்ம்… சரிங்க ஓவியமே, இன்னைக்கு பொழுதை ரொம்ப போரடிக்க வச்சுட்டேனா…” காரை வளைத்தபடி கேட்டான்.
“ஏன் தேவ், அப்படி கேக்கறிங்க… நீங்க எப்படியோ தெரியாது, ஆனா இத்தன நாள் நான் என்னோட வருத்தம், சந்தோஷம் எல்லாத்தையும் என் பிரண்டு போட்டோ கிட்ட ஷேர் பண்ணிட்டு தான் இருந்தேன்… இப்ப நீங்க என்கிட்ட மனசுவிட்டு எல்லாம் பேசும்போது எவ்ளோ சந்தோஷமா இருக்கு தெரியுமா…” என்றாள் கண்கள் மிளிர.
“யார், என்னன்னே தெரியாத ஒருத்தனை எப்படி உன் பிரண்டா நினைக்க முடிஞ்சது அம்மு…”
“யார் என்னன்னே தெரியாம என்னை ஏன் உங்களுக்கு சிரிக்க வைக்கத் தோணுச்சு தேவ்…”
அவளது கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் அவன் திகைக்க, “சில பிடித்தங்களுக்கு காரணம் வேண்டாம்… அது போல தான் இதுவும்… ஒரு முறையே நாம சந்திச்சாலும் அந்த நேசத்தில் ஒரு உண்மையும், தோழமையும் இருந்துச்சு… எனக்கான ஆறுதலும், நம்பிக்கையும் உங்ககிட்ட கிடைச்சது… என் அப்பாகிட்ட சொல்ல முடியாத சில விஷயங்களைக் கூட தேவ் கிட்ட சொல்லிருக்கேன்…”
“இப்ப தான் நான் நிஜமாவே வந்துட்டனே… என்னை உன் பிரண்டு போல நினைச்சு நேர்ல எல்லாம் பேச முடியுதா…”
“லூசா தேவ் நீ… அப்படி நினைக்காமலா உங்களோட இப்படிப் பழகறேன்… நீங்க வர சொன்னதும் வீட்டுக்கு வந்தேன்…”
“ம்ம்… இத்தனை வருஷ இடைவெளியும், இந்த உருவ மாற்றமும் உன்னால ஏத்துக்க முடியுதா…”
“நான் மட்டும் என்ன, அதே சின்னப் பொண்ணாவா இருக்கேன்… தேவ், இப்ப எப்படி வளர்ந்துருப்பானோன்னு கூட எவ்வளவோ டைம் யோசிச்சிருக்கேன்… ஹாஹா, ஒரு விஷயம் சொல்லட்டுமா தேவ்… திட்டக் கூடாது…” என்றவள் அவனை நோக்கி தலை சாய்த்துக் கேட்க புன்னகைத்தான்.
“என்ன சொல்லப் போறீங்க ஓவியமே… நீங்க நினைச்சதை விட நான் கொஞ்சம் அதிகமாவே வளர்ந்துட்டேன்னா…”
“சேச்சே… அதில்லை… உங்களை மறுபடி பார்த்ததும் முதல்ல  எனக்கு என்ன தோணுச்சு தெரியுமா…”
“என்ன தோணுச்சு, இவன் ஒரு குடிகாரன்னா…”
“ச்சேச்சே, அதில்ல… இவனைப் பார்த்தா தீவிரவாதி போல இருக்கானேன்னு தோணுச்சு…” சொன்னவள், “ஹாஹா…” என்று சிரிக்க முறைத்தான்.
“அடிப்பாவி… நான் எவ்ளோ அழகா பார்த்துப் பார்த்து இந்தத் தாடியை வளர்த்தி வச்சிருக்கேன்… இது இப்ப டிரண்டுன்னு மட்டும் வளர்த்தலை, ஒரு சின்னப் பொண்ணு என்கிட்ட தாடி வச்சா நீங்க ஜீசஸ் போல அழகா இருப்பீங்கன்னு சொன்னதுக்காக வளர்த்தினேன்… அவளே பெருசானதும் தீவிரவாதின்னு சொன்னா, இனி இது தேவையில்லை… நாளைக்கே எடுத்திடறேன்…” என்றான்.
“இல்லல்ல வேண்டாம், இதும் பிரம்மாக்கு பொருத்தமா, கம்பீரமா இருக்கு…” என்றவளின் குரல் குழைந்திருந்தது.
