“கீழ போட்டுடட்டுமா வேஸ்டானா பரவாயில்லையா?” என்றாள்.
வேண்டாம் என்று சொல்வான் என்றுதான் கேட்டாள். ஆனால் அவன் பரவாயில்லை போட்டு விடு எனச் சொல்வான் என நினைக்கவில்லை.
கீர்த்திச் சென்று குப்பைக் கூடையில் போட்டு விட்டு வர… தீபக்கின் மனைவி வர்ஷாவும், சுமந்த்தின் மனைவி நிஷாவும் அவளை இது தேவையா என்பது போலப் பார்த்தனர்.
கீர்த்திப் பாப்கார்ன் உண்டபடி படம் பார்க்க… தர்மா அவனே அவளிடம் இருந்து பாப்கார்ன் எடுத்து உண்டவன், “இதுக்கு எவ்வளவு வாங்கினான். இருபது ரூபாய் பாப்கார்னுக்குப் பத்து மடங்கு விலை வச்சு வித்திருப்பாங்க.” என அவன் சரியாகச் சொல்ல…
“கேட்கலாம் தான். உன்னை யாரு வாங்க சொன்னான்னு கேட்பான்? அவங்களைச் சொல்லி தப்பு இல்லை. அவன் என்ன விலை சொன்னாலும் நாம வாங்குறோம் இல்லையா? வாங்க ஆள் இல்லைனா எப்படி விற்பான்?”
இதற்கு மேல் இவனிடம் பேசி வாங்கிக் கட்டிக் கொள்ள வேண்டாம் எனக் கீர்த்தி அமைதியாகிவிட்டாள்.
படம் முடிந்து வெளியே வந்தவர்கள், காரில் ஏறி சிறிது தூரம் சென்று ஒரு பழசாறு கடையில் நிறுத்தி, பழசாரில் மேலும் சர்க்கரை சேர்க்க வேண்டாம் எனச் சொல்லி வாங்கி அருந்தினர்.
நாம் மற்றவர்களுக்கு ஒன்று சொல்கிறோம் என்றால் முதலில் அதை நாம் பின்பற்ற வேண்டும். இவர்கள் மேடைக்கு மட்டும் பேசுபவர்கள் அல்ல… அதை வாழ்க்கையிலும் கடைபிடிக்கிறார்கள் என்பதைக் கீர்த்தி அன்று உணர்ந்து கொண்டாள்.
கல்லூரியில் படிக்கும் காலத்தில் அந்த வயதுக்கே உரிய துருதுருப்பில் நண்பர்களுடன் சேர்ந்து, நானும் தேவைபடுவோருக்கு உதவுகிறேன் என வந்தவள்தான் கீர்த்தி. ஆனால் இவர்கள் அப்படி அல்ல… வாழ்க்கையில் பல வகையில் அடிபட்டு முன்னேறியவர்கள். அதனால் நிறைய அனுபவம் உண்டு.
சக மனிதரின் துன்பம் பொறுக்காமல், அவர்களுக்குத் தங்களால் முடிந்த உதவியைச் செய்ய வேண்டும் என நினைப்பவர்கள். அதோடு செய்வதைத் திருந்த செய்பவர்களும் கூட… கீர்த்தியும் அவர்களோடு பழகப் பழகப் புரிந்து கொண்டாள்.
நான்கு மாதங்கள் சென்றிருருக்கும் வெளியே சென்று வெகு நாட்கள் ஆகிவிட்டது. எங்காவது சென்றால் புத்துணர்ச்சியாக இருக்கும் என நண்பர்கள் சேர்ந்து, திருவண்ணமலையில் இருக்கும் பர்வதமலைக்கு ட்ரெக்கிங் செல்லலாம் என முடிவு செய்தனர்.
மூன்று மணி நேரம் ஆகும், மலை ஏறி முடிக்க… அதனால் வர்ஷாவும், நிஷாவும் வரவில்லை என்றுவிட… கீர்த்தி வருவதாகச் சொல்லி அவர்களோடு சேர்ந்து கொண்டாள்.
விடியற்காலை நாலு மணிக்கே சென்னையில் இருந்து இரண்டு கார்களில் கிளம்பினர். காரில் ஏறியதில் இருந்து கீர்த்தி உறங்கிக் கொண்டுதான் வந்தாள்.
மலை அடிவாரத்தில் காரை இடம் பார்த்து நிறுத்த, கீர்த்தி மட்டும் பெரிய தோள் பையோடு இறங்க… அவளிடம் இருந்து அதை வாங்கித் திறந்து பார்த்த தர்மா, உள்ளே இருந்த நொறுக்குத் தீனிகளை எடுத்துக் காட்ட… நண்பர்கள் கேலி செய்து சிரித்தனர்.