“ஹூம்… ரொம்ப நாள் அப்புறம் இன்னைக்கு என் மனசுக்கு சந்தோஷமாருக்கு அம்மு…” என்றான்.
“ம்ம்… எனக்கும்…” என்றவளின் முகத்தை ஆவலோடு நோக்கியவன் எதுவும் சொல்லாமல் அமைதியாய் அன்றைய நாளை அசை போட, ஓவியாவின் மனமும் அதே நிலையில் தான் யோசித்துக் கொண்டிருந்தது.
“அப்பா…” உற்சாகத்துடன் ஒலித்த மகளின் குரல் கேட்டு வெளியே வந்த சிவநேசன் பிரம்மாவைக் கண்டதும் புன்னகைத்து வரவேற்றார்.
“வாங்க தம்பி, டாக்ஸில தான் வந்திருப்பானு நினைச்சேன்… நீங்களே கூட்டிட்டு வந்துட்டிங்களா… காபி எடுக்கட்டுமா…”
“அச்சோ எதுவும் வேண்டாம் அங்கிள்… நிறைவா இருக்கு…”
“ம்ம்… உக்காருங்க தம்பி…” என்றவர் அவரும் அமர்ந்தார்.
“அப்பா, தேவ் வரைந்த ஓவியத்தைப் பார்த்திங்களா…” என்ற மகள் அதை எடுத்துக் காட்ட அவரும் பாராட்டினார்.
“இன்னும் அவரை தேவ்னு சொல்லிட்டு இருக்க, அவர் இப்ப உருவத்துக்கு உயிர் கொடுக்கும் பிரம்மா மா…”
“அச்சோ அங்கிள்… உங்களுக்கு எப்பவும் நான் அதே பழைய தேவ் தான்… எனக்கும் அதான் பிடிச்சிருக்கு…” என்றான்.
ஓவியா அறைக்குள் செல்ல, “அம்மு முகத்துல ரொம்ப நாளைக்கப்புறம் இத்தனை சந்தோஷத்தைப் பார்க்கிறேன்… அது எப்பவும் நிலைக்கணும்னு ஆசையா இருக்கு…” என்றார்.
“அதுக்கென்ன அங்கிள்… அவளை சந்தோஷமாப் பார்த்துக்க வேண்டியது என் பொறுப்பு… கவலைப்படாதீங்க…”
“ம்ம்… எனக்கும் அதான் தோணுதுப்பா, இனி அவளோட பொறுப்பை உன்கிட்ட கொடுத்துடலாம்னு தோணுது…”
அவர் சொன்னது புரியாமல், “என்ன அங்கிள் சொல்லறீங்க…” என்றான் பிரம்மா.
“நான் சுத்தி வளைக்காம நேரடியா விஷயத்துக்கு வந்திடறேன்… அம்முவைப் பத்தி உங்க அபிப்ராயம் என்னன்னு நான் தெரிஞ்சுக்கலாமா…”
“அம்மு, அம்முவைப் பத்தி என்ன சொல்லுறது அங்கிள்… அவ கூட இருந்தா மனசுக்கு ஒரு அமைதியும் நம்பிக்கையும் கிடைக்கும்… நல்ல ஒரு தோழி, முக்கியமா அவளுக்கு என் ஓவியம்னா ரொம்பப் பிடிக்கும்…” என்றான் பிரம்மா.
“ம்ம்… அவ்ளோதானா, அதைத் தாண்டி வேற அபிப்ராயம் எதுவும் கிடையாதா…” அவர் கேட்கவும் யோசனையுடன் பார்த்தவன், “அங்கிள் நீங்க சொல்ல வர்றது…” எனவும் தலையாட்டியவர், “தம்பி எனக்கும் வயசாகுது… அடிக்கடி உடம்புக்கு முடியாமப் போகுது… அம்முவுக்கு ஒரு நல்ல வாழ்க்கையை அமைச்சுக் கொடுக்காம போயிடுவமோன்னு பயமா இருக்கு… அவளும் கல்யாணத்தைப் பத்திப் பேசினா ஏதும் பிடி கொடுக்க மாட்டேங்கறா… ஒருவேளை, உங்க ரெண்டு பேருக்கும் நட்பைத் தாண்டி எதுவும் விருப்பம் இருந்தா தெரிஞ்சுக்கலாமேன்னு…” என்றவர் மகள் வருவதைக் கண்டதும் நிறுத்திக் கொண்டார்.
“அப்பா, தேவ் பாமிலி எல்லாம் ஆந்திரால தான் இருக்காங்களாம்… எல்லாரையும் விட்டுட்டு இங்கே வந்து தனியா சாதிச்சுட்டு இருக்கார்…” என்றவளின் பார்வை பிரம்மாவின் மீது பரிவோடு தடவிச் சென்றதை சிவநேசனோடு பிரம்மாவும் கவனிக்க, தனக்குள் ஒரு சிலிர்ப்பை உணர்ந்தவன் வியப்புடன் அவளைப் பார்த்தான்.
“ப்ச்… பாவம், சின்ன வயசுல ரொம்ப கஷ்டப்பட்டிருக்கார்…” என்றவள் அவன் குடும்பத்தைப் பற்றி சுருக்கமாய் சொல்ல வியப்பும், கவலையுமாய் கேட்டிருந்தவர் முடிவில் தலை குனிந்து அமர்ந்திருந்தவனின் கையைப் பற்றிக் கொண்டார்.
“தம்பி, உங்களுக்குள்ள இத்தனை வருத்தம் இருக்கும்னு எனக்குத் தெரியாது… இனியும் இப்படி தனியா இருக்கணுமா, உங்க வீட்டுக்குப் போயி பெத்தவங்க கிட்ட பேசுங்க… உங்க வளர்ச்சி இப்ப அவங்களுக்கு நிச்சயம் புரிஞ்சிருக்கும்…”
“ம்ம், அடுத்த மாசம் போலாம்னு இருக்கேன் அங்கிள்…”  
“நல்லது தம்பி… பேசினாத் தீராத பிரச்சனை எதுவுமே இல்லை…” என்றார்.
“சரி அங்கிள், நான் கிளம்பட்டுமா…”
“என்ன அவசரம் தேவ்… டின்னர் சாப்பிட்டுப் போகலாம்ல…” ஓவியா முகத்தை சுளித்துக் கொண்டு கேட்டாள்.
தான் கிளம்புவதாய் சொல்லவும் சுருங்கிய அவள் முகத்தைக் கண்டு அவனுக்குள் பட்டாம்பூச்சி பறந்தது. தனக்காய் ஒரு மனம் அக்கறை கொள்வதன் சந்தோஷம்.
“இல்ல அம்மு, நைட் எதுவும் சாப்பிட முடியாது… மனசும், வயிறும் நிறைஞ்சிருக்கு… கொஞ்சம் தண்ணி மட்டும் எடுத்திட்டு வா…” என்றதும் உள்ளே சென்றாள்.
“தம்பி, நான் கேட்ட விஷயம்…” உள்ளே பார்த்துக் கொண்டே சிவநேசன் கேட்க, “அங்கிள், அம்மு என் கூட ஒரு நாள் இருந்ததுக்கே மனசுக்கு ரொம்ப நிறைவா இருக்கு… வாழ்நாள் முழுதும் கூட இருந்தா எவ்ளோ நல்லாருக்கும்… உங்க ஓவியத்தை இந்த ஓவியனுக்கே கொடுத்துடறீங்களா…” என்றதும் அவர் முகம் மலர்ந்தது.
“ரொம்ப சந்தோஷம் தம்பி… ஓவியத்தோட அருமையை ஒரு ஓவியனை விட வேற யாரால புரிஞ்சுக்க முடியும்…” என அதைக் கேட்டுக் கொண்டே வந்த ஓவியா, “எந்த ஓவியத்தைப் பத்திப்பா சொல்லறீங்க…” என்றபடி அவனிடம் நீட்ட வாங்கிக் கொண்டவன்,
“அது வந்து அம்மு…” அவர் தொடங்க, “அங்கிள், நா…நானே சொல்லிக்கறேன்…” என்றவன், “இன்னைக்கு நான் வரைஞ்ச ஓவியத்தைப் பத்தி தான் மாமா சொல்லுறார் அம்மு…” என்றதும், “அங்கிள் எப்படி சட்டுன்னு மாமா ஆனார்… ஒருவேளை அங்கிளைத் தமிழாக்கிட்டானோ…” என நினைத்துக் கொண்டே, “ஓ…” தலையாட்டினாள் அவள்.