இத்தனையைத் தூக்கிட்டு எப்படி மேல ஏறுவ… என்றவன், அதில் இருந்த பாதியை எடுத்துக் காரில் போட்டுவிட்டு, மேலும் அவள் பையில் தேவையில்லாமல் இருந்த சில பொருட்களை எடுத்துக் காரில் போட… கீர்த்தி அவனை முறைத்தபடி பையை வாங்கிக் கொண்டாள்.
கீழே இருந்த கடையில் ஆளுக்கொரு டீ குடித்து விட்டு மேலே ஏற ஆரம்பித்தனர்.
முதல் ஒரு மணி நேரம் கீர்த்திச் சுறுசுறுப்பாக நடக்க…. நண்பர்கள் அவளைப் பாராட்டினர். மேலே போகப் போக அவளால் ஏற முடியவில்லை.
“நான் வந்திருக்கவே கூடாது. நான் திரும்பி போகட்டுமா..” என ஒரே புலம்பல்… அவளை மட்டும் எப்படித் தனியாக அனுப்புவார்கள்.
“எல்லோரும் இங்கேயே திரும்பி விடுவோம்.” என்றான் விஷ்ணு.
“அதெல்லாம் அவங்க நடப்பாங்க.” என்ற தர்மா, “கொஞ்ச நேரம் உட்கார்ந்திட்டு போகலாம்.” என்றதும், சிறிது நேரம் ஓய்வுக்குப் பிறகு மீண்டும் நடக்கும் போது, கீர்த்தியிடம் இருந்து பையை வாங்கிக் கொண்டான்.
“நல்லவேளை பாதியை எடுத்து கார்ல போட்டீங்க…. இல்லைனா இன்னும் கஷ்டமா இருந்திருக்கும். கொடுங்க நான் எடுத்திட்டு வரேன்.” என அவள் பையைக் கேட்க…
“மலை ஏறும் போது வெயிட் தூக்கிட்டு ஏற முடியாது. பரவாயில்லை நான் வச்சுகிறேன்.” என அவனே தான் அவனுடைய பையோடு அவளுடையதையும் தூக்கிக் கொண்டு நடந்தான்.
நண்பர்கள் மெதுவாக முன்னே நடக்க… கீர்த்திக்காகத் தர்மா அவளோடு இணைந்து மெதுவாக நடந்து வந்தான். குட்டி குட்டி ஓய்வு எடுத்துக் கொண்டு நடந்தனர். அதுவும் தர்மா அவளோடு பேசிக்கொண்டே நடக்க… கீர்த்திக்கும் சிரமமாக இல்லை.
மூன்று மணி நேரத்தில் ஏற வேண்டிய மலையை நான்கு மணி நேரத்தில் ஏறி முடித்திருந்தனர். மேலே சிறிய சிவன் கோவில் இருக்க.. அங்கே முதலில் சென்றுவிட்டு… மலை உச்சியில் இருந்து சுற்று வட்டாரத்தைப் பார்த்து ரசித்தனர்.
“நான் ஏறுவேன்னு நினைக்கவே இல்லை. இங்க இருந்து பார்க்க… சூப்பரா இருக்கு.” எனக் கீர்த்திக் குதுகலிக்க….
“நீயாவா ஏறின, தர்மா மட்டும் இல்லைனா… பாதி வழி கூட வந்திருக்க மாட்ட…” என ராஜேஷ் கேலி செய்ய…
“அது கூடப் பரவாயில்லை… வர்ற வழியில ஒரு கேள்வி கேட்டாங்க பாரு. அதை நினைச்சா இப்ப கூடச் சிரிப்பு வருது.” எனத் தர்மா சொன்னதும், என்ன என்று நண்பர்கள் ஆர்வமாக…
“சொல்லாதீங்க சொல்லாதீங்க…” எனக் கீர்த்திப் பதற….
“சரி சொல்லலை.” என்றாலும், தர்மாவிற்குச் சிரிப்பை அடக்க முடியவில்லை. அதனைப் பார்த்த நண்பர்கள், “எதோ கேவலமா கேட்டிருக்கா போலிருக்கு.” எனப் புரிந்து கொண்டனர்.
அவன் சொல்லவில்லை என்றதும், நிம்மதியான கீர்த்தி, “நீங்க சிரிக்கும் போது ரொம்ப அழகா இருக்கீங்க.” எனச் சட்டென்று தர்மாவிடம் சொன்னவள், வேறுபக்கம் சென்று வேடிக்கை பார்க்க ஆரம்பித்து விட… தர்மாவிற்குதான் எப்படி எடுத்துக்கொள்வது என்று ஒன்றும் விளங்கவில்லை.
நண்பர்கள் இருவரையும் குறுகுறுவெனப் பார்க்க…. சாப்பிடலாமா எனத் தர்மா பேச்சை மாற்றினான். அங்கேயே உட்கார்ந்து, கொண்டு வந்த உணவைப் பிரித்து உண்டனர். இவர்கள் சென்றபோது சிலர் மட்டும் இருக்க…. அவர்களும் சிறிது நேரத்தில் இறங்கி சென்று விட…. இவர்கள் மட்டுமே இருந்ததால்… சுதந்திரமாக உணர்ந்தனர்.