அவன் கிளம்பவும், எதார்த்தமாய் டாட்டா கொடுத்துவிட்டு அறைக்கு சென்றவளை புன்னகையுடன் பார்த்தார்.
“தேவ் ஏன் என்னை சொல்ல வேண்டாம்னு சொன்னார்… ஒருவேளை, அவரே அம்முகிட்ட சொல்ல நினைக்கிறாரோ… ம்ம், இருக்கும்…” குதூகலத்துடன் நினைத்துக் கொண்டார்.
“கடவுளே, அவளுக்குப் பிடித்த புரிதலான ஒருத்தனை மணந்து கொண்டால் அம்முவின் வாழ்க்கை நிறைவாய் இருக்கும்… நானும் நிம்மதியாய் கண் மூடலாம்…” எனவும் சுவரில் ஒட்டியிருந்த பல்லி “ச்ச் ச்ச்…” என சத்தமிட்டது.
“ம்ம்… கவுளி கத்துனா பலிக்கும்னு சொல்வாங்களே…” என அதற்கும் சந்தோஷப்பட்டார்.
அடுத்தநாள் வழக்கம் போல ஓவியா நாட்டியப்பள்ளிக்கு செல்ல ராதிகா வரவில்லை. போன் பண்ணிக் கேட்கவும், காலையிலிருந்து வாந்தி, மயக்கமாய் இருப்பதாய் கூறியவள் நாள் தள்ளிப் போயிருக்கிறது என நாணத்துடன் கூற சந்தோஷமான ஓவியா டாக்டரிடம் சென்று உறுதி செய்து கொண்டு ரெஸ்ட் எடுக்குமாறு கூறினாள்.
மாணவிகளுக்கு சில அபிநயம் சொல்லிக் கொடுத்து அவர்களைப் பயிற்சி செய்ய சொல்லிவிட்டு அலுவலக அறைக்கு சென்றாள்.
கணினியை ஆன் பண்ணவும், மின்சாரம் போய் வந்தது.
“என்ன இது, அடிக்கடி இப்படி ஆகுது… எதுவும் லைன் பிராப்ளம் போலருக்கு…” என நினைத்தவள், புதிதாய் வேலைக்கு வந்திருந்த செக்யூரிட்டியை அழைத்தாள். இதற்கு முன்பு இருந்த பெரியசாமி மஞ்சள் காமாலை வந்து வீட்டில் ஓய்வில் இருந்ததால் இன்று புதிய செக்யூரிட்டியை வேலைக்கு அனுப்பி இருந்தனர்.
“ராஜன்… யாராச்சும் தெரிஞ்ச எலக்ட்ரீஷியன் இருந்தா வர சொல்லுங்க… சில நேரம் சுவிட்ச் போட்டா கரண்டு ஆப் ஆகிடுது… செக் பண்ண சொல்லணும்…”
“சரி மேடம்…” என்ற ராஜன் இளவயதில் இருந்தான்.
மாணவிகளுடன் சேர்ந்து கொண்டவள், ஆடத் தொடங்க, அவளின் அசைவுகளுக்கு ஏற்ப அவர்களும் நடனமாடத் தொடங்கினர். மதிய உணவுக்குப் பிறகு சிறிது நேரம் ஓய்வெடுப்பதற்காய் உடை மாற்றும் அறைக்கு சென்றவள் பேன் ஓடாததால் மீண்டும் வெளியே வந்தாள். சிறிது நேரத்தில் மாலை நேரப் பயிற்சிக்கு மாணவிகள் வரத் தொடங்க மீண்டும் பிசியாகி விட்டாள்.
“குட் ஈவ்னிங் மேடம், அம்மா பீஸ் கொடுத்து விட்டாங்க…” ரம்யாவைக் கண்டதும் அவள் முகம் மலர்ந்தது.
“ஹேய் ரம்யா… வா, வா…” என்றவள் அவள் கொடுத்த பணத்தை ஒரு தட்டில் வைத்து வாங்கிக் கொண்டாள்.
பள்ளிக்கு சென்ற களைப்பு சிறிதும் இல்லாமல் அப்போதும் பளிச்சென்று இருந்த ரம்யா பதினொரு வயதுக்கு சற்று அதிகமாகவே செழுமையாக வளர்ந்திருந்தாள்.
புது பாட்ச் என்பதால் குரு வணக்கத்தில் ஆரம்பித்தாள்.
“ரம்யா, அப்படி இல்லடா… இன்னும் கொஞ்சம் காலை வளைத்து உக்காரணும்…” என்று செய்து காண்பிக்க, “சரி மேம்…” என்று தலையாட்டியவள், உற்சாகத்துடன் முயற்சி செய்ய கைகளை எந்த அளவு உயரத்தில் வைக்க வேண்டும், கால் எப்படி வளைய வேண்டும், என்று கூறினாள்.
மற்ற மாணவிகளையும் கவனித்து சரி செய்தாள். வகுப்பு முடிந்து அனைவரும் கிளம்ப சில மேல் வேலைகளை முடித்துவிட்டு ஓவியாவும் வீட்டுக்கு கிளம்பினாள்.
வீட்டுக்கு வந்து ஓய்வில் அமர்ந்ததும் பிரம்மாவின் நினைவு மனதுக்குள் வர முன்தினம் அவனுடனான நினைவுகளை அசை போட்டவள் போனை எடுத்து அழைத்தாள்.
லைன் பிஸியாக இருக்கவும், போனை வைத்துவிட்டு அந்த ஓவியத்தை எடுத்துப் பார்த்தவள் தந்தையைத் தேடி ஹாலுக்கு வந்தாள்.
“அப்பா, இதை நாளைக்கு பிரேம் போடக் கொடுக்கணும்ப்பா…”
“சரி அம்மு, ஆபீஸ் போகும்போது கொடுக்கறேன்…” என்றவர், “ஆமா இந்த வாரம் தானே உன் குரு ராஜஸ்ரீ பொண்ணோட டான்ஸ் ஸ்கூல் ஓப்பனிங்…”
“ஆமாப்பா, வியாழன் கிளம்பனும்… வெள்ளி பங்க்ஷன்…”
“ராதிகாவும் கூட வர்றாளா…” என்றதும், “இல்லப்பா, அவ கன்சீவ் ஆயிருக்கான்னு டாக்டர் சொன்னாங்க… கொஞ்ச நாளைக்கு எங்கயும் வண்டில போகக் கூடாது, ரெஸ்ட்ல இருக்க சொல்லிருக்காங்க… அதனால அவ வரலைப்பா…”
“ஓ… நல்ல விஷயம் சொல்லிருக்க மா, மூணு வருஷமா வாரிசை எதிர்பார்த்துட்டு இருந்தாங்க…”
“ஆமாப்பா, அவங்க வீட்ல எல்லாரும் செம ஹாப்பி… மேம் பங்க்ஷன்க்கு நான் போகாம இருந்தா நல்லாருக்காது, நீங்க எனக்குத் துணைக்கு வரீங்களாப்பா…”
“ம்ம்… நீ சொல்லுறது சரிதான் அம்மு, எனக்கு ஆபீஸ்ல முக்கியமான இன்ஸ்பெக்ஷன் இருக்கே…” யோசித்தார்.
“போங்கப்பா, எங்க கூப்பிட்டாலும் சாக்கு சொல்லறீங்க… நான் தனியாவே போயிக்கறேன்…” என்றவள் கோபத்துடன் உள்ளே செல்ல, யோசனையாய் அமர்ந்திருந்தவரின் அலைபேசி சிணுங்கி, “தேவ் காலிங்…” என்றது.
எடுத்து காதுக்குக் கொடுத்தவர், “ஹலோ, சொல்லுங்க தம்பி…” எனவும், “மாமா, எனக்கு ஒரு ஹெல்ப் வேணும்… அதான், இந்த நேரத்துல கூப்பிட்டேன்…” என்றவனின் குரலில் சிறு அவசரம் தெரிந்தது.