உண்டு விட்டு ஓய்வு எடுத்தவர்கள், பிறகு கைபேசியில் சில புகைப்படங்கள் எடுத்துவிட்டு, கீழே இறங்க ஆரம்பித்தனர். இறங்குவதும் சுலபமாக இல்லை. கீர்த்தி வேகமாக இறங்க, தர்மா பிடிக்கவில்லை என்றால் சரிவில் உருண்டு இருப்பாள்.
அவளைப் பிடித்து நிறுத்தியவன், “நீ விழுந்து வாரப் போற…” என்றான் கடுமையாக. அதன் பிறகே நிதானமாக நடக்க ஆரம்பித்தாள். ஏற்ற இறக்கங்கள் இருக்க… சில இடங்களில் உட்கார்ந்துதான் இறங்க வேண்டி இருந்தது. தர்மா அவள் கையை விடவே இல்லை.
இரண்டு மணி நேரத்தில் மலையில் இருந்து இறங்கி இருந்தனர். தர்மா கீர்த்தியை தவிர மற்ற அனைவரும் திருமணமானவர்கள் என்பதால்… குடும்பத்திற்கு என நேரம் கொடுக்க வேண்டும் அல்லவா…
“இப்ப கிளம்பினா லஞ்சுக்கு வீட்டுக்கு போய்டலாம்.” என அவர்கள் வீட்டிற்குச் செல்ல அவசரம் காட்ட…
“உடனே என்னால முடியாது. நான் முதல்ல ரெஸ்ட் ரூம் போகணும்.” என்றால் கீர்த்தி.
அவள் நிலையை உணர்ந்த தர்மா, “எனக்கு ஒன்னும் அவசர வேலை இல்லை. நான் கீர்த்தியோட மெதுவா வரேன். நீங்க போங்க.” என்றதும், நண்பர்கள் தயங்க…
“ஆமாம் நீங்க போங்க, நாங்க மெதுவா வரோம்.” எனக் கீர்த்தியும் சொல்ல… சரி ரெண்டு பேரும் என்ஜாய் பண்ணிட்டு வாங்க என நண்பர்களும் விடைபெற…. இவர்கள் இருவரும் காரில் ஏறி, அங்கே பக்கத்தில் நல்ல ஓட்டலுக்குச் சென்றனர்.
கீர்த்திக்குக் காரில் இருந்து இறங்கி நடக்கவே முடியவில்லை. இப்படியெல்லாம் நடந்து அவளுக்குப் பழக்கமே இல்லை. அவள் சிரமப்பட்டுச் செல்வதைத் தர்மாவும் கவனித்தான்.
அவள் ஓய்வறைக்குச் சென்றுவிட்டு முகம் கைகால் கழுவிக்கொண்டு நிதானமாகத்தான் வந்தாள். அதற்குள் தர்மாவும் ஓய்வறைக்குச் சென்றுவிட்டு வந்து அவளுக்காகக் காத்திருந்தான். இருவரும் மதிய உணவு வாங்கி உண்டனர்.
“சாரி, என்னால உங்களுக்கு ரொம்பச் சிரமம்.”
“இதுல என்ன சிரமம் கீர்த்தி? இன்னைக்கு ஞாயிற்றுக் கிழமை தான… இப்ப உடனே போய்ப் பண்ண எனக்கு ஒரு வேலையும் இல்லை. நீ ரிலாக்ஸா இரு.”
இருவரும் நிதானமாக உண்டுவிட்டுக் காரில் ஏறினர், வழியில் ஒரு மருந்தகத்தில் நிறுத்தி, தர்மா ஐஸ்பேக்கும் நீலகிரி தைலமும் வாங்கிக் கொண்டான்.
“இந்தா கால்ல ஐஸ் ஒத்தடம் கொடுத்திட்டு, தைலம் போட்டுக்கோ…. நீ இன்னைக்கே இப்படி நடக்கிற, நாளைக்கு உனக்கு நடக்கவே முடியாது.” என,
அவன் சொன்னதைச் செய்துகொண்டே ,“உங்களுக்கு வலிக்கலையா?” என்றாள்.
“லேசா இருக்குதான். ஆனா நான் தினமும் யோகா செய்வேன். அதனால பெரிசா வலி இருக்காது.”
காரில் மெதுவாகப் பாடலை ஒலிக்க விட்டு, இருவரும் பேசிக்கொண்டே சென்றனர். அந்த தருணத்தை இருவருமே மனதிற்குள் ரசித்தனர்.
அப்போது இருவருக்குமே தோன்றியது ஒன்றுதான். இந்தப் பயணம் முடியவே முடியாமல் நீண்டு கொண்டே செல்லாதா என்றுதான்.