“சொல்லுங்க தம்பி, என்ன பண்ணனும்…”
“மாமா, சிங்கப்பூர்ல இருக்கற என் நண்பர் ஒருத்தர் ஒரு ஆடிட்டோரியத்துல வைக்க சிற்பங்களோட ஓவியங்களை வரைஞ்சு தர கேட்டிருந்தாங்க… இப்ப, சிற்பங்கள் பக்கத்துல ஒரு நாட்டியப் பெண்ணும் அபிநயம் பிடிக்கிற போல இருந்தா நல்லாருக்கும்னு நினைக்கிறாங்க… சட்டுன்னு எனக்கு நம்ம அம்மு நினைவு வந்துச்சு… அதான், உங்க அபிப்ராயம் கேட்டுட்டு சொல்லலாம்னு கூப்பிட்டேன்… நல்ல வாய்ப்பு… இந்த ஓவியத்துல அம்முவோட நாட்டிய போஸ் வந்துச்சுன்னா சிங்கப்பூர்ல கூட பிரபலம் ஆகிடலாம்… அங்கிருந்தும் புரோகிராம் கிடைக்க வாய்ப்பிருக்கு…”
“ஓ… இதுல நான் சொல்ல என்ன இருக்கு தம்பி… இனி அவளே உங்க பொறுப்புன்னு சொல்லிட்டேன்… நீங்க எது செய்தாலும் சரிதான்…”
“அதுக்கில்லை மாமா… தஞ்சாவூர் சிற்பங்களை தான் நான் வரையப் போறேன்… அம்முவும், நீங்களும் ரெண்டு நாள் என்னோட தஞ்சாவூர் வர வேண்டிருக்கும்… அதான்…”
“ஓ…” என்றவர், “தேவ்… அம்முவுக்கு கூட தஞ்சாவூர்ல ஒரு பங்க்ஷன்க்கு போகணும்னு சொல்லிட்டு இருந்தா… ரெண்டையும் ஒண்ணா முடிச்சுட்டு வந்துக்கலாம்… ஆனா என்னால வர முடியாது… அவ கிட்ட கேட்டுட்டு வரேன்…”
“சரி, மாமா…” என்றவன் அழைப்பைத் துண்டிக்க, சிவநேசன் மகளிடம் வந்தார்.
“அம்மு… தேவ் தம்பி கால் பண்ணார்…” என்றவர் விஷயத்தை சொல்ல அம்மு யோசனையுடன் பார்த்தாள்.
“அவரோட தஞ்சாவூர் போயி ஓவியம் வரைய போஸ் கொடுக்கிறதில் எனக்குப் பிரச்சனை இல்லை… ஆனா இங்க ராதியும் இல்லாத நேரத்துல ரெண்டு மூணு நாள் நானும் இல்லேன்னா கஷ்டம் ஆச்சேப்பா…” என்றாள் மகள்.
“பத்மா கிட்ட சொல்லிக்கலாம் மா… ஸ்டூடண்ட்ஸ் க்கு நாளைக்கு கொஞ்சம் ஸ்டெப்ஸ் சொல்லிக் கொடுத்து ரெண்டு நாள் பிராக்டீஸ் பண்ண சொல்லிக்கலாம்… காலைல ஓபன் பண்ணிட்டு நான் ஆபீஸ் போயிக்கறேன்… ஈவனிங் வந்து குளோஸ் பண்ணிட்டு வந்துடறேன்…” என்றார் தந்தை.
“ம்ம்… அப்படின்னா சரிப்பா, நான் தேவ் கூடவே தஞ்சாவூர் போயிட்டு வர்றேன்…” என்றவளின் முகம் மலர்ந்திருந்தது.
“கள்ளன், என்கிட்ட ஒரு வார்த்தை கூட இதைப் பத்தி சொல்லாம டைரக்டா அப்பாகிட்ட பர்மிஷன் வாங்குறானே…” என செல்லமாய் திட்டிக் கொண்டாலும் அவனுடன் இருக்கப் போகும் நிமிடங்களுக்காய் மனம் ஆவலுடன் காத்திருக்கத் தொடங்கியது.
அடுத்தநாள் திட்டமிட்டபடி நாட்டியப்பள்ளியில் பத்மாவிடம் பேசி, மாணவிகளுக்கும் வீடியோவைப் பார்த்து பிராக்டீஸ் செய்ய சொல்லி தஞ்சாவூர் பயணத்திற்குத் தயாரானாள்.
எண்ணத்தில் வந்தவனை
ஏந்திழையாள் உணரவில்லை…
கண்ணுக்குள் நிறைந்தவனை
கருத்துக்குள் பதியவில்லை…
ஓவியத்தில் உருவானவள்
உயிருக்குள் கலப்பதெப்போ…
உதிரத்தில் உறைந்திட்டவள்
உள்ளுக்குள் உணர்வதெப்போ